கவிஞர் வைரமுத்துவுடன் சில இசையமைப்பாளர்கள்

இன்று கவிஞர் வைரமுத்து அவர்களின் பிறந்த தினம். அதையொட்டிய சிறப்புப் பகிர்வைக் கொடுக்க ரயில் பயண சிந்தனையில் தோன்றியது தான் இந்தப் பட்டியல். 

இளையராஜா இசையில் 
அவரின் “இது ஒரு பொன்மாலைப் பொழுது” அறிமுகப் பாடலைப் போன்று ஒவ்வொரு இசையமைப்பாளர் இசையிலும் இயற்கையை நேசிக்கும் பாடலைத் தான் முதலில் பட்டியல் போட எண்ணினேன். ஆனால் நேரம் போதாமையால் கொஞ்சம் பொதுவான பாடல் பட்டியலோடு சந்திக்கிறேன்.
இது ஒரு பொன்மாலைப் பொழுது – நிழல்கள் (இளையராஜா)

மேகமே மேகமே – பாலைவனச் சோலை
(சங்கர் கணேஷ்)
ஆவாரம் பூவு ஆறேழு நாளா – அச்சமில்லை அச்சமில்லை (வி.எஸ்.நரசிம்மன்)
ஆனந்த தாகம் – வா இந்தப் பக்கம் (ஷ்யாம்)
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே – வெளிச்சம் (மனோஜ் – கியான்)
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே – அமரன் (ஆதித்யன்)
புல்வெளி புல்வெளி தன்னில் – ஆசை (தேவா)
தென்மேற்குப் பருவக்காற்று – கருத்தம்மா (ஏ.ஆர்.ரஹ்மான்)
இன்னிசை பாடி வரும் – துள்ளாத மனமும் துள்ளும் (எஸ்.ஏ.ராஜ்குமார்)
தாமரைப் பூவுக்கும் – பசும் பொன் (வித்யாசாகர்)
வானும் மண்ணும் ஒட்டிக் கொண்டதே – காதல் மன்னன் (பரத்வாஜ்)
மூங்கில் காடுகளே – சாமுராய் (ஹாரிஸ் ஜெயராஜ்)
பூவினைத் திறந்து கொண்டு – ஆனந்தத் தாண்டவம் (ஜி.வி.பிரகாஷ் குமார்)
பர பர பறவை ஒன்று – நீர்ப்பறவை (ரகு நந்தன்) 
சர சர சாரக்காத்து – வாகை சூடவா  (ஜிப்ரான்) 
ஈரக்காத்தே நீ வீசு – இடம் பொருள் ஏவல் (யுவன் ஷங்கர் ராஜா)
பாடல்களின் திரட்டு இங்கே 

பாடல் தந்த சுகம் : வானம் அருகில் ஒரு வானம்

எண்பதுகளில் இறுதியில் கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் வெளிவந்த படம் “நியாயத் தராசு”. இந்தப் படத்தின் மூலக் கதை மலையாள தேசத்தின் உயரிய கதை சொல்லி M.T.வாசுதேவன் எழுதியது. 

கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் பொறுப்பைக் கவனித்துக் கொண்டார். அந்தக் காலகட்டத்தில் கலைஞரின் வசனப் பங்களிப்பென்றால் ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் அல்லது வி.எம்.சி.ஹனிபா இயக்கியதாக இருக்கும். விதிவிலக்காகவும் வேறு சில இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றிய வகையில் இந்தப் படம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
அத்தோடு கலைஞர் கருணாநிதியால் “கலையரசி” பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட ராதிகா கலைஞரின் எழுத்தின் புரட்சிகரமான பெண் பாத்திர வெளிப்பாடாக நடித்து வந்த போது மாறுதலாக நடிகை ராதா நடித்த வித்தியாசமான படம் என்ற பெருமையும் இதற்குண்டு.
“ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா” பாட்டு அலை அடித்துக் கொண்டிருந்த போது “வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா”  http://www.youtube.com/watch?v=Hh3z6YWMsbs&sns=tw என்று மனோ தன் பங்குக்குக் கொடுத்த துள்ளிசை. அதுவரை நகைச்சுவை நடிகராக வந்த சார்லிக்குக் குணச்சித்திர வேடம் கட்டி இந்தப் பாடலையும் கொடுத்து அழகு பார்த்தது “நியாயத் தராசு”
இயக்குநர் ராஜேஷ்வரின் சிறப்பம்சம் என்னவென்றால் இவர் இயக்கிய அனைத்துப் படங்களிலும் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கும். உதாரணம் இவரின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய
இதயத் தாமரை, அமரன் ஆகியவற்றில் பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவாளராக மணிரத்னம் படங்கள் தவிர்த்து அப்போது ராஜேஷ்வர் படங்களில் இடம்பிடித்தவர்.
நியாயத்தராசு படத்தின் ஒளிப்பதிவும் முக்கியமாகச் சொல்லி வைக்கவேண்டியது. ஆனால் G.P.கிருஷ்ணா என்பவரே இந்தப் படத்தில் பங்களித்திருந்தார், ஒளிப்பதிவின் வெளிப்பாட்டில் பி.சி.ஶ்ரீராம் தரம் இந்தப் படத்தில் இருக்கும்.
ராஜேஷ்வரின் அடுத்த தனித்துவம் பாடல்கள். அது சங்கர் கணேஷ் ஆக இருந்தாலென்ன, ஆதித்யனை அறிமுகப்படுத்தித் தொடர்ந்து பயன்படுத்தினாலென்ன கலக்கலான  (இந்திர விழா விதிவிலக்காக) பாடல்களை வாங்குவதில் சமர்த்தர். 
சங்கர் கணேஷ் இரட்டையர்களுக்கு ராஜேஸ்வரின் “நியாயத் தராசு”, “இதயத் தாமரை” போன்ற படங்களோடு கே.சுபாஷின் “உத்தம புருஷன்” , “ஆயுள் கைதி” போன்ற படங்கள் மாமூலான அவர்களின் இசையில் இருந்து விலகித் தனித்துத் தெரிந்தவை.
நியாயத் தராசு படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதினார். அன்றைய காலத்தில் சந்திரபோஸ்,சங்கர் கணேஷ் ஆகியோர் வைரமுத்துவின் தொடர்ச்சியான பங்களிப்புக்கு உறுதுணையாக விளங்கினர்.
“வானம் அருகில் ஒரு வானம்” பாடல் அதன் வரிகளின் கட்டமைப்பாலும், கே.ஜே.ஜேசுதாஸின் சாதுவான குரலாலும் அப்போது வெகுஜன அந்தஸ்த்தைப் பிடித்தது. சென்னை வானொலி நேயர் விருப்பத்திலும் அடிக்கடி வந்து போனது.
அது மட்டுமா? சிறந்த பாடகருக்கான தமிழக அரசின் விருதை கே.ஜே.ஜேசுதாசுக்கு அளித்த வகையில் இன்னும் பெருமை கொண்டது.
இந்தப் பாடலின் சரணத்தில் பிரதான பாத்திரத்தின் அவலப் பக்கத்தைக் காட்டும் களத்துக்கான பாடலாக அமைந்தாலும் பொதுவாக ரசிக்க வைக்கக் காரணம், பாடல் வரி, இசை, குரல் எல்லாமே கூட்டணி அமைத்துக் கொடுத்த புரிந்துணர்வு உடன்படிக்கை தான்.
ஊர் உறங்கிய பொழுதில் இந்தப் பாடலை ஒலிக்க விட்டுத் தனியே ரசிக்கும் போது ஆத்ம விசாரணை செய்து ஆற்றுப் படுத்தும் ஆற்றல் கொண்டது இந்தப் பாடல்.
வானம் அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டிப் போகும்
கானம் பறவைகளின் கானம்
 http://www.youtube.com/watch?v=61zuhSxACZI&sns=tw 

“கவிஞர் வாலியும் இசைஞானி இளையராஜாவும்”

“ஒரு திரைப்பட இசையமைப்பாளர் என்கிற முறையில் இளையராஜாவோடு எனக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. ஓர் இறையருள் மிக்க இசைக்கலைஞர் என்னும் வகையில், மாற்றுக்கருத்தே என்னுள் என் இதயத்தில் முளைவிட்டதில்லை. அவர் ஒரு மகாபுருஷர் என்கின்ற மதிப்பை இப்பிறவி முழுதும் நான் என் மனத்துள் பொன்னே போல் வைத்துக் காப்பேன்” – கவிஞர் வாலி “நானும் இந்த நூற்றாண்டும் (1995)

இன்றோடு (Oct 29) கவிஞர் வாலி அவர்களுக்கு எண்பத்து ஒன்று வயதாகிவிட்டது. கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இசைஞானி இளையராஜாவோடு இணைந்து பணியாற்றும் பாடலாசிரியர் கவிஞர் வாலி என்பது ஒரு தனித்துவம் மிக்க விஷயம்.

இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் பஞ்சு அருணாசலத்தில் இருந்து கங்கை அமரன், வைரமுத்து உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஒரு படத்தின் முழுப்பாடல்களையும் எழுதும் கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. இசைஞானி இளையராஜாவோடு அவரின் ஆரம்ப காலம்தொட்டுத் தொடர்ந்து வரும் பாடலாசிரியர்களில் பஞ்சு அருணாசலத்துக்கு அடுத்து கவிஞர் வாலியைப் பார்க்கிறேன்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தில் கண்ணதாசனுக்கு ஒரு மாபெரும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுத் தொடர்ந்த கூட்டணி போலவே இசைஞானி இளையராஜா,பாடலாசிரியர் வாலி கூட்டணியையும் பார்க்கிறேன். கவிஞர் வாலி அவர்கள் இசைஞானி இளையராஜாவுக்கு முற்பட்ட காலத்தின் இசையமைப்பாளர்கள் பலரோடு பல்லாண்டுகள் முன்னரேயே பணியாற்றி ஏராளம் சிறப்பான பாடல்களைக் கொடுத்தாலும் இளையராஜாவோடு சேர்ந்து பணியாற்றியபோது கிடைத்த மக்களின் அபிமானம் தனித்துவமானது என்பது என் எண்ணம். இதைவகையான உதாரணத்தைப் பாடகி எஸ்.ஜானகிக்கும் கொடுக்கலாம்.

அதிலும் குறிப்பாக கவிஞர் வாலி அவர்கள் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் இருந்து தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை ஏராளம் படங்களுக்கு இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல் எழுதியவர் என்ற கெளரவத்தை விட, அதில் நிறையவே படங்கள் கவிஞர் வாலி மட்டுமே முழுப்பாடல்களும் எழுத வெளிவந்தவை.

குறிப்பாக அக்னி நட்சத்திரம், தளபதி, வருஷம் 16 போன்ற மாபெரும் வெற்றிப்படங்களும் உள்ளடங்குகின்றன. இந்தச் சிறப்புப் பகிர்வில் கவிஞர் வாலி அவர்கள் இசைஞானி இளையராஜாவின் இசையில் முழுப்படத்துக்கும் பாடல்கள் எழுதிய பத்துப் படங்களில் இருந்து பாடல்கள் அலங்கரிக்கின்றன. கவிஞர் வாலி அவர்கள் நீண்ட நாள் நோய் நொடியின்றி வாழ வாழ்த்தி வருகின்றன இந்தப் பாடல்கள்.

மீரா படத்தில் இருந்து “புது ரூட்டுல தான்” பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

கிளிப்பேச்சு கேட்கவா படத்தில் இருந்து “சிவகாமி நெனப்பினிலே” பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
 

வருஷம் 16 படத்தில் இருந்து “பழமுதிர்ச்சோலை எனக்காகத் தான்” பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தில் இருந்து “ராஜா ராஜா தான்” பாடியவர்கள்: எஸ்.ஜானகி, அருண்மொழி குழுவினர்
 

மகுடம் படத்தில் இருந்து “சின்னக்கண்ணா” பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

அக்னி நட்சத்திரம் படத்தில் இருந்து “ஒரு பூங்காவனம்” பாடியவர்: எஸ்.ஜானகி

ராசா மகன் படத்தில் இருந்து “வைகாசி வெள்ளிக்கிழமை தானே” பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மாமியார் வீடு படத்தில் இருந்து “என்னை தொடர்ந்தது” பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி

தளபதி படத்தில் இருந்து “சின்னத்தாயவள் தந்த ராசாவே” பாடியவர்:எஸ்.ஜானகி

தாலாட்டு கேட்குதாம்மா படத்தில் இருந்து “நேந்துக்கிட்ட நேர்த்திக்கடன் தீர்த்துப்புட்டேன்” பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம்
 

கவிஞர் பொன்னடியானும் இசைஞானி இளையராஜாவும்

“இன்று வந்த இன்பம் என்னவோ அதைக் கண்டு கண்டு அன்பு பொங்கவோ, குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே” சுந்தரக்குரல் சொர்ணலதா பாடிய இந்தப் பாடலை எத்தனை தடவை அலுக்காமல் கேட்டிருப்போம். அதுவும் “என் ராசாவின் மனசிலே” படம் வந்த காலத்தில் இந்திய வானொலி வர்த்தக ஒலிபரப்பு விவித்பாரதியில் மிஞ்சிப்போனால் அரை நிமிடமோ அதற்குச் சில நொடிகளோ மட்டுமே கஞ்சத்தனமாக அறிமுகமான நாள் முதல் இந்தப் பாடலின் மீதான காதல் குறையவில்லை, படம் வெளிவந்து 21 ஆண்டுகள் கழிந்தும்.

இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகாலக் கவிஞர் பஞ்சு அருணாசலத்தில் இருந்து பின்னாளில் கங்கை அமரன், வாலி, வைரமுத்து போன்ற பரவலாக அறியப்பட்ட பாடலாசிரியர்கள் வரை ஒரு குழாம் இருக்க, இன்னொரு வரிசையில் புலமைப்பித்தன், பிறைசூடன், மு.மேத்தா, முத்துலிங்கம் என்ற வகையில் கவிஞர் பொன்னடியானும் இருந்திருக்கின்றார். ஆனால் திரையிசைப்பாடல்களின் நீண்டகாலத்துரதிஷ்டமாக, பாடலாசிரியர்கள் குறித்த அறிமுகமில்லாமல் பாடல்களைக் கேட்டு ரசிக்கப் பழகிவிட்டோம். வானொலிகளும் நைச்சியமாக அவற்றைத் தவிர்த்துவிட்டன. இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை முப்பதுக்கும் மேற்பட்ட பாடலாசிரியர்களைப் பட்டியலிடலாம். ஆனால் நமக்கு அதிகம் அறிமுகமான பாடல்களில் வைரமுத்து, வாலி போன்றவர்களே ஓரளவு இனங்காணப்பட்ட பாடலாசிரியர்களாக அந்தந்தப் பாடல்களுக்கு உரித்துடையவர்களாகின்றார்கள்.

எண்பதுகளிலே இவ்வாறு இளையராஜாவின் கடைக்கண் பார்வையில் அருமையான பாடல்கள் பலவற்றைக் கொடுத்த கவிஞர் பொன்னடியானைச் சிறப்பிக்கும் வகையில் இந்தப் பதிவைக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். கவிஞர் பொன்னடியான், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஜி.கே.வெங்கடேஷ், சந்திரபோஸ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்கும் பாடல்களை எழுதியிருந்தாலும், இசைஞானி இளையராஜா உச்சத்தில் இருந்த போது ஜோடி கட்டிய பாடல்கள் அளவுக்கு மற்றைய இசையமைப்பாளர்களின் இசையில் வந்த இவரது பாடல்கள் அதிகம் அறியப்படவில்லை.

கவிஞர் பொன்னடியான் இசைஞானி இளையராஜா கூட்டணியில் வந்த ஒரு சில நன்முத்துக்களை இங்கே பகிர்கின்றேன்.

சொல்லத்துடிக்குது மனசு, எடிட்டர் லெனின் இயக்கத்தில் வந்த படம். இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் படங்கள் எடுத்துக் கெடுத்த பாவம் லெனினையும் சேரும். சொல்லத்துடிக்குது மனசு படத்தில் வந்த பாடல்கள் அத்தனையும் முத்துக்கள். இந்தப் படத்தில் வந்த “குயிலுக்கொரு நிறம் இருக்கு” என்ற மலேசியா வாசுதேவன் பாடலைப் பாடுகின்றார்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 கவிஞர் பொன்னடியானுக்கு ஒரு படத்தின் முழுப்பாடல்களையும் எழுதவைத்துக் கெளரவம் கொடுத்த பாடம் “ஒருவர் வாழும் ஆலயம்”. இந்தப் படத்தின் கதைக்களனும் இசை சார்ந்தது. “உயிரே உயிரே”, “மலையோரம் மயிலே”, “சிங்காரப் பெண் ஒருத்தி” போன்ற இந்தப் படத்தின் பாடல்கள் வரிசையிலே கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் “நீ பெளர்ணமி என்றும் என் நெஞ்சிலே” பாடலும் சிறப்பானது. 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 இசைஞானி இளையராஜாவின் குடும்ப நிறுவனம் “பாவலர் கிரியேஷன்ஸ்” தயாரிப்பில் வந்த படம் “ராஜாதி ராஜா”. இருந்தாலும் கங்கை அமரன் தவிர, பிறைசூடனும், பொன்னடியானும் பாடல்களிலே தம் பங்களிப்பை வெளிப்படுத்தினர், குறிப்பாக “எங்கிட்ட மோதாதே” பாடல் அன்றைய எதிராளி சந்திரபோஸ் இற்கு குட்டு வைக்கவும் பயன்பட்டிருக்கலாம் என்று நண்பர்களிடையே அப்போது பேசிக்கொண்டோம். சந்திரபோஸ் தன் பங்கிற்கு “வில்லாதி வில்லனையும் தோற்கடிப்பேன் நான் ராஜாதிராஜனையும் ஜெயிச்சிடுவேன்” என்று பதிலுக்கு பாட்டைப் போட்டார். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
தொண்ணூறுகளிலே முக்கியமான தயாரிப்பாளராக விளங்கி ஏ.ஜி.சுப்ரமணியம் தயாரிப்பில் வந்த படம் “தங்கக்கிளி”. வழக்கம்போல அவரது தோல்விப்படங்களில் இதுவும் ஒன்று. காரணம் என்ற இயக்குனராக ஆசைப்பட்ட ராஜவர்மனின் மாமூல் கதை. நடிகர் முரளி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சேர்ந்த கூட்டணி என்றளவில் மட்டுமே இன்றுவரை நினைப்பிருக்கும். இந்தப் படத்திலே வரும் “நினைக்காத நேரமில்லை” பாடல் இலங்கை வானொலிகளில் இன்றளவும் நேசிக்கப்படும் பாட்டு. பொன்னடியான் வரிகளுக்கு மனோ, எஸ்.ஜானகி பாடியிருக்கிறார்கள். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
ராமராஜனின் இறங்குமுகம் ஆரம்பிக்கும் வேளை வந்த படங்களில் ஒன்று “பாட்டுக்கு நான் அடிமை” இந்தப் படத்தில் வரும் “தாலாட்டு கேட்காத பேர் இங்கு யாரு” ரயில் சத்தம் சந்தம் போட பொன்னடியான் வரிகள் இசைஞானியின் இசையில் மயிலிறகாய். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
எஸ்.பி.பாலசுப்ரமணியம், விஜய்காந்த் அண்ணன் தம்பியாக நடித்த பரதன் படத்தில் வரும் “அழகே அமுதே” பாடல் பொன்னடியானுக்குக் கிடைத்த இன்னொரு முத்து. 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

“என் ராசாவின் மனசிலே” தொண்ணூறுகளில் கொடுத்த பிரமாண்டமான வெற்றி இன்றளவும் மறக்கமுடியாது. வெற்றியில் சம அளவு பங்குபோட்டன இசைஞானி இளையராஜாவின் இனிய பாடல்கள். முரட்டு சுபாவம் உள்ள தன் கணவனை வெறுத்து ஒதுக்கும் அவள், தன் கணவனின் நேசம் உணர்ந்து பாடும் பாட்டு. தம் திருமண பந்தத்தின் அறுவடையாய் தம் வயிற்றில் சுமக்கும் குழந்தையோடு பாடும் இந்தப் பாடலை பொன்னடியான் களம் உணர்ந்து பொருள் கொடுத்து எழுதியிருக்கிறார். பாடலின் வரிகளோடு சீராகப் பயணிக்கும் இசை, சொர்ணலதாவின் குரல் என்று எல்லாமே சரிசமமாக அமைந்த பெருஞ்சுவை. இதே பாடல் இந்தப் படத்தில் மூன்று பாடல்களாக (சோகம் உட்பட) பொன்னடியான் அவர்களால் எழுதப்பட்டிருக்கின்து. அடுத்த தடவை “குயில்பாட்டு ஓ வந்ததென்ன இளமானே” பாடலைக் கேட்கும் போது கண்டிப்பாகக் கவிஞர் பொன்னடியானும் உங்கள் நினைப்பில் வருவார். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

“பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்” – பாடல் பிறந்த கதை

கவிஞர் முத்துலிங்கத்துடனான என் வானொலிப் பேட்டியின் ஒரு பகுதியை முன்னர் தந்திருந்தேன். தொடரின் அடுத்த பகுதியில் “பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்” பாடல் பிறந்த கதையைச் சொல்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களது வழிகாட்டலிலே நல்லதொரு அங்கீகாரம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அவருடைய ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்திருந்தீர்கள், எம்.ஜி.ஆர் அவர்களுடனான அறிமுகம் உங்களுக்கு எப்படி அமைந்திருந்தது?

நான் அப்போது அலையோசை பத்திரிகையில் இருந்தேன். நான் அடிப்படையிலேயே எம்.ஜி.ஆர் ரசிகன். அப்போது அவர் கட்சி ஆரம்பித்திருந்த நேரம் , பேச்சாளனாகவும் இருந்தேன். பத்திரிகைப் பேட்டிக்காக நான் அப்போது அவரைச் சந்திப்பேன். அதற்கு முன்னரேயே நான் சினிமாவில் பாட்டு எழுதிட்டேன். பின்னர் அலையோசை பத்திரிகை எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதால் அந்தப் பத்திரிகையில் இருந்து விலகினேன். அந்த நேரம் அவரின் அலுவலத்துக்குச் சென்றபோது,
“நீங்க பத்திரிகையை விட்டு விலகிட்டிங்களாமே, கொஞ்சம் பணம் கொடுக்கிறேன் வாங்கிக்குங்க” என்று சொன்னார்.
“இல்லை பணம் வேண்டாம் தலைவரே அதுக்குப் பதிலா வேலை கொடுங்க” என்றேன்.
“வேலை கொடுக்கும் போது கொடுக்கிறேன், இப்போ வாங்கிக்க” என்றார்.
“இல்லை வேண்டாம்” என்று மறுத்திட்டேன். அதுக்கப்புறம் தான் அவர் தன்னோட படங்களுக்குத் தொடர்ந்து பாட்டு எழுத வாய்ப்புக் கொடுத்தார். அப்படி அவருக்காக எழுதிய முதற்படம் உழைக்கும் கரங்கள்.

உழைக்கும் கரங்கள் திரையில் எம்.ஜி.ஆருக்காக முத்துலிங்க எழுதிய முதற்பாட்டு
“கந்தனுக்கு மாலையிட்டாள்” – பாடியவர் வாணி ஜெயராம்

உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் என்று எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எழுதியிருக்கீங்க, ஊருக்கு உழைப்பவன் படத்தில் வரும் “பிள்ளைத் தமிழ் பாடுகின்றேன்” அந்த அருமையான பாடல் பிறந்ததற்குப் பின்னால் சுவாரஸ்யமான தகவல் உண்டா?

அப்போல்லாம் எனக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுத வராது, மியூசிக் டைரக்டர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து தான் பாட்டு எழுதுவோம். இப்பல்லாம் கேசட் கொடுத்து எழுதச் சொல்லிடுவாங்க.

முதலில் அந்தப் பாட்டின் சிச்சுவேஷனைச் சொல்லிடுறேன். எம்.ஜி.ஆர் பெண்களுக்குக் கணவராக நடிப்பார். அதாவது ஒரு பெண்ணின் உண்மையான கணவன், இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிக்க வேண்டிய சூழ்நிலை. அப்படிப்பட்ட நேரத்தில் சொந்த மனைவிக்குப் பிறந்த குழந்தை இறந்து போகும். அந்தப் பிள்ளையை அடக்கம் பன்ணி விட்டு இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிப்பாரே அந்த வீட்டுக்கு வருவார். அப்போது அந்தப் பெண்ணின் குழந்தைக்குப் பிறந்த நாள். அந்தக் குழந்தையை வாழ்த்திப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. தன்னுடைய சொந்தக் குழந்தை இறந்து போனதை நினைத்துப் பாடுவாரா, இல்லை இந்தக் குழந்தைக்குப் பிறந்த நாள் என்று சொல்லி வாழ்த்திப் பாடுவாரா அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலை, அதை மனதில் வைத்துக் கொண்டு இரண்டும் கலந்து வருவது போல் பாடல் வரவேண்டும்.
அதனால நான் முதலில் எழுதினேன்,

“நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடல் இருக்குது
நினைக்கும் போது பாசம் என்னும் அலையடிக்குது
என் கண்ணுக்குள்ளே குழந்தை என்னும் மலர் சிரிக்குது
என் கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் கொடுக்குது
எது நடக்கும் எது நடக்காது இது எவருக்கும் தெரியாது
எது கிடைக்கும் எது கிடைக்காது இது இறைவனுக்கும் புரியாது”

அப்படி ஒரு பல்லவி எழுதினேன், மியூசிக் டைரக்டர் உட்பட எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. ஆனால் எம்.ஜி.ஆரிடம் கொண்டு போகும் போது மூணு நாலு பல்லவி எழுதி அதுக்குத் தொடர்பா வர்ர மாதிரி சரணம் எழுதியும் காட்டணும். அதனால இரண்டு மூன்று பல்லவி எழுதிட்டேன்.
“ஆட்டி வைத்த ஊஞ்சல் அது முன்னும் பின்னும் ஆடும்” அப்படின்னு இன்னொரு பல்லவி.
இன்னும் மூணு பல்லவி வேணும் என்று எழுதச் சொன்னாங்க. நான் அதே இடத்தில் இருந்தா கற்பனை வராது வெளியே கொஞ்சம் நடந்து போட்டு வரேன் என்று மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணரிடம் சொல்லிவிட்டு சிவாஜி கணேசன் வீடு இருக்கும் தெற்கு போக்கு ரோடு இருக்கும் பக்கமா நடந்து போயிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்பவும் எனக்குச் சரியா ஒண்ணும் வரல. அந்த நேரம் எனக்குப் பக்கத்தில் கார் ஒன்று வந்து நின்றது சடன் பிரேக் போட்டு. காரின் உள்ளே மறைந்த கவர்ச்சி வில்லன் கண்ணன், நடிகர் ஐசரி வேலன் உள்ளே இருந்தாங்க.

“உங்க பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்தது என்று தலைவர் கிட்ட (எம்.ஜி.ஆர்) பாவலர் முத்துசாமி சொல்லிக்கிட்டிருந்தாரு. முத்துசாமி தி.மு.க காலத்தில் அமைச்சரா இருந்தவரு பின்னர் அண்ணா தி.மு.க வைச் சேர்ந்திருந்தார். அவர் இப்படி உங்கள் பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்ததாக தலைவரிடம் சொன்னதாக அவர் சொல்லவும் எனக்கு உடனே பொறி தட்டியது. நான் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாக வைத்துத் தான் எம்.ஜி.ஆர் பிள்ளைத் தமிழ்ன்னு ஒரு குறுங்காப்பியம் எழுதியிருந்தேன். இங்கேயும் எம்.ஜி.ஆர் ஒரு பிள்ளைக்காகத் தான் பாடுவார். அப்படிப் பிள்ளைக்காகப் பாடுவதாக
“பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் – ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்

என்று பல்லவியை எழுதி விட்டு விஸ்வநாதன் அண்ணனுக்கு பாடிக்காண்பிக்க அதுக்கு ட்யூன் போட்டார்.அதுக்கு லிங்கா வரக்கூடியமாதிரி சரணமும் அமைத்துப் பாடலாக்கி அதை எம்.ஜி.ஆரிடம் காண்பித்தோம். அப்போ சத்யா ஸ்டூடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங் நடந்துக்கிருந்துச்சு. அப்போது டைரக்டர் ஏ.பி.நாகராஜன், டைரக்டர் நீலகண்டன், டைரக்டர் கே.சங்கர் எல்லாரும் இருந்தாங்க. அப்போது போட்டுக் காமிச்சோம். அப்போது ஏ.பி. நாகராஜன் இந்த சிச்சுவேஷனுக்கு இந்தப் பாட்டு நல்லாயிருக்கேன்னு “நெஞ்சுக்குள்ளே அன்பு” என்று தொடங்குற பாட்டைச் சொன்னார். இன்னொருத்தர் “ஆட்டி வைத்த ஊஞ்சல்” அப்படித் தொடங்குற பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னார். எல்லாத்தையும் கேட்ட எம்.ஜி.ஆர் “நீங்க சொல்றதெல்லாம் நல்லாயிருக்கு ஆனா பிள்ளைத் தமிழ் என்று தொடங்கும் பாட்டுத் தான் பாப்புலராகும் ரொம்ப கேட்சிங்கா இருக்கு” என்று சொன்னார். அதாவது சினிமாத் துறையில் எல்லா நுணுக்கங்களையும் எம்ஜிஆர் புரிந்தவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

“பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்” – ஊருக்கு உழைப்பவன் திரைக்காக கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல்