“தட்டத்தின் மரயத்து” ஒரு சுகானுபவம்

அனுபவப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளையும், கவிதைகளையும் படித்துப் பழகியவனுக்கு அறிமுகப் படைப்பாளியின் படைப்பைப் பார்த்தபின் எழும் திருப்தியான சுகானுபவம் கிட்டியிருக்ககிறது இன்று பார்த்த மலையாள சினிமா “தட்டத்தின் மரயத்து” மூலம். இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பை எற்கனவே இணையத்தளங்கள், சஞ்சிகைகள் மற்றும் படத்தின் இயக்குனர் வினித் ஶ்ரீனிவாசனின் விகடன் பேட்டி ஆகியவை கிளப்பியிருந்தாலும், தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கும் வரை ஒருவித சந்தேக உணர்வே தொடர்ந்தது. காரணம் இப்போதெல்லாம் ஆகா ஓகோவென்று விமர்சனத்தில் கிளப்பப்படும் படங்களைப் பார்த்தபின் “கல்”அடிபடுவதுதான்.

வினோத் என்ற இந்துமத நாயர் பையனுக்கும் ஆயிஷா என்ற முஸ்லீம் பெண்ணுக்கும் வரும் காதல், தடைகளை மீறி அவர்கள் ஜெயித்தார்களா? என்ற சாதாரண ஒற்றைவரிக் கதைதான். ஆனால் படம் ஆரம்பித்த நிமிடம் முதல் இறுதிக் காட்சி வரை கட்டிப்போட வைக்கும் சுவாரஸ்யமிக்க காட்சியமைப்புக்கள், வசனம், ஒளிப்பதிவு, இசை என்று எல்லாமே கூட்டணி அமைத்து அதகளம் பண்ணியிருக்கின்றன.

மலையாள சினிமாக்களில் நடிகர் தேர்வு என்று வரும்போது அதிகம் அவர்கள் மெனக்கெடுவதில்லை. K.P.A.C லலிதா, இன்னசெண்ட், சலீம்குமார் உள்ளிட்ட ஒரு தொகை நடிகர்களே பெரும்பாலான படங்களின் குணச்சித்திரங்களாக ஆக்கிரமிப்பர். ஆனால் இந்தப் படத்தில் நாயகன் நிவின் பெளலி (இரண்டாவது படம்), மனோஜ்.கே.ஜெயன், மற்றும் ஶ்ரீனிவாசன் தவிர்ந்த மற்ற எல்லோருமே மலையாள சினிமாக்களில் அதிகம் அறியப்படாதவர்கள். அதிலும் குறிப்பாக நாயகியாக வரும் அறிமுகம் இஷா தால்வார் என்னவொரு கச்சிதமான தேர்வு, முஸ்லீம் பெண் பாத்திரத்துக்கு இவரை விட்டால் வேறு பிரபலங்களையே நினைத்துப்பார்க்க முடியாத அடக்கமான நடிப்பு. இப்படியான படங்களுக்குக் கூடவே ஒட்டும் நண்பன் என்ற சமாச்சாரத்துக்கு விதிவிலக்கில்லாமல் வரும் நடிகர் அஜூ வர்கீஸ் இன் நகைச்சுவையும் அளவான அழகு. மனோஜ் கே.ஜெயனுக்கு குரலை வித்தியாசப்படுத்திப் பேசுவதில் இருந்து படத்தின் ஓட்டத்துக்குக் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

நாம் நேசிக்கும் படைப்பாளிகளின் வாரிசுகள் நல்லதொரு நிலைக்கு வரும் போது நம் வீட்டுப் பிள்ளையை ஆராதிப்பது போல ஒரு மானசீகமான கொண்டாட்டம் இருக்கும். நடிகர் ஶ்ரீனிவாசன் மலையாளத் திரையுலகின் எண்பதுகளில் இருந்து இன்று வரை தன்னளவிலான கெளரவமான பங்களிப்பைக் கதாசிரியராகவும், நடிகராகவும் வழங்கியிருக்கிறார். அவரின் மகன் வினீத் ஶ்ரீனிவாசன் பாடகராகவும், ஒரு சில படங்களில் நடிகராகவும் அறியப்பட்டிருந்தாலும் இந்தப் படம் அவரைப் பொறுத்தவரை இவருக்கான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துக் கைகாட்டி விட்டிருக்கிறது.

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களே துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்ற நிலையில் இருக்கும் சூழல், மாபெரும் கதா நடிகன் மம்முட்டி “ஒய் திஸ் கொலவெறி” என்றெல்லாம் பஞ்ச் அடித்து ஓவர் ஹீரோயிசம் காட்டி எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற காலமிது. ஆனால் ரசிகர்களுக்கு, அது பழகிப்போன கதையாகக் கூட இருக்கட்டும் ஆனால் நேர்மையான விதத்தில் கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு இந்தப் படம் இன்னொரு சாட்சி. சக நடிகர் முகேஷ் உடன் நடிகர் ஶ்ரீனிவாசனும் இணைந்து 14 லட்சத்தில் எடுத்த படம் இன்று பத்துக் கோடியைத் தாண்டியிருக்கிறது இலாபம். (ஆதாரம் விக்கிப்பீடியா)

கதையோடு ஒட்டாது விலகி நிற்கும் நகைச்சுவை, வேண்டாத காட்சியமைப்பு எல்லாம் களைந்து கதையோட்டத்தோடு வரும் நகைச்சுவையிலும் நடைமுறை வாழ்வில் காணும் சினிமா, கிரிக்கெட் உதாரணங்களையெல்லாம் கலந்து கட்டி அடித்திருக்கிறார். நாயகனுக்கும் ஓவர் ஹீரோயிசம் கொடுக்காமல் நம்மில் ஒருவராகப் பள்ளி நாட்களை அசைபோட வைக்கும் அளவுக்குக் குணாதிசியங்களைக் கொண்டு உருவாக்கிய பாத்திரம்.

இந்தப் படத்தின் பாடல்களை முன்னரேயே கேட்ட அனுபவம் இல்லாத நிலையில் ஒவ்வொரு பாடல்களும் கதையோடு பயணிக்கையில் இதில் எது நல்லது என்று மனக்கணக்கில் போடுமளவுக்கு முத்து முத்தான பாடல்கள். பாடல் இசை, பின்னணி இசை இரண்டிலும் ஷான் ரஹ்மான் நம்மை ஈர்க்கிறார். அவரைப்போலவே ஒளிப்பதிவாளர் ஜோமோன் T.ஜான்
வினீத் ஶ்ரீனிவாசனுக்கு இசை, ஒளிப்பதிவு ஆகிய இரண்டும் பெரிய பலமாக அமைந்திருக்கின்றன. இதுவே பாதி வெற்றி அவருக்கு.

“நாம ஆசைப்பட்ட விஷயங்களைப் பின்னாளில் நாமளே மறந்தாலும் ஆண்டவன் மறக்கமாட்டான்” படத்தை முடித்து வைக்க இயக்குனர் வினீத் ஶ்ரீனிவாசன் கொடுத்த வாசகம் அது, அவரிடம் இன்னும் நல்ல படைப்புக்களை எதிர்பார்க்க வைக்கின்ற ஆரம்பமாக.

ஷிக்கார் (The Hunt) – வேட்டையாடத் துரத்தும் பாவக்கணக்கு


“அன்று ருக்மணியின் கண்களில் தெரிஞ்ச நெருப்பு மறுநாள் தெலுங்கானாவில் தெரிந்தது”
பலராமன் (மோகன்லால்) 15 வருஷங்களுக்கு முந்திய அந்தக் கோரநினைவுகளை நினைத்துப் பார்க்கும் போது சொல்லிக் கொண்டது தான் ஷிக்கார் படத்தின் அடிநாதமும் கூட.

“ஷிக்கார்” மலையாளப்படம் குறித்த செய்திகள் வந்தபோது சிட்னியில் அது தியேட்டரில் முத்தமிட்டால் கண்டு ரசிக்க வேண்டும் என்று காத்திருந்தேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் சமுத்திரக்கனி. நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் ஒரே நாளில் தமிழகம் முழுதும் புகழப்பட்ட இயக்குனர், கூடவே சுப்ரமணியபுரம் படத்தில் வில்லன் அண்ணனாக வந்து வித்தியாசமான நடிப்பைக் கொடுத்தவர் இவரை மலையாளப்படவுலகம் வேண்டி அழைத்து நடிக்க வைக்கின்றதென்றால் அப்படி என்னதான் இந்தப் படத்தில் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடு தான் இந்தப் படம் பார்க்கும் ஆசையும். அந்த ஆசை இன்று சிட்னி தியேட்டரில் நிறைவேறிய சுகத்தோடு ஷிக்கார் பற்றி இனி.

இந்தப் படம் ஆரம்பிக்கும் போது சராசரியான நாட்டு ராஜாவு வகையறா மலையாளப் படங்களில் ஒன்றாகவே தென்பட்டது அது இடைவேளை வரை பாட்டும் கூத்துமாகத் தொடர்ந்தது. ஆனால் இடைவேளைக்குப் பின் தான் படம் சூடுபிடிக்க ஆரம்பித்து இறுதி முற்றுப்புள்ளி வரை அந்தச் சூட்டைக் காட்டி வேட்டையாடியது.

பலராமன் (மோகன்லால்) என்னும் லாரி ஓட்டுனர் நகரவாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் காடும் மலையும் தழுவிய பிரதேசத்தில் அவ்வூர் மக்களோடு வாழும் சராசரி மனிதன். அவனுக்குத் துணையாக மணியப்பன் (கலாபவன் மணி) என்னும் உதவியாளனும் சத்தியன் (லாலு அலெக்ஸ்) குடும்பமும் மட்டுமே. பலராமனின் கனவெல்லாம் காலமான தன் மனைவி காவேரி (சினேகா)யின் ஆசையாகத் தன் ஒரே மகள் கங்கா (அனன்யா)வை டாக்டர் பட்டத்துக்குப் படிக்க வைக்க வேண்டும் என்ற இலட்சியம் மட்டுமே. மாணவர் விடுதியில் தங்கிப்படித்த கங்கா தன் தந்தை பலராமனைத் தேடிக் காட்டுக்கு வந்த போது, பலராமனைச் சுற்றி அது நாள் வரை கண்ணுக்குத் தெரியாமல் துரத்திய அவனைக் குறித்த வேட்டை ஆரம்பமாகின்றது. அப்போது தான் 15 வருஷங்களுக்கு முன்னால் அவன் செய்த பாவக்கணக்குத் தீர்க்கும் காலம் வந்ததை உணர்கின்றான் அவன்.

இன்று இந்தியாவில் சூடுபிடிக்கும் விவகாரமாக ஆகிப்போயிருக்கும் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்துத் தெலுங்கானாவைத் தனி மாநிலம் ஆக்கவேண்டும் என்ற போராட்டத்தின் ஒரு பார்வையை ஷிக்கார் தொட்டுச் செல்கின்றது. நக்சலைட் தீவிரவாதி காம்ரேட் அப்துல்லா என்ற பாத்திரமாக வாழ்ந்திருக்கின்றார் நம் சமுத்திரக்கனி. உண்மையில் ஒரு போராட்டக்காரனின் எழுச்சி முகத்தை மிகவும் அன்னியப்படாத உடல்மொழி பாவங்களோடு அமைதியாக நடித்து நம் மனதில் ஆக்கிரமிக்கின்றார் சமுத்திரக்கனி. ஒரு எழுச்சியாளனாக, கவிஞனாகத் தன் சிந்தனைகளைப் பாடியும் பேசியும் பரப்பும் காம்ரேட் அப்துல்லா என்னும் சமுத்திரக்கனி, தன்னைப் பொறிவைத்துப் பிடித்து அழைத்துப் போகும் கான்ஸ்டபிள் பலராமனிடம் அவரின் பிள்ளையின் பெயர் கேட்டு அவள் பெயர் கங்கா என்று அறிந்துகொண்டு அவளுக்கும் ஒரு கவிதை எழுதித் தருகின்றேன் என்னும் போது அந்தப் புரட்சியாளனின் உள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் நேசத்தை நச்சென்று காட்டி வைக்கின்றது.
இப்போதுதான் தெரிகிறது சமுத்திரக்கனியைத் தேடி ஏன் மாநிலம் விட்டு மாநிலம் வந்தார்கள் என்று, அந்தளவுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றார் இவர்.

முதற்பாதியில் ஒரு சராசரி லாரி ஓட்டுனர், அடுத்த பாதியில் தன் கடந்தகால நினைவுகளில் பயணிக்கும் போது ஒரு கான்ஸ்டபிள் இதுதான் பலராமன் என்னும் மோகன்லாலின் பாத்திரம். தன்னைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத அபாயம் தன் மகளின் காதலன் ரூபத்தில் கூட வந்திருக்குமோ என்று பரிதவித்து அங்குமிங்குமாகப் பரிதவித்து அலைபாயும் மன உளைச்சலை வெகு இயல்பாகக் காட்டியிருக்கின்றார் மோகன்லால், இதெல்லாம் அவருக்குப் புதுசா என்ன?
காம்ரெட் அப்துல்லாவைக் கைது செய்ய நடத்தும் நாடகத்தில் தன் இயலாமையைக் காட்டும் போதும், கண்ணுக்கு முன்னால் அப்துல்லாவுக்கு நேரப்போகும் நிலையைக் கண்டு கையறு நிலையில் இருக்கும் போதும், மகளையும் தன்னை யும் துரத்தும் மரணதூதர்களைத் தேடும் போதும் மோகன்லால்
பலராமன் பாத்திரத்துக்குப் பெரும் பலம். மலையாளத்தின் ஒரு சூப்பர் ஹீரோ இப்படி ஒரு சாதாரண கதாபாத்திரமாக மாறும் வல்லமை அங்கு மட்டுமே எதிர்பார்க்கக் கூடியதொன்று.

இந்தப் படத்தின் பலவீனம் என்றால் ஒரு பெரும் செய்தியைத் தொக்கவைத்துக் கொண்டு இடைவேளை வரை ஏனோதானோவென்று சராசரிக்காட்சிகளோடு இழுத்துக் கொண்டு போயிருப்பது, பலம் என்னவென்றால் இடைவேளைக்குப் பின்னான அழுத்தமான கதைக்கருவை கச்சிதமாகக் காட்சிவடிவம் கொடுத்திருப்பது. காடுகளுக்குள் காமரா ஓடும்போது பரபரப்புத் தொற்றிக் கொள்கின்றது. இறுதியில் ஒரு சவாலான பிரச்சனையை எப்படி முடிக்கப் போகின்றார்கள் என்றால் அதையும் நாடகத்தனமில்லாமல் நம்பத்தக்கவகையில் முடித்திருப்பதும் நேர்த்தியாக இருக்கின்றது. மோகன்லாலுக்குத் தெரியாத அந்த நக்சலைட் தீவிரவாதி குறித்த தன்னைச் சுற்றிய சந்தேகத்தோற்றத்தை நமக்கும் ஏற்றிவிடுகின்றது படத்தின் திரைகதை அமைப்பு. தெலுங்கானா சூழலின் அந்தக் காட்சிப்பரப்பை வெகுசிறப்பாகக் காட்டி வைக்கின்றார் இயக்குனர் பத்மகுமார். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருப்பவர் சுரேஷ்குமார், கத்தி மேல் நடப்பது மாதிரியான மூலக்கதையம்சத்தை கவனமாகக் கையாண்டிருக்கின்றார்.


தலைவாசல் விஜய் (சக கான்ஸ்டபிள்), சினேகா (மோகன்லால் மனைவி காவேரி) , நடன இயக்குனர் கல்யாண் (போலீஸ் தலைமை அதிகாரி), சமுத்திரக்கனி ( காம்ரேட் அப்துல்லா)என்று தமிழ் முகங்கள் முக்கிய பாத்திரங்களில் என்றால் கூடவே இயக்குனர் லால் கெளரவ வேஷத்தில் வந்து “குதிரவாலு குலுங்குதடி குமரி நீயும் நடக்கையிலே” என்று முழு நீளத் தமிழ்ப்பாட்டையும் பாடுகின்றார். ஒரு மலையாளப்படத்தில் மலையாளப்பாட்டுக்களோடு இந்த குதிர வாலு என்ற தமிழ்ப்பாட்டும், காம்ரேட் அப்துல்லா பாடும் “பிரதிகாடின்சு” என்ற தெலுங்குப் பாடலும் என்று மூன்று மொழிப்பாடல்கள் ஒரே படத்தில் இருப்பது புதுமை. பாடல்களுக்கான இசை சமீபகாலமாக மலையாள உலகின் “இளைய”ராஜாவாக இருக்கும் எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை கடந்த வருஷம் தேசிய விருதை வாங்கிக் கொண்ட அவுசப்பச்சன்.

ஷிக்கார் – மனதை வேட்டையாடி அப்துல்லா என்ற காம்ரேட்டை முத்திரையாகப் பதிக்கின்றது.

மலையாளப்பாடல் “எந்தடி எந்தடி பனங்கிளியே”

தெலுங்குப்பாடல் “பிரதிகாடின்சு”

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அவுசப்பச்சன்

மலையாளத்தின் இரு முன்னணி நாயகர்களான மோகன்லால், மம்முட்டி இணைந்து நடிக்க பாசில் இயக்கிய “ஹரிகிருஷ்ணன்” திரைப்படம் தமிழுக்குத் தாவிய போது தான் “அவுசப்பச்சன்” என்ற இசையமைப்பாளர் குறித்த அறிமுகம் எனக்கு கிட்டியது, அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டதில் இருந்து. எண்பதுகளில் இளையராஜாவின் சாஸ்திரிய இசைப் பின்னணியில் வந்த படங்களில் வரும் இசையும், இன்னொரு மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரனின் பாதிப்பும் இருப்பதாகவே அவுசப்பச்சனின் பாடல்களைக் கேட்கும் போது எனக்குத் தோன்றும். எண்பதுகளில் மலையாளத்தில் கொடி கட்டிப் பறந்த ரவீந்திரனின் சாயல் கலந்து கொடுப்பது தன்னை நிலை நிறுத்தும் என்று ஒரு காரணமும் ஆக அவுசப்பச்சன் நினைத்திருக்கலாம். அவுசப்பச்சனின் சில பாடல்களை அவர் இசையமைக்காதது தெரியாமல் கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு இது ரவீந்திரன் பாட்டு என்று சொல்லும் அளவுக்கும் இருந்திருக்கின்றன அவை. இதற்கு இன்னொரு காரணம் பெரும்பாலான மலையாளப் படங்கள் சாஸ்திரீய சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு வந்த போது ரவீந்திரன் அவற்றுக்குத் தனியானதொரு இலக்கணத்தை மலையாள சினிமாவில் போட்டிருந்தார் எனலாம்.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் “வடக்கும் நாதன்” திரைப்படம் வெளிவரத் தயாராகி பின்னணி இசை மட்டும் போட வேண்டிய நிலையில் அந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரவீந்திரன் இறந்து விட, அந்தப் படத்திற்குப் பின்னணி இசை கொடுத்தவர் அவுசப்பச்சன்.

உதிரிப்பூக்கள் போன்ற படங்களை இயக்குனர்கள் படங்கள் என்று சொல்வது போலவும், சில நடிகர்களை இயக்குனர்களின் நாயகன் என்பது போல இசையமைப்பாளர்களைக் கூட இயக்குனர்களின் இசையமைப்பாளர் என்று வட்டம் போட்டு விடலாம். உதாரணமாக பாரதிராஜாவோடு கூட்டுச் சேர்ந்த தேவேந்திரன் வேதம் புதிது வில் என்னமாய் இசையமைத்தார். ஒரு நல்ல பாடல் வருவதற்கோ அல்லது ஒரு நல்ல இசையமைப்பாளனாகப் புடம் போடப்படுவதற்கோ ஒரு திறமையான இயக்குனரின் வேலைவாங்கு திறனும் முக்கியமானது என்பது சினிமா வரலாறு கண்ட உண்மை.

அது போலவே ஒசப்பச்சனுக்கும் இயக்குனர்கள் சிலரின் கடைக்கண் பார்வை கிட்டியிருக்கிறது.
“உன்னிகளே ஒரு கத பறயான்” போன்ற பிரபல இயக்குனர் கமல் இயக்கிய படங்களும், “அனியத்தி பிறாவு” (தமிழில் காதலுக்கு மரியாதை” போன்ற பாசில் இயக்கிய படங்களும் அவுசப்பச்சனுக்கு பெரும் பலமாக இருந்தவை என்றால் மிகையில்லை. அந்த வரிசையில் இப்போது “ஒரே கடல்” திரைப்படமும் சேர்ந்திருக்கின்றது. தமிழ், தெலுங்கு மசாலா வைரஸ் பரவி “அண்ணன் தம்பி” என்று மம்முட்டியும், “சோட்டா மும்பை” என்று லாலேட்டனும் பயணப்பட, 80 கள் விளைவித்த நல்ல மலையாள சினிமாவை மீண்டும் கையகப்படுத்த வந்திருக்கும் இயக்குனர் ஷியாம பிரசாத்தின் கடைக்கண் பார்வையும் ஒசப்பச்சன் மேல் வந்திருக்கின்றது.

இந்தப் படத்தின் பாடலை வெறுமனே கேட்பதை விட “ஒரே கடல்” படத்தோடு அனுபவித்துப் பார்க்கும் போது தெரியும் இயக்குனரும் , இசையமைப்பாளரும் ஒரே கடலில் பயணித்து ஒரே அலைவரிசையில் சிந்தித்திருக்கின்றார்கள் என்று. அவுசப்பச்சனின் பாடல்களில் இருந்து விலகிய தனித்துவமான இசையையும் அங்கே காட்டியிருக்கிறார். அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு தேசிய விருது வாங்கும் அவுசப்பச்சனை வாழ்த்துவதோடு ஏஷியா நெட்டின் Idea Star Singer இன் நீதிபதியாக இன்னும் தொடர்ந்து தன் இசைப்பணியை மழுங்கடிக்காமல் இசையில் முழுமையாக அர்ப்பணித்து இன்னும் விருதுகள் வாங்க வாழ்த்துவோம்.

ஒரே கடல் குறித்து என் பதிவு

“ஒரே கடல்” படத்தில் வரும் “நகரம் விதுரம்”

“ஒரே கடல்” படத்தில் “ஜமுனா வருதே” பாடகி சுஜாதா மகள் ஸ்வேதா பாடித் தோன்றும் காட்சி

தொடர்ந்து அவுசப்பச்சனின் சில இனிய மெட்டுக்கள்

“உள்ளடக்கம்” படத்தில் இருந்து “அந்தி வெயில் பொன்னுதிரும்”. எனக்கு மிகவும் பிடித்த மலையாளப் பாடல்கள் பட்டியலில் விடுபட முடியாதது. தேவாவின் 90 களின் ஆரம்ப இசைப் பாணி இதில் இருக்கும்.

“உன்னிகளே ஒரு கத பறயான்” படத்திலிருந்து “பொன்னாம்பல்”

“ஹரிகிருஷ்ணன்” படத்தில் இருந்து “சமயமிதாபூர்வ சாயானம்”

ஓணம் ஷ்பெஷல் மலையாளப் பாட்டுக்கள்

இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேட்டன்களுக்கும், குறிப்பா சேச்சிகளுக்கும் இனிய பண்டிகை வாழ்த்துக்கள்.

இதோ உங்களுக்காக ஷ்பெஷல் பாட்டுப் படையல்

முதலில் வருவது சலீல் செளத்ரி இசையில் பி.லீலா குழுவினர் பாடிய “செம்மீன்” திரைப்பாடலான “பெண்ணாளே பெண்ணாலே” என்ற பாடல்.

அடுத்து ரவீந்திரன் இசையில் “ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா” திரைக்காக மலையாளப் பாட்டுக்கடவுள் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய “ப்ரமதவனம் வீண்டும்” என்னும் பாடல் வருகின்றது.

தொடர்ந்து “மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா” என்ற பாடலை “மனசினக்கரே” திரையில் இருந்து நம்ம குலதெய்வம் இளையராஜா போட்ட டியூனைப் பாடுகிறார்கள் எம்.ஜி.சிறீகுமார் குழுவினர்.

மலையாளத் திரையுலகில் ஒரு சகாப்தம் படைத்துக் காலமான ரவீந்திரன் இசையில் வந்த இறுதித் திரைப்படமான “வடக்கும் நாதன்”படத்தில் இருந்து “பாகி பரம்பொருளே” என்ற இறைமணம் கமிழும் பாடலைப் பாடுகின்றார்கள் மஞ்சரி மற்றும், சிந்து பிரேம்குமார் குழுவினர்.

நம்ம தல கோபி ஓணம் பண்டிகைக்கு ஒரு பாட்டு வேணும்னு அடம்பிடிச்சார். அவருக்காக நோட்டம் திரையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் “பச்ச பானம்” என்ற பாடல் ஜெயச்சந்திரன் இசையில் வருகின்றது.

எந்தா இது? ஓணம் டோயில் ஒரே மெலடி பாட்டு?
என்று அலுக்கும் சேட்டன்களுக்காக ஒரு துள்ளிசைப் பாடல் நிறைவாக “காழ்ச்சா” திரையில் இருந்து கலாபவன் மணி குழு மோகன் சித்தார்த்தா இசையில் பாடும் “குத்தநாடன் காயலிலே” வருகின்றது.

வரட்டே…..;-)

Powered by eSnips.com

இசையமைப்பாளர் நெளஷத் அலி நினைவில்

ஹிந்தித் திரையுலகில் 1940 இல் தொடங்கி தன் மூச்சு ஓயும் வரை இசைப்பணியாற்றிய நெளஷத் அலி என்னும் திரையிசைச் சக்கரவர்த்தி, கடந்த மே, 5, 2006 இல் இவ்வுலகை விட்டு ஒய்ந்த போது வானொலிப் படைப்பொன்றை வழங்கியிருந்தேன்.
அப்படையலை நெளஷத்தின் நினைவு மீட்டலாக் கொடுத்திருந்தேன்.
இப்படைப்பில் “Mughal-e-Azam” என்ற ஹிந்திப்படப் பாடல் தமிழில் அக்பர் திரைப்படப் பாடலாக பி.சுசீலா குரலில் காலம் மறக்கடிக்காத பாடலான “கனவு கண்ட காதல்” என்று மாறிய பாங்கையும் பாடல்களோடு தொட்டுச் செல்கின்றது.இந்திய சினிமா வரலாற்றில் நெளஷத்தின் தடம் ஆழமானதும் அகலமானதுமாகும்.