பதிவர்கள் பார்வையில் 2011 – ஒலிப்பகிர்வு

2011 ஆம் ஆண்டு விடைபெறப்போகின்றது. 2012 ஆம் ஆண்டை வரவேற்கும் வானொலிப் பணியில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வழியாக http://tunein.com/radio/ATBC—Australias-Tamil-Radio-s111349/ தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றேன். இந்தவேளை கடந்த ஆண்டு ட்விட்டர் வழியாகவும், வலையுலகம் வழியாகவும் அறிமுகமான நண்பர்களை வைத்து 2010 ஆண்டுக் கண்ணோட்டத்தை வழங்கிய பாங்கில் இந்த ஆண்டும் 2011 ஆண்டுக் கண்ணோட்டத்தை வழங்க எண்ணியபோது நண்பர்கள் கைகொடுத்தார்கள். அந்த வகையில் நண்பர் அப்பு 2011 இல் தொழில் நுட்பம், நண்பர் கிரி ராமசுப்ரமணியன் 2011 இல் திரையிசையுலகம், நண்பர் சதீஷ் குமார் 2011 இல் இந்தியா மற்றும் தமிழகம் ஆகிய பகிர்வுகளை அளித்திருந்தார்கள். உண்மையில் ஒரு தேர்ந்த வானொலியாளர்களின் பாங்கில் இவர்கள் கொடுத்த இந்தப் பகிர்வுகளுக்கு வானொலி நேயர்கள் மத்தியில் பாராட்டும் கிட்டியதை இவ்வேளை மகிழ்வோடு சொல்லிக் கொள்கின்றேன்.

என்னோடு கூடப் பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் எல்லோருக்கும் இந்த வேளை இனிய ஆங்கிலப் புதுவருட வாழ்த்தை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கின்றேன். தொடர்ந்து ஒலிப்பகிர்வுகளைக் கேளுங்கள்.

2011 இல் தொழில் நுட்ப உலகு – வழங்குவது அப்பு

2011 இல் திரையிசை – வழங்குவது கிரி ராமசுப்ரமணியன்

2011 இல் இந்தியா – வழங்குவது சதீஷ்குமார்

2011 இல் தமிழகம் – வழங்குவது சதீஷ்குமார்

புகைப்படம் நன்றி: http://caricaturque.blogspot.com/

“ஏழுஸ்வரங்களுக்குள் இத்தனை பாடல் சிட்னியிலே”

இசை உலகில் நாற்பது ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கும் வாணி ஜெயராம் என்றதொரு பெரும் பாடகியை அவுஸ்திரேலிய மண்ணில் முதன் முதலில் கொண்டு வந்து அவருக்கான ஒரு சிறப்பானதொரு களத்தைக் கொடுப்பது என்பது வெறுமனே “வெறுங்கையால் முழம் போட முடியாது”. இப்படியானதொரு இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்றதொரு கூட்டணியும் அதை அரவணித்துக் கொண்டு நடத்தக்கூடிய சிறப்பானதொரு ஒருங்கமைப்பாளர்களும் அமைய வேண்டும். இவையெல்லாம் சரியாக இயங்கினால் மற்றைய எல்லாவற்றையும் ரசிகர்கள் கவனித்துக்கொள்வார்கள். அதுதான் நேற்று சிட்னியில் நிகழ்ந்த இன்னிசை இரவு மூலம் வெளிப்பட்டது.

சிட்னியில் இயங்கும் Symphony Entertainers என்ற அமைப்பு முன்னர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை அழைத்து வந்து ஒபரா ஹவுஸில் அவருக்கான உச்சபட்ச கெளரவத்தையும் நேர்த்தியானதொரு இசை நிகழ்ச்சியையும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தியிருந்ததை இங்கே சொல்லியிருக்கின்றேன். அந்த நிகழ்வு கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுக்கு எப்படியொரு மணிமகுடமாக அமைந்ததோ அதேஅளவு கெளரவத்தை இசையுலகில் இத்தனை வருடங்களை ஊதித்தள்ளிய வாணி ஜெயராமுக்கும் நேற்றைய நிகழ்வு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் இன்றைய தவிர்க்கமுடியாத பாடகர்களில் ஹரிச்சரண், சின்மயி, விஜய் ஜேசுதாஸ் கூட்டணியோடு வாணி ஜெயராமும் வருகின்றார் என்றபோது ஓடும் புளியம்பழமும் போட எட்ட நிற்குமே இந்தக் கூட்டணி என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த நினைப்பைப் பொய்க்க வைத்தது இந்த நிகழ்ச்சியை அமைக்கவேண்டும் என்று தயாரிப்புப் பணியில் முதன்மையாகச் செயற்பட்ட விஜய் ஜேசுதாஸின் சிறப்பான கூட்டணி.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சி என்றாலே கஷ்டப்பட்டுத் தான் காருக்குள் ஏறிப்போவேன். ஆனால் இது இஷ்டப்பட்ட நிகழ்ச்சி எனவே மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டே இசை நிகழ்வு நடந்த ஹில்ஸ் செண்டருக்குச் சென்றேன். நிகழ்ச்சி சம்பிரதாயப்படி 20 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தது. “கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்” என்ற ரெட்டைவால் குருவி படப்பாடலை கீபோர்ட்டும், சாக்ஸபோன், கிட்டார் சகிதம் சென்னை, கேரளா இசைக்குழுக் கூட்டணி இசைக்க ஆரம்பித்ததும் அந்த மூலப்பாடலில் மோகன் மனதில் நுழைந்த ராதிகா போல மனசு அப்படியே இசைக்கூட்டுக்குள் தாவித் தன்னைத் தயார்படுத்தியது. விஜயாள் என்ற குட்டிப்பிள்ளை வந்திருந்த பாடகர்களை தன் அளவில் குட்டியாக அழகு தமிழில் அறிமுகப்படுத்திவிட்டுப் போக சின்மயி அரங்கத்தில் நுழைந்தார். “ஈழத்தமிழர்களோட இசையுணர்வை நான் எப்பவுமே மெச்சுவேன்” என்ற தோரணையில் அவர் ஆரம்பிக்க “ஆஹா வழக்கமான பஞ்ச் டயலாக்கா” என்று நான் நினைக்க, “நான் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவள், எங்களுக்கும் இலங்கைக்கும் நிலத்தால் நெருக்கம் அதிகம், இலங்கையில் எங்க தமிழர்கள் கொல்லப்பட்டதையும், கஷ்டப்பட்டதையும் அறிந்து நாங்க வேதனைப்பட்டோம், பட்டுக்கிட்டிருக்கோம், என்னோட முதற்பாடலே இலங்கைத் தமிழர்களோட கதைக்கருவோடு வந்த “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தின் பாடல் என்று சொல்லியவாறே ஒரு நிமிட மெளன அஞ்சலியைப் பகிர்ந்தவாறே சின்மயி பாடியது நெகிழ வைத்தது. சின்மயி சிட்னிக்கு வருவது இது இரண்டாவது முறை, கடந்த நிகழ்ச்சியில் அவர் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற தன்னுடைய முதற்பாடலைப் பாடாத ஆதங்கத்தில் இருந்தேன். அதை ஈடுகட்டவோ என்னமோ அவரை இரண்டாவது தடவை சிட்னி முருகன் இறக்கியிருக்கின்றான். வைரமுத்து நேசித்து இழைத்த வரிகளை சின்மயி வெறும் குரலைக் கொடுத்தா பாடினார் உணர்வைக் குழைத்தும் அல்லவோ.

இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!

எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!

நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!

இந்த வரிகளைப் பாடும் போது சின்மயி கண்டிப்பாக உள்ளுக்குள் பொருளுணர்ந்து அழுதிருப்பார், பார்த்துக்கொண்டிருந்த நம்மைப் போல.“என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்” என்று ஒரு குரல், அரங்கத்தின் இண்டு இடுக்கெங்கும் வந்திருந்த கூட்டம் அவரைத் தேட அரங்கத்தின் பின் வாயிலில் இருந்து “தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு” என்று பாடிக்கொண்டே வந்தார் விஜய் ஜேசுதாஸ். ஒபரா ஹவுசில் நடந்த இசை நிகழ்ச்சிக்குத் தந்தையோடு வந்து கொஞ்சம் அடக்கமாகவே இருந்த பையன் இந்த முறை தன்னோடு இரண்டு இளசுகளையும் கூட்டி வந்ததால் குஷி மூடில் இருந்ததை நிகழ்ச்சி தொடங்கி முடியும் வரை காண முடிந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளமைக்குரலின் எச்சம் எஸ்.பி.பி.சரணிடம் இருந்தாலும் அது மட்டுமே போதும் என்று அவர் இருந்து விட்டார். இதுக்கு இது போதும் என்றோ என்னமோ திரையிசையும் அவருக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பையே கொடுத்திருந்தது. ஆனால் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற மேதையின் மகன் என்பதை விட, கடுமையான விமர்சகரின் மகனாகப் பிறந்து விட்டுக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடமுடியாது என்பதை விஜய் ஜேசுதாஸ் உணர்ந்திருப்பார் என்பதை அவருக்கான பாடல்கள் மட்டுமல்ல, தந்தையின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவர் பாடிச் சிறப்பிப்பதிலும் உணரலாம். விஜய் ஜேசுதாஸுக்கு, சென்னை 28 இல் வந்த “உன் பார்வை மேலே பட்டால்” பாடலுடன் தனக்குக் கிடைத்த பாடல்கள் சிலவற்றைப் படித்தாலும் பெரும்பொறுப்புத் தன் தந்தை வராத வெற்றிடத்தை நிரப்புவது. அதை அவர் சிறப்பாகவே செய்தார்.“ஹாய் சிட்னி” என்று ஆர்ப்பாட்டமாகக் களமிறங்கிய ஹரிச்சரண், சிட்னி என்றால் யுத்துக்கள் கொட்டிக் கிடக்கும் சீமை என்றோ என்னமோ முதலில் இளசுகளைக் குறிவைத்துத் தான் சிக்ஸர் அடித்தார், பின்னர் போகப் போக நிலமையை உணர்ந்திருப்பார். சிட்னிக்கு முதன்முதலில் வரும் பாடகர்கள் போடும் தப்புக்கணக்கு இதுதான், வெளிநாடு என்றால் ராப், பாப், பப்பரபப்ப வகையறாக ரசிகர்கள் தான் அதிகம் என்று (அல்லது எனக்குத்தான் வயசு போட்டுதோ ;-))

ஹரிச்சரணின் ஸ்பெஷாலிட்டி, கொடுத்த பாட்டை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவிக்காமல், அந்தப் பாடலின் ஆரம்பத்தில் மெல்ல மெல்லத் தானே ஆலாபனைகளை இட்டுக்கட்டிப் பின்னர் மூலப்பாடலுக்குத் தாவி அங்கேயும் ஜாலம் செய்து பின்னர் செஞ்சரி அடித்து விட்டுக் களம் திரும்பும் ஆட்டக்காரன் போல நிதானமாகப் பாடலை இறக்கி முடிக்கும் வல்லமை கைவரப்பெற்றிருக்கின்றார்.

“கலைவாணியே உனைத்தானே அழைத்தேன்” என்று விஜய் ஜேசுதாஸ் பாட, அரங்கத்துக்கு வந்த வாணி ஜெயராம் கூப்பிய கரங்களுடன். வாணி ஜெயராமோடு ஜோடிகட்டிப் பாடியவர்களில் கே.ஜே.ஜேசுதாஸ் தான் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர் என்பது என் கருத்துக்கணிப்பு. இன்னொரு அல்ல மேலும் இரண்டு ஒற்றுமையைக் கண்டேன். ஒன்று மனிதர்களை நேசியுங்கள் என்று மனித நேயக்கருத்தை அழகாக வெளிப்படுத்திவிட்டே தன் கச்சேரியை ஆரம்பித்தது, இன்னொன்று இப்படியானதொரு இசை நிகழ்ச்சி தன் நீண்ட நெடிய இசைவாழ்வில் பத்தோடு பதினொன்று என்று ஒப்புக்குப் பாட்டு நிகழ்ச்சி வைக்காமல், ஒரு அர்ப்பணிப்போடு பள்ளியில் கற்றதை வீடு வந்து ஆசையாகத் தன் பெற்றோரிடம் அழகாகப் ஒப்புவித்து முறுவலிக்குமே சின்னக்குழந்தை? அந்தப் பெரிய மனசு வாணி ஜெயராமிடம் இருந்ததை நிகழ்ச்சி முடியும் வரைக் காணமுடிந்தது. “இன்னும் வருவேன்” என்று சொல்லிக்கொண்டே ஐந்து மணி நேர இசை நிகழ்வில் இதைத் தொடர்ந்தார்.

“ஒரு காலத்தில் இலங்கை வானொலியைக் கேட்டுச் சங்கீதம் கற்றுக்கொண்டவள், Binaca Geet Maala என்ற ஹிந்தித் திரைப்பாடல் வரிசை நிகழ்ச்சியைப் பாடகியாக வருவதற்கு முன்னர் நேசித்துக் கேட்டவள், 1971 ஆம் ஆண்டு வஸந்த் தேசாயின் இசையில் Guddi என்ற ஹிந்தித் திரைப்படத்துக்காக முதலில் பாடி அந்தப் படத்தின் “Bole Re Papihara” என்ற பாடலை இதே Binaca Geet Maala திரைப்பாடல் நிகழ்ச்சியில் கேட்ட போது வாய்விட்டு அழுதேன்” என்று வாணி ஜெயராம் சொன்னபோது நெகிழ்வோடு உணர முடிந்தது. இந்தப் படத்தில் குல்ஸார் எழுதிய மொத்தம் மூன்று பாடல்கள் ஆனால் “Bole Re Papihara”மற்றும் Hum Ko Manki Shakti Dena ஆகிய பாடல்கள் தான் படத்தில் வந்தது என்று சொன்னதோடு நிகழ்ச்சியில் “Bole Re Papihara”பாடலையும் சேர்த்துக் கொண்டார். தென்னிந்தியாவில் இருந்து ஹிந்தித் திரையுலகம் போய்ப் பாடிய முதற்பாடகி வாணி ஜெயராம் என்று சின்மயி சொன்ன புகழாரத்தை ஏற்கிறோம், ஆனால் எனக்கென்னமோ முன்னரேயே தென்னகக் குயில்கள் சென்ற ஞாபகம்.

வாலி எழுதிய “மல்லிகை என் மன்னன் மயங்கும்” பாடலோடு ஆரம்பித்தவர், “மேகமே மேகமே”, “யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது” “நானே நானா” (வாலி எழுதியது) என்று அவரின் தனித்துவமான தனிப்பாடல்களை எல்லாம் அள்ளிச் சேர்த்த மகிழ்ச்சியை விட எதிர்பாராத பரிசு தானே எப்போதும் உச்சபச்ச சந்தோஷத்தைக் கொடுக்கும்? அப்படி அமைந்தது தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் அவர் பாடி “என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது” பாடலைப் பாடிய போது கிட்டியது. இப்படியான மேடைக்கு அந்நியமான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடிய வகையில் கேளடி கண்மணி படத்தில் வந்த “தென்றல் தான் திங்கள் தான்” பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் முன்னர் ஒபரா ஹவுஸ் நிகழ்ச்சியில் பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

ஒவ்வொரு பாடல்களையும் எழுதியவர், இசையமைப்பாளர் என்று சொல்லி வாணி ஜெயராம் பாடியது இதுவரை நான் மேடை எதிலும் காணாதது. வாணி ஜெயராமே ஒரு நல்ல கவிஞர், அப்படி இருக்கையில் எப்படிப் பாடலாசிரியரைத் தவிர்ப்பார்? வாணி ஜெயராம் தான் கவிதை எழுதுவேன் என்றதோடு பகிர்ந்த கவிதைகளில் “கவிதை” இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் இப்படிக் கவிஞர் பெயர் சொல்லிப்பாடியவர் “என்னுள்ளில் எங்கோ” என்ற பாடலைக் கங்கை அமரன் எழுதினார் என்ற போது எனக்குப் பின் வரிசையில் இருந்தவர் உணர்ச்சிவசப்பட்டுப் பக்கத்தில் இருந்தவரிடம் “கங்கை அமரன் இளையராஜாவின்ர son” என்றபோது கங்கையைத் தேடினேன் குதிக்க.ஒரு பாடகிக்கு ஏராளம் நல்ல நல்ல பாடல்கள் வாய்க்கலாம் ஆனால் பாடகி என்ற கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுக்கும் நல்வாய்ப்பு எத்தனை பாடகிகளுக்கு வரும்? அப்படி அமைந்த வாணி ஜெயராமின் முத்திரை “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்” என்ற பாடலைப் பாடும் போது

“காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் – வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்”

என்ற வரிகளை அவர் அழுத்திப் பாடியபோது இத்தனை நாளும் இவ்வளவு தூரம் அனுபவிக்காமல் கற்பனை சந்தோஷத்தில் இருந்த உணர்வில் கண்ணதாசனை நினைக்க, வாணியோ கண்ணதாசனைப் பற்றிப் பேசினார்.

“நாளைக்கு உங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன் நாளை பத்திரிகையில் வரும் “என்று குழந்தை உள்ளத்தோடு என்னிடம் சொன்ன கண்ணதாசன் பாடகிகள் என்றளவில் என்னைப் பற்றி மட்டுமே தனது “சந்தித்தேன் சிந்தித்தேன்” தொடர் கட்டுரையில் எழுதியிருக்கின்றார். “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்” இதை எங்கே கேட்டாலும் அங்கே நின்று முழுப்பாடலையும் கேட்டுத்தான் அங்கிருந்து விலகுவாராம் கண்ணதாசன். எனக்கு வாசிக்கப் பிடிக்கும் என்பதால் தான் எழுதிய 43 நூல்களைக் கொடுத்திருக்கின்றார் என்று கண்ணதாசனைப் புகழந்தார்.

“அபூர்வ ராகங்கள்” படத்தின் பாடல் ஒலிப்பதிவு நடக்கும் நாட்களில் காலையில் சீக்கிரமாகவே பாடற்பதிவு ஸ்டூடியோவுக்குப் போய் விட்டோம் என்று நினைத்தால் எங்களுக்கு முன்னார் வெகு சீக்கிரமாவே எம்.எஸ்.விஸ்வநாதன் வந்திருப்பார். அவ்வளவுக்கு பங்சுவாலிட்டி நிறைந்தவர்களோடு பணியாற்றியதெல்லாம் மறக்கமுடியாத காலங்கள், என்னோட முதல் இசையமைப்பாளர் வஸந்த் தேசாய் முதற்கொண்டு பணியாற்றிய இசையமைப்பாளர்கள் வெறும் இசையை மட்டுமே எனக்குப் போதிக்கல” என்று அந்தப் பொற்காலத்தை நினைவுபடுத்தினார் வாணி ஜெயராம்.

“அந்தமானைப் பாருங்கள் அழகு” என்று விஜய் ஜேசுதாஸோடு வாணி ஜெயராம், கொடுத்த ஜேசுதாஸ் – வாணி ஜெயராம் பாடல்கள் எல்லாமே முத்துக்கள். குறிப்பாக “சிவாஜி கணேசன் நினைவு நிகழ்வுக்காக வை.ஜி.மகேந்திரன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதன்முதலில் பாடிவிட்டு இப்போது படிக்கிறேன்” என்றவாறே விஜய் ஜேசுதாஸ் வாணியோடு பாடிய “கங்கை யமுனை இங்குதான் சங்கமம்” என்ற இமயம் படப்பாடல் சொர்க்கம். ஒருப்பக்கம் ஜேசுதாஸ் பாடல்களை தனயன் பாட, இன்னொரு பக்கம் “மழைக்கால மேகம் ஒன்று” (வாழ்வே மாயம்),” ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்” (நீயா) போன்ற பாடல்களை ஹரிச்சரணோடு பாடியதும் இணையாக ரசிக்க வைத்தது.

“உனக்கு கல்யாணம் ஆச்சா”என்று வாணி கேட்க

“இன்னும் இல்லை” என்று ஹரிச்சரண் சொல்ல

“இளமை ஊஞ்சலாடுகிறது” என்று சொல்லி நிறுத்தி விட்டு “அடுத்துப் பாடப்போற படம் பேர் சொன்னேன்” என்று குறும்பாகச் சொல்லி

“ஒரே நாள் உனை நான்” என்ற பாடலை வாணி ஜெயராம், ஹரிச்சரணோடு பாடியபோது அந்தச்

“சங்கமங்களில் இதம் இதம்” ஆக மனது இருந்தது.

“கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்” என்ற பாடலுக்கு ஹரிச்சரண் ஜதி சேர்க்க, வாணியின் வயதை மறைத்தது குரல்.

“மேகமே மேகமே பாடல் சிவாஜி கணேசன் சாருக்குப் பிடிச்ச பாட்டு, அந்தப் பாட்டு வந்த நாட்களில் இரவில் இந்தப் பாட்டைக் கண்டிப்பாகக் கேட்டுவிட்டுத் தான் தூங்குவார்” என்றார் வாணி.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, சங்கர்-கணேஷ், கங்கை அமரன் என்று தேடித் தேடி ஏறக்குறையத் தன்னுடைய எல்லாப்பாடல்களையும் பாடி அழகு சேர்த்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்காகப் பாடிய “சுகம் சுகம்” (வண்டிச்சோலை சின்ராசு) பாடலையும் இணைத்திருக்கலாமோ?

விஜய் ஜேசுதாஸ், சின்மயி, ஹரிச்சரண் கூட்டணி சேர்ந்தால் அடிப்பொளி தான், கலகலப்பாகப் பேசும் கலையும் சபையோரோடு அந்நியப்படாத நிகழ்ச்சி வர்ணனையும் சின்மயி இன் சொத்து. ஹரிச்சரணுக்கு வரமாக அமைந்த யுவனின் பாடல்கள் சமீபத்திய “ராசாத்தி போல” பாடல்களில் இளசுகளோடு பழசுகளும் இணைந்து தாளம் தட்டி ரசித்தது.

“ஏ ஹே ஓ ஹோ லாலலா” என்று விஜய் ஜேசுதாஸ் பாட திடீரென்று சைக்கிளில் மேடையில் ஓடி வந்து “ஏ அது நான் பாடப்போகும் பாட்டு என்னோட பேஃவரிட்” என்று ஹரிச்சரண் விடாப்பிடியாக நிற்க விஜய் ஒதுங்க “பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்” பாடல் ஹரிச்சரணின் புது ப்ளேவரில். ஆனால் இந்தப் பாட்டை மட்டும் விஜய் ஜேசுதாசுக்கு இட ஒதுக்கீடு செய்திருந்தால் “பழமுதிர்ச்சோலை எங்களுக்கும் சேர்த்துத் தான்” என்று நானும் பாடியிருப்பேன் மனசுக்குள்.“லேசாப்பறக்குது” என்ற வெண்ணிலா கபடிக்குழு பாடலின் ஹிட் ஐத் தொடர்ந்து கார்த்திக், சின்மயி காம்பினேஷன் இருக்கணும் என்று குள்ளநரிக்கூட்டம் படத்திலும்”விழிகளிலே விழிகளிலே” பாடலை கடம் புகழ்விக்கு விநாயக்ராம் மகன் செல்வகணேஷ் “விழிகளிலே விழிகளிலே” பாட்டுக்கொடுத்ததாகச் சொல்லி ஹரிச்சரணோடு பாடினார். “லேசாப்பறக்குது” பாடல் மேடையில் லேசாகப் பாடமுடியாத சங்கதி, சின்மயி அதை மூலப்பாடலில் மிகவும் சன்னமாகப் பாடிச் சிறப்பித்திருப்பார். அதை ஈராயிரம் பேர் கொண்ட சபையில் பாடுவது சவால், அதைச் சமாளித்துப் பாடினார்.

“சத்யம் தியேட்டரில் வைத்து எனக்கு ஒரு பாட்டு சான்ஸ் கொடுங்களேன்” என்று ஹாரிஸ் ஜெயராஜிடம் கேட்க அவர் கொடுத்த “வாராயோ வாராயோ காதல் கொள்ள” ஆதவன் படப்பாடல் எனக்கு முதற்பாடல் கொடுத்த புகழுக்கு மேலாக விருதுகளைக் கொடுத்துப் புகழ் கொடுத்தது என்றவாறே ஹரிச்சரணோடு பாடினார், மேடையில் வைத்து இன்னொரு விருது கொடுத்திருக்க வேண்டும். அவ்வளவு அழகு, பாட்டைச் சொன்னேன் சார்.

விஜய் ஜேசுதாஸ் உடன் “சஹானா சாரல் தூவுதோ” பாடலைப் பாடுமுன் “நீங்க தலைவா என்று போடும் சத்தம் சென்னை வரை கேட்கணும்” என்று சின்மயி தன் தலைவர் பற்றை வெளிப்படுத்தினார். தொடர்ந்து கிளிமாஞ்சாரோ பாடலும் இதே கூட்டணியில். பெரியம்மா பையன் உதித் நாராயணணை விட விஜய் ஜேசுதாஸை வைத்தே அந்த சஹானா சாரல் தூவுதோ டூயட் பாடலையும் ரஹ்மான் கொடுத்திருக்கலாம் என்ற அளவுக்கு இருந்தது விஜய் ஜேசுதாஸின் குரலினிமை.

ஹரிச்சரண்-விஜய் ஜேசுதாஸ்- சின்மயி மூன்றுபேரும் சேர்ந்து அன்றிருந்து இன்றுவரை பாடல்களைக் கோர்த்துக் கொடுத்த unplugged என்ற தொகுப்பில் ஏதாவது ஒரு தீம் ஐ முன்னிலைப்படுத்தியிருக்கலாம். ” தாய்க்கு நீ மகனில்லை”(உள்ளத்தில் நல்ல உள்ளம்) என்ற தியாகம் ததும்பும் பாடலோடு திடீரென முளைத்த “கனவில் வடித்து வைத்த சிலைகள்” (விழியே

கதையெழுது) பாடலும் “வாய்மொழிந்த வார்த்தை யாவும்” (சுந்தரி கண்ணால் ஒரு சேதி” என்ற கோர்வையும் பொருந்தாமல் தனித்துத் தெரிந்தன. அதிலும் “போறாளே பொன்னுத்தாயி” பாடல் ஸ்வர்ணலதாவுக்கு மட்டுமே எழுதி வைத்த ஆஸ்தி, சின்மயி இந்த unplugged தொகுப்பை அடுத்த மேடைக்குக் கொண்டு செல்லும் போது பாடல்களில் பரிசீலனை ப்ளீஸ்.

வழக்கமாக இந்தியாவில் இருந்து வரும் இசைக்குழு கையோடு நாலைந்து சீடிக்களையும் கொண்டு வரும். கீ போர்ட் வாசிப்பவரின் கையசைப்பு மட்டும் இருக்கும் ஆனால் என்ன அதிசயம் பின்னணியில் இசை இருக்கும். இப்படியான அற்புதங்கள் எதுவுமில்லாமல் தேர்ந்ததொரு இசைக்குழு கூடவே பயணித்தது சிறப்பு. குறிப்பாகப் புல்லாங்குழலையும் சாக்ஸபோனையும், இன்ன பிற குழல் வாத்தியங்களையும் நொடிக்கொரு தடவை மாற்றி மாற்றி வாசித்த அந்த சகலகலா இளைஞனுக்குப் பாராட்டுக்கள். இவ்வளவு இருக்கும் போது நாமும் நல்லா இயங்கணும் என்ற எண்ணத்தில் அரங்கத்தின் ஒலியமைப்பும் பங்கு போட்டுக்கொண்டது.

நிகழ்ச்சி இப்படிக் கலகலப்பாகப் போய்க்கொண்டிருக்கும் போது மேடையில் ஒரு சிறுமி மைக்குடன் தோன்றினாள். சின்மயி பாடும் போது பக்கத்தில் நின்று அவரைப் போலப் பாடுவது போலப் பாவனை, சின்மயி தன் குரலை மேலே உயர்த்தித் தலையை மேலே வானத்தை நோக்குமாற்போலப் பாட அதே மாதிரிப் பாவனையில் அவளும். குரு படத்தில் வந்த “மையா மையா”பாட்டை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே சின்மயியிடம் கேட்டு வைத்து விட்டாள் அவள். சின்மயி “மையா மையா” பாடலைப் பாட,

மைக்கை ஒருகையில் வைத்துக் கொண்டு மற்றக்கை அசைத்து தன் தந்தையை அழைக்கிறாள். அவரும் வருகிறார். தந்தை விஜய் ஜேசுதாஸ், அந்தக் குட்டி அவரின் மூன்று வயது மகள் அமயா. அந்தச் சுட்டிக் குழந்தைதான் இடைவேளைக்குப் பின்னான நிகழ்ச்சியின் ஹீரோயின். தன் தந்தையோடு “அன்னாரக்கண்ணா வா” பாடலைப்பாடுவதும் அவர் நிறுத்த தானும் நிறுத்துவதும், தந்தை பாட மகள் ஆடுவதுமாக ஒரே கொட்டம் தான். சும்மாவா புலிக்குப் பிறந்த பேத்தி ஆயிற்றே.

சிட்னியில் நடந்த இந்த நிகழ்ச்சி ஐந்து மணி நேரங்களைக் கடந்தது, வாணி ஜெயராம், விஜய் ஜேசுதாஸ், சின்மயி, ஹரிச்சரண் என்று வந்த பாடகர்கள் தம் முழுமைக்குமான வெளிப்பாட்டைக் காட்டிச் சிறப்பித்தது. அந்த வகையில் இது மறக்கவொண்ணா இசை விருந்து அவர்களுக்கும் எங்களுக்கும்.


சிட்னியில் ஶ்ரீகுமாரும் பின்னே ஞானும்


சிட்னிக்கு மலையாளப்பாடகர் எம்.ஜி.ஶ்ரீகுமார் வருகிறார் என்பதை இங்குள்ள மலையாளிகளின் கூட்டு மின்னஞ்சல் எனக்கு உறுதிப்படுத்தியது. சிட்னிக்கு வருகின்ற மலையாளப்படங்களை ஆதரிக்கும் என்னை சக மலையாளியாகவே கருதி என்னையும் தமது மின்னஞ்சல் பட்டியலில் சேர்த்த அவர்தம் பெருந்தன்மை தான் என்னே. இருந்தாலும் எம்.ஜி.ஶ்ரீகுமாரின் இசை நிகழ்ச்சியை என்ன விலை கொடுத்தாலும் பார்த்தே தீரவேண்டும் என்ற என் தீரா ஆசைக்கு விதையாக இருந்தது,வழக்கம் போல இசைஞானி இளையராஜா தான். ஏனென்றால் தான் இசையமைத்த பெரும்பாலான மலையாளப்படங்களில் எம்.ஜி.ஶ்ரீகுமாருக்கு வாரி வழங்கியிருக்கிறார் ராஜா. அதில் ஒன்றிரண்டையாவது மனுஷர் மேடையில் பாடுவாரே என்ற நப்பாசை தான் காரணம். ஆனால் என் ஆசையை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பார்வையாளர்களைக் குறிவைத்து அடித்த ஶ்ரீசாந்த் இன் பந்து போல நிராசை ஆக்கி விட்டது. மேற்கொண்டு இசை நிகழ்ச்சிக்குச் செல்வோம் ;0

அலுவலகத்தில் இருந்து அரை மணி நேரம் சீக்கிரமாகவே மொட்டை அடித்து விட்டு, இரவு வானொலி நிகழ்ச்சிக்கும் கட் அடித்து விட்டு நிகழ்ச்சி பார்க்கவேண்டும் என்ற என் பேராசைக்கு செமத்தியான முதல் அடி கிடைத்தது. ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போதோ, இறங்கும் போதோ என் பாண்ட் இல் இருந்த சாவிக்கொத்து, கார்ச்சாவி, வீட்டுச்சாவி உள்ளடங்கலாகத் தொலைந்து விட்டது. அதைத் தேடி அரைமணி நேர அலைச்சல், சலிப்போடு சரி மனசை ரிலாக்ஸ் ஆக்க எப்படியாவது இசை நிகழ்ச்சிக்குப் போ என்று மன வேதாளம் கட்டளை இட ரயில் நிலையத்தில் இருந்தே அடுத்த ரயிலைப் பிடித்து இசை நிகழ்ச்சிக்குப் போனேன்.

நிகழ்ச்சி தொடங்கியது. எம்.ஜி.ஶ்ரீகுமார் இதோ வருகிறார் என்று மஞ்சள் நிற சேச்சிகள் மேடையில் பகிர, வெள்ளை வெளேர் சேர்ட் உடன் கேரளத் தேங்காய் எண்ணை மகிமையில் வழுக்கை விழாத் தலையர் எம்.ஜி.ஶ்ரீகுமார் வந்தார். ஆங்கிலக் கலப்பில்லாத அட்சர சுத்தமான மலையாளம், வழக்கம் போல சிட்னி ரசிகர்கள் உலகத்திலேயே தலை சிறந்தவர்கள் என்ற ஓவர் பனிக்கட்டி சமாச்சாரம் இல்லாத இயல்பான பேச்சு என்று 80களின் மலையாள சினிமா போன்று எளிமையாக இருந்தார். தனக்குப் பின் வந்த பாடகர்கள் எல்லாம் சிட்னி போய் வந்துட்டோம் என்று சொல்லும் போதெல்லாம் நானும் எப்போ போவேன் என்ற நினைப்பை இன்று நிரூபித்தாகிவிட்டது என்றார். அம்மா பாடலோடு ஆரம்பித்தது அவர் கச்சேரி. கூடவே அப்துல் ரஹ்மான் என்ற ஒரு இளம் பாடகரும் ஒரு ரஞ்சினி ஜோஷ் இளம்பாடகி plus ஏஷியா நெட் புகழ் பிரபல அறிவிப்பாளினியும்ளினியும் வந்திருந்தார்கள்.

கேரளத்தின் சப்தம் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற மேதையில் குரலாகப் பிரதிபலிக்கின்றது என்று சிலாகித்தவர் ஜேசுதாசின் தந்தை அகஸ்டின் யோசப் உம் தன்னுடைய தந்தையும் நாடகத்தில் ஒன்றகா நடித்தவர்கள் அந்தக் காலத்தில் இருந்தே நாம் குடும்ப நண்பர்கள். நான் இசையமைக்கும் சகுடும்பம் ஷியாமளா படத்தில் ஒரு பாடலைப் பாடுகிறீர்களா என்று ஜேசுதாசைக் கேட்க “பாடலாமே , அதானே என் தொழில்” என்றவர் விளிச்சோ நீ என்னை விளிச்சோ என்ற பாடலைப் பாடியதோடு, அடுத்தமுறை நீ இசையமைக்கும் போதும் நீ என்னை விளிக்கும் என்று சொன்னதாகக் சொல்லிச் சிரித்தவர் அந்தப் பாடலையும் மேடையில் பாடினார்.

எம்.ஜி.ஶ்ரீகுமாரின் சகோதரர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மலையாள உலகில் இசையமைப்பாளர். காலமான அவரை நினைவு கூர்ந்தவர் தன் சகோதரர் மூலம் எத்தனையோ நல்ல சாகித்யங்கள் நிரம்பிய பாடல்கள் கிட்டியதாகச் சொல்லி ஒரு சில வரிகளையும் அந்தப் பாடல்களை நினைவுபடுத்திப் பாடினார். எம்.ஜி.ராதாகிருஷ்ணனோடு கடந்த வருஷம் தனது 48 வயதிலேயே காலமான பிரபல திரையிசைக் கவிஞர் கிரிஷ் புத்தன்சேரியின் இழப்பும் பெருங்கவலை தரும் விஷயம். இருவரும் இணைந்து பணியாற்றிய தேவாசுரம் என்ற ஐ.வி.சசியின் திரைப்படம். அந்தப் படம் மோகன்லாலின் படங்களில் அவருக்கு முத்திரைப் படமாக அமைந்த படங்களில் ஒன்று அந்தப் படத்தில் எனக்குக் கிடைத்த பாடல் சூர்ய கிரீடம் என்ற பாடலை இருவருக்கும் சமர்ப்பிக்கின்றேன் என்றவாறே உணர்ச்சிப்பெருக்கோடு அந்தப் பாடலைப் பாடி வசீகரித்தார்.

கிலுக்கம், பிரியதர்ஷன் – மோகன்லால் வெற்றிக்கூட்டணியில் வெளிவந்த படம். அந்தப் படத்தில் வரும் பாடலான ஊட்டிப்பட்டணம் பாடலைப்பாடினார். பாடலில் தமிழ் வரிகள் நிரம்பியது இன்னும் ரசிக்க முடிந்தது.

ம்ம்ஹிஹிம்ஹிம் என்று ஶ்ரீகுமார் ஆலாபனை செய்ய ஆரம்பிக்கவே குறிப்பால் உணர்ந்து ரசிகர் கூட்டம் ஆர்ப்பரித்த அந்தப் பாடல் தாளவட்டம் என்ற படத்தில் இடம்பெற்ற “பொன் வீணை என்னுள்ளில் மெளனம் வானோ” என்ற பாடலைப் பாடும் போது மெய்சிலிர்க்க அனுபவித்துக் கேட்டேன். எனக்கு நிரம்பப்பிடித்த ஆர்ப்பாட்டமில்லாத பாடல். இந்தப் படம் தமிழில் மனசுக்குள் மத்தாப்பு என்று பிரபு நடிக்க மீள எடுத்த படம்.


கேரள சினிமாக்காரருக்கு தமிழ் என்றால் எனிமா என்பது உலகறிந்த ரகசியம். பாண்டி பாண்டி என்று மூச்சுக்கு மூச்சு கிண்டலடித்து ரசித்த அவர்களையே தமிழின் அதிரடி இசையமைப்பாளர்கள் கவிழ்த்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள் என்பதை நிகழ்ச்சியில் காணக்கூடியதாக இருந்தது. “குண்டு மாங்காத் தோப்புக்குள்ள” என்ற பாடலுக்கு குலுக்கல் ஆட்டமும், இமானின் இசையில் சமீபத்தில் வந்த அட வாடா வாடா பையா என்ற கச்சேரி ஆரம்பம் படப்பாடலும், கந்தசாமியில் வந்த அலேக்ரா, காதலன் படத்தின் முக்காலா முக்காபுலா, வில்லுவில் இருந்து வாடா மாப்பிளை போன்ற பாடல்களை இளம்பாடகர்கள் ரஹ்மானும், ஜோடிப்பெண் ரஞ்சினி ஜோஷ் உம் பாடி சூழலை மாசுபடுத்தினார்கள். இருந்தாலும் பாடிய தமிழில் குறை ஒன்றும் இல்லைக் கண்ணா.

ஐடியா சிங்கர் புகழ் கீபோர்ட் ப்ளேயர் அனூப் குமாரின் இசை கலக்கலாக இருந்தது. ஶ்ரீகுமாரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பாடலைப் பாடுமாறு கேட்க , “இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை” என்ற பாடலை அவர் பாடிய போது இலைமறை காயாக இன்னொரு நல்ல பாடகர் இருப்பது தெரியவந்தது.

ஶ்ரீகுமாரும் தன் பங்கிற்கு “ஒரு Black & White குடும்பம்” திரைப்படத்தில் இருந்து “ஆள மயக்கண குப்பி பாடலைப் பாடி, பிரியாணிப் பார்சலோடு பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களையும் ஆட வைத்தார்.

கூடவே ஹரிஹரன் நகரில் படத்தில் வந்த “உண்ணம் மறந்து” என்ற பாடல் அந்தப் படம் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்ட போதும் வந்ததாகச் சொல்லி அதையும் பாடிவைத்தார்.

நரன் படத்தில் மோகன்லால் வேலோடு ஆடிய வேல்முருகா அரோஹரா பாடலுக்கு ரசிகர்கள் காவடி தூக்காதது தான் குறை

அடுத்தது ராஜாவின் பாடல் தான் என்று மனதைச் சமாதானப்படுத்தி மூன்று மணி நேரக் கச்சேரிக்கும் முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. கேரள சினிமாவின் எண்பதுகளின் ராஜா, ரவீந்திரனை மட்டுமல்ல இசைஞானி இளையராஜா மலையாளத்தில் இசையமைத்த எத்தனையோ நல்ல பாடல்களைப் பாடி இருந்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட ஶ்ரீகுமாரை என்ன செய்யலாம்? விஜய் ஆண்டனி இசையில் இவர் குரலை ரீமிக்ஸ் செய்து தண்டனை கொடுக்கக் கடவது.

“எழுத்தில் இருந்து சினிமாவிற்கு” இயக்குனர் பாலுமகேந்திரா வழங்கும் ஒலிப்பகிர்வு


கிழக்குப் பதிப்பகம் வழங்கி வரும் மொட்டை மாடிக் கூட்டத்தில் நேற்று இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார் என்ற செய்தி வந்தபோது அந்த நிகழ்வு சென்று கொண்டிருக்கும் நேரம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரக்குக் கூட்டுத்தாபனத்தில் எனது வானொலி நிகழ்ச்சியும் சமகாலத்தில் இடம்பெறுவதால் ஒரு புதுமுயற்சியாக நேரஞ்சல் செய்வோமே என்று நினைத்தபோது கிழக்குப் பதிப்பகமும், நண்பர் ஹரன் பிரசன்னாவும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். எனது நேயர்களோடு நேரடி உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே மறுமுனையில் ஒலித்தரம் குறித்த பரிசோதனையை ஹரன்பிரசன்னா முழு அர்ப்பணிப்போடு செய்து உதவினார் 😉

50 நிமிடங்கள் வரை சென்ற இந்த நேரடி இந்த நிகழ்வை வெற்றிபெறச் செய்ய மறுமுனையில் இருந்து உதவிய நண்பர் ஹரன்பிரசன்னாவுக்கு இந்த வேளையில் எனது நன்றிகள். இந்த முயற்சியை சென்னையில் இருந்து சிட்னி, ஐரோப்பா வரை நேரடியாகக் கேட்டு மகிழ்ந்த நேயர்கள் பலர்.

“எழுத்தில் இருந்து சினிமாவிற்கு” (from writing to cinema) இதுதான் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் எடுத்துக் கொண்ட கருப்பொருள். இதனை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் மூன்று மாதங்களுக்குப் போதுமான சினிமாப் பாடத்தையே எடுத்து முடித்து விட்டார் இந்தக் கருத்தரங்கில். எழுத்து வடிவம் கொண்ட ஒரு படைப்பு எப்படி சினிமாவாக் மாற்றம் காண்கின்றது என்பதை பல்வேறு நடைமுறை உதாரணங்களையும் வாழ்வியல் அனுபவங்களையும் இணைத்து அவர் பேசுகின்றார். உண்மையில் சினிமாவை நேசிப்போருக்கும், முனைப்பில் இருப்போருக்கும் இந்தப் பேச்சு கண்டிப்பாகப் பயனளிக்கும். எனவே இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன்.

Download பண்ணிக் கேட்க

அங்கம் 1

அங்கம் 2

நேரடியாகக் கேட்க

அங்கம் 1

அங்கம் 2

ஏ.ஆர்.ரஹ்மான் – புதுக்குரல்களைத் தேடிய பயணம்

தமிழ்த்திரையிசையின் அடுத்த போக்கைத் தீர்மானித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்றோடு வயது 45. இந்தி இசைப்பக்கம் ஓடிக்கொண்டிருந்த தென்னகத்து ரசிகனைக் கட்டிப்போட்டுக் கட்டுக்குள் வைத்தவர் இசைஞானி இளையராஜா, அடுத்து வந்த ரஹ்மானோ வட இந்திய ரசிகர்களை வளைத்துப் போட்டதுமல்லாமல் ஹாலிவூடையும் கைக்குள் போட்டுக்கொண்டார். அந்த வகையில் இசைப்புயலுக்கு இனிய வாழ்த்துக்களைப் பகிர்வதோடு, ஆஸ்கார் விருதை அவர் தட்டிக்கொண்ட சமயம் “அம்ருதா” என்ற சஞ்சிகைக்காக ஏப்ரல் 2009 இல் நான் எழுதிய கட்டுரையை இங்கே தருகின்றேன்.

00000000000000000000000000000000000000

54 ஆவது பிலிம் பேர் அவார்ட் மேடையில் அறிவிக்கப்படுகின்றது, சிறந்த வளர்ந்து வரும் பாடகர் என்ற பிரிவில் கஜினி (ஹிந்தி)
படத்துக்காக பென்னி தயாள் விருதை வாங்கிக்கொள்ள அழைக்கப்படுகின்றார். இது சமீபத்தில் நடந்த ஒரு அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தின் பின்னால் இருந்தது பென்னி தயாள் என்ற பாடகனை அறிமுகப்படுத்தி வேலை வாங்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைச் சாரும் என்று சொல்லத் தேவையில்லை. இந்தப் பண்பு இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசையமைப்பாளன் திரைமறை காயாக இருந்து 1992 இல் வெளிப்பட்ட போது ஆரம்பித்தது. இன்றும் தொடர்கின்றது.

1992 ஆம் ஆண்டில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு “ரோஜா” படத்தில் இசையமைக்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய
“காதல் ரோஜாவே” ஒரு பாடல் மட்டுமே அந்த நேரத்தில் தமிழ் ரசிகர்களுக்கு பெரிதும் பரிச்சயமான குரலாக ஒலிக்கின்றது. ஏற்கனவே
இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டுப் பாடிக் கொண்டிருந்த மின்மினி என்ற பாடகியை எல்லைகள் கடந்து தெரியவைத்ததும், விஜய் என்ற பெயரில் முன்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாடி வந்த உன்னிமேனன் என்ற பாடகனை எல்லா ரசிகர் முன்னும் அறியவைத்ததும், பத்து வருஷங்களுக்கு மேல் தமிழில் பாடாமல் ஓய்ந்திருந்த பாடகி சுஜாதாவை மீள இயங்கவைத்ததும், மும்பையை கடந்தால் யார் இவர் என்று கேட்க வைத்த ஹரிஹரன் குரலை தேசங்கள் கடந்தும் ஒலிக்கவிட்டதும் என்று ஆரம்பித்தது ரஹ்மானின் இசைப்பயணம். பொதுவாகவேமிகவும் கஷ்டப்பட்டுக் கிடைக்கும் வாய்ப்பு, அதுவும் பேர் போன ஒரு தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா, நாடறிந்த இயக்குனர் மணிரத்னம் இப்படியாக மிகவும் சவாலாக வந்த அந்த இசைப்பணிக்கு வேறு யாரும் என்றால் நிச்சயம் இவ்வளவு புதுக் குரல்களைப் போடுவதைக் கொஞ்சம் யோசித்திருப்பார்கள். ஆனால் அங்கே தான் ரஹ்மானுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகின்றது. அதுவரை இளையராஜா என்னும் மாபெரும் கலைஞன் பதினாறு ஆண்டுகளாகக் கட்டிப்போட்ட இசைமுடிச்சை அவிழ்த்துப் புதிதாக ஒன்றை ரசிகனுக்குக் கொடுப்பது என்பது மிகவும் சவாலானதொரு விடயம். ஒரு ட்ரெண்ட் செட்டராக ரஹ்மான் அடையாளப்படும் போது வெறுமனே அவரின் புது மாதிரியான இசை மட்டுமே மாற்றத்தைக் கொடுக்கவில்லை, கூடவே ஆண்டாண்டு காலமாக ஒரு குறிப்பிட்ட பாடகர் வட்டத்துக்குள்ளே இருந்த தமிழ் சினிமாவின் கூட்டை அகலத் திறந்து விட்டார் இவர். குறிப்பிட்ட பாடகர்களைத் தவிர்த்து வேறும் புதுப் பாடகர்களை அறிமுகப்படுத்துவது ரஹ்மான் காலத்துக்கு முன்னரும் இருந்திருக்கின்றது. ஆனால் ரஹ்மானுக்குப் பின்னான போக்கைப் பார்த்தீர்களானால் இந்த மாற்றம் எவ்வளவு பெரியதாக அமைந்திருக்கின்றது என்பதை இனங்காணலாம்.

இப்போதெல்லாம் ஒரு படத்தில் ஐந்து பாட்டென்றால் ஐந்து பாடகர்களோ, இல்லாவிட்டால் ஒரு பாட்டையே இரண்டு மூன்று பாடகர்களோ பாடுவது சர்வசாதாரணம். இந்த மாற்றத்தின் விதையைப் போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் அது மிகையில்லை. டிவிக்களில் வரும் அறிமுகப் பாடகர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த சப்தஸ்வரங்கள், ராகமாலிகா, பாட்டுக்குப் பாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் திறமையை வெளிக்காட்டும் பாடகர்களில் பலருக்கு இப்போதெல்லாம் சினிமா வாய்ப்பு என்பது எட்டும் கனியாகி விட்டது. ஆனால் இப்படியான நிகழ்ச்சிகள் பரவலாக இல்லாத காலத்தில் ஒரு கல்லூரி ஆண்டு விழாவுக்கு நடுவராகப் போன ரஹ்மானில் கண்ணில் பட்டார் அந்த நிகழ்ச்சியில் பாடிய ஹரிணி. பின்னர் நிலாக் காய்கிறது என்று ஆரம்பித்தது ஹரிணியின் இசையப்பயணம்.

ஹோரஸ் கொடுக்கும் பாடகர்கள் என்னதான் திறமைசாலிகளாக இருந்தாலும் அந்த எல்லையைக் கடந்து பெரும் பாடகராகச் சாதிக்க முடியாத காலமும் இருந்தது. ரஹ்மானின் காலத்தில் தான் இந்த விஷயத்திலும் மாறுதல் கண்டது. இவரின் பாடல்களுக்கு ஹோரஸ் கொடுத்த பலர் பின்னாளில் முன்னணிப் பாடகர்களாக வரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ரஹ்மானின் பாடல்கள் வரும் இசைத் தட்டுக்களைக் கவனித்தால் வெறுமனே முன்னணிப் பாடகர்கள், மற்றும் இசையமைப்பாளர் பெயர் மட்டுமே இருக்காது. கூடவே அந்தப் பாடல்களுக்குப் பயன்பட்ட வாத்தியக் கலைஞர்கள், மற்றும் ஹோரஸ் பாடிய பாடகர்கள் பெயர் இருப்பதும் தவிர்க்க முடியாத ஒன்று. அது என்னதான் பெரிய லிஸ்டாக இருந்தாலும் கூட.

ரஜினி என்றாலும் கமல் என்றாலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற முன்னணிப் பாடகர்களின் பின்னணிப் பாடல் தான் ரசிகர் மனதில் ஒட்டும் என்ற நினைப்பை மாற்ற வைத்தது “முத்து” படத்தில் உதித் நாராயணன் பாடிய “குலுவாயிலே” பாட்டும் “படையப்பா” படத்தில் வந்த “மின்சாரப் பூவே” என்ற பாடலும். இந்தியன் கமலுக்கு போட்ட “டெலிபோன் மணி போல்” ஹரிஹரன் குரல்கூட அளவாகப் பொருந்தியதே.

சுரேஷ் பீட்டர்ஸ் குரலில் அமைந்த “சிக்கு புக்கு ரெயிலே” பாட்டு கொடுத்த புகழ் சுரேஷை ஒரு இசையமைப்பாளனாகவே மாற்றி அழகு பார்த்த்து. ஜென்டில்மேனில் “உசிலம்பட்டி பெண்குட்டி” முத்துப் பேச்சி பாடிய சாகுல் ஹமீத்தின் வித்தியாசமான குரலைக் கூட ரஹ்மான் இசையில் அறிமுகப்படுத்த முடிந்தது, தொடர்ந்து அவர் வெறும் வாத்திய இசையில்லாமல் ஹம்மிங்கோடு அமைந்த “ராசாத்தி என்னுசிரு” பாட்டில் கூட வசீகரித்தார். சாகுல் ஹமீத்தின் நட்பு ரஹ்மான் திரைக்கு வரும் முன்னரே அவர் இசையமைத்த தீன் இசைமாலை போன்ற ஆல்பங்களில் ஆரம்பித்தது. அந்த நட்பினை முறிக்காது ஹமீதின் குரலை திரையிலும் தொடர்ந்தார் ரஹ்மான். ரஹ்மான் கொடுத்த திரைப்பாலம் ஹமீதை மற்றைய இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடவைத்தது. கடல் கடந்தும் இசைப்பயணத்தைத் தொடர்ந்த ஹமீத் துரதிஷ்டவசமாக பெரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ரஹ்மானையும் வெகுவாகவே பாதித்தது.

அனுபமா போன்ற மேற்கத்தேயச் சாயல் கொண்ட குரல்களுக்கு “கொஞ்சம் நிலவு” (திருடா திருடா) போன்ற பாடல்கள் களம் அமைத்து போல சுவர்ணலதா போன்ற பாடகிகளுக்கு “போறாளே பொன்னுத்தாயி” போன்ற கிராமிய மெட்டுக்களும் கைகொடுத்து தேசிய விருது வரை அழைத்துச் சென்றது.

திரையிசைக்கு பாலமுரளி கிருஷ்ணா போன்ற முழு நேர சங்கீத வித்துவான்களின் அறிமுகம் புதிதல்ல. ஆனால் ஜேசுதாஸ் போன்று கர்னாடக மேடைகளிலும் திரையிசையிலும் சமகாலத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் வண்ணம் பாடகர்கள் அமையாதிருந்தனர். அந்தப் போக்கினையும் ரஹ்மானின் காதல் திரைப்படம் உன்னி கிருஷ்ணன் மூலம் மாற்றிக் கொண்டது. ரஹ்மான் இசையில் காதலன் படத்தில் “என்னவளே அடி என்னவளே” பாடலுக்கும் “பவித்ரா” படத்தில் “உயிரும் நீயே” பாடலுக்கும் பாடியதன் மூலம் உன்னிகிருஷ்ணன் தேசிய விருது வரை அங்கீகாரம் பெற்றதோடு உன்னிகிருஷ்ணனுக்கு சபா மேடைகள் தாண்டி ஒலிப்பதிவுக் கூடங்களையும் தினமும் செல்லவைத்தது. கர்நாடக சங்கீதச் சாயல் மட்டுமன்றி ஜீன்ஸ் போன்ற படங்களில் இளமை துள்ளும் பாடல்களுக்கும் உன்னி கிருஷ்ணனை அறிமுகப்படுத்தி வைத்தார் ரஹ்மான்.
அந்த வகையில் இன்னொரு குறிப்பிடத்தக்க அறிமுகமாக அமைந்தது நித்யஶ்ரீயின் “கண்ணோடு காண்பதெல்லாம்” ஜின்ஸ் படப்பாடல்.
நித்யஶ்ரீ போன்ற திரையிசைச் சாயல் கலக்காத அக்மார்க் சபா மேடைக் குரலை ஜீன்ஸ் போன்ற மெகா பட்ஜெட் படத்தில் நுழைத்தது
ரஹ்மானின் சாமர்த்தியம்.

சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிக்கு நடுவராகச் சென்ற ஶ்ரீநிவாஸ் அந்த நிகழ்ச்சியில் பாடிய சின்மயியின் குரலை ஞாபகம் வைத்திருந்து
பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான், “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் வரும் “ஒரு தெய்வம் தந்த பூவே” பாடலுக்கு புதுக்குரலைத் தேடியபோது ஶ்ரீநிவாஸ் சின்மயியை பரிந்துரைக்கிறார், சின்மயி என்ற திரையிசைப்பாடகி பிறந்தார். அது போல் அப்துல் ஹமீது நடாத்திய தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் தன் திறமையைக் காட்டிய முகேஷுக்கு ரஹ்மானின் “கண்களால் கைது செய்” அறிமுகம் கொடுக்கின்றது. திறமை எங்கிருந்தாலும், அதை யார் வழிமொழிந்தாலும் அதனைப் பாவிக்கும் ரஹ்மானின் திறனுக்கு இவை சில உதாரணங்கள்.

ரஹ்மான் தமிழுக்கு அறிமுகப்படுத்திய வட நாட்டுக்குரல்கள் விளைவித்த மொழிச் சேதத்தையும் கண்டிக்க இசை ரசிகர்கள் தவறவில்லை. உதித் நாராயணன், மதுஶ்ரீ, சாதனா சர்க்கம் போன்ற பாடகர்களின் அந்நியமான தமிழை ரஹ்மானின் இசை உள்வாங்கிக் கொண்டாலும் அந்தக் குரல்களில் அமைந்த நல்ல பல பாடல்களை ஒதுக்க முடியவில்லை. ஆனால் ரஹ்மானின் அறிமுகத்தில் வந்த கார்த்திக், நரேஷ் ஐயர் போன்ற குரல்களும் சரி சங்கர் மகாதேவன், கவிதா சுப்ரமணியம், ஹரிஹரன் போன்ற ஏற்கனவே அறிமுகமாகி
ரஹ்மானின் பாடகளால் உச்சத்துக்கு சென்றவர்களும் சரி அந்தக் குறையையும் தீர்த்து விட்டார்கள்.

வட நாட்டுக் குரல்களை தமிழில் அழைத்து அறிமுகப்படுத்திய ரஹ்மானின் இன்னொரு சாதனை தமிழில் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட பலரையும் ஹிந்தித் திரையுலகிலும் வெளிக்காட்டி நின்றமை. ஶ்ரீநிவாஸ், கார்த்திக், பென்னி தயாள், சின்மயி போன்ற பாடகர்கள் பலர் ஹிந்தியிலும் தடம் பதிக்க ரஹ்மானின் பாடல்கள் களமாக அமைந்திருந்தன. ஹிந்தித் திரையுலகில் கூட மரபு ரீதியாக அமைந்த பாடகர்கள் வட்டத்திலிருந்து விலகி புதுப் புதுக் குரல்களின் தேடல் அமைந்து வருகின்றது. தமிழிலும் சரி ஹிந்தித் திரையுலகிலும் சரி ரஹ்மானின் அறிமுகத்தில் வெளிக்கொணரப்பட்ட பாடகர்களை ஒரு கட்டுரைக்குள் அடக்கிப் போட்டு விட முடியாது. அந்த அளவுக்கு அவரால் அறிமுகப்படுத்திய பாடகர் பட்டியல் நீள்கிறது.

ஆரம்பத்தில் ரஹ்மான் என்ற இளைஞன் தன் திறமையை வெளிக்காட்டச் சந்தர்ப்பம் தேடிக் காத்திருந்தது போல இன்னும் எத்தனை எத்தனை இளைஞர்கள் யுவதிகள் இப்படி இருப்பார்கள் என்ற அவர் மனதுக்குள் எண்ணியிருக்கலாம். அதுவே பின்னாளில் புதியவர்களைக் கை தூக்கி விடும் பண்பை அவருள் விதைத்திருக்கலாம்.

முதல் படம் கொடுத்த வெற்றிப் போதையில் படங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு இசையமைத்துத் தன் அடையாளத்தைத் தொலைத்து விடாமல் மிகவும் நிதானமாக நடைபோடும் ரஹ்மானால் தான் இன்று ஆஸ்கார் வரை செல்ல முடிந்தது. பெரும்பாலும்
ரஹ்மானின் சாகித்யத்தையும் புதிய முயற்சிகளையும் காட்டுவதற்கேற்ற களங்களாகத் தான் அவர் ஒப்புக் கொண்ட படங்கள் அமைந்தன.
அதனால் தான் கிராமியப் பின்னணியில் அமைந்த படங்களும் சரி நகர வாழ்வியலோடு அமைந்த கதைக்களனாயினும் சரி புதுப் புதுக் குரல்களைத் தன் மெட்டுக்களுக்குப் பயன்படுத்தி குறித்த அந்தத் திரைப்படங்களின் சாயத்தை வேறுபடுத்திக் காட்டினார். காலாகாலமாக இருந்து வந்த தமிழ் சினிமாவின் பின்னணிப் பாடல்களின் குரலோசைக்கு ரஹ்மானால் புது அர்த்தம் கற்பிக்கப்பட்டது. இன்று அவருக்குப் பின் தொடரும் இசையமைப்பாளர்கள் இப்போது புதுக்குரல்களைத் தேடும் பார்முலாவுக்கு வித்திட்டதும் ரஹ்மான் உருவாக்கிய இன்னொரு பாணி தான்.

அம்ருதா ஏப்ரல் 2009 இல் வந்த என் கட்டுரையின் மூலம்தீபாவளி இன்னிசை விருந்து

தீபாவளி நன்னாள் றேடியோஸ்பதி வழியாக நண்பர்கள் அனைவருக்கும் உங்களைச் சூழ்ந்த தீமைகள் அகன்று சுபீட்சமான வாழ்வு மலர வாழ்த்துகின்றேன். கூடவே உலகெங்கும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் தீபாவளி நாளில் போட்டுத் தீர்க்கப் போகும் பாடல் பட்டியலை இங்கே தீபாவளிப் பரிசாகப் பரிமாறுகிறேன். பாடல்களைக் கேட்டு அனுபவியுங்கள்

உன்னைக் கண்டு நான் ஆட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி (கல்யாணப்பரிசு)

நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதசி (நாயகன்)

பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா (பூவே பூச்சூடவா)

தினம் தினம் தினம் தீபாவளி (காட்பாதர்)

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் (தேவதை)

விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் (ஆத்மா)

தஞ்சைப் பெருங்கோயில் தரிசனம் – iTunes இல் அரங்கேறும் றேடியோஸ்பதி

சோழப்பேரரசு தன் உச்சத்தில் இருந்த காலத்தின் கல்வெட்டாய் கம்பீரமாய் இன்றும் திகழ்வது தஞ்சைப் பெருங்கோயில் என்று சிறப்பிக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம். ராஜராஜசோழ மன்னன் தன் காலத்தில் சமயத்தையும், கலையையும் எவ்வளவு உச்சமாக மதித்தான் என்பதற்குச் சான்றாக இன்றும் மிடுக்கோடு நிற்கின்றது இந்த இராஜராஜேஸ்வரம்.

இவ்வாலயம் எழுப்பி இந்த ஆண்டோடு ஆயிரம் ஆண்டுகள் கடக்கின்றது என்பது பெருமையோடு நினைவுகூர வைக்க வேண்டிய விடயம். இதுவரை என் இந்தியப்பயணங்களில் தஞ்சைப் பெருங்கோயிலைக் காண வாய்ப்புக் கிட்டவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. அதை ஓரளவு ஈடுகட்டும் விதத்தில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நான் படைக்கும் “அறிவுக்களஞ்சியம்” நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அறிவிப்பாள சகோதரி திருமதி சிவாஜினி சச்சிதானந்தாவை அழைத்து ஒரு சிறப்புப் படையலைப் படைத்திருந்தேன். இவர் தஞ்சைப் பெருங்கோயிலுக்குச் சென்ற அந்த அனுபவங்களை மிகவும் சுவையாகப் பகிர்ந்த போது இடையிடையே “ராஜ ராஜ சோழன்” படத்தில் வரும் இவ்வாலயத்தின் சிறப்பைக் கூறும் பாடல்களையும் கொடுத்து ஒரு சிறப்புப் பெட்டக நிகழ்ச்சியாக அமைத்தோம்.

இப்போதெல்லாம் Apple நிறுவன உற்பத்திகளை ஆளாளுக்கு iPhone, iPod, iPad ஆகப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கையில் றேடியோஸ்பதியின் அடுத்த பரிமாணமாக முதல் Podcast ஆக இந்த “தஞ்சைப் பெருங்கோயில் தரிசனம்” என்ற ஒலிப்பெட்டகத்தைத் தருவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். தொடர்ந்து இவ்வகையான சிறப்புப் பெட்டக நிகழ்ச்சிகள், கலைஞர்கள் பேட்டிகளும் வர இருக்கின்றன. தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி, Apple நிறுவனத்துக்கு ஒரு “ஓ”.

இந்த ஒலிப்பகிர்வை itunes வழியாக நேரடியாகத் தரவிறக்கி உங்கள் ஒலிப்பெட்டியில் இணைக்க

http://itunes.apple.com/podcast/thanjai/id383047672

நேரடியாகக் கேட்க

தஞ்சைப் பெருங்கோயில் புகைப்படம் நன்றி: travel.webshots.com

சிட்னியில் ஒளிர்ந்த “வைர(த்தில்) முத்து(க்கள்)


திரையிசைக்கவிஞர்கள் கறிவேப்பிலையாய்ப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டு வந்து காட்டியவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவருக்கு முன்னான காலகட்டத்தின் சகாப்தங்களான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன் போன்ற ஆளுமைகள் தமிழ்த்திரையிசைப் பாடல்களின் தனித்துவங்களாக இருந்தாலும், கவிஞர் வைரமுத்து அவர்கள் பாடலாசிரியர்களுக்கான தனித்துவம் என்ற விஷயத்தில் முன்சொன்னது போல நட்சத்திர முத்திரையைப் பதித்திருக்கின்றார். அந்த வகையில் ஒரு பாடலாசிரியரை முன்வைத்து அவுஸ்திரேலியாவில் நடக்கும் முதல் கலை நிகழ்ச்சியாக அமைந்தது சரிண்டா வழங்கிய “வைரத்தில் முத்துக்கள்”. இந்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை யூலை 4 ஆம் திகதி சிட்னி நகரமண்டபத்தில் இரவு 7.30 முதல் இரவு 10.30 வரை நடந்தது. கவிஞர் வைரமுத்துவோடு பாடகர்கள் மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா (சுஜாதா மகள்) ஆகியோரோடு நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் இணைந்து இந்த “வைரத்தில் முத்துக்கள்” நிகழ்ச்சியைப் படைத்திருந்தனர்.

ஓவ்வொரு திரையிசைப்பாடல்கள் பிரசவிக்கும் போதும் அதன் பின் சுவையான ஒரு சம்பவம் ஒட்டிக்கொண்டிருக்கும். அதைத் தன் பாணியிலே வைரமுத்து அவர்கள் விவரித்து தருவது தனித்துவமானது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றதற்கும் முதற்காரணம் “வைரமுத்து”வே தான். “நேற்றுப் போட்ட கோலம்” என்ற நூலில் தன் திரையிசைப்பாடல்கள் பிறந்த கதையைக் கவிதையாக வர்ணித்து எழுதியதைப் பலமுறை ரசித்திருக்கின்றேன். அந்த சுகானுபவம் நேரிலே கிட்டவெண்ணி நிகழ்ச்சிக்குப் படையெடுத்தேன்.

நிகழ்ச்சி ஆரம்பமானது, தன் அக்மார்க் தும்பைப்பூ வெள்ளை உடைக்குள் கறுப்பு வைரம் மேடையில் தோன்றப் பார்வையாளர் கூட்டம் ஆரவாரித்ததில் இருந்தே என்னைப் போலவே இன்னொரு கூட்டமும் அங்கே வந்திருந்ததைக் கைதட்டிக் காட்டியது. முதற்பாடல் நிழல்கள் படத்தின் தன் முதற்பிரசவமான “இது ஒரு பொன்மாலைப்பொழுது” பாடல் பிறந்த கதையைச் சொன்னார். மார்ச் 10 ஆம் திகதி இயக்குனர் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா ஆகியோரோடு இந்தப் பாடலை எழுதும்போது மனைவி பொன்மணி வைரமுத்து தன் முதற்பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த நாள் முப்பது நிமிடத்தில் இட்டுக்கட்டிய அந்தப் பாடலின் நினைவை 30 வருசங்களுக்குப் பின் மேடையில் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஏற்கனவே கேட்ட விஷயம் என்றாலும் ஒரு மெய்சிலிர்ப்பான அனுபவம். தன் முதற் பாடல் எழுதி முடிந்ததும் இளையராஜா, வைரமுத்துவின் முகவரியை வாங்கி வைத்தபோது “அட இந்தக் கருவாயன் லேசில் இப்படியெல்லாம் செய்ய மாட்டானே” என்று வைரமுத்துவிடம் சொல்லியதைச் சிரித்துக் கொண்டே சொன்னவர் “யாரை யார் கருவாயன் என்று சொல்லுகிறார்” நாம் மூன்றுபேருமே இந்த விஷயத்தில் ஒற்றுமையானவர்கள் ஆச்சே, வைகை ஆத்துத் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்களல்லவா நாம் மூவரும்” என்று அவர் சொன்ன கணம், பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்துவின் அந்தப் பொற்காலம் நினைவுக்கு வந்து ஏங்க வைத்தது. இந்தப் பாடலை மனோ பாடி முடிந்ததும். இந்தப் பாடலுக்காக விடுபட்ட சரணத்தை இங்கே தருகின்றேன் என்று சொல்லியதும், மனோ “இரவும் பகலும் யாசிக்கிறேன்” என்று தொடர்ந்தார் அந்தக் கேட்காத கவிவரிகளை.

பாடகர் மனோவைப் பொறுத்தவரை ராஜா வைரமுத்துவோடு உரசிக்கொண்ட எண்பதுகளின் அந்த நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ராஜாவின் வளர்ப்பு மகனாகச் சீராட்டப்பட்டவர் பாட்டுலகில். எனவே வைரமுத்துவின் வரிகளில் மனோவுக்கான தனி அங்கீகாரம் பெற்ற பாடல் ஒன்றுமே இல்லை என்றே சொல்லி விடலாம். பின்னர் ரஹ்மானின் சகாப்தம் மலர்ந்த போதுதான் மனோவுக்கும் வைரமுத்துவுக்குமான கூட்டணி என்பது ஓரளவு சொல்லத் தக்கதாக இருந்தது. எனவே வைரமுத்துவை முன்வைத்து நடந்த இந்த நிகழ்ச்சியில் மனோ, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நகலாகவே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம், குறிப்பாக இசைஞானியின் பாடல்கள் என்று வந்த போது. அந்த வகையில் மூன்று மணி நேர இசைவிருந்தில் இரண்டே இரண்டு இளையராஜா பாடல்கள் தான் கிட்டியது. இதுவே வைரமுத்து, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் கூடவே சித்ரா என்று கூட்டணி வைத்துக் கச்சேரி பண்ணியிருந்தால் எந்திரன் அளவுக்கு எகிறியிருக்கும்.


உன்னிகிருஷ்ணன் முதல் நாள் வெள்ளிக்கிழமை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நடத்திய “தித்திக்கும் வெள்ளி” வானொலி நிகழ்ச்சிக்கு நேராகக் கலையகம் வந்து பேட்டி தந்தவர். அந்தப் பேட்டியைக் கேட்க

சிட்னிக்குளிர் உன்னிகிருஷ்ணனின் எதிரியாக அமைந்து அவரின் குரல்வளையை நெரித்ததை முதல் நாள் பேட்டி எடுத்த போதே உணர்ந்தேன். அது நிகழ்ச்சி நடந்த போதும் தொடர்ந்தது துரதிஷ்டம். “என்னவளே அடி என்னவளே”, “பூவுக்குள் ஒளிந்திருக்கும்” (ஸ்வேதாவோடு) போன்ற தன் பாடல்களைத் தந்ததோடு சிவாஜி படத்தில் உதித் நாராயணன் குரலுக்காக இவர் மேடையில் பாடிய “சஹானா சாரல் தூவுதோ” என்ற பாடலை எடுத்தது பெரிய ரிஸ்காக அமைந்து விட்டது. சென்னையில் பாடினால் மும்பையில் எதிரொலிக்கும் உச்சஸ்தாயி உதித் இன் குரலில் உன்னி மேலே சென்ற போது குரல்வளையை இன்னும் இறுக நெரித்து இயற்கை சதி செய்தது. வெகு லாவகமாகப் பாடித் தேசிய விருதைக் கைப்பற்றிக் கொண்ட “உயிரும் நீயே உடலும் நீயே” பாடலைக் கொடுத்துக் கொள்ளை கொண்டிருக்கலாமே.

ஆந்திரா தமிழ் நாட்டுக்கு இரு மருமகள்களைத் தந்தது, ஒருவர் பி.சி.சுசீலா, மற்றவர் ஜானகி. அதேபோல் கேரளம் இரு மருமகள்களைத் தந்தது, ஒருவர் சித்ரா மற்றவர் சுஜாதா என்ற வைரமுத்துவின் அறிமுகத்தோடு சுஜாதா தோன்றினார்.
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது ஐந்து முறை கிடைத்த போதும் அந்தப் பாடல்களுக்குத் தேசிய விருது கிட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்தப் பாடலுக்கு எதிர்பார்த்தேன் ஆனால் கிட்டவில்லை, விருது என்பதே எதிர்பாரால் கிடைக்க வேண்டியது தானே என்று சொல்ல சுஜாதா பாடிய பாடல் “காற்றின் மொழி ஒலியா இசையா ” என்று சுஜாதா பாடி அந்தப் பாடலை முடிக்கும் நிமிடத்துளிகள் வரை சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கி ஒன்றித்தது அந்தப் பாடலை அவர் கொடுத்த அந்தத் தெய்வீகக் குரலில். சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்தப் பாடலை ஶ்ரீலேகா பார்த்தசாரதி ஒரு இசை நிகழ்ச்சியில் பாடி, வாழைத்தோப்புக்குள் யானை புகுந்த கதையாய் துவம்சம் பண்ணியிருந்தார். அந்த வலிக்கு ஒத்தடமாக அமைந்தது சுஜாதாவின் இந்த அட்சர சுத்த அக்க்ஷய திருதைத் தங்கக் குரல். சுஜாதாவுக்குப் பின் வந்த சித்ராவுக்குக் கூட இப்போதெல்லாம் மேடைக்கச்சேரி செய்யும் போது உச்சஸ்தாயியில் ஒரு பாடலைக் கொண்டு போகும் போது, லிப்ட் இயங்காத நேரம் பாத்து பத்து மாடிக்கு ஏறிய களைப்பு வருவதைப் பார்க்கலாம். ஆனால் சுஜாதா இந்த விஷயத்தில் வெகு லாவகமாக ஸ்கோர் செய்து ஆட்டத்தில் இருக்கிறார். தன் சுத்தத்தமிழுக்கு ஆசான் வைரமுத்து என்றார் சுஜாதா.

பாடகி சுஜாதாவுக்கும் , அவர் மகள் ஸ்வேதாவுக்கும் வயசில் தான் வித்தியாசம், வாய்சில் அல்ல என்ற வைரமுத்துவின் கூற்றைப் பலமடங்கு நிரூபித்தது சுஜாதாவின் குரல்.

பாடகி சுஜாதா சிட்னியில் இறங்கும் நேரம் பார்த்து திரையிசையின் பெரும் பிதாமகர்களில் யாராவது இறப்பது ஒரு வாடிக்கையாக விட்டதோ என்று நினைக்கத் தோன்றியது. கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதி சுஜாதா இங்கே வந்து வானொலியில் பேட்டி கொடுத்த நேரம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் இறந்த சேதியைச் சொன்னேன் அவருக்கு. அந்த நேரம் அவர் அதிர்ச்சி கலந்த கவலையோடு “மகாதேவன் மாமா” என்று உருகி, மகாதேவனின் பெருமையைச் சிலாக்கித்திருந்தார். மீண்டும் இந்த முறை அவர் வந்த நேரம் இன்னொரு இசையமையாளரின் இறப்புச் செய்தியும் வந்தது. மலையாள சினிமாவின் சாகித்யங்களில் ஒருவரான எம்.ஜி.ராதாகிருஷ்ணன் கடந்த ஜீன் 2 ஆம் திகதி இறந்த சேதி வந்தது. இரண்டுமே வெள்ளிக்கிழமைகள். மலையாள இசையின் ஆளுமை எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மறைவுக்கு இந்த வேளை என் இரங்கல்களைப் பதிவு செய்கின்றேன்.

எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மலையாள சினிமாவின் தனித்துவம் மிக்க இசையமைப்பாளராக விளங்கி வந்திருக்கின்றார். கே.ஜே.ஜேசுதாசின் சக பாடகி சுஜாதாவை முதன்முதலில் தனிப்பாடல் ஆல்பம் மூலமாகவும் , சித்ராவை திரையிசைப்பாடகியாகவும் அறிமுகப்படுத்தியவரே இவரே. கமலா சுரையாவின் கவிதைகளை “சுரையா பாடுன்னு என்ற இசை அல்பமாக ஆக்கியிருக்கின்றார். தலைசிறந்த இயக்குனர் அரவிந்தனின் அரவிந்தனின் ‘தம்ப்’ ஆர்ட் பிலிம் மூலம் இசையமைப்பாளர், ஆல் இந்தியா ரேடியோவில் தம்புரா கலைஞராக மாதச் சம்பளத்தில் சேர்ந்து வாய்ப்பாட்டு கிளாஸ் திருவனந்தை வானொலியில் நடத்தியது மூலம் பிரபலம், மனைவி பத்மஜா மலையாளத்தில் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர், இவரின் சகோதரர் எம்.ஜி.ஶ்ரீகுமார் பிரல பின்னணிப்பாடகர்.(தகவல் குறிப்புக்கள் ஆதாரம் விக்கிபீடியா, இரா.முருகன்). அத்தோடு தமிழில் சந்திரமுகியாகக் குதறப்பட்ட மணிசித்ரதாளு மலையாளப்படத்தில் இவர் வழங்கிய இசை அந்தப் படத்தின் அடிநாதமாக விளங்கியதைப் படத்தைப் பார்க்கும் போதே அனுபவித்திருக்கின்றேன். குறிப்பாக மணிச்சித்ரதாளுவில் வரும் தமிழ்ப்பாடலான “ஒருமுறை வந்து பார்ப்பாயா” என்ற கே.எஸ்.சித்ரா, கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் உட்பட இந்தப் படத்தில் வந்த மற்றைய பாடல்களும். இவரின் இசையை நான் எல்.வைத்யநாதனின் இசை வரிசையில் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.

மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் தோட்டத்தில் இருந்த பாலசந்தரின் அலுவலகத்துக்கு ஒருமுறை வைரமுத்துவை அழைத்து புதுசா ஒரு பையன் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறான், வந்து பாருங்கள் என்று பாலசந்தர் அழைத்தபோது அங்கே ஜமுக்காளம் விரித்துத் தரையில் கீபோர்டுடன் உட்கார்ந்திருந்த திலீப் என்ற பையன் பின்னாளில் ரஹ்மான் என்ற ஆஸ்கார் நாயகனாக வந்த நினைவைப் பகிர்ந்து கொண்ட வைரமுத்து, “சின்னச் சின்ன ஆசை” என்ற ரோஜா பாடலைக் கேட்டு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த ஒரு தமிழர் கடிதம் எழுதிய போது தன்னோடு இருக்கும் மற்ற மொழிக்கார சகாக்கள் இந்தப் பாடலின் ஹிந்தி வடிவத்தை விடத் தமிழைத்தான் விரும்பிக் கேட்கிறார்கள் என்று சொல்லி நெகிழ வைத்தார். ஸ்வேதா அந்தப் பாடலைப் பாடிய போது அச்சொட்டாக மின்மினியின் குரல் தான். இந்த ஸ்வேதா இன்னும் ஆறுமாதங்களில் திருமண பந்தத்தில் இணைகிறார் என்றவாறே வைரமுத்து “மணமகளே மருமகளே வா வா” என்று குறும்பாகப் பாடிய போது ஸ்வேதா முகத்தில் அவர் அம்மா அடிக்கடி காட்டும் வெட்கம். பத்து வருசங்களுக்கு முன் அம்மாவோடு சிட்னி வந்திருக்கேன் ஆனா அப்போது நான் மீண்டும் இங்கே ஒரு பாடகியாக வருவேன்னு நினைச்சுப் பார்க்கலை என்று ஸ்வேதா நெகிழ்ந்தார். அது மட்டுமே அவர் பேசிய முதலும் கடைசியுமான வார்த்தைகள்.

“வேற்றுமொழிப்பாடகர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடலாமா” என்று என்னிடம் கேட்ட போது, தமிழைச் சிதைக்காதவரை யாரும் அதைச் செய்யலாம். செளராஷ்டிரர் செளந்தரராஜன், கன்னடர் ஶ்ரீனிவாஸ் தொட்டு பல உதாரணங்களைச் சொன்ன வைரமுத்து தமிழ்ப்பாடல்களைப் பாடிய பெரும்பான்மை வேற்றுமொழிப்பாடகர்கள் தான் அதைச் சிதையாமல் பாடியிருக்கின்றார்கள் என்றவாறே பாடகர் உதித் நாராயணன் ஈஸ்வரா என்ற பாடலில் “பிரியமான பெண்ணை ரசிக்கலாம்” என்பதை “பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்” என்று மாற்றிப் பாடிய அந்த நிகழ்வைச் சொன்ன போது அரங்கம் சிரிப்பு மழையில் அதிர்ந்தது. எட்டு நிமிடங்கள் மட்டுமே எழுத நேரம் பிடித்தது என்று பாட்ஷா பாடலான “ரா ரா ராமையா” பாடலைச் சொல்லிவிட்டு, இரண்டு நாள் இடைவெளியில் காதல் ஓவியம் படத்தில் பாடலான “சங்கீதஜாதி முல்லை” பாடலை இரவோடிரவாக இளையராஜா விட்டுக் கதவைத் தட்டி, லுங்கி கட்டிய ராஜா ஆர்மோனியம் வாசிக்க மெட்டமைத்துக் கண்ணீர் விட்டுப் பின் விநியோகஸ்கர்கள் படத்தின் தோல்வியால் கண்ணீர் விட்ட கதையைச் சொன்னார். அந்தப் பாடலை மனோ பிரதிக் குரலெடுத்துப் பாடினார்.

ராக்கமா கையத் தட்டு பாடல் போல ரஹ்மான் தன் பங்குக்குத் தந்த திருடா திருடா பட “வீரபாண்டிக் கோட்டையிலே” பாடலின் மூல வடிவில் மனோ, உன்னிமேனன், சித்ரா ஆகியோர் பாடியிருப்பார்கள். அதே பாடலை மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா பாடியது சிறப்பாக இருந்தது. பாடி முடிந்ததும் முதல் தடவையா முயற்சி பண்ணியிருந்தேன் என்று மூச்சு வாங்கியவாறே சிரித்தார்.

“வைரமுத்துவின் ரசிகை” என்ற நகைச்சுவை நாடகத்தை விவேக் தன் பரிவாரங்களான செல் முருகன், சுஹாசினி ஆகியோருடன் நான்கு பாடல்களுக்கு இடையில் என்று பாகங்களாகக் கொடுத்திருந்தார். வைரமுத்து போல நடித்து காதலிக்கும் ஆண்மகனாக விவேக். முடிவில் வைரமுத்துவே தோன்றி “ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம்” ஆனால் காதலுக்கு ஒரு பொய்யும் சொல்லக்கூடாது என்று முத்தாய்ப்பாய் முடித்தார். அளவான நகைச்சுவை என்பதால் ரசிக்க முடிந்தது.

செம்மொழி மாநாட்டில் பேச வந்த கலிபோர்னிய நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட், கி.பி இரண்டாம் நூற்றாண்டில் புழங்கிய சொற்களையும் இன்றும் காத்துப் பேசிவரும் மொழி தமிழ்மொழி என்று சிலாகித்ததைச் சொல்லி மகிழ்ந்த வைரமுத்து பாரிமன்னனின் மகளிர் பாடும் சங்கத்துப் பாடலை ஆதாரமாகக் கொண்டு எழுதிய “நறுமுகையே நறுமுகையே” பாடலைச் சொல்ல, உன்னிகிருஷ்ணனோடு ஸ்வேதா பாடினார்.

கொச்சி தாஜ் ஹோட்டலில் முத்து பாடல்பதிவு இடம்பெற்ற சமயம் நெப்போலியின் கடைசி ஆசையினை ரஜினிக்குச் சொன்ன போது கேட்டு வியந்த அவர் ஏதாவது ஒரு பாடலில் புகுத்தவேண்டும் என்று ஆசை கொண்ட போது எழுதியது தான் “மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை” என்ற “ஒருவன் ஒருவன் முதலாளி” பாடல் என்றார். முத்து படத்தில் இருந்து இன்னொரு முத்தாக மனோ, சுஜாதா பாடிய “தில்லானா தில்லானா” பாடலை ரஜினி போல ஆடிக்கொண்டே மனோ பாட , மீண்டும் சுஜாதாவின் முகம் வெட்கத்தால் நிரம்பியது.

திருவனந்தபுரத்தில் இருந்து ஒரு இசைக்குழு ஒன்று பக்கவாத்தியமாக வந்தாலும் பெரும்பாலான பாடல்களுக்குப் கரோக்கி இசை தான் என்பதை உன்னிப்பாகப்பார்த்தாலே தெரியும். ஆனால் சேட்டன்கள் நீண்ட நேரமாக “நல்லவங்க மாதிரியே வாசிச்சு நடிச்சாங்க” . ஏதோ ஒரு பாடலில் புல்லாங்குழல் ஸ்கோர் செய்யும் நேரம் முடிந்தும் புல்லாங்குழலை வச்சு பாவ்லா பண்ணி வாசிச்சுக் கொண்டிருந்தார் சேட்டன்.

“புத்தம் புது பூமி வேண்டும்” பாடலை மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா ஆகியோர் பாட நிறைவாகியது நிகழ்ச்சி. இதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள் தமிழர்களை மட்டும் இல்லாது பொத்தம் பொதுவாக விளம்பரப்படுத்துவதால், ஓவ்வொரு பாடலுக்கும் இடையில் “தமிழ் பாட்டு பாடுக”, “கன்னட சாங் பிளீஸ்”, “மலையாளம் ஒன்னு”, “தெலுகு நம்பர் பிளீஸ்” என்றெல்லாம் கூக்குரல் வரும் ஆனால் இந்த நிகழ்ச்சியில் அந்தப் பிரச்சனை இல்லை. இருந்தாலும் நிகழ்ச்சி ஓய்ந்து விட்டது என்றதும் மேல்மாடியில் இருந்த சேட்டன்ஸ் & சேச்சிஸ் மலையாளம் மலையாளம் என்று கத்த சுஜாதா, ஸ்வேதா கடலினக்கரை போனோரே பாடலில் இருந்து சமீபத்தைய வரவு கோலக்குயில் கேட்டோ பாடல்களைத் துண்டு துண்டாகப் பாடி நிறைத்தார்கள். குறிப்பாக ஸ்வேதாவுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்த நைவேத்யம் திரைப்படப்பாடல் “கோலக்குயில் கேட்டோ ராதே என் ராதே” பாடலை அவர் அம்மா சுஜாதா பாடியது வல்லிய சுகமானு.

வைரமுத்து என்ற சகாப்தம் தமிழ்த்திரையிசையின் முக்கியமான சகாப்தங்களான இளையராஜா, ரஹ்மான் போன்ற ஆளுமைகளோடு இணைந்த காலங்கள் தனித்துவமானவை. அதை ஒரே நிகழ்ச்சியில் கொடுப்பதென்பது மகா கஷ்டம். இருந்த போதும் முன் சொன்னது போல இந்தப் பாடல்களுக்குப் பின்னால் அணி செய்த ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா போன்றோரோடு இணைந்து இந்த நிகழ்ச்சியைப் படைத்தால் அந்த நிகழ்ச்சியின் வடிவமே இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கும் . கூடவே இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் வைரமுத்து அவர்கள் ஒவ்வொரு பாடல்களுக்கும் கொடுத்த விளக்கம் என்பது விலாவாரியாக சுவையாக இருந்து ஒருகட்டத்தில் சுருங்கி பின் நேரப்பற்றாக்குறையால் விளக்கங்களே இல்லாத வெறும் பாடல்களாக இருந்தது பெரும் குறை. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் படைத்த பாடல்கள் பிறந்த கதைகளைக் கேட்டாலும் மீண்டும் சலிப்புத் தட்டாவிட்டாலும் இதை விட இன்னும் பல அனுபவங்களை வேறு பாடல்களோடு கேட்க வேண்டும் என்ற ஆசையும் வருகின்றது. இதை விட முக்கியமாக, ராஜாவோடு முரண்பட்டு இருந்த காலத்தில் தன் இருண்ட காலத்தில் வெளிச்சமாய் மாற்றிக்காட்டிய முக்கியமான பாடல்களை வைரமுத்து அந்தக் காலகட்டத்து இசையமைப்பாளர்கள் சந்திரபோஸ் மற்றும் சங்கர் கணேஷ் போன்றோருடன் பணியாற்றிய போது ஏற்பட்ட பாடல் பிரசவ அனுபவங்கள் மேடைகளில் பதியப்படாதவை. அவை அரங்கேற வேண்டும் என்ற தீரா ஆசை இருந்தாலும் அந்தப் பாடல்களை ரசித்துக் கேட்கும் கூட்டம் எவ்வளவு தூரம் இந்த டிஜிட்டல் யுகத்தில் இருக்கும் என்பதும் கேள்விக்குறி.
இவையெல்லாம் கடந்து “வைரத்தில் முத்துக்கள்” நம் மனதில் இடம்பிடித்த சுகானுபவம்.