சிறப்பு நேயர் – யோகா (யோவாய்ஸ்)

இந்த வாரம் சிறப்பு நேயராக வருபவர் இலங்கையின் ஊட்டி என்று வர்ணிக்கக்கூடிய குளு குளு பிரதேசம் நுவரெலியாவில் இருந்து “யோ வாய்ஸ்” யோகா.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வலையுலகில் இருக்கும் யோகாவின் பதிவுகள் போலவே அவரது முத்தான ஐந்து ரசனைகளும் அமைந்திருக்கின்றன. தொடர்ந்து யோகா பேசுவதைக் கேட்போம்

எனது பாடல் ரசனை பொதுவாக மற்றவரோடு ஒத்து போவதில்லை. ஆனால் என்னை பொருத்தவரையில் ரொம்ப சந்தோஷமா பாட்டு கேட்பேன். ரொம்ப துக்கமா அதுக்கும் பாட்டு கேட்பேன். பாடல்கள் எனக்கு எபபோதும் உற்சாகம் தருபவை. ஏ.ஆர். ரகுமானின் தீவிர ரசிகன். ஏ.ஆருக்கு ஆஸ்கார் கிடைத்த அன்று நாங்கள் நண்பர்கள் விருந்து வைத்து கொண்டாடினோம். எனக்கு பிடித்த 5 பாடல்கள்.

01. விழிகளின் அருகினில் வானம் (படம் – அழகிய தீயே)

எனது மனநிலை எந்த நிலையிலிருந்தாலும் அதை சாந்தப்படுத்த கூடிய பாடல். இந்த பாடல் எனக்கு பிடித்தற்கு காரணம் இந்த பாடலில் சகலமும் பரிபுரணமாக இருப்பதனாலாகும். இசை, பாடல் வரிகள், குரல் என இந்த பாடலின் சிறப்பு சகலவற்றிலும் தங்கியுள்ளது. பாடல் வரிகள் வாலி என சில இணையதளங்களிலும் கவி வர்மன் சில இணையதளங்களிலும் உள்ளது.மிகவும் அழகான வர்ணனைகள், அதை அழகாக இசையமைத்தவர் ரமேஷ்விநாயகம்.

02. என்று உன்னைக் கண்டேனோ பெண்ணே (படம் – இதயமே இதயமே)

ஒரு டப்பிங் படத்தில் அமைந்திருந்தாலும் இந்த பாடல் மனதை ஈர்க்குமென்பதில் சந்தேகமேயில்லை. முக்காலா போன்ற பாடல்கள் பாடிய மனோவா இந்த மெல்லிய பாடலை பாடினார் என்பது ஆச்சர்யம். இந்த பாடலின் காணொளியை இதுவரை பார்த்ததில்லை. இப்போதும் இந்த பாடல் கேட்க வேண்டுமானால் வீட்டிலுள்ள டேப் ரெக்கார்டரில்தான் கேட்பேன். காரணம் இந்த பாடல் கேசட்டில்தான் என்னிடம் இருக்கிறது.

03. புது வெள்ளை மழை (படம் ரோஜா)

ஏ.ஆர் இசையமைத்த முதல் படத்திலுள்ள பாடல். சுஜாதா, உன்னி மேனன் குரல்களும், அந்தகாலத்தில் மிகவும் வித்தியாசமான இசையையும் கொண்ட இந்த பாடல் என்னை ஈர்த்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் இதிலுள்ள கோரஸ். இப்பவும் வானொலியில் இந்த பாடல் போகும் போது இது போல் இன்னொரு பாடல் இல்லை என தோன்றும்.

04. இளைய நிலா பொழிகிறது (படம் – பயணங்கள் முடிவதில்லை)

இசைஞானியின் இசையில் எஸ்.பீ.பீ யின் காந்தக்குரலில் ஒலிக்கும் இந்தப்பாடல் கேட்க கேட்க சலிக்காத அவ்வளவு இனிமையான பாடல். இந்த பாடல் பிடிக்க இன்னொரு காரணம் எங்களது சீனியர் ஒருத்தர் பள்ளி நாட்களில் இந்த பாடலை தனது பொக்ஸ் கிட்டாரில் அழகாக வாசிப்பதும் ஆகும். இந்த பாடலை நடுராத்திரி தூக்கத்திலிருந்து என்னை எழுப்பி கேட்க சொன்னாலும் கேட்பேன். அவ்வளவுக்கு இந்த பாடலை நான் காதலிக்கிறேன்.

05. வெள்ளைப்பூக்கள் (படம் – கன்னத்தில் முத்தமிட்டால்)

ஏ. ஆரின் இசையில் அவரே பாடிய பாடல். இந்தபாடல் எனக்கு பிடிக்க காரணம் பாடிய ஏ.ஆரின் குரல். ”முஸ்தபா முஸ்தபா”, ”அந்த அரபிக்கடலோரம்” பாடியவருக்கு இப்படி ஒரு பாடல் பாட முடியுமென நாங்கள் நினைத்திருக்கவில்லை. ஆஸ்கர் தமிழனின் குரலில் உள்ள பாடல்களில் எனக்கு என்றென்று் பிடித்த பாடல்.

நன்றி

யோகா (யோவாய்ஸ்)

சிறப்பு நேயர் “கிருத்திகன் குமாரசாமி”

இந்த வார சிறப்பு நேயரைப் பார்ப்பதற்கு முன்னர், றேடியோஸ்பதி சிறப்பு நேயர் பகுதியில் உங்கள் ஆக்கமும் இடம்பெற விரும்பினால் முத்தான ஐந்து பாடல்களைத் தேர்வு செய்து அவை ஏன் உங்களை வசீகரித்தன, அல்லது அந்தப் பாடல்கள் நினைவுபடுத்தும் சுவையான சம்பவங்களைக் கோர்வையாக்கி என்ற மின்னஞ்சலுக்குத் தட்டிவிடுங்கள்.

சரி, இந்த வாரம் வந்து கலக்கும் சிறப்பு நேயரைப் பார்ப்போம்.
வலையுலகின் புதுவரவாக ஈழத்து உறவான கிருத்திகன் குமாரசாமி இந்த வார சிறப்பு நேயராக வந்திருக்கின்றார். ஈழத்தின் பண்பாட்டுக் கோலங்களில் இருந்து தான் வாழும் நாடு, தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளைப் பதிவாக்கும் கிருத்திகனின் பதிவுகள் தனித்துவமானவை. தொடர்ந்தும் இவர் வலையுலகில் நீடித்து நின்று தன் எண்ணப் பகிர்வுகளை வழங்க வெண்டும். முத்தான ஐந்து பாடல்களாக இவர் எடுத்தவை அனைத்துமே 80களில், இவருடைய காலத்துக்கு முற்பட்டவை. ஆனால் அவற்றை எவ்வளவு தூரம் ரசித்து அனுபவித்திருக்கின்றார். என்று பாருங்களேன். தொடர்ந்து கிருத்திகன் பேசுவார்.


எல்லோருக்கும் பிடித்த பாடல்கள்தான், ஆனால் சில வித்தியாசமான காரணங்களுக்காக சில பாடல்களைத் தெரிந்து வரிசைப்படுத்தி இருக்கிறேன்.

1. நீல வான ஓடையில்…. (வாழ்வே மாயம்)
இந்தப் பாடலைப் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியமே பல இடங்களில் ஒப்புக் கொண்டிருக்கிறார் இன்றைக்கும் இந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் குலாம் நபி ஷேக் என்பவரின் கசல் (இதுவும் பாலா சொல்லித்தான் தெரியும்) அடிப்படையில் உருவான humming வரும்போதே கைதட்டல் கிடைக்கும் பாடல் இது. இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா? 2004ல் ஜெயா ரி.வி.யில் ‘கலக்கப்போவது கமல்’ என்ற நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. சொல்லித்தான் தெரியும் இந்தப் பாடலுக்கு இசையமைத்தது கங்கை அமரன் என்று. அதுவரை இளையராஜா என்றே நம்பி வந்தேன். தொலைக்காட்சியில் பாடல்கள் போடும்போது கூட இளையராஜா என்றே போடுவார்கள். இப்போதுகூட கங்கை அமரனையும் இந்தப் பாடலையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை.

2. விழிகள் மேடையாம்…(கிளிஞ்சல்கள்)
இந்தப் பாடல் ஏன் பிடிக்கும் என்று காரணம் சொல்ல முடியவில்லை. எங்களூர் கல்யாண வீட்டு வீடியோக்கள் போல் படமாக்கப்பட்டிருப்பதாலா? இசையாலா? அல்லது கிளிஞ்சல்கள் என்ற படத்தின் பாதிப்பாலா? இல்லையென்றால் பாடல் வரிகளாலா? எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து கட்டி ரசிக்க வைக்கின்ற பாடல். முக்கியமாக ஜானகி மற்றும் Dr.கல்யாண் பாடிய இந்தப் பாடலை எழுதி இசையமைத்தது இன்றைக்கு தன்னாலும் , மகனாலும் ‘காமெடி பீஸ்’ ஆகிவிட்ட விஜய. T. ராஜேந்தர் என்பது எனக்கு ஒரு போது பேரதிர்ச்சி.

3. பன்னீரில் நனைந்த பூக்கள்…(உயிரே உனக்காக)
அடிக்கடி கேட்ட பாடல்தான். வரிகள் யாருடையவை என்று தெரியாது.. ஆனால் ஏனோ இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கும். ஆரம்பகாலங்களில் இதுவும் ராஜாவின் கொடை என்பதாக நினைத்ததுண்டு. ஆனால் சமீபகாலமாக கொஞ்சம் எங்களுக்கு அன்னியப்பட்ட இசையாக இருக்க இணையத்தில் தேடிப் பார்த்தபோது தெரியவந்தது, இந்தப் பாட்டை உருவாக்கியவர்கள் லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் இரட்டையர்கள் என்று. முக்கியமாக பாடல் தொடங்கக்கு முன்னர் வருகிற அந்த இசை ஏதோ நினைவுகளை மீட்டுத்தரும்

4. தாழம்பூ தலைமுடித்து… (தேவராகம்)
இந்தப் பாட்டு அடிக்கடி எங்களூர் கல்யாண வீடியோக்களில் கேட்ட பாட்டு… என்ன படம், யார் இசை என்று தேடித்தேடி அலுத்து சமீபத்தில் தற்செயலாக மலையாளத்தில் இருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்டு வந்த இந்தப் படத்தைப் பார்க்கக் கிடைத்தது. அர்விந்த்சாமி, ஸ்ரீதேவி நடித்த படம். ஸ்ரீதேவி தேவதை மாதிரி இருப்பார்கள். இளையராஜா என்ற இசை ராட்சசனுக்கு அடிக்கடி சமர்ப்பிக்கப்படும் பாடல், இருந்தாலும் இதற்கும் ராஜாவுக்கும் சம்பந்தமில்லை. பாடல் எழுதியது வைரமுத்து, வருடம் 1996… இசையமைத்தது மரகத மணி என்றறியப்பட்ட மரகதமணி கீரவாணி அவர்கள்.

5. அந்தி நேரத் தென்றல் காற்று… (இணைந்த கைகள்)
ஆபாவாணன் என்று ஒருவர் கொஞ்சக் காலம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதிப் படம் எடுத்தார் ஞாபகம் இருக்கிறதா. அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் மனோஜ் கியான் போட்ட பாடல் இது. ரயில் ஒன்றில் வருவதாக வரும் இந்தப் பாடல் சில ஞாபகங்களைக் கிளறிவிட்டுப் போகும். எஸ்.பி. பாலாவும் ஜெயச்சந்திரனும் பாடிய பாடல் இது. இதே மனோஜ் கியான் உருவாக்கியவைதான் தோல்வி நிலையென நினைத்தால், செந்தூரப் பூவே நீயும் தேன் சிந்த வா, மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா போன்ற பாடல்கள்.

பாடல்களாலேயே படங்கள் ஓடிய அந்தக் காலத்தில் வந்த பாடல்களை இளையராஜா பாடல்கள், மோகன் பாடல்கள், கார்த்திக் பாடல்கள், கமல் பாடல்கள் வழமையாகப் பிரிப்பது போல் பிரிக்காமல் கொஞ்சம் வித்தியாசமான தேர்வுகளை உள்ளடக்க முயன்றிருக்கிறேன். இளையராஜா என்னும் இசைச் சூறாவளியால் அடித்து ஒதுக்கப்பட்ட சில இசையமைப்பாளர்களின் பாடல்கள் இவை.

கிருத்திகன்.

சிறப்பு நேயர் “சின்ன அம்மிணி”


இந்த வாரம் றேடியோஸ்பதி சிறப்பு நேயராக அமர்க்களப்படுத்த இருப்பவர் நாம் வாழும் எங்கள் கங்காரு தேசத்தில் இருந்து “சின்ன அம்மிணி” என்பதில் பெருமையடைகிறோம். கிவி தேசம் நியூசிலாந்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்த சின்ன அம்மணி தொடர்ந்தும் இடைவிடாது பதிவுலகில் இடைவிடாத பதிவுப்பணியை ஆற்றி வருபவர் என்று நான் உங்களுக்குச் சொல்லத்தேவையில்லை. ஆனால் அவுஸ்திரேலியாவில் ஆரம்பத்தில் சுனாமியாக வந்த வலைப்பதிவர்கள், பதிவுகள் ஓய்ந்து போன நிலையில் தொடர்ந்து எழுதி வரும் வரும் விரல் விட்டு எண்ணக் கூடிய பதிவர்களில் சின்ன அம்மிணி இருப்பதை இங்கே சொல்லி வைக்க வேண்டும்.

நாட்டு நடப்பு, நகைச்சுவை, சினிமா, சமூகம் என்று கலக்கும் சின்ன அம்மணியின் நகைச்சுவைக் கலக்கலுக்கு லேட்டஸ்ட் உதாரணம் அவர் படைத்த “நீதிபதி” விமர்சனம்.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் கலக்கிய இனிய மெல்லிசை மெட்டுக்கள் சின்ன அம்மணியின் தேர்வாக முத்தான ஐந்து பாடல்களாக வந்து உங்களுக்கு இன்னிசை விருந்து படைக்க இருக்கின்றன. கேட்டு மகிழுங்கள்.

1. நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே.

உமாரமணன், இளையராஜா பாடின பாட்டு. நில்லாமல் பதில் சொல்லாமல் அன்பேன்னு பாடும் உமா ரமணன் குரல் அருமை. பாட்டு பாடவா படம் வெளிவந்தபோது நான் ஈரோடில் பணியில் இருந்தேன். என் மேலதிகாரி ஒரு ஒரியாக்காரர். ‘கொஞ்சம் கொஞ்சம்’ தமிழ் பேசவும் படிக்கவும் தொடங்கியிருந்தார். தமிழின் சுலப எழுத்துக்களான ப,வ,ட மட்டுமே வைத்து வந்த இந்தப்படப்பெயரை படிக்கச்சொன்னதும் பட்டு புடவா என்று படித்தார். நான் விழுந்து விழுந்து சிரித்து வயறு வலித்தது. இந்தப்படத்தில் வந்த ‘வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறாள்’ எனக்கு பிடித்தமான மற்றொரு பாடல்.

2. இசையில் தொடங்குதம்மா

இந்தப்பாட்டு Full of Music. டம் டம்னு தொடங்கற இசை ஆகட்டும். பின்னாடி இந்துஸ்தானில அருவி மாதிரி இசை கொட்டும் குரல் கொண்ட அஜய் சக்ரபர்த்தி ஆகட்டும். So rich in Music. இளையராஜாவோட இசையில் இன்னொரு காவியம். இந்தப்படம் நியூஸியில் நான் திரையங்கில் பார்த்த படம். சென்சார் செய்யப்படாத காட்சிகளோடு பார்த்தேன். பின்னர் குறுந்தகட்டில் மீண்டும் பார்க்க நேர்ந்தபோது பல காட்சிகள் வெட்டப்பட்டிருந்தது. முழு படம் பார்த்த உணர்வை அது தரவில்லை. ராஜாவின் இசையில் கமல் பாடிய பாடல்களில் அவருக்கு தோதான குரல் ஜானகிதான். அதற்குப்பின் கமல் குரலுக்கு இசைந்த பெண்குரல்கள் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன். சுந்தரி நீயும், கண்மணி அன்போடு போன்ற பாடல்கள். மற்ற பாடல்கள் யாருக்காவது நினைவு வந்தால் பின்னூட்டம் போடுங்க.

3. காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு, வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா

சேரன் பாண்டியன் படத்தில தேன் குரலில் ஸ்வர்ணலதா பாடும் பாட்டு. என்னோட பேவரைட்களுல் ஒண்ணு. இசை செளந்தர்யன். கேக்க சலிக்காத பாட்டு. பாடல் பிடிக்க காரணம் ஸ்வர்ணலதா. பாடல்களுக்கு அழகு சேர்க்கும் குரல் இவருக்கு. லதா மங்கேஷ்கர் மாதிரி. படம் கிடைத்தால் மறுபடியும் பார்க்கவேண்டும்.

வந்ததா வந்ததான்னு கேட்டுக்கிட்டே ஷிரிஜாவை சுத்தி ஸ்டைலா ஆனந்த்பாபு நடப்பார். அழகா இருக்கும். (கானா – ஒளிப்படம் கிடைச்சா போடுங்க)

4. நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பாத்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல்ல.
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடிங்கி போன பின்னும் இப்படி போகும்
யேசுதாஸ் , ஸ்வர்ணலதா – படம் சின்னத்தாயி . மறுபடியும் இளையராஜா, ஸ்வர்ணலதா. இந்தப்பாட்டு கேட்கும்போது ‘கூண்டுக்குள்ள உன்னைவச்சு கூடி நின்ன ஓரை விட்டு ‘ பாடல் நினைவுக்கு வரும். ஒரே ராகமாய் இருக்குமோ.

இந்தப்பாட்டு அவ்வளவா பிரபலமாகலை. ஆனா பாடகர்கள் இரண்டு பேரும் பாடியிருக்கறதை கேளுங்க. சொக்கிப்போயிடுவீங்க.

5. சோலைகள் எல்லாம் பூக்களைத்தூவ சுகம் சுகம் ஆஅ..
குயில்களின் கூட்டம் பாக்களைப்பாட இதம் இதம் ஆஅ
காதல் ஊர்வலம் இங்கே

இசை டி.ராஜேந்தர். படம் – பூக்களைத்தான் பறிக்காதீங்க – எஸ் பிபி, சித்ரா

இந்தப்படத்துல அத்தனை பாடல்களும் சூப்பர். இந்தப்படம் திரையரங்கள் அண்டை வீட்டுக்காரர்களுடன் பார்த்தேன் – நதியாவுக்காக. படம் ஓடவில்லை. ஆனால் பாடல்கள் அனைத்தும் அருமை.

சிறப்பு நேயர் “நாடோடி இலக்கியன்”


ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் தொடர்கிறது, றேடியோஸ்பதி சிறப்பு நேயர்.
இந்த வாரம் சிறப்பு நேயராக வந்து கலக்குபவர் நண்பர் நாடோடி இலக்கியன்.

வலையுலகிற்கு வந்த பின்னர் , ஒத்த சிந்தனையுள்ள பதிவர்களின் பதிவுகளைத் தேடிப் படிக்கும் வழக்கம் கொண்ட எனக்கு நாடோடி இலக்கியனின் பதிவுகளைப் படிக்கக் கிடைத்தது உண்மையில் ஒரு வரப்பிரசாதம் என்பேன். ஒரு குறிக்கப்பட்ட எல்லைக்குள் நின்று தன் எழுத்தை வைக்காமல் பரந்து விரிந்த அவரின் எழுத்தாற்றலுக்கு நானும் ஒரு விசிறி என்பேன். நாடோடி இலக்கியன் தந்த மலையாள சினிமாக்கள் தொடரை வைத்துக் கொண்டு தான் விடுபட்டுப் போன படங்களைத் தேடிப் பார்க்கின்றேன். நனைவிடை தோய்தலாகட்டும், சினிமா பார்வையாகட்டும் இவரின் பாணி தனித்துவமானது. பெரும் பிரபலமான பாடல்கள் மட்டுமன்றி, மலர்ந்தும் மலராத பாடல்களாக ஆனால் சிறப்பான இசையமைப்பில் வந்த அதிகம் ரசிகர் கவனத்தை ஈர்க்காத பாடல்களையும் தேடி எடுத்துச் சிலாகிப்பது இவரின் தனித்துவம். அதற்கு உதாரணமாக நாடோடி இலக்கியன் இந்த சிறப்பு நேயர் பகுதியில் தொகுத்துத் தந்திருக்கும் எல்லாப் பாடல்களுமே நல்லுதாரணங்கள். ஒரு காலத்தில் நான் விரும்பி ரசித்துக் கேட்ட அந்தப் பாடல்களை இவர் மூலம் பகிரும் போது மீண்டும் கேட்கும் போது புத்துயிர் பெறுகின்றேன்.

இதோ நாடோடி இலக்கியன் பேசுகின்றார் இனி.

1.எஸ்.பி.பியும் கே.ஜே.யேசுதாஸ் அவர்களும் இணைந்து பாடிய பாடல்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கும். இசைப் பிரியர்கள் பெரும்பாலானோருக்கு இவ்விரண்டு ஜாம்பவான்களும் இணைந்து பாடிய பாடல்கள் என்றால் சட்டென்று நினைவுக்கு வரக்கூடியது தளபதி படப்பாடலான “காட்டுக் குயிலு மனசுக்குள்ளே” பாடலாகத்தான் இருக்கும்.’ நட்பைக் கூட கற்பை போல எண்ணுவேன்’ என்ற வரிகளுக்காகவே நான் ரொம்பவும் சிலாகித்து ரசித்தப் பாடல் இது.

எனது விருப்பமாக நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் பாடலும் கூட இவர்கள் இருவரும் இணைந்து பாடிய இன்னொரு பாடலே.இந்தப் பாடல் வெளிவந்த நேரத்தில் இலங்கை வானொலியில் நாள் தவறாது தேனருவி என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்புவார்கள்.அதன் பிறகு எங்குமே கேட்டு ரசிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.அப்பாடலை சமீபத்தில் பெரு முயற்சி எடுத்து ஒரு இணைய தளத்தில் இருந்து தரவிறக்கிக் கொண்டேன்.

இனியவன் இசையில் வைரமுத்துவின் வைர வரிகளில் கௌரி மனோகரி படப் பாடலான“அருவிகூட ஜதி இல்லாமல்” என்று தொடங்கும் பாடலைத்தான் முதல் தேர்வாக உங்களோடு கேட்டு ரசிக்க ஆவல்.

2.அடுத்து ஒரு Female டூயட். இதோ இதோ என் நெஞ்சிலே, ஒரு கிளி உருகுது,ஏ மரிக்கொழுந்து, மணிக்குயில் இசைக்குதடி போன்ற பாடல்களிலிருந்து எந்த பாடலை கொடுப்பது என்ற குழப்பதின் நடுவே இங்கே நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பும் புதுப்பட்டி பொன்னுத்தாயி படப் பாடலான ‘ஊரடங்கும் சாமத்தில’. சுவர்ணலதாவின் காந்தக் குரலையும்,உமா ரமணனின் கணீர் குரலையும் வைத்து அற்புதமான மெட்டில் விளையாடியிருப்பார் இளையராஜா.

3.அடுத்து ஒரு Male solo, வானமழை போலே(இது நம்ம பூமி),சோலை மலரே(பாட்டு வாத்தியார்) போன்ற சில பாடல்களில் எதை தேர்வு செய்வதென்ற குழப்பத்தினூடே நான் பகிர விரும்பும் பாடல் கே.ஜே.ஏசுதாஸின் குரலில் தேனாக செவியை நனைக்கும் ”சோலைப் பூந்தென்றலில் ஊஞ்சலாடும் செல்ல பைங்கிளி” . படத்தின் பெயர் பூவே பொன் பூவே. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த பாடல் இது.இதன் Female version ஜானகி பாடியிருப்பார். அற்புதமான இசையமைப்பு. இப்பாடல் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்தது,வேறெங்கும் இப்பாடலை கேட்க முடிவதில்லை.

4.அடுத்து ஒரு Female solo, இதிலும் அடி ஆடிவரும் பல்லாக்கு,விளக்கு வைப்போம் போன்ற சில பாடல்கள் என மனதில் வரிசைக் கட்டி நின்று குழப்பியது மிகவும் மனதை சமாதானப் படுத்தி உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் படத்திலிருந்து ராஜாவின் இசையில் ஜானகியின் கொஞ்சும் குரலில் துள்ளலாய் இருக்கும், உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் திரைப்படப்பாடலான ’ஓஹோஹோ காலைக் குயில்களே’ பாடலை முடிவு செய்திருக்கிறேன். இந்த பாடலை ஊட்டியில் படமாக்கியிருப்பார்கள் எப்போது ஊட்டிக்கு போகும் போதும் அங்கு காணும் காட்சிகளை பார்க்கையில் இப்பாடலும் , “தூரி கிழக்குதிக்கின்” என்ற மலையாளப் பாடலும் தான் நினைவுக்கு வரும்.

5.அடுத்து male,female இணைந்து பாடிய பாடலாக ஒரு பாடலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.இங்கேயும் ’என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட’ (உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்), ’தென்றலிலே மிதந்து வந்த’(புதிய தென்றல்), ’காத்திருந்தேன் தனியே’(ராசா மகன்) என ஒரு பெரிய லிஸ்ட் மனத் திரையில்.
இறுதித் தேர்வாக வனஜா கிரிஜா படத்தில் இருந்து எஸ்.பி.பி யும் சுவர்ணலாதாவும் இணைந்து பாடிய ’உன்னை எதிர் பார்த்தேன்’ பாடல். எத்தனை முறைக் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அற்புதமான மெட்டு.

சிறப்பு நேயர் ” சித்தை-பாசித்”

றேடியோஸ்பதி சம்பாதித்த நண்பர்களில் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமான நண்பர் சித்தை பாசித் ஐ குறிப்பிடலாம். றேடியோஸ்பதியில் வரும் ஓவ்வொரு பதிவுகளையும் சிலாகித்து தன் தனிமடலில் தவறாமல் எழுதிவருபவர் இவர். இசை மீது இவருக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டையும், இவரின் ரசிப்புத் தன்மையையும் அந்த மடல்களில் இருந்து நான் கண்டு கொண்டேன். சிறப்பு நேயராக இவரை அழைத்த போது எழுதி அனுப்பிய கன்னி முயற்சி இது. ஆனால் பாடல்களைப் பாருங்கள். ஒவ்வொரு பாடல்களுமே தனித்துவமான ரசனை கொண்டவை. இனிய ரமலான் வாழ்த்துக்களை பாசித் மூலம் முன் கூட்டிய வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு அவரின் பாடல் தெரிவுகளைக் கேட்டு அனுபவியுங்கள்.


இளையராஜா இசை ஒரு மருந்து மாதிரி அதிலும் 80களில் அவர்தான் ராஜா.
1.படம் நண்டு
அள்ளி தந்த பூமி
இந்த பாடல் மலேசியா வாசுதேவன் பாடியது
இலங்கை வானொலி தமிழ்சேவை இருந்தபோது எங்கள் வீட்டு வால்வு ரேடியோவில் கேட்ட பாடல். இந்த ஹம்மிங் கூட வரும் இசை இரண்டுமே மனதை மயக்கும்

2. படம் ராஜாத்தி ரோஜா கிளி
பாடல்: ஒடையின்னா நல்லோட
சமீபத்தில்தான் இப்படி ஒரு பாடல் இருப்பது தெரியும்.
கிராமத்துபாடல். இசை தாபேலா அப்படியே பாட்டோடு நடக்கும் புல்லாங்குழல் அழகு.
குருந்தகட்டில் பாடல் கிடைக்கவில்லை.
கோடை வானொலியில் அடிக்கடி நான் விரும்பி கேட்கும் பாடல்

3. படம்:அம்மா
பாடல்: மழையே மழையே

பிரதாப் போத்தன் சரிதா நடித்த படம் இதுவும் ஒரு மென்மையான பாடல்தான்.
இந்த பாடலை என்னால் மறக்கமுடியாது.
ஒரு மழைநாளின் மாலையில் பேருந்து பயணத்தில் கேட்டது.
நானும் எனது நண்பர்களும் பாடலை கேட்டு ரசித்து படம் என்ன என்பதை கண்டுபிடிக்க படாதபாடு பட்டோம்! (இப்பதான் தல இருக்குல)

4. படம்: மெல்.திற.கதவு
பாடல்: வா வெண்ணிலா (ஜானகி)
இது அதிகம் கேளாதா பொக்கிஷபாடல்.
இசைகூட மாறும்.
பள்ளி ஆண்டு விழா பாடல் இது. இப்படி ஒரு பாடலை தெரிவு செய்ததற்கே நிறைய பாராட்டு கிடைத்தது எனக்கு. கைதட்ட வைத்த பாடல்.

5. படம்: தெற்கு தெரு மச்சான்
பாடல்: தென்னமர தோப்புக்குள்ளே குயிலே
தேவா இசைத்த பாடல் இது.குரல் ஜானகி.
பாடல்கள் பதிய ஊர் ஊராக அழைந்து ஏதோ ஒரு ஊரில் ரிக்கார்டில் எடுத்து பதிந்த பாடல் இன்னும் எப்போது கேட்டாலும் அந்த ஞாபகம் வந்து போகும்.
ஜானகியின் குழைந்த குரல் உங்களையும் ரசிக்க வைக்கும்

சிறப்பு நேயர் “ரவிசங்கர் ஆனந்த்”

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக சக வலைப்பதிவர்கள் மட்டுமன்றி ஒரு சில வாசகர்களும் இடம் பிடித்திருக்கின்றார்கள். அந்த வகையில் இந்த வாரம் வரும் ரவிசங்கர் ஆனந்தும் இடம்பிடிக்கின்றார். இவர் தனக்கென ஒரு வலைப்பதிவை வைத்திருக்காவிடினும் இளையராஜாவின் பாடல்களில் தீவிர ரசிகனாக பல சந்தர்ப்பங்களில் றேடியோஸ்புதிர், பதிவுகளில் தன் கருத்தை வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்.

தன் ரசனையில் முத்தான ஐந்து பாடல்களைத் தெரிவு செய்திருக்கும் இவரின் இந்தத் தெரிவுகளை வைத்தே எப்படியெல்லாம் இளையராஜாவின் பாடல்களில் மொழி கடந்தும் ஈர்க்கப்பட்டிருக்கின்றார் என்பதற்கு எடுத்துக்காட்டு. இளையராஜாவின் குடும்பத்தோடு ஒரு வகையில் சொந்தமாகிவிட்ட இவரை சிறப்பு நேயராக இணைத்திருப்பது எமக்கும் பெருமை. சரி, இனி ரவிசங்கர் பேசட்டும்.


நான் பயங்கர இளையராஜா ரசிகன் என்பது , கானா உங்களுக்கே தெரியும் ஆகவே அவர் போட்ட 5500+ பாடல்களும் எனக்கு பிடிச்ச ஒன்று தான். இருந்தாலும் அதுக்குள்ள ஒன்ன நண்பர் கலைகோவன் சொல்லிட்டார் ( செவ்வரளி தோட்டத்திலே )

1. வாட வாட்டுதே ஒரு போர்வ கேக்குதே – சக்களத்தி

ராஜாவின் குரலில் ஒரு கிராமத்து இளைஞனுக்குரிய “innocence” இருக்கும். இரண்டாவது “interlude” அம்சமா இருக்கும்.

2. ஒரு சிரி கண்டால் – பொன்முடிப்புழையோரத்து (மலையாளம்)

மாயாமாளவ கௌளை ராகத்தில் அமைந்த ஒரு தேன் கிண்ணம் இந்த பாடல்.
ஹி ஹி ஹி இந்த பாட்ட நான் சொதப்பலா பாடி ஒரு கேரள பெண்ண மிஸ் பண்ணிட்டேன் 🙁

3. சிஹி காலி சிஹி காலி – ஆ தினகலு – கன்னடம்

கடந்த ஓராண்டாக நான் அடிக்கடி முனுமுனுக்கும் கன்னட பாடல் இது. இசைஞானியின் குரலில் ஒரு சிறிய duet பாடல். ( கொஞ்சம் தமிழ் “ accent” கலந்திருக்கும்).
ரொம்ப நாள் கழிச்சு ராஜா கன்னடத்துல வேல செய்த படம். ரொம்ப நாள் கழிச்சு ராஜா இசைல ராஜா வாய்ஸ்ல வந்த டூயட் பாடல் ( பட்டியல்- நம்ம காட்டுல பாடல் exception, அது யுவன் இசை )

4. தலையை குனியும் தாமரையே – ஒரு ஓடை நதியாகிறது

ரீதிகௌள ராகத்தில் அமைய பெற்ற பாடல். பாலு “just like that” பாடி இருப்பாரு. என் அத்தையின் திருமண நலுங்கில் அவர் இந்த பாடலை தான் பாடினார்… சட்டென்று மாமாவும் சேர்ந்து பாடி அந்த இடமே கலகலப்பாக இருந்தது, ஆக அவர்களுக்கு மட்டும் அல்ல, எங்களுக்கும் its a sweet memory

5. பூமேல வீசும் பூங்காற்றே – எச்சில் இரவுகள்

பொதுவா எல்லா A.S பிரகாசம் படங்கள் எல்லாமே கொஞ்சம் அறுவையாதான் இருக்கும் (உம் – ஆள பிறந்தவன், பகவதிபுரம் ரயில்வே கேட் ) ஆனாலும் அவர் படத்துக்கு பாடல்களா இருக்கட்டும் இல்லே re-recording ஆ இருக்கட்டும் ஒரு மகேந்த்ரனுக்கு போடறா மாதிரியோ இல்ல பாலு மகேந்திராவுக்கு போட்றமாதிரியோ தான் வஞ்சனையில்லாமல் வழங்குவார் ராஜா. பிச்சைகார கதாநாயகனுக்கு கம்பீரமான யேசுதாஸ் குரல் 🙂

சிறப்பு நேயர் தொடருக்கு இதுவரை தங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்காதோர் முத்தான ஐந்து பாடல்களைத் தெரிவு செய்து அதற்கான விளக்கங்கள், ஏன் பிடிக்கும் போன்ற விபரங்களோடு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kanapraba@gmail.com

சிறப்பு நேயர் “G3 புகழ் காயத்ரி”

மற்றவர்களை மனம் விட்டுப் பாராட்டுங்கள் அவர்களுக்கு உங்கள் மேல் மரியாதை இன்னும் அதிகமாகும் என்பதோடு கூடவே உங்களிலும் நல்ல பண்பை விதைப்பீர்கள் என்பார்கள். இந்த வாரம் முத்தான ஐந்து பாட்டுக்களோடு வந்திருக்கும் பயமறியாப் பாவை G3 இதற்கு நல்ல எடுத்துகாட்டு போல மற்றவர்களை மனம் விட்டு பதிவுகள் மூலம் பாராட்டுவதில் நல்லதொரு முன்னுதாரணமாக இருக்கின்றார். தமிழ்மணத்தின் உறுப்பினர் பட்டியலில் அனேகமாக எல்லோரின் பிறந்ததினங்களையும் மனதில் வைத்து அவரவர் குணாதிசியங்களைப் பகிர்ந்து வாழ்த்துத் தெரிவிப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அதைச் சலிக்காமல் அலுக்காமல் செய்வதில் G3 ஓர் எடுத்துக்காட்டு. சன் டிவியில் சனி காலை 6.40 க்கு ஒளிபரப்பாகும் “பிறந்த நாள் வாழ்த்து” நிகழ்ச்சியின் இன்னொரு வடிவம் இவர்.
இவரின் எழுத்துப் பாணி, இன்னொரு பதிவுலக சிங்கி, சமீபத்தில் காணாமல் போன “மைபிரண்டை” ஏனோ எனக்கு நினைவு படுத்தும். செப்டெம்பர் 2006 இல் இருந்து பதிவுலகை அமைதியாக இருந்து கலக்கி வரும் G3 அவ்வப்போது கவிதைகளை எழுதி விட்டு “கவிதை முயற்சி” என்று லேபல் வைப்பது இவரின் தன்னடக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. பதிவுலகுக்கு வந்து எழுத ஆரம்பித்த போது தமிழ் தட்டச்சு வராமலோ என்னவோ தமிங்கிலிஷில் தன் முயற்சியை ஆரம்பித்து பின்னர் நாளாக தமிழ் தட்டச்சிலே தேர்ச்சி பெற்று தன் “பிரவாகம்” வலைபதிவோடு, கூட்டு வலைபதிவுகளான தேன் கிண்ணம், பயமறியா பாவையர் சங்கம், கானக்கந்தர்வன், சுவரொட்டி போன்றவற்றிலும் இணைந்து செயற்படுபவர். அவ்வப்போது ஆங்கிலத்தில் அரிய தன்னம்பிக்கை தரும் விஷயங்களைப் பகிர்ந்து வாசகர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தாலும் G3 இடம் பன்முகப்பட்ட ரசனை இருக்கிறது என்பதற்கு அவர் தெரிவு செய்த முத்தான ஐந்து கலவையான பழைய, புதிய பாடல்களே சான்று, சரி இனி G3 பேசட்டும்.

1. தெய்வம் படத்திலிருந்து – திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்.

முதல்ல பக்திப்பாடல்ல இருந்து ஆரம்பிப்போம். உனக்கு பிடித்த கடவுள் யாருனு கேட்டா கொஞ்சம் கூட யோசிக்காம சொல்ற பதில் பிள்ளையார் / சிவன் னு தான். ஆனா திரைப்படங்கள்ல வந்த பக்திப்பாடல்கள்லனு பாத்தீங்கனா மனசுல பளிச்சுனு நிக்கறது முருகர் / அம்மன் பாடல்கள் தான். அதுலயும் தெய்வம் படத்துல முருகரோட அறுபடை வீட்டுக்கும் ஒவ்வொரு பாட்டு இருக்கும். அதுல 2-3 பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும்னாலும் எங்கப்பாவுக்கும் பிடிச்ச திருச்செந்தூரின் கடலோரத்தில் பாட்டு தான் இப்ப கேட்கபோறது.

“கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?

“நம்பியவர் வந்தால்… நெஞ்சுருகி நின்றால்…
கந்தா…. முருகா…. “

டி.எம்.எஸ் & சீர்காழி குரல்ல இந்த வரிகளை கேட்கும்போது ஏற்படும் பரவசம் இருக்கே.. சான்ஸே இல்லங்க :-))))))

2. பசங்க படத்திலிருந்து ஒரு வெட்கம் வருதே வருதே

சமீபத்தில் வந்த பாடல்கள்ல பாடல் வரிகள் + காட்சியமைப்பு ரெண்டுமே அற்புதமா இருந்த பாடல்கள்ல இதுவும் ஒன்று. ஆரம்பத்துல டீ.வி.ல பாக்கறப்போ எல்லாம் பாடல் வரிகள் என்னனு கவனிக்கனும்னு நினைச்சாலும் காட்சிகள்ல கவனம் சிதறிடும். காதலி கேட்டதும் அவளுக்காக போய் அல்லி பூவ பறிச்சிட்டு வந்து குடுக்க நம்ம ஹீரோயின் அதை முகர்ந்து பாத்துட்டு கேவலமா இருக்குனு திரும்ப தூக்கி போட ஹீரோ முகம் தொங்க போட்டுக்குவாரு. அதே மாதிரி கோவில்ல சாமி கும்பிட மறந்து வெறும் கைல போட்டோ பிடிக்கற மாதிரி முயற்சி செஞ்சிட்டு நெத்தியில அடிச்சிக்கறதும், புளியம்பழம் சாப்டுட்டு சூப்பரா ஒரு ரியாக்ஷன் குடுக்கறதும்னு காட்சிகள் எல்லாமே சிறுகவிதை மாதிரி இருக்கும் :-)))))

“மேலும் சில முறை
உன் குறும்பிலே நானே தோற்கிறேன்”

“கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பட பட படவெனவே துடித்துடித்திடும் மனமே
வர வர வரக்கரைத்தாண்டிடுமே”

“வழிகளில் ஊர்கோலம் இதுவரை நான் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே”

3. சுமைதாங்கி படத்திலிருந்து மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

பழைய பாடல்கள்ல நிறைய விரும்பி கேட்கறதுனு சொன்னா அது நிறைய கண்ணதாசன் பாடல்களா தான் இருக்கும். பெரிய பெரிய விஷயங்கள ரொம்ப அசால்ட்டா சொல்லியிருப்பாரு. அப்படிப்பட்ட ஒரு பாட்டு தான் இது.

”மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்”

”துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அது கோவிலாகலாம்…”

4. வெள்ளித்திரை படத்திலிருந்து விழியிலே எனது விழியிலே

இந்த பாடல் படத்துல வரலைனு நினைக்கறேன். இதோட இன்னொரு வெர்ஷனான உயிரிலே பாட்டு தான் படத்துல இருக்கு. சித்ராவோட குரல்ல அப்படியே கேக்கறவங்களுக்கு சோகத்தை அள்ளித்தரும் பாடல் இது.

“இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கைசேரத்தான்
உன் உருவம் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலைதூரம் தான்”

“ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா”

5. பாண்டவர் பூமி படத்திலிருந்து விரும்புதே மனசு விரும்புதே

இந்த காலத்துல தனியா ஒரு வீடு வாங்கனும்ங்கறது பலரோட கனவு. அதுல அவங்க விரும்பற மாதிரி பல விஷயங்கள் பண்ணனும்னு ஆசைப்படுவாங்க. அந்த மாதிரி பாண்டவர் பூமி படத்துல அவங்க கட்டப்போற வீடு எப்படியெல்லாம் இருக்கனும்னு கற்பனை செஞ்சு பாடற மாதிரி ஒரு பாடல். ஏனோ இந்த பாடல் படத்துல வரலை. ஆனா பாடல் வரிகள் நமக்கும் இப்படி ஒரு வீடு இருந்தா சூப்பரா இருக்குமேனு ஏங்க வைக்கும் பாடல் 🙂

”இந்த வாசல் வந்தால் கோபம் தீரும்படி
வீசும் காற்றில் ஆயுள் கூடும்படி
பேசும் வார்த்தை கவிதையாகும்படி
விரும்புதே…”

”நல்லோர் கண்கள் கண்டு போற்றும்படி
பொல்லார் மனசும் நின்று வாழ்த்தும்படி
எல்லா உறவும் வந்து வாழும்படி
விரும்புதே..”

*******************

இத்துடன் எனக்கு குடுத்த ஐந்து பாடல்களுக்கான இட ஒதுக்கீடு முடிவடைவதால் நான் அனைவருக்கும் (முக்கியமாக கானா பிரபாவிற்கு) நன்றி கூறி விடைபெற்றுக்கொள்கிறேன் :-))))))

சிறப்பு நேயர் “கைப்புள்ள” புகழ் மோகன்ராஜ்”

கைப்புள்ள என்று வலைப்பெயர் வைத்துக் கொண்டு பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் பரந்துபட்ட விஷய ஞானங்களுடன் எழுதிக் குவிக்கிறாரே என்று இவரைப் பற்றி அடிக்கடி நான் வியப்பதுண்டு. அக்டோபர் 2005 இல் இருந்து எழுதி வரும் இவர் இன்று வரை வலையுலக சர்ச்சைகளுக்குள் விழுந்து விடாமலும், தன் எழுத்துகளைச் சேதாரப்படுத்தாமலும் எழுதி வருவதுண்டு. எழுத்து வன்மையுடன், காமிராக் கண்களாலும் கைது செய்பவர் இவர். கைப்புள்ள காலிங் என்ற இவரின் வலைப்பதிவு சமீபத்தில் டபுள் செஞ்சுரி போட்டிருக்கு, இந்த வேளை என் வாழ்த்துக்களையும் சொல்லி வைக்கிறேன்.

சிறப்பு நேயர் பகுதியில் ஆக்கம் எழுதி அனுப்பி வைத்து விட்டு ஓய்ந்தார் என்று பார்த்தால் மேலதிகமாக நான்கு மடல்கள் அடுத்தடுத்த நாட்கள் வந்திருக்கு. முன்னர் எழுதிய பதிவை மெருகேற்றிக் கொண்டே இருந்தார். அவ்வளவு சிரத்தையாக ஒப்புக் கொண்ட விஷயத்தில் காட்டியது எனக்கு இன்னொரு ஆச்சரியம்.
பதிவில் ராஜா படம் தான் வேணும் என்று அடம்பிடித்து, ஒரு முறை ராஜா டவலைக் கட்டிக் கொண்டு இசையமைத்த காட்சிப் படத்தைப் போடுமாறு அடம்பிடித்தார். ஆனால் என் கைக்கு அது கிட்டவேயில்லை. யாராவது வைத்திருந்தால் சொல்லுங்கள் அதை இணைத்து விடுகின்றேன். இப்படி நேற்று நான் போட்டிருந்தேன். இன்று காலை என் மின்னஞ்சலைப் பார்த்தால் நம்ம தல கோபி அன்போடு தன் தெய்வத்தின் படத்தை அனுப்பியிருந்தார். ஆக, கைப்புள்ளையின் ஆசை நிறைவேறிடிச்சு 😉

சரி இனி நம்ம மோகன்ராஜ் பேசட்டும்

வணக்கம். ரேடியோஸ்பதியில் உங்கள் விருப்பப் பாடல்களைத் தேர்வு செய்து சொல்லுங்கள் என்று கானா அண்ணாச்சி சொன்னதும், நான் அவரைக் கேட்டது “நெஜமாத் தான் சொல்றீங்களா?”. உண்மையைச் சொல்லனும்னா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவர் இந்த சிறப்பு நேயர் பதிவுகளைத் தொடர்ச்சியா வழங்கிட்டு இருக்கும் போது நமக்கும் ஒரு நாள் சிறப்பு நேயராகறதுக்கு வாய்ப்பு கெடைக்குமான்னு நெனச்சிருக்கேன். ஏன்னா தமிழ் திரை இசை உலகைப் பொறுத்தவரை அவர் ‘ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்’ அவர்களுக்கு ஒப்பானவர். தமிழ் திரை இசையைப் பற்றியும் பாடல்களைப் பற்றியும் பல தகவல்களைத் தொகுத்து வைத்திருக்கும் ஒரு நடமாடும் தகவல் சுரங்கம். ஆகவே அவருடைய வலைப்பூவில் எனக்கு பிடித்த பாடல்களைப் பற்றி எழுதக் கிடைத்த வாய்ப்பு உண்மையிலேயே பெருமைக்குரியது. ஆனா சிறப்பு நேயர் வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு பிடித்த பல நூறு பாட்டுகளில் ஒரு சிலதை தேர்ந்தெடுப்பது சுலபமானதாக இருக்கவில்லை.

1. என்னைப் பொறுத்த வரையில்…இது போல ஒரு அற்புதமான இன்னொரு பாட்டை நான் கேட்டதில்லை. ஒரு பாட்டைக் கேட்டா பல வித உணர்ச்சிகள் மனதில் தோன்றலாம். ஆனா மனசை இதமா வருடிக் கொடுத்து அமைதி படுத்தற மாதிரியான இந்த மாதிரி ஒரு பாட்டைத் தேடிக்கிட்டே இருக்கேன். எந்த மனநிலையில நாம கேக்கறோமோ அந்த மனநிலைக்கேத்த மாதிரியே இந்த பாடலும் என் மனசுக்குத் தோனும். இன்னும் சொல்லப் போனா எனக்கு நினைவு தெரிஞ்சு நான் கேட்ட முதல் சில பாடல்களில் இது அடங்கும். அதனால தாய்மொழி, தாய்பாசம் இதெல்லாம் எவ்வளவு நெருக்கமானதோ அந்தளவுக்கு இப்பாட்டு என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானது. அதோட இந்த படப் பாடல்கள் வெளிவந்த போது தான் எங்க வீட்டுல டூ-இன்- ஒன் முதன் முதல்ல வந்தது. அந்த படம்…முதல் மரியாதை. அந்தப் பாடல்…வெட்டி வேரு வாசம். தேங்க் யூ வைரமுத்து அண்ட் இளையராஜா.

படம் : முதல் மரியாதை(1985)
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : இளையராஜா
பாடியது : S.ஜானகி, மலேசியா வாசுதேவன்

2. சில நாட்களுக்கு முன்னாடி அலுவலகத்திலிருந்து திரும்பி வரும் போது பண்பலையில் ஒலிபரப்பான ஒரு பாட்டைக் கேட்டேன். அந்தப் படம் பிள்ளை நிலா. பேபி ஷாலினிக்குப் பேய் பிடித்து ஆட்டுவது போல வந்த ஒரு படம். மோகன், நளினி ஜோடியின் மகளாக வருவார் பேபி ஷாலினி(அப்போ பேபி தான்). அந்தப் பாட்டை என் தம்பி சிறுவயதில் “ராஜா மகள் ரோஜா தின்றாள்” என்று பாடுவான். அப்போது அந்த பாட்டு அவ்வளவு சிறப்பானதாக எனக்கும் தோன்றியதில்லை. ஆனால் அன்று மாலை கேட்டதிலிருந்து ஏனோ மனதை வெகுவாகக் கவர்ந்தது. நான் கண்டறிந்த வரை இளையராஜாவுடைய பாடல்களில் சிம்பிள் ஃபார்முலா ஒன்று உண்டு. அது பாடலின் தொடக்கம் சாதாரணமானதாக இருந்தாலும் மிக பிரமாண்டமானதாக இருந்தாலும் இடையில் வரும் வரிகளில் மீண்டும் மீண்டும் கேட்டு ஏங்கச் செய்யுமாறு இசையமைத்திடுவார். அதுவே பல நாளானாலும் அந்த பாடல் மனதை விட்டு நீங்கா இடம் பிடிப்பதற்கு காரணம் என நான் நினைக்கிறேன். இந்த பாடலில் பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களின் குரலில் சரணங்களில் வரும் வரிகள் யாவும் அத்தகையவே. இந்தப் பாடலைத் தேடி எடுத்து ஒரு நாள் என் அம்மாவிற்கு போட்டு காட்டினேன். கேட்ட மாத்திரத்தில் அவங்க சொன்னது “இந்தப் பாட்டை உன் தம்பி ராஜா மகள் ரோஜா தின்றாள்னு பாடுவானே”. இது போன்ற நினைவுகளுக்கு விலையேது? அப்போ தான் புரிஞ்சது இளையராஜாவின் இசை என்பது எங்களுக்கு ஒரு வாழ்க்கை முறையாகவே இருந்திருக்கிறது என்பது. அதனால் தானோ என்னவோ நான் ரசிக்கும் தலைவரின் பாடல்களை யாராவது இகழ்ந்து பேசினால் ஏன் கோபம் வருகிறது என்று – ஏனென்றால் அது என்னை போன்ற பலரின் ரசனையையும், இது நாள் வரை நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையையே இகழ்வது போன்றானது. நான் இவ்வாறு சொல்வதில் மிகை ஏதுமில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.

படம் : பிள்ளை நிலா (1985)
பாடலாசிரியர் : unknown
இசை : இளையராஜா
பாடியது : P.ஜெயச்சந்திரன்

3. விஜி மேனுவல்(Viji Manuel) என்பவர் இளையராஜாவிடம் பல நாட்களாக கீபோர்டு வாசிப்பாளராக இருப்பவர். கீபோர்டு வாசிப்பாளர் என்றால் வெறுமனே இசையமைப்பாளர் நோட்ஸ் கொடுத்தால் வாங்கி வாசிச்சுட்டு போற ஆள் இல்லை. சொந்தமாக ஆல்பம் எல்லாம் வெளியிட்டு இருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால் இவரும் ஒரு இசையமைப்பாளர் தான். இவருடைய தந்தை ஹாண்டேல் மேனுவல்(Handel Manuel) அவர்களும் பல சிறப்புகளைப் பெற்ற புகழ்பெற்ற பியானோ இசை கலைஞர். விஜி மேனுவல் சரளமான ஆங்கிலத்தில் ஏதோ ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் சில ஆண்டுகளுக்கு முன் தந்த தகவல் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஏதோ ஒரு பாடலுக்கு(எந்த பாடல் என்று சரியாக நினைவில்லை) ராஜா அவர்கள் கொடுத்த நோட்ஸ் மிகவும் கடினமானதாக இருந்ததாம். அதை வாசிக்கும் போது அவருடைய இரு கைகளும் கீபோர்டின் ஒவ்வொரு கோடியில் இருந்தனவாம். இருப்பினும் பாடலின் கடைசியில் வரும் ஒரு நோட் தான் விரும்பியபடி வரவேண்டும் என்று ராஜா மிக உறுதியாக இருந்தாராம். கைகள் இரண்டும் இருவேறு இடங்களில் ஏற்கனவே தரப்பட்ட நோட்ஸ்களை வாசித்துக் கொண்டிருந்தபடியால் அந்த கடைசி நோட்டை எந்த கையாலும் வாசிக்க முடியாத நிலையில் இருந்தாராம் விஜி. இருப்பினும் ராஜா கொடுத்த அந்த கடைசி நோட்டையும் வாசித்தாராம் – எப்படி? – குனிந்து தன் மூக்கால் கீபோர்டை அழுத்தி வாசித்தாராம். இத்தகவலைத் தெரிவித்து விட்டு ‘ராஜாவுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்’ என்று பொருள்படும் வகையில் ‘Anything for Raaja’ என்று கூறி முடித்தார்.

இளையராஜா யாஹூ குழுமத்தில், உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு க்விஸ் போட்டியில்(மின்னஞ்சல் மூலமாகத் தான்), இளையராஜா தலையில் துண்டு ஒன்றைப் போட்டுக் கொண்டு ஆர்க்கெஸ்ட்ராவை வழிநடத்திக் கொண்டிருக்கும் படம் ஒன்றைக் காட்டி அப்படத்தின் சிறப்பு என்று கேட்டிருந்தார்கள். எனக்கு விடை தெரிந்திருக்கவில்லை. பின்னால் தெரிந்து கொண்டது – ஆர்க்கெஸ்ட்ராவை வழிநடத்திக் கொண்டிருந்த அன்று கடும் காய்ச்சலால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தாராம் இளையராஜா. இருப்பினும் காய்ச்சலைத் தணிப்பதற்காக ஒரு ஈரத் துண்டினைத் தலையில் போட்டுக் கொண்டு ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டாராம். அப்போது தான் புரிந்தது தேர்ந்த இசை கலைஞர்கள் கூட ராஜாவுக்காக எதுவும் செய்ய துணிவதற்கான காரணம், இசைக்காக ராஜா எதையும் செய்யத் துணிவதனால் தான் என்று. மேலே சொன்ன படி கடும் காய்ச்சலோடு ராஜா இசையமைத்து வெளிவந்த படம் தான் மோகன்லால் நடித்த ‘குரு'(1997) என்ற மலையாளத் திரைப்படம். இப்படத்திற்காக புதபெஸ்டிலிருந்து ஹங்கேரி சிம்பொனி ஆர்கெஸ்டிரா கலைஞர்கள் வாசித்தது இப்படத்தின் சிறப்பு.

‘ஈ சீதைக்கும் ப்ரியம் அருளியதொரு மின்னாரம் மானத்து’ – மொழி புரியலைன்னாலும் பாடலில் இந்த வரிகளைக் கேட்டு பாருங்க. உருகிடுவீங்க.

படம் : குரு (1997) – மலையாளம்
பாடலாசிரியர் : ரமேசன் நாயர்
இசை : இளையராஜா
பாடியது : சுஜாதா

4. தன்னுடைய வரிகளைத் தாங்கி இனிமையான பாடல்கள் வர வேண்டும் என்பதற்காகவே காசு போட்டு படம் எடுப்பாராம் கவிஞர் கண்ணதாசன். அப்படி அவருடைய தயாரிப்பில் வெளிவந்த படம் “கறுப்பு பணம்”. விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரின் இசையில் வந்த அழகானதொரு இரவு பாடல் அதுவும் இரவு படகு பாடல். எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் குரலில் என் அம்மாவுக்கு பிடித்த பாடல்களில் ஒன்று இது. பலரும் கேட்டிருக்க மாட்டார்கள் என்றெண்ணி இப்பாடலை இங்கு பகிர்கிறேன். அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி அமைதியான இரவு வேளைகளில் கேட்க நல்லதொரு பாடல் இது.

படம் : கறுப்பு பணம் (1964)
பாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியது : L.R. ஈஸ்வரி

எம்.எஸ்.வி. அவர்கள் இசையில் எனக்கு பிடித்த இன்னொரு பாடல் – சொல்லத் தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்

5. ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையில் நான் மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று இது. ஆல் இந்தியா ரேடியோவின் ரெயின்போ எஃப்எம் அலைவரிசையில் இவ்வாண்டு பொங்கல் தினத்தன்று ரகுமான் ஒரு நேர்காணல் வழங்கினார். அதில் தன் இசையமைக்கும் பாணி பற்றி அவர் சொன்ன தகவல் ஒன்று – “எல்லாரும் சங்கராபரணம், கல்யாணி அப்படின்னு கர்நாடக இசை அடிப்படையாகக் கொண்ட ராகங்களை வைத்து இசை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிலிருந்து நாம் தனித்து தெரிய என்ன செய்யலாம் என்று யோசித்த போது மாண்ட், திலாங் போன்ற இந்துஸ்தானி ராகங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் இசையமைக்கலாமே என்று”. அவ்வாறு இந்துஸ்தானி இசை சாயல்கள் தெரியும் ஒரு அழகான பாடல் – “உதயா உதயா”. எனக்கு மிகவும் பிடித்தமானதொரு பாடலும் கூட.

படம் : உதயா (2003)
பாடலாசிரியர் : அறிவுமதி
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியது : ஹரிஹரன், சாதனா சர்கம்

பி.கு: நேயர் விருப்பம் பதிவில் ஐந்து பாடல்களைத் தேர்வு செய்து தருமாறு சொல்லியிருந்தார் கானா அண்ணாச்சி. பாத்துக்கங்க மக்களே…நான் நியாயஸ்தன். அவரு சொன்ன நம்பரான அஞ்சை நான் தாண்டலை 🙂

0000000000000000000000000000000000000

நண்பர் மோகன்ராஜின் பாடல்களைக் கேட்டு ரசித்திருப்பீர்கள், அடுத்த வாரம் G3 இன் பாடல் தெரிவுகளோடு உங்களை சந்திக்கிறேன். நீங்களும் இதே போன்று உங்கள் பாடல் ரசனையை வெளிப்படுத்த விரும்பினால் kanapraba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்.

சிறப்பு நேயர் “இராப் (rapp)”

சிறப்பு நேயர் தொடரின் இரண்டாம் சுற்றிலே அடுத்து ஐந்து முத்தான பாடல் தெரிவுகளோடு வந்திருப்பவர் பயமறியா பாவையர் சங்கத்தின் கெளரவ உறுப்பினரும், வருத்தப்படாத வாலிபர் சங்கத்து சிங்கியுமான “இராப் (rapp).

“வெட்டி ஆபீசர்” என்ற வலைப்பதிவு ஒன்றை மே 2008 இல் இருந்து உருவாக்கி, சொல்லிலும் பதிவிலும் காட்டி வரும் இவர் சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க என்ற தத்துவத்துக்கேற்ப நடப்பவர் என்பதை சகோதர வலைப்பதிவுகளிலும் இவர் போட்டு வச்சிருக்கும் பின்னூட்டங்களே சாட்சி. ஆனால் இங்கே அவர் கொடுத்திருக்கும் முத்தான ஐந்து பாடல்களுமே வித்தியாசமான ரசனை கொண்டு அமைந்திருக்கின்றன. கேட்டு இன்புறுங்கள். சிறப்பு நேயர் தொடரில் நீங்களும் இடம்பெற உங்கள் ஆக்கங்களை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

1) சந்தோஷம் இங்கு சந்தோஷம்
படம்: மனிதனின் மறுபக்கம்
பாடிவர்: சித்ரா

பள்ளிக்காலம், கல்லூரிக்காலம் இப்டி நாம பிரிச்சிக்கிட்டே போனாலும், அந்தந்த காலக்கட்டத்தில் நமக்கு மிகவும் விருப்பமான ஒரு கட்டம் இருக்கும்(அவ்வ்வ்வ்வ்.. சரி எனக்கிருக்கு). அப்டி, ஜாஸ்தி வீட்டுப்பாடத் தொந்தரவுகள், படிக்கிறக் கவலைகள் எதுவுமில்லாமல், வீட்டில் கொடுக்கும் செல்லத்தை டேக் இட் பார் கிராண்டட் ஆட்டிட்யூடோட அனுபவித்த காலம்னா எண்பதுகளின் இறுதி மற்றும் தொண்ணூறுகளின் ஆரம்பம். அப்பொழுது பாப் கட்டிலிருந்து, பரதநாட்டியத்திற்காக முடி வளர்க்க ஆரம்பித்தக் கட்டம்.
இந்தப் பாடல்களைக் கேக்கும்போது மட்டும் எனக்கு மனதில் தோன்றும் காட்சி, அம்மா எனக்கு தலை பின்னிவிடுகிறக் காட்சிதான். அதுவும் மிக அவசர அவசரமா அவங்க வேலைய முடிக்கணும், பட் அதுக்கு எவ்ளோ இம்சை கொடுக்க முடியுமோ நான் கொடுக்கிறது. அது காலை ஏழரயிலிருந்து எட்டுக்குள் இருக்குமாதலால் , அளவான அழகான வெயில் இருக்கும். அப்போது ரேடியோவில் இந்தப் பாடல்கள் ஒலிக்கும். இந்தக் காட்சிகள் தவிர இந்தப் பாடல்கள் கேட்கும்போது வேறெதுவுமே தோணாது.
அழகான ராதாவை இந்தப் பாடலில் பார்க்கலாம்.

2) கஜ்ரா மொஹப்பத்வாலா
படம்: கிஸ்மத்
பாடியவர்: ஷம்ஷாத் பேகம் குழுவினர்

பொதுவாக ஓ.பி.நய்யார் மீதுக் கூறப்படும் பிரபலமானக் குற்றச்சாட்டுகளில் ஒன்று, சுட்டப் பழத்தின் மீதான நம்பிக்கையே அவருக்கு ஜாஸ்தி என்பது. ஆனால், அப்பொழுது இருந்த மற்ற இசையமைப்பாளர்களும் இப்டி செய்திருக்கின்றனர். இன்றையக் காலக்கட்டத்தில் மிக மிக எளிமையாக அனைத்து பாரம்பரிய இசையைக் கேட்கும் வசதியுள்ளதால், இது தெளிவாக நிரூபணமாகியுள்ளது.

இந்தக் காரணத்தைக் கூறியே அவருடைய ஜனரஞ்சகப் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பை யாரும் கண்டுகொள்ளவில்லயோவெனத் தோன்றும். பெரும்பான்மையாக இவருடையது, எளிமையான இனிமையான ஜனரஞ்சகப் பாடல்கள். குறிப்பிட்ட இந்தப்பாடலில் ஷம்ஷாத் பேகம் அவர்களின் குரலும், எளிமையான நகைச்சுவையான பாடல் வரிககளும், துள்ளும் இசையும் மிகப் பெரிய பலம். இதயெல்லாம் எதற்காக ரீமிக்ஸ் செய்தார்கள், அப்படி என்ன கொலைவெறி என்றுதான் புரியவில்லை.

3) ஊரார் உறங்கையிலே உற்றாரும்
படம்: நாலு வேலி நிலம்
பாடியவர்: திருச்சி லோகநாதன்

திருச்சி லோகநாதன் குரலைப் போன்ற ஒரு குரலினைப் பார்ப்பது அபூர்வம். அநியாய எதிக்ஸ் பார்த்துப் பல நல்ல வாய்ப்புகளை உதறினார் எனக் கேள்வி. இவருடைய சொந்த வாழ்க்கை சம்பந்தமான புத்தகங்கள் படிக்கும்போது, ஆச்சர்யமாகிவிடுகிறது. இவருடைய முக்காவாசிப் பாடல்கள் மிகப் பிடிக்கும். இந்தப் பாடலின் வரிகள் மிக மிக சுவையோடு இருக்கும். அடுத்து என்ன பதில் கொடுப்பார் என்ற ஆவலைத் தூண்டும். தென்னிந்தியாவில் பிறக்காமல் வேறெங்குப் பிறந்திருந்தாலும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்கு அவருக்குக் கிடைத்திருக்கக் கூடிய அங்கீகாரமே வேறு. இதன் வீடியோவும் பார்த்ததில்லை. யார் நடித்தார்கள் என்று கூடத் தெரியாது.

4) புத்திசிகாமணி பெத்தபுள்ள
படம்: இருவர் உள்ளம்
பாடியவர்கள்: ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி

நடிகவேலை ரசிக்காதவர்கள் இருக்கமுடியுமா? ஆனால் இந்தக் குறிப்பிட்ட படத்தின் பாடல்கள்(வீடியோ) மட்டும் நெட்டில் கூட கிடைக்கவில்லை. இந்தப் பாடல் அந்தக் காலக்கட்டத்தில் வந்த பல குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமானப் பாடல்களுள் ஒன்றுதான் என்றாலும், அதில் உள்ள அழகான நகைச்சுவை, இனிமையான ஜோடிக் குரல், கலக்கலான யதார்த்தம் இந்தப் பாடலின் ரசிகயாக்கியது. இதற்கு நடிகவேலும், மனோரமா அவர்களும் நடித்திருக்கிறார்கள் எனத் தெரிந்ததில் இருந்து பார்க்க ஆவல்.

5) என்னடி முனியம்மா உன் கண்ணுல
படம்: வாங்க மாப்பிள்ளை வாங்க
பாடியவர்: டி.கே.எஸ்.நடராஜன்

இந்தப் பாடலின் ரீமிக்ஸ் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒரிஜினலில் பாடியவரின் குரலும் கூட இப்பாடலின் வெற்றிக்குக் காரணமெனத் தோன்றும். இவ்வளவு பிரபலமானப் பாடலின் வீடியோவை இதுவரைப் பார்த்ததே இல்லை. பார்த்தவர்களும் விழுந்து விழுந்து சிரித்தே கொல்கிறார்கள். ஆனால், எப்படி இருக்கும் எனச் சொல்வதில்லை. இதனுடைய ஆடியோவும் தரவிறக்கம் செய்வதற்குக் கிடைக்கவில்லை. ஹி ஹி, அதனால் இப்பாடலின் எம் பி 3 தரவிறக்கம் செய்யும்படிக் கிடைத்தாலும் நன்றாக இருக்கும்.

Track 6 – T.K. Natarajan

இராப்

சிறப்பு நேயர்: கலைக்கோவன்


றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் தொடர் மீண்டும் அடுத்த சுற்றில் கலைக்கோவனின் படைப்போடு ஆரம்பிக்கின்றது.

றேடியோஸ்பதியில் வாய்த்த நண்பர்களில் சற்றே வித்தியாசமாக அறிமுகமானவர் நண்பர் கலைக்கோவன். இவர் றேடியோஸ்புதிர் மூலமாகவே அறிமுகமாகி தொடர்ந்து விடாமல் போட்டிகளில் பங்கெடுப்பதோடு புதிரில் விடை சொல்லும் பாணியில் கூட ஒரு வித்தியாசத்தைக் காண்பிப்பார். உதாரணத்துக்கு, ஒரு முறை பாடகர் யுகேந்திரன் குறித்த புதிரைக் கேட்ட போது அவர் கொடுத்த பதில் பின்னூட்டம் இப்படி இருந்தது.

“சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக”..
இடைக்குரல் கொடுத்த
மலேசியா வாசுதேவன் வீட்டு பூ.
……யுகேந்திரன்
இந்த “சின்ன கானாங்குருவியின்” பாடல்
பொற்காலம் ஒலித்தட்டில் மட்டும் இடம்பெற்று
படம் பெறாமல் போயிற்று.
ஆனாலும் …..
தம்பதி சகிதமாக (துணைவி மாலினியுடன்)
தற்போது ..,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை
(சமீபத்தில்
விஜய் தொ.கா. சூப்பர் சிங்கர்)
அலங்கரிக்கின்றனர்.

பாடல் புதிர்களில் சாமர்த்தியத்தோடு பதில் சொல்வதோடு நண்பர் கலைக்கோவனின் இசை ரசனை கூட தனித்துவமானது என்பதற்குச் சான்றாக அமைகின்றது இவரின் தேர்வுகள். தொடர்ந்து கலைக்கோவன் பேசுகிறார், நான் ஒதுங்கிக் கொள்கிறேன் 😉

என்னை பற்றி..,

இசை ரசிகன்., கடந்த ஓராண்டாய் ரேடியோஸ்பதியின் வாசகன்.

தற்போது வசிப்பது ஹைதராபாத்,எப்போதும்(என் மகன் அன்பு அனுமதித்தால்) பாடல் கேட்க பிடிக்கும்.

எப்போதாவது கவிதை எழுதுவதுண்டு.

தெரிவுகள்

எனது தெரிவுகள், இளையராஜாவின் இசை கோலோச்சிய எண்பதுகளில் வெளிவந்த பாடல்கள் இடம் பெறுகின்றன.

இவற்றை,எனக்கு பிடித்த சமகால பாடகர்களை நினைவு கூறும் வகையில் தொகுத்திருக்கின்றேன்.

1. மேகமே மேகமே(பாலைவனச்சோலை)- வாணிஜெயராம்

இது எனது முதல் தெரிவு.,எப்போது கேட்டாலும் இனிக்கும் ஒரு கஜல் வடிவம்.சோகம் இழையொடும் குரலில் ”எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்,அது எதற்க்கோ?” என கேட்கும் வரிகள் கொஞ்சம் கணமானவை.

எப்போதெல்லாம் மனம் கணமாகிறதோ அப்போதெல்லாம் கேட்க தூண்டும் பாடல்.வைரமுத்துவின் ஆழமான வரிகள் மேலும் அழகை சேர்த்திருக்கும், ”புது சேலை கலையாமல் அணைப்பேன்”(ரவிவர்மன் எழுதாத) என்ற வரிகளுக்கு புது அர்த்தம் கொடுத்த கவிஞராச்சே சும்மாவா பின்ன.

இந்த பாடல் ஹிந்தியில் ஜக்ஜித் சிங் பாடிய கஜலின்(தும் நஹி.. ஹம் நஹி..) நகல் என்பது பின்னாளில் தான் தெரிந்தது.

2. செவ்வரளி தோட்டத்துல(பகவதிபுரம் ரயில்வே கேட்)-இளையராஜா, உமா ரமணன்

ராஜாவின் குரலில் ஒரு ஆனந்தமான பாடல்.ராஜாவின் இணைக்குரல் பாடல்கள் ஒரு தனி ரகம்,அனைத்து பாடல்களுமே நன்றாகவே இருக்கும்.இந்த பாடலுக்கு ஆனந்த ராகம் கேட்கும் நேரத்தில் கூவிய குயில் இணைக்குரல் கொடுத்திருப்பார்.

பாடலில் “வெட்கம் அது உங்களுக்கில்ல வெட்கம் மறந்தா பொம்பளை இல்லே” என பெண் குரல் என வினவி,

பின் ”ஆசைய சொல்ல நினைச்சேன் சொல்லமா தான் விட்டேனே” என்று முடியும் சரணம் ஒரு அழகான காதலின் உண்மை.

இந்த பாடலின் சரணங்களுக்கு இடையில் வரும் “ஐலேசா” வரிகளும் ஒரு கிக்.பாடல் சாத்தனூர் டேமில்(திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது)படமாக்கப்பட்டது என நினைக்கிறேன்.

ஆனால் இப்போதெல்லாம் சினிமாவில் சாத்தனூர் டேம் வருகிறதா என்பது சந்தேகமே.

3. தெய்வீக ராகம்(உல்லாச பறவைகள்)- ஜென்சி

இந்த பாடலை கேட்கின்ற போது ,வரிகளுக்கும் மெட்டுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாய் தோணும்.தெய்வீகராகம்- ராகம் தெய்வீகமா என்பதை அறிந்தவர்கள் சொல்லுங்கள்,ஆனால் என்னை பொறுத்தவரை, இது தெவிட்டாத பாடல் (கேட்டாலும் போதும் இளம் நெஞ்சங்கள் வாடும்).

குறைந்த எண்ணிக்கையில் பாடல் பாடி ரசிகர்களுக்கு குறை வைத்த ஜென்சி பாடிய பாடல்.

கிணற்றுக்குள் இருந்து எழும் ஹம்மிங் போன்ற ஓரு ஆரம்பமே சுண்டி இழுக்கும்,பாடல் காட்சியமைப்பும் என்னை கவர்ந்த ஒன்று.

4. சந்தன காற்றே(தனிக்காட்டு ராஜா)- எஸ்.பி.பி,ஜானகி

கேசட்டில் பாட்டு ரெக்கார்டிங் பண்ணும் போது echo, stereo வைக்கணுமான்னு கேட்பாங்க.ஆனா இந்த பாடலை(படத்தில் எல்லா பாடலும்) கேட்க அப்படி ஒரு அவசியம் இல்லை,அவ்வளவு இனிமையான ரெகார்டிங்.தன்னை மறந்து, நான் ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.பாடல் வரியெங்கும் ஸ்டீரியோ தோரணம் கட்டி.,சரணத்தின் முடிவில் தனனன..னன என echo-வில் எதிரொலிக்கும் அனுபவமே அலாதி.

5. பூவண்ணம் போல நெஞ்சம்(அழியாத கோலங்கள்) – ஜெயசந்திரன் ,சுசீலா

”பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்” என விண்ணப்பிக்கும் காதலின் மென்மை மெருகோட வரும் ஒரு அருமையான் பாடல்.வழியெங்கும் பாடல் வரிகளில் ஒரே கவிதை வாசம்.வங்காள இசையமைப்பாளர் சலீல் சவுத்திரியின் இசையில் வந்த ,இந்த பாடல் மெட்டு மலையாளம்,ஹிந்தி மற்றும் வங்காள மொழியிலும் பயன்படுத்த பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

6. ஆஷா அட்சிலொ பாலொ பாஷா அட்சிலொ (ஆனந்த ஆஷ்ரம்)- கிஷோர்குமார் (Asha Chilo Bhalobasha Chilo – Ananda Ashram )- வங்காள மொழியில் அமைந்தது.
எனக்கு பிடித்த வேற்று மொழி பாடல்களில் ஒன்று.மனைவியை இழந்த நாயகன் மனைவியை பிரிந்த தவிப்பில் பாடுவதாக அமைந்த பாடல்.மொழி கடந்து என்னை கவர்ந்த பாடகரான கிஷொர் குமாரின் குரல் ஒன்றே பொதும், பாடல் விளக்கம் கூட தேவையில்லை.

ஐந்து பாடல்கள் தான் அனுப்பவேண்டும் என்பது விதி,அது ”குறைந்த பட்சம் ஐந்து பாடல்” என்றிருக்காத என்ற நப்பாசையும் இருந்தது.எனவே ஆறாவது பாடலை வேற்று மொழி பாடலாக சேர்த்து கொள்ளுங்களேன்(ஒரு புது விதியாக சேர்த்துக்கலாமே).

கலைக்கோவனின் விதவிதமான தெரிவுகள் நிச்சயம் உங்களை வசீகரித்திருக்கும் என்று எண்ணுகின்றேன். அடுத்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பிக்க இருக்கிறார் “பயமறியா பாவை” ராப் அவர்கள். உங்கள் படைப்புக்களும் இடம்பெற வேண்டுமானால் எழுதி அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: kanapraba@gmail.com

மீண்டும் இன்னொரு பாடல் விருந்தில் சந்திப்போம்.