தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்…

வழக்கம் போல வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக ரயில் பிடிக்கப் பாய்கின்றேன். இடைப்பட்ட நேரத்தில் மினி சூறாவளி சிட்னியைத் தாக்கியதன் விளைவு ரயில்கள் தாமதித்துத் தம் ஓட்டத்தைக் கவனிக்க, எனக்கோ இருக்கவே இருக்கிறது என்று ஐபாட் இற்குள் ஐக்கியமாகின்றேன். வழக்கமான இந்த நேரம் ஹலோ எஃப் எம் இன் RJ கே.கே தன் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்பி அத்துணை நேரம் கனத்திருந்த வேலைக்களைப்பை மறக்கடிக்க வைப்பார். இன்று எடுத்த எடுப்பில் “தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்” பாடல் காதுக்குள் விழுந்த முதல் தேனாறாகப் பாய, இந்தப் பாடலை ரசித்தவாறே பயணிக்கிறேன்.

வழக்கமாக ஒரு படத்தின் ஒன்றிரண்டு பாடல்கள் கேட்ட மாத்திரத்திலேயே மனதில் ஒட்டிக்கொள்ளும் பின்னர் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். ஒருகட்டத்தில் அந்தப் பாடல்கள் கேட்டுத் தித்தித்த கணத்தில் அதே படத்தில் அதுவரை கவனிக்கப்படாத இன்னொரு பாடலைக் கேட்டுப் பார்க்கலாமே என்று தோன்றும். அதுவரை சீண்டாதிருந்த பாடலின் வசீகரம் அடடா இதுநாள் வரை இதை விட்டுவைத்து விட்டேனே என்று எண்ணத் தோன்றும் அப்படி ஒரு வகையறா தான் இந்த “தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்”.

அப்போது “கேளடி கண்மணி” படம் வரப்போகின்றது என்பதைக் கட்டியம் கூறும் விவித்பாரதி விளம்பரங்களில் மூச்சுவிடாமல் பாடிய எஸ்பிபியின் “மண்ணில் இந்தக் காதல் இன்றி”யும் அவ்வப்போது “நீ பாதி நான் பாதி” “கற்பூர பொம்மை ஒன்று” பாடல்களின் ஒரு சில வரிகளும் இடம்பெறும் ஆனால் “தென்றல் தான் திங்கள் தான்” பாட்டுக்கு எடுத்த மாத்திரத்தில் அறிவிப்பாளரும் அங்கீகாரம் கொடுக்கவில்லைப் போலும். நாளாக நாளாக “கேளடி கண்மணி” படத்தில் அதுவரை முன்னிலையில் இருந்த பாடல்களுக்கு நிகராக “தென்றல் தான் திங்கள் தான்” பாடலை உயர்த்திய பெருமை ஞாயிற்றுக்கிழமை நாலுமணி நேயர் விருப்பம் கேட்கும் சென்னைவானொலி நேயர்களைத் தான் சென்று சேரும். அப்படி உயர்ந்தது தான் இந்தப் பாடல், ரசிகமனங்களில்.

2006 ஆம் ஆண்டு, உலகின் கலையழகும் மிக்க கட்டிடங்களில் ஒன்றாகவும் அவுஸ்திரேலியாவின் அடையாளமாகவும் திகழும் ஒபரா ஹவுசில் முதன் முதலில் ஒரு தமிழ் இசை நிகழ்ச்சி. அதுவும் தமிழ்திரை இசை மட்டுமன்றி மலையாள தேசத்தின் நவீன இசைக்கடவுளாக ரசிகர்களால் உயர்த்தி நோக்கும் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் இசை நிகழ்வு. அரங்கம் கொள்ளாத கூட்டம். அங்கே எல்லோருக்கும் பரவலாகப் பிடித்த புகழ்பெற்ற பாடல்களைப் பாடிக் கைதட்டல் வாங்கிவிடலாம் என்ற சபலம் எந்தவொரு இசைக்கலைஞனுக்கும் வந்தால் வியப்பில்லை. ஆனால் அங்கே கே.ஜே.ஜேசுதாஸ் அனுபவித்துப் பாடியது “தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்”


“தென்றல் தான் திங்கள் தான்” பாடலை ஓடவிடும் போதெல்லாம் பாடலோடு இழைத்திருக்கும் இசையும் வயலினும், புல்லாங்குழலும் கதை பேசிக்கொள்ளும் சங்கதிகளையும் கடந்து இன்னொரு திசைக்கு மெட்டு மாறும் கட்டம்
“காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்” என்று நாயகன் பாட
“தீராத காதல் தேனிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம்” என்று அவள் ஒத்திசைக்க
இன்னொரு திசைக்குப் பயணிக்கும். எந்தவித உபத்திரமும் கொடுக்காமல் பாட்டு வளைந்து நெளிந்து ஓடக் கேட்கின்ற மனசும் அதற்கேற்பத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும். பாட்டுக்குப் பின்னணியில் ஒரே தாள லயத்தோடு ட்ரம்ஸ் இசை.
இதுவே இன்னொரு இசையமைப்பாளர் கையில் வாய்த்தால் அடுக்களையில் பாத்திரங்களை உருட்டிப் போடும் எலியின் செய்கை ஆகிவிடும்.
கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா குரல்கள் எவ்வளவு கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன இந்தப் பாட்டுக்கு. அதுமட்டுமா, ராஜா கொடுத்த மெட்டுக்கு இட்டுக் கட்டிய பிறைசூடனும் காதல் சந்தம் பண்ணியிருக்கிறார்.
நான் இன்று இந்தப் பாடலைக் கேட்டு அனுபவித்த அளவுக்கு நீங்களும் கேட்கவேண்டும் என்ற ஆசையில் இதோ, எத்தனை முறை இன்று இந்தப் பாடலை நான் கேட்கப்போகின்றேன் என்று கணக்கில் வைக்கின்றேன் நீங்களும் உங்கள் பங்கிற்கு =>

பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரனுடன் ஒரு கல(கல)க்கல் மாலைப்பொழுதில்


“”சுராங்கனி” என்ற பைலாப்பாடலுக்கு நாற்பது வயசுக்கு மேலிருக்கும் ஆனால் அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் நான்கு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை கூடத் தொட்டிலில் இருந்து பைலா ஆட்டம் ஆடும். அந்த அளவுக்குப் பெரும் புகழ்பெற்ற இந்தப் பாட்டுக்குச் சொந்தக்காரர் பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் அவர்கள்.

பாடகராக, நடிகராக இன்றும் இளமைத் துடிப்போடு உலகெங்கும் ஓடியோடி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்கவைக்கும் தன் இசைப்பயணத்தைத் தொடர்ந்து வரும் மனோகரன் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் பல தடவைகள் வந்திருந்தாலும் எட்ட இருந்து அவரை ரசித்துப் பார்க்கும் கடைக்கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். இம்முறை அவுஸ்திரேலியாவின் பேர்த், மெல்பன் நகரங்களோடு சிட்னிக்கும் வந்து தன் பைலாப்பாடல்களால் கலக்க வந்திருக்கும் இவரை நேற்று வானொலிக் கலையகத்தில் நேரே சந்தித்துப் பேசி மகிழ ஒரு வாய்ப்புக் கிட்டியது.
ஆண்டாண்டுகாலமாகப் பழகியவர் போன்று இயல்பாகப் பேசி , நகைச்சுவைத்துக் கலகலப்பான ஒரு மாலை நேரத்தை வானொலி ரசிகர்களுக்கும் எங்களுக்கும் அவர் ஏற்படுத்தி விட்டார். நெடு நாள் ஆசையாக அவரை வானொலிப் பேட்டி காணும் ஆசையில் ஒரு பாதியாக இந்தப் பேட்டி அமைந்து விட்டது. இன்னொரு பேட்டியில் இவரது வாழ்க்கைப் பயணத்தைப் பெட்டக நிகழ்ச்சியாக உருவாக்க ஆவல் கொண்டிருக்கின்றேன்.

நேற்று அவர் தந்த இந்த கலகல பேட்டியைக் கேட்டுப்பாருங்கள், பேச்சோடு பாடியும் ஆடியும், தன் ரசிகர்களோடு பழைய நினைவுகளை இரைமீட்டும் ஒரு பைலாப் பேட்டியாக அமைந்து விட்டது இது 😉

நாளை மறுதினம் செப்டெம்பர் 4 ஆம் திகதி A.E.மனோகரன் அவர்களுடன் தென்னிந்தியத் திரைப்படப்பாடகி T.K.கலா, மலேசியப் பாடகர் ராஜராஜசோழன் ஆகியோரின் கலக்கல் இசை நிகழ்ச்சியை சிட்னி ரசிகர்கள் தவற விடாதீர்கள்.

பேட்டியின் நடுவே பாடிக் குஷிப்படுத்தும் A.E.மனோகரன் அவர் அருகே தீவிர ரசிகர் கலைச்செல்வன்

A.E.மனோகரன் அவர்களது பிரபலமான பாடல்களில் சில

சுராங்கனி சுராங்கனி

அன்பு மச்சாளே எந்தன் ஆசை மச்சாளே

சில சில பாவையர்

மால்மருகா எழில் வேல்முருகா நீயே

பிரண்டி, பியர், விஸ்கி போடாதே

பறந்து வந்து பாடுகின்றேன்

சிறு சின்னஞ்சிறிய என் வயதினிலே

தஞ்சைப் பெருங்கோயில் தரிசனம் – iTunes இல் அரங்கேறும் றேடியோஸ்பதி

சோழப்பேரரசு தன் உச்சத்தில் இருந்த காலத்தின் கல்வெட்டாய் கம்பீரமாய் இன்றும் திகழ்வது தஞ்சைப் பெருங்கோயில் என்று சிறப்பிக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம். ராஜராஜசோழ மன்னன் தன் காலத்தில் சமயத்தையும், கலையையும் எவ்வளவு உச்சமாக மதித்தான் என்பதற்குச் சான்றாக இன்றும் மிடுக்கோடு நிற்கின்றது இந்த இராஜராஜேஸ்வரம்.

இவ்வாலயம் எழுப்பி இந்த ஆண்டோடு ஆயிரம் ஆண்டுகள் கடக்கின்றது என்பது பெருமையோடு நினைவுகூர வைக்க வேண்டிய விடயம். இதுவரை என் இந்தியப்பயணங்களில் தஞ்சைப் பெருங்கோயிலைக் காண வாய்ப்புக் கிட்டவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. அதை ஓரளவு ஈடுகட்டும் விதத்தில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நான் படைக்கும் “அறிவுக்களஞ்சியம்” நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அறிவிப்பாள சகோதரி திருமதி சிவாஜினி சச்சிதானந்தாவை அழைத்து ஒரு சிறப்புப் படையலைப் படைத்திருந்தேன். இவர் தஞ்சைப் பெருங்கோயிலுக்குச் சென்ற அந்த அனுபவங்களை மிகவும் சுவையாகப் பகிர்ந்த போது இடையிடையே “ராஜ ராஜ சோழன்” படத்தில் வரும் இவ்வாலயத்தின் சிறப்பைக் கூறும் பாடல்களையும் கொடுத்து ஒரு சிறப்புப் பெட்டக நிகழ்ச்சியாக அமைத்தோம்.

இப்போதெல்லாம் Apple நிறுவன உற்பத்திகளை ஆளாளுக்கு iPhone, iPod, iPad ஆகப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கையில் றேடியோஸ்பதியின் அடுத்த பரிமாணமாக முதல் Podcast ஆக இந்த “தஞ்சைப் பெருங்கோயில் தரிசனம்” என்ற ஒலிப்பெட்டகத்தைத் தருவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். தொடர்ந்து இவ்வகையான சிறப்புப் பெட்டக நிகழ்ச்சிகள், கலைஞர்கள் பேட்டிகளும் வர இருக்கின்றன. தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி, Apple நிறுவனத்துக்கு ஒரு “ஓ”.

இந்த ஒலிப்பகிர்வை itunes வழியாக நேரடியாகத் தரவிறக்கி உங்கள் ஒலிப்பெட்டியில் இணைக்க

http://itunes.apple.com/podcast/thanjai/id383047672

நேரடியாகக் கேட்க

தஞ்சைப் பெருங்கோயில் புகைப்படம் நன்றி: travel.webshots.com

அனுராதா ரமணனின் “சிறை” – ஒலிப்பகிர்வு

பிரபல தமிழ் இலக்கியப்படைப்பாளர் அனுராதா ரமணன் அவர்கள் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி மாரடைப்பால் அகால மரணமானது அவரது எழுத்துக்களை நேசித்தவர்களுக்கும் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்து விட்டது. சிறுகதை, நாவல் என்ற எல்லைகளைக்கடந்து தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளையும், வாசகர் கேள்வி பதிலுக்கு அவர் தந்த ஆறுதல் பகிர்வுகளுமாக இவரது எழுத்துப்பணி விசாலமடைந்திருந்தது எல்லோரும் அறிந்த ஒன்று.

இவரது நாவல்களில் ஒரு மலரின் பயணம், அம்மா, சிறை, கூட்டுப்புழுக்கள் போன்றவை திரைப்படங்களாகவும் பிறப்பெடுத்தன. சிறை திரைப்படத்தினை நாவலின் சாரம் கெடாமல் இயக்கியிருந்தார் ஆர்.சி. சக்தி. லட்சுமி, பிரசன்னா, ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்க இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துச் சிறப்பித்திருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஒலிபரப்புத்துறையில் 15 வருஷங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த எமது சக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி சிவாஜினி சச்சிதானந்தா அவர்கள் அனுராதா ரமணன் அவர்களது எழுத்துக்களை நேசிப்பவர். கடந்த மே 13 ஆம் திகதி தனது வானொலிப் படைப்பில் “திரையில் புகுந்த கதைகள்” என்ற பகுதியில் தான் நேசிக்கும் அனுராதா ரமணன் குறித்தும், அவரைச் சந்தித்த அந்தக் கணங்களை சுவாரஸ்யமான நனவிடை தோய்தலைத் தந்தவாறே, திரையில் காவியமான “சிறை” திரைப்படத்தின் பகிர்வையும் அந்தப் படத்தில் இடம்பெற்ற முத்தான இரண்டு பாடல்களோடு பகிர்ந்து கொண்டார். மூன்று நாட்களின் பின் தன்னுடைய ஆதர்ஷ எழுத்தாளர் இவ்வுலகை விட்டு நீங்குவார் என்று அப்போது நினைத்திருப்பாரா என்ன.
அந்த ஒலிப்பகிர்வை இங்கே உங்கள் செவிகளுக்கு விருந்தாகத் தருகின்றேன்.
ஒலிப்பகிர்வைத் தயாரித்துப் பகிர்ந்து கொண்ட திருமதி சிவாஜினி சச்சிதானந்தாவுக்கு எமது நன்றிகள்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு நினைவில் – ஒலிச்சித்திரம்

தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த, ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் நூற்றாண்டு இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் நாளில் இருந்து தொடங்குகின்றது.

மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என்று அழைக்கப்பட்ட இவர் மார்ச் 1, 1910 ஆம் ஆண்டில் பிறந்து நம்பர் 1, 1959 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர்.
சரஸ்வதியின் அருட்கடாட்சத்தினால் தான் கொண்ட பாடற் திறனால் நாடக நடிகனாக உருவாகி, திரையுலகில் பிரவேசித்த இவர் தமிழ் சினிமாவின் வரலாற்றில் தனி அத்தியாயத்தை ஏற்படுத்திச் சென்றவர்.

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் தன் பாடற் திறனாலும், தேர்ந்தெடுத்து நடித்த கதாபாத்திரங்களினாலும் அக்கால ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டவர். அந்தப் புகழை அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கும் எடுத்துச் சென்று கொண்டு வந்திருக்கின்றது அவரின் இறவா வரம் கொண்ட பாடல்கள்.

அந்த வகையில் தினமணி இதழில் இரா.செழியன் எழுதிய “ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதர்! ” என்ற கட்டுரையை ஒலிச்சித்திரமாக்கி அவுஸ்திரேலியாவின் பண்பலை வானொலியான “தமிழ் முழக்கம்” வானொலியில் வழங்கியிருந்தேன். அந்த ஒலிப்பகிர்வை இங்கே தருகின்றேன்.

அடுத்து எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய முத்தான சில பாடல்கள் செவிக்கினிமை தர

ஹரிதாஸ் திரைப்படத்தில் இருந்து “மன்மத லீலையை வென்றார் உண்டோ”

சிவகவி திரைப்படத்தில் இருந்து “கவலையைத் தீர்ப்பது நாட்டியக்கலையே”

ஹரிதாஸ் திரைப்படத்தில் இருந்து “கிருஷ்ணா முகுந்தா முராரே’

சிவகவி திரைப்படத்தில் இருந்து “சொப்பன வாழ்வில்”

திருநீலகண்டர் திரைப்படத்தில் இருந்து “தீன கருணாகரனே”

சிவகவி திரைப்படத்தில் இருந்து “வதனமே சந்த்ரவிம்பமோ”

காதலர் தினம் 2010

காதலர் தினம் என்பது காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல ஒரு காலத்தில் காதல் பூ பூத்தவர்களுக்கும் ஸ்பெஷலான நாள். இந்தத் தினத்தைக் கேட்டாலேயே பதின்ம வயது நினைவுகள் அப்படியே மீண்டும் ஒரு சுற்று வரும். ஹலோ ஹலோ ஓடாதீங்க, இங்கே நான் ஒன்றும் மலரும் நினைவுகளைச் சுழற்றவில்லை 😉

வானொலியில் “காதலர் கீதங்கள்” என்ற நிகழ்ச்சியை 6 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்திருக்கின்றேன். குறிப்பாக மு.மேத்தா போன்றோரின் கவிதைகளை நறுக்கிச் சிலவரிகளை மட்டும் சொல்லி அதற்குப் பொருந்துமாற்போலப் பாடல்களைப் பகிர்வேன். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு தீம் வைத்துச் செய்திருப்பேன. எனவே காதலர் கீதங்களைப் பகிர்வது என்பது எனக்கு இன்னும் அலாதியான விருப்பு. அந்த வகையில் காதலர் தினம் 2010 சிறப்புப் படையலாக இங்கே வைரமுத்து எழுதிய காதல் கவிதைகளையும் எனக்குப் பிடித்த சில காதல் பாடல்களையும் பகிர்கின்றேன். காதலனாகவும் கவிஞனாகவும் இருந்ததால் வைரமுத்து அணு அணுவாகப் பிளந்து காதலைக் காதலித்து எழுதிய மணியான வரிகள் அவை.

காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி

ஒளிவட்டம் தோன்றும்…

உலகம் அர்த்தப்படும்…

ராத்திரியின் நீளம்

விளங்கும்….

உனக்கும்

கவிதை வரும்…

கையெழுத்து

அழகாகும்…..

தபால்காரன்

தெய்வமாவான்…

உன் பிம்பம் விழுந்தே

கண்ணாடி உடையும்…

கண்ணிரண்டும்

ஒளிகொள்ளும்…

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்

மூன்று முறை

பல்துலக்குவாய்…

காத்திருந்தால்

நிமிஷங்கள் வருஷமென்பாய்…

வந்துவிட்டால்

வருஷங்கள் நிமிஷமென்பாய்…

காக்கைகூட உன்னை

கவனிக்காது

ஆனால்…

இந்த உலகமே

உன்னை கவனிப்பதாய்

உணர்வாய்…

வயிற்றுக்கும்

தொண்டைக்கமாய்

உருவமில்லா

உருண்டையொன்று

உருளக் காண்பாய்…

இந்த வானம்

இந்த அந்தி

இந்த பூமி

இந்த பூக்கள்

எல்லாம்

காதலை கவுரவிக்கும்

ஏற்பாடுகள்

என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி

இடம் மாறித் துடிக்கும்…

நிசப்த அலைவரிசைகளில்

உனது குரல் மட்டும்

ஒலிபரப்பாகும்…

உன் நரம்பே நாணேற்றி

உனக்குள்ளே

அம்புவிடும்…

காதலின்

திரைச்சீலையைக்

காமம் கிழிக்கும்…

ஹார்மோன்கள்

நைல் நதியாய்ப்

பெருக்கெடுக்கும்

உதடுகள் மட்டும்

சகாராவாகும்…

தாகங்கள் சமுத்திரமாகும்…

பிறகு

கண்ணீர்த் துளிக்குள்

சமுத்திரம் அடங்கும்…

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்

சிலிர்க்க முடியுமே…

அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்

புதுப்பிக்க முடியுமே…

அதற்காகவேனும்…

ஆண் என்ற சொல்லுக்கும்

பெண் என்ற சொல்லுக்கும்

அகராதியில் ஏறாத

அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்…

வாழ்ந்துகொண்டே

சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே

வாழவும் முடியுமே…

அதற்காக வேணும்…

காதலித்துப் பார்!

டூயட் திரைப்படத்தில் இருந்து “கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா?”

கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா?

என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?

பேச்சுக்கு உயிர் தந்த சத்தங்கள் நீயா?

என்னைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?

சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?

என்னைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா?

பருவத்தின் தோட்டத்தின் முதற் பூவும் நீயா?

என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?

இரவோடு நான் காணுகின்ற ஒளிவட்டம் நீதான்!

என் இருகண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்!

வார்த்தைக்குள் ஊடாடும் உள்ளர்த்தம் நீதான்!

என் வாத்தியத்தில் இசையாகும் உயிர் மூச்சு நீதான்!

தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்!

என் பக்கத்தில் அக்கினியாய் சுட்டவளும் நீதான்!

காதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்!

நான் காதலித்ததால் கண்மூடிக் கொண்டவளும் நீதான்

அடுத்து இருவர் படத்திற்காக வைரமுத்து குழைத்த காதல் வரிகள்

உன்னோடு நானிருந்த

ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும்

மறக்காது கண்மணியே

தொன்னூறு நிமிடங்கள்

தொட்டணைத்த காலம் தான்

எண்ணூறு ஆண்டுகளாய்

இதயத்தில் கணக்குதடி

பார்வையிலே சில நிமிடம்

பயத்தோடு சில நிமிடம்

கட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்

இலக்கணமே பாராமல்

எல்லாயிடங்களில் முத்தங்கள்

விதைத்த மோகத்தில் சில நிமிடம் (உன்னோடு)

எது ஞாயம் எது பாவம்

இருவருக்கும் தோன்றவில்லை

அது இரவா அது பகலா

அதை பற்றி அறியவில்லை

யார் தொடங்க யார் முடிக்க

ஒரு வழியும் தோன்றவில்லை

இருவருமே தொடங்கிவிட்டோம்

இதுவரைக்கும் கேள்வியில்லை

அச்சம் கலைந்தேன்

ஆசையினை நீ அணைத்தாய்

ஆடை கலைந்தேன்

வெட்கத்தை நீ அணைத்தாய்

கண்டதிரு கோலம்

கனவாக மறைந்தாலும்

கடைசியிலே அழுத கண்ணீர்

கையிலின்னும் ஒட்டுதடி

உன்னோடு நானிருந்த

ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும்

மறக்காது கண்மணியே

அடுத்து என்னை ஆட்கொண்ட சில காதல் பாடல்களைப் பகிர்கின்றேன்.

முதலில் வருவது “படித்தால் மட்டும் போதுமா” திரைப்படத்தில் இருந்து “பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை” (குரல்கள்: பி.பி சிறீனிவாஸ், டி.எம்.செளந்தரராஜன்)

அடுத்து வருவது “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்தில் இருந்து “காதல் ஓவியம் பாடும் காவியம்” (குரல்கள்: இளையராஜா, ஜென்சி)

“நலம் நலமறிய ஆவல்” ஒலிப்பது “காதல் கோட்டை” திரையில் இருந்து (குரல்கள்: கிருஷ்ணராஜ், அனுராதா சிறீராம்)

நிறைவாக “என்ன விலை அழகே” கேட்கும் “காதலர் தினம்” (குரல்: உன்னி மேனன்)

இசையமைப்பாளர் கங்கை அமரன்

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், “அன்னக்கிளி” திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது.

இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் “பத்ரகாளி” உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே நான் தொட்டுச் செல்வது இசையமைப்பாளர் கங்கை அமரன் மட்டுமே. மற்றையவையை பிறிதொரு வேளை பார்த்துக் கொள்வோம்.

அமர்சிங் என்ற கங்கை அமரன் அடிப்படையில் நல்லதொரு இசைக்கலைஞன், தன் அண்ணன்மார் பாவலர் வரதராஜன், ராசய்யாவோடு ஊர் ஊராய்ப் போய்ப் பாட்டுக் கட்டியவர். ஆரம்பத்தில் பெண் குரலுக்குப் பொருத்தமாக ராசய்யாவின் குரல் பவனி வந்து கொண்டிருந்து ஒரு கட்டத்தில் அவரின் குரல் நாண் ஆண் சுருதி பிடித்தபோது பெண் குரலுக்கு அடுத்த ரவுண்ட் கட்டியவரே இவராம்.

பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வந்த காலகட்டத்தில் “புதிய வார்ப்புகள்” படத்தில் கதாநாயகனாக அரிதாரம் பூசக்கிடைத்த பாக்கியத்தை இன்னொரு ராஜ் பறித்துக் கொண்டதால் கதாநாயக அவதாரம் மட்டும் திரையில் கிட்டாது போனாலும் இவரின் பாட்டுக் கட்டும் பணி மட்டும் ஓயாது தொடர்ந்தது.
இளையராஜாவின் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிட்டிய எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதை “செந்தூரப்பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே” என்று தேன் கவியைக் குழைய விட்டு அண்ணனுக்குப் பெருமை சேர்த்தார் கவிஞர் கங்கை அமரன்.

“கோழி எப்படிய்யா கூவும்” என்று சீண்டினார் இவரைப் போல அன்று இளவட்டக் கவிஞராக இருந்த வைரமுத்து கங்கை அமரன் எடுக்கவிருந்த “கோழி கூவுது” படத் தலைப்பைக் கேட்டு விட்டு. “உங்க பேரில் வைரமுத்து இருப்பதால் வைரமும் முத்தும் கொட்டியா கிடக்குது?” என்று விட்டுக் கொடுக்காமல் பதிலடி கொடுத்த அறிமுக இயக்குனர் கங்கை அமரனுக்கும் இயக்குனராக நல்லதொரு அங்கீகாரம் கிட்டியது. கோழி கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கும் கூவியது.

மீண்டும் என் முதல் பாராவுக்கே வருகின்றேன். இங்கே நான் சொல்ல வந்தது இசையமைப்பாளன் கங்கை அமரன் பற்றி. “இவன் மட்டும் ஒரே வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சிட்டிருந்தால் ஒரு நல்ல இசையமைப்பாளர் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருப்பார்” சொன்னவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அல்லவா.

கங்கை அமரனின் பாடல்களைக் கேட்டால் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதிப்பும், 70 களில் இருந்த இளையராஜாவின் பாணியும் இருக்கும். அந்த வகையில் தொடர்ந்து அவரின் ஒரு சில பாடல்களைத் தாங்கி வரும் இசைத் தொகுப்பைக் கேளுங்கள்.

இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது அப்போது பிரபலமாக இருந்த காஜா இயக்கத்தில் “விடுகதை ஒரு தொடர்கதை” மூலம். அந்தப் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் காலங்கள் கடந்த பின்னும் தேனாக இனிக்கும். ஒன்று “விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று” என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.ஜானகி பாடும் பாடல். இன்னொரு பாடல் இங்கே நான் தரவிருக்கும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் “நாயகன் அவன் ஒரு புறம்”

சம காலத்தில் வந்த இன்னொரு படம் “மலர்களே மலருங்கள்”. இந்தப் படத்திலும் கங்கை அமரனுக்குப் புகழ் சேர்த்தவை பி.சுசீலா பாடிய சுட்டும் விழிச்சுடர் தான், இன்னொன்று இங்கே நான் தரும் ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி குரல்களில் ‘இசைக்கவோ நம் கல்யாண ராகம்’

“அப்போல்லாம் இளையராஜாவை சந்திக்கவே முடியாத அளவுக்கு மனுஷர் பிசியா இருந்த காலத்தில் நம்ம ரேஞ்சுக்கு ஏற்றவர் கங்கை அமரன் தான் என்று முடிவு பண்ணி அவரோடு சேர்ந்து படம் பண்ணினேன்” இப்படிச் சொல்கிறார் இயக்குனர் பாக்யராஜ். சந்தர்ப்பம் அப்படி அமைந்தாலும் இயக்குனராக பாக்யராஜ் செய்த படங்களில் முந்தானை முடிச்சு நீங்கலாக இளையராஜாவோடு இணைந்து அவர் பணியாற்றிய படங்கள் பெரு வெற்றி பெற்றது இல்லை எனலாம். ஆனால் சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் இவர்கள் வரிசையில் கங்கை அமரனோடு சேர்ந்து பணியாற்றிய சுவரில்லாத சித்திரங்கள், மெளன கீதங்கள் படங்களும் வெற்றிப் படங்கள் வரிசையில் சேர்ந்து கொண்டன. சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் வரும்
“காதல் வைபோகமே” பாடலை முன்னர் இன்னொரு இசைத் தொகுப்பில் தந்ததால் நான் இங்கே தருவது மெளன கீதங்கள் படத்தில் இருந்து ” மூக்குத்திப் பூ மேலே காத்து”

1990 களில் ஒரு ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு கங்கை அமரன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பரிவாரங்களோடு வருகின்றார். கங்கையும் எஸ்.பி.பியும் சேர்ந்தால் கிண்டலுக்குக் கேட்க வேண்டுமா. “இவனெல்லாம் இசையமைச்சு நான் பாடவேண்டியதாப் போச்சு பாருங்க” என்று சொல்லி ஓய்கிறார் எஸ்.பி.பி மேடையில் வைத்து. அரங்கம் அந்த நேரம் ஒரு கணம் நிசப்தமாக இருக்கிறது. அடுத்த கணம் “நீலவான ஓடையில்” பாடலை ஒரே மூச்சில் பல்லவி முழுக்கப் பாடி விட்டு கங்கை அமரனை உச்சி மோந்து கட்டிப் பிடிக்கிறார் எஸ்.பி.பி. மலையாளத்தில் “நீலவானச் சோலையில்” என்த்று பாடிச் சென்றவர் கே.ஜேசுதாஸ்.”வாழ்வே மாயம்” கங்கை அமரனுக்கு வாழ்நாள் சொத்து.

அதே மேடையில் அடுத்துப் பாட வருகின்றார் எஸ்.ஜானகி. “பாலு மாதிரியே நம்ம கங்கை அமரன் இசையில் எனக்குப் பிடிச்ச பாட்டு ஒண்ணு சொல்லணும்” என்று சொல்லி விட்டு பின்னணி வாத்தியங்களைச் சைகை காட்டி விட்டுப் பாட ஆரம்பிக்கின்றது அந்தப் பாட்டுக் குயில் “அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நிலா நிலா”. அப்போது தான் வெளி வந்த படமான “அத்த மக ரத்தினமே” படத்தின் பாடலை முதல் தடவையே அரங்கத்தில் கேட்டவர்களின் ஊனுக்குள் புகுந்து உள்ளத்துச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தது அந்தப் பாடல்.

“ஜீவா” என்றொரு படம் வந்தது. சத்யராஜ் நடித்த அந்தப் படத்தில் ஒரு பாட்டு “சங்கீதம் கேளு இனி கைத்தாளம் போடு”. இளையராஜாவின் பாடல்களையே ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்த சென்னை, தூத்துக்குடி, திருச்சி வானொலிகளின் அன்றைய உங்கள் விருப்பம் நிகழ்ச்சிகளில் பங்கு போட்டுக் கொண்டது இந்தப் பாடல். கிட்டார் இசையும், கொங்கோ வாத்தியமும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு கைத்தாளம் போட வைக்கும் பாட்டு இது. இடையிசையில் வீணை லாவகமாகப் பயன்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல மேற்கத்தேயக் கலப்புக்கு இசை நகரும் சிறப்பே அழகு. நான்கு வருசத்துக்கு முன்னர் சிங்காரச் சென்னைக்குப் போனபோது தேடியலைந்து லகரி இசைத்தட்டில் தேடிப் பிடித்துப் பொக்கிஷமாக நான் பாதுகாக்கும் பாட்டு இது.

இசையமைப்பாளர் கங்கை அமரன் ஓய்ந்து விடவில்லை, இன்னொரு தொகுப்பிலும் வருவார்.

பாடகர் கமல்ஹாசன்….!

கமல்ஹாசன் என்னும் கலைஞன் தன் நடிப்புத் திறனோடு, ஆடல், பாடல் திறனையும் ஒருங்கே வளர்த்துக் கொண்டவர். முன்னர் ஒருமுறை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பாலமுரளிகிருஷ்ணா கூட, கமல் தன்னிடம் சங்கீதம் கற்க வந்ததாகவும், ஒரு சில நாட்களிலேயே அவரின் திறமையைக் கண்டு தான் வியந்ததாகவும் முறையாக இன்னும் பயிற்சி எடுத்திருந்தால் அவரின் பாடும் திறன் இன்னும் உயர்ந்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

குணா பாடல் ஒலிப்பதிவில் கூட இளையராஜா கமலோடு பேசும் போது கமலுக்கு ஹைபிட்சில் பாடும் திறன் இருப்பதைச் சிலாகித்து, சிங்கார வேலனில் “போட்டு வைத்த காதல் திட்டம்” பாடலைப் பாட வாய்ப்புக் கொடுத்ததைக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே இன்றைய பதிவில் கமல்ஹாசன் பாடிய அருமையான, ஏராளம் பாடல்களில் தேர்ந்தெடுத்த சில முத்துகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில், அவர் அந்தரங்கம் திரையில் பாடிய “ஞாயிறு ஒளி மழையில்”, அவள் அப்படித்தான் திரையில் இருந்து “பன்னீர் புஷ்பங்களே”, குணாவில் இருந்து “கண்மணி அன்போடு காதலன்”, தொடர்ந்து தேவர் மகனில் “இஞ்சி இடுப்பழகி”, நிறைவாக சிகப்பு ரோஜாக்களில் இருந்து “நினைவோ ஒரு பறவை” ஆகிய பாடல்களோடு இடம்பெறுகின்றது இத்தொகுப்பு.

திரையிசையோடு தாகூரின் காதல் கவிதைகள்

வங்கம் தந்த கவி ரவீந்திர நாத் தாகூரின் காதல் கவிதைகளை வானொலிக்கேற்ற விதத்தில் பயன்படுத்தி தமிழ்த் திரையிசைப்பாடல்களோடு இணைத்துச் நான் செய்த நிகழ்ச்சியை இங்கு பகிர்கின்றேன்.

இத்தொகுப்பில் இடம்பெறும் பாடல்கள்:

1. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

2. மாலையில் யாரோ மனதோடு பேச (ஷத்ரியன்)

3. இதயமதைக் கோயில் என்றேன் ( உயிருள்ளவரை உஷா)

4. ராசாவே உன்னை நான் எண்ணித் தான் ( தனிக்காட்டு ராஜா)

5. காவியம் பாடவா தென்றலே ( இதயத்தைத் திருடாதே)

6. பாடவா உன் பாடலை ( நான் பாடும் பாடல்)

7. நீலவான ஓடையில் (வாழ்வே மாயம்)

8. என் கல்யாண வைபோகம் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

9. உறவெனும் புதிய வானில் ( நெஞ்சத்தைக் கிள்ளாதே)

தாகூரின் கவிதைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்ட சி.எஸ்.தேவ்நாத் இற்கும் வெளியிட்ட நர்மதா பதிப்பகத்துக்கும் என் நன்றிகள்.

இத்தொகுப்பைக் கேட்க

தரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும்

நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு நினைவில் – ஒலிச்சித்திரம்


ஊடகவியலாளர் டி.அருள் எழிலன் அவர்கள், சிலவாரங்கள் முன் ஆனந்த விகடன் சஞ்சிகையில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு நினைவாக சிறப்புத் தொகுப்பை அளித்திருந்தார். ஆண்டு முடிவதற்குள் எம்.ஆர்.ராதா குறித்த வானொலிப்படைப்பை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வழங்க வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு அந்த ஆக்கம் பேருதவியாக அமைந்தது. அருள் எழிலன் அனுமதியுடன் அந்தப் பிரதியினை வானொலிக்குப் பொருத்தமான அம்சங்களுடன் இணைத்து “நடிகவேள் எம்.ஆர்.ராதா நினைவில்” என்ற ஒலிச்சித்திரமாக ஆக்கியிருக்கின்றேன். 45 நிமிடம் வரை ஓடும் படைப்பு இது.

இப்படையலில் “ரத்தக்கண்ணீர்” திரையில் வந்த புகழ்பெற்ற வசனங்களுடன், புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை, பொன்னார் மேனியனே, குற்றம் புரிந்தவன், மற்றும் நீயே உனக்கு என்றும் நிகரானவன் போன்ற எம்.ஆர்.ராதா தோன்றி நடித்த பாடல்களும் இடம்பெறுகின்றன.

பிரதியினை அளித்த அருள் எழிலனுக்கு மிக்க நன்றிகள்.

பதிவில் இடம்பெறும் படம் உதவி: மலேசிய ஆஸ்ரோ வானவில் இணையம்

To Download (Right-click, Save Target As/Save Link As)

http://www.radio.kanapraba.com/MRRadha.mp3