வினுச்சக்ரவர்த்தி

தமிழ் சினிமாவின் முகங்களில் ஒன்றை இழந்து
விட்டோம் என்று நடிகை காந்திமதி இறந்த போது குறிப்பிட்டேன். அதையே நடிகர்
வினுச்சக்ரவர்த்தி இழப்பிலும் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு நமது
கிராமியச் சூழலில் வாழ்ந்து பழகியவர் போன்ற முக வெட்டும் குணாதிசியமும்
கொண்டவர். பட்டைத் திருநீறும், குங்குமமும் முகத்தில் மிளிர, வேட்டி
சட்டையும் கொண்ட அவரின் உருவ அமைப்பு மேலும் அதைப் பலமாக்கும்.
“டேய் சின்னவனே” “ஆங்” , “களுத” இப்படியான சின்னச் சின்ன வசன வெளிப்பாட்டிலும் தன் முத்திரைச் சிரிப்பிலும் கெத்தாகத் தனக்கான ஆளுமையை உருவாக்கியவர்.

வினுச்சக்ரவர்த்தி என்றால் “ரோஜாப்பூ ரவிக்கைக்காரி” பட சர்ச்சையும் வந்து விடும்.
இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று அவர் உரிமை கோர இன்னொரு பக்கம்
நடிகர் விஜய் கிருஷ்ணராஜ் தானே உரிமையாளர் எனவும் பேட்டிகள் வந்ததுண்டு.
இருவருக்குமே ரோஜாப்பூ ரவிக்கைக்காரி தான் முதல் படம். படத்தின்
எழுத்தோட்டத்தில் மூலக்கதை ஆவனஹள்ளி ஶ்ரீகிருஷ்ணா எனவும், திரைக்கதை, வசனம்
கிருஷ்ணா (விஜய்கிருஷ்ணராஜ்) என்றே வந்திருக்கும். நடிகர் குழுவில்
அறிமுகத்தில் வினு என்ற வினுச்சக்ரவர்த்தி காணப்படுகிறார்.
இந்தக்
கதையின் நதிமூலத்தைத் தேடினால் ஒரு சுவாரஸ்யமான கதை கிடைக்கிறது. நடிகர்
சிவகுமாரின் நூறாவது படமாக முதலில் வினுச்சக்ரவர்த்தி கதை எழுதிய
வண்டிச்சக்கரம் படமே அமைய இருந்ததாம். இந்தப் படத்துக்காக மைசூருக்குப்
படப்பிடிப்பு வேலைகளுக்குப் போன போது “பரசங்கத கெண்டே திம்மா” என்ற
கன்னடப்படத்தைப் பார்த்து தமிழுக்கு ஏற்றாற் போல ரோசாப்பூ ரவிக்கைக்காரி
ஆக்கினார்களாம்.
தகவல் உதவி http://andhimazhai.com/news/view/sivakumar-29-04-2015.html
கன்னடப்பட இயக்குநர் புட்டன்ன கனகல் இன் உதவியாளராக இருந்தவர் வினுச்சக்ரவர்த்தி.
வண்டிச்சக்கரம் மூலம் கதாசிரியராகவும், சில்க் ஸ்மிதாவையும் அறிமுகப்படுத்தியவராகவும் இருந்தார்.
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தாலும் வினுச்சக்ரவர்த்தியின் உண்மையான
நடிப்புப் பரிமாணத்துக்குத் தீனி கொடுத்தவை ஒரு சிலவே. ஆரம்ப காலத்தில்
அவர் நடித்த “கோபுரங்கள் சாய்வதில்லை” அப்பன் பாத்திரம் இன்றும் மறக்க
முடியாது. பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களிலேயே அமுக்கப்பட்டார்.
ஜனரஞ்சகப் படைப்புகளில் அண்ணாமலை படத்தில் நல்ல குணம் கொண்ட எம்.எல்.ஏ ஆக
வந்து ரசிகர் மனதில் இடம் பிடித்தார்.
சின்னத்தாயி படத்திலும் ஒரு சிறப்பு வேடம் கிட்டியது இவருக்கு https://youtu.be/U–iPe2s6vI
தான் இயக்குநர் ஆக வேண்டிய கனவில் இருப்பதாகச் சொன்னவர் அந்த வாய்ப்பே இல்லாமல் போய்ச் சேர்ந்து விட்டார்.

என்.கே.விஸ்வநாதன் இழப்பில் சில நினைவுகள் ?

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர்

தன்னுடைய பெரியப்பா என்.கே.விஸ்வநாதன் காலமானதாக நண்பர் Ars Senthilarasu பகிர்ந்திருந்த அஞ்சலி இடுகையைக் காலை காண நேரிட்டது.

என்.கே.விஸ்வநாதன் நான்கு தசாப்தங்கள் திரையுலகில் ஒளிப்பதிவாளராக, இயக்குநராக அறியப்பட்டவர்.
எண்பதுகளின் திரைப்பிரியர்களுக்கு குறிப்பாக இராம.நாராயணன் படங்கள்
பலவற்றின் வழியாக இவரை அறிந்திருப்பார். இராம நாராயணன் படங்களில் தந்திரக்
காட்சிகள், இரட்டை வேடக் காட்சிகளை எல்லாம் இன்றைய தொழில் நுட்ப உள்வாங்கல்
இல்லாத காலத்தில் இருந்தே தன்னுடைய ஒளிப்பதிவு வித்தையால் காட்சி வடிவம்
எடுப்பவர் என்ற பெருமையைத் தன்னகத்தே கொண்டவர்.

இவர் இயக்குநராக
ஒரே ஆண்டில் இரு படங்களினூடாக அறிமுகமானர். ஆபாவாணனின் பிரமாண்டப் படைப்பான
“இணைந்த கைகள்” படம் அதிலொன்று. இந்தப் பட அனுபவம் குறித்து நான்
ஆபாவாணனோடு எடுத்த வானொலிப் பேட்டியில்
http://www.radiospathy.com/2012/06/blog-post.html
அதே 1990 ஆம் ஆண்டில் இன்னொரு மாறுபட்ட படம் “பெரிய வீட்டுப் பண்ணக்காரன்” ஐ இயக்கினார். இது சங்கிலி முருகன் தயாரிப்பு.
சங்கிலி முருகன் படங்களில் பாண்டி நாட்டுத் தங்கம், எங்க ஊரு காவக்காரன்
போன்றவை T.P.கஜேந்திரன் இயக்கியவை. கங்கை அமரன் இயக்கம் ஏனோ அந்தப்
படங்களில் இல்லை. கங்கை அமரன் இயக்கிய படங்களாகவே இன்று பலர் அவற்றைக்
கருதுகிறார்கள். இவற்றோடு சங்கிலி முருகன் தயாரித்து என்.கே.விஸ்வநாதன்
இயக்கிய பெரிய வீட்டுப் பண்ணக்காரன், நாடோடிப் பாட்டுக்காரன் போன்றவையும்
அடங்கும். இவற்றுக்கு இளையராஜா இசை, சங்கிலி முருகன் தயாரிப்பு என்பதால்
கங்கை அமரன் இயக்கம் என்ற எடுகோள் தோன்றியிருக்கும்.

கதை,இன்ன பிற
அம்சங்கள் ஏற்பாடு செய்யாமலேயே நடிகர் விஜய்காந்துக்கு ஒரு கோடி சம்பளம்
கொடுத்து சங்கிலி முருகன் ஒப்பந்தம் செய்த படம் “பெரிய மருது”. அந்த 1994
ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபா என்பது இன்றைக்குப் பல கோடி பெறும். அப்போது அது
பரபரப்பான செய்தி.
அந்தப் படத்தின் இயக்கமும் என்.கே.விஸ்வநாதன் தான்.
சங்கிலி முருகன் தயாரித்த முதல் படம் “கரிமேடு கருவாயன்” பட நாயகன்
விஜய்காந்த் அப்போது பணம் வாங்காமல் நடித்ததற்காக நன்றிக் கடனாக இருக்கக்
கூடும்.

என்.கே.விஸ்வநாதன் எண்பதுகள், தொண்ணூறுகளில் ஏராளம்
படங்களுக்கு ஒளிப்பதிவாளர், இன்னும் பல படங்களுக்கு இயக்குநராக
இருந்துள்ளார். அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

"எரிகனல் காற்றில்" மெல்லிசை மாமன்னர் நினைவில்

மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது உற்ற தோழமை கவியரசர் கண்ணதாசன் சந்நிதி தேடி இன்று போய் விட்டார்.

இன்று எம்.எஸ்.விஸ்வநாதன்  அவர்கள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்வுகள் வருவது வெறுமனே கண் துடைப்பல்ல அந்த மாபெரும் கலைஞனுக்கான மானசீக அஞ்சலி என்பதை அதே உணர்வோடு பார்ப்பவர்கள் உய்த்துணர்வார்கள்.

மெல்லிசை மாமன்னர் குறித்த வரலாற்றுப் பகிர்வையோ அல்லது அவரின் பாடல்கள் குறித்த ஆழ அகலத்தையோ பேச இன்றொரு நாள் போதாது. அவர் தந்தது இசைப் பாற்கடல் அல்லவோ?

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்த இறப்புச் சேதி கேட்ட போது என் மனத்தில் இருந்த இசைத்தட்டு இந்த “எரிகனல் காற்றில் உள்ளம் கொள்ளும் போலே” பாடலைத் தான் மீட்டியது.
இசைஞானி இளையராஜா இசையில் “ஒரு யாத்ரா மொழி” படத்துக்காக மலையாளத்தின் மறைந்த பாடலாசிரியர் கிரிஷ் புத்தன்சேரி வரிகளில் ஒலித்த பாடல் இது.
 https://soundcloud.com/raja4ever/yerikanalkaattil
இதே பாடலை இளையராஜா பாடும் இன்னொரு வடிவமும் உண்டு.  அந்த வகையில் ஒரே பாடலை இரு வேறுபட்ட இசையமைப்பாளர் பாடிய புதுமையும் இந்தப் பாடலில் நிகழ்ந்திருக்கிறது.

தமிழ்த் திரையிசையில் அசரீரிப் பாடல்கள் என்று சொல்லக் கூடிய, கதையோட்டத்தின் பின்னணியில் ஒலிக்கும் பாடலாகவோ அல்லது கதை மாந்தரின் அவலத்தைப் பிரதிபலிக்கும் குரலாகவோ கொணர்ந்தளிக்கும் சிறப்பு எம்.எஸ்.விஸ்வநாதன் குரலுக்கு உண்டு.

“எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே” என்று சிவகாமியின் செல்வன் படத்தில் தன்னுடைய இசையிலாகட்டும், “உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா” என்று வெள்ளி விழா படத்தில் வி.குமாரின் இசையிலாகட்டும் “விடை கொடு எங்கள் நாடே” என்று கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலாகட்டும் மெல்லிசை மன்னரின் குரல் தன்னிசையில் மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களின் இசையிலும் தனித்துவமாக மிளிர்ந்திருக்கிறது இம்மாதிரியான அசரீரி என்று நான் முன்மொழிந்த பாடல்களில். இங்கே நான் கொடுத்தது சில உதாரணங்கள் தான்.
இந்தப் பாடல்களின் எம்.எஸ்.வி அவர்களின் குரலைத் தாண்டிய உணர்வு ரீதியான பந்தம் தான் நெருக்கமாக இருக்கும். அந்தந்தப் பாடல்களை அவர் கொடுத்த விதத்தை மீளவும் மனத்திரையில் அசை போட்டு உணர முடியும் இதை.

பிற இசைமைப்பாளர் இசையில் நிறையப் பாடிய இசையமைப்பாளர் என்று புகழ் வாய்த்த எம்.எஸ்.வியின் குரல் இளையராஜாவின் இந்த “எரிகனல் காற்றில்” பாடலாக வெளிப்படும் போது இன்றைய அவரின் இன்மையைப் பிரதிபலிக்கும் அசரீரிப் பாடலாகவே என் மனம் உள்ளார்த்தம் கொள்கிறது.

மெல்லிசை மாமன்னருக்கு என் இதய அஞ்சலிகள்
அந்தப் பாடலைக் கேட்க

புகைப்படம் நன்றி : மாலைமலர் 

சிங்கப்பூர் ஒலி படைப்பாளினி பாமா நினைவில்

இணையம் தந்த புண்ணியத்தில் உலக வானொலிகளைக் கேட்க ஆரம்பித்த போது தொடர்ந்து பதினைந்து வருடங்களாக நேசத்தோடு நான்  நேயராக இணைந்திருக்கும் வானொலி சிங்கப்பூர் ஒலி.

இத்தனை ஆண்டுகளில் பல்வேறுபட்ட குரல்களை சிங்கப்பூர் ஒலி அலை வழியாகக் கேட்டிருந்தாலும் ஒரு சில குரல்களை இத்தனை ஆண்டுகளாகக் கேட்டு ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்ததிருக்கிறது. அதில் முதன்மையாமையானவர் நிகழ்ச்சிப் படைப்பாளர் பாமா பாலகிருஷ்ணன் அவர்கள்.
வானொலியில் தான் படைக்கும் நிகழ்ச்சிகளில் பொருந்தமான கோர்வையில் பாடல்களைக் கொடுக்கும் போதும், விளம்பரக் குரல்களின் போதும், நேயர்களுடனான கலந்துரையாடலின் போதும் தனித்துவமாக மிளிர்ந்தவர் இவர்.
நேயர் கலந்துரையாடலின் போது மென்மையாகவும், கருத்தைச் சிதறவிடாம அணைத்துக் கொண்டு போவதில் சமர்த்தர். நேயர்களின் கருத்தை உள்வாங்கிய பின் அதிகாரத்தனம் இல்லாது தன் கருத்தை இசைவாகக் கொடுப்பார். இதனால் மாறுபட்ட கருத்தோடு வருபவர் கூட இவரின் கருத்தை உள்வாங்கும் பக்குவத்தை ஏற்படுத்துவார்.
சிங்கப்பூர் ஒலி நாடகங்கள் பலவற்றில் பாமா குறித்த பாத்திரமாகவே மாறி நடித்திருந்ததை எல்லாம் ரசித்திருக்கிறேன். ஒருமுறை வசந்தம் தொலைக்காட்சியின் சிறப்பு நாடகத்திலும் இவரைப் பார்த்ததாக ஞாபகம்.
கடந்த தீபாவளி ஒலி சிறப்பு நாடகத்தில் “வழக்கமா பண்றதை விட நான் பயங்கரமான வேஷம் ஒண்ணு போடப் போறேன்” என்று முன்னோட்டம் சொன்ன போது மனதுக்குள் சிரித்தேன்.
சிங்கப்பூர் வானொலியின் போக்குவரத்துத் தகவலில் பாமாவின் குரல் அடிக்கடி ஒலிக்கும் போது அம்மாவின் கனிவான ஆலோசனை போன்றிருக்கும்.
சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூரின் புகழ் பூத்த மருத்துவர் ஒருவரின் இறப்பு அஞ்சலி செய்யும் போது அந்த மருத்துவர் பாமா தான் நிகழ்ச்சின் செய்பவர் என்று அறியாது அவரின் நிகழ்ச்சியைச் சிலாகித்துப் பேசியதை நெகிழ்வோடு சொன்னார்.
ஒலிப்படைப்பாளர்களுடன் சம்பாஷிக்கும் போது ஐய்யய்யோ என்று வெட்கப்பட்டு ஒலிக்கும் பாமாவின் குரலில் அப்பட்டமான குழந்தைத்தனம் ஒட்டியிருக்கும்.
சிங்கப்பூர் ஒலி படைப்பாளி, நேசத்துக்குரிய பாமா அவர்களின் இறப்புச் செய்தியை அறிந்து அதிர்ச்சியடைகிறேன்.
நேயர்களுடன் பண்பாகவும், மென்மையாகவும் பழகிய பாமா அவர்களின் குரல் மனதை விட்டு நீங்காது நிறைந்திருக்கிறது எனது ஆழ்ந்த அஞ்சலிகளை நேயர்களில் ஒருவனாகப் பகிர்கிறேன்.

இயக்குநர் அமீர்ஜான் மறைவில்

எண்பதுகளில் வெற்றிகரமாக இயங்கிய இயக்குநர்களில் பத்திரிகை ஊடகங்களின் கமரா கண்ணில் அகப்படாதவர்களில் ஆபாவாணன், கே.ரங்கராஜ் வரிசையில் மூன்றாவதாக அமீர்ஜானையும் சேர்க்கலாம்.
அமீர்ஜானின் குருநாதர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இறந்தபோது தொலைக்காட்சிகளின் அஞ்சலிப் பகிர்வுகளில் கூட அவரின் பகிர்வு இடம்பெறவில்லை. 
அதிக ஆர்ப்பாட்டமில்லாது பல வெற்றிப்படங்களை அளித்த படைப்பாளி என்ற வகையில் அமீர்ஜான் முக்கியத்துவம் பெறுகிறார். கே.பாலசந்தர் கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த போது முழு நீள மசாலாப் படத்தை எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடமே முதல் தயாரிப்பாக “நெற்றிக்கண்” படத்தை ரஜினியை நாயகனாக வைத்து இயக்கும் பொறுப்பை அளித்தார். தொடர்ந்து கமலை வைத்து “எனக்குள் ஒருவன்” படத்தைத் தயாரித்த போது அதற்கும் எஸ்.பி.முத்துராமன் தான் இயக்குநர்.
எஸ்.பி.முத்துராமன் தவிர கவிதாலயா தயாரிப்பில் ஏராளமான படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெறுபவர் அமீர்ஜான். பூவிலங்கு படத்தில் ஆரம்பித்த இயக்கம், கவிதாலயா நிறுவனம் இளையராஜாவோடு இணைந்த இறுதிப் படமான “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை” படம் கூட அமீர்ஜான் இயக்கத்திலேயே வெளிவந்த பெருமை உண்டு.
கே.பாலசந்தர் முழு நீள மசாலாப்படம் இயக்குவதில்லை என்ற கொள்கைக்கு மாற்றீடாக அமீர்ஜானைப் பயன்படுத்தினாரோ என்று எண்ணுவேன். 
கே.பாலசந்தர் போன்றே அமீர்ஜானும் இசையமைப்பாளர் நரசிம்மனுக்குச் சிறப்பான வாய்ப்புகள் கொடுத்தவர். “புதியவன்” படத்தின் அனைத்துப் பாடல்களுமே வி.எஸ்.நரசிம்மனின் சாகித்தியத்தில் உச்சமாக அமைந்தவை. வண்ணக் கனவுகள் படத்துக்கும் அவரே இசை.
“அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது”என்று  நட்பு படத்திலும், தர்மபத்தினி படத்துக்காக ” நான் தேடும் செவ்வந்திப் பூ இது”, “போட்டேனே பூவிலங்கு” பாடலோடு பூவிலங்கு படத்திலும், “சொர்க்கத்தின் வாசல்படி” என்று உன்னைச் சொல்லிக் குற்றமில்லை படத்துக்காகவும் இணைந்த இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் அமீர்ஜான் கூட்டணியில் 
“இரு வழியின் வழியே நீயா வந்து போனது” பாடல் உச்ச விளைச்சல். அந்தப் பாடலோடு படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியதோடு அமீர்ஜானுக்கு முத்திரைப் படமாக அமைந்தது அவரின் இயக்கத்தில் கவிதாலயா தயாரிப்பில் வந்த “சிவா”. இந்தப் படம் டைகர் சிவா என்ற தலைப்பில் வெளிவரவும் பரிசீலனையில் இருந்தது.
தனது எழுபதாவது வயதில் அமீர்ஜான் இன்று காலமாகிவிட்டார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
அமீர்ஜானின் கலையுலக வாழ்வு குறித்த முழுமையான பகிர்வு இங்கே கிடைக்கிறது
http://www.tamilcinetalk.com/film-director-ameerjohn-was-dead/

மீசை முருகேஷ் என்ற குணச்சித்திரம்

நீண்ட நாட்களாக மீசை முருகேசைக் காணவில்லை இறந்திருப்பாரோ என்று நினைத்திருந்த வேளை மூன்று மாதங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சகோதர ஒளிபரப்பான புதுயுகம் தொலைக்காட்சியின் விசேட பேட்டி ஒன்றில் கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.
ஆஜானுபாகுவான உருவமும், எங்களூர் கந்தசுவாமி கோயிலின் கடா வாகனத்தின் கொம்பு போன்ற வளைந்து நீண்ட முறுக்கு மீசை தான் மீசை முருகேஷ் இன் அடையாளம். படங்களில் இவர் தோன்றி நடிக்கும் காட்சிகளில் சிரிக்கும் போது உடம்புதான் இன்னும் வேகமாக ஆடும். 
கண்கள் குவித்து இவர் சிரிக்கும் அழகைப் பார்க்கும் போது சொந்தக்காரத் தாத்தாவாகச் சொந்தம் கொண்டாடுவார்.
“உயிரே உனக்காக” படம் தான் இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது. 
இடையில் நிறையப் படங்கள் குறிப்பாக எண்பதுகளின் தமிழ் சினிமாவில் மீசை முருகேஷ் தவிர்க்கமுடியாத குணச்சித்திரம்.
ஆண்பாவம் படத்தில் சீதாவின் தந்தையாக வந்து இன்னும் அழுத்தமாக மனதில் பதிந்தார். http://youtu.be/PKYE8GryHfo
“பூவே உனக்காக” படத்தில் விஜய், சார்லி வீடு தேடி வரும்போது “பாட்டும் நானே பாவமும் நானே” பாடி வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர். அந்தக் காட்சியின் ஆரம்பம் வைதேகி காத்திருந்தாள் படத்தில் இரவானதும் வெள்ளைச்சாமி விஜய்காந்த் பாட ஆரம்பித்ததும் ஊரே அமைதியாகக் கேட்கும் காட்சிக்கு நேரெதிராக அமைக்கப்பட்டிருக்கும்.
மீசை முருகேஷ் அவர்கள் தேர்ந்த வாத்தியக்காரர். அவருக்கு எண்ணற்ற வாத்தியக்கருவிகளை வாசிக்கும் ஆளுமை உண்டு. சொல்லப்போனால் ஜலதரங்கம் என்ற வாசிப்பை நான் முதன்முதலில் பார்த்ததே இவர் எண்பதுகளில் பங்கேற்ற ஏதோவொரு மேடை நிகழ்ச்சியின் வீடியோ வழியாகத்தான்.
கே.பாலசந்தருக்கு இம்மாதிரி ஆளுமைகளைக் கண்டால் குஷி பிறந்து தன்னுடைய படங்களில் ஏதாவதொன்றில் ஒரு கதாபாத்திரம் ஆக்கிவிடுவார். அது போலவே. உன்னால் முடியும் தம்பி படத்திலும் மீசை முருகேஷ் அவர்களின் தந்தை கொண்டிருந்த தொழிலான தவில் வாத்தியக்காரராக வந்து சிறப்பித்திருப்பார்.
புதுயுகம் தொலைக்காட்சிப் பேட்டிக்கு வந்திருந்தார். காலமாற்றத்தில் உடம்பு இலேசாக உருக்குலைந்திருந்தாலும் ஆள் மாறவில்லை.
ஐரோப்பாவில் தன்னுடைய இசைக்கச்சேரியை முடித்துவிட்டுத் திரும்பும் போது திடீர் ஏற்பாடாகத் தென்னாபிரிக்காவில் கச்சேரி செய்ய இவரை வற்புறுத்தி அழைத்துப் போனார்களாம். தென்னாபிரிக்காவில் இறங்கி விமான நிலையத்தில் இருந்து காரில் போகும் போது விபத்துக்குள்ளாகிப் பலத்த காயங்கள் ஏற்பட்டு வருடக்கணக்கில் முடங்கிப் போனாராம். 
அந்தப் பேட்டியின் ஆரம்பத்தில் அவர் தொலைந்த ரகசியத்தைச் சொல்லிவிட்டு கலகலப்பாகப் பேட்டியைத் தொடர்ந்தார்.
மீசை முருகேஷ் அவர்கள் 85 வயதைத் தொட்டாலும் அவரின் இருப்பு மனதில் சந்தோஷத்தை வருவித்தது அப்போது.
கடந்த சனிக்கிழமை மீசை முருகேஷ் காலமாகிவிட்டார் என்ற செய்தியைக் கேட்டபோது முன் கொண்ட சந்தோஷத்தைக் குழப்பியது செய்தது அவரின் பிரிவு தந்த துயர். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
மீசை முருகேஷ் குறித்து @tkadaibench தயாரித்த சிறு காணொளி  

புதுயுகம் தொலைக்காட்சியில் மீசை முருகேஷ் இன் பேட்டி

ஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமார் நினைவில்

ஒரு இயக்குநரின் தோளின் இருபுறமும் பயணிக்க வேண்டியவர்களில் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானது. கட்புலனை கைவரப்பெறாதோர் எவ்வளவு தூரம் காட்சியோட்டத்தில் இழைந்திருக்கும் வசனத்தையும் அத்தோடு நயமாகப் பொருந்தியிருக்கும் இசையமைப்பையும் உள்வாங்கி அந்தக் கலைப்படைப்பைக் கச்சிதமாக உணர முடியும் வல்லமை கிட்டும் பாங்கிலேயே ஒலியைக் கேட்டு நுகரமுடியாதோருக்கு ஒரு ஒளிப்பதிவாளரின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்படுகின்றது.

இவற்றுக்கும் மேலாக ஒரு இயக்குநரின் மனக்கண்ணில் ஓடுவதை உள்ளது உள்ளவாறோ அல்லது அதற்கும் மேலாகவோ கச்சிதமாகத் தன் கேமராக் கண்ணுக்குள் அடக்கும் ஒளிப்பதிவாளரே இயக்குநரின் ஜீவனாக நின்று தொழிற்படுகின்றார்.
“அழகிய கண்ணே உறவுகள் நீயே” பாடல் ஒன்றே போதும் உதிரிப்பூக்கள் படத்தில் பொதிந்திருக்கும் வலியை இயக்குநரின் சார்பில் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் பங்கு போட்டுக்கொண்டு செய்த கைங்கர்யத்தை. http://www.youtube.com/watch?v=VhZrCanB9L0 
அந்தப் பாடலில் அந்தப் பாடலில் விளையாடும் குழந்தை, சோப்பு போட்ட எரிச்சலோடு துள்ளிக் கொண்டே குளிக்கும் அண்ணன்காரன், துன்பச்சுமையை அப்படியே தன் முகம் வழியே வாக்குமூலம் பகிரும் இவர்களின் தாய் என்று அந்தப் பாடலின் காட்சியோட்டத்தின் சில துளிகளே ஒரு நாவலின் பல்வேறு பக்கங்களைத் திரட்டித் தந்தது போல.
35 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இந்த “உதிரிப்பூக்கள்” படத்தின் வாயிலாகத் தம் நேர்மையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர் மகேந்திரன், இசையமைப்பாளர் இளையராஜா இவர்களோடு சில நாட்களுக்கு முன்னர் மறைந்த ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.
இயக்குநர் மகேந்திரனைப் பொறுத்தவரையில் அசோக்குமார் கிடைத்திராவிட்டாலும் இன்னொரு ஒளிப்பதிவாளரைத் தன்னுடைய படைப்பாற்றலின் நிலைக்கண்ணாடியாகத் தான் வரித்திருப்பார். அவரின் முதற்படமான முள்ளும் மலரும் படமே இதற்குச் சாட்சி. முள்ளும் மலரும் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா படம் எடுக்கும் போதே சில பல தயாரிப்புச் சிக்கல்கள் மற்றும் இவரும் சொந்தமாகப் படம் இயக்கும் முனைப்போடு கிளம்பியது அடுத்த படமான உதிரிப்பூக்கள் படத்தில் அசோக்குமாருடன் மகேந்திரன் இணைய அச்சாரம் வைத்தது.
தொடர்ந்து பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு என்று தொடர்ந்தது மகேந்திரன் – அசோக்குமார் கூட்டணி. இதில் நெஞ்சத்தைக் கிள்ளாதே அசோக்குமாருக்குத் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம். நண்டு படம் இயக்குநர் மகேந்திரனை மீறித் தயாரிப்பாளர் கைமா பண்ணிச் சிதைத்திருந்தாலும் அந்தப் படத்தில் வரும் அள்ளித்தந்த பூமி, மஞ்சள் வெய்யில் பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் ஏமாற்றாமல் இன்னும் அந்தப் படத்தின் பேர் சொல்ல வைக்கும். அதே போல் ஜானி படத்தின் தொழில்நுட்பச் சிறப்பில் அசோக்குமாரும் பங்கெடுத்துக் கொண்டார். அசோக்குமாரின் ஒளிப்பதிவுத்திறனை மகேந்திரனே கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார். இளையராஜாவின் பாடல்கள் தரம் குன்றாது இந்தக் கூட்டணியால் மிளிர்ந்தன.
முதல் 3D திரைப்படமான மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தது இவருக்குக் கிட்டிய இன்னொரு மகுடம் எனலாம்.
பி.வாசு இயக்கிய படங்கள் பலவற்றில் ரவீந்திரன் முக்கிய ஒளிப்பதிவாளர். ஆனால் நடிகன், கட்டுமரக்காரன், மன்னன் போன்ற படங்களில் அசோக்குமாரும் பங்கு போட்டார். பவித்திரனின் சூரியன் படமும் ஷங்கரின் ஜீன்ஸ் படமும் அசோக்குமாரின் காமெராவின் பிரம்மாண்டத்தை உணர்த்தி நிற்கின்றன. குறிப்பாக சூரியன் படத்தை தியேட்டரில் அந்தக்காலத்தில் பார்த்தபோது கிட்டிய காட்சி அனுபவம் இன்னும் மனசுக்குள் ஒட்டியிருக்கு.
ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராவது திரையுலகம் காணும் நிகழ்வு. அசோக்குமார் இயக்குநராக “காமாக்னி” என்ற படத்தை ஹிந்தியில் இயக்கியபோது இசைத் தோள் கொடுத்தவர் இளையராஜா.
தொடர்ந்து  “அன்று பெய்த மழையில்” படத்தை இயக்கினார். அந்தப்படம் அப்போது பரபரப்பான சில்க் இன் கவர்ச்சி அலையால் வெகுவாகக் கவனிக்கப்பட்டது. அந்தப் படத்துக்கு இசை தாயன்பன். இவரின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனோ ஒரு சில படங்கள் தான் தாயன்பனுக்குக் கிட்டியது.
தெலுங்குத் திரை ரசிக உலகம்  மறக்காத காதல் படங்களில் அசோக்குமார் இயக்கிய “அபிநந்தனா” படம் முக்கியமானது. இது வழக்கமான அசோக்குமாரின் கவர்ச்சி, பாலியல் ஈர்ப்பு சார்ந்த படங்களில் இருந்து மாறுபட்ட அழகான காதல் கதை. கார்த்திக், ஷோபனா போன்றோர் நடித்த இந்தப் படம் தமிழில் “காதல் கீதம்” என்ற பெயரில் மொழி மாறியது. இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே அட்டகாச ரகம். இந்த மெட்டுகள் அன்பின் முகவரி, சிறைப்பறவை போன்ற படங்களின் பாடல்களாகவும் வந்திருக்கின்றன. காதல் கீதம் படத்தில் “மஞ்சள் அந்தி வேளையோ”, “வாழ்வா சாவா”, “பெண்மை கொண்ட மெளனம்” எல்லாம் அந்தக் காலத்து இளைஞரின் காதல் கீதங்கள்.
பின்னர் கங்கை அமரன் வசனம்,பாடல்கள் எழுதிய “தம்பிக்கு ஒரு பாட்டு” படம் இயக்குநராக அசோக்குமார் இளையராஜாவோடு சேர்ந்த முக்கிய படங்களில் ஒன்று என்பதற்கு இந்தக் கூட்டணியில் விளைந்த பாடல்கள் முக்கிய காரணம். “தை மாசம் கல்யாணம் அன்று காதல் ஊர்கோலம்” ஜெயச்சந்திரன், ஸ்வர்ணலதா பாடிய தெள்ளமுதல்லவா அது.
ஒளிப்பதிவாளராக, இயக்குநராக அசோக்குமார் நினைவுகூரப்படுவார் அவர் பணியாற்றிய முன் சொன்ன படங்களுக்காக.
பிற்சேர்க்கையாக ஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமாரின் ஒளியோவியத்தில் இருந்து
பருவமே புதிய பாடல் பாடு (நெஞ்சத்தைக் கிள்ளாதே)
அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா ( நண்டு)

காற்றில் எந்தன் கீதம் (ஜானி)
Manchu Kuruse Velalo  (அபிநந்தனா)

மாண்டலின் ஶ்ரீநிவாஸ் நினைவில்

போன ஜூன் மாசம் தான் சிட்னி இசை விழாவுக்கு வந்து சிறப்பித்து போனவர் இப்படித் தன் 45 வது வயதில் திடீரென்று நம்மைவிட்டு மறைவார் என்று யார்தான் நினைத்திருப்பார்கள். சிட்னி இசை விழாவுக்கு வந்து சிறப்பித்த கலைஞர்களை வானொலிப் பேட்டி காணும் சந்தர்ப்பம் வாய்த்த போது மாண்டலின் ஶ்ரீநிவாஸ் ஐ வானொலிப் பேட்டியெடுக்கவே பெரிதும் முனைந்தேன். ஆனால் அவரின் வருகை விழாவுக்கு முந்திய நாள் என்பதாலும் வேறு சில தனிப்பட்ட காரணங்களாலும் பேட்டி தவிர்க்கப்படவே, அடுத்தமுறை வருவார் தானே என்று காத்திருந்தேன்.

மிக இளவயதிலேயே சாதித்துக் காட்டியதாலோ என்னமோ சீக்கிரமே நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டார் என்ற பேரதிர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை.
மாண்டலின் ஶ்ரீநிவாஸ் என்ற ஆளுமை 90 களின் ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட போது அப்போது சினிமா இசையைத் தவிர வேறெதையும் தொடாத என்னைக் கேட்க வைத்தது அவரின் வாத்திய இசைத் தொகுப்பு ஒன்று. கொழும்பின் பம்பலப்பிட்டி கிறீன்லாண்ட்ஸ் ஹோட்டலில் தூசு படிந்த ஒலி நாடாவை வாங்கி வந்து போட்டுக் கேட்ட நினைவுகள் இன்னும் என் மனக்கிணற்றில் தேங்கியிருக்கின்றன.
இளையராஜாவோடு சேர்ந்து  இவர் பணியாற்றிய அந்தச் சிறப்பு அனுபவங்களையும் பேட்டி வழியாகத் தேக்கி வைக்க நினைத்திருந்தேன்.
மாண்டலின் இசையை நம் வானொலி நிகழ்ச்சிகளில் மன அமைதியைத் தரும் பகிர்வுகளுக்குப் பின்னணி இசையாய் ஒலிக்கவிட்டுக் கொடுப்போம். இனிமேல் அது ஒலிக்கும் போதெல்லாம் உங்கள் ஞாபகமே வெளிக்கிளம்பிச் சஞ்சலப்படுத்தும். 

இராம நாராயணன் ஒரு சினிமாத் தொழிற்சாலை

தமிழ் சினிமா இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம நாராயணன் காலமான செய்தி வந்திருக்கிறது.

இராம நாராயணனைப் பொதுவாகவே தேவர் பிலிம்ஸ் இன் நீட்சியாகவே பார்க்கும் அளவுக்கு அவர் கொடுத்த படங்களில், பரவலாக சினிமா ரசிகனுடைய கவனத்தை ஈர்த்தவை பிராணிகளை வைத்து அவர் இயக்கிய துர்கா போன்ற படங்கள். 
உலக சினிமாத்தரம் என்று இன்று ஒருவகையான கெளரவ முத்திரையைப் தமக்குத் தாமே சூட்டித் திரியும் ரசிக மகாஜனங்களைத் தாண்டி, தியேட்டருக்கு வந்து பார்க்கும் அடிமட்டத்து உழைக்கும் வர்க்கத்திலிருந்து, சிறுவர், குடும்பத் தலைவிகள் ஈறாக அனைவரையும் திரையரங்குக்கு இழுக்கும் வகையில் படங்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமா உலகில் இயங்கிய அவர் சினிமாவில் தொடாத கதைகளே இல்லை எனுமளவுக்கு அவரின் படைப்புலகம் பரந்தது. 
எண்பதுகளிலே தொழிலாள வர்க்கத்தின் குரலாக, சமூக நீதி சார்ந்த தொனியில் ஒலித்த அவரின் சிவப்பு மல்லி, இது எங்கள் நாடு போன்ற படங்கள். இன்றைய விளம்பர யுகத்தில் விருதுக்கு ஏற்றி வைக்கக்கூடிய அளவுக்கு நடுத்தர வர்க்கத்தின், ஏழைகளின் பாட்டை முன்னுறுத்தி எடுத்த சுமை, சோறு போன்ற படங்கள். இவற்றைப் பார்க்கும் போது இராம நாராயணனின் இன்னொரு பரிமாணம் புரியும்.
முன் சொன்ன படங்கள் வழியாக பொருளாதார ரீதியாகப் பெரிதாகச் சாதிக்க முடியாத சூழலில் அவர் நகைச்சுவைப் படங்களைக் கொடுக்கத் தொடங்கினார். மன்மத ராஜாக்கள் போன்ற படங்களின் வழியாக நகைச்சுவை சார்ந்த படங்களை இயக்கிய போது
மணந்தால் மகாதேவன், சகாதேவன் மகாதேவன் போன்ற படங்கள் அவருக்கு உச்ச பட்ச வெற்றியைக் கொடுத்தன.
என்பதுகளிலே படம் கொடுத்துப் பரவலாக அறியப்பட்ட இயக்குனர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் தங்கி நின்று படம் பண்ண வேண்டிய சூழலைக் கண்டிப்பாகச் சந்தித்திருப்பர். ஆனால் இராம நாராயணன், விசு போன்ற மிகச் சில இயக்குனர்களே இளையராஜா இசை கொடுத்த படங்களை இயக்கியிருந்தாலும் அதில் மட்டும் தங்கியிராது தனித்து வெற்றியைக் கொடுத்துச் சாதித்தவர்கள்.
சங்கர் கணேஷ் இசை இரட்டையர்கள் நிறையக் கொடுத்த படங்கள் இராம நாராயணனின் படங்களாகத் தானிருக்கும். அது போல சங்கர் கணேஷ் இருவரும் பிரிவு ஏற்பட்டுத் தனித்தனியாக இசையமைத்த வேளை இருவருக்கும் மாறி மாறித் தனது படங்களில் வாய்ப்புக் கொடுத்திருந்தார்.
“தங்கர்பச்சனுக்கும் இராம நாராயணனுக்கும் என்ன வித்தியாசம்?
முன்னவர் மனிதர்களை மிருகங்களைப் போல வதைத்து எடுப்பார், பின்னவர் மிருகங்களை மனிதர்களாக்கிப் படம் எடுப்பார்” என்று சாரு நிவேதிதா எழுதியது ஞாபகம் வருகிறது. நகைச்சுவைப் படங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருந்த இராம நாராயணன் அடுதுக் கையில் எடுத்தது மிருகங்களும் சிறுவர்களும், கூடவே சாமிப்படங்கள். அப்போது சுட்டிக் குழந்தையாக பேபி ஷாம்லியின் சினிமா வரவு இராம நாராயணனுக்கும் பேருதவியாக அமைந்திருக்கும். 
முன்னர் இவர் பக்திப் படங்களைக் கொடுத்திருந்தாலும்
ஆடி வெள்ளி படத்தின் வெற்றி தான் இவருக்கு பக்திப் படங்களைத் தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என்ற பலத்தைக் கொடுத்திருக்க வேண்டும். 
அதன் தொடர்ச்சியாக அவர் இயக்கிய படங்களில் துர்கா, தைப்பூசம், செந்தூரதேவி, ஈஸ்வரி போன்ற படங்கள் பரவலான ஈர்ப்பை அப்போது பெற்றவை அதையும் தாண்டி நிறையப் படங்கள் இதே பாணியில் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். 
அம்மன் படங்களென்றால் இராம நாராயணன் தான் என்னுமளவுக்கு 
ராஜ காளியம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிக் குவித்திருக்கிறார்.
எனக்குத் தெரிந்து ஒரே கட்சியில் தொடர்ந்து அந்தக் கட்சி வென்றாலும் தோற்றாலும் அங்கேயே தங்கி நின்ற மிகச் சில திரைக் கலைஞர்களில் இவரும் ஒருவர். தி.மு.கவிலேயே எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இன்றைய ஜெயலலிதா காலம் வரை தொடர்ச்சியாகத் தங்கியிருக்கிறார். இந்தப் பண்பு மிகச் சிலரிடமே இருந்திருக்கிறது. 
கலைஞர் எண்பதுகளில் நிறையப் படங்களுக்குக் கதை வசனம் எழுதிய காலத்திலும் இவர் தி.மு.க வில் இருந்தாலும் வீரன் வேலுத்தம்பி, மக்கள் ஆணையிட்டால் போன்ற மிகச் சில படங்களே இராம நாராயணனுக்கு வாய்த்திருக்கின்றன.
இவருடைய படங்களில் குறிப்பாக எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டான போது வந்த படங்களில் எஸ்.எஸ்.சந்திரன் நடித்த பாத்திரங்களின் வாயிலாக அந்தக் கால அரசியல் எள்ளல் மிகுந்திருந்தது. உதாரணம் சகாதேவன் மகாதேவன்
திரையிலகுக்கு வந்த புதிதில் ஶ்ரீ தேவி பிரியா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி இராம நாராயணன் இன்னொரு இயக்குனர் நண்பரான எம்.ஏ.காஜாவோடு படங்களைத் தயாரித்திருந்திருந்திருக்கிறார். இருவரும் அதே தயாரிப்பு நிறுவனம் வழியாக மாறி மாறிப் படங்களைத் தயாரித்திருந்திருக்கின்றனர். அப்படி வந்த படங்களில் ஒன்று தான் எண்பதுகளில் மறக்க முடியாத திரைச் சித்திரம் எம்.ஏ.காஜாவின் “ஒரு விடுகதை ஒரு தொடர்கதை”. இந்தப் படம் தான் கங்கை அமரன் இசைத்து வெளிவந்த முதல் படம். 
” நாயகன் அவன் ஒரு புறம்”, “விடுகதை ஒன்று” போன்ற அருமையான பாடல்கள் இருக்கும்.
பின்னர் ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழியாக நேரடிப் படங்களை இயக்கியும், மொழி மாற்றுப் படங்களைத் தமிழுக்கும் கொண்டு வந்திருக்கிறார். பிரபல ஆங்கில, தெலுங்குப் படங்களை இவரின் தேனாண்டாள் பிலிம்ஸ் வழியாக வெளியிட்டு கொழுத்த வெற்றியையும் பெற்றிருக்கிறார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற ஒரு சில நடிகர்கள் தவிர எண்பதுகளின் நாயகர்களை இயக்கிய பெருமை இராம நாராயணனைச் சேரும். குறிப்பாக விஜய்காந்த், எஸ்.வி.சேகர், மோகன், நிழல்கள் ரவி போன்றோருக்கு இவரின் படங்கள் மறுபிரவேசமாகவும் வெற்றியாகவும் அமைந்தவை. அர்ஜூனஒத் தமிழுக்கு முதலில் இயக்கியவர் இவரே.
ராமராஜன் இவரின் உதவியாளராக இருந்திருக்கிறார்.
கடைசியாக வந்த ஆர்யா சூர்யா உட்பட 125 படங்களை இயக்கியிருக்கிறார். நிறையப் படங்களை இயக்கிய இயக்குனர் என்ற வகையில் இவருக்கு ஒரு சாதனையும் உண்டு.
திரைப்படத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தயாரித்த தென்பாண்டிச் சீமையிலே படத்துக்கு இவர் தான் கதை, வசனம்.
2008 இல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அவர் இருந்த வேளை, கர்நாடகாவில் தொடர்ச்சியாக தமிழ்த்திரைபடங்கள் திரையிடும் அரங்கங்கள் தாக்கப்பட்டவேளை திரையுலகினர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்திய வேளை அவரை நமது வானொலிக்காகப் பேட்டி காண அழைத்த மறு நிமிடமே வானலைக்கு வந்திருந்தார். அந்தப் பேட்டியின் சுட்டி இது.
http://www.radiospathy.com/2008/04/blog-post_05.html
ஒருவன் தான் சார்ந்த துறையில், தொடர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத் தன்னுள் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். இது எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும் இதுவே நிலைத்திருத்தலின் அடிப்படையும் கூட. அந்த வகையில் இராம நாராயணனை நான் ஒரு சினிமாத் தொழிற்சாலையாகவே பார்க்கிறேன், இன்று அந்தத் தொழிற்சாலை நிரந்தர ஓய்வெடுத்திருக்கிறது. 
இராம நாராயணன் குறித்து நிறைய எழுதலாம். இவ்வளவும் என் காலை வேளை ஒரு மணி நேர ரயில் பயணத்தின் செல்லிடப் பேசி வழியாக எழுதியது மட்டுமே.

இயக்குனர் குரு தனபால் நினைவில்

இயக்குனர் குரு தனபால் இறந்த செய்தியை உண்மைத்தமிழன் அண்ணாச்சியின் நிலைத்தகவல் மூலம் சற்று முன்னர் அறிந்து கொண்டேன். எங்கள் காலத்தவர்கள், அவர்கள் எங்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் கலைத்துறையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீது கொண்ட நேசம் குறையாது. அப்படித்தான் இயக்குனர் குரு தனபால் மீதான நேசமும் கூட.

உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் திரைப்படம் 1992 ஆம் ஆண்டின் உன்னதமான பாடல்களை இசைஞானி அளிக்க,குரு தனபால் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தின் பாடல்களில் “என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி” பாடல் இன்றளவும் மறக்க முடியாத பாடலாக ஏதோ ஒரு வானொலியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும். கார்த்திக் உடன் நடித்த நாயகி மோனிஷா சிறிது காலத்தில் விபத்தில் மாண்டு போனது துரதிஷ்டம். அந்தப் படம் நடிகை சசிகலாவுக்கும் மீள் வரவாக அமைந்தது. படத்தில் எல்லாவித வெற்றிகரத் துணையும் இருந்தும் தோல்விப்படங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.

குரு தனபால் இன் மீள் வரவு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சத்யராஜ் நாயகனாக “தாய் மாமன்” படத்தின் வழியாக வெற்றிகரமாக அமைந்தது. அந்தப் படம் வந்த வேளை சத்யராஜ், மணிவண்ணன் போன்றோர் வை.கோபால்சாமி மீதும் ம.தி.மு.க மீதும் அளவற்ற நேசத்தோடு இயங்கிய நேரம். அந்தப் படத்தில் சத்யராஜ் நடை, உடை பாவனை கூட வை.கோ போன்று இருக்கும். வெள்ளை வேஷ்டி. சட்டையோடு கழுத்தில் கருப்புத் துண்டு மாட்டிய சத்யராஜ் இன் முழுப்படம் மட்டுமே கொண்ட “தாய் மாமன்” திரைப்படத்தின் முழு அளவு விளம்பரம் பொம்மை போன்ற அன்றைய சினிமா இதழ்களில் வெளியிடப்பட்ட அளவுக்கு சண்டைக் கோழியைத் தூக்கிக் கொண்டு நிற்கும் சத்யராஜ் ஐ மட்டுமே முக்கியத்துவப்படுத்தியிருந்தது. சத்யராஜ், கவுண்டமணி, மணிவண்னன் ஆகிய முவரும் சேர்ந்து அதகளம் பண்ணிய படங்களில் முதல் இரண்டு படங்கள் என்றால் என் தேர்வில் தாய் மாமன் படமும் மாமன் மகள் படமும் தான் இருக்கும்.

தாய் மாமன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வந்த மாமன் மகள் திரைப்படமும் சத்யராஜைப் பொறுத்தவரை அவருக்குப் பேர் சொன்ன படம்.

அந்தக் காலகட்டத்தில் துணிச்சலாக ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை நோக்கிய அரசியல் எள்ளல்களை சத்யராஜும், மணி வண்ணனும் செய்ததை இன்றைய சூழலில் நினைத்துப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு இந்த இரண்டு படங்களிலும் நிரம்பியிருக்கும். தமிழ் சினிமாவின் அரசியல் நையாண்டிப் படங்களில், வேறொரு தளத்தில் வைத்துக் கொண்டு பூடகமாகத் தம் கருத்தைச் சொன்ன படங்களில் சிறப்பான படங்கள் இவை.

குரு தனபாலுக்கான சரியான பாதையாகத் தான் அவரின் அடுத்த சுற்றில் அமைந்தத தாய்மாமன், மாமன் மகள் ஆகியவை இருந்தன. இவ்வளவுக்கும் தேவா (தாய் மாமன்), ஆதித்யன் ( மாமன் மகள்) ஆகிய இசையமைப்பாளர்களை வைத்துத் தான் இவ்விரண்டு படங்களைக் கொடுத்திருந்தார்.

தொடர்ந்து குரு தனபால் இயக்கிய படம் பெரிய இடத்து மாப்பிள்ளை. ஜெயராம் , கவுண்டமணி கூட்டணியில் நகைச்சுவை இதிலும் கலக்கலாக இருக்கும். ஆனால் அதற்குப் பின்னர் குரு தனபாலின் இடம் வெறுமையாகிப் போனது. சுயேட்சை எம்.எல்.ஏ படத்தின் வழியாக அவரின் மூன்றாவது சுற்றும் எடுபடவில்லை.

குரு தனபாலைப் பொறுத்தவரை தொண்ணூறுகளின் சினிமாவை நேசித்தவர்களுக்கு அவர் யாரென்றே தெரியாமல் அவரின் திரைப்படங்களான மாமன் மகள், மற்றும் தாய் மாமன் படங்களின் வழியாக மெச்சியிருப்பர். இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் மாமன் மகள் படத்தின் காட்சிகள் வரும் போது வாய்விட்டுச் சிரிப்பேன். அந்த அளவுக்கு காலத்தால் மறக்கடிக்கப்படாத அல்லது கால மாற்றத்தில் ரசனை மாறாத எள்ளல்களும், லொள்ளுகளும் நிரம்பிய சிரிப்புக் கலவை அது. சமூகத்தைச் சந்தோஷப்படுத்துபவன் வாழ்க்கை பெரும்பாலும் அதுவாக இராது என்பது போலவே இவரின் இறுதிக்காலமும் இருந்ததாக அறிகின்றேன்.

இயக்குனர் குரு தனபாலுக்கு என் அஞ்சலிகள்.