தேனிசைத் தென்றல் தேவா கொடுத்ததில் "பிடித்த" நூறு

நான் முன்னர் பகிர்ந்திருந்த பகிர்வில் சொன்னது போல “கிராமங்களில் இன்னமும் இசையமைப்பாளர் தேவா இசை வாழ்கிறது” என்பதற்கமைய, இந்தப் பகிர்வின் வழியாக அவரின் இசையில் மலர்ந்த படங்களில் இருந்து எனக்குப் பிடித்த நூறு பாடல்களைத் தெரிவு செய்திருக்கிறேன். இந்தப் பாடல்களை நான் தெரிவு செய்யும் போது ஒவ்வொரு படத்திலிருந்தும் ஆகச்சிறந்த ஒன்று என்ற கணக்கில் அமைந்திருக்கின்றன. ஆகவே இந்த நூறு தான் மொத்தமே நல்ல பாடல்கள் என்ற கணக்கில் இல்லை. பட்டியலைத் தயாரித்துவிட்டு ஒருமுறை இணையத்தில் கிடைக்கும் தேவாவின் படங்களின் பட்டியலை மேய்ந்து பார்த்தால் சிற்பியிலிருந்து பரத்வாஜ் வரை இசையமைத்த படங்களை அண்ணனுக்கே தாரை வார்த்திருந்தார்கள். ஆகவே இங்கே நான் பகிரும் பட்டியல் ஓரளவு தெளிவைத் தருமென நினைக்கிறேன். தேவா இசையில் மலர்ந்த பாடல் தொகுப்புகள் இன்னும் ரக வாரியாக அடுத்தடுத்து வரவிருக்கின்றன.

பாடல்களின் பட்டியலுக்குப் போவதற்கு முன்னர்
1. தேவாவின் பாடல்களைப் பிடிக்காதவர்கள் இந்த வரியோடு ப்ரெளசரை மூடி விடவும்
2. இது என் இரண்டு நாள் உழைப்பு என்பதால் மீளப்பகிர்பவர்கள் இப்பகிர்வின் சுட்டியோடு கொடுக்கவும். ஏனெனில் ஒருமுறை நண்பர் ஒருவர் என்னிடமே என் பதிவை வாசிக்க அனுப்பியிருந்தார் அவ்வ்
3. Last but not least இந்தப் பாடல்களை எங்கே டவுண்லோடு பண்ணலாம், சுட்டி தருவீர்களா என்ற மேலதிக விசாரணைகள் தவிர்க்கப்படுகின்றன 🙂 
1. சின்னப்பொண்ணு தான் வெக்கப்படுது – வைகாசி பொறந்தாச்சு
2. செம்பட்டுப் பூவே – புருஷ லட்சணம்
3. ஓ சுவர்ணமுகி வருவேன் சொன்னபடி – கருப்பு வெள்ளை
4. சந்திரனும் சூரியனும் – வாட்ச்மேன் வடிவேலு
5. தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு – சோலையம்மா
6. கொஞ்ச நாள் பொறு தலைவா – ஆசை
7. அவள் வருவாளா – நேருக்கு நேர்
8. முதல் முதலில் பார்த்தேன் – ஆஹா
9. ஓ சோனா ஓ சோனா – வாலி
10. மொட்டு ஒன்று மலர்ந்திட – குஷி
11. ஏ ஹே கீச்சுக்கிளியே – முகவரி
12. உன் உதட்டோரச் சிவப்பே – பாஞ்சாலங்குறிச்சி
13. தாஜ்மகாலே – பெரியதம்பி
14. தங்கமகன் இன்று – பாட்ஷா
15. நகுமோ – அருணாசலம்
16. ஒரு பெண்புறா – அண்ணாமலை
17. நலம் நலமறிய ஆவல் – காதல் கோட்டை
18. தாஜ்மகால் ஒன்று – கண்ணோடு காண்பதெல்லாம்
19. சின்னச் சின்னக் கிளியே – கண்ணெதிரே தோன்றினாள்
20. ஒரு கடிதம் எழுதினேன் – தேவா
21. செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல – வசந்தகாலப் பறவை
22. என் மனதைக் கொள்ளை அடித்தவளே – கல்லூரி வாசல்
23. ஒத்தையடிப்பாதையிலே – ஆத்தா உன் கோயிலிலே
24. முத்து நகையே முழு நிலவே – சாமுண்டி
25. பதினெட்டு வயது – சூரியன்
26. ராசி தான் கை ராசி தான் – என் ஆசை மச்சான்
27. ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா – உனக்காகப் பிறந்தேன்
28. பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது – பேண்டு மாஸ்டர்
29. மகராணி மகராணி மாளிகை மகராணி – ராஜபாண்டி
30. கருடா கருடா – நட்புக்காக
31. மஞ்சள் நிலாவின் ஒளியில் – திருமூர்த்தி
32. நீ இருந்தால் நான் இருப்பேன் – ஆசையில் ஓர் கடிதம்
33. ஒரு மணி அடித்தால் அன்பே உன் ஞாபகம் – காலமெல்லாம் காதல் வாழ்க
34. வானம் தரையில் வந்து நின்றதே – உன்னுடன் 
35. நந்தினி நந்தினி ஓ நந்தினி – அம்மா வந்தாச்சு
36. எனக்கெனப் பிறந்தவ – கிழக்குக் கரை
37. செம்மீனா விண்மீனா – ஆனந்தப் பூங்காற்றே
38. இளந்தென்றலோ கொடி மின்னலோ – வசந்த மலர்கள்
39. தஞ்சாவூரு மண்ணை எடுத்து – பொற்காலம்
40. காதலி காதலி – அவ்வை சண்முகி
41. முதன்முதலாக – எங்கள் அண்ணா
42. கோகுலத்து கண்ணா கண்ணா – கோகுலத்தில் சீதை
43. இதயம் இதயம் இணைகிறதே – விடுகதை
44. கங்கை நதியே கங்கை நதியே – காதலே நிம்மதி
45. மலரோடு பிறந்தவளா – இனியவளே
46. இந்த நிமிஷம் – ஹலோ
47. நில்லடி என்றது – காலமெல்லாம் காத்திருப்பேன்
48. மேகத்தில் ஒன்றாய் நின்றோமே – காதல் சடுகுடு
49. செம்பருத்திப் பூவே – காதல் சொல்ல வந்தேன்
50. சொல்லவா சொல்லவா – மகா பிரபு
51. ஆறெங்கும் தானுறங்க – மனசுக்கேத்த மகராசா
52. உன் பேர் சொல்ல ஆசை தான் – மின்சாரக் கண்ணா
53. மனசே மனசே – நெஞ்சினிலே
54. வண்ண நிலவே வண்ண நிலவே – நினைத்தேன் வந்தாய்
55. ஓ வெண்ணிலா – நினைவிருக்கும் வரை
56. பாரதிக்கு கண்ணம்மா – ப்ரியமுடன்
57. காஞ்சிப்பட்டு சேலை கட்டி – ரெட்டை ஜடை வயசு
58. பெண் கிளியே பெண் கிளியே – சந்தித்த வேளை
59. வணக்கம் வணக்கம் – சீனு
60. செந்தூர பாண்டிக்கொரு – செந்தூர பாண்டி
61. ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா – கட்டபொம்மன்

62. பார்த்தேன் சிரித்தேன் – சாமி சொன்னா சரிதான்
63. மன்னவனே மன்னவனே – கோட்டை வாசல்
64. போதும் எடுத்த ஜென்மமே – புள்ளகுட்டிக்காரன்
65. எலுமிச்சம் பூவே எலுமிச்சம் பூவே – தூது போ செல்லக்கிளியே
66. யேன் அ ஸாரே – கங்கைக்கரைப் பாட்டு
67. உன் புன்னகை போதுமடி – பாஸ் மார்க்
68. மஞ்சனத்துப் பூவே – நம ஊரு பூவாத்தா
69. சிந்தாமணிக் குயிலே – மண்ணுக்கேத்த மைந்தன்
70. காலையிலும் மாலையிலும் கல்லூரி வாசலில் வந்த நிலா – சந்தைக்கி வந்த கிளி
71. தூதுவளை இலை அரைச்சு – தாய் மனசு
72. நீ ஒரு பட்டம் – ரோஜாவை கிள்ளாதே
73. வந்தாளப்பா வந்தாளப்பா – சீதனம்
74. பிரிவெல்லாம் பிரிவில்லை – சூரி
75. ஓர் தங்கக் கொலுசு நான் தந்த பரிசு – தங்கக் கொலுசு
76. உலகத்திலுள்ள அதிசயங்கள் – தை பொறந்தாச்சு
77. மும்பை காற்றே மும்பை காற்றே – காதலி
78. தென்னமரத் தோப்புக்குள்ளே – தெற்குத் தெரு மச்சான்
79. நாளை காலை நேரில் வருவாளா – உன்னைத் தேடி
80. வெளிநாட்டுக் காற்று தமிழ் – வானவில்
81. கருப்பு தான் எனக்குப் பிடிச்ச – வெற்றிக் கொடி கட்டு
82. ஒரு நாளும் உனை மறவாத – வான்மதி
83. இடம் தருவாயா – அப்பு
84. பொருள் தேடும் பூமியில் – கல்கி
85. ஜனவரி நிலவே நலந்தானா – என் உயிர் நீதானே
86. எந்தன் உயிரே எந்தன் உயிரே – உன்னருகில் நான் இருந்தால்
87. வந்தேன் வந்தேன் – பஞ்ச தந்திரம்
88. அழகே பிரம்மனிடம் – தேவதையை கண்டேன்
89. சகல கலா வல்லவனே – பம்மல் கே சம்பந்தம்
90. ஜூலை மலர்களே – பகவதி
91. கம்மா கரையிலே – வேடன்
92. அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே – பொண்டாட்டி ராஜ்ஜியம்
93. நேபாளக் கரையோரம் – தாய்க்குலமே தாய்க்குலமே
94. குயில் குக்கு கூ – வாய்மையே வெல்லும்
95. வேடந்தாங்கலில் ஒரு வெண்புறா – சூரியன் சந்திரன்
96. ஏலேலங்குயிலே – புது மனிதன்
97. மாலையிலே தெற்கு மூலையிலே – வாசலில் ஒரு வெண்ணிலா
98. ஏ ஞானம் யெப்பா ஞானம் – இந்து
99. தேன் தூவும் வசந்தம் – வைதேகி கல்யாணம்
100. தூக்கணாங்குருவி ரெண்டு – ஜல்லிக்கட்டுக்காளை

பாடல் தந்த சுகம் – கோகுலத்து கண்ணா கண்ணா

இசையமைப்பாளர் தேவா ஒருமுறை மனதோடு மனோ நிகழ்ச்சிக்கு வந்தபோது தான் சினிமாவுக்கு இசையமைப்பாளராக வருவதற்கு நிகழ்த்திய வாழ்க்கைப் போராட்டங்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருந்தார். வாழ்க்கையின் ஒரு நல்ல நிலைக்கு வந்தபின் அந்த எல்லையை அடைவதற்கு முன் நேர்ந்த அவமானங்களையும் வலிகளையும் திரும்பிப் பார்க்கும் போது அதை அனுபவித்தவருக்கே வேடிக்கையாக இருக்கும். அதுபோலத்தான் இருந்தது அவர் சொல்லச் சொல்ல. அதுவரை இசையமைத்த படமொன்றும் பொட்டியில் சிறைப்பட்டிருக்க, புதிய வாய்ப்பு நம்ம “மனசுக்கேத்த மகராசா” படத்தின் வழியாக வருகிறது. அந்தப் படத்தின் இயக்குனர் தீனதயாள் வழியாக, படத்தின் வடநாட்டுத் தயாரிப்பாளர் தன்னுடைய இசைத்திறமையைக் காட்டும் அந்த நாளில் தன் வாத்தியக்காரர்களோடு ஆட்டோ வாகனத்தில் பயணிக்கிறார். நடுவழியில் வண்டி கோளாறு பண்ணவே, ஆர்மோனியம் தபேலா இத்தியாதியை ஒவ்வொருவரும் கையில் பிடித்தவாறே தயாரிப்பாளர் இருக்கும் ஒலிப்பதிவுக்கூடம் நோக்கி ஓடிச்சென்று குறித்த நேரத்தை எட்டிப்பிடித்து மெட்டுப் போட்டுத் தயாரிப்பாளரைக் கவர்கிறார் தேவா.

இசையமைப்பாளர் தேவா குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இன்றும் கிராமப்புறத் தேநீர்ச்சாலைகளில் இருந்து பஸ் பயணம் வரை ராஜாவுக்கு அடுத்துப் பந்தி விரித்து வெகுஜன அபிமானம் பெற்றிருக்கிறார். இவர் இசையமைத்த பத்தாண்டுக்கு முந்திய பாடல்களை இன்றும் அலுக்காமல் சுருதி பிடிக்கின்றன மினி பஸ்களின் ஒலி நாடாக்கள்.

தேவாவின் ஆரம்பகாலம் பெரும் இயக்குனர்களது அரவணைப்பின்றியும், ஒரு பட்ஜெட் இசையமைப்பாளர் என்ற ரீதியிலும் இருந்ததாலோ என்னமோ பாடல்களின் ஒலித்தரத்தில் பெருங்குறை இருக்கும். செம்பருத்தி செம்பருத்தி பூவப்போல பெண்ணொருத்தி பாடலில் எல்லாம் தபேலா சத்தமே ஏதோ தகரடப்பா ஒலியில் வருமாற்போல இருக்கும். இந்தக் குறை அண்ணாமலை போன்ற படங்களில் வந்த பாடல்களை உன்னிப்பாகக் கேட்கும் போது அவதானிக்கலாம். ஆண்குரல், பெண்குரல், இடையிசை எல்லாம் வெவ்வேறு திசை நோக்கி இருக்குமாற்போலவும் சில பாடல்கள். நாளாக தேவாவின் மீது ஒளி பரவலாக வீசியதாலோ என்னமோ ஆசை,காதல் கோட்டை என்று தொடங்கி முகவரி, குஷி போன்ற படங்களின் பாடல்களில் உச்சமான ஒலியமைப்பு சீராக இருக்கும். அப்படி ஒன்று தான் கோகுலத்தில் சீதை படத்தில் வரும் இந்தப் பாட்டு.

தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரனின் மாங்கல்யம் தந்துனானே என்ற ஒரு நாள் ஷோ
ஓடிய படத்தின் வைகைக்கரைப் பூங்காற்றே பாட்டு எனக்கு இன்றும் பிடித்தமானது.
எத்தனை பேருக்கு இப்பிடி ஒரு பாட்டு இருப்பதே தெரியுமோ தெரியவில்லை
தொடர்ந்து வான்மதி, காதல்கோட்டை, கோகுலத்தில் சீதை என்று நீளும் பட்டியலில்
பாடல்களுக்குத் தனியிடம் கொடுக்கலாம்.

நண்பர் கலைச்செல்வன் தன்னுடைய காரில் உச்ச ஒலியில் பாடலை ஒலிக்கவிட்டு அந்த ஷெனாய் இசையில் இருந்து ஆரம்பித்து இடையில் மீட்கும் புல்லாங்குழலின் ஜாலம், தபேலா என வரிசையாகச் சுவைப்பார். இயக்குனர் அகத்தியன் தேவா கூட்டணி சோடை போனதில்லை. கோகுலத்தில் சீதை படத்தில் வரும் இந்தப் பாட்டு காட்சியோடு கச்சிதமாகப் பொருந்தும் பாடல்களில் ஒன்றாக இடம் பிடிக்கின்றது. பேபி தீபிகா, சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் இவர்களோடு தேவா பாடும்போது அச்சொட்டாக மணிவண்ணனே பாடுமாற் போல.

துல்லிய ஒலிப்பதிவோடு, சீரான வாத்தியங்களின் ஆவர்த்தனம், பொருத்தமான நேரத்தில் தோன்றும் பாடகர் பங்கு என்று எல்லாமே நிறைவாக இருக்கின்றது. குறிப்பாக கோரஸ் பாடகிகளின் ஆலாபனையோடு இழைத்த புல்லாங்குழல் இசை, பாட்டு முழுக்கத் தாளம் போடும் அடக்கமான தபேலா இசை என்று கனகச்சிதமாக அமைந்துவிட்டதாலோ என்னமோ கிருஷ்ண ஜெயந்தி என்றாலே விசேஷமாக முணுமுணுக்கிறது “கோகுலத்து கண்ணா கண்ணா” என்று

இசையமைப்பாளர் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள் நினைவில்

தொண்ணூறுகளின் இறுதியில் பிரபலமாக இருந்த சன் டிவி “சப்தஸ்வரங்கள்” பாடற் போட்டி நிகழ்ச்சியின் வழியாகத் தான் வி.தட்சணாமூர்த்தி என்ற இசையமைப்பாளரை அறிந்து கொண்டேன். அதற்கு முன்னர் அவரின் இசையில் வெளிவந்த ஓரிரு தமிழ்ப்படங்களில் குறிப்பாக “நந்தா என் நிலா” என்ற பாடலை இலங்கை வானொலி மூச்சு விடாமல் முன்னூறு தடவைக்கு மேல் அலுக்க அலுக்கப் போட்ட போதெல்லாம் கூட இந்த இசையமைப்பாளர் குறித்த தேடல் இருந்திருக்கவில்லை. எழுபதுகளின் இறுதியிலே வி.குமார், விஜயபாஸ்கர், ஷியாம் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் வந்த பல நல்ல பாடல்களை சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்தவையாக இருக்கும் என்று அதிகம் மெனக்கடவில்லை. அந்த வகையில் வி.தட்சணாமூர்த்தி அவர்களை சுவாமிகள் என்று விளித்து அவரின் பெருமைகளை சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரமணன் சிலாகித்தபோதுதான் அவர் மேல் வெளிச்சம் பட்டது எனக்கு. தமிழ்த்திரையுலகில் இரண்டு தட்சணாமூர்த்திகள் இருந்திருக்கிறார்கள், ஒருவர் எஸ்.தட்சணாமூர்த்தி இவர் அலிபாபாவும் 40 திருடர்களும்” போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர், பின்னவர் தான் வி.தட்சணாமூர்த்தி சுவாமிகள். கொஞ்சக்காலம் எல்லாவற்றையும் உதறவிட்டு காசிக்குப் போய் சாமியாராக இருந்ததாக செய்திகளின் வாயிலாக அறிந்தேன்.

“நந்தா என் நிலா” படத்தில் வந்த பாடலான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய “நந்தா என் நிலா பாடலை விடவும் என்னை அதிகம் கவர்ந்ததென்னவோ ஜெயச்சந்திரன், டி.கே. கலா பாடியிருந்த “ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தேன்” என்ற பாடல் தான். அன்றைய சனிக்கிழமை இரவுப்பொழுதில் அதிகாலை ஒரு மணியைத் தொடும் போது வானொலி நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கும் என் தனிமையை விரட்டிப் பல தடவை சொந்தம் கொண்டாடிய பாடல் அது.

வானொலியின் பிறந்த நாள் வாழ்த்துப்பாடல்களில் எழுதப்படாத ஒப்பந்தமாக அமைந்து போன பாடல்களில் ஒன்று “நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க”, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது திரைப்படத்துக்காக வி.தட்சணாமூர்த்தி இசையில் வந்த அந்தப் பாடலோடு அதே படத்தில் வந்த “ஆண்டவன் இல்லா உலகமிது” பாடலும் அப்போதைய இலங்கை வானொலி ஒலிபரப்பால் பிரபலமான பாடல்களில் ஒன்று.

மீண்டும் தொலைக்காட்சி வாயிலாகவே இன்னொரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்திருந்தது வி.தட்சணாமூர்த்தி அவர்களின் கேரள சினிமாவுக்கான பணி. கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் ஐம்பது ஆண்டுகள் திரையுலகில் நிறைவாக்கியதை ஏஷியா நெட் தொலைக்காட்சி கொண்டாடியபோது, வி.தட்சணாமூர்த்திக்கான சிறப்பு கெளரவத்தையும் அவர் முன்னிலையிலேயே வழங்கியிருந்தார்கள். அப்போது கேட்ட “சந்த்ரிகையில் அலியுன்னு சந்த்ரகாந்தம்” என்ற பாடலை யூடியூபின் வழியாகக் கேட்டுப் பரவசம் கொண்டேன்.

தட்சணாமூர்த்தி சுவாமிகளின் பேச்சு 25 வது நிமிடத்திலிருந்து

மலையாள சினிமாவுலகில் வி.தட்சணாமூர்த்திக்கான தனித்துவத்தையும் கே.ஜே.ஜேசுதாஸின் சிலாகிப்பின் மூலம் அறிந்து கொண்டேன். உள்ளூர் இந்தியக் கடை ஒன்றில் வி.தட்சணாமூர்த்தி அவர்களின் இசையில் வந்த மலையாளப் பாடல் தொகுப்பையும் அடிக்கடி கண்டு கொள்வேன். ஆனால் அதிகம் கேட்டதில்லை. ஒருவரை அவரின் சாகித்யம் வாயிலாக அறிந்து கொள்வதில் தான் எவ்வளவு பெருமை. அந்த வகையில் வி.தட்சணாமூர்த்தி அவர்களின் இறப்பு நேற்று ஆகஸ்ட் 2 நிகழ்ந்த பின்னர் பேஸ்புக், ட்விட்டர் வழியாக அவரின் ரசிகர்கள் பகிர்ந்து கொள்ளும் திரையிசை இன்னும் இன்னும் இந்த இசை மேதை மீதான பற்றை அதிகப்படுத்துகின்றது. அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும், அவர் ஆக்கிய பாடல்கள் ஜீவனுடன் நம்முள் என்றும் உறைந்திருக்கும்.

மெல்லிசை மாமன்னனுக்கு வயசு எண்பத்தைந்து

ஜூன் 24 இன்றைய தினம் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய எண்பத்தைந்தாவது வயதை எட்டியிருக்கின்றார். தமிழ்திரையிசைச் சாதனையாளர்களில் மூன்று முக்கியமான ஆளுமைகளான மெல்லிசை மன்னர் எம். எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆ.ரஹ்மான் ஆகியோர் இயங்குகின்ற சூழலில் நாமும் இருக்கின்றோம் என்பதில் ஒரு பெருமை தானாக வந்து சேர்கின்றது. இன்றைக்கு கணினி யுகத்தில் ஏராளம் டெஸ்ட் டியூப் பேபிகள் இசையமைப்பாளர்களாகக் குவிந்து விட்டார்கள் ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசையுலக மாமன்னன் எவ்வளவு பெரிய சாதனையை தசாப்தங்களைக் கடந்து செய்து காட்டிவிட்டு அமைதியாக எல்லாவற்றையும் பார்க்கின்றார் என்னும் போது சாதாரணர்களாகிய நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொன்றையும் அந்த அடக்கம் காட்டி நிற்கின்றது.

இன்றைக்குப் பன்மடங்கு பெருகிவிட்ட தொழில் நுட்ப முன்னேற்றத்தின் பல படிகள் பின்னோக்கிய காலகட்டத்தில் தான் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏராளம் பாடல்களை விதவிதமான சூழலுக்கேற்ப விதையாக்கிக் கொடுத்தார், இன்றைக்கும் பட்டுப்போகாத நல் விரூட்சம் போல அந்தப் பாடல்கள் ரசிகர் மனதில் எழுந்து நிற்கின்றன. ராமமூர்த்தி அவர்களோடு இணைந்து கூட்டாகப் படங்கள் கொடுத்த போதும், தனித்து இயங்கிய போதும் தன் அடையாளத்தை மிகக் கச்சிதமாக நிறுவியவர். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்துப் பாடல்களைக் கேட்கும் போது எம்.எஸ்.வி தனம் இருக்குமளவுக்கு அடுத்த சகாப்தத்திலும் கொஞ்சப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டவர். மெல்லிசை மாமன்னர் விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்கள் லேசுப்பட்டவர்களல்ல, ஒவ்வொருவருக்கும் தனிப்பாணி, இவர்கள் எல்லோருக்கும் ஏற்ற பாடல்களைப் பண்ணுவதோடு மட்டுமல்ல கவியரசு கண்ணதாசனோடு போராடியும், சந்தோஷித்தும் மெட்டுக் கட்டிய கதைகளைப் புத்தகம் ஆக்குமளவுக்கு அந்தப் பாடல்களுக்குப் பின்னால் ஏராளம் கதைகள். இவையெல்லாம் ஒரு மாமூல் கலைஞனுக்கு கிட்டாத அனுபவங்கள். அந்த வகையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் முழுமையான வரலாறு எவ்வளவு தூரம் பதிவாகியிருக்கின்றது என்பது கேள்விக்குறி.

படத்தின் கதையோட்டத்தோடு மாறுபடும் காட்சியமைப்பு வரும்போது ஒரு கட்டியக்காரனாகவும், அசரீரியாகவும் பல படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் ஒரு பாடகராகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். இதுதவிர காதல் பாடல்கள் சிலவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் பாங்கே தனி. அதற்கு உதாரணமாக மூன்று பாடல்களை இங்கே பகிர்கின்றேன்.

“சொல்லத்தான் நினைக்கிறேன்” படத்தில் வரும் “சொல்லத்தான் நினைக்கிறேன்” பாடலை எஸ்.ஜானகியோடு பாடுகின்றார்.

“நிலவே நீ சாட்சி” பாடலில் “நீ நினைத்தால்” பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியோடு பாடும் பாங்கைக் கேளுங்கள், இவர்தான் பாடியிருக்கிறார் என்று ஊகிக்கமுடியாத அளவுக்கு மிகவும் கட்டையான சுருதியில் பாடுவார்.

“முத்தான முத்தல்லவோ” படத்தில் “எனக்கொரு காதலி இருக்கின்றாள்” பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு பாடும் போது எப்படி அநாயசமாக  போட்டு வாங்குகிறார் பாருங்கள்

எம்.எஸ்.விஸ்வநாதன் அளவுக்கு மற்றைய இசையமைப்பாளர்களோடு நேசம் கொண்டு, அவர்களின் படங்களிலும் கெளரவப்பாடகராக வந்துகாட்டும் போது அவரின் இன்னொரு பரிமாணம் வெளிப்படுகின்றது. இவர் அளவுக்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு தொகை இசையமைப்பாளர்கள் இசையில் பாடிய இன்னொரு இசையமைப்பாளரை அடையாளம் காட்டுவது மிகக்கடினம், இரண்டாவது இடத்தில் கங்கை அமரனைச் சேர்த்துக் கொள்ளலாம், அந்த வகையில் தமிழ்த்திரையுலக முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எம்.எஸ்.வி பாடிய பாடல்கள் சில இங்கே,

இளையராஜா – தாயே மூகாம்பிகையே (தாய் மூகாம்பிகை) நல்ல காலம் ( கருவேலம் பூக்கள்)
ஏ.ஆர்.ரஹ்மான் –  ஆலாகண்டா (சங்கமம்), விடை கொடு எங்கள் நாடே (கன்னத்தில் முத்தமிட்டால்)
ஜி.வி.பிரகாஷ்குமார் – “மேகமே ஓ மேகமே ( மதராசப்பட்டணம்)
வி.குமார் – உனக்கென்ன குறைச்சல் (வெள்ளி விழா)
பரத்வாஜ் – மெட்டுத் தேடித் தவிக்குது  (காதல் மன்னன்)
தேவா – கதிரவனை முத்தமிட்டு கடல் மேலே வித்தை செய்து (வைதேகி வந்தாச்சு)
சந்திரபோஸ் – எந்த வழி போவது (குற்றவாளி)
கங்கை அமரன்  இசையில் இனி ஒரு சுதந்திரம் படத்தில் ஒரு பாடல்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் –  நட்பு நட்பு (உன்னைச் சரணடைந்தேன்)

சினிமாத் தயாரிப்பாளராக கலைக்கோயில் படம் உட்படக் கையைச் சுட்டுக் கொண்டாலும், குணச்சித்திர நடிகராக ஏற்ற பாத்திரத்தில் வாழ்ந்து காட்டியவர் இவர்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இசைஞானி இளையராஜாவும் தனித்தே சாதித்துக் காட்டியவர்கள் ஆனாலும் இவர்கள் இருவரும் புதுமையான முயற்சியாக ஜோடி கட்டி இசையமைத்த படங்கள்
மெல்லத் திறந்தது கதவு ( சிறப்புத் தொகுப்பைப் பார்க்க)
என் இனிய பொன் நிலாவே ( சிறப்புத் தொகுப்பைப் பார்க்க)
செந்தமிழ்ப்பாட்டு
செந்தமிழ்ச் செல்வன்
இரும்புப்பூக்கள்
விஸ்வதுளசி

மெல்லிசை மாமன்னரின் பாடல்கள் ஒவ்வொன்றும், பயன்படுத்திய வாத்திய வகையறாவில் இருந்து பல்வேறு காட்சிமைப்புக்களுக்கேற்ப என்னவெல்லாம் புதுமையான மெட்டையும், குரல் அமைப்பையும் புகுத்தியிருக்கிறார் என்பதையும் ஒரு பெரிய ஆய்வுக்குட்படுத்திப் பார்க்கவேண்டும், ஆண்டுக்கணக்கில் எடுக்கும் ஆய்வாக இது அமைந்து விடும் அளவுக்கு அள்ள அள்ள ஏராளம் புதையல்கள் அவர்தம் பாடல்களுக்குள்ளே ஒளிந்திருக்கின்றன.

மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வாழிய பல்லாண்டு

இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஒரு இசையமைப்பாளரின் பாடலுக்கு உயிர்கொடுப்பது மட்டுமன்றி, குறித்த பாத்திரமாகவே மாறி அந்தந்த நடிகர்களின் குணாம்சத்துக்கேற்பத் தன்னை ஆவாகித்துக் கொண்டு பாடும் தொழில் திறன் மிக்க பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு வாழும் உதாரணம் எனலாம். பாடகராக பொன்விழாக் காண இன்னும் இரண்டு ஆண்டுகளே மிச்சம் வைத்திருக்கும் இவர், இன்றைய தலைமுறை வரை அச்சொட்டாகப் பொருந்தக்கூடிய குரல் வளம் கொண்டு இயங்கிவருவது ஆண்டவன் கொடுத்த வரம் எனலாம். எண்பதுகளில் இசைஞானி இளையராஜா முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்ந்த போது, மற்றைய இசையமைப்பாளர்களின் பாடல்கள் பிரபலம் ஆகுவதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பங்கு பெரிது என்பதை, இசையமைப்பாளர் யாரென்றே தெரியாமல் வாய் முழுக்க முணுக்கும் பாடல்கள் ஒரு தொகை பெறும். அவ்வளவுக்கு முன்னணி, பின்னணி பாராது எல்லா இசையமைப்பாளர்களது பாடல்களையும் நேசித்து அந்தப் பாடல்களை உயிரோட்டம் நிறைந்ததாய் ஆக்கிவிடுவார். சங்கர் கணேஷ், சந்திரபோஸ் என்று நீண்டு செல்லும் இசையமைப்பாளர்களின் பாடல்களை இதற்கு உதாரணமாக அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னும் ஏன், என் போன்ற ரசிகர்களுக்கு பல இசையமைப்பாளர்களைத் தேடி அறிய வைத்ததே பாலசுப்ரமணியம் அவர்கள் கொடுத்த பாட்டுத்திறனே காரணம். தெலுங்கு மொழியைத் தன் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் எல்லா மொழிகளையும் மாற்றாந்தாயாக நினையாது அந்தந்த மொழிக்கு விசுவாசம் செய்தவர். எத்தனையோ பாடல்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நளினமான சிரிப்பும், ஏற்ற இறக்கமும் படம் வருவதற்கு முன்பே காட்சி இப்படித்தான் இருக்கும் என்று ஊகிக்கும் அளவுக்குக் கொடுத்திருப்பார், ஆனால் அந்தப் பாடல்களின் திறன் உணராத இயக்குனர்கள் கையில் சிக்குண்டு க்ளோசப் காட்சியில் அந்த நாயகன் காட்டவேண்டிய நுணுக்கமான முக உணர்வுக்குப் பதில் லாங் ஷாட் இல் வைத்துப் பழிவாங்கிவிடுவர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தனது 67 வது பிறந்த நாளைக்காணும் இந்த நாளில் அவரின் சாகித்தியத்தின் இன்னொரு பரிமாணமாக, இசையமைப்பாளராக வலம் வந்த படங்களில் இருந்து ஒரு சிறு தொகுப்பையே அவரின் பிறந்த நாள் பரிசாகக் கொடுப்பதில் மகிழ்கின்றேன். தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களுக்கும், தனிப்பாடல் தொகுப்புக்களுக்கும் இசையமைத்திருக்கும் இவரின் தமிழ்ப்படங்களின் பாடல்களையே இங்கு நீங்கள் காணலாம். இந்தப் பாடல் துளிகளே எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற மாபெரும் கலைஞனின் உள்ளிருக்கும் இசைத்திறமையை வெளிக்கொணரும் சான்றுகள்.

கண்ணை மூடிக்கொண்டே அந்தப் படத்தின் இசையமைப்பாளர் யாராகினும், இயக்குனர் ஶ்ரீதர் படம் என்றால் சொக்கவைக்கும் இசையைக் கொடுத்துக் கிறங்கடித்துவிடுவார். அதற்கு இயக்குனர் ஶ்ரீதர் கலைஞரிடம் எப்படியாவது தனக்குத் தேவையானதை வாங்கிவிடவேண்டும் என்ற முனைப்பும் முக்கிய காரணம். ஏ.எம்.ராஜா காலத்தில் இருந்து பல ஆளுமைகளைக் கண்ட ஶ்ரீதர், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தைத் தனது துடிக்கும் கரங்கள் படத்துக்கான இசையமைப்பாளராக அமைத்துக் கொண்டார். அந்தப் படத்தில் வந்த “சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்” பாடல் அன்றைய றேடியோ சிலோன் என்ற இலங்கை வானொலியின் பிரபல பாடலாகச் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டது. பாடலை எஸ்.ஜானகியோடு பாடுகின்றார் இசையமைப்பாளர் எஸ்.பி.பாலு.

“சங்கராபரணம்” கொடுத்த மாபெரும் வெற்றி அலையால் அந்தக்காலத்தில் தொகையாய்க் குவிந்த சங்கீத, நாட்டியப்படங்களில் மக்கள் மனதில் இடம்பிடித்துக் கொண்டது என்னவோ “மயூரி” போன்ற ஒரு சில படங்கள் மாத்திரமே. கால் ஊனமுற்ற பெண் நடிகை சுதா சந்திரனுக்குப் பெரும்புகழையும் ஈட்டிக் கொடுத்த அந்தப் படம் தேசிய அளவில் அவருக்குச் சிறந்த நடிகையாக்கி அழகு பார்த்தது. இயக்கத்தை, கமல்ஹாசனின் நிழல் இயக்குனர் என்று சொல்லுமளவுக்கு அவரால் அறியப்பட்ட சிங்கிதம் சீனிவாசராவ் கவனித்துக் கொண்டார். இந்தப் படத்தின் இசையை வழங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடகர் விருதுகளை மாநில அளவில் பெற்றுக்க் கொள்ள உறுதுணை புரிந்தது “மயூரி”. இந்த மொழிமாற்றுப்படத்தில் இருந்து “மெளனம் நாணம் மலரும் புது யெளவனம்” பாடல் இதோ

எஸ்.பி.பி ஒரு இசையமைப்பாளர் என்று பரவலாக உலகை அறிய வைத்த பெருமையை “சிகரம்” தட்டிக்கொண்டது. கே.பாலசந்தரின் உதவியாளர் அனந்து இயக்கிய முதல்படம். படத்தின் பாடல்கள் எல்லாமே பரபரப்பான வெற்றிவாகையைக் கொண்டாடின. கூடவே விருதுகளும் வந்து சேர்ந்தன சிறந்த இசையமைப்பாளர் என்று. இந்தப்படத்தின் எந்தப் பாடலை எடுப்பது எதை விடுவது என்று திணறும் அளவுக்கு “வண்ணம் கொண்ட வெண்ணிலவே”, “அகரம் இப்போ சிகரம் ஆச்சு”, “உன்னைக்கண்ட பின்புதான்” என்று வரிசைகட்டி நிற்கும். ஆனால் எல்லாவற்றிலும் இருந்து தனித்து அமைதியாக, நிதானமாக ஈர்த்தது என்னமோ “இதோ இதோ என் பல்லவி பாடல்” முந்திய பாடல்களை எல்லாம் கேட்டுத் தித்தித்த வேளை மெதுவாக வந்து மனசின் ஓரத்தில் இடம்பிடித்துக் கொண்டது. இசையமைப்பாளர் தாயன்பன் ஒருமுறை மேடையில் சொன்னது போல இந்தப்பாடலுக்கு அவ்வளவு ஸ்பெஷலைக் கொடுக்கலாம் என்பேன்.

“சிகரம்” பாடல்கள் கொடுத்த வெற்றியால் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குத் தமிழில் தொடர்ச்சியாக அப்போது இசையமைக்கும் வாய்ப்பு, அதில் முத்திரை இயக்குனர் மகேந்திரனின் “ஊர்ப்பஞ்சாயத்து” படமும் ஒன்று. கூடவே தயாரிப்புலகின் ஜாம்பவான் கலைப்புலி தாணு தயாரிக்க, இயக்குனர்மகேந்திரன் கதை வசனம் எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்க, பார்த்திபன் நடித்த “தையல்காரனும்” பரபரப்பாகப் பேசப்பட்டது ஆனால் ஏனோ மனசில் ஒட்டுமளவுக்கு தையல்காரன் உழைக்கவில்லை. பாடல்களை எடுத்துக் கொண்டால் அந்தக்கால விவித்பாரதி விளம்பரங்களில் கொஞ்சூண்டு துளி பாடலைக் கேட்டு இன்னும் கேட்கமுடியாதா என்று ஆசை கொள்ள வைத்த பாட்டு “மை மை” என்ற பாட்டு, பின்னர் பல மாதங்களுக்குப் பின்னர் தலைநகர் கொழும்பில் இருந்த ஒரு ரெக்கார்டிங் பார் இல் ஒலிப்பதிவு செய்து கேட்கும் அளவுக்கு உயிர் வைத்து நேசித்த பாட்டு “மை மை மை”

“தையல்காரன்” படத்தில் இருந்து இன்னொரு நல்லதொரு தெரிவாக “உலகம் ஒரு வாடகை வீடு” பாடலைத் தவிர்க்க மனமின்றி அதையும் கொடுக்கிறேன், ரசியுங்கள்.

“உலகம் பிறந்தது எனக்காக” என்றதொரு மசாலாப்படம், ஏவிஎம் நிறுவனம் இளையராஜாவோடு ஊடல் கொண்டிருந்த காலகட்டத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடிக்க வெளிவந்திருந்தது. அந்தப் படத்தின் முக்கிய இசையமைப்பாளராக, பிரபல இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் அமைய, இணை இசையமைப்பாளர் பொறுப்பை எஸ்.பி.பாலு எடுத்துக் கொண்டார். அந்தப் படத்தின் பேரைக்காப்பாற்றிய இரண்டு பாடல்கள் இரண்டு இதோ

“நீ அழுத கண்ணீர் மழையாச்சு”

“மாங்காட்டு மயிலே நில் நில் நில்”

எஸ்.பி.பாலசுப்ரமணியம் தன் தனையன் எஸ்.பி.பி.சரணுக்கும் ஒரு நல்வழி காட்டவெண்ணி எடுத்த “உன்னைச் சரணடைந்தேன்” படத்தின் இசையமைப்பாளராக அமர்ந்துகொண்டார். அந்தப் படத்தின் பாடல்களிலே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, பாடும் நிலா பாலு ஆகிய மூன்று இசையமைப்பாளர்களும் கொடுத்த நட்புப் பாடல் அருமையிலும் அருமை.

 

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவனின் நினைவில்

இன்று திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நினைவுநாளாகக் கொள்ளப்படும் வேளை அவரின் நினைவின் துளிகளாய், சில பாடல்களோடு ஒரு பகிர்வைக் கொடுக்க எண்ணியிருக்கிறேன். கேரள நாட்டில் இருந்து வந்து தமிழ்த்திரையிசையின் மெல்லிசை மன்னராகப் பவனி வந்த எம்.எஸ்.விஸ்வநாதன், அதே போல தமிழகத்தின் நாகர்கோயிலில் பிறந்து தமிழ்த்திரையிசையிலும் எண்ணற்ற படங்களுக்கு இசையமைப்பாளராக விளங்கியிருந்தாலும் தெலுங்கு தேசத்தில் தான் கே.வி.மகாதேவனின் புகழ் ஒப்பீட்டளவில் தமிழை விடக் கோலோச்சியிருந்தது.

இன்றும் பசுமரத்தாணி போல நினைவிருக்கின்றது, 2001 ஆம் ஆண்டு இதே நாள் சிட்னிக்கு இசை நிகழ்வை நடத்த வந்த பாடகி சுஜாதா நமது வானொலி நிலையத்துக்கு வந்த போதுதான் கே.வி.மகாதேவனின் பிரிவுச் செய்தியை இணையம் மூலம் அறிந்து அவருக்குச் சொன்னேன். அப்போது “மாமா” என்று சொல்லியவாறே, தமது குடும்பத்தில் ஒருவரின் இழப்புப் போல வாய்பொத்தி அவர் கலங்கி நின்றார். திரையுலகில் செல்லமாக “மாமா” என்று அழைக்கப்பட்டவர் கே.வி.மகாதேவன். கந்தன் கருணை படத்திற்காகத் தேசிய விருதைத் தமிழில் பெற்றுக் கொண்டவர், திரையிசைக்காகக் கொடுத்த முதல் தேசிய விருது கந்தன் கருணைக்குத் தானாம். தமிழோடு தெலுங்கில் சாதனை படைத்த சங்கராபரணத்துக்கும், சுவாதி க்ரணம் என்ற படத்துக்கும் என்று மூன்று தேசிய விருதுகளை எடுத்ததோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார் கே.வி.மகாதேவன்.
கே.வி.மகாதேவனின் உதவியாளராகவிருந்த புகழேந்தி அவர்களின் மனைவி, மகனை 11 ஆண்டுகளுக்கு முன்னர் நான் வானொலிப் பேட்டி எடுத்தபோது இவரின் அறியப்படாத பரிமாணங்களை அப்போது சொல்லிச் சொல்லிச் சிறப்பித்தனர்.

கே.வி.மகாதேவன் எழுபதுக்கு முன் அள்ளிக் கொடுத்த படங்களில் எதை எடுப்பது எதை விடுவது என்று ஒரு சிக்கல் வரும். எனவே எழுபதுகளின் இறுதியில் இருந்து எண்பதுகளின் ஆரம்பம் வரை இவரின் இசையில் மலர்ந்த சில முத்துக்களை இங்கே தருகின்றேன்.


ஹிந்தியில் ஹிட்டடித்த ரங்கீலாவுக்கெல்லாம் பாட்டி முறையான கதை “ஏணிப்படிகள்” படத்தில். இந்தப் படத்தின் கதையை உருவிப் பின்னாளில் ஏகப்பட்ட படங்கள் வந்து விட்டன, சமீபத்தில் ஜெயராம் நடித்த ஒரு மலையாளப்படம் உட்பட. ஆனால் ஏணிப்படிகள் படத்தின் நேர்த்தியான திரைக்கதையும் கே.வி.மகாதேவனின் இசையும் இன்றளவும் நினைவில் இனிமை சேர்ப்பவை. இந்தப் படத்தில் பி.சுசீலா பாடும் “பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன” என்ற பாடலை இங்கே தருகின்றேன்.


புதுமைப்பித்தனின் கதையொன்றை எடுத்தாண்டு ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் “அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை”. தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோப்படங்களும் நம்மிடையே புழங்கிய காலத்தில் அப்போது இந்தப் படத்துக்க்கும் ஏக மவுசு. படத்தில் “சுமைதாங்கி ஏனின்று விழுங்கின்றது” பாடலோடு இங்கே நான் தரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணலையே” பாடலும் அப்போது ஏகத்துக்கும் பிரபலம்.

நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் எண்பதுகளில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது வழக்கம் போலத் திரை ஜோசியப்படி அவரும் நாயகனாக நடித்து வெளிவந்த படம் என்ற ஒரேயொரு பெருமையைக் கொண்டது “பாய்மரக்கப்பல்”. இந்தப் படத்தில் எஸ்.பி.சைலஜா பின்னணில் கோரஸ் இசைக்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள்” சென்னை வானொலியில் நீங்காது இடம்பிடித்த பாடல்களில் ஒன்று

கமல்ஹாசனின் ஆரம்ப காலம் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வேடம் பூண்ட போது சிவாஜி கணேசன் நாயகனாக நடித்த படம் “சத்தியம்”. இந்தப் படத்தில் “கல்யாணக் கோயிலின் தெய்வீகக் கலசம்” பாடல் கே.வி.மகாதேவனின் பாடல்களில் அழகிய முத்து ஒன்று.

“கேளாய் மகனே கேளொரு வார்த்தை” உத்தமன் படத்தில் வரும் இந்தத் தத்துவப்பாடல் டி.எம்.செளந்தரராஜன், சுசீலா குரல்களில் உத்தமன் படத்திற்காக கே.வி.மகாதேவன் இசையில் வந்த இனியதொரு பாடலாகும்.

ஊமை விழிகளுக்குப் பின் ஆபாவாணனின் திரைப்பயணம்


கடந்த பதிவில் ஆபாவாணின் பேட்டியின் முதற்பாகத்தைக் கொடுத்திருந்தேன். அந்தப் பேட்டியின் இரண்டாவதும், இறுதிப்பாகமுமாக இந்தப் பதிவு அமைகின்றது.

ஆபாவாணின் முழுமையான பேட்டி ஒலி வடிவில் கேட்க

Download பண்ணிக் கேட்க

ஆபாவாணின் முழுமையான பேட்டி பாகம் 2 மட்டும் ஒலி வடிவில் கேட்க

பாகம் 2 மட்டும் Download பண்ணிக் கேட்க

எழுத்து வடிவில் தொடர்ந்து இந்தப் பேட்டியைத் தருகின்றேன்

கேள்வி- நீங்கள் எடுத்த பிரம்மாண்டமான படங்களிலே, குறிப்பாக ஊமைவிழிகள் போன்ற திரில்லர் போன்ற கதையம்சம் கொண்ட படமாகட்டும் அதற்குப் பின்னர் வந்த படங்களாகட்டும். பாடல்கள் அதிகமாக இருக்கும். அப்படி பாடல்களை அதிகப்படியாக நீங்கள் வைப்பதற்கு என்ன காரணம்?

பதில்- ரொம்ப எளிமையான காரணம். இந்திய திரைப்படங்களை பொறுத்தவரைக்கும் இசை
பாடல்கள் அப்பிடின்னு வர்றது ஒரு திரைப்படத்தினுடைய வெற்றிக்கும் அதனுடைய ஈர்ப்புக்கும் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். பாடல்கள் வெற்றியடைஞ்சுதுன்னா படத்தினுடைய 50 சதவீத வெற்றி வந்து அங்கே நிச்சயமாகிடும். இதை வந்து நம்ம சிறு வயசில இருந்து சினிமா ரசிகனாக இசை ரசிகனாக அதை விட இன்னும் சொல்லப் போனால் என்னுடைய இசை ரசனையை வளர்த்தது வந்து இலங்கை வானொலி தான். சின்ன வயசில பள்ளிக்கூடங்கள்ல படிக்கிற காலங்களில எல்லாம் சென்னை திருச்சி வானொலி தான் கேட்கும்;. நான் பிறந்த ஊர் ஈரோடு சேலம் நடுவே பவானிகுமாரபாளையம். அந்த ஊர்ல திருச்சி வானொலி தான் கேட்கும். அங்க வந்து ஒரு அரைமணி நேரம் தான் அதிகப்படியா திரைப்படப் பாடலகளை ஒலிபரப்புவாங்க. மற்ற நேரங்களில வேற வேற நிகழ்ச்சிகள் இருக்கும். அது அவ்வளவு உற்சாகமாய் இருக்காது.
இலங்கை வானொலி நிலையத்தைப் பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா விடியற் காலையில ஆரம்பிச்சுதுன்னா இரவு படுக்கப் போகும் வரைக்கும் புரோக்ரா ஸ் இருந்திட்டே இருக்கும். சினிமா பாடல்கள் வந்து கொண்டே இருக்கும்.

ஊர்ல இருந்த காலகட்டம் முழுக்க எந்த நேரமும் என் பெட்ல வந்து ஒரு டிரான்சிஸ்டர் இருந்திட்டே இருக்கும். காலையில ஆரம்பிச்சேனா இரவு வரைக்கும் பாடல்கள் கேட்டிட்டே இருப்பேன். அந்த இசையை கேட்டுக் கேட்டே வளர்ந்தது தான் அந்த கேள்விஞானம் தான் என்னுடைய இசையறிவு. அதற்கப்புறம் பார்த்தீங்கன்னா கிறிஸ்துவப் பள்ளிக்கூடத்தில சர்ச்சுல பாடறதுக்கு ஆட்களை தேடிட்டே இருந்தாங்க. ஒரு நாள் பாக்கியநாதன் என்று, என்னோட குருநாதர் அவரு. என்னை வரவைச்சு கொஞ்சம் பாடிக்காட்டு என்றுவிட்டு சுருதி பிடிக்கிறனா என்று டெஸ்ட் பண்ணினாரு. அந்தப் பாடல்களை கேட்டுக் கேட்டு சுருதி பிடிச்சேன். அப்ப ஓகே உனக்கு பாட வரும்னு சொல்லிட்டு சர்ச்சுல இருக்கிற பாடல்களை பாடுறதுக்கு என்னை தயார் பண்ணினாரு. அந்த பள்ளிக்கூடத்தில சர்ச்சில பாடின அனுபவமும் இலங்கை வானொலியில நான் கேட்ட பாடல்களும் தான் என்னோட இசையறிவு. இந்த ரெண்டும் தான் வளர்த்துவிட்டது. அந்த பேஸிக் தான் நான் படங்களுக்கு பாடல்கள் எழுத காரணம். நான் முழுமையாக புரிஞ்சுகிட்டது என்னன்னா படத்திற்கு பாடல்கள் ரொம்ப ரொம்ப முக்கியம். வெற்றிப் பாடல்கள் இருந்துதன்னா நம்முடைய வெற்றியில் பாதியை அங்கேயே நாம நிர்ணயம் பண்ணிடலாம்.
அப்படிங்கிறதால பாடல்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தேன். அதனால முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்ததனால நான் வந்து கண்ணதாசனுடைய தீவிர ரசிகன். நான் திரைத்துறையில நுழையிற அந்தக் காலகட்டத்தில அவர் உயிரோடு இல்ல.
அவர் இல்லாத அந்த காலகட்டத்தில ஏன் நாம எழுதக் கூடாது அப்படிங்கிற எண்ணம் வந்தது. அதுக்கு முன்னாடி பெரிசா கவிதை எழுதறதோ வேறு பாடல்கள் எழுதியோ பழக்கம் இல்ல. ஆனா எனக்கு நம்பிக்கை இருந்திச்சு. என்னால பாடல்கள் எழுத முடியும்னு. அப்பிடித் தான் எழுத ஆரம்பிச்சேன். கரெக்டா சொல்லனும்னா என்னோட உடன் நின்றவங்க எல்லாரும் ஐயையோ எதுக்கு இந்த வி ப் பரீட்சை? வேண்டாமே யாராவது பாடலாசிரியரைப் போட்டிட்டு கூட இருந்து வேலை வாங்கிக்கலாமே என்டாங்க. அதுக்கு நான் சொன்னேன். என்னால் முடியும்னு ஒரு எண்ணம் வந்து விட்டால் யார் தடுத்தாலும் விட மாட்டேன். இல்ல வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா நீங்க என்ன வற்புறுத்தினாலும் செய்ய மாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் என்னால பாடல்கள் எழுத முடியும்னு நினைக்கிறேன். நான் தான் பாடல்கள் எழுதப் போறேன் அப்பிடின்னு சொல்லிட்டு தான் பாடல்கள் எழுதினேன். எழுதி வெற்றியானதுக்கப்புறம் எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. அப்பிடின்னா இசையைப் பொறுத்தவரைக்கும் எனது அனுபவம் இசையைப் பொறுத்தவரைக்கும் எனது மதிப்பீடு அந்தப் பாடல்கள் எந்தளவிற்கு சினிமாவில இருக்கனும்கிற எண்ணங்களை வளர்த்து விட்டது இதுக்கு முன்னாடி நம்மட முன்னோர்கள் படங்களில ஏற்படுத்தின மிகப் பெரிய சாதனைகள் தான் நமக்கு உதவியது உதாரணத்துக்கு கண்ணதாசன்.


கேள்வி- ஆமாம். உண்மையிலேயே உங்களுடைய திரைப்படத்திலே இருக்கின்ற பாடல்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையிலே தனித்துவமான ஒரு முத்திரையை கொடுத்திருக்கும்.
குறிப்பாக ஊமைவிழிகள் படத்திலே…
(இடையிலே குறுக்கிட்டு சொல்கின்றார்.)
பதில்- ஆமாம் நீங்கள் முதலிலேயே கேட்டு நான் சொல்ல மறந்த விஷயம் தெரிந்தோ தெரியாமலோ நான் மனோஜ் கியானை பாம்பேல இருந்து கூப்பிட்டிருந்தேன் இல்லையா அவங்க என்னுடைய இந்த தமிழ் பாணி இசையமைப்பும் அவங்களுடைய வட இந்திய பாணியும் கலந்தவுடனே ஒரு சின்னதொரு வித்தியாசம் இருந்தது. மற்ற படங்கள்ல இருந்து வித்தியாசம் இருந்திச்சு. ஆனா அது மிகப் பெரிய உதவியாக இருந்தது. அந்த மாறுபட்ட இசைக்கும் ஒரு வித்தியாசம் இருந்திச்சு.

கேள்வி- நிச்சயமாக. இந்தப் படத்திலே அதாவது முதல் படத்திலே வந்த ஒரு பாடல் காலத்தைக் கடந்தும் குறிப்பாக போராட்டங்களிலே ஓயாது ஒலிக்கின்ற ஒரு பாடல். தோல்வி நிலையென நினைத்தால்… அந்தப் பாடலுக்கு காரணம் ஏதாவது சுவையான செய்தியோ அல்லது சுவாரசியமோ இருக்கின்றதா?

பதில்- நிச்சயமாக இருக்கு. ரெண்டு விஷயம். ஒண்ணு என்னான்னா நான் என்னோட கல்லூரிப் பருவத்துல படிச்ச அந்த காலகட்டத்துல இலங்கையில ஏற்பட்ட அந்த பிரச்சினைகள் எல்லாம் மிகப் பெரியளவில் என்னை பாதிச்சுது. அது எண்பதுகளினுடைய காலகட்டத்தில மிகப் பெரிய பாதிப்புக்களை எனக்கு ஏற்படுத்திச்சுது. அது உள்ளுக்குள்ளே அந்த உணர்வுகள் துடிச்சிட்டே இருந்திச்சு. அதற்கப்புறம் வந்து திரைத்துறைக்கு வர்றதுக்கு முன்னாடி படங்கள்ளாம் விநியோகப் பிரிவில நுழைஞ்சு ஏகப்பட்ட நட்டம். சொத்துக்களெல்லாம் இழக்கிற அந்த காலகட்டங்கள்ல மிகப் பெரிய போராட்டங்கள். இதனுடைய விளைவுகள் தான் அந்தப் பாடல். அந்த டியூன் போட்ட டைம்ல வந்து முதல் வரி வந்தப்போ அந்த டியூன் அமைச்சப்போ முதல் வரியோட தான் அந்த ரியூன் போட்டேன்.
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா அப்பிடிங்கிற அந்த வார்த்தைகளோடு சேர்ந்து தான் டியூனே போட்டேன். அதற்கப்புறம் வரிகள் தான் பின்னாடி எழுதினேன். அந்தப் பாடல் இசையமைக்கப்பட்டபோதும் அந்த வரிகள் எழுதப்பட்ட போதும் என் மனதில முழுக்க இருந்தது என்னோட போராட்டங்களுக்கு மிகப் பெரிய விஷயமாக இருந்தது அந்த இலங்கையில ஏற்பட்ட அந்த நிகழ்வு தான். அது தான் பாடல் பதிவின் போது கியான் வர்மா கிட்ட சொன்னது இப்பவும் பசுமையாக ஞாபகத்திற்கு வருகுது. ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாது. வார்த்தைகளும் பாடல்களும் இசையமைப்பும் பிற்காலத்தில் படத்துக்கு எப்பிடி இருக்கப் போகுதோ ஆனால் இலங்கையில இருக்கிற எங்கட சகோதர சகோதரிகளுக்கு மிகப் பெரிய உற்சாகமூட்டக் கூடிய பாடலாக காலத்தைக் கடந்தும் நிற்கும் அப்பிடின்னு அன்றைக்கு நான் சொல்லியிருந்தேன்.
அது இன்னைக்கு நீங்க கேள்விகள் கேட்கிறப்போ அப்பிடி நடந்திட்டு இருக்குன்னு சந்தோசப்படறேன்.

கேள்வி- கண்டிப்பாக. அண்மையிலே திரைப்பட இயக்குநர்கள் சங்க விழாவிலே இந்தப் பாடலைப் பாடிய பொழுது அதைப் பார்த்த பொழுது உண்மையிலேயே மெய்சிலிர்த்தது ஏனென்றால் இன்றைய யுகத்திலே எத்தனையோ பாடல்கள் வந்திருக்கின்றன. ஆனால் 25 வருடங்களுக்கும் பிறகும் அந்தப் பாடல் ஒரு அரங்கத்திலே அரங்கேறியிருக்கின்ற அந்த நெகிழ்வான அந்த தருணங்கள் நிச்சயமாக உங்களுக்கும் மட்டுமல்ல. ரசிகர்களுக்கும் ஒரு கவனத்தை ஈர்த்த ஒரு விடயம்.
அன்றைய காலகட்டத்திலே நீங்கள் ஊமைவிழிகள் திரைப்படத்தின் மூலம் ஒரு பிரமாண்டத்தை காட்டி தொடர்ச்சியாக உழவன் மகன் செந்தூரப்பூவே என இப்படி பல படங்களை வெற்றிப் படங்களாக கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய நாயகர்கள் என்று எடுத்துக் கொண்டால் விஜயகாந்த் மற்றும் அருண்பாண்டியன், ராம்கி ஒரு படத்திலே சத்தியராஜ். இப்படி ஒரு சுற்றுக்குள்ளே இருக்கின்றார்கள். நிச்சயமாக அன்றைய காலகட்டத்திலே உங்களுக்கு முன்ணணி நடிகர்களின் கவனமோ அல்லது அழைப்புக்களோ உங்கள் மீது பட்டிரு க்குக்கும் தானே?

பதில்- நிச்சயமாக, உங்களுக்கு முதலே நான் சொன்ன மாதிரி ஊமைவிழிகள் படத்தை எடுதப்போ விஜயகாந்த் எவ்வளவோ ஒத்துழைப்பு கொடுத்தாருன்னு சொன்னேன். அன்றைக்கு பரபரப்பான மார்க்கெட்ல இருக்கிற
ஒரு நடிகர் டைரக்டர் சொல்றத அப்பிடியே கேட்டு செய்றது என்டுறது வந்து பெரிய விசயமாக இருந்திச்சுது. அந்த ஒத்துழைப்பு விஜயகாந்த்ட்ட இருந்து மிகப் பெரியளவில கிடைச்சதனால என்னோட சக்சஸ்க்கு அவராயிருந்தாரு. இது நம்பர் ஒன். அடுத்தது வந்து எல்லோருடனும் பணிபுரியக் கூடிய சூழ்நிலை வந்தப்போ கரெக்டா சூழ்நிலைகள் வந்து ஒத்து வரல. உதாரணத்துக்கு சொல்றதுன்னா நம்ம ரஜனிகாந்த் அவர்களோட மூணு சந்திப்பு நடந்திச்சு. மூன்று சந்திப்பிலயும் வந்து மூணு விதமான காரணங்களுக்காகவும் வந்து ஒரு ஒத்துக்க முடியாத சூழ்நிலை ஒன்று ஏற்பட்டிச்சு.

முதல் சூழ்நிலை வந்து மன்னன் படப்பிடிப்பு சூழலில, மன்னன் படப்பிடிப்புக்கு முன்னாடியே ஒரு முறை அதிசய்பிறவி சூட்டிங் டைம்ல. சார் நாம இந்தப் படம் பண்ணுவோம்னு சந்திப்பு நடந்திச்சு. சந்திப்பு நடந்தப்போ என்னாச்சுன்னா நான் வந்து படத்தை இயக்க முடியாது. படத்தை தயாரிப்பேன். திரைக்கதை வசனம் இணை திரைப்பாடல்கள். இதுக்கு வேற இயக்குநர் வைச்சிருக்கலாம். பிரதாப் ஐ போடலாம்னு சொன்னேன். பண்ணலாம் என்கிற மாதிரி முடிவெடுத்து அதற்கான எண்ணத்தில இருந்திட்டு இருக்கிறப்போ அப்ப அவரும் வேற படப்பிடிப்பில இருந்திட்டு இருந்தாரு. நானும் மற்ற படங்களின்ர வேலைகளில இருந்தேன். அதுக்கப்புறம் மன்னன் படப்பிடிப்பில சந்திக்கனும்னு செய்தி அனுப்பிச்சாரு. நான் போய் அங்க மீட் பண்ணினேன். சார் பாலசந்தருக்கு ஒரு படம் பண்ணுவோம். நான் நடிக்கறேன். நீங்க டைரக்ட் பண்ணுங்க அவர் புரொடியூஸ் பண்ணுவாரு என்று சொன்னாரு. அப்ப அந்தக் காலகட்டத்தில என்னோட முடிவு என்னவாக இருந்ததுன்னா வெளிப்படங்களை நான் ஒத்துக்கலை. சொந்தப் படங்களை தவிர நான் யாருக்கும் வேலை பார்க்கலை. இத ஒரு பாலிசியாக வெளிப்படங்களை நான் பண்ணலை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் முக்கியமாக நினைக்கிறது என்னன்னா எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதும் படம் எடுக்கிறதும் பொதுவாக யார் எடுத்தாலும் பண்ணக் கூடியது. அதைவிட தயாரிக்கிற பாலசந்தருக்கும் கண்டிப்பா ஒரு லாபம் இருக்கனும். டைரக்ட் பண்ணுற எனக்கும் வந்து ஒரு பெனிஃபிட் இருக்க ணும். அதால எனக்கொரு பெனிஃபிட் எடுத்திட்டு தயாரிப்பாளரான பாலசந்தருக்கும் லாபத்தை கொடுத்திட்டு அது போக வந்து படத்திற்கு நம்ம என்ன செலவழிக்கிறம்னு பார்த்தம்னா பட்ஜட் வந்து சரியாய் வரும்னு தோணலை
.
அதால வந்து என்னோட படத்திற்கு நீங்க கால்ஷீட் கொடுத்தீங்கன்னா என்னுடைய சம்பளமும் எனக்கு தேவையில்லை. முழுக்க முழுக்க படத்தை எப்பிடி பண்ணலாமோ அப்பிடி பண்ணலாம். அந்த மாதிரி காலகட்டம் வரும் போது சொல்லுங்க. அப்ப கால்ஷீட் கொடுக்க முடியும்னு சொனேன். அப்ப லாஜிக்கலா விளக்கிச் சொன்னேன். சரி அப்ப அந்தக் காலகட்டம் வரும் போது நாம சேர்ந்து செய்வம்னு விட்டிட்டோம். அந்த மன்னன் படம் வந்து தொண்ணூறு ஜனவரியில் ரிலீஸ் ஆச்சு. அந்த ஜனவரி கடைசியில மீட் பண்ணுவோம்னு சொன்ன மாதிரி மீட் பண்ணினம். அப்ப சொன்னாரு சார் உங்கட அதிலயே படம் பண்ணுவம் எனக்கு மூணு மாசத்தில படம் முடிக்கனும்னாரு. நான் சொன்னேன். அப்பிடி படம் என்னால பண்ண முடியாது. ஏன் மூணு மாசத்தில உங்களால படம் பண்ணத் தெரியாதா அப்பிடின்னாரு. பண்ணத் தெரியும் பட் பண்ண இஷ்டப்படலை என்றேன். எனக்கு ஆறு மாசம் காலகட்டம் வேணும். அப்பிடின்னா தான் ஒரு சிறப்பாக ஒரு படம் கொடுக்க முடியும். ஏன்னா அப்ப ஒரு பட சூட்டிங் நடந்திட்டு இருந்த காலகட்டம். ராம்கி அருண் பாண்டியன் என்று ரெண்டு நடிகர்களை வைச்சிட்டு பிரமாண்டமாக ஒரு படம் எடுத்துக்கிட்டிருக்கோம். நம்ம ரெண்டு பேரும் இணையிறதுன்னு சொன்னா எதிர்பார்ப்பு ஜாஸ்தியிருக்கும். அதால அதை ஈடுகட்டக் கூடிய காட்சிகளும் கதையும் இல்லைன்னா பேர் கெட்டுப் போயிடும். அதனால அப்பிடி ஒரு படம் நாம செய்ய வேணாம்.
ஆறுமாத காலம் உங்களால எப்ப தர முடியும்னு நினைக்கிறீங்களோ அப்ப சொல்லுங்க. அப்ப நாம சேர்ந்து பண்ணுவோம். மூணு மாதத்திலே படம் பண்ண விருப்பப்படல. அப்பிடின்னு சொல்லிட்டு வந்திட்டேன். அதுக்கப்புறம் தான் அண்ணாமலை படத்தை சுரேஷ்கிருஸ்னா டைரக்சன்ல பாலசந்தர் சார் தயாரிக்க நடித்தாரு. அந்த நிகழ்வு அப்பிடி நிகழ்ந்திச்சு. அத மாதிரி மூணு சந்திப்பு நடந்தப்தப்புறமும் மூணு சந்திப்பும் வேற வேற காரணங்களுக்காக நடக்காம போய்ச்சு.
அதைப் போல செந்தூரப் பூவே படமும் சத்தியராஜ்க்கு தான் பரிந்துரை பண்ணினேன். அதை வேற ஒரு தயாரிப்பாளர் தயாரிக்கிறதாக இருந்தது. என்னோட ஒரு நண்பர் டைரக்ட் பண்றாங்கன்னு அவங்க வந்து கேட்டாங்க. இசை செய்து கொடுங்கன்னு கேட்டாங்க. அதில ஒரு இணை இசையமைப்பாளராக தான் அந்தப் படத்தில பங்கெடுத்தேன். அவங்களுக்காக வந்து மியூசிக் பண்ணிக் கொடுத்தன். பாடல்கள் வந்திச்சு. அப்புறம் நடிக்கிறவங்க பிக்ட்ஸ் பண்ணிக் கொடுங்கன்னு கேட்க சத்தியராஜ் கூடப் பேசலாமே என்று நான்தான் அவரிட்ட போய் பேசினேன். அவர் சொன்னாரு இல்லை நீங்க பண்ணுற படம்னா கேளுங்க வந்து நடிக்கறேன். வேற யாரும்னா நான் விருப்பப்படல என்று சொல்லிட்டாரு. என்னடா இவரு இப்பிடி சொல்லிட்டாரு என்றுவிட்டு திரும்ப ராவுத்தரிடம் பேசினேன். நீங்க சார் பேசுங்க நீங்க சொன்னா அவரு பேச்சைத் தட்டமாட்டாரு எண்டாரு. திருப்ப வேற வழியில்லாம விஜயகாந்தோட பேசினேன்.

அப்ப தழுவாத கைகள் படப்பிடிப்பு நடந்திட்டு இருந்திச்சு. ஏவி எம் ஸ்ரூடியோவில. நேரா அங்க போனேன். போய்ட்டு அவர் அந்த ஷூட்டிங் இடைவெளியில் வெளில வந்தவுடன சொன்னேன். நான் இப்ப ஒரு விசயம் கேட்கப் போறேன். நீங்க ஓகே சொல்லாம அடுத்த ஷார்ட்டுக்கு உள்ள போக விட மாட்டேன் என்றேன்.
நண்பரோட படம், அதுக்கு வந்து பாடல்கள் பண்ணிக் கொடுத்திருக்கேன். அந்தப் படத்தை என்னோட நண்பர்கள் பண்றாங்க. அதால நீங்க அதில நடிச்சுக் கொடுக்கனும் என்றேன். சொன்னவுடன உடனடியா அவர் சொன்னது என்னன்னா நான் அந்தப் படத்தில பண்றேன் சார். பட் ஒரு கண்டிஷன். நான் கொடுக்கிற டேட்டுக்கு
எப்பெல்லாம் ஷீட்டிங் போறனோ அப்பல்லாம் நீங்க அங்க இருக்கணும். இது சம்மதமான்னா நான் அந்தப் படத்தில நடிக்கிறேன்னாரு. அதுக்கு நான் ஒத்துகிட்டு ஓகே நான் இருக்கிறேன் நீங்க பண்ணுங்க என்றேன். அப்பிடி அவர சம்மதிக்க வைச்சு நான் பண்ணிக்க நினைச்சேன். அதுக்கப்புறம் அந்த தயாரிப்பாளருக்கோ, அந்த இயக்குநருக்கோ
பிரச்சினை ஏற்பட்டு அந்தப் படம் நின்னு போய்ச்சு. பட் நல்ல பாடல்கள் நின்னு போய்ச்சே என்றுவிட்டு அந்த தயாரிப்பாளர் நல்ல திறமைசாலியாக இருந்ததாரு. அந்தப் படத்தை நீங்க விலை கொடுத்து வாங்கிக்குங்க என்றார்.அந்தப் பாடல்கள் மாத்திரம் எனக்கு தேவை. அந்தப் பாடல்களை வாங்கிக்கிட்டு விஜயகாந்துக்கு இந்த புரெஜெக்டை பண்ணினேன். அப்பிடித் தான் செந்தூரப் பூவே படம் எடுக்கப்பட்டது. அந்த நண்பர்களுக்கு பாடல்கள் பண்ணிக் கொடுத்து அற்புதமான பாடல்கள் வீணாகிடுமே என்று சொல்லிட்டு அந்தப் பாடல்களுக்காக எடுக்கப்பட்டது தான் செந்தூரப்பூவே!

இப்பிடி ஒரு காலகட்டத்திலே நீங்க கேட்டீங்களே வேற வேற நடிகர்களை வைச்சு அப்பப்ப பண்ணலாம்னு நினைச்சு எடுத்த முயற்சிகள் எல்லாம் பல காரணங்களால அப்பிடியே தள்ளித் தள்ளி வேற மாதிரிப் போய்ச்சு. ராம்கியும் அருண் பாண்டியனும் என்னோட திரைப்படக் கல்லூரியில படிச்சவங்க. நான் வந்து இயக்கத்துறையில படிச்சிட்டு இருந்தப்போ அவங்க நடிப்புத்துறையில படிச்சிட்டிருந்தாங்க. அங்க ஏற்பட்ட நட்பு அது. அதே காலகட்டத்தில ரகுவரன், முரளிகுமார்னு சொல்லிட்டு மற்றது ‘கங்கா யமுனா சரஸ்வதி’ சீரியல்ல பார்த்திருப்பீங்க கதாநாயகனாக நடிச்சாரு. இவங்கள்லாம் ஒரே சமயத்தில படிச்சிட்டு இருந்த காலகட்டம். முதல்ல வந்து ரகுவரன தான் நினைச்சேன் நான். அவரு என்னோட சேர்ந்து பண்றதில ரொம்ப விருப்பமாக இருந்தாரு. அப்ப எங்களுக்குள்ள சில முரண்பட்ட கருத்துக்கள் ஏற்ப்படவே ரகுரவனை விட்டிட்டு ராம்கி, அருண் பாண்டியன் இவங்களை வைச்சு பண்ண ஆரம்பிச்சேன்.
கரெக்டா சொல்லனும்னா ராம்கியைத் தான் முதன் முதலாக தேர்ந்தெடுத்தன். இரவுப் பாடகன் என்று ஒரு படம் சொன்னேனில்லையா அந்தப் படத்திற்காக தேர்ந்தெடுத்தேன். பட் அந்தப் படம் தள்ளிப் போய் ஊமைவிழிகள் ஆரம்பிச்சப்போ அதில அருண் பாண்டியனை பயன்படுத்திக்கிட்டேன். அப்பிடி நாங்க ஒண்னா படிச்சதால ஒண்ணோட ஒண்ணா பண்ணினம். அப்புறம் முரளிகுமாரை டப்பிங் துறையில பயன்படுத்தினேன், அருண் பாண்டியனுக்காக. ஏன்னா அவரு முழுக்க முழுக்க திருநெல்வேலியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் அப்பா மில்ட்ரில இருந்தாரு அதால வட இந்தியாவில இருந்ததால அவருக்கு ஹிந்தி தான் வரும். தமிழ் சுத்தமா பேச வராது அவ்வளவு தான். ரொம்ப தடுமாறி பேசிட்டு இருந்த காலகட்டம். அதனால அவருக்கு டப்பிங் குரல் கொடுக்கிறதுக்காக முரளிகுமார தயார்பண்ணினம். அதற்கப்புறம் பார்த்தீங்கன்னா டப்பிங் துறையில இன்றுவரைக்கும் முன்ணணி டப்பிங் கலைஞராக இருந்திட்டுருக்காரு. அதுக்கப்புறம் அவர படங்களில நடிக்க வைச்சேன். செந்தூரப் பூவேயில ஊமையனாக ஒரு கரெக்டர் பண்ணியிருந்தாரு.

கேள்வி- இந்த காலகட்டத்திலே அதாவது தாய்மார்களை குறி வைத்து திரைப்பட விளம்பரம் செய்த காலகட்டத்திலே முற்றுமுழுதாக இளைஞர்களுக்கான என்றொரு பாணியிலே இணைந்த கைகள் திரைப்படத்தை நீங்கள் உருவாக்கியிருந்தீர்கள். அந்தப் படத்தினுடைய வெற்றி எவ்வாறு அமைந்திருந்தது?

பதில்- இதை வந்து பலமுறை பல பேருக்கு நான் குறிப்பிட்டு இருக்கேன். இணைந்த கைகள் திரைப்படம் அவ்வளவாக சரியா போகலை என்றொரு எண்ணம் பல பேருக்கு இருந்திச்சு. அதற்கு காரணம் என்னான்னா நாம அதை முறையாக வெளிப்படுத்த தவறிட்டோம்னு நினைக்கிறேன். எங்களுடைய வெற்றிப் படங்களில அதுவும் வந்து மிகப் பிரமாண்டமான வெற்றிப் படம் தான். பல சாதனைகளை நிகழ்த்தியது அது.

என்.கே.விஸ்வநாதன் என்னோட நண்பர்.டைரக்டராகவும் கமெராமேனாகவும் வைச்சு அந்தப் படம் பண்ணப்பட்டது. அந்தப் படத்திற்கு எனக்கு வந்து மிகப் பெரிய சோதனை வந்திச்சு. முதல் படங்கள் வெற்றிப் படமாக இருந்திச்சு. ஆனால் இந்தப் படம் வந்து வெற்றி குடுக்க முடியுமா அந்த பீல் இல்லையே! சேம் கரெக்டர் இல்லையே அப்பிடிங்கிறதில வந்து எனக்கு வியாபார ரீதியாக பெரிய தடுமாற்றம் இருந்திச்சு. ஆனால் செந்தூரப்பூவே வெற்றிக்குப் பிறகு அதை வந்து முறியடிக்க முடிஞ்சுது.
ஆனால் அந்த மூணு வெற்றிக்கப்புறம் இவங்கள வைச்சப்புறம் தான் விஜயகாந்த் என்ற மிகப் பெரிய நடிகருக்கு கால்ஷீட் கொடுத்தாங்க. அதால ராம்கி; அருண் பாண்டியனை வைச்சு எப்பிடி வெற்றிப் படம் கொடுக்க முடியும்னு சொல்லி திரும்பவும் எனக்கு அது ஒரு சோதனைக் கட்டமாய் வந்திச்சு. எனவே மீண்டும் எங்களை நிரூபிச்சாகனும் என்ற காலகட்டம் வந்தது. அதுக்கப்புறம் மிகப் பெரிய வெற்றிப் படமாக கொடுத்தாகனும் என்ற கட்டாயம் ஏற்பட்டு அந்த திரைப்படத்தை தயாரிச்சோம். அது என்ன எதிர்பார்ப்போட செய்யப்பட்டதோ அந்த எதிர்பார்ப்பை முழுமையாக அந்த படம் ஈடுகட்டிச்சு. அது மிகப் பெரிய பிரம்மாண்டமான வெற்றிப் படங்கிறதில சந்தேகம் இல்ல. அது பல சாதனைகளை ஏற்படுத்திச்சு.

கேள்வி- அதாவது சாதனைகள் என்று சொல்லும் போது அவற்றையும் சொன்னால் இந்த வேளையிலே சிறப்பாக இருக்கும்.

பதில்- சாதனைகள். உதாரணத்துக்கு சொல்லனும்னா கோயம்புத்தூருக்கு பக்கத்தில மேட்டுப்பாளையம் என்ற ஒரு ஊரு இருக்கு. அந்த ஊர்ல அதற்கு முந்திய அதிகபட்ச ஹவுஸ்புல் காட்சிகள் ஓடுனது வந்து நம்ம ரஜனி நடிச்ச ராஜாதிராஜா. ஆர் சுந்தரராஜன் இயக்கியிருந்தாரு. நம்ம இளையராஜா தயாரிப்பாளராக பண்ணின படம் அது. அது தான் அதுக்கு முன்னாடி அரங்கு நிறைந்த காட்சிகள் ஓடின படம் என்ட சாதனையை பெற்றிருந்தது. அந்த சாதனைகளை முறியடிச்ச படம் இந்த இணைந்த கைகள் படம். மேட்டுப்பாளையம் சிவரஞ்சினி தியேட்டர்ல இந்த ரெக்கார்ட பெற்றிச்சு. அதே மாதிரி நம்ம பழனி முருகன் இருக்கிற அந்த ஊர்ல. இதற்கு முன் கரகாட்டக்காரன் மிகப் பெரிய வசூல் சாதனை ஏற்படுத்திச்சு. அந்த சாதனையையும் அந்த இணைந்த கைகள் படம் முறியடிச்சுது. அதைத் தவிர இணைந்த கைகள் திரைப்படம் தான் உலக மார்க்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த முதல் தமிழ் படம். நிறைய பேருக்கு அந்த செய்தி தெரியாது. நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஜங்கரன் இன்டர்நேசனல் நம்ம லண்டனில இருக்கிற கருணாமூர்த்தி அவர் தான் அதனுடைய நிறுவுனர். அவரு நம்மட செந்தூரப்பூவே பிலிம வந்து ஒரேயொரு பிரிண்ட் மாத்திரம் லண்டனுக்கு போட்டார். ஒரேயொரு பிரிண்ட் கிடைக்குமா ஒரு சோ ஆரம்பிக்கப் போறேன்னார். அதுக்கப்புறம் ஒருமுறை பேசிக்கிட்டு இருந்தப்போ கேட்டாரு ஆதி காலத்தில நம்ம எம்ஜிஆர் திரைப்படங்கள் சிவாஜி திரைப்படங்கள் நிறைய இலங்கையிலும் மலேசியா சிங்கப்பூர்ல வந்து நேரடியாக திரையரங்குகளில வெளியிடப்பட்டது. அதொரு காலகட்டம். அதுக்கப்புறம் என்னாச்சுன்னா திரையரங்குகளில வெளியிடுறது எல்லாம் போய், வெறும் வீடியோ ரிலீஸ் மாத்திரம் தான்.
உலகம் முழுவதும் வெறும் வீடியோவுல தான் நடந்திட்டு இருந்திச்சுது. அந்தக் காலகட்டத்தில தான் நாங்க ஊமைவிழிகள் உழவன் மகன் மற்றும் செந்தூரப்பூவே அந்த காலகட்டம் எல்லாமே வீடியோவுல தான் ரிலீஸ் ஆய்ச்சு.
அப்பத் தான் நம்ம கருணாமூர்த்தி சொன்னாரு ஏன் நாங்க தியேட்டர்ல போய் ரிலீஸ் பண்ணக் கூடாதுன்னு. உலகம் முழுவதும் திரையரந்குகளில வெளியிடலாம்னு நினைக்கறோம் நீங்க என்ன நினைக்கிறீங்க என்டாரு. சொல்லுங்க சார் நாம பிளான் பண்ணலாம்னு சொன்னேன். அதுக்கப்புறம் வந்து அந்த திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடனும் என்ட முடிவோட எடுக்கப்பட்டது. வெளியிடப்பட்டது. வெளியிடுற அன்னைக்கு முழு பக்க விளம்பரத்தில இன்று முதல் உலகம் முழுவதும் வெளியிடும் என்டு சொல்லிட்டு உலகம் பூரா இருக்கிற தியேட்டர்ல ரிலீஸ். மலேசியாவில கோலாலம்பூர் என்ற தியேட்டர். சிங்கப்பூர்ல லண்டன்ல கனடாவுல என்னென்ன தியேட்டர்னு வெளிவர்ற தியேட்டர்ன்ட பெயர் எல்லாத்தையும் போட்டு விளம்பரம் பண்ணியிருந்தம். திரும்பவும் வந்து திரையரங்குகளில வெளியிடுறது என்ற ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் இணைந்த கைகள் திரைப்படம் தான். அது ஒரு மிகப் பெரிய பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. அந்த வெற்றியைத் தொடாந்து இன்னைக்கு வரைக்கும் உலகம் முழுவதும் திரைப்படங்கள் வந்து திரையரங்குகளிலே வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது ஒரு சாதனைன்னு சொல்லாம்.
அதைத் தொடர்ந்து பார்த்தீங்கன்னா மும்பையில தமிழ் படங்களைப் பொறுத்தவரைக்கும் காலம் போக ஒரு வாரம் ரெண்டு மூணு நாலு வாரம் போக ஒரு காட்சிகள் தான் போடுவாங்க. அப்பிடி இருந்த காலகட்டத்தில 84 நாட்கள் அந்தப் படம் போய்ச்சு. எனவே அது மிகப் பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்திச்சு. வசூல் சாதனையை குறிப்பிடும் போது அதனுடைய வெளியீட்டைப் பற்றியும் குறிப்பிடனும். அது எந்தளவிற்கு எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருந்திச்சு என்றது தெரியும்னு நினைக்கிறேன்.
பம்பாய்ல வந்து ட்ரைவ் இன் தியேட்டர் ஒண்ணு இருந்திச்சு, இப்ப அது இல்ல. அந்த ட்ரைவ் இன் தியேட்டர்ல ஹிந்திப் படங்கள் தான் ரிலீஸ் ஆகும். அல்லது ஆங்கிலப் படங்கள். அதில வந்து பம்பாயை சேர்ந்த நம்பி என்பவரு படங்கள் வெளியிடுபவர். அவர் சொன்னாரு, நம்ம இணைந்த கைகள் திரைப்படத்தை ட்ரைவ் இன் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன் என்றார். நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்கன்னாரு. இந்த டிரைவின் தியேட்டர்ல ரெண்டு காட்சிகள். மாலைக்காட்சி. இரவுக்காட்சி. பகல் காட்சி 60 ரூபா திரையரங்கில அப்படின்னு முடிவு பண்ணி விளம்பரம் பண்ணியிருந்தாரு. காலைக்காட்சி போனவுடனே வந்து மிகப் ஷெபரிய வரவேற்பாயிடுச்சு. அன்று மாலைக்காட்சி டிரைவினுக்கு வந்து எக்கச்சக்கமான கூட்டம். கிட்டத்தட்ட நாலாயிரம் பேருக்கு மேல திரண்டு மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டு அந்த டிரைவின் தியேட்டரையே அடித்து நொறுக்கிட்டாங்க. அதற்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் அந்த தியேட்டர் ஓப்பனாகலை. அந்த டிரைவின் தியேட்டர்ல முதன் முதலில வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படம் இந்த இணைந்த கைகள். வெளியிட்ட அன்றே அதை மூடுற மாதிரி சூழ்நிலை ஏற்பட்டிச்சு. அவ்ளோ பெரிய வரவேற்போட அந்தப் படம் பம்பாய்ல வெளிவந்திச்சுது. இது வந்து ரிலீஸ் நேரம் ஏற்ப்பட்ட நிகழ்வு. அதே சமயம் வசூலிலயும் சாதனை பண்ணிச்சுது. அந்தப் படத்தினுடைய வெற்றி மிகப் பெரிய வெற்றியாக இருந்திச்சு.அந்த ரிசல்ட் பல வகையில எனக்கு தாக்கத்தை ஏற்படுத்திச்சுது ஆனா அதை நான் பயன்படுத்திக்கலைல. உதாரணத்திற்கு சொல்லனும்னா கிட்டத்தட்ட வந்து 44 படங்கள் ஒரு வருட காலகட்டத்தில வெறும் இசையமைப்பாளராக என்னை நெருங்கினாங்க. சொல்லப் போனால் எல்லா நடிகரோட படங்களும். ஒரு சிலரைத் தவிர.
ரெண்டு படங்கள் தான் வெளிப்படங்களுக்கு இணை இசையமைப்பாராக பணி புரிந்தேன். ஒண்ணு “தாய்நாடு” மற்றது “அண்ணன் என்னடா தம்பி என்னடா” இந்த ரெண்டு படங்கள் தான். அது நட்புக்காக பண்ணினது ரெண்டுமே. அதால வெளியில ஒரு கமர்ஷியல் ரீதியாக எதுவும் கமிட் பண்ணிக்கவில்லை. அதை ஏற்படுத்திக் கொடுத்தது இணைந்த கைகள் திரைப்படம் தான்.
அதே போல இணைந்த கைகள் படத்தோட வெற்றி எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திச்சுன்னா நம்ம விஜயகாந்தும் ராவுத்தரும் எனக்கு சொல்லிட்டாங்க. சார் உங்களுக்கு ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. அதால உங்களை கதாநாயகனாக போட்டம்னா ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அப்பிடின்னு சொல்லி பெரிய இக்கட்டை ஏற்படுத்திட்டாங்க. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நான் அப்செட்டான மாதிரி சுற்ற்றிக்கொண்டிருந்தேன்.
ராவுத்தர் என்ன சொல்லிட்டாருன்னா சார் கோட்டு போட்டுக்கிறீங்க, கையில நாயை பிடிச்சிட்டு நடக்கிற மாதிரி முழுப்பக்க விளம்பரம் சார், படத்தோட டைட்டில் சொல்லிட்டிருந்தாங்க “ஹானஸ்ட் ராஜ்” இது தான் படத்தோட டைட்டில். நீங்க தான் ஹீரோ ராவுத்தர் பிலிம்ல ஒரு அறிவிப்பு ஒண்ணு கொடுக்கிறோம்ன்னாரு. இன்னொரு முறை இதை பற்றி பேசுறதன்னா இந்த ஆபிசுக்கே நுழைய மாட்டேன்னு சொல்லிட்டு அந்தப் பக்கமே போகலைன்னு வைங்களேன். அப்பிடி ஒரு மிகப் பெரிய இமேஜ்ஜைக் கொடுத்தது. இந்த இணைந்த கைகள் திரைப்படம் தான். அவ்வளவு தூரம் பாதிச்சது.


கேள்வி- ஊமை விழிகள் படத்திலே மூங்கில் கோட்டைன்னு ஒரு படம் உருவாகுவதாக சொன்னீர்கள் அதைப் பற்றி பின்னர் வராமலேயே போய் விட்டது. அதைப் பற்றி எதுவும் குறிப்பிடலாமா?

பதில்- அதுக்கு குறிப்பிட்ட காரணங்கள் பல காரணங்கள். அதுல ஒண்ணை உங்களோட பகிர்ந்துக்கிறதில தப்பில்ல என்று நினைக்கிறேன். படங்களை வந்து நீங்க வெற்றிப் படங்களாக கொடுத்திட்டு இருக்கிற வரைக்கும் உங்களுக்கு எல்லாமே சுமுகமாகவும் வெற்றியாகவும் நடந்திட்டு இருக்கும். என்றைக்கு நீங்க வந்து தோல்விப் படங்கள் கொடுக்க ஆரம்பிக்கிறீங்களோ உங்களுக்கு எதிராக இருக்கிற எல்லா விசயங்களும் மொத்தமாக கிளம்பி வந்திடும் என்பது மாதிரி முதல் தோல்விப்படம் காவியத்தலைவன் கொடுத்ததில இருந்து பிரச்சினைகள் ஆரம்பமாச்சு. அது ஆரம்பமாச்சுதுன்னா எனக்கும் விஜயகாந்த்க்கும் இருந்த புரிதல் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. சொல்லப் போனால் அதற்கப்புறம் கொஞசம் விலகியே இருந்தேன்னு வைங்களேன். அப்ப அந்த மூங்கில் கோட்டை சம்பந்தமாக பேசறதுக்கு எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கலை. நான் எதிர்பார்த்த மாதிரி கிடைக்கேல்லை. ஒரு பக்கம் வணிக ரீதியான பிரச்சனைகள். இன்னொன்னு இந்த மாதிரியான ஒத்துழைப்பெல்லாம் கிடைக்காமல் இருந்திச்சு.

ஆனால் அத்தனை பிரச்சனைகளையும் தாண்டி இப்ப உங்க மூலமாக தான் அறிவிப்பு பண்றேன். சில விஷயங்களை நாங்களே பார்க்க முடியாத விசயங்களை நீங்கள் இங்க ஆஸ்திரேலியாவில இருந்திட்டு எந்தவளவுக்கு மிக நுணுக்கமாக கவனிச்சிருக்கீங்கன்னா ரொம்ப சந்தோசமாயும் இருக்கு. நான் திரைத்துறையில நுழைஞ்சு 25 வருசம் ஆச்சு. இந்த 25வது வெள்ளிவிழாவில அந்த மூங்கில் கோட்டை நூறு சதவீதம் வெளிவரும்.

கேள்வி- ஓ. மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட காலமாக உங்களுடைய ரசிகனாக இருந்து பார்க்கின்ற அளவிலே எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் படத்தினுடைய நடிகர்க்ள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரங்கள் குறித்து நீங்கள் முடிவெடுத்து விட்டீர்களா? இல்லை இன்னும் அது முற்தயாரிப்பில் தான் இருக்கிறதா?

பதில்- அந்தப் படத்தை நான் தான் இயக்கப் போகின்றேன். ஒரு இயக்குநராக அந்தப் படத்தில வெளிவரப்போறேன். அந்தப் படத்தினுடைய மற்ற விடயங்களை நான் உங்களுக்கு அடுத்து நான் தெரியப்படுத்தறேன். அதாவது 25 வருடங்களுக்கு முன்னால் ஊமைவிழிகள் திரைப்படம் முதன் முதல் எடுக்கப்பட்ட பொழுது என்ன ஒரு வேகத்துடன் ஒரு உத்வேகத்துடன் ஒரு பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தனும்னா ஒரு சின்னதொரு புள்ளியை ஏற்படுத்தனும் அது ஓரளவிற்கு ஆரம்பிக்க முடிஞ்சதுன்னு நான் நினைக்கிறேன். அடுத்த கட்டத்திற்கான ஒரு பயணமாக இந்த மூங்கில் கோட்டை திரைப்படத்தின் மூலமாக நிச்சயமாக ஏற்படுத்த முடியும்னு நம்பறேன்.


கேள்வி- உண்மையிலேயே இந்த 25 வருட காலத்திலே ஆபாவாணன் என்ற கலைஞர் தன்னுடைய வெளிப்பாடுகளை தான் சொல்ல வருகின்ற செய்திகளை தன்னுடைய திரைப்படத்தின் மூலமாக தான் காட்டி வந்தார். பரபரப்பான பேட்டிகளோ அல்லது ஊடகம் மூலமான அறிக்கைகளோ இதுவரை நீங்கள் வெளிக்காட்டவில்லை. உங்களுடைய படங்கள் தான் நீங்கள் யார் என்பதை காட்டி வந்தன. ஆனால் இத்தனை மணி நேரமும் ஒரு மணி நேரமாக உங்களுடைய மனதிலே இருந்ததை காட்டியது. எத்தனையோ விடயங்களை பல தெரியாத விடயங்களை எமது ஆஸ்திரேலிய நேயர்களுக்கும் அதைப் போன்று உலகெங்கும் வாழ்கின்ற நேயர்களுக்கும் இணையத்தள நேயர்களுக்கும் கூட இந்த வேளையிலே சொல்லியிருக்கிறேன். உண்மையிலேயே இந்த சந்திப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

பதில்- ரொம்ப சந்தோசம். ரொம்ப சந்தோசம். அதாவது நாம பேசிய விசயங்களில குறிப்பிட வேண்டிய விஷயம் என்னன்னா அதற்கப்புறம் பலமுறை சத்தியராஜ் சொல்லுவாரு .நான் செந்தூரப்பூவே படம் ரெடியானப்போ போட்டுக் காட்டினேன். படத்தை பார்த்திட்டே வந்து கையைப் பிடிச்சிட்டு ரொம்ப நேரமாக மூஞ்சையை பார்த்திட்டு இருந்தாரு. எவ்ளோ பெரிய தப்பைப் பண்ணிட்டேன் சார். வந்து முதன் முதலாக எங்கிட்ட தான் கேட்டிங்க பண்ணுங்கன்னு சொல்லி. நான் அன்னைக்கு ஒரு வேகத்தில வந்து நீங்க தயாரிக்கிறீங்களா நீங்க பண்றீங்களா என்று கொஞ்சம் அலட்சியமாக பேசி அனுப்பிட்டேன். இன்னைக்கு நான் ரொம்ப ஃபீல் பண்றேன். ஏன்னா அதில தான் விஜயகாந்த்க்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைச்சது. தமிழக அரசினுடைய சிறந்த விருது வாங்கின படம். சிறந்த நடிகர். சிறந்த இயக்குநர். சிறந்த ஒலிப்பதிவாளர் என்று நான்கு விருதுகளை வாங்கிய படம் அது.
அது தயாரிக்கிறப்போ யாருமே விஜயகாந்த்ல இருந்து யாருமே சீரியசா எடுத்துக்கலை. பட் அது மிகப் பெரிய வெற்றியாகவும் திருப்புமுனையாகவும் இருக்கும்னு நான் நம்பினேன். அந்த மாதிரி ஏற்படுத்திக் கொடுத்திச்சு. அதற்கப்புறம் நீங்க கேட்டிங்கள்லையா நடிகர்கள் ஏன் பண்ணல என்று? சில விசயங்கள் வந்து தமிழில என்ன ஏற்படுதுன்னு சொன்னன். செந்தூரப்பூவே படம் வந்து ஹிந்திக்கு போறதா இருந்திச்சு. நான் சிகப்பு மனிதன் பண்ணின பூர்ணச்சந்திரா அதை டைரக்ட் பண்றதா இருந்தாரு. அதான் நான் ஒத்துக் கொண்ட முதல் வெளிப்படம் அதான். இந்த காம்பினேசன்ல எடுக்கிறதா வேலைகள் நடந்தது. அதான் நான் ஒத்துக் கொண்ட முதல் வெளிப்படம். ஆனால் அது எடுக்க முடியாம தயாரிப்பாளருக்கும் நடிகருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில அப்படியே நின்னு போய்ச்சு. இல்லைன்னா அது வேற மாதிரி பயணப்பட்டிருக்கும்.

கேள்வி- இவ்வளவு நேரமாக ஆஸ்திரேலிய நேயர்களுக்கு ஆபாவானன் அவர்களே உங்கள் மன வெளிப்பாடுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு எமது நேயர்கள் சார்பிலும் எங்களுடைய சார்பிலும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பதில்- நன்றி நன்றி. ஒரேயொரு விசயம் மாத்திரம் கடைசியாக வந்து சொல்லிக்க விரும்புறேன். நமது உலகத் தமிழர்களை பொறுத்தவரைக்கும் என்னன்னா நாம இன்னைக்கு மிகப் பெரிய சோதனைகளை சந்திச்சிட்டிருக்கோம்.தங்கம் கூழாங்கல் ரெண்டையும் எடுத்தீங்கன்னா தங்கம் வந்து அடிக்க அடிக்க பக்குவப்படும். பல உருவங்களை எடுக்கும். பல சிற்பங்களை செய்ய முடியும். கட்டித் தங்கம் வெட்டி எடுத்து … பாடல் வரிகள் கேட்டிருப்பீங்க. தட்டித் தட்டி சிற்பம் செய்வோமடா.. ஒரு மனிதன் தங்கமாகவும் இருக்கலாம். கூழாங்கல்லாகவும் இருக்கலாம். சோ. தங்கம் எப்பிடி மேன்மையுறுதோ அந்த மாதிரி ஏற்பட்ட சோதனைகள் அத்தனையும் நமக்கு ஏற்ப்பட்ட பலமாக எடுத்துக்கிட்டு நாம பல மடங்கு வேகத்தோட வெளிப்படணும். மிகப் பெரிய சாதனைகளை ஏற்படுத்தனும். கூழாங்கல்லை பார்த்தீங்கன்னா ரெண்டு முறை தட்டிங்கன்னா இல்ல நாலு முறை தட்டிங்கன்னா நொறுங்கிடும். அதனால எந்த ஒரு மனிதனும் கூழாங்கல்லாக இல்லாம தங்கம் போல தட்டத் தட்ட தட்ட பக்குவப்படணும் மேலும் மேலும் வலுப்படணும். நமது வாழ்க்கையை பலப்படுத்திக்கணும். மிகப் பெரிய சாதனைகளை ஏற்படுத்தனும். மிகப் பெரிய சாதனைகளை சந்திக்கணும். வேதனைகள் மறக்கப்பட வேண்டும். தங்கமாய் வாழ்வோம் அப்பிடின்னு எல்லோரையும் வேண்டிக் கேட்டுக்கிறேன்.

கேள்வி- மிகுந்த நன்றி. ஆபாவாணன் அவர்களே.

எல்லாருக்கும் நன்றிகள்.

ஆபாவாணன் வழங்கிய “ஊமை விழிகள்” உருவான கதை

எண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் பயணித்துக் கொண்டிருந்த வேளை ஆபாவாணன் என்கிற திரைப்படக் கல்லூரி மாணவர் ஊமை விழிகள் என்கிற ஒரு பிரமாண்டமான படைப்பை முற்றுமுழுதான மாறுபட்ட திரைக்கதையம்சம் கொண்ட பாணியிலே தமிழ் சினிமாவுக்கு ஒரு புது அம்சமாக பாய்ச்சுகின்றார். இந்த பன்முகக் கலைஞர் ஆபாவாணன் திரைத்துறைக்கு வந்து 25 வருடங்களை கடந்த 2011 ஆம் ஆண்டில் எட்டிய வேளை எமது ஆஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சார்பிலே சந்திக்கவிரும்பினேன். முதல் என்னை அறிமுகப்படுத்திப் பேட்டி செய்யலாமா என்று கேட்டபோது 20 நிமிடங்கள் தான் பேசுவதாகத் திட்டம், ஆனால் நமது உரையாடல் சுவாரஸ்யமாகப் பயணிக்கவே, 25 வருஷங்களுக்கு முந்திய அதே இளமைக் களையோடு தொடர்ந்து மகிழ்ச்சியோடு பேசினார், ஒரு மணி நேரம் கடந்தது அந்தப் பேட்டி. பேட்டி முடிவில் அவர் பகிர்ந்த நன்றியின் பின்னால் தன்னுடைய சாதனைகளை இன்னும் நினைவுறுத்தி ஒரு பேட்டி அமைந்ததே என்ற மகிழ்வு இருந்ததை உணர்ந்தேன்.

இந்தப் பேட்டியை இரண்டு பாகங்களாகப் பிரித்து ஒலி வடிவிலும் எழுத்து வடிவிலும் தரவிருக்கின்றேன்

இதோ அந்தப் பேட்டி ஒலி வடிவில் கேட்க

Download பண்ணிக் கேட்க

எழுத்து வடிவில் தொடர்ந்து இந்தப் பேட்டியைத் தருகின்றேன்

கேள்வி- 80களிலே அதாவது 1986ல் ஊமைவிழிகள்; என்ற திரைப்படத்தோடு உங்களுடைய திரைப்பயணம் ஆரம்பிக்கின்றது. இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் உங்களுடைய திரையுலக வாழ்வு அமைந்திருக்கிறது அப்படித் தானே?
(ஆமாம் என்கிறார்);
இந்த ஊமைவிழிகள் என்ற திரைப்படத்திலே உங்களுடைய ஆரம்பம் வருவதற்கு முன்னர் சினிமா மீதான காதல். அதன் வழியாக இந்த சினிமா குறித்து உங்களுடைய தேடல் எப்படி அமைந்ததென்று சொல்லுங்களேன்?

பதில்- சினிமாவிற்கு அறிமுகம் என்று சொல்லிச் சொன்னால் பள்ளிப் பருவத்திலிருந்து சொல்லாம். பள்ளிப் பருவத்தில சிவாஜியினுடைய படங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. என்னுடைய சினிமா ஆர்வத்திற்கு தூண்டுகோலாக இருந்த வி ஷயம். ஊரில அப்பா அம்மா எல்லோரும் சிவாஜி படம்னா விரும்பிப் பார்த்திட்டு இருப்பாங்க. அதால அவங்கட பிள்ளையான எனக்கும் அவங்ககூட படத்திற்கு போறது அதப்பத்தி பேசுறது என்று வந்ததால அது மேல ஒரு ஈர்ப்பு. வேற ஒரு கட்டத்திற்கப்புறம் சிவாஜி மேல அவர் நடிப்பு மேல அபரிதமான பற்றுதல். சிவாஜி படங்கள்னா வெறித்தனமான ஒரு காதல். இப்படியே அது வந்து கொஞ்சம் கொஞ்மாக வளர்ந்திட்டு போய்ட்டே இருந்திச்சு. பள்ளிப் பருவத்தில ஏற்பட்ட அந்த ஈர்ப்பு தான் சினிமா மேல ஒரு ஆர்வத்தையும் வேகத்தையும் ஏற்படுத்தின ஒரு வி ஷயம். அதனுடைய ஒரு விளைவு என்னன்னா பள்ளிப் பருவத்துல தெரிஞ்சதெல்லாம் நடிப்பு. நடிகர்கள் மாத்திரம் தான் நம்முடைய கண்ணு முன்னாடி தெரிவார்கள். சினிமாவுன்னா வந்து நடிகர்கள் தான் அப்படிங்கிற தோற்றத்தில .இருந்த காலகட்டத்துல நம்ம வந்து நடிக்கப் போகனும் அப்படிங்கிற ஒரு ஆர்வத்தை ஆறாம் வகுப்பு காலகட்டத்துல இருந்து எனக்குள்ள ஒரு வேகம் வளர்ந்திட்டே இருந்திச்சு. பள்ளிக்கூடத்துல நாடகங்கள் நடிக்கிறது இசையில் ஈடுபாடு கொள்றது. அந்த மாதிரி பள்ளிப்பருவத்துல சினிமா சம்பந்தப்பட்ட எல்லாத்திலும் தயாராக ஆரம்பிச்சேன்.

ரெண்டாவது பிற்காலத்துல தான் சினிமா வந்து அதனுடைய உண்மையான தலைமை தளபதி யார்னா இயக்குநர் தான் அப்படிங்கிறது புரிஞ்சது இந்த கட்டத்தில தான். அது பின்னாடி ஏற்பட்ட ஒரு மாற்றம், அந்த பள்ளிப்பருவத்தில என்னோட கவனம் முழுக்க சினிமாவுல நடிக்கணும் என்ற விதத்தில் தான் போய்ட்டிருந்தது.

கேள்வி- அதன் பின்னதாக நீங்கள் திரைப்படக் கல்லூரியிலே ஒரு மாணவராக இணைந்து அந்தப் படிப்பையும் பயின்று கொண்டீர்கள். முக்கியமாக எந்த துறையை தேர்ந்தெடுத்து நீங்கள் படித்திருந்தீர்கள்?

பதில்- ஆம். சினிமாவுல நுழையணும்னா சென்னைக்குப் போகணும். சென்னைக்குப் போகணும்னா என்ன பண்ணலாம்; பட்டப்படிப்பை சென்னையில வைச்சுக்கிட்டா நமக்கு வசதியாயிருக்கும். அதால நம்ம அடுத்த தேடலுக்கு வசதிப்படும்னு சொல்லிட்டு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில வந்து ஆங்கில இலக்கியம் படித்தேன். காரணம் என்னன்னா படிச்சது முழுக்க தமிழ் மீடியம்;. ஆங்கில அறிவையும் வளர்த்துக்கிட்ட மாதிரியும் இருக்கும். அத மாதிரி சினிமாவுக்கான தேடலையும் வளர்க்க அது வசதியா இருக்கும்னு சொல்லிட்டு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில பட்டப்படிப்பிற்கு சேர்ந்திட்டு அதுக்குப் பிறகு நிறைய தேடல்களை ஆரம்பிச்சேன். சரி என்ன பண்ணலாம். யார்கிட்ட போய் சேரலாம். எப்பிடி சினிமா எழுதலாம். அப்பிடிங்கிற இதில இருந்தப்போ அப்ப திரைப்படக் கல்லூரியைப் பற்றி கேள்விப்பட்டேன். எப்பிடி கேள்விப்பட்டேன்னா “அவள் அப்படித்தான்” என்கிற படம். டைரக்டர் ருத்ரையா டைரக்ட் பண்ணின படம். ரஜனி கமல் ரெண்டு பேரும் தான் அதில நடிச்சிருப்பாங்க. அந்தப் படத்தை பர்த்தப்போ அந்தப் படத்திற்கான விமர்சனங்கள் திரைப்படக் கல்லூரி மாணவர் வந்து அவர் தயாரித்து இயக்கிய படம். அது நல்லா திரைப்படக் கல்லூரியில இருக்கு.
அதுல இத மாதிரி கற்றுக் கொள்ள முடியும்ன்னு தெரிஞ்சவுடன் திரைப்படக் கல்லூரிக்கு அங்க இருந்து சென்னை கிறிஸ்துவக் கல்லூரிக்கு அப்ப மன்றத்துக்கு தலைவராயிருந்தேன். அவங்க சார்பில வந்து அங்க புரோகிராம் எல்லாம் நடத்தலாம் என்று அவங்கள மீட் பண்ணினேன். அப்பத் தான் தெரிய வந்தது. பள்ளிக்கூட நண்பர் நாகராஜன்னு சொல்லிட்டு எடிட்டிங். படத்துறை பிரிவில படிச்சிட்டு இருந்தான். பார்த்தானா ஆஹா! உனக்கு ஏற்ற துறை இது. பள்ளிக்கூடங்கள்ல பார்த்திருக்கிறான். நான் நல்ல நாடகங்கள்ல ஈடுபாடா இருக்கிறவன். இலக்கிய ஆர்வம். நாடகம் மற்ற வருடாவருடம் நடக்கிற நிகழ்ச்சிகளை பார்த்து ஒரு ஈர்ப்பில இருந்தவன். உனக்கு வந்து இந்த திரைப்படக் கல்லூரி நல்லதாக இருக்கும். இயக்குநர் துறையில நீ படிச்சீன்னா உனக்கு நல்ல பெரியதாய் வாய்ப்பு இருக்கும் அப்பிடின்னு சொன்னவுடன் அவன் மூலமா தான் கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன். அதுக்கப்புறம் தான் முடிவு பண்ணினேன். ஓகே. பட்டப்படிப்பை முடிச்சிட்டு திரைப்படக் கல்லூரியில சேருவோம்னு சொல்லி.

அதே காலகட்டத்தில வந்து 80களில் அதன் உண்மையான பாதை என்று பார்த்தால் இயல்பு வாழ்க்கை இயல்பான படங்கள் அப்படிங்கிற மாதிரி தான் முதல் ஈர்ப்பு இருந்தது. ஒரு கிராமிய வாழ்வை பிரதிபலிக்கக் கூடிய படங்களை பண்ணணும். நான் ஒரு கிராமத்தில இருந்து வந்ததால தானா தான் விருப்பம் இருந்திச்சு. அந்த ஒரு நோக்கத்தில தான் மனசுக்குள்ள அந்த மாதிரி தான் ஒரு வேகம் இருந்திச்சு. அப்ப அந்த காலகட்டத்துல தான் பட்டப்படிப்பு படிச்ச காலகட்டத்துல தான் பதினாறு வயசினிலே திரைப்படத்தை பார்த்தேன். பார்த்தவுடன் ஒரு வாரம் நான் தூங்கலை. ஏன்னா எப்படி ஒரு கிராமிய வாழ்க்கையை கிராமிய இயல்பை வைச்சு நாம சினிமாவுக்குள்ள நுழையலாம்னு கனவு கண்டிருந்தமோ அதைவிட பல மடங்கு சிறப்பாகவும் பிரமாதமாகவும் பதினாறு வயசினிலே திரைப்படத்தை எடுத்திருக்காங்க. நம்ம போய் எப்பிடி சினிமாவுல என்ன பண்ண முடியும். என்ன பண்ணப் போறோம். அது எனக்குள்ளேயே ஒரு பயம். ஒரு தடுமாற்றம். எல்லாம் ஏற்பட்டிச்சு.
அந்த எண்ணுதலோட தான் திரைப்படக் கல்லூரியில சேர்ந்தேன். சேர்ந்ததற்கப்புறம் தான் நாம கிணற்றுத்தவளையா இருந்திருக்கோம். இது வந்து எல்லையில்லாதது. சினிமாங்குறது எல்லையில்லாதது. பல வித கோணங்கள் இருக்குதில்ல எந்தக் கோணத்தை வேணுமினாலும் வந்து தேர்ந்தெடுத்துக்க முடியும். அப்பிடிங்கிற ஒரு அறிவு அங்க கிடைச்சது. அதற்கப்புறம் தான் ஓகே. நாம எந்த கோணத்தில நுழைஞசா நாம கவனிக்கப்படுவோம். கவனிக்கப்பட்டதிற்கு பின்னாடி நம் எதிர்கால திட்டங்கள் என்ன அப்பின்னு எனக்கு நானே ஒரு வரைமுறைகளை ஏற்படுத்திக்கிட்டு வேர்க் பண்ண ஆரம்பிச்சேன். அதனுடைய ரிசல்ட்டு தான் நீங்க பார்த்த ஊமைவிழிகள் திரைப்படம்.அந்த திரைப்படக் கல்லூரியில கதை திரைக்கதை இயக்குநர் பிலிம் டைரக்க்ஷன் அதில மூன்றாண்டு காலம் படிச்சிட்டு அதுக்கப்புறம் படம் எடுத்தேன்.


கேள்வி- அதாவது இந்தப் படத்தை பற்றி சொல்லும் போது ஊமைவிழிகள் என்ற படம் வந்த காலகட்த்தில இந்தப் படத்தினுடைய பிரம்மாண்டம். அந்த கதை சொன்ன உத்தி. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது அந்தக் காலத்திலே ஒரு தயாரிப்பாளராகத் தான் அந்தப் படத்ழத நீங்கள் முன்னெடுத்திருக்கிறீர்கள். அதாவது பல திரைப்படங்களிலே நீங்கள் உங்களுடைய அடிப்படையிலே திரைக்கதை ஆசிரியராக இயக்குநராக இருந்தாலும் ஒரு உதவி ஆசிரியராக அல்லாத இணை என்ற பாணியிலே முழுமையான எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு அவற்றிலே முழுமையான பங்களிப்பாக உங்களுடைய பங்களிப்பு இருந்திருக்கிறது. நேரடியாக இயக்குநர் என்ற துறையிலே நீங்கள் அப்படியே கால் வைக்கவில்லை. அதற்கு ஏதும் அடிப்படை காரணம் இருக்கிறதா?

பதில்- ஆம். நிச்சயமாக. திரைப்படக் கல்லூரியைமுடிச்சவுடன் திரைப்படக் கல்லூரியில படிக்கும் காலகட்டத்திலேயே வந்து ஒரு முக்கியமாக முடிவெடுக்கிறதுக்கு சில நிகழ்ச்சிகள் காரணமாக இருந்திச்சு. அந்த திரைப்படக் கல்லூரி ஆண்டு விழாவில பிரபலமான இயக்குநர் ஒருத்தர் வந்தாரு. அந்த ஆண்டுவிழாவில அவர் பேசறப்போ திரைப்படக்கல்லூரி என்கிறது வந்து டோட்டலா வேஸ்டு. இந்த கல்லூரியில படிச்சிட்டு வந்து நீங்க என்ன பண்ணப் போறீங்க? அதுக்கப்புறம் வந்து திரும்ப எங்கள மாதிரி இயக்குநர்களிடம் உதவியாளராய் சேர்ந்து தொழிலைப் படிச்சிட்டு அதுக்கப்புறம் தான் படம் எடுக்க முடியும். இடையில் திரைப்படக் கல்லூரியில இந்த படிப்பறிவையும் அனுபவத்தையும் வைச்சுக்கிட்டு உங்களால படங்கள் எடுக்க முடியாது. ஏன் வந்து உங்க வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிக்கிறீங்க. அப்பிடி சொன்னவுடன எனக்கு பெரிய அதிர்ச்சியாய் இருந்திச்சு. என்னடா அப்பிடி ஒரு எண்ணத்தோட பேசறாரு. அதுவும் திரைப்படக் கல்லூரியின் ஆண்டு விழாவுக்கு வந்திட்டு அங்க வைச்சு மாதிரி சொன்னவுடன் என்னால ஜீரணிக்கவே முடியலை. என்ன இப்பிடி ஒரு கற்றுக்குட்டியாக இருக்காரு. என்ன இப்படி பேசறாரு. மிகப் பெரிய இயக்குநர். பெரிய சாதனைகளை பண்ணிட்டு இருக்கிற பெரிய டைரக்டர். இப்படி ஒரு எண்ணத்தை அவர் வளர்த்திட்டு இருக்காரே என்று நினைச்சவுடனே அதுக்கப்புறம் தான் ஓகே. இதுக்கு முன்னாடி திரைப்படக் கல்லூரிக்கு வந்த யாருமே படங்கள் கொடுத்திருக்காங்க. நான் முதலே சொன்ன மாதிரி அவள் அப்படித் தான் என்கிறது மிகச் சிறந்த படம். ஆனா என்னன்னா வணிகரீதியா வெற்றியடையணும். கமர்ஷியல் சக்சஸ் அப்பிடின்னு வந்தா தான் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் எதற்குமே என்றதை புரிஞ்சுகிட்டேன்.


அப்ப வந்து நல்ல கமர்ஷியல் சக்ஸசை கொடுக்கனும்னா தான் நம்ம யாரு என்றதை தெரிஞ்சுக்குவாங்க. அதனால வெறும் திரைப்படக் கல்லூரியில படிச்ச அனுபவமுள்ளவர்களை வைச்சுக்கிட்டு படங்களை நம்ம எடுக்கனும். நம்ம வகுப்பு தோழர்கள் நம்ம கூடப் படிக்கிறவங்க நமக்கு கீழ படிச்சிட்டு இருக்கிறவங்க இந்த மாதிரி ஒரு டீமை செட் பண்ணுவம். நம்மளே அத தயாரிப்போம். நம்மளே அத முழுமையா எடுப்போம். முழுக்க முழுக்க திரைப்படக் கல்லூரியில படிச்ச அந்த அனுபவத்தை வைச்சு ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தோம் என்கிற பெருமையை நெறிப்படுத்தணும் அப்பிடிங்கிற ஒரு வேகத்தை உண்டுபண்ணினது அந்த நிகழ்ச்சி. அதனுடைய விளைவு தான் நான் அங்க திரைப்படக் கல்லூரியில படிக்கிறப்போ ஊமைவிழிகள் திரைப்படத்தை எடுத்தம். அங்க டிப்ளோமாவுக்கு பிலிம் ஒன்று எடுக்கணும். எங்க பைனல் இயர்ல மூன்றாவது வருடத்துல கடைசியாக நாங்க படிச்சிட்டு அதை எடுத்துக் காட்டணும். அதில வந்து இந்த ஊமைவிழிகள் ஷா ர்ட் சீனை தான் டிப்ளோமாவிற்காக நான் எடுத்தன். அது வந்து 1600 லென்த் இருக்கும். அந்தப் படத்தினுடைய நீளம் அது. அது எடுக்கப்பட்டு இன்னைக்கு வரைக்கும் திரைப்படக் கல்லூரியில அதை ஒரு பொக்கிஷமாக வைச்சிட்டு இருக்காங்க. கல்லூரியில யார் வந்தாலும் சாம்பிளா கல்லூரி மாணவர்கள் படிக்கிறப்போ எடுத்தது என்று போட்டுக் காட்டுறதில முன்னணியில இருக்கிற படம் அது. அதுக்கப்புறம் முழுமையாக நாம தயார் பண்ணிக்கணும். ஏன்னா நாளைக்கு கதை திரைக்கதை வசனகர்த்தாவாகவோ ஒரு இயக்குநராகவோ ஒரு தயாரிப்பாளராகவோ இருக்கிறப்போ அது முழுமையாக வெற்றியடையனுங்கிறதில முழுமையாக நான் தயார் பண்ணிக்கிட்டேன். தயார் பண்ணிட்டு என்னோட வகுப்பு தோழர்கள் கூடப் படிச்சவங்க ஜீனியர்ஸ் எல்லாரையும் ஒரு டீம் ஆக்கி அந்த ஊமைவிழிகள் படத்தை அதுக்கப்புறம் நாங்க ஆரம்பிச்சோம்.

கேள்வி- அந்தக் காலகட்டத்திலே தமிழ் சினிமாவின் ஒரு பெரும் நட்சத்திரமாக இருந்தவர் விஜயகாந்த். புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள். அவருக்கு இப்படியான ஒரு இளைஞர் பட்டாளம். அதாவது அதுவரை இப்படியான ஒரு வர்த்தக சினிமாவை சாதித்துக் காட்டாத திரைப்படக் கல்லூரி சமூகம் ஒன்று இப்படியான ஒரு கதையோடு வந்திருக்கிறது. அந்தக் கதையை நம்பிக் கொண்டு எவ்வளவு தூரம் எங்களுக்கு நம்பிக்கையை ஊட்டியிருந்தார்?

பதில்- அது சரியாகச் சொல்லனும்னா 2 விடயங்கள் தான் அந்தப் படத்தில அவங்க ஈடுபாடு காட்டறதுக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஒன்னு என்னன்னா நான் சொன்னேனே திரைப்படக் கல்லூரியில டிப்ளோமா எடுத்த அந்த படம். அந்த படத்தை வந்து நான் ஸ்கிரின்ல காண்பிச்சேன். விஜயகாந்த் நண்பன் இப்ராஹிம் ராவுத்தருக்கு போட்டுக் காண்பிச்சேன். அடுத்து அத காட்டுறதுக்கு முன்னாடி ஏற்கனவே பாடல்கள் அத்தனையும் பதிவு பண்ணி வைச்சிருந்தேன். 7 பாடல்கள். அத்தனையையும் போட்டுக் காண்பிச்சேன். பார்த்த அந்த டிப்ளோமா பிலிமும் இந்தப் பாடல்களும் குறிப்பாக ராவுத்தர் அந்தக் காலத்தில சொன்னது. ‘நிலை மாறும் உலகில் நிலைக்கும் கனவு’ என்ற பாடல் இருக்கும். அதில வந்து சரணத்தில வரிகள் வரும். ‘தினந்தோறும் உணவு அது பகலில் தோன்றும் கனவு கனவான நிலையில் புது வாழ்வுக்கு இங்கே நினைவு’ அப்பிடிங்கிற அந்த பாடல் இருக்கும். நாங்கள்லாம் போராடிட்டு இருந்த காலகட்டத்தில எங்களுடைய போராட்டத்தை அப்பிடியே நினைவுபடுத்துது. அதில வந்து ஒரு உண்மை இருக்கு அந்த வார்த்தைகளை கேட்டவுடன வந்து எனக்கு அப்பிடியே உலுக்கிடுச்சு. அந்த வார்த்தைகள் தான். எங்களோட படம் பண்ணனுங்கிற எண்ணத்தையே உருவாக்கிடுச்சு.

அதுக்கப்புறம் டிப்ளோமா பிலிம் பார்த்தேன். ஏதோ வித்தியாசமா பண்ணுவீங்கன்னு ஒரு எண்ணத்தை அந்த சின்னப் படம் உருவாக்கிச்சுது அப்பிடின்னார். முழுக்க முழுக்க சொல்லனும்னா இப்ராஹிம் ராவுத்தர் சார் தான் மிகப் பெரிய ஈடுபாடு காண்பிச்சாரு. விஜயகாந்த்தைப் பொறுத்தவரைக்கும் அவருக்கு இதைப் கற்றியோ பாதிப்பைப் பற்றியோ எந்த ஒன்றும் தெரியாமல் இருந்திச்சு. அதுக்கப்புறம் இப்ராஹிம் ராவுத்தர் தான் இந்தப் படத்தை செய்யணும் என்று அவரை சம்மதிக்க வைச்சு பண்ணச் சொல்லியிருக்காரு.
விஜயகாந்த் சார் படப்பிடிப்புக்கு வரும் போது சொல்லுவாரு. சார் அது என்னன்னு தெரியல. ராவுத்தருக்கு உங்களை ரொம்ப பிடிச்சுப் போயிட்டு என்பாரு. கரெக்டா சொல்லனும்னா படம் ஆரம்பிச்சதில இருந்து முடிவு வரைக்கும் நாங்க என்ன பண்ணிட்டு இருக்கோம். என்ன அதனுடைய ரிசல்ட்டு என்ன மாதிரி வரும்னு அவருக்கு தெரியல. படப்பிடிப்பின் போது சொல்வாரு. உதாரணத்துக்கு அந்த இன்ரறக்சன் சீன் எல்லாம் எடுத்தப்போ சொன்னாரு. வெறுமனே காலைக் காட்டறது கையைக் காட்டறது வழக்கமாக அறிமுகப்படுத்தறது தானே அப்பிடின்னு சொன்னப்போ நான் சொன்னேன். அதாவது கையைக் காலைக் காட்டறது ஷாட்ஸ்னு பார்த்தால் வழக்கமாக எடுக்கிற ஷாட்ஸ் தான். ஆனா ஒரு கதையில எந்தக் கட்டத்தில எந்த மாதிரி சூழ்நிலையில எந்த மாதிரி ஷாட்ஸ்ல அறிமுகம் கொடுக்கிறோம். அது எந்தளவிற்கு ஓப்னிங் ஆகுதோ அதுக்கு முன்னாடி பின்னாடி இருக்கிற சீக்குவன்ஸோட லிங் பண்ணி பார்த்தால் தெரியும். இப்பத் தெரியாது. படத்தைப் பாருங்க அதுக்குப் பிறகு தெரியும் எவ்வளவு பிரமாதமாக இருக்கப் போகுது
என்றது. சூட்டிங் ஸ்பொட்டிலேயே தெரியும். அத வந்து படம் ரிலீஸ் ஆனதுக்கப்புறம் தான் தெரிஞ்சுகிட்டாங்க. ஏன்னா அதுக்கு முன்னாடி வந்த படங்களை விட விஜயகாந்த்துடைய என்ட்ரிக்கு அதாவது படத்தில அவருடைய தலை தெரியும் பொழுது அரங்கம் முழுவதும் கைகட்டி விசிலடித்து ஒரு பெரிய வரவேற்பைக் கொடுத்த முதல் படம் ஊமைவிழிகள். அதை அவங்களும் சொல்வாங்க. நாங்களும் தெரிஞ்சுகிட்டோம்.


கேள்வி- அதில் இன்னுமொரு புதுமை என்னவென்றால் பொதுவாக நாயகன் முதல் சீனிலோ அல்லது அடுத்த சீனிலோ வருவார். ஆனால் விஜயகாந்த்திற்கு எந்தவிதமான பாடல்கள் எதனையும் கொடுக்காமல் அந்தப் படத்தினுடைய இடைவேளைக்கு சமீபமாகத் தான் அந்த என்ட்ரியும் இருக்கும் இல்லையா?

பதில்- ஆமாம். என்னன்னா குறிப்பாக நல்ல விசயம் என்டு சொல்றேன்னா பாடல்கள் எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு என்று பாராட்டுதல்கள் வந்துட்டு இருந்திச்சு. ஆனால் அவருக்கு முதலே சொல்லிட்டேன். உங்களுடைய கேரக்டருக்கு பாடல்கள் கிடையாது. உங்க கேரக்டர் பாட்டுப் பாடினால் நல்லாயிருக்காது அப்படின்னு முதலே சொல்லிட்டேன் நான். ஆனா படப்பிடிப்பு நடந்திட்டு இருந்த காலகட்டத்தில பாட்டுக்கள் மிகப் பெரிய ஹிட். எங்க பார்த்தாலும் பெரிய சக்சஸ். அப்பப்ப கேட்பார். சார் ஒரு பாட்டு நான் பாடலாமான்னு. இந்த பாட்டுப் பாடலாமா அந்த பாட்டுப் பாடலாமா ஏதாச்சும் சிச்சுவேஷன் பண்ணலாமா என்று கேட்டிட்டு இருந்தாரு. நான் சொன்னேன் இல்ல சார் உங்க கரெக்டர் பாடினால் நல்லாயிருக்காதுன்னு. அதை கேட்டிட்டு அமைதியாயிடுவார். அன்னைக்கு இருந்த காலகட்டத்தில நாங்கள்லாம் புதுசு. ஒரு தயாரிப்பாளராக ஒரு டைரக்டராக ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டராக எல்லாமே புதுசாயிருந்தோம். ஒரு வரிகளை வற்புறுத்தி இல்லையில்லை எனக்கு பாட்டு கொடுத்தாகனும் என்றிருந்தார்னா என்ன நடந்திருக்குமோ தெரியாது. ஆனால் எந்த ஒரு ஆளுமையும் காட்டாம எங்களுடைய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு ஒத்துழைப்பு கொடுத்தார். அன்றைக்கும் ஒரு விழாவில குறிப்பிட்டு சொன்னேன். எவ்வளவோ நடிகர்கள் இருக்கிறாங்க. ஆனால் வந்து இயக்குநர்களின் நடிகராக வெற்றி பெற்றவர் என்று குறிப்பிட்டாகணும் என்று அந்த மேடையில் சொன்னேன். எந்த தலையீடும் இருக்கலை.


அதை மாதிரி ஆக்க்ஷன் காட்சிகளுக்கு சூப்பர் சூப்பராயன் மாஸ்டரை கூப்பிட்டு சொன்னேன். சார் இந்த மாதிரி எனக்கு வந்து பறந்து பறந்து அடிக்கிற பம்மாத்து வேலையெல்லாம் கூடாது. உடைக்கிற வேலை இருக்கக் கூடாது. காய்கறி வண்டி உடைக்கிறது. கண்ணாடி உடைக்கிறது என்று இப்பிடியெல்லாம் சொல்லிட்டு வேணாம். எனக்கு சும்மா இருந்தால் போதும் என்றேன். இதுக்கு எதுக்கு சார் நாங்க சும்மா ஒரு அசிஸ்டெண்ட் வைத்து செய்திட்டு போகலாம் என்றார். இது வந்து இப்ப சொன்னா தெரியாது மாஸ்டர் இதை முடிச்சிட்டு முழுக்க படமாக பார்க்கேக்க தெரிஞ்சுக்குவீங்க என்று சொல்லிட்டிருந்தேன். அவரு அமைதியாக போய் விஜயகாந்த்ட்ட ஏத்தி விட்டு பேசிட்டு இருந்தாரு. கிண்டலடிச்சிட்டே இருப்பாங்க. காதுபடவே என்ன சொல்லுவாங்க. அப்ப வந்து டி.ராஜேந்தரின் பட சூட்டிங். கிட்டத்தட்ட 10, 15 நாள் பைட் எடுத்தாங்க. என் காதுபடவே என்னாமா எடுத்தம் பைட் என்று எரிச்சலை ஏற்படுத்தனும்னு பேசிட்டே இருப்பார். நான் எதுவுமே கண்டுக்க மாட்டேன். சிரிச்சுக்கிட்டே படம் எடுத்துக்கிட்டு இருப்பேன். கரெக்டா சொல்லப் போனால் ஓவர்லோயினுடைய அக்சன்பிளக் என்னான்னா 4 மணி நேரம் 5 மணி நேரம் இவ்வளவு தான் அந்த பைட் எடுத்ததே. முதலே முடிவு பண்ணிட்டம். இவ்ளோ தான் எடுக்கிறது எண்டு. இவர் போய் விஜயகாந்த்ட்ட ஏத்தி விட்டவுடன விஜயகாந்த் கூப்பிடுவார். சார் நீங்க படமெல்லாம் நீங்க எடுத்திடுங்க இந்த பைட் மாத்திரம் நானும் மாஸ்டரும் எடுத்துக் கொடுத்திடறோம், அப்போ நான் தனிய அவர கூட்டிட்டு போய் சொன்னன். இந்தப் படம் வந்து உங்க யுத்தி இல்ல. நான் அப்பிடித் தான் சொன்னன். அதாவது ராவுத்தர் சொன்னாரு இவங்க என்னவோ பண்ணுவாங்க அப்பிடிங்கிற நம்பிக்கையில பண்ணட்டிருக்கிறீங்க. அதால இந்தப் படத்தை நம்பி நீங்க இல்ல. அப்போ ஏழெட்டு படங்கள்ல கதாநாயகனாக அவர் நடிச்சிட்டிருந்த காலகட்டம் அது. அதால இந்தப் படம் பொறுத்தவரைக்கும் முழுசாக எங்கிட்ட விட்டிடுங்க. எந்த தலையீடும் வைச்சுக்காதீங்க. நான் வந்து டிபரெண்ட்டா பண்ணணும் என்று நினைக்கிறேன்.
உங்களுடைய வெற்றிக்கும் விருப்பத்திற்கும் சில படங்கள் இருக்கு. அது எந்த வகையிலும் தடையில்லாம போகப் போகுது. இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் முழுக்க என்னோட விருப்பத்திற்கு விட்டீங்கன்னா அதில வந்து நான் என்ன நினைக்கிறேனோ அதை செயற்படுத்த முடியும். இதில ஃபைட்டிலிருந்து எல்லாமே புதுசா பண்ணணும் எண்டு நினைக்கிறேன். அப்ப அவர் ஓகே ஓகே என்று இவ்ளோ தான் பேசினார். என்ன சொல்ல வாறேன்னா அந்தப் படம் முழுக்கவே அப்பப்ப வந்து தன்னோட ஆதங்கத்தை வெளிப்படுத்துவாரேயொழிய எந்த சூழ்நிலையிலும் ஆளுமை பண்ணலை. ஒரு இயக்குநராக ஒரு தயாரிப்பாளராக முழு சுதந்திரம் இருந்திச்சு. கேட்பாரு நான் அதற்கு விளக்கம் கொடுத்தவுடன அமைதியாயிடுவாரு. அந்தக் காலகட்டத்தில ஒரு நடிகர் வந்து ஒரு இயக்குநரின் ஒரு தயாரிப்பாளரின் பேச்சைக் கேட்டுபண்றது என்றது பெரிய விசயமாக இருந்தது. ஆனா அவர் அதை பண்ணினாரு. அதை இன்னைக்கும் நான் நினைச்சுப் பார்த்துக்குவன். அந்த அவர் கொடுத்த முழு ஒத்துழைப்புத் தான் முழு வெற்றிக்கும் காரணம் என்று நான் நினைக்கிறன்.


கேள்வி- ஊமை விழிகள் படத்திலே மற்றைய கலைஞர்களை எடுத்துக் கொண்டால் கூட கார்த்திக் உட்பட முன்னணி நட்சத்திரங்கள் எல்லாருமே இணைந்து அவர்களுக்கான அந்த காட்சிகள் கூட குறிப்பிட்டளவு காட்சிகள் தான் இருக்கும். ஆனால் படத்திலே அவர்கள் இணைந்து பணியாற்றியது கூட புதுமை இல்லையா?

பதில்- ஆமாம். நான் குறிப்பிட்ட மாதிரியே அந்த பைற்க்கு அவர் கூப்பிட்டுக் கூப்பிட்டு பேசினாருன்னு. அதற்கப்புறம் படம் ரிலீஸ்க்கப்புறம் சூப்பர் சூப்பராவில இருந்து போன் வந்திச்சு. ஏன்னா இந்துப் பத்திரிகைல ஆக்சன் சீனுக்கு மிகப் பெரிய பாராட்டு. அதப் பற்றி எழுதப்பட்டவுடனே அப்பத் தான் போன் பண்ணினாரு. சார் என்னை மன்னிச்சிடுங்க படப்பிடிப்பு நடந்த காலகட்டத்தில நான் உங்களை புரிஞ்சுக்கல. நான் அதில சொல்லப் போனால் எந்த வேலையும் பார்க்கலை. ரொம்ப சிம்பிளா பண்ணினேன். இதையே வேறு படங்களுக்கென்றால் 10 நாள் பதினைஞ்சு நாள் தலைகீழாக தொங்கி நின்று பல யுக்திகள் பண்ணியிருக்கோம். சார் நான் எந்தப் படத்திலையும் எடுக்காத பேரு வந்து இந்தப் படம் எடுத்துக் கொடுத்திச்சு. நீங்க என்ன பண்ணீங்க என்றது இப்பத் தான் படத்தைப் பார்த்தவுடன் தான் எனக்கு புரிஞ்சுது. அதால தப்பாய் எடுத்துக்காதீங்க என்டாரு. அதுக்கப்புறம் உழவன் மகன் படம் பண்ணறப்போ வந்திடுவாரு. வந்திட்டு சார் இதில நான் என்ன பண்ணணும் நாம என்ன பண்றோம் இதில என்டு ஒவ்வொன்றையும் கேட்டுக் கேட்டு நாம சொல்றதை வந்து சொல்றதை விட பல மடங்கு சிறப்பாக பண்ணிக் கொடுத்தாரு.


கேள்வி- இந்த ஊமைவிழிகள் படத்தை எடுத்துக் கொண்டால் நீங்கள் அதற்கான பாடல்களை ஏற்கனவே பதிவு செய்தனீர்கள் எனக் குறிப்பிட்டீர்கள். அதாவது மனோஜ் கியான் இரட்டையர்கள் அவர்கள் உங்களோடு அதிக படங்களிலே பணியாற்றியவர்கள். அப்படியானதொரு வட இந்திய இசையமைப்பாளர்களை தமிழ் சூழலுக்கு நீங்கள் பயன்படுத்தும் போது உங்களுக்கு நிச்சயமாக ஒரு சவாலாக இருந்திருக்கும் இல்லையா?

பதில்- சரியாக சொல்லனும்னா திரைப்படங்களுக்கு எப்போதுமே டியூன் போடறது முக்கியமான இசை சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுக்கிறதுன்னா நான் தான் எடுப்பேன். எனக்கு ஒரு நல்ல அசோஸியேட் தேவைப்பட்டிச்சு. அந்தக் காலகட்டத்தில தான் மனோஜ் கியானை நான் சந்திக்கிறேன். இரவுப் பாடகன் என்ற படத்தை நான் வந்து இயக்கி தயாரிச்சப்போ எல்.வைத்யநாதன் எங்கிற மியூசிக் டைரக்டர பிக்ட்ஸ் பண்ணிட்டு பம்பாய் போனோம். பம்பாய்ல தான் ரெக்காடிங் எல்லாம் வைச்சிட்டிருந்தோம். இந்த பம்பாய் ரெக்காடிங்ல இவர அறிமுகப்படுத்தினது ஜேசுதாஸ்;.நாங்க வேறொரு லிஸ்ட் எடுத்திட்டு போயிருந்தோம். வேறொரு வெளியாளை வைத்துத் தான் செய்றதுன்னு. அப்ப ஜேசுதாஸ் சொன்னாரு. இல்லையில்ல ஒரு நல்ல ஒரு மியூசிக் டைரக்டரை அறிமுகப்படுத்தறேன் சிறப்பாய் செய்வாருன்னு சொல்லிட்டு எங்களை ஒரு பக்டரிக்கு கூட்டிட்டு நேரா அவர்ர வீட்டுக்கு கூட்டிட்டு போனார். அங்க அவரு ஒர்க் பண்ணிட்டிருந்தாரு. நல்ல உதவியாளரோடு. இவர வைச்சு பண்ணுங்க சிறப்பாக பண்ணிக் கொடுப்பாருன்னு சொல்லி அறிமுகப்படுத்தி வைச்சாரு. அப்படித் தான் கியான்வர்மாவை நான் சந்திச்சேன். அவரு அந்த இரவுப் பாடகனுக்கு உதவி இசையமைப்பாளராக பணிபுரிந்தார். அப்போ நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டிச்சு. அதுகப்புறம் அந்தப் படத்தை இப்போ பண்ண வேண்டாம். ஏன்னா இப்ப இருக்கிற காலகட்டத்தில ஒரு தயாரிப்பாளராக போராடி படத்தை வெளிக் கொண்டு வாறது முக்கியம். அதனால நாம வந்து ஒரு தயாரிப்பாளராக நடந்துக்குவோம். அப்போ எனது வகுப்புத் தோழர் அரவிந்தரராஜ் வந்து என்னோட உதவியாராக இருந்தாரு. அப்ப நான் சொன்னேன். நீ வந்து இயக்குநராக வேலை பாருன்னு. நான் வந்து ஸ்கிரிப்ட் ரைட்டர். கோ மியூசிக் டைரக்டர் மியூசிக் டைரகடர் புரொடியுசர். இது என்னுடைய இலக்கு. அதனால அந்த படத்தை வந்து புரமோட் பண்ண முழு ஈடுபாடு வேணும். அதனால வந்து இயக்குநராக வந்து என்னால நூறு சதவீதம் கவனம் செலுத்த முடியாது. அதால நீங்க இந்த பிலிம்க்கு டைரக்டர்.

அப்பிடின்னு ஆரம்பிச்சு முதல்ல வந்து ஊமைவிழிகள் திரைப்படத்தை ஆரம்பிச்சோம். அப்போ நான் வந்து கியான்வர்மாவ கூப்பிட்டேன். இந்த மாதிரி தமிழ் இரவுப் பாடகனை ஆரம்பிக்க போறோம். நீங்க வாங்க நீங்க வந்து மியூசிக் பண்ணுங்க என்டு கூப்பிட்டேன். முந்தின படங்கள்ல வேலை பார்த்தப்போ என்னை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்கிட்டார்.டியூன்ஸ் எல்லாம் நான் போடறேன். இசையை வந்து நான் அடிப்படையாக கத்துக்கலையே ஒழிய கேள்விஞானத்தை வைச்சு நான் டியூன் போடறேன்றத கூட இருந்து கவனிச்சதால அவரு வந்து என்ன சொன்னாருன்னா நீங்க வந்து இசையமைப்பாளராக செய்யுங்க. சான் உங்க உதவியாராக பண்ணித்தாறேன்னு. நான் சொன்னேன். எந்த ஒரு துறையையும் வந்து முழுமையாக தெரிஞ்சுக்காம தலையிடக் கூடாது. அதால இசையைப் பொறுத்தவரைக்கும் எனக்கு கேள்விஞானம் தான். டியூன் போடறேன் எல்லாமே செய்வேன்.
அதைப் பற்றி அடிப்படை அறிவு எனக்கு கிடையாது. அது இல்லாம எனக்கு வந்து அந்தப் போஸ்ட்ல பண்றதுக்கு விருப்பம் இல்ல. அதால நீங்க இசையமைப்பாளராக வாங்க. நான் வந்து இணை இசை ஆக சேர்ந்துக்குவோம் என்றேன். அப்ப கேட்டாரு தன் நண்பன் மனோஜ்னு இருக்காரு. அவர நான் கூப்பிட்டுக்கலாம என்றாரு. எனக்கு ஒன்றுமில்லை. படத்தில நீங்க மனோஜ் கியான்னு போட்டாலும் சரி கியான்வர்மான்னு போட்டாலும் சரி. நீங்க அவர வந்து கூப்பிடுங்க என்றேன். கூட்டணியாக வந்து ஊமைவிழிகள் படத்திற்கான பாடல்களுக்கு இசையமைத்தோம். அதுக்கு முன்னாடி நாலைஞ்சு டியூனை ரெடி பண்ணி வைச்சிருந்தோம். அந்த ரெடி பண்ணி வைச்சிருந்த டியூனை போட்டுக் காண்பிச்சேன். அது ரொம்ப நல்லாயிருக்கு. அதெல்லாத்தையும் எடுத்துக்கிட்டோம். ப்ரெஷ்ஷா கம்போஸிங்ல உட்கார்ந்து சில பாடல்களை தயார் பண்ணினம். 7 பாடல்கள் பதிவு செய்யப்பட்டிச்சு.

ஆபாவாணன் விழிகள் இன்னும் பேசும்…..

தேனிசைத் தென்றல் தேவா கொடுத்தவை சில

தொண்ணூறுகளில் தமிழ்த்திரையிசையை இப்போது திரும்பிப்பார்க்கும் போதும் ஒரு கலவையான உணர்வு தான் தோன்றும். எண்பதுகளிலே தனிக்காட்டு ராஜாவாக இசைஞானி இளையராஜா இருந்தபோது வானொலிப்பெட்டிகளுக்கு மட்டுமே அதிகம் நெருக்கமான இசை தொண்ணூறுகளிலே அள்ளிவீசப்பட்ட தொலைக்காட்சி சானல்களால் இன்னும் நெருக்கமாக வந்து சேர்ந்தது. ஆனால் திரையிசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு என்ற ஒரு புதிய அத்தியாயம் நிகழ்த்தப்பட்டது மட்டுமே முக்கியமான மைல்கல்லாக நினைவில் நிறுத்தவேண்டியிருக்கிறது. எண்பதுகளிலே பட்ஜெட் இசையமைப்பாளர்கள் என்றிருந்த சங்கர் கணேஷ், சந்திரபோஸ், எஸ்.ஏ.ராஜ்குமார் என்ற வட்டம் சிறிதாக ஆதித்யன் போன்றோரின் வரவு நிகழ்த்தப்பட்டாலும் அதையும் தாண்டி சின்ன பட்ஜெட் படங்களின் பெரு விருப்புக்குரிய தேர்வாக அமைந்தது தேவாவின் வருகை.
புதுவசந்தம் படத்தின் பெருவெற்றியைத் தக்க வைக்கமுடியாமல் தொடந்து “பெரும்புள்ளி” போன்ற படங்களின் தோல்வியோடு வில்லனாக நடிக்க ஆசைப்பட்டுத் தயாரிப்பாளராகி ஒட்டாண்டியாகிய எஸ்.ஏ.ராஜ்குமார் ஒருபக்கம், அமரன் என்ற முதல் படத்தில் கவனிக்க வைத்தாலும் அதே படத்தின் தோல்வியும் தொடந்து துறைமுகம் போன்ற படங்களும் ஆதித்யனை அடுத்த நிலை இசையமைப்பாளாராக அதிகம் உருவாக்கவில்லை.
“வைகாசி பொறந்தாச்சு” படத்தின் பெருவெற்றியோடு அளவுகணக்கில்லாமல் படங்களை ஒப்புக்கொண்டு அதில் வெற்றியின் சதவிகிதத்தையும் கூட்டிக் கொண்டு முன்னணிக்கு வந்தார் தேவா. பாடல்களைக் காப்பியடிப்பவர் என்ற பரவலான விமர்சனம் தேவா மீது. ஆனாலும் இன்றைக்கு ஹாரிஸ் ஜெயராஜையே பத்துவருஷமாக மன்னிக்கும் தமிழ் இசை ரசிகர் உலகம் பரவலாக அள்ளிப்போட்ட தேவாவைக் கருணையோடு பார்த்தது. ராஜா காலத்தில் கேட்ட மெட்டும், ஆர்ப்பாட்டமில்லாத இசைக்கோர்வையும் மட்டும் போதும், கூடவே கவிஞர் காளிதாசன் போன்ற கவிஞர்களையும் வைத்துக் கொண்டு நிதானமாகக் களத்தில் தன் ஆட்டத்தைக் காட்டினார் தேவா.

இன்றைக்கு கானா பாடல்கள் என்றால் தேவா என்ற நிலைக்குக் காரணமான “காதல் கோட்டை”க்கு முன்பே பாமர ரசிகர்கள் இதயங்களுக்குள் எளிமையான தேவாவின் மெட்டு நுளைந்துகொண்டது. இன்னொரு காரணம் இசைஞானி இளையராஜா அதுவரை கொடுத்து வந்த இசையின் போக்கில் வந்த மாற்றம், கூடவே ஏ.ஆர்.ரஹ்மானின் மேற்கத்தேய வாத்தியக் கோர்ப்பு மற்றும் தமிழ்ச்சூழலுக்கு அந்நியப்பட்ட இசையை உள்வாங்கத் தமிழ் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட காலம். இவற்றை எல்லாம் விட உடனேயே ஒரு பட்ஜெட் படம், எங்கோ கேட்ட பாடல் மாதிரி ஈசியாக நுளையக்கூடிய மெட்டுத் தேடிய தயாரிப்பாளர்களின் நோக்கம் எல்லாம் தேவாவால் நிறைவேறியது.

இன்றைக்கும் எமது கிராமங்களில் தேவாவின் தொண்ணூறுகள் தான் வானொலிப்பெட்டிகளால் ஆராதிக்கப்படுகின்றன. அந்த வகையில் தேனிசைத் தென்றல் கொடுத்த பாடல்களிலே என் மனசுக்கு நெருக்கமான பாடல்களில் சிலதை இங்கே பகிர்கின்றேன்.

தேனிசைத் தென்றல் தேவா என்ற பட்டத்தை மெல்லிசை மன்னர் கொடுத்த ராசி வைகாசி பொறந்தாச்சு படத்தோடு ஆரம்பித்தது. படத்தில் ஏகப்பட்ட துண்டு துண்டான பாடல்களோடு “சின்னப்பொண்ணுதான் வெக்கப்படுது அம்மா அம்மாடி” பாடல் சென்னை வானொலியில் தேசிய கீதங்களில் ஒன்றானது அப்போது

கருப்பு வெள்ளை என்றொரு படம், விஜயா வாஹினி என்ற பெரும் தயாரிப்பு நிறுவனத்தால் எடுக்கப்பட்டது. தொண்ணூறுகளில் கொழும்பில் தனியார் வானொலி எஃப் எம் 99 என்று மெட்டவிழும் நேரம் அடிக்கடி ஒலிபரப்பிப் புண்ணியம் தேடிக்கொண்டது. இப்போது கேட்டாலும் இனிய சுகம். எஸ்.பி.பி, சித்ரா குரல்களில்

நடிகர் சிவக்குமாரின் 150 வது படம் என நினைக்கிறேன் “வாட்ச்மேன் வடிவேலு” என்ற தோல்விப்படம். படத்திலே பாடல்கள் தேவாவின் கைவண்ணத்தில் வெகு சிறப்பு. “சம்மதம் தந்துட்டேன் நில்லு” என்ற இசைஞானியின் பாடலில் கொள்ளை இன்பம் கொண்டு அதே மெட்டில் “கன்னத்தில் கன்னம்” வைத்தவர். இதே படத்தில் வரும் சந்திரனும் சூரியனும் பாடல் தித்திப்பு ஆனால் அதை வயதான பாட்டன், பாட்டி பேரப்பிள்ளையை நோக்கிப் பாடவைத்து மொக்கை ஆக்கினார் இயக்குனர்.

பி.வாசுவின் கதையை கே.எஸ்.ரவிக்குமார் படமாக்கிய “புருஷ லட்சணம்” டூப்ளிகேட் பிரபுவாக ஜெயராமும் குஷ்புவும் ஜோடி கட்டிய அந்தப் படத்தில் வரும் “செம்பட்டுப் பூவே” பாடல் தேவாவை #WhyDevaIsGod என்று ட்விட்ட வைக்கும்.

தேவாவுக்குப் பெருவாழ்வு கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் சுரேஷ்கிருஷ்ணா, அண்ணாமலை, பாட்ஷா ஆகிய ரஜினி படங்களில் ஜெயித்த இந்தக் கூட்டணி மற்றப்படங்களில் வெற்றிக்கோட்டை எட்டவில்லை. ஆனாலும் என்ன “ரோஜாவைக் கிள்ளாதே” படத்தில் வரும் இந்தப் பாட்டைக் கேட்டுப்பாருங்கள் சொக்கிப்போவீர்கள். “நீ ஒரு பட்டம் நானொரு பட்டம் சந்தர்ப்பத்தால் சந்தித்தோம்”

மிகக்குறுகிய காலத்திலேயே அதாவது இரண்டு வருஷங்களுக்குள் அரைச்செஞ்சரி போட்ட தேவாவுக்கு 50 வது படம் கஸ்தூரிராஜாவின் சோலையம்மா வெளிவந்த ஆண்டு 1992. இளையராஜாவத் துதிபாடி கங்கை அமரன் பாடும் பாடலை விசுவாசமாகப் போட்டு வைத்தார். கூடவே “தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு” தேவாவுக்கே உரிய தனித்துவம்

இசையமைப்பாளர் பூபேன் ஹஸாரிகா நினைவில்

பழம்பெரும் பாடகரும் இசையமைப்பாளருமான பூபேன் ஹஸாரிகா மும்பையில் நவம்பர் 5, 2011 சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 85.

சமீபகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது.

இசையமைப்பாளர் பூபேன் ஹஸாரிகா இசையமைத்த Dil hoom hoom பாடலை இன்று மட்டும் கணக்கில்லாமல் கேட்டிருப்பேன். என்னவொரு ரம்யமான பாடலது. மெல்லிசையை மென்மையான உணர்வுகள் சேர்த்துக் குழைத்த பாடல். பூபேன் ஹஸாரிகா குறித்த ஒரு அஞ்சலிப்பகிர்வை றேடியோஸ்பதியில் இடவேண்டும் என்று அவர் இசையமைத்த Dil hoom hoom என்ற Rudaali 1(1993) திரைப்படப்பாடலை நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் (கே.ஆர்.எஸ்) இடம் பகிர்ந்த போது அப்பாடலின் தமிழ் வடிவத்தை அழகாக எழுதித் தந்தார். இதோ அந்த மூலப்பாடலும் கண்ணபிரான் ரவிசங்கர் எழுதித்தந்த பாடலின் தமிழ் வடிவமும்.

பூபேன் ஹஸாரிகா குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல்

அதே பாடலை லதா மங்கேஷ்கர் பாடுகின்றார்

Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!

Ghan dham dham kare, darr jaaye
வானம் இடிஇடி என இடி..க்குதே, பயத்தாலே!

Ek boond kabhi paani ki, mori ankhiyon se barsaaye
இரு விழிகளில் நீர் ஆறு
ஒரு சுருளாய்ப் பாய்..கிறேதே

Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!
—————

Teri jhori daaroon, sab sukhe paat jo aaye
உன் நினைவு என்னைத் தீண்டி, பழுப்பிலைகள் உதிர்க்கின்றேனே!

Tera chhua laage, meri sukhi daar hariyaaye
உன் கைகள் என்னைத் தீண்ட, பசுமரம் போல் துளிர்க்கின்றேனே!

Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!
————–

Jis tan ko chhua tune, us tan ko chhupaaoon
நீ தொட்டுப் பருகிய மேனி, அதை மூடியே வைத்தேன் அன்று!

Jis man ko laage naina, voh kisko dikhaaoon
நீ நெருங்கி நோக்கிய இதயம், அதை யாரிடம் காட்டுவேன் இன்று?

O more chandrama, teri chaandni ang jalaaye
ஓ நிலவே…நளிர் நிலவே…நீ எரித்து விடாதே என்னை

Teri oonchi ataari maine pankh liye katwaaye
மலை மேலே சென்று விட்டாயே, என் சிறகுகள் அறுத்து விட்டேனே!

Dil hoom hoom kare, ghabraaye
இதயம் படபட துடி..க்குதே, பயத்தாலே!


பூபேன் ஹசாரிகா குறித்து தினமணி நாளிதழிலும், விக்கிபீடியாவிலும் கிடைத்த தகவல்கள்.

அசாமின் சாடியா என்னுமிடத்தில் பூபேன் பிறந்தார். பத்தாவது அகவையிலேயே தனது முதல் பாடலை முதலாவது அசாமிய மொழித் திரைப்படமான ஜோய்மோதி என்ற திரைப்படத்தில் எழுதிப் பாடினார். 1939ஆம் ஆண்டு இரண்டாவது அசாமியத் திரைப்படமான இந்திரமாலதி என்ற படத்திலும் தனது 12 அகவையில் பங்கு பெற்றார்.

1942ஆம் ஆண்டு குவஹாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் இடைநிலை கலை பட்டப்படிப்பிற்கு பின்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் 1944ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். 1946ஆம் ஆண்டு அரசறிவியல் முதுகலைப்பட்டமும் பெற்றார். 1954ஆம் ஆண்டில் நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழக்கத்தில் இந்திய முதியோர் கல்வியில் ஒலிஒளி ஊடக செய்முறைகளுக்கான தயார்படுத்தலுக்கான திட்டமொன்றை ஆய்வுக்கட்டுரையாக வடித்து முனைவர் பட்டம் பெற்றார். அசாம் சாகித்திய சபாவின் தலைவராக 1993ஆம் ஆண்டு பொறுப்பாற்றி உள்ளார்.

ஹஸாரிகா “பிரம்மபுத்திராவின் பறவை’ என்று அழைக்கப்பட்டார். பாரம்பரிய அசாமி இசை மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். பாடகர், இசையமைப்பாளர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு வகையில் புகழ்பெற்றார்.

பின்னர் ஹிந்தி, பெங்காலி திரைப்படங்களிலும் பாடல்களைப் பாடி புகழ் பெற்றார். 1976-ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார். 1977-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். அசாம் சட்டப் பேரவை உறுப்பினராகி மக்கள் பணியாற்றினார்.

அவருக்குக் கிடைத்த விருதுகள்

சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருது (1975)
பத்ம பூசன் (2001)
தாதாசாகெப் பால்கே விருது (1992)
அசாம் ரத்னா (2009)
சங்கீத நாடக அகாதமி விருது (2009)
1993ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த ஆசியா பசிபிக் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இந்தித் திரைப்படம் ருடாலியின் இசையமைப்பிற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது.
சிறந்த நிகழ்கலை நாட்டுக் கலைஞராக அனைத்திந்திய விமர்சகர் சங்க விருது (1979)

பெப்ரவரி 2009இல், அனைத்து அசாம் மாணவர் சங்கம் பூபேன் அசாரிகாவினை கௌரவிக்கும் வண்ணம் குவஹாத்தியில் அவரது சிலை ஒன்றை நிறுவியுள்ளது.