இயக்குனர் பாலுமகேந்திரா வழங்கிய வானொலிப்பேட்டி

மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் 2005 ஆம் ஆண்டு நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, சக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு கணேசன் மேகநாதனுடன் வழங்கிய செவ்வியை இங்கே பகிர்கின்றேன்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்த்ததில் இருந்து, கலைத்துறையில் அவரின் முக்கியமான படங்களைப் பற்றியும் பேசுகின்றார். குறிப்பாக அழியாத கோலங்களில் இருந்து சிவாஜி கணேசனை இயக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு சந்தியா ராகம் படத்துக்காக ஒப்பந்தம் செய்ய நினைத்ததையும், தனது “வீடு” படத்தை இலங்கையிலேயே படமாக்க நினைத்ததையும் சொல்கின்றார்.

சினிமா மொழி என்று ஒன்றில்லை, ஈழத்தமிழ் வழக்குசினிமாவுக்கு இதுதான் மொழி வழக்கு என்று எதுவுமில்லை ஈழத்தமிழில் கொடுத்தாலும் எடுபடும் ஆனால் ஆத்மார்த்தமாக இருக்கவேண்டும் என்றும் தொடர்கின்றார்.
முழுப்பேட்டியையும் கேட்க

பாகம் 1

00000000000000000000000000000000000000000000

பாகம் 2

இசையமைப்பாளர் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள் நினைவில்

தொண்ணூறுகளின் இறுதியில் பிரபலமாக இருந்த சன் டிவி “சப்தஸ்வரங்கள்” பாடற் போட்டி நிகழ்ச்சியின் வழியாகத் தான் வி.தட்சணாமூர்த்தி என்ற இசையமைப்பாளரை அறிந்து கொண்டேன். அதற்கு முன்னர் அவரின் இசையில் வெளிவந்த ஓரிரு தமிழ்ப்படங்களில் குறிப்பாக “நந்தா என் நிலா” என்ற பாடலை இலங்கை வானொலி மூச்சு விடாமல் முன்னூறு தடவைக்கு மேல் அலுக்க அலுக்கப் போட்ட போதெல்லாம் கூட இந்த இசையமைப்பாளர் குறித்த தேடல் இருந்திருக்கவில்லை. எழுபதுகளின் இறுதியிலே வி.குமார், விஜயபாஸ்கர், ஷியாம் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் வந்த பல நல்ல பாடல்களை சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்தவையாக இருக்கும் என்று அதிகம் மெனக்கடவில்லை. அந்த வகையில் வி.தட்சணாமூர்த்தி அவர்களை சுவாமிகள் என்று விளித்து அவரின் பெருமைகளை சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரமணன் சிலாகித்தபோதுதான் அவர் மேல் வெளிச்சம் பட்டது எனக்கு. தமிழ்த்திரையுலகில் இரண்டு தட்சணாமூர்த்திகள் இருந்திருக்கிறார்கள், ஒருவர் எஸ்.தட்சணாமூர்த்தி இவர் அலிபாபாவும் 40 திருடர்களும்” போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர், பின்னவர் தான் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள். கொஞ்சக்காலம் எல்லாவற்றையும் உதறவிட்டு காசிக்குப் போய் சாமியாராக இருந்ததாக செய்திகளின் வாயிலாக அறிந்தேன்.

“நந்தா என் நிலா” படத்தில் வந்த பாடலான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய “நந்தா என் நிலா பாடலை விடவும் என்னை அதிகம் கவர்ந்ததென்னவோ ஜெயச்சந்திரன், டி.கே. கலா பாடியிருந்த “ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தேன்” என்ற பாடல் தான். அன்றைய சனிக்கிழமை இரவுப்பொழுதில் அதிகாலை ஒரு மணியைத் தொடும் போது வானொலி நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் என் தனிமையை விரட்டிப் பல தடவை சொந்தம் கொண்டாடிய பாடல் அது.

வானொலியின் பிறந்த நாள் வாழ்த்துப்பாடல்களில் எழுதப்படாத ஒப்பந்தமாக அமைந்து போன பாடல்களில் ஒன்று “நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க”, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது திரைப்படத்துக்காக வி.தட்சணாமூர்த்தி இசையில் வந்த அந்தப் பாடலோடு அதே படத்தில் வந்த “ஆண்டவன் இல்லா உலகமிது” பாடலும் அப்போதைய இலங்கை வானொலி ஒலிபரப்பால் பிரபலமான பாடல்களில் ஒன்று.

மீண்டும் தொலைக்காட்சி வாயிலாகவே இன்னொரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்திருந்தது வி.தட்சணாமூர்த்தி அவர்களின் கேரள சினிமாவுக்கான பணி. கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் ஐம்பது ஆண்டுகள் திரையுலகில் நிறைவாக்கியதை ஏஷியா நெட் தொலைக்காட்சி கொண்டாடியபோது, வி.தட்சணாமூர்த்திக்கான சிறப்பு கெளரவத்தையும் அவர் முன்னிலையிலேயே வழங்கியிருந்தார்கள். அப்போது கேட்ட “சந்த்ரிகையில் அலியுன்னு சந்த்ரகாந்தம்” என்ற பாடலை யூடியூபின் வழியாகக் கேட்டுப் பரவசம் கொண்டேன்.

தட்சணாமூர்த்தி சுவாமிகளின் பேச்சு 25 வது நிமிடத்திலிருந்து

மலையாள சினிமாவுலகில் வி.தட்சணாமூர்த்திக்கான தனித்துவத்தையும் கே.ஜே.ஜேசுதாஸின் சிலாகிப்பின் மூலம் அறிந்து கொண்டேன். உள்ளூர் இந்தியக் கடை ஒன்றில் வி.தட்சணாமூர்த்தி அவர்களின் இசையில் வந்த மலையாளப் பாடல் தொகுப்பையும் அடிக்கடி கண்டு கொள்வேன். ஆனால் அதிகம் கேட்டதில்லை. ஒருவரை அவரின் சாகித்யம் வாயிலாக அறிந்து கொள்வதில் தான் எவ்வளவு பெருமை. அந்த வகையில் வி.தட்சணாமூர்த்தி அவர்களின் இறப்பு நேற்று ஆகஸ்ட் 2 நிகழ்ந்த பின்னர் பேஸ்புக், ட்விட்டர் வழியாக அவரின் ரசிகர்கள் பகிர்ந்து கொள்ளும் திரையிசை இன்னும் இன்னும் இந்த இசை மேதை மீதான பற்றை அதிகப்படுத்துகின்றது. அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும், அவர் ஆக்கிய பாடல்கள் ஜீவனுடன் நம்முள் என்றும் உறைந்திருக்கும்.

இயக்குனர் இராசு மதுரவன் நினைவில்

இயக்குனர் இராசு மதுரவன் நினைவில் 

தமிழ் சினிமாவுலகில் மிகப்பெரும் இயக்குனர்களாக உச்சத்தில் இருப்பவர்களின் படங்களோடு ஒப்பிடும்போது எனக்கு எப்போதும் அதிகம் ஆர்ப்பாட்டமில்லாது சிறுமுதலீட்டில் எடுக்கப்படுகின்ற படங்களை எடுக்கும் இயக்குனர்களின் படைப்புக்களிலேயே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் சமீப வருடங்களில் இராசு மதுரவன் படங்கள் வரும்போதெல்லாம் இந்த எதிர்பார்ப்பு தொடர்ந்தது. பூமகள் ஊர்வலம் என்ற நல்லதொரு திரைப்படத்தைக் கொடுத்துத் தன்னைத் திரையுலகில் அறிமுகப்படுத்திக் கொண்டாலும் பாண்டி படம் மூலம் மீண்டும் திரையுலகில் மறுவாழ்வு பெற்று, மாயாண்டி குடும்பத்தார் மூலமே பரவலான அறிமுகத்தைப் பெற்றிருந்தார். 
குடும்ப உறவுகளைக் கொண்டு உணர்வுபூர்வமான, எளிமையான கிராமியக் கதைக்களனைக் கொண்ட படங்கள் தான் இவரது அடுத்த சுற்றில் கைகொடுத்த சூத்திரம். இவருக்கெல்லாம் முன்னோடிகள் வி.சேகர் காலம் வரை இந்தச் சூத்திரத்தால்  வெற்றி கண்டவர்கள். ஆனால் இப்படியான படங்களுக்கு ஒப்பீட்டளவில் பெண் ரசிகர்களே அதிகம் என்பதால் சின்னத்திரை தன் பங்கிற்கு அவர்களை உள்வாங்கிக்கொண்டது.
ஆனாலும் திட்டமிட்ட குறைந்த செலவில், அதிகம் பிரபலமில்லாத நடிகர்களைத் தேர்வு செய்து சபேஷ் முரளி போன்ற மாமூல் இசையமைப்பாளர்களை வைத்து தன்னால் மீண்டும் இதே பாங்கான படங்களைக் கொடுத்து வெற்றியைக் காட்டமுடியும் என்று நிரூபித்தார் இராசு மதுரவன். இதனாலேயே இவரை வைத்து ஒரு வானொலிப்பேட்டி செய்யவேண்டுமென்று நினைத்து இவரின் பேஸ்புக் முகவரியைத் தேடிப்பிடித்து நண்பராக்கிக் கொண்டேன். பரபரப்பாக இயங்கும் இவரை சமயம் வாய்க்கும்போது பேட்டி எடுத்துக்கொள்ளலாம் என நானும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அதே பரபரப்போடு புற்று நோய் இவரக் ஆட்கொள்ள போய்ச் சேர்ந்து விட்டார் நிரந்தரமாக. அந்த ஏமாற்றம் கலந்த வருத்தம் இன்னும் அதிகப்படியாக எனக்குள்.இதே போன்றதொரு நிலைதான் சின்னதாயி இயக்குனர் கணேசராஜ் இற்கும் நிகழ்ந்தது.
சினிமா ஊடகத்தில் அறிவுசாலிகளாகக் காட்டிக்கொள்ள முனைபவர்களை ரசிகர்கள் தாமாகவே புறங்கையால் ஒதுக்கியிருக்கிறார்கள். மக்களுக்கு எது பிடிக்கும் அல்லது பிடிக்க வைக்கும் படைப்புக்களைக் கொடுத்த சாதாரண இயக்குனர்கள் அசாதாரணமாகக் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இராசு மதுரவனை அறியாத தமிழகத்தின் கடைக்கோடி ரசிகன் கூட அவர் படைப்புக்களைப் பார்க்கும் போது உளமார நேசிப்பான், இதைவிட வேறென்ன கெளரவமும் அங்கீகாரமும் வேண்டும் ஒரு படைப்பாளிக்கு!

எண்பதுகளில் ‘திரு”க்குரல் T.M.செளந்தரராஜன்

எண்பதுகளின் திரையிசையைத் தான் பாடபாடமாகக் கொண்டவர் நாம், ஆனாலும் காலங்களைக் கடந்து முந்திய தசாப்தங்களின் பாடல்களையும் கேட்க வைத்த புண்ணியத்தைக் கொடுத்தது இலங்கை வானொலி. “பிறந்த நாள் இன்று பிறந்த நாள்” என்ற ஆரம்ப அடியைக் கொண்ட பாடல் முழுசாகக் கேட்காவிட்டாலும் அந்த வரிகள் நாள் தப்பாமல் வந்து கொண்டே இருக்கும் அப்போது.

எழுபதுகளின் இறுதிக் காலகட்டத்தில் இளையராஜாவின் காலத்திலும் டி.எம்.செளந்தரராஜனின் பங்களிப்பு அன்னக்கிளி தொடங்கி தியாகம், நான் வாழ வைப்பேன் போன்ற படங்களில் சிவாஜிக்கான குரலிலும் பைரவியில் ரஜினிக்காக “நண்டூருது நரியூருது” என்றும் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் “தாயில்லாமல் நானில்லை” படத்தில் கமலுக்காக டி.எம்.எஸ் ஐப் பாடவைத்த “வடிவேலன் மனசு வைத்தான்” என்று அடுத்த தலைமுறை நடிகர்களுக்காகவும் தன் குரலைக் கச்சிதமாகப் பொருத்தி வைத்தார்.  இவைகளையெல்லாம் கடந்து அந்த எண்பதுகளிலும் “பாசமலர்” ஆகவும் “பாலும் பழம்””ஆலய மணி” ஆகவும் நீக்கமற வானொலிப்பெட்டியை நிறைத்தார் டி.எம்.செளந்தரராஜன்.

அற்ப வாழ்நாள் கொண்டிருந்தாலும் அற்புதக் கவியாற்றல் கொண்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் எழுச்சி மிகு பாடல்களுக்கு உணர்வு வடிவம் கொடுத்தது இன்னும் உயர வைத்தது டி.எம்.எஸ் இன் குரல். கண்ணதாசனின் காதலில் இருந்து எல்லா உணர்வையும் அசரீரியாகக் கொடுத்ததில் டி.எம்.செளந்தரராஜனின் குரலே முதன்மையானது.  தமிழ்த்திரையின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ஜெய்சங்கர், சிவக்குமார் வரையான நாயகர்களுக்கு ஏற்ற விதத்தில் பாடிச் சென்றவரின் பாடல்களை வெறுமனே ஒலி வடிவில் கேட்கும் போதே இது யாருக்கானது என்று கண்டுபிடித்துச் சொல்லுமளவுக்கு நுணுக்கம் நிறைந்தவர்.  அவருக்குப் பின்னர் தான் திரைப்படத்தின் நாயகனின் பாத்திரத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு பாடும் வல்லமையைத் தமிழ்த்திரையிசையுலகம் பதிவு செய்து கொண்டது. அந்த நிலையை இழந்து சோரம்போய் நிற்கின்றது இன்றைய தமிழ்த்திரையிசையுலகம். 
 அவர் ஒரு கடல், கம்பன் சொல்லுவது போல “ஆசையினால் பாற்கடலை நக்கிக் குடித்துவிட முனையும் பூனை” போன்றது டி.எம்.செளந்தராஜனின் முழுமையான திரையிசைப் பங்களிப்பைப் பற்றி அலசி ஆராயும் பணி. என்னளவில் எண்பதுகளில் அவரின் பாடல்கள் எவ்வளவு தூரம் எம்மை ஆட்கொண்டன என்பது குறித்த சில நினைவுத்துளிகளை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

“எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ” லவுட் ஸ்பீக்கர் பூட்டிய ஒ ரு பழைய மொறிஸ் மைனர் காரில் இருந்து வெளிக்கிளம்புகிறது மலேசியா வாசுதேவன் குரல்.  அந்தச் சத்தம் வந்த திசை நோக்கிக்  கூட்டம் கூடுகிறது காரை ஓரம் கட்டிவிட்டு, காருக்குள் இருக்கும் போராளி தாயக விடுதலை குறித்த கோஷத்தை எழுப்புகிறார். கூடவே துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றன. கார் மெல்லக் கிளம்புகின்றது, இம்முறை டி.எம்.எஸ்
பாடுகின்றார் “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்”
இன்னும் பல கிராமங்களைக் கடக்கவேண்டும் அந்தக் கார், புழுதியைக் கிழித்துக் கொண்டு போகின்றது. புழுதி வளையம் மட்டும் கொஞ்ச நேரம் நிற்க கார் எங்கோ கடந்து விட்டது, தூரத்தே
“ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறதே” என்றும், “அச்சம் என்பது மடமையடா” என்றும் சில்லென்று காதை ஊடுருவுகிறது டி.எம்.எஸ் இன் கணீர்க்குரல், அந்தக் காலகட்டத்தில் இளைஞர்களின் எழுச்சிக் குரல் அது. அப்போதெல்லாம் ஈழ விடுதலை இயக்கங்கள் தமக்கான போர்க்கால எழுச்சிப்பாடல்களைத் தாமே உருவாக்காத காலகட்டம். அப்போதெல்லாம் செளந்தரராஜன் என்றோ ஏதோ ஒரு படத்துக்காகப் பாடிய பாடல்களே அதிலும் குறிப்பாக எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் பதிவாகிய வீரமூட்டும், நம்பிக்கை கொடுக்கும் விடுதலைத் தீயை மூட்டப் பயன்படுத்த உறுதுணையாக அமைந்தன.
பின்னாளில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தொண்ணூறுகளில் கூட புலிகளின் குரல் வானொலியில் விதிவிலக்காக அமைந்த திரையிசைப்பாடல்கள் என்றால் அங்கே டி.எம்.செளந்தரராஜனின் பாடல்களே இடம்பிடித்திருந்தன. கூடவே பி.பி.ஶ்ரீனிவாஸ் குழு பாடிய “தோல்வி நிலையென நினைத்தால்”.

டி.எம்.செளந்தரராஜன் குரல் போர்க்கால இலக்கியமாகக் கொண்டாடப்பட்ட அதே சமயம் ஆலயங்கள் தோறும் கொடியேறிக் கொண்டாட்டம் நடக்கும் போதும் இன்னும் முக்கிய திருவிழாக்களிலும் “உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே” என்றும் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே” என்றும் “தில்லையம்பல நடராஜா” என்றும் அந்தந்த ஆலய மூல மூர்த்தியின் பெருமைதனைக் கூறும் பக்திப்பாடல்களிலும் இடம்பிடித்தவர் இன்னும் தொடர்கின்றார்.
“கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தே” என்ற பாடலை எங்களூர் வீரமணி ஐயர் அவர்கள்  கபாலீஸ்வரர் கோயில் உறையும் அன்னை மீது எழுத  அதை டி.எம்.செளந்தரராஜன் குரல் வடிவம் கொடுத்து ஈழத்தமிழகத்துக்கும், இந்தியத்தமிழகத்துக்கும் உறவுப்பாலம் அமைத்ததை இன்றும் பெருமையாகச் சொல்லிக்கொள்வோம்.

அன்றைய காலகட்டத்தில் நாங்கள் சிறுசுகளாக இருந்த போது,  மாமன், மச்சான் உறவுகளும் சரி ஊரில் தோட்டவேலை செய்து களைத்து விழுந்து வீடு திரும்பும்  உழைப்பாள சமூகமும் சரி இடம், பொருள் ஏவல் பாராமல், டி.எம்.எஸ் இன் குரலைத் தம்முள் ஆவாகித்துக் கொண்டு பாடியபோதெல்லாம் வேடிக்கை பார்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போது அந்தக் கலைஞன் எவ்வளவு தூரம் எல்லாத்தளங்களிலும் நின்று தன்னை நிறுவியிருக்கிறான் என்ற ஆச்சரியமே மேலோங்குகின்றது,

எண்பதுகளின் திரையிசைப்பாடல்களிலே டி.எம்.செளந்தரராஜனுக்கான கெளரவத்தை மீளவும் நிலை நிறுத்தியவர் டி.ராஜேந்தர். அவரின் ஒரு தலை ராகம் படத்தில் வரும் “நானொரு ராசியில்லா ராஜா” அன்றைய அண்ணன்மாரின் காதலுக்கான தேசிய கீதமாகவும், “என் கதை முடியும் நேரமிது” காதலின் விரக்தியில் நின்றோரின் உள்ளத்து ஓசையாகவும் அமைத்துக் கொடுத்தார் டி.ராஜேந்தர். இளையராஜா காலத்தில் புதுமையைத் தேடி எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜேசுதாஸ் என்று மும்முனைப் போட்டியிருக்க, அங்கும் தன்னை நிலை நாட்ட வைத்தது ஒரு தலை ராகம் திரைப்படப் பாடல்கள். டி.ராஜேந்தரின் அடுத்த படைப்புக்களிலும் குறிப்பாக “ரயில் பயணங்களில்” படத்தில் “அமைதிக்குப் பெயர் தான் சாந்தி” என்றும் “நெஞ்சில் ஒரு ராகம்” திரைப்படத்தில் “குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன ரோசாப்பூ என்ன” என்றும் டி.எம்.செளந்தரராஜனின் குரலை அடுத்த தலைமுறையும் ஆராதிக்கும் வண்ணம் செய்தார். இதில் முக்கியமாக டி.ராஜேந்தரின் கவியாழமும் சிறந்ததால் இன்னும் ரசிக நெஞ்சங்களில் இடம்பிடிக்க முக்கிய ஏதுவாக அமைந்திருந்தன.

“இளமைக்காலம் எங்கே என்று திரும்பும் இங்கே” என்று மீண்டும் டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா கூட்டணியை வைத்து “உன்னை ஒன்று கேட்பேன் சேதி சொல்ல வேண்டும்” பாடலை மீள் இசை கொண்டு 1986 இல் வெளிவந்த “தாய்க்கு ஒரு தாலாட்டு” என்ற படத்திற்காகக் கொடுத்திருந்தார் இளையராஜா.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மலேசியா வாசுதேவனைப் பொருத்திய எண்பதுகளிலே கங்கை அமரன் இசையமைத்த “நீதிபதி படத்துக்காக அமைந்த “பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே” பாடலைக் கேட்கும் போது திருமணக்கோலத்தில் நிற்கும் மகளை கொண்டாடி அனுப்பும் தந்தையாக மாறி உருகும் போது மீண்டும் டி.எம்.செளந்தரராஜன் கட்சியிலேயே ஒட்டிக்கொள்ளத்தோன்றும்.

எண்பதுகளிலே திரைப்படக்கல்லூரி வழியாக வந்து பிரமாண்டத்தைத் திரையில் புகுத்தும் பரம்பரையில் மூத்தவர் ஆபாவாணன் வருகையும் டி.எம்.செளந்தரராஜனை மீள நிறுவுவதற்கு உசாத்துணையாக அமைகின்றது.  மனோஜ் கியான் இசையில் “உழவன் மகன்” திரைப்படத்தில் “உன்னைத் தினம் தேடும் தலைவன்” என்று அன்றைய முன்னணி நாயகன் விஜய்காந்துக்கான குரலாகப் பயன்படுத்திக் கொண்டார். இதற்கெல்லாம் மணிமகுடமாக அமைந்தது மனோஜ் கியான் மீண்டும் இசையமைக்க ஆபாவாணன் உதவி இசையை வழங்கிய 1989 இல் வெளிவந்த “தாய் நாடு” திரைப்படம். இந்தப் படத்தின் ஐந்து பாடல்களிலும் டி.எம்.செளந்தரராஜனைப் பாடவைத்துக் கெளரவம் சேர்த்தார் ஆபாவாணன். அந்தக் காலகட்டத்து சென்னை வானொலியின் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் “தாய் நாடு” படத்தில் வந்த “ஒரு முல்லைப்பூவிடம் கொஞ்சும் பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா” பாடல் நிரந்தர சிம்மாசனம் போட்டிருந்தது.  அந்தப் பாடல் வந்த போது தன் வயதில் அறுபதுகளின் விளிம்பில் இருந்தவர் குரலில் 1960 ஆம் ஆண்டுகளின் இளமையைக் காட்டியிருந்தார்.  மின்சாரம் இல்லாத தொண்ணூறுகளில் பற்றறியை நிரப்பியும், சைக்கிள் தைனமோவைச் சுழற்றியும் பாட்டுக் கேட்டஅந்தக் காலகட்டத்து என் போன்ற ஈழத்து இளையோருக்கு “ஒரு முல்லைப்பூவிடம்” பாடலை இன்று போட்டுக் காட்டினாலும் ஒரு முறுவல் தொனிக்கும் முகத்தில். 

தமிழ்த்திரையுலகின் கம்பீரங்களில் ஒன்று டி.எம்.செளந்தராஜன் குரல், அன்றைய றேடியோ சிலோனில் இருந்து இன்று உலகை ஆளும் தமிழ் வானொலிகளிலும் சூப்பர் ஸ்டார் டி.எம்.செளந்தரராஜன் தான் அவருக்குப் பின் தான் மற்றெல்லோரும், நாளையும் நம் சந்ததிக்குச் சென்று சேரும் “தமிழ்”பாடல்களில் அவர் இருப்பார்.

பதிவை எழுதத்தூண்டியதோடு தலைப்பையும் பகிர்ந்த நண்பர்  இற்கும் நண்பர்   இற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

கிரீடத்தை இறக்கி வைத்த நடிகர் திலகன்

‘பவித்ரம்” என்றதொரு மலையாளப் படம், கிட்டத்த ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னர் பார்த்திருந்தேன். இளந்தாரி மகன் மோகன்லால் ஷோபனாவுடன் காதல் வயப்பட்டு கல்யாணம் முடிக்கும் தறுவாயில் ஒரு புறம், இன்னொரு புறம் மூத்த மகன் சீனிவாசன் மணம் முடித்தும் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருப்பவர், இவர்களின் பெற்றோர் திலகன், ஸ்ரீவித்யா. தன் மூத்தமகனுக்குக் குழந்தை கிடைக்கவேண்டும் என்று வேண்டுதலோடு இருக்கும் ஸ்ரீவித்யாவுக்கு திலகன் மூலம் மீண்டும் ஒரு குழந்தை. பிறக்கும் போதே தாயைப் பரலோகம் அனுப்பிய பாவம் அந்தக் குழந்தைக்கு. திலகனுக்கோ தன் இச்சையின் விளைவு குழந்தையாக வந்து எள்ளலுக்கு ஆட்படும் அவமானம், ஒரு நாள் எல்லோரது கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார். தன் காதலை இழந்து, தந்தையாகவும், சகோதரனாகவும் மாறவேண்டிய அவல வாழ்வில் மோகன்லால். இறுதியில் எல்லாம் இழந்து பைத்தியக்காரன் ஆகிவிடுவார் மோகன்லால் . இப்படியான சின்னப்பாத்திரம் என்றாலும் மிகை நடிப்பற்ற, இயல்பான தன் நடிப்பினால் கேரளம் கடந்தும் அறியப்பட்டவர் திலகன். செங்கோல், கிரீடம் போன்ற படங்களில் திலகனின் பங்கு பெரும்பங்கு.

மலையாள சினிமாவின் குணச்சித்திரங்களின் பட்டியலில் முரளி, கொச்சின் ஹனீபா, ராஜன்.பி.தேவ் ஐத் தொடர்ந்து திலகனின் இழப்பு இன்று. இப்படியான மலையாள நடிகர்களை பெரும்பாலும் வில்லத்தனமாகக் காட்டும் எல்லையோடு நிற்கும் தமிழ் சினிமாவிலும் திலகனின் பரவலான அறிமுகம் சத்ரியன் படத்தின் அருமை நாயகம் என்ற வில்லனாக மலையே கவிழ்ந்தாலும் காட்டுக்கூச்சல் கத்தாத மென் நடிப்பில் பன்னீர்ச்செல்வம் என்ற விஜயகாந்த் இற்கு பெரும் தலைவலியாகப் படம் முழுதும் வருவார். பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனுக்கோ கடுப்பேத்தும் நோகாமல் கொல்லும் இவரின் வில்லத்தனம். கரகரத்த சிரிப்பும், தீர்க்கமான பார்வையும், அலட்சியமான முகபாவமும் திலகனின் சொத்து.

சாணக்யன் போன்ற மலையாளப்படங்களில் முக்கிய வில்லன் பாத்திரத்தில் வைத்திருந்தாலும் தமிழில் கமல் போன்ற முன்னணி நடிகர்களே திலகனை ஆராதிக்கவில்லை. சத்ரியனுக்குப் பிறகு அவருக்குக் கிடைத்த பாலா படத்தில் சிறப்பாகச் செய்திருந்தாலும் அதற்கு முன் வந்த மேட்டுக்குடி படம் தான் அவருக்கான இன்னொரு சொல்லிக்கொள்ளும் படமாகத் தமிழில் கிட்டியது. மலையாளத்தின் எண்ணற்ற படங்களில் நடித்துக் கரைகண்டிருந்த திலகனின் சமீப ஆண்டுகள் தொழில் ரீதியில் அல்லல் மிகுந்தவை ஆனாலும் சளைக்காத போர்க்குணத்தோடு தன் கருத்தில் வழுவாது இருந்தவர். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
திலகன்  oil paint வரைஞர்:  Rajasekharan Parameswaran

இசையமைப்பாளர் பூபேன் ஹஸாரிகா நினைவில்

பழம்பெரும் பாடகரும் இசையமைப்பாளருமான பூபேன் ஹஸாரிகா மும்பையில் நவம்பர் 5, 2011 சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 85.

சமீபகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது.

இசையமைப்பாளர் பூபேன் ஹஸாரிகா இசையமைத்த Dil hoom hoom பாடலை இன்று மட்டும் கணக்கில்லாமல் கேட்டிருப்பேன். என்னவொரு ரம்யமான பாடலது. மெல்லிசையை மென்மையான உணர்வுகள் சேர்த்துக் குழைத்த பாடல். பூபேன் ஹஸாரிகா குறித்த ஒரு அஞ்சலிப்பகிர்வை றேடியோஸ்பதியில் இடவேண்டும் என்று அவர் இசையமைத்த Dil hoom hoom என்ற Rudaali 1(1993) திரைப்படப்பாடலை நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் (கே.ஆர்.எஸ்) இடம் பகிர்ந்த போது அப்பாடலின் தமிழ் வடிவத்தை அழகாக எழுதித் தந்தார். இதோ அந்த மூலப்பாடலும் கண்ணபிரான் ரவிசங்கர் எழுதித்தந்த பாடலின் தமிழ் வடிவமும்.

பூபேன் ஹஸாரிகா குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல்

அதே பாடலை லதா மங்கேஷ்கர் பாடுகின்றார்

Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!

Ghan dham dham kare, darr jaaye
வானம் இடிஇடி என இடி..க்குதே, பயத்தாலே!

Ek boond kabhi paani ki, mori ankhiyon se barsaaye
இரு விழிகளில் நீர் ஆறு
ஒரு சுருளாய்ப் பாய்..கிறேதே

Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!
—————

Teri jhori daaroon, sab sukhe paat jo aaye
உன் நினைவு என்னைத் தீண்டி, பழுப்பிலைகள் உதிர்க்கின்றேனே!

Tera chhua laage, meri sukhi daar hariyaaye
உன் கைகள் என்னைத் தீண்ட, பசுமரம் போல் துளிர்க்கின்றேனே!

Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!
————–

Jis tan ko chhua tune, us tan ko chhupaaoon
நீ தொட்டுப் பருகிய மேனி, அதை மூடியே வைத்தேன் அன்று!

Jis man ko laage naina, voh kisko dikhaaoon
நீ நெருங்கி நோக்கிய இதயம், அதை யாரிடம் காட்டுவேன் இன்று?

O more chandrama, teri chaandni ang jalaaye
ஓ நிலவே…நளிர் நிலவே…நீ எரித்து விடாதே என்னை

Teri oonchi ataari maine pankh liye katwaaye
மலை மேலே சென்று விட்டாயே, என் சிறகுகள் அறுத்து விட்டேனே!

Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!


பூபேன் ஹசாரிகா குறித்து தினமணி நாளிதழிலும், விக்கிபீடியாவிலும் கிடைத்த தகவல்கள்.

அசாமின் சாடியா என்னுமிடத்தில் பூபேன் பிறந்தார். பத்தாவது அகவையிலேயே தனது முதல் பாடலை முதலாவது அசாமிய மொழித் திரைப்படமான ஜோய்மோதி என்ற திரைப்படத்தில் எழுதிப் பாடினார். 1939ஆம் ஆண்டு இரண்டாவது அசாமியத் திரைப்படமான இந்திரமாலதி என்ற படத்திலும் தனது 12 அகவையில் பங்கு பெற்றார்.

1942ஆம் ஆண்டு குவஹாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் இடைநிலை கலை பட்டப்படிப்பிற்கு பின்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் 1944ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். 1946ஆம் ஆண்டு அரசறிவியல் முதுகலைப்பட்டமும் பெற்றார். 1954ஆம் ஆண்டில் நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழக்கத்தில் இந்திய முதியோர் கல்வியில் ஒலிஒளி ஊடக செய்முறைகளுக்கான தயார்படுத்தலுக்கான திட்டமொன்றை ஆய்வுக்கட்டுரையாக வடித்து முனைவர் பட்டம் பெற்றார். அசாம் சாகித்திய சபாவின் தலைவராக 1993ஆம் ஆண்டு பொறுப்பாற்றி உள்ளார்.

ஹஸாரிகா “பிரம்மபுத்திராவின் பறவை’ என்று அழைக்கப்பட்டார். பாரம்பரிய அசாமி இசை மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். பாடகர், இசையமைப்பாளர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு வகையில் புகழ்பெற்றார்.

பின்னர் ஹிந்தி, பெங்காலி திரைப்படங்களிலும் பாடல்களைப் பாடி புகழ் பெற்றார். 1976-ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார். 1977-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். அசாம் சட்டப் பேரவை உறுப்பினராகி மக்கள் பணியாற்றினார்.

அவருக்குக் கிடைத்த விருதுகள்

சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருது (1975)
பத்ம பூசன் (2001)
தாதாசாகெப் பால்கே விருது (1992)
அசாம் ரத்னா (2009)
சங்கீத நாடக அகாதமி விருது (2009)
1993ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த ஆசியா பசிபிக் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இந்தித் திரைப்படம் ருடாலியின் இசையமைப்பிற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது.
சிறந்த நிகழ்கலை நாட்டுக் கலைஞராக அனைத்திந்திய விமர்சகர் சங்க விருது (1979)

பெப்ரவரி 2009இல், அனைத்து அசாம் மாணவர் சங்கம் பூபேன் அசாரிகாவினை கௌரவிக்கும் வண்ணம் குவஹாத்தியில் அவரது சிலை ஒன்றை நிறுவியுள்ளது.

இயக்குனர் டி.கே.போஸ் & இசைஞானி இளையராஜா கூட்டணி


எண்பதுகளிலே இசைஞானி, தனிக்காட்டு ராஜாவாக இருந்த நேரம். அவருடைய படத்தை போஸ்டரின் மேல் முகப்பில் ஒரு வட்டத்துக்குள் போட்டாலே போதும் வேறு எந்த சமரசங்களும் இல்லாமல் தயாரிப்பாளர் போட்ட காசுக்கு மேலாக எடுத்துக் கொண்டு போய்விடுவார். அந்த நேரத்தில் ராஜாவின் நாலு பாட்டுக் கிடைத்தால் போதும் அதற்கேற்றாற்போலக் கதை பண்ணிக் காசு பார்த்து விடலாம். இந்த நிலையில் கே.ரங்கராஜ், கங்கை அமரன் போன்ற இயக்குனர்கள் ராஜாவின் இசைக்குத் தோதான கதையைப் பொருத்திப் படம் பண்ணினார்கள். அதிலும் எண்பதுகளிலே கே.ரங்கராஜ் இன் படங்களுக்குத் தான் இசைஞானி இளையராஜா அதிகம் இசையமைத்தார் என்ற பெருமை வேறு.

இந்த வட்டத்தில் இருந்த இன்னொரு இயக்குனர் தான் டி.கே.போஸ். டி.கே.போஸ் இயக்கிய படங்கள் பெரும்பாலும் கங்கை அமரனின் மாமூல் கதைகளாக இருந்த காரணத்தால் அதிகம் தெரியாமலேயே மறைந்து போனவர் இவர். அந்த நேரத்தில் பேசும் படம், பொம்மை போன்ற சினிமா இதழ்கள் வந்துகொண்டிருந்தன. அந்த இதழ்களில் புதுப்படங்கள் குறித்த கண்ணோட்டத்திலேயே டி.கே.போஸ் என்ற இயக்குனர் கவிதை பாடும் அலைகள் என்றதொரு படத்தை இயக்குவதாக அறிந்து கொண்டேன். அப்போது தான் எங்கே படித்த ஞாபகம் , டி.கே.போஸ் உம் இசைஞானி இளையராஜாவும் பால்யகால நண்பர்கள் என்று. கவிதை பாடும் அலைகள் படத்துக்கு முன்பதாகவே என்னை விட்டுப் போகாதே, பொங்கி வரும் காவேரி, ராசாவே உன்னை நம்பி ஆகிய படங்களை இசைஞானி இளையராஜாவோடு கூட்டணி அமைத்து இயக்கியிருக்கின்றார் இவர். அப்போதெல்லாம் இசைஞானியின் பாடல்களைக் கேட்டுக் கேட்டு உடம்பெல்லாம் சுதி ஏற்றிக் கொண்டு திரிந்த வேளை, பாட்டுக் காட்சியையும் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் வீடியோ கடைகளில் இந்தப் படங்களைத் தேடியெடுத்து நண்பன் வீட்டு வீசிஆரில் போட்டுப் பார்த்ததுண்டு. நாலு பாட்டுக்காக ஒரு முழு நீளப்படத்தையே இரண்டரை மணி நேரம் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் அப்போது. ரஜினி, கமல் என்று கோஷ்டி அமைத்துப் படம் பார்க்கும் நண்பர் கூட்டத்தில், இளையராஜாவுக்காக ராமராஜனையும், புதுமுகத்தையும் பார்க்கும் சகிப்புத் தன்மை எனக்கு இருக்கலாம், கூட்டாளிகளுக்கு இருக்குமா? அடிக்கடி பல்பு வாங்கினேன். அதிலும் கவிதை பாடும் அலைகள் என்ற படத்தை நான் பரிந்துரைக்கப் போய், வீடியோக்கடையில் வாங்கி வீட்டுக்காரரோடு படம் பார்த்த இன்னொரு நண்பன் கொடுத்த சாபம் இன்றுவரை நினைவில் இருக்கு.
ஆனாலும் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தூண்டியது அந்தப் படத்தில் வந்த எல்லாப் பாடல்களுமே அப்போது சென்னை வானொலியில் பிரபலப்படுத்தப்பட்டவை.


டி.கே.போஸ் என்ற இயக்குனர் தன்னளவில் ரசிகர்களைத் திருப்திப்படுத்தக் கூடிய படங்களை அதிகம் கொடுக்காவிட்டாலும், இசைஞானி இளையராஜாவோடு இணைந்த இந்தப் படங்களே அவருக்கான விலாசத்தைக் கொடுத்திருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 18, 2011 இல் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த இவரின் நினைவாக, டி.கே.போஸ், ராஜாவோடு கூட்டணி அமைத்த படங்களின் பாடற் தொகுப்பை இங்கே தருகின்றேன்.

பொங்கி வரும் காவேரி படத்திற்காக வரும் “வெள்ளிக் கொலுசு மணி வேலான கண்ணுமணி” அருண்மொழியோடு சித்ரா

ராசாவே உன்னை நம்பி படத்தில் வரும் “ராசாத்தி மனசுல இந்த ராசாவின் நெனப்புத் தான்” மனோவோடு பி.சுசீலா

என்னை விட்டுப் போகாதே படத்திற்காக”பொன்னப்போல ஆத்தா” பாடும் இசைஞானி இளையராஜா

கவிதை பாடும் அலைகள் படத்தில் வரும் முத்தான மூன்று பாடல்கள் இனி

“உன்னைக் காணாமல் நான் ஏது” அருண்மொழி, சித்ராவோடு

“வானிலா தேனிலா வாடைப்பூ நிலா” மனோவும், சித்ராவும்

“கண்ணே என் கண்மணியே” மனோவும், சித்ராவும்

நடிகர் ரவிச்சந்திரன் நினைவில்…!

“மலேசிய மண் இன்னொரு கலைஞனை இன்று இழந்து நிற்கின்றது” காலை அலுவலகத்துக்குக் கிளம்பும் வேளை என் ஐபொட் இல் இருந்த THR ராகா வானொலி நடிகர் ரவிச்சந்திரனின் மறைவுச் செய்தி பறைகின்றது. நடிகர் ரவிச்சந்திரன் சமீபகாலமாக உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தார் என்ற செய்திகள் வந்தாலும், இந்த இழப்பை ஏற்க மனம் மறுத்தது.

எண்பதுகளில் அத்திப்பூத்தாற் போல ரூபவாஹினியில் ஏதோவொரு வெள்ளிக்கிழமை மலரும் தமிழ்த்திரைப்படங்கள். அப்படி ஒன்றில் வந்தது தான் அதே கண்கள் திரைப்படம். அதுவரை சினிமா என்றால் சிவாஜி, எம்ஜிஆர், கமல், ரஜினி என்று சுற்றிக்கொண்டிருந்த வயசில் ரவிச்சந்திரன் என்ற நடிகரை ஒரு மர்மப்படத்தில் முதன் முதலில் காணும் போதே அந்த வயசில் அவரின் கலகலப்பான நடிப்பில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டது. பின்னர் ரவிச்சந்திரன் நடித்த எல்லாப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படாவிட்டாலும் அவர் நடித்த நல்ல படங்கள் சிலதையாவது பார்க்கக் கூடியதாக இருந்தது. காதலிக்க நேரமில்லை என்ற அவரது அறிமுகப்படத்தில் இருந்து, உத்தரவின்றி உள்ளே வா என்று வேறு சில பெயர் தெரியாத படங்களை எல்லாம் சினிமா ஈடுபாடு அதிகம் இல்லாத வயதில் பார்த்திருக்கின்றேன்.

தமிழ்சினிமாவில் எப்போதுமே இரண்டு பரபரப்பான நாயகர்கள் இருக்க, அவர்களுக்கு மாற்றாக அடுத்த தரவரிசை நாயகர்களையும் வைத்து அழகு பார்க்கும். எண்பதுகளில் ரஜினி கமல் என்றிருக்க, கார்த்திக், பிரபு , மோகன் என்று ஒரு அடுக்கு இருந்தது போல, அறுபதுகளில் இருந்து எழுபதுகளில் கமல், ரஜினி சகாப்தம் வரும் வரை எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், என்ற வட்டத்தில் ரவிச்சந்திரனையும் விலக்கமுடியாது. ஒரு கல்லூரி மாணவனுக்குரிய களையான தோற்றம், கூடவே அழகாக நடனமாடவும், நளினமாகப் பேசவும் தெரிந்த நடிகராக அறியப்பட்டவர் ரவிச்சந்திரன். அரவிந்தசாமி, மாதவன் வகையறாவுக்கு எப்படி வேட்டி கட்டி மண்வெட்டியைக் கையில் கொடுக்க முடியாதோ அதே மாதிரியான ஒரு நாகரீகக் களை ரவிச்சந்திரனுக்கு. ஶ்ரீதர், சி.வி.ராஜேந்திரன் போன்ற இயக்குனர்களுக்குக் கட்டுப்பட்டு கதையோட்டத்தோடு நாயகன் நாயகி, நகைச்சுவை, நடிகர், குணச்சித்திரங்கள் என்று சமமாக இழைய வரும் பாத்திரங்களுக்காக படைப்புக்களில் ரவிச்சந்திரன் போன்றோர் தான் தெரிவாக அமைந்து விட்டனர்.

கல்லூரிப் பருவத்தில் நடிக்க வந்து இளமை எச்சமிருந்தாலும் நடிப்புத்துறையில் ரவிச்சந்திரனுக்கான இடம் இல்லாமல் போகவே ஒரு இடைவெளி. திரைப்படக்கல்லூரி மாணவர்கள் ஆபாவாணன் தலைமையில் பரபரப்பாக இயக்கிய “ஊமை விழிகள்” படத்திலே குதிரை வண்டியில் கம்பீரமாக வந்து பெண்களின் கண்களைப் பறிக்கும் ஒரு வில்லனாக மறுபடியும் வந்த இவருக்கு இந்தப் படத்தில் கூட காதல் இழப்பில் குணம் மாறும் ஒரு பாத்திரமாக அமைந்தது. தொடந்து பலபடங்களில் குணச்சித்திரமாகத் தன் அடுத்த சுற்றை நிகழ்த்தினார், கூடவே படம் ஒன்றையும் இயக்கினார். நடிகர் ரவிச்சந்திரனுக்கு ஊமை விழிகள் படத்தைத் தவிர வேறு படங்கள் அவரின் அடுத்த சுற்றை மெய்ப்பிக்கவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் ரவிச்சந்திரனுக்கான இடம் தமிழ் சினிமாவில் என்றும் உண்டு.

ரவிச்சந்திரன் நினைவில் அவரின் திரைப்படங்களில் இருந்து பாடல்கள் சில

“நாளாம் நாளாம் திருநாளாம்” – காதலிக்க நேரமில்லை

“தொடுவதென்ன தென்றலோ” – சபதம்

“தோள் கண்டேன் தோளே கண்டேன்” – இதயக்கமலம்

“நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா” – காதலிக்க நேரமில்லை

“கண்ணுக்குத் தெரியாதா” – அதே கண்கள்

“மாதமோ மார்கழி” – உத்தரவின்றி உள்ளே வா

“விஸ்வநாதன் வேலை வேணும்” – காதலிக்க நேரமில்லை பாடற் காட்சி

மானேஜர் மாதவன் இல்லாத அஞ்சலி அப்பார்ட்மெண்ட்ஸ்


ரயிலில் என் அலுவலகத்துக்குப் போகும் போதும், திரும்பி வரும் போதும் இன்னபிற வேலைகளைச் செய்யும் போதும் உலகவானொலிகளைக் காதுக்குள் ஒலிக்கவிடுவது என் வழக்கம். ஒவ்வொரு வானொலியிலும் இருந்து தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளைக் கேட்க ஏதுவாக வைத்திருக்கின்றேன். அப்படிச் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமானது தான் சென்னை ஹலோ எஃப் எம் இல் இடம்பெறும் “அஞ்சலி அப்பார்ட்மெண்ட்ஸ்”. அந்த நிகழ்ச்சியை நான் தேர்ந்தெடுத்துக் கேட்கக் காரணமே அதில் வரும் குறு நாடக வடிவில் ஓடும் நகைச்சுவைப் பகுதிகள். ஒவ்வொரு பத்து நிமிட இடைவெளியில் வரும் அந்த நாடக அங்கத்தில் இடம்பெறுவது இதுதான்.

ஓரங்க நாடகமாக அரங்கேறும் அஞ்சலி அப்பாட்மெண்ட்ஸ் இன் மேனேஜர் மாதவன் ஒவ்வொரு அங்கத்திலும், அந்த அப்பார்ட்மெண்ட் செக்கரட்ரி பெண்ணோடு வம்பளத்து வசமாக மாட்டிக் கொள்ளுவார்.
ஒருமுறை அஞ்சலி அப்பார்ட்மெண்டில் இருக்கும் ப்ளாட் ஒன்றில் இருக்கும் மலையாளப் பெண்ணிடம் மலையாளம் கற்றுக் கொண்டு பேசுகிறேன் பேர்வழி என்று சொதப்புவதும், இன்னொரு முறை பொய் சொல்லித் தன் கிராமத்துக்குப் போக லீவு கேட்டு மாட்டிக் கொள்வதும், இன்னொரு சந்தர்ப்பத்த்தில் பக்கத்து ப்ளாட்களில் ஓசிச் சமையலை ருசி பார்க்க ஐடியா போட்டுக் குட்டு வாங்குவதும், பிறிதொருமுறை அப்பாட்மெண்டின் கணக்குப் புத்தகங்களைப் பழைய பேப்பருக்குப் போட்டு தப்புக் கணக்குப் போடுவதும் என்று இப்படியான அப்பார்ட்மெண்ட் சூழலை மையப்படுத்திய நகைச்சுவை ஓரங்க நாடகங்களாக அவை இருக்கும். ஒவ்வொரு அங்கம் முடிவில் மேனேஜர் மாதவன் எடுத்துக் கொண்ட சமாச்சாரத்தை அடியொற்றிய திரையிசைப்பாடல் ஒன்று முத்தாய்ப்பாய் முடிக்கும். ஒவ்வ்வொரு நிகழ்ச்சியிலும் பல அங்கங்கள் இருக்கும் இடையிடையிடையே பாடல்களோடு.

தனக்கே உரிய கிராமியம் கலந்த குரலில் நைச்சியமாகப் பேசி மற்றவரை நம்ப வைக்க இவர் பண்ணும் அட்டகாசங்களைக் கேட்டுச் சிரிக்காதவர் இல்லை என்பேன். மானேஜர் மாதவன் யார் என்றே தெரியாத நிலையில் அவருக்கென்ற கற்பனை உருவை மனதில் பதித்து இது நாள் வரை அவரைக் காதுக்குள் ரசித்து வந்தேன். ஆனால் இப்போது உண்மைத் தமிழன் அண்ணாச்சியின் இந்தப் பதிவைப் பார்த்ததும் உண்மையில் கலங்கிப் போனேன். நான் வானொலி நிகழ்ச்சி செய்துகொண்டிருக்கும் போதே நான் ஆத்மார்த்தமாக நேசித்த வானொலிக் கலைஞரின் இழப்பைக் கேட்பது இன்னொரு துயரம். இனி எனக்கான வானொலி நிகழ்ச்சிகளில் ஒன்று இல்லாமல் போகின்றது மானேஜர் மாதவன் என்ற பாத்திரம் யார் என்று தெரிகின்ற போது இனி அவர் இல்லை என்ற உண்மை வலிக்கின்றது. மானேஜர் மாதவன் என்ற கோபால் அண்ணனுக்கு என் ஆழ்ந்த அஞ்சலியைப் பதிவாக்குகிறேன்.

புகைப்படம் நன்றி: உண்மைத்தமிழன் வலைப்பதிவு

நந்தனா….வானத்துமலரே…எழுதுகிறேன் ஒரு கடிதம்


எத்தனை செல்வங்கள் கிடைத்தாலும் செல்வத்துள் பெருஞ்செல்வம் பிள்ளைச்செல்வம் என்பார்கள். அப்படியானதொரு செல்வத்துக்காகப் பல்லாண்டுகள் காத்திருந்தவர் எல்லாச் செல்வங்களையும் கொண்டிருந்த பாடகி சித்ரா. நீண்ட நாட்களாக அவருக்குப் பிள்ளை இல்லை,அந்த ஏழ்மையை மனதுள் புதைத்துக் கொண்டிருந்த அவருக்கு தேவா இசையில் புதியவர் இளந்தேவன் வரிகளில் கல்கி படத்துக்காகப் பாடும் வய்ப்புக் கிடைக்கின்றது.
“முத்து முத்து மகளே முகங்காணா நிலவே
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து –
கற்பனையில் பெற்ற கண்மணியே நானுனக்கு
கவிதையில் எழுதும் கடிதம்”

இப்படியாகக் கருவுறாத் தாய் ஒருத்தியின் ஏக்கம் சுமந்த பாடலாக வருகின்றது. பாடலைப் பாடி முடித்து விட்டு பாடல் ஒலிப்பதிவுக் கூடத்திலேயே தன் மனதில் அதுநாள் வரை கொண்டிருந்த சுமையை இறக்குமாற்போல வெடித்து அழுகிறார் சித்ரா. இது நடந்தது 1996 ஆம் ஆண்டு.

2006 ஆம் ஆண்டு மலையாளத் திரையுலக இசை மேதை ரவீந்திரன் இசையில் “நந்தனம்” திரைப்படத்துக்காக சித்ராவுக்கு அவரின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத பாடலாக “கார்முகில் வந்த” என்ற பாடல் கிட்டுகிறது. கேரள அரசின் சிறந்த பாடகிக்கான விருதை மட்டுமல்ல இது நாள் வரை அவர் ஏங்கிக் கொண்டிருந்த பிள்ளைச் செல்வமும் கிடைக்கிறது.

அந்தப் பாடல் ஒலிப்பதிவு வேளையில் இதுநாள் வரை கிட்டாத கரு உருக்கொண்டிருக்கும் வேளை அந்தப் பாடல் வாய்ப்பைச் சித்ரா தட்டிக்கழிக்க, ரவீந்திரனோ இல்லை நீ தான் பாடணும் என்று வற்புறுத்திப் பாடவைக்கிறார். பாடலும் பிரசவிக்க, பிள்ளைச் செல்வமும் கிட்ட, ஆசையோடு பேர் வைக்கிறார் அந்தப் பிள்ளைக்கு “நந்தனா” என்று

தன்னைப் பற்றிப் பேசும் வாய்ப்புக்களில் நந்தனாவை அதிகம் சேர்த்துக் கொள்ள சித்ரா தவறுவதில்லை. சிட்னியில் இசை நிகழ்ச்சி செய்ய வந்த போது கூட ஒரே நந்தனா புராணம் தான். நந்தனாவுக்கு இசை பிடிக்கும் என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்லிவைத்த அந்தச் சித்ராவின் மனதில் நிறைந்து இருந்த தாய்மையின் பூரிப்புத் தெரிந்தது.

ஏப்ரல் 14, துபாயில் உள்ள எமிரேட்ஸ் ஹில்ஸ் இல் இருக்கும் நீச்சல் குளத்தில் காத்திருந்த காலன் “நந்தனா”வை சித்ராவிடம் இருந்து நிரந்தரமாகப் பிரித்தெடுத்துவிட்டான் 🙁

முத்து முத்து மகளே முகங்காணா நிலவே
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து –
கற்பனையில் பெற்ற கண்மணியே நானுனக்கு
கவிதையில் எழுதும் கடிதம்

எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்தின் நிலவே வாழ்க்கையின் பொருளே வா
எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்

பாறையில் மலர்ந்த தாமரையே இரவினில் எழுந்த சூரியனே
எழாமலே எழும் நிலா நீயே

நந்தனாவுக்கு என் ஆத்மார்த்தமான அஞ்சலிகள்