இசையமைப்பாளர் கங்கை அமரன் – பாகம் இரண்டு

கலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாளராகவும் விளங்கி வந்தார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் கங்கை அமரன் என்ற பதிவின் வழியாக அவரின் ஆரம்ப காலத்துப் படங்களில் இருந்து சிலவற்றைப் பகிருந்திருந்தேன் இங்கே

அந்தப் பதிவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் பாடல்கள் தொடரும் என்றிருந்தேன். ஐந்து வருடங்களின் பின்னர் இந்த வாய்ப்பு மீண்டும் கிட்டியிருக்கிறது.
இந்தத் தொகுப்பில் கங்கை அமரன் அவர்களுக்குப் புகழ் சேர்த்த இன்னும் சில பாடல்களோடு சந்திக்கிறேன்.
ஏவிஎம் நிறுவனம் தயாரித்து மிகப் பெரிய வெற்றி கண்ட “பாட்டி சொல்லைத் தட்டாதே” திரைப்படம் அந்தப் படத்தில் நடித்த நடிகர் பாண்டியராஜனுக்கு இன்னொரு சுற்று படங்களைக் குவிக்கவும் வழிகோலியது. அந்தப் படத்தின் வசனகர்த்தா அந்தக்காலத்தில் புகழ்பூத்த நகைச்சுவை எழுத்துக்காரர் சித்ராலயா கோபு. பாட்டி சொல்லைத் தட்டாதே கொடுத்த தெம்பும் காரணமாக இருக்கக் கூடும், பாண்டியராஜனை இரட்டை நாயகராக வைத்து “டில்லி பாபு” என்ற படத்தை இயக்கினார் சித்ராலயா கோபு. பாண்டியராஜன், ரஞ்சனி, சீதா நடித்த இந்தப் படத்தின் இசையைக் கவனித்துக் கொண்டார் கங்கை அமரன். “டில்லி பாபு” படத்தில் வந்த “கூரைப் புடவை ஒண்ணு வாங்கி வா நாந்தான் உன் சொந்தமல்லவா” பாடலை எண்பதுகளின் திரையிசைக் காலத்தில் வாழ்ந்து கழித்தவர்களைக் கேட்டுப் பாருங்கள் உச் கொட்டி ரசிப்பார்கள். அந்தளவுக்கு இந்தப் பாடல் அந்தக் காலகட்டத்தில் ஏக பிரபலம். இரு வாரங்களுக்கு முன்னர் சிட்னியில் நான் இயங்கும் வானொலி வழியாகவும் இந்தப் பாடலைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் என் சார்பில் ஒலிபரப்பி என் கணக்கைத் தீர்த்துக் கொண்டேன். இந்தப் பாடலின் இடையிசை, குறிப்பாக இரண்டாவது சரணத்துக்கு முன்னீடு தான் கங்கை அமரன் கொடுத்த இசையில் அவர் கொடுக்கும் முத்திரை என்பது அவரின் பாடல்களை அறிந்து ரசிப்பவர்கள் உணர்வார்கள்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும்  அந்த இனிய பாடல் இதோ
ஆக்க்ஷன் கிங் என்று புகழப்பட்ட பாம்பு கராத்தே நடிகர் அர்ஜீன் ஒரு கட்டத்தில் முழு நீள அடி,உதை அலுத்துவிட எண்பதுகளின் இறுதியில் கொஞ்சம் தாய், தங்கை பாசக் கணக்கை வைத்துப் படங்களில் நடித்தார். அதிலும் கூடப் பழிவாங்கல் இருக்குமே.
அப்படி ஒரு படம் தான் “எங்க அண்ணன் வரட்டும்”. அந்தக் காலகட்டத்தில் பெயரே கொஞ்சம் புதுமையாக வைத்து எடுத்த படம் அது. அர்ஜூன், ரூபிஅனி ஜோடி போட்டது.
இந்தப் படத்தில் கங்கை அமரன் அவர்கள் கொடுத்த முத்திரைப் பாடலாக நான் கருதுவது “பூவெடுத்து மாலை கட்டி”. இதை அந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோவும் அடிக்கடி மெய்ப்பித்தது. ஆனால் எனக்கிருந்த பெரும் மனக் கவலை என்னவென்றால் இந்தப் பாடலை ஏதோ ஒரு காதல் ஜோடிப் பாடல் என்றே அனுபவித்துக் கேட்டிருந்தேன். பல காலத்துக்குப் பின்னர் தான் இது அண்ணன் தங்கை பாடல் என்று வரிகளை உன்னிப்பாகக் கவனித்து உணர்ந்து நொந்தேன். உண்மையில் இது காதல் ஜோடிப் பாடலுக்கே வெகு கச்சிதமாகப் பொருந்தக் கூடிய இசைவடிவம். 
சமகாலத்தில் இந்தப் பாட்டின் இசை நேர்த்தி கூட கங்கையின் இளைய அண்ணன் கொடுத்த இசையோ என்ற தடுமாற்றமும் கூட இருந்ததுண்டு.
மேலே சொன்ன “கூரைப் புடவை ஒண்ணு” பாடலோடு இங்கே தரும் “பூவெடுத்து மாலை கட்டி பொண்ணுக்கொரு சேலை கட்டிப் பாரு”
பாடலை அடிக்கடி பொருத்திக் கொள்வேன். இந்தப் பாடல் சோல வடிவிலும் உண்டு. சந்தோஷப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.
“மழலையின் மொழியினில் அழகிய தமிழ் படித்தேன் நான் குழலிசை யாழிசை இணைந்தொரு இசை படித்தேன்” http://shakthi.fm/ta/player/play/s3db4b511# 
மறக்க முடியுமா “பிள்ளைக்காக” படத்தில் வந்த இந்தப் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை. எத்தனை தடவை இலங்கை வானொலியின் வாழ்த்துப் பாடல்களில் பல நாட்கள் இது தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த அழகான பாடலைக் கூட்டுக் குரல்களோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடியது போன்று தனிப்பாடலாக இசையமைப்பாளர் கங்கை அமரனும் பாடியிருப்பார். கங்கை அமரன் இசையமைக்கும் படங்களில் இவ்வாறு இரட்டைப் பாடல்களில் அவரே ஒன்றைப் பாடுவது அரிதான காரியம். அந்த வகையிலும் இது சிறப்புச் சேர்த்தது. சந்திரபோஸ் ஆக இருக்குமோ அல்லது சங்கர் கணேஷா என்ற குழப்பத்துக்குக் கூட முடிவுகட்டியது கங்கை அமரன் பாடிய இரண்டாவது வடிவம்.
சின்னத்தம்பி என்ற பேரலை அடிக்க முன்னர் பிரபு, பி.வாசு கூட்டணியில் அமைந்த “பிள்ளைக்காக” படத்துக்கு முன்னர் இந்த இருவரும் சேர்ந்து அப்போது ஒரு வெற்றிக் கூட்டணியை “என் தங்கச்சி படிச்சவ” படத்துக்காக அமைத்திருந்தனர். “சொந்த சுமையைத் தூக்கித் தூக்கிச் சோர்ந்து போனேன்” http://youtu.be/KM5gpixtacU
பாடலைச் சொன்னால் இப்போது பலர் படத்தை அடையாளம் காண்பர். அந்தப் படத்திலும் கங்கை அமரனின் இசையும் கை கொடுத்தது என்பதை அந்தப் பாடலின் வெற்றியே மெய்ப்படுத்தும்.
“சின்னத்தம்பி பெரியதம்பி” படத்தில் வந்த “ஒரு காதல் என்பது” பாசலைத் தான் எல்லாரும் சிலாகிக்கிறீர்கள். ஆனால் அந்தப் பாடல் மட்டும் அண்ணன் இளையராஜா கொடுத்தது. ஆனால் இதே படத்தில் இன்னொரு அழகான பாட்டு இருக்கே அதை நீங்க யாரும் ஏன் அதிகம் பேசுவதில்லை என்ற தொனியில் கங்கை அமரன் கொடுத்த வாக்குமூலத்தில் முன் மொழிந்த பாடல் தான் “மழையின் துளியில் லயம் இருக்குது” ஆகா என்னவொரு இனிமையான மழைத்தூறல் போலச் சாரலடிக்கும் பாட்டு என்று என்று மனது தாளம் போட சித்ரா பாடுவதை லயிக்காமல் இருக்க முடியாதே. மணிவண்ணனின் ஆஸ்தான நாயகன் சத்யராஜ், பிரபுவோடு கூட்டணியில் நதியாவும் இணைந்த கலகலப்பான படத்தில் கங்கை அமரனின் முத்திரைப் பாட்டு இது.
“நெற்றித் திலகமும் தாலியும் நிலைத்து வாழ்கவே” என்று மேலேழும் அந்த டி.எம்.செளந்தரராஜன் என்ற மேதையின் குரலில் இருந்து சிலாகித்துக் கொண்டே முன்னோக்கி நகரவேண்டும் “பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே” பாடலுக்கு, அப்போது தெரியும் கங்கை அமரன் அவர்களின் சாகித்தியத்தின் மாண்பு.
“நீதிபதி” திரைப்படத்துக்காக கங்கை அமரன் இசையமைத்தது இந்தப் பாட்டு. கே.பாலாஜி அவர்களின் தயாரிப்பில் அண்ணன் இளையராஜாவின் ஆரம்பகாலத்துப் படங்களில் “தீபம்” ஒளியேற்றி வைத்த பாட்டுத் திறத்தில் சகோதரர் கங்கை அமரனும் பாலாஜி அவர்களின் படங்களில் பங்கேற்ற வகையில் இந்தப் படமும் சிறப்புக்குரியது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, கங்கை அமரன் என்று அந்தக் காலகட்டத்தில் கே.பாலாஜியோடு இயங்கிய போது ஒன்றை நான் என் கருத்து வெளிப்பாடாகப் பார்க்கிறேன்.
கங்கை அமரனின் இசை இளையராஜாவினது ஊற்றோ என எண்ணுமளவுக்கு அமைந்த பாடல்கள் ஒருபுறமிருக்க, நீதிபதி படத்தின் பாடல்களில் குறிப்பாக இந்தப் பாடல் மெல்லிசை மன்னர் முத்திரை போன்று அமைந்திருக்கும். இரு மேதைகளையும் போற்றி விளங்கும் கங்கை அமரனுக்கு இம்மாதிரி வாய்ப்பு எதேச்சையாகவோ  அமைந்து போனது வெகு சிறப்பு.
எண்பதுகளின் கல்யாண வீடியோக்களில் இந்தப் பாடல் மணமகள் அழைப்பில் காட்சியோடு பின்னப்பட்டிருக்கும் அளவுக்கு அப்போது பிரபலமானது. இப்போதெல்லாம் உரிமையோடு நண்பர்களின் கல்யாண வீடுகளில் இதை நான் பரிந்துரைக்கும் போது “கிவ் மீ மை தாலி மை லைஃபே ஜாலி ஜாலி” போன்ற வஸ்துகளை  அவர்கள் மோகிக்கும் போது காலத்தின் கொடுமை என்றறிக.
டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா, எஸ்.பி.சைலஜா குரல்களில் வரும் “பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே” பாடலை முடிந்தால் உங்கள் கல்யாண வீட்டுப் பாடல்களில் சேருங்கள், அமோகமாக இருக்கும். கங்கை அமரனின் இசையில் விளைந்த உன்னதங்களில் இந்தப் பாட்டுக்கு மட்டும் தனிப்பத்தி எழுத வேண்டும் அவ்வளவு மகத்துவம் நிறைந்த பாட்டு. சிலவேளை என் கண் உடைப்பெடுத்துச் சாட்சியம் பறையும் அளவுக்கு இந்தப் பாட்டை நேசிக்கிறேன்.
கங்கை அமரன் கொடுத்த இசை முத்துகளும் கரையில ஆகவே இன்னொரு தொகுப்பிலும் வருவார்.

தமிழ் திரையிசையில் குளிரும் பனியும்

சிட்னியில் குளிரோ குளிர் இதைச் சொன்னால் கனடாக்காரர் கொக்கட்டம் விட்டுச் சிரிப்பார்கள். ஆனாலும் நம்புங்க மக்கா நம்புங்க ?

இன்று காலை வேலைக்குப் போக முன்னர் என் லஷ்மியை அதான் கார் ஐ எட்டிப் பார்த்தால் பின் கண்ணாடி பூராவும் மீன் செதில் போல பனிக்கட்டித் துகள்கள். அவை எல்லாவற்றையும் வழித்துத் துடைத்து விட்டு ரயிலேறினேன் வேலைக்குப் போக.
எங்க ஊரு பாட்டுக்காரன் கண்ட நேரமெல்லாம் சங்கதி தேடி சங்கதி போட்டுப் பாடுமாற் போல எனக்கும் இந்தப் பனி மேல் ஒரு பனி வந்து (ஈழத்தில் உனக்கென்ன பனியோ என்று கேட்டால் உனக்கென்ன பைத்தியமா என்று அர்த்தமுங்கோ) பனிக்குளிரை வைத்து வந்த பாடல்களை தேடு என்று மூளைக்குக் கட்டளை போட்டேன். 
சும்மாவே பட்டென்றால் குதியன் குத்தும் என்ர மூளை இந்த விளையாட்டுக்கு நான் ரெடி என்று நாள் முழுக்கப் போட்ட பட்டியல் தான் இது.
இளையராஜா இசையில் 
1. பனி விழும் மலர்வனம் – நினைவெல்லாம் நித்யா

2. பனி விழும் இரவு – மெளன ராகம்

3. இளம்பனித் துளி விழும் நேரம் – ஆராதனை

4. அடிக்குது குளிரு – மன்னன்
5. பனி விழும் மாலையில் – மீரா
6. பனிமழை விழும் – எனக்காகக் காத்திரு
7. ஊட்டிக் குளிரு அம்மாடி – ஆயிரம் நிலவே வா
8. காலைப் பனியில் ஆடும் மலர்கள் – காயத்ரி
9. பனி விழும் பூ நிலவில் – தைப்பொங்கல்
10. சிலு சிலுவெனக் குளிர் அடிக்குது – ராஜாதி ராஜா
பிற இசையமைப்பாளர்கள்
11. புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை – அன்பே வா (எம்.எஸ்.விஸ்வநாதன்)
12. புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது – ரோஜா (ஏ.ஆர்.ரஹ்மான்)
13. பனித்துளி பனித்துளி  – கண்ட நாள் முதல் (யுவன் ஷங்கர் ராஜா)
14. பனிக்காற்றே பனிக்காற்றே – ரன் (வித்யாசகர்)
15. முன் பனியா – நந்தா (யுவன் ஷங்கர் ராஜா)
16. பனி இல்லாத மார்கழியா – ஆனந்த ஜோதி (விஸ்வநாதன் ராமமூர்த்தி)
17. பெளர்ணமி நிலவில் பனி விழும் நிலவில் – கன்னிப் பெண் (எம்.எஸ்.விஸ்வநாதன்)
18. அனல் மேலே பனித்துளி – வாரணம் ஆயிரம் (ஹாரிஸ் ஜெயராஜ்)
19. பனி படர்ந்த மலையின் மேலே – ரத்தத் திலகம் (கே.வி.மகாதேவன்)
20. வெள்ளிப் பனிமலை மீது – கப்பலோட்டிய தமிழன் (ஜி.ராமநாதன்)

பாடல் தந்த சுகம் : வானம் அருகில் ஒரு வானம்

எண்பதுகளில் இறுதியில் கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் வெளிவந்த படம் “நியாயத் தராசு”. இந்தப் படத்தின் மூலக் கதை மலையாள தேசத்தின் உயரிய கதை சொல்லி M.T.வாசுதேவன் எழுதியது. 

கலைஞர் கருணாநிதி திரைக்கதை, வசனம் பொறுப்பைக் கவனித்துக் கொண்டார். அந்தக் காலகட்டத்தில் கலைஞரின் வசனப் பங்களிப்பென்றால் ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் அல்லது வி.எம்.சி.ஹனிபா இயக்கியதாக இருக்கும். விதிவிலக்காகவும் வேறு சில இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றிய வகையில் இந்தப் படம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
அத்தோடு கலைஞர் கருணாநிதியால் “கலையரசி” பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட ராதிகா கலைஞரின் எழுத்தின் புரட்சிகரமான பெண் பாத்திர வெளிப்பாடாக நடித்து வந்த போது மாறுதலாக நடிகை ராதா நடித்த வித்தியாசமான படம் என்ற பெருமையும் இதற்குண்டு.
“ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா” பாட்டு அலை அடித்துக் கொண்டிருந்த போது “வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா”  http://www.youtube.com/watch?v=Hh3z6YWMsbs&sns=tw என்று மனோ தன் பங்குக்குக் கொடுத்த துள்ளிசை. அதுவரை நகைச்சுவை நடிகராக வந்த சார்லிக்குக் குணச்சித்திர வேடம் கட்டி இந்தப் பாடலையும் கொடுத்து அழகு பார்த்தது “நியாயத் தராசு”
இயக்குநர் ராஜேஷ்வரின் சிறப்பம்சம் என்னவென்றால் இவர் இயக்கிய அனைத்துப் படங்களிலும் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கும். உதாரணம் இவரின் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய
இதயத் தாமரை, அமரன் ஆகியவற்றில் பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவாளராக மணிரத்னம் படங்கள் தவிர்த்து அப்போது ராஜேஷ்வர் படங்களில் இடம்பிடித்தவர்.
நியாயத்தராசு படத்தின் ஒளிப்பதிவும் முக்கியமாகச் சொல்லி வைக்கவேண்டியது. ஆனால் G.P.கிருஷ்ணா என்பவரே இந்தப் படத்தில் பங்களித்திருந்தார், ஒளிப்பதிவின் வெளிப்பாட்டில் பி.சி.ஶ்ரீராம் தரம் இந்தப் படத்தில் இருக்கும்.
ராஜேஷ்வரின் அடுத்த தனித்துவம் பாடல்கள். அது சங்கர் கணேஷ் ஆக இருந்தாலென்ன, ஆதித்யனை அறிமுகப்படுத்தித் தொடர்ந்து பயன்படுத்தினாலென்ன கலக்கலான  (இந்திர விழா விதிவிலக்காக) பாடல்களை வாங்குவதில் சமர்த்தர். 
சங்கர் கணேஷ் இரட்டையர்களுக்கு ராஜேஸ்வரின் “நியாயத் தராசு”, “இதயத் தாமரை” போன்ற படங்களோடு கே.சுபாஷின் “உத்தம புருஷன்” , “ஆயுள் கைதி” போன்ற படங்கள் மாமூலான அவர்களின் இசையில் இருந்து விலகித் தனித்துத் தெரிந்தவை.
நியாயத் தராசு படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதினார். அன்றைய காலத்தில் சந்திரபோஸ்,சங்கர் கணேஷ் ஆகியோர் வைரமுத்துவின் தொடர்ச்சியான பங்களிப்புக்கு உறுதுணையாக விளங்கினர்.
“வானம் அருகில் ஒரு வானம்” பாடல் அதன் வரிகளின் கட்டமைப்பாலும், கே.ஜே.ஜேசுதாஸின் சாதுவான குரலாலும் அப்போது வெகுஜன அந்தஸ்த்தைப் பிடித்தது. சென்னை வானொலி நேயர் விருப்பத்திலும் அடிக்கடி வந்து போனது.
அது மட்டுமா? சிறந்த பாடகருக்கான தமிழக அரசின் விருதை கே.ஜே.ஜேசுதாசுக்கு அளித்த வகையில் இன்னும் பெருமை கொண்டது.
இந்தப் பாடலின் சரணத்தில் பிரதான பாத்திரத்தின் அவலப் பக்கத்தைக் காட்டும் களத்துக்கான பாடலாக அமைந்தாலும் பொதுவாக ரசிக்க வைக்கக் காரணம், பாடல் வரி, இசை, குரல் எல்லாமே கூட்டணி அமைத்துக் கொடுத்த புரிந்துணர்வு உடன்படிக்கை தான்.
ஊர் உறங்கிய பொழுதில் இந்தப் பாடலை ஒலிக்க விட்டுத் தனியே ரசிக்கும் போது ஆத்ம விசாரணை செய்து ஆற்றுப் படுத்தும் ஆற்றல் கொண்டது இந்தப் பாடல்.
வானம் அருகில் ஒரு வானம்
தரையில் வந்த மேகம்
தலை துவட்டிப் போகும்
கானம் பறவைகளின் கானம்
 http://www.youtube.com/watch?v=61zuhSxACZI&sns=tw 

'தேனிசைத் தென்றல்" தேவாவை சந்தித்த வேளை

நேற்றிரவு ‘தேனிசைத் தென்றல்’ தேவா மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுடனான

உணவு விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டேன். அவ்வேளை தேவா அவர்களுடன் எனது மனப் பகிர்வையும், கையோடு கொண்டு போன ‘தேனிசைத் தென்றல்’ தேவா கொடுத்ததில் பிடித்த நூறு என்ற எழுத்துப் பகிர்வையும், நினைவுப் பரிசோடு அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.
தேவாவிடம் நான் பேசியதில் இருந்து சில பகிர்வு,
கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போகும் இரவு பஸ் “கந்தன் இருக்குமிடம் கந்த கோட்டம்” என்ற உங்கள் கானா பாடலோடு தொடங்கியது. யாழ்ப்பாணத்தில் நான் இறங்கிய அந்த நாள் சைக்கிளை எடுத்துக் கொண்டு மளிகைக் கடைக்குப் போகும் போது ஒரு கலியாண வீட்டு ஒலிபெருக்கி “முத்து நகையே முழு நிலவே” என்று பாடியது. ஆகவே நீங்கள் இன்னமும் நம் கிராமங்களில் மறக்கடிக்கப்படாத இசையாக வாழ்கிறீர்கள்.
தேவா என்றால் கானா என்பதைத் தாண்டி நீங்கள் கொடுத்த மெலடி பாடல்கள் ஏராளம். ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஒவ்வொரு பாடல் என்று ஆசையாகக் கோத்து வைத்த நூறு பாடல் பகிர்வு இது.
தமிழ்த்திரையிசையில் தொண்ணூறுகள் தேவாவின் மகத்தான பங்களிப்பாக அமைந்தவை.
ஹரிஹரனுக்கு நீங்கள் கொடுத்த பாடல்கள் அளவுக்கு சிறப்பான பாடல்களை அதிகளவு வேறு யாரும் கொடுக்கவில்லை என்பது என் அபிப்பிராயம் என்று சொல்லி முடித்தேன்.
“ஆகா பட்டியலைத் தாருங்களேன் நானே மறந்த பாடல்களை நினைவுக்குக் கொண்டு வர உதவியா இருக்கும்” 
என்று சொல்லி ஆசையோடு பெற்றுக் கொண்டார் தேவா.

"மங்கியதோர் நிலவினிலே" நான்கு விதம்

இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளாகும். 

தமிழன்னை ஈன்றெடுத்த எங்கள் ஒப்பற்ற கவி பாரதியின் இந்த நாளில் அவர் எழுதிய “மங்கியதோர் நிலவினிலே” பாடலின் நான்கு வடிவங்கள், நான்கு வித மெட்டுகளில், நான்கு இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டிருப்பதை இங்கே பகிர்கின்றேன்.
எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் எழுதிய “ஒரு மனிதனின் கதை” மதுப்பழக்கத்தினால் எழும் சீரழிவை மையப்படுத்திய நாவல். இது நடிகர் ரகுவரன் முக்கிய பாத்திரமேற்று நடிக்க “ஒரு மனிதனின் கதை” என்ற பெயரிலேயே தொலைக்காட்சித் தொடராக ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. பின்னர் இதை “தியாகு” என்ற பெயரிலேயே ஏவிஎம் நிறுவனம் திரைப்படமாகவும் மாற்றியது. இதிகாசம் தவிர்ந்த சமூக நாவல் தொலைக்காட்சித் தொடராகவும் பின்னர் சினிமாவாகவும் மாற்றம் கண்டது தமிழில் இதுவே முதன்முறையாகும்.
“ஒரு மனிதனின் கதை” தொலைக்காட்சித் தொடரில் மகாகவி சுப்ரமணியபாரதியாரின் பாடல்கள் பயன்பட்டிருக்கின்றன. இசை வழங்கியவர்கள் சங்கர் – கணேஷ் இரட்டையர்கள். இதில் மிகவும் அழகாகப் பயன்பட்டிருக்கிறது பாரதியார் எழுதிய “மங்கியதோர் நிலவினிலே” பாடல். 
இந்தப் பாடலைப் பத்து வருடங்களுக்கு முன்னர் என்னுடைய இசைக் களஞ்சியத்தில் திரட்டி வைத்திருந்தது இப்போது பயனை அளிக்கின்றது. இன்று இணையத்தில் காணக்கிடைக்காத இப்பாடலை என் பிரத்தியோக ஒலித்தொகுப்பில் இருந்து பகிர்கின்றேன்.
பாரதியாரின் பாடல்களைத் திரையில் பயன்படுத்தும் உரிமம் பெற்ற ஏவிஎம் நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் பின்னர் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவற்றை நாட்டுடமை ஆக்கினார். இதனால் பல்வேறு தயாரிப்பாளர்களும் பாரதி பாடல்களைப் பயன்படுத்த முடிந்தது. ஏழாவது மனிதன் படத்தில் எல்.வைத்தியநாதன் இசையிலும், பாரதி படத்தில் இளையராஜா இசையிலும் பாரதி பாடல்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இதுதவிர வறுமையின் நிறம் சிகப்பு, சிந்து பைரவி போன்ற படங்களிலும் பாரதியின் ஒன்றிரண்டு பாடல்கள் பயன்பட்டன. சினிமா உலகில் பாரதியின் காதலனாக கே.பாலசந்தரைச் சொல்லுமளவுக்கு அவரின் பெரும்பாலான படங்களில் பாரதியின் அடையாளம் எங்கேனும் நேரடியான பாத்திரம், பாடல், கதைக்கரு என்று ஒட்டிக் கொண்டிருக்கும். 
“மங்கியதோர் நிலவினிலே” பாடலின் மேலும் மூன்று வடிவங்கள் இதோ. இங்கே சிறப்பு என்னவென்றால் சிவசங்கரி (ஒரு மனிதனின் கதை), அகிலன் (பாவை விளக்கு) ஆகிய இரு பெரும் எழுத்தாளரது படைப்புகளில் ஒரே பாடல் பயன்பட்டிருக்கும் தன்மை தான்.
திருமணம் படத்தில்
ஜி.ராமநாதன் இசையில் T.M.செளந்தரராஜன்

பாவை விளக்கு படத்தில்  சி.எஸ்.ஜெயராமன் பாடியது. இசை : கே.வி.மகாதேவன்
தேவநாராயணன் குரலில்

https://www.youtube.com/watch?v=6CZMVN9MLpo&sns=em

யார் பாரதி – நெல்லை கண்ணன்  பகிர்ந்த சிறப்பு மிகு உரை

"மனசுக்கேத்த மகராசா"வில் இருந்து "தேனிசைத்தென்றல்" தேவா

“மனசுக்கேத்த மகராசா” ராமராஜன் இயக்குநர்  பணியிலிருந்து நாயகனாக அடுத்த கட்டத்துக்குப் போன போது வந்த முக்கிய படமாக இது விளங்கியது.

அப்போது வாய்ப்புத் தேடி அலைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கும் வாழ்க்கைப் பாதையைக் காட்டியது இது.
“மனதோடு மனோ” ஜெயா டிவி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டபோது இந்தப் படத்துக்கு வாய்ப்புக் கிட்டிய அனுபவத்தை மிகவும் சுவையாகச் சொல்லியிருந்தார். ஆட்டோ பிடித்து ஆர்மோனியப் பெட்டியையும் போட்டுக் கொண்டு தயாரிப்பாளரைச் சந்திக்கப் போன போது நடு வழியில் வண்டி நின்று விடவே வாத்தியக் கருவியைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தும், ஓடியும் போய் தயாரிப்பாளரைச் சந்தித்ததாகவும், அந்த வட இந்தியத் தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைக்க ஹிந்திப் பாடலை எல்லாம் பாடிக் காட்டியதாகவும் சொல்லியிருந்தார்.
ராமராஜனைப் பொறுத்தவரை இசைஞானி இளையராஜாவின் இசையில் படங்கள் ஆக்கிரமித்த போதும் எஸ்.ஏ.ராஜ்குமார், கங்கை அமரன், தேவா போன்றோர் இசையிலும் நடித்திருக்கிறார். இவர்களில் தேவாவின் இசையில் மனசுக்கேத்த் மகராசா படமே மிகவும் பிரபல்யத்தை அப்போது கொடுத்தது. கிராமிய மெட்டில் அமைந்த பாடல்களில் “ஆறெங்கும் தானுறங்க” (எஸ்.ஜானகி, மனோ குரல்களில்) ஆறு கடல் மீனுறங்க” பாடலை மறக்க முடியுமா? இந்தப் பாடல் வந்த போது அப்போது ஒன்றாகச் சேர்ந்து பாட்டுக் கேட்கும் நமது ஊர் நண்பர்களுடன் சிலாகித்துப் பேசியிருந்தோம். அதே போல சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய “ஆத்து மேட்டுத் தோப்புக்குள்ளே “பாடலும் கூட.
மனசுக்கேத்த மகராசா படத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் தேவாவுக்குக் கிட்டிய ஆரம்பகால வாய்ப்பிலேயே கே.ஜே.ஜேசுதாஸ் நீங்கலாக பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன், உமா ரமணன், சித்ரா, மனோ, என்று 80 களில் கொடிகட்டிப் பறந்த அனைத்துப் பாடகர்களும் இந்தப் படத்தில் பாடியிருந்தார்கள். ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இது மாதிரியான வாய்ப்பு எனக்குத் தெரிந்து இதுவே முதல் முறை. இது மாதிரி வாய்ப்பே இனி வராதே.
“மனசுக்கேத்த மகராசா” படத்தின் கூட்டணி நாயகன் ராமராஜன், இயக்குநர் 
தீனதயாள், இசையமைப்பாளர் தேவா, கவிஞர் காளிதாசன் ஆகியோர் மீண்டும் இணைந்து கொடுத்த ஒரு அட்டகாச இசை விருந்து “மண்ணுக்கேத்த மைந்தன்” திரைப்படம் வாயிலாக அமைந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற “சிந்தாமணிக்குயிலே” (மனோ, எஸ்.ஜானகி), ஏ.ஆர்.ஷேக் மொஹமெட் பாடிய “ஓடுகிற வண்டி ஓட”, “கண்ணில் ஆடும் நிலவே” (எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா) போன்ற பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. அந்தக் காலகட்டத்தில் பாடகர் கிருஷ்ணராஜ் தனது பெயரை ராஜன் சக்ரவர்த்தி என்றே அறிமுகப்படுத்தியிருந்தார். “மண்ணுக்கேத்த மைந்தன்” படத்தின் பாடல்கள் “வைகாசி பொறந்தாச்சு” படத்தின் ஒலிநாடாவில் வெளி வந்து அப்போது புகழ்பெற்றாலும் படம் வெளிவந்த சுவடே இல்லை. 
ராமராஜனுக்கும் பின்னாளில் தேவாவோடு இணைந்து மனசுக்கேத்த மகராசா அளவுக்கு சிறப்பான பாடல் கூட்டணியாக அமையவில்லை.
சினிமாப் பாடல்களைப் பாடிப் பழகிய மெல்லிசைக் குழுவினர் ஒரு கட்டத்தில் தாமாகவே இசையமைக்கும் வல்லமையைப் பெற்றுவிடுவார்கள். தேனிசைத் தென்றல் தேவா கூட அப்படித்தான். போஸ் (சந்திரபோஸ்) – தேவா இரட்டையர்களாக மெல்லிசை மேடைகளில் கிட்டிய பயிற்சி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சந்திரபோஸ் முதலில் (80 களில்)  அடுத்து தேவா (90 களில்) என்று இயங்க வைத்தது. தேவாவின் இசை நேர்மை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் “மனசுக்கேத்த மகராசா” வில் தொடங்கி “வைகாசி பொறந்தாச்சு” தந்த நட்சத்திர அந்தஸ்த்தை வைத்துக் கொண்டு அவர் தனித்துவமாகக் கொடுத்த பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
உணமையில் இந்தப் பதிவு எழுத முன்னர் மனசுக்கேத்த மகராசா படத்தில் இருந்து “முகமொரு நிலா” என்ற பாடலைப் பற்றித் தான் எழுதுவதாக இருந்தது. அந்தப் பாடலைக் கேட்டாலே போதும் தேவா தனக்கான வெற்றிப் பாதையை எவ்வளவு சிறப்பாகப் போட்டிருக்கிறார் என்பதை. மெட்டமைத்ததில் இருந்து வாத்தியக் கருவிகளின் பயன்பாடு வரை சிறப்பாக அமைந்திருக்கும்.
இதோ அந்தப் பாடல் 

யுவன் ஷங்கர் ராஜா கொடுத்ததில் பிடித்த ஐம்பது

வீட்டில் ஒரு பிள்ளையை பெரிதும் நம்பிக் கொண்டிருக்க, இன்னொரு பிள்ளை சத்தமில்லாமல் ஜெயித்துக் காட்டுவது தமிழ் சினிமாவின் மாமூல் கதைகளன் மட்டுமல்ல ராஜா வீட்டிலும் இதுதான் கதை. 

அம்மா கிரியேஷன்ஸ் சிவாவே இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவின் வருகையை அரவிந்தன் படம் மூலமாக வழியேற்படுத்திக் கொடுத்தார்.
ஆனால் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களின் பரவலான அறிமுகத்தைப் பெற வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார் படம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. தொடர்ந்து செல்வராகவனும் சினிமாவுக்கு வந்து சேர துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என்று தொடர்ந்த இசை வெற்றிகளையும் கொடுத்தார் யுவன்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களில் ஒட்டுமொத்தமாக எல்லாப்பாடலும் சிறந்து விளங்கிய மிகச் சிறந்த இசைப்படைப்பு எது என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்வார்கள். அதில் 7ஜி ரெயின்போ காலனி பெருவாரியான வாக்குகளைப் பெறும். ஆனால் எனக்குத் தனிப்பட்ட ரீதியில் தீனா படத்தின் பாடல்கள் மீது தான் கொள்ளை ஆசை. யுவனோடு ஜோடி கட்டிய ஏ.ஆர்.முருகதாஸ் இற்கு இன்று வரை அதற்குப் பின்னால் ஒட்டுமொத்தப் பாடல்களும் சிறந்து விளங்கிய படம் வரவில்லை என்பேன்.
யுவனின் இசையுலக வெற்றிக்கு வஸந்த், செல்வராகவன் போன்ற இயக்குனர்களின் கையைப் பிடித்து இழுப்பார்கள். ஆனால் முன்னர் நான் ட்விட்டரில் சொன்னது போன்று யுவன் ஷங்கர் ராஜா பிரபலமாகப் பேசப்படும் படங்களை விட அதிக கவனத்தை ஈர்க்காத படங்களிலேயே அதிகம் சாதித்திருக்கிறார். ஆனால் அந்தப் பாடல்களைத் தேடிக் கேட்கும் பொறுமை அநேகருக்கு இல்லை. 
இளையராஜா காலத்துக்குப் பின்னர்  கூட்டணி ஆட்சி தான் இசைத்துறையில். அதிலும் தனித்து நின்று ஜெயிப்பதும், ( தகப்பனின் நிழல் படாமல் ) அவ்வளவு சுலபமில்லை. யுவனுக்கு அரவிந்தன் படம் எவ்வளவு முதல் சரிவைக் கொடுத்ததோ அது போலவே அவரின் இசைப்பயணத்தில் வெற்றியும் சறுக்கலும் மாறி வருகிறது. ஆனால் தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கும் போது அடித்து ஆடுவார். இன்றைய சூழலில் யுவனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இசையமைப்பாளருக்குமே சீரான சகாசங்கள் கிடைப்பதில்லை.
யுவன் இசையமைத்த சில பாடல்களைக் கேட்கும் போது நம்பவே முடியாத அளவுக்கு மெட்டமைப்பும், இசைக்கோர்ப்பும் இருக்கும். இசை சம்பந்தமாக யுவனிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவரின் பதில்களைப் படித்துப் பாருங்கள் நிறையவே தெளிவிருக்கும். 
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களில் என்னைக் கவர்ந்த ஐம்பது பாடல்களை இன்று அவரின் பிறந்த நாளில் கொடுக்கும் வாய்ப்புக்கிட்டியிருக்கிறது. இந்தப் பதிவே அஜித் மாதிரி எழுதினேன். ஹிஹி அதாவது நடந்து கொண்டே.
இந்தப் பட்டியல் எந்தத் தரவரிசையும் கொண்டிராது என் ஞாபக அடுக்குகளின் வெளிப்பாடு மட்டுமே.
1. நினைத்து நினைத்துப் பார்த்தேன் – 7G ரெயின்போ காலணி
2. சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் – தீனா
3. யாரோ யாருக்கு – சென்னை 28
4. சின்னஞ்சிறுசுக மனசு – குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
5. ஆனந்த யாழை மீட்டுகிறாள் – தங்க மீன்கள்
6. இரவா பகலா – பூவெல்லாம் கேட்டுப்பார்
7. வயது வா வா என்கிறது – துள்ளுவதோ இளமை
8. தொட்டு தொட்டு – காதல் கொண்டேன்
9. இதயம் இதயம் – பில்லா 2
10. தீப்பிடிக்க தீப்பிடிக்க – அறிந்தும் அறியாமலும்
11. மேற்கே மேற்கே – கண்ட நாள் முதல்
12. தாவணி போட்ட தீபாவளி – சண்டக்கோழி
13. காதல் வைத்து – தீபாவளி 
14. இதுவரை இல்லாத – கோவா
15. ஐய்யய்யோ – பருத்தி வீரன்
16. என் ஃபியூசும் போச்சு – ஆரம்பம்
17.  துளி துளி மழையாய் – பையா
18. என் அன்பே – மெளனம் பேசியதே
19. என் ஜன்னல் வந்த காற்று – தீராத விளையாட்டுப் பிள்ளை
20. இறகைப் போல – நான் மகான் அல்ல
21. பேசுகிறேன் – சத்தம் போடாதே
22. அடடா என் மீது – பதினாறு
23. என்ன என்ன ஆகிறேன் – காதல் சொல்ல வந்தேன்
24. சொல் பேச்சு – தில்லாலங்கடி
25. ஏதோ செய்கிறாய் – வாமனன்
26. மஞ்சக்காட்டு மைனா – மனதை திருடி விட்டாய்
27. முன்பனியா – நந்தா
28. ஈர நிலா – அரவிந்தன்
29. கொங்கு நாட்டு – வானவராயனும் வல்லவராயனும்
30. வானம் தூவும் – புன்னகை பூவே
31. ஏ நெஞ்சே – ஏப்ரல் மாதத்தில்
32. தீண்டி தீண்டி – பாலா
33. காதல் வளர்த்தேன் – மன்மதன்
34. தாஜ்மஹால் – கள்வனின் காதலி
35. எங்க ஏரியா – புதுப்பேட்டை
36. அரபி நாடே – தொட்டால் பூ மலரும்
37. ஆத்தாடி மனசு தான் – கழுகு
38. மெர்க்குரி பூவே – புதிய கீதை
39. காதல் என்பது – ஒரு கல்லூரியின் கதை
40. ஒரு கல் ஒரு கண்ணாடி – சிவா மனசுல சக்தி
41. கோடானு கோடி – சரோஜா
42. அலைபாயும் நெஞ்சிலே – ஆதலால் காதல் செய்வீர்
43. ராசாத்தி போல – அவன் இவன்
44. நீ நான் – மங்காத்தா
45. வெண்மேகம் – யாரடி நீ மோகினி
46. மச்சான் மச்சான் – சிலம்பாட்டம்
47. இரு கண்கள் சொல்லும்  – காதல் சாம்ராஜ்யம்
48. வானத்தையும் மேகத்தையும் – மச்சக்காரன்
49. பறவையே பறவையே – கற்றது தமிழ்
50. நட்பின் கதைகளை – காதல் 2 கல்யாணம்

இயக்குனர் இராம நாராயணன் திரைப்பாடல் திரட்டு

இயக்குனர் இராம நாராயணன் குறித்த சிறப்பு வானொலிப்பகிர்வொன்றை நமது ATBC வானொலிக்காகத் தயாரித்து வழங்கியிருந்தேன். இந்தத் தொகுப்பில் இராம நாராயணனின் முக்கியமான சில படங்களில் இருந்து பாடல் தொகுப்போடு 1 மணி நேரம் 18 நிமிடங்கள் வரை அமைகின்றது. இப்பாடல்களை நீங்களும் கேட்டு மகிழ இதோ அந்த ஒலிப்பதிவைப் பகிர்கின்றேன்.

Download பண்ணிக் கேட்க

Download பண்ணிக் கேட்க

தொகுப்பில் இடம்பெற்ற பாடல்கள்
1. ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
படம்: சிவப்பு மல்லி
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்

2. காளிதாசன் கண்ணதாசன்
படம்: சூரக்கோட்டை சிங்கக்குட்டி
பாடியவர்கள்: பி.சுசீலா,ஜெயச்சந்திரன்
இசை: இளையராஜா

3. வாலைப் பருவத்திலே
படம்: கண்ணே ராதா
பாடியவர்கள்: பி.சுசீலா,எஸ்.பி.சைலஜா
இசை: இளையராஜா

4. காட்டுக்குள்ளே காதல் கிளியைக் கண்டேன்
படம்: கரிமேடு கருவாயான்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

5. வெண்ணிலா முகம் பாடுது
படம்: ஜோதி மலர்
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்

6.அழகிய பொன்வீணையே என்னோடு வா
படம்: காகித ஓடம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்

7. அழகான புள்ளிமானே
படம்: மேகம் கறுத்திருக்கு
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: மனோஜ்-கியான்

8. செந்தூரக் கண்கள் சிரிக்க
படம்: மணந்தால் மகாதேவன்
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்

9. வண்ண விழியழகி வாசக் குழலழகி
படம்: ஆடி வெள்ளி
பாடியவர்கள்: சித்ரா குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்

10.பாப்பா பாடும் பாட்டு
படம்: துர்கா
பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசை: சங்கர்-கணேஷ்

11.யக்கா யக்கா யக்கா
படம்: செந்தூரதேவி
பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி
இசை: சங்கர்-கணேஷ்

12.விடுகதை ஒன்று
படம்: ஒரு விடுகதை ஒரு தொடர்கதை (இராம நாராயணன் தயாரிப்பு, அவரின் நண்பர் எம்.ஏ.காஜா இயக்கம்)
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்