சங்கீத சாகரம் கே.ஜே.ஜேசுதாஸ் பேசுகிறார்

சிட்னியில் இசை நிகழ்ச்சி படைக்க வருகை தரும் இசையுலக ஜாம்பவான், பாடகர் டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை நமது ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தானம் (ATBC) வானொலி சார்பில் பேட்டி காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்

Download பண்ணிக் கேட்க

என்னுடைய வானொலி வாழ்வில் இன்னொரு மறக்கமுடியாத தருணம் அது. பேட்டி முடியும் போது “பிரபாங்கிற பேரைக் கேட்கும் போது சந்தோஷமா இருக்கு ஏன்னா என் மனைவி பேரும் பிரபா ஆச்சே” என்றார் சிரித்துக் கொண்டே.

வானொலிப் பேட்டிக்காக நேற்று நான் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை அழைக்க நினைத்த போது கொஞ்சம் தயக்கத்தோடு தான் தொலைபேசியை அழைத்தேன். ஆனால் “ச்சொல்லுங்கோ ப்ரபா எப்பிடி இருக்கீங்க? பேட்டி அஞ்சு மணிக்குத் தானே நான் தயாரா உட்கார்ந்திருப்பேன்” என்ற போது என் மனதில் இன்னொரு படி உயர்ந்து நின்றார். நிறைகுடம் ஆச்சே.
சமீபகாலமாக இளம் பாடகர்கள் ஆஸி மண்ணுக்க் வரும்போது அவர்கள் செய்யும் இசை நிகழ்ச்சிகளுக்காக சிறப்புப் பேட்டிகளைச் செய்யும் போது சிலர் கொடுத்த அலும்பில் அசதியாகியிருந்த என் மனதுக்கு ஒத்தடமாக இருந்தது கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுடனான உரையாடல்.

வானொலிப் பேட்டியில் சேர்த்துக் கொண்ட கேள்விகள் சிலவற்றை இங்கே தருகின்றேன். விரைவில் அந்தப் பேட்டியை ஒலி வடிவில் பகிர்கின்றேன்.

இசை உலகில் ஒரு நீண்ட வரலாற்றைச் சுமந்து நமக்கு முன்னால் இருக்கும் உங்களைப் பார்ப்பதே நமக்குப் பெரும் தவம், மீண்டும் ஆஸ்திரேலிய ரசிகர்களை நீங்கள் சந்திக்க வருகின்றீர்கள் என்பது எங்களுக்கெல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஜேசுதாஸ் அவர்களின் பாடல்களைக் கேட்கும் போது மனதில் அமைதி பிறக்கின்றது, சோகப்பாடல்களைக் கேட்கும் பொது எம்மை அறியாமல் அழுதுவிடுகின்றோம் இப்படியெல்லாம் ரசிகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம் இந்த மாதிரி அனுபவங்களை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

நீங்கள் நேசிக்கின்ற சாஸ்திரீய சங்கீதத்தை மகத்துவம் செய்து வந்த படங்களில் மலையாளத்தில் பரதம் உள்ளிட்ட ஏராளம் படங்கள், தமிழில் அபூர்வ ராகங்கள், சிந்து பைரவி தெலுங்கில் மேக சந்தேசம் போன்ற படங்கள் கிட்டிய போது உங்கள் உணர்வு எப்படி இருந்தது?

சினிமாவில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற போதும் சாஸ்திரீய சங்கீதமேடையை நீங்க விட்டுக் கொடுத்ததே இல்லை இசைக்கலைஞராக இந்த இரண்டு தளங்களிலும் இயங்குவதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

ஹரிவராசனம் என்ற பாடலைப் பாடும் போது நீங்க பயபக்தியோடு விரதமிருந்து பாடியதாக அறிகின்றோம். ஐயப்ப பக்தர்கள் என்ற அடையாளம் தாண்டி அந்தப் பாடல் எல்லா இசை ரசிகர்களுக்கும் ஒரு தெய்வீகச் சூழலுக்கு இழுத்துச் செல்லும், அந்தப் பாடல் பாடிய அனுபவம்?

திரையுலகில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த இசைப்பயணத்தின் கெளரவ நிகழ்வில் இசைஞானி இளையராஜா வந்து கலந்து சிறப்புச் சேர்த்தார், திரையிசையில் இளையராஜாவின் பங்களிப்பு குறித்து உங்கள் பார்வை?

சாஸ்திரீய சங்கீதம் தழுவிய பாடல்களைத் தவிர நிறைய மேற்கத்தேய பாடல்களை இளையராஜா கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஆரம்ப காலத்தில் வச்ச பார்வை தீராதடி போன்ற பாடல்களில் ஆரம்பித்தது அந்த மாதிரிப் பாடல்கள் கிடைத்தபோது எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

வடக்கும் நாதன் படத்தில் கங்கே என்ற பாடலை நீங்கள் பாடிய அந்தக் கணத்தை திரையில் கண்ட போது கண்கள் கலங்கியது உங்க ஆத்ம நண்பர் ரவீந்திரனை நினைத்துக் கொண்டேன் அப்போது, இசையமைப்பாளராக அவர் இயங்கியபோது உங்க அனுபவம்?

ரவீந்திரன் மாஸ்டர் குறித்து நிறையப் பேசினார் ஆசை தீர. குறிப்பாக கங்கே பாடலின் உருவாக்கம் பற்றியும்.

இன்று காதலிக்க நேரமில்லை படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கொண்டாடும் நிகழ்வுக்கு திடீர் அழைப்பு வந்ததாக் குறிப்பிட்டு அந்தப் படத்தின் நினைவுகளையும் பகிர்ந்து “என்ன பார்வை உந்தன் பார்வை” போன்ற பாடல்களையும் பாடி நிறைவு செய்துகொண்டார் பெருமதிப்புக்குரிய கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள்.

பாடகர் விஜய் ஜேசுதாஸ் வழங்கிய வானொலிப் பேட்டி

சிட்னியில் இசை நிகழ்ச்சி படைக்க வருகை தரும் பாடகர் விஜய் ஜேசுதாஸ் அவர்களை நமது ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தானம் (ATBC) வானொலி சார்பில் கண்ட ஒலிப்பேட்டியினை இங்கே பகிர்கின்றேன்.

இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்

Download பண்ணிக் கேட்க

பேட்டியில் இடம்பெற்ற சில கேள்விகள்

சினிமாவில் வாரிசுகள் ஜெயிப்பது சவாலான காரியம் ஆனால் உங்களுக்கு என்று தனி இடம் கிடைச்சிருக்கு இதை எப்படிப் பார்க்கிறீங்க?

உங்க அப்பா மிகப்பெரும் பாடகர் என்பதோடு பாடும்போது எந்த சமரசமும் செய்யக்கூடாதுன்னு பேட்டிகளிலேயே சொல்லுமளவுக்கு கண்டிப்பானவர் பாடகரா நீஙக் சினிமாவுக்கு வந்ததை எப்படி ஆரம்பத்தில் எடுத்துக் கொண்டார் இப்போ உங்க வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்?

சமீபத்தில் மெமரிஸ் படத்தில் திரையும் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிட்டியிருக்கிறது அந்தப் பாடல் பாடிய அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்

நீங்க பாட ஆரம்பிச்சு குறுகிய காலத்தில் இசைஞானி இளையராஜாவிடம் பாடியிருக்கீங்க ராஜா சார் உடன் பணியாற்றிய அனுபவத்தை அறிய ஆவல்

சிவாஜி திரைப்படம் வழியாக ரஹ்மான் உங்களுக்கு ஒரு அறிமுகத்தைக் கொடுத்திருந்தார் அதன்பின்னான வாய்ப்புகள் பற்றி சொல்லுங்களேன்?

தாவணி போட்ட தீபாவளின்னு மெலடி பாடல்களையும் பாடுறீங்க, திடீர்னு மாமா மாமான்னு டப்பாங்குத்துப் பாட்டிலும் கலக்குறீங்க உங்களுக்கு எந்த மாதிரிப்பாடல்கள் பாடுவது மன நிறைவைக் கொடுக்குது?

மலையாளத்தில் உங்க அப்பா ஜேசுதாஸ் ஐ ஆண்டவனின் இசைத்தூதுவரா போற்றிப் பாராட்டும் சூழலில் உங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல பல பாடல்கள் கிட்டியிருக்கு குறிப்பாக அங்கே பெரும் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் இசையில் உங்களோடு சிட்னி வரும் ஸ்வேதாவோடு பாடிய கோலக்குழல் கேட்டோ அந்தப் பாடலுக்கு அப்போது விருது எல்லாம் கிடைச்சிருக்கு ஜெயச்சந்திரன் எப்படி வேலை வாங்குவார்?

உங்க அப்பா கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் சாஸ்திரீய சங்கீத மேடைக்கும் சரி சமமா பங்கு வச்சிருக்கிறார் அந்தத் துறையிலும் மேடை ஏறணும்கிற ஆவல் இருக்கா?

“தொட்டால் தொடரும்” படத்தின் இசை பிறந்த கதை

தொட்டால் தொடரும் திரைப்படத்தை அருமை நண்பர் கேபிள் சங்கர் இயக்கி முடித்திருக்கின்றார். 

இன்னொரு நண்பர் கார்க்கி பவா உதவி இயக்குனராகவும், பாடலாசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.. 
நண்பர் கேபிள் சங்கரின் வலைப்பதிவுகளை ஒன்றுவிடாமல் படித்த அனுபவத்திலும், நேரடியாகச் சந்தித்த விதத்திலும் 
மிகவும் சுவாரஸ்யம் மிக்கவர், நேசத்தோடு பழகக்கூடியவர் என்பதை மனதில் பதிய வச்சாச்சு. 
கேபிள் சங்கர் திரைத்துறையோடு இயங்கிக் கொண்டிருந்தாலும், தொட்டால் தொடரும் படமே அவரை முதல் தடவையாக இயக்குனராக எல்லாத்துறைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டிய பாரிய பொறுப்பு. அண்மையில் படத்தின் பாடல் வெளியிடு வரை தயாரிப்பு வேலைகளை நிறைவு செய்து நிற்கும் இவ்வேளை நண்பர்களின் இந்த முயற்சி சிறக்க என் வாழ்த்துகள்.
தொட்டால் தொடரும் திரைப்படத்தின் இசையமைப்பாளர் P.C.ஷிவன் அவர்களை நான் இயங்கும் ஆஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக 20 நிமிடத்தைத் தொடும் பேட்டி ஒன்று கண்டேன்.
தான் இசையமைப்பாளராக வந்த பின்புலம், தொட்டால் தொடரும் படத்தின் பாடல்களின் உருவாக்கம், பின்னணி இசை குறித்த விரிவான சிறப்பானதொரு பகிர்வை P.C.ஷிவன் வழங்கியிருந்தது எனக்கும் மன நிறைவாக அமைந்தது.
தொட்டால் தொடரும் திரைப்படம் வெற்றிபெற என் வாழ்த்துகள்.
 
இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்

Download பண்ணிக் கேட்க

YouTube வழியாக

“காதில் அடைத்துக் கொள்ளப் பஞ்சும், தலைவலி மாத்திரையும் கொடுத்து இசை நிகழ்ச்சி நடத்தினோம்” – அபஸ்வரம் ராம்ஜி

எண்பதுகள் காலப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு “அபஸ்வரம்” ராம்ஜி அவர்கள் குறித்துப் பரவலான அறிமுகம் இருக்கும். திரையிசைப்பாடல்களை அரங்கேற்றும் பிரபல மெல்லிசைக் குழுக்களுள் இவருடைய அபஸ்வரம் குழுவும் வெகுஜன அந்தஸ்தைப் பெற்றிருந்தது. ஈழத்தமிழகத்தில் வாழ்ந்திருந்தாலும், ராம்ஜி குறித்து நானும் அறியக் கூடிய சந்தர்ப்பங்கள் கிட்டியிருந்தாலும், பலவருடங்கள் கழித்து இவரைப் பேட்டி எடுப்பேன் என்றெல்லாம் அப்போது கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

இசைத்துறையில் கடந்த நாற்பது வருடங்களாக இயங்கி வரும் அபஸ்வரம் ராம்ஜி அவர்கள், இப்போது அபஸ்வரம் என்ற இசைக்குழுவை நிறுத்தி வைத்து “இசை மழலை” எனும்  புது வடிவ மேடை இசை நிகழ்ச்சிகளை இயக்கி வருகின்றார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ராம்ஜி அவர்களை வானொலிப் பேட்டி எடுத்திருந்தேன்.
ஏப்ரல் 1, 1976 ஆம் ஆண்டு முட்டாள் தினத்தில்  “அபஸ்வரம் இசைக்குழு ஆரம்பித்த அந்த நாளில் காதில் அடைத்துக் கொள்ளப் பஞ்சும், இடைவேளையின் போது தலைவலி மாத்திரையும் கொடுத்து இசை நிகழ்ச்சி நடத்தினாராம். தனது அபஸ்வரம் இசை நிகழ்ச்சியை ஆரம்பித்ததில் இருந்து இசைஞானி இளையராஜா குறித்தும் குறிப்பாக ராஜாவின் பின்னணி இசைக்காக சிகப்பு ரோஜாக்கள் படம் பார்க்கப் போன கதை உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களை இந்தப் பேட்டி வழியாகப் பகிர்கின்றார். தமிழத் திரையுலகம் கண்ட முன்னோடி இயக்குனர்களில் ஒருவரான கே.சுப்ரமணியம் அவர்களின் மகன் இவர்.
இன்று முன்னணிப்பாடகர்களாக விளங்கி வரும் பல  இளம் பாடகர்களின் அத்திவாரம் “இசை மழலை” எனும் ராம்ஜியின் இசைக்குழு வழியாகப் போடப்பட்டது. இன்று இவரின் பிறந்த தினம் கூட. எனவே ராம்ஜி அவர்களின் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வாக இந்தப் பேட்டியைப் பகிர்கின்றேன்.

Download பண்ணிக் கேட்க

புகைப்படங்கள் உதவி: ஹிந்து நாளேடு

பாடலாசிரியர் மதன் கார்க்கியை வானலையில் நான் சந்தித்த போது


தமிழ்த்திரையிசையில் கண்ணதாசனுக்குப் பின் சகாப்தமாக விளக்கிவரும்  பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, தந்தை வழியில் தனயன் மதன் கார்க்கி அவர்களும் இன்று தமிழ்த்திரையிசையின் இன்றைய தலைமுறைப் பாடலாசிரியராகவிளங்கிவருகின்றார்.  பாடலாசிரியர் மதன் கார்க்கியை கடந்த 25 டிசெம்பர் 2011 ஆம் ஆண்டு நமது  அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வானலையில் சந்தித்திருந்தேன்.
 
நான் பேட்டி கண்ட போது குறுகிய காலத்திலேயே திரையிசையில் ஐம்பது பாடல்களை எழுதியதோடு கோ படத்தின் “என்னமோ ஏதோ” பாடல் மூலமாக மிகவும் பரவலாக அறியப்பட்டதொரு திரைக்கவிஞராக விளங்கியிருந்தார். இன்று சமீபத்தில் வெளிவந்த “புதிய உலகைத் தேடிப்போகிறேன்” பாடல் மூலம் இன்னும் தன்னை மெய்ப்பித்து வருகின்றார்.

ஆஸி நாட்டில் இவர் படித்துக் கொண்டிருக்கும் போதே வைரமுத்து அவர்களின் மகன் இங்கிருக்கின்றார் என்ற சேதியோடு மட்டும் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் தமிழகம் சென்று தனக்கான கச்சிதமான பாடலாசிரியர் பணியோடு , தொழில் நுட்பத்தையும் ஒருங்கே அரவணைத்துத் தமிழோடு உறவாடி வருவதில் மகிழ்வு கொண்டு அவரைப் பேட்டி காணத் தருணம் காத்திருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கும் வாய்த்தது.

2012 ஆம் ஆண்டு நான் சென்னை போகின்றேன், எதிர்பாராத அழைப்பின் வழியாக மதன் கார்க்கியைச் சந்திக்க வேண்டியிருந்தது. நேரில் நானும் நண்பர் கேயாரெஸ் உடன் மதன் கார்க்கியைச் சந்தித்த அந்தக் கணங்கள் மறக்க முடியாதவை. இன்று மார்ச் 10 ஆம் திகதி மதன் கார்க்கியின் பிறந்த தினத்தில் அவரின் இந்தப் பேட்டியைப் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.

இதோ அவரிடம் நான் கண்ட பேட்டியின் முக்கியமான கேள்விகளும்
மிக முக்கியமாக

“இசைஞானி இளையராஜா – கவிப்பேரரசு வைரமுத்து இந்த இரண்டு இமயங்களும் இணைந்து காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்திருக்கின்றார்கள். ஒரு ரசிகராக இவர்களின் பிரிவை எப்படிப்
பார்க்கின்றீர்கள்?” என்ற கேள்விக்கு அவர் கொடுத்த சிறப்பான பதிலையும் கேளுங்கள்.

Download பண்ணிக் கேட்க

மேலும் இந்தப் பேட்டியில் முன் வைத்த கேள்விகளில்,

தமிழ்த்திரையுலகில்  நடிப்பு, தொழில் நுட்பம், இசை என்று வாரிசுகள் தம் திறமையைக் காட்டிவருவது புதிதல்ல, ஆனால் என் அறிவுக்கு எட்டியவரை முதல் கவிஞராக தங்கள் தந்தை வழியில்
பாடலாசிரியராக வந்திருக்கின்றீர்கள் இந்த வாய்ப்பு எப்படி உங்களுக்கு அமைந்து கொண்டது?

2011 உங்களைப் பொறுத்தவரை மறக்க முடியாத ஆண்டு கோ என்ற மாபெரும் வெற்றிப்படத்தின் மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்த “என்னமோ ஏதோ” உங்களுக்கு ரசிகர்களையும் விருதுகளையும்
அள்ளித்தந்தது அதைப் பற்றி?

2011 ஆம் ஆண்டில் இன்னொரு மைல்கல்லையும் நீங்கள் தொட்டிருக்கின்றீர்கள் அதாவது 50 பாடல்களை குறுகிய காலத்தில் எழுதிக் குவித்திருக்கின்றீர்கள், அதற்கு எமது வாழ்த்துக்களைப்
பகிர்வதோடு இந்த வெற்றிப்பயணத்தில் நீங்கள் கூடப்பயணித்த இசையமைப்பாளர்களையும் அவர்களின் வேலை வாங்கும் திறனையும் சொன்னால் சிறப்பாக இருக்கும்.

பாடல்களில் விஞ்ஞானக் கருத்துக்களைத் தம் உவமையில் கொண்டுவந்து சிறப்புச் சேர்த்தவர் உங்கள் தந்தை வைரமுத்து அவர்கள், உங்கள் அனுபவத்தில் உங்களை நீங்கள் வித்தியாசப்படுத்திக்
காட்ட எந்தெந்த வகையில் முனைந்திருக்கின்றீர்கள்?

பாடல்களுக்கு மெட்டமைக்கும் போது டம்மி வரிகளைப் போட்டு நிரப்புவது வழக்கம் இன்றோ அதுவே நிலைத்து முழுப்பாடலும் வரும்போது பாடலின் இலக்கியத் தரம் குறித்த கரிசனை எழுகின்றது
இதை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

மதன் கார்க்கி முகப்புப் படங்கள் நன்றி
 http://kobirajkobi.blogspot.com.au

 http://www.myoor.com/tamil

இயக்குனர் பாலுமகேந்திரா வழங்கிய வானொலிப்பேட்டி

மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் 2005 ஆம் ஆண்டு நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, சக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு கணேசன் மேகநாதனுடன் வழங்கிய செவ்வியை இங்கே பகிர்கின்றேன்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்த்ததில் இருந்து, கலைத்துறையில் அவரின் முக்கியமான படங்களைப் பற்றியும் பேசுகின்றார். குறிப்பாக அழியாத கோலங்களில் இருந்து சிவாஜி கணேசனை இயக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு சந்தியா ராகம் படத்துக்காக ஒப்பந்தம் செய்ய நினைத்ததையும், தனது “வீடு” படத்தை இலங்கையிலேயே படமாக்க நினைத்ததையும் சொல்கின்றார்.

சினிமா மொழி என்று ஒன்றில்லை, ஈழத்தமிழ் வழக்குசினிமாவுக்கு இதுதான் மொழி வழக்கு என்று எதுவுமில்லை ஈழத்தமிழில் கொடுத்தாலும் எடுபடும் ஆனால் ஆத்மார்த்தமாக இருக்கவேண்டும் என்றும் தொடர்கின்றார்.
முழுப்பேட்டியையும் கேட்க

பாகம் 1

00000000000000000000000000000000000000000000

பாகம் 2

A Gun & A Ring ஈழத்துப் புலம்பெயர் சினிமா இவ்வார இறுதியில் சிட்னியில்

ஈழத்துப் படைப்பாளிகளின் பேர் சொல்லும் படைப்பாக வெளிவந்து உலக அரங்கில்
ஷங்காய் திரைப்பட விழா உள்ளிட்ட பல உலகப்பட விழாக்களில் போட்டித்
திரையிடலிலும் அங்கீகரிக்கப்பட்ட பெருமையோடு பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது A
Gun & A Ring திரைப்படம்.

போர் தின்ற ஈழத்தின் வடுக்களைக்
கதைகளாக இணைத்து, திரைக்கதையிலும் தொழில் நுட்பத்திலும் வெகு சிறப்பான
படைப்பாக வந்திருக்கும் இப்படைப்பு ஐரோப்பிய நாடுகளை முந்திக் கொண்டு
சிட்னி வாழ் தமிழர்களை நாடி விசேட காட்சிகளாக இவ்வார இறுதியில் Reading
Cinema Auburn இல் சனிக்கிழமை மாலை 6 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 4
மணிக்கும் சிறப்புச் சலுகை விலை 15 டாலருக்கு காண்பிக்கப்படவிருக்கிறது.
இவ் அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நம்மவரின் படைப்பை நீங்கள்
அங்கீகரிக்க வேண்டுகிறேன்.

A Gun & A Ring திரைப்படம்
குறித்து நான் பகிர்ந்திருந்த இடுகை
http://www.madathuvaasal.com/2013/11/a-gun-and-ring_17.html

A Gun & A Ring படத்தின் இயக்குனர் திரு லெனின் எம்.சிவம் அவர்களுடனான சிறப்பு வானொலிப்பேட்டி ஒன்றை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக எடுத்திருந்தேன். இதில் தன்னுடைய திரை அனுபவங்களைப் பகிர்கின்றார், ஒலி வடிவில் கேட்க

இந்தப் படம் குறித்த உருவாகப் பணிகளில் இருந்து சர்வதேச அங்கீகரங்கள்
வரையான அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டிருந்தார் நமது அவுஸ்திரேலியத்
தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக படத்தில் முக்கிய பாத்திரமேற்று
நடித்த திரு. கந்தசாமி கங்காதரன் அவர்கள். அதைக் கேட்க
http://youtu.be/pfD08BTLITs

இத் திரையிடலுக்கு சிட்னி வாழ் உறவுகளை அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.


வாத்திய விற்பன்னர் அனில் ஶ்ரீநிவாசன் அவர்களுடன் ஒரு வானொலிச் சந்திப்பு

அனில் ஶ்ரீநிவாசன் அவர்கள் இசையுலகில் நன்கு அறியப்பட்ட கலைஞர், இளவயது என்றாலும் அவரின் வயதை நிரப்பும் இசை அனுபவம் நிரம்பப் பெற்றவர்.  மேற்கத்தேய பியானோ வாசிப்பில் மூன்று வயதில் பயில ஆரம்பித்த இவர் தொல்லிசைக் கலைஞர்களது மேடை இசை நிகழ்ச்சிகளில் மட்டுமன்றி திரை சார்ந்த வெளிப்பாடுகளிலும் தன்னை நிலை நிறுத்தியவர் என்பதற்கு உதாரணமாக, இசைஞானி இளையராஜாவின் How to name it என்ற மேடை நிகழ்வின் நிகழ்ச்சித் தொகுப்பாளாராகவும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியின் மூல வாத்தியக்காரராகவும் இயங்கிய அவரது சமீபத்தில் அவரது பங்களிப்புகளில் முக்கியமாகச் சொல்லி வைக்கவேண்டியவை. மேடை வாசிப்புகள் தவிர, தன்னுடைய இசைப்பகிர்வுகளை  சிக்கில் குருசரண், மேண்டலின் யூ.ஶ்ரீ நிவாஸ், மேண்டலின் யூ.ராஜேஷ் உள்ளிட்ட ஆளுமைகளோடு  இசைவட்டுகள் வழியாக வெளிக்கொணர்ந்தவர்.

ஒரு இசைக்கலைஞர் என்ற வட்டத்தை மீறி, அடுத்த தலைமுறையினருக்குத் தான் கற்ற சங்கீதம் முறையாகச் சென்று சேரவேண்டும் என்ற முனைப்போடு இப்போது பல இசைப்பயிற்சிப் பட்டறைகளை முன்னெடுத்து வருகின்றார். இவரோடு கைகோர்த்து இந்தப் பணிக்காகத் தன் ஆதரவை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

அனில் ஶ்ரீநிவாசன் அவர்களின் தொடர்பும், அவரைப் பேட்டி எடுக்கவேண்டும் என்ற முனைப்பும் எனக்கு ஏற்பட மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, அவரும் நம்மைப் போலவே இசைஞானி இளையராஜாவின் இசை குறித்துத் தீரா வேட்கை கொண்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் ராஜா வழங்கிய இசையின் தாற்பர்யத்தைச் சொல்லி வருபவர், தன் பியானோவிலும் செய்து காட்டியவர். அந்த வகையில் மெல்பனுக்கு கடந்த அக்டோபர் மாதம் ஒரு கலை நிகழ்வுக்காக வருகை தந்த இவரை நண்பர் காமேஷ் அவர்களின் தொடர்பின் வழி ஒரு வானொலிப் பேட்டியை எடுக்க முடிந்தது. பேட்டி எடுக்கப்போகிறோம் என்பதையே ஒரு இருபது நிமிட அவகாசத்தில் அவருக்குத் தெரியப்படுத்தி எந்த வித முன்னேற்பாடுமின்றி அவரைப் பேச அழைத்தபோது மடை திறந்தது போலத் தன் இசையுலக அனுபவங்களில் இருந்து இசைஞானி இளையராஜாவின் இசையின் மகத்துவம் எவ்வளவு தூரம் அடுத்த தலைமுறையைச் சென்றடையவேண்டும் போன்ற மனவெளிப்பாடுகளையும் தன் இருபது நிமிடங்கள் கடந்த பேட்டியில் சொல்கிறார். கேட்டு ரசியுங்கள்.

Download பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்

இவர் வழங்கியிருந்த  Rythms Roses & Raja என்ற இசைப் பகிர்வின் சில துளிகள்

 அனில் ஶ்ரீநிவாசன் அவர்களின் பிரத்தியோகத் தளம்

http://anilsrinivasan.com/

 அனில் ஶ்ரீநிவாசன் அவர்களின் காணொளிப்பக்கம்


http://www.youtube.com/user/TheMadrasPianist

“சாகித்ய அகாடமி’ விருது பெற்ற‌ எழுத்தாளர் டி.செல்வராஜ் பேசுகிறார்

முற்போக்கு எழுத்தாளர் டி.செல்வராஜ் அவர்களின் “தோல்” என்ற நாவலுக்கு இந்திய “சாகித்ய அகாடமி’ விருது இந்த ஆண்டு கிட்டியிருக்கிறது. இந்த நிலையில் அவரை நான் பணிபுரியும் தமிழ் முழக்கம் வானொலி சார்பில் எடுத்திருந்த ஒலிவடிவத்தை இங்கு பகிர்கின்றேன்.

“ஏழுஸ்வரங்களுக்குள் இத்தனை பாடல் சிட்னியிலே”

இசை உலகில் நாற்பது ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கும் வாணி ஜெயராம் என்றதொரு பெரும் பாடகியை அவுஸ்திரேலிய மண்ணில் முதன் முதலில் கொண்டு வந்து அவருக்கான ஒரு சிறப்பானதொரு களத்தைக் கொடுப்பது என்பது வெறுமனே “வெறுங்கையால் முழம் போட முடியாது”. இப்படியானதொரு இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்றதொரு கூட்டணியும் அதை அரவணித்துக் கொண்டு நடத்தக்கூடிய சிறப்பானதொரு ஒருங்கமைப்பாளர்களும் அமைய வேண்டும். இவையெல்லாம் சரியாக இயங்கினால் மற்றைய எல்லாவற்றையும் ரசிகர்கள் கவனித்துக்கொள்வார்கள். அதுதான் நேற்று சிட்னியில் நிகழ்ந்த இன்னிசை இரவு மூலம் வெளிப்பட்டது.

சிட்னியில் இயங்கும் Symphony Entertainers என்ற அமைப்பு முன்னர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களை அழைத்து வந்து ஒபரா ஹவுஸில் அவருக்கான உச்சபட்ச கெளரவத்தையும் நேர்த்தியானதொரு இசை நிகழ்ச்சியையும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தியிருந்ததை இங்கே சொல்லியிருக்கின்றேன். அந்த நிகழ்வு கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுக்கு எப்படியொரு மணிமகுடமாக அமைந்ததோ அதேஅளவு கெளரவத்தை இசையுலகில் இத்தனை வருடங்களை ஊதித்தள்ளிய வாணி ஜெயராமுக்கும் நேற்றைய நிகழ்வு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் இன்றைய தவிர்க்கமுடியாத பாடகர்களில் ஹரிச்சரண், சின்மயி, விஜய் ஜேசுதாஸ் கூட்டணியோடு வாணி ஜெயராமும் வருகின்றார் என்றபோது ஓடும் புளியம்பழமும் போட எட்ட நிற்குமே இந்தக் கூட்டணி என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த நினைப்பைப் பொய்க்க வைத்தது இந்த நிகழ்ச்சியை அமைக்கவேண்டும் என்று தயாரிப்புப் பணியில் முதன்மையாகச் செயற்பட்ட விஜய் ஜேசுதாஸின் சிறப்பான கூட்டணி.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சி என்றாலே கஷ்டப்பட்டுத் தான் காருக்குள் ஏறிப்போவேன். ஆனால் இது இஷ்டப்பட்ட நிகழ்ச்சி எனவே மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டே இசை நிகழ்வு நடந்த ஹில்ஸ் செண்டருக்குச் சென்றேன். நிகழ்ச்சி சம்பிரதாயப்படி 20 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தது. “கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்” என்ற ரெட்டைவால் குருவி படப்பாடலை கீபோர்ட்டும், சாக்ஸபோன், கிட்டார் சகிதம் சென்னை, கேரளா இசைக்குழுக் கூட்டணி இசைக்க ஆரம்பித்ததும் அந்த மூலப்பாடலில் மோகன் மனதில் நுழைந்த ராதிகா போல மனசு அப்படியே இசைக்கூட்டுக்குள் தாவித் தன்னைத் தயார்படுத்தியது. விஜயாள் என்ற குட்டிப்பிள்ளை வந்திருந்த பாடகர்களை தன் அளவில் குட்டியாக அழகு தமிழில் அறிமுகப்படுத்திவிட்டுப் போக சின்மயி அரங்கத்தில் நுழைந்தார். “ஈழத்தமிழர்களோட இசையுணர்வை நான் எப்பவுமே மெச்சுவேன்” என்ற தோரணையில் அவர் ஆரம்பிக்க “ஆஹா வழக்கமான பஞ்ச் டயலாக்கா” என்று நான் நினைக்க, “நான் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவள், எங்களுக்கும் இலங்கைக்கும் நிலத்தால் நெருக்கம் அதிகம், இலங்கையில் எங்க தமிழர்கள் கொல்லப்பட்டதையும், கஷ்டப்பட்டதையும் அறிந்து நாங்க வேதனைப்பட்டோம், பட்டுக்கிட்டிருக்கோம், என்னோட முதற்பாடலே இலங்கைத் தமிழர்களோட கதைக்கருவோடு வந்த “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தின் பாடல் என்று சொல்லியவாறே ஒரு நிமிட மெளன அஞ்சலியைப் பகிர்ந்தவாறே சின்மயி பாடியது நெகிழ வைத்தது. சின்மயி சிட்னிக்கு வருவது இது இரண்டாவது முறை, கடந்த நிகழ்ச்சியில் அவர் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற தன்னுடைய முதற்பாடலைப் பாடாத ஆதங்கத்தில் இருந்தேன். அதை ஈடுகட்டவோ என்னமோ அவரை இரண்டாவது தடவை சிட்னி முருகன் இறக்கியிருக்கின்றான். வைரமுத்து நேசித்து இழைத்த வரிகளை சின்மயி வெறும் குரலைக் கொடுத்தா பாடினார் உணர்வைக் குழைத்தும் அல்லவோ.

இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!

எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!

நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!

இந்த வரிகளைப் பாடும் போது சின்மயி கண்டிப்பாக உள்ளுக்குள் பொருளுணர்ந்து அழுதிருப்பார், பார்த்துக்கொண்டிருந்த நம்மைப் போல.“என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்” என்று ஒரு குரல், அரங்கத்தின் இண்டு இடுக்கெங்கும் வந்திருந்த கூட்டம் அவரைத் தேட அரங்கத்தின் பின் வாயிலில் இருந்து “தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு” என்று பாடிக்கொண்டே வந்தார் விஜய் ஜேசுதாஸ். ஒபரா ஹவுசில் நடந்த இசை நிகழ்ச்சிக்குத் தந்தையோடு வந்து கொஞ்சம் அடக்கமாகவே இருந்த பையன் இந்த முறை தன்னோடு இரண்டு இளசுகளையும் கூட்டி வந்ததால் குஷி மூடில் இருந்ததை நிகழ்ச்சி தொடங்கி முடியும் வரை காண முடிந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளமைக்குரலின் எச்சம் எஸ்.பி.பி.சரணிடம் இருந்தாலும் அது மட்டுமே போதும் என்று அவர் இருந்து விட்டார். இதுக்கு இது போதும் என்றோ என்னமோ திரையிசையும் அவருக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பையே கொடுத்திருந்தது. ஆனால் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற மேதையின் மகன் என்பதை விட, கடுமையான விமர்சகரின் மகனாகப் பிறந்து விட்டுக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடமுடியாது என்பதை விஜய் ஜேசுதாஸ் உணர்ந்திருப்பார் என்பதை அவருக்கான பாடல்கள் மட்டுமல்ல, தந்தையின் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவர் பாடிச் சிறப்பிப்பதிலும் உணரலாம். விஜய் ஜேசுதாஸுக்கு, சென்னை 28 இல் வந்த “உன் பார்வை மேலே பட்டால்” பாடலுடன் தனக்குக் கிடைத்த பாடல்கள் சிலவற்றைப் படித்தாலும் பெரும்பொறுப்புத் தன் தந்தை வராத வெற்றிடத்தை நிரப்புவது. அதை அவர் சிறப்பாகவே செய்தார்.“ஹாய் சிட்னி” என்று ஆர்ப்பாட்டமாகக் களமிறங்கிய ஹரிச்சரண், சிட்னி என்றால் யுத்துக்கள் கொட்டிக் கிடக்கும் சீமை என்றோ என்னமோ முதலில் இளசுகளைக் குறிவைத்துத் தான் சிக்ஸர் அடித்தார், பின்னர் போகப் போக நிலமையை உணர்ந்திருப்பார். சிட்னிக்கு முதன்முதலில் வரும் பாடகர்கள் போடும் தப்புக்கணக்கு இதுதான், வெளிநாடு என்றால் ராப், பாப், பப்பரபப்ப வகையறாக ரசிகர்கள் தான் அதிகம் என்று (அல்லது எனக்குத்தான் வயசு போட்டுதோ ;-))

ஹரிச்சரணின் ஸ்பெஷாலிட்டி, கொடுத்த பாட்டை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவிக்காமல், அந்தப் பாடலின் ஆரம்பத்தில் மெல்ல மெல்லத் தானே ஆலாபனைகளை இட்டுக்கட்டிப் பின்னர் மூலப்பாடலுக்குத் தாவி அங்கேயும் ஜாலம் செய்து பின்னர் செஞ்சரி அடித்து விட்டுக் களம் திரும்பும் ஆட்டக்காரன் போல நிதானமாகப் பாடலை இறக்கி முடிக்கும் வல்லமை கைவரப்பெற்றிருக்கின்றார்.

“கலைவாணியே உனைத்தானே அழைத்தேன்” என்று விஜய் ஜேசுதாஸ் பாட, அரங்கத்துக்கு வந்த வாணி ஜெயராம் கூப்பிய கரங்களுடன். வாணி ஜெயராமோடு ஜோடிகட்டிப் பாடியவர்களில் கே.ஜே.ஜேசுதாஸ் தான் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர் என்பது என் கருத்துக்கணிப்பு. இன்னொரு அல்ல மேலும் இரண்டு ஒற்றுமையைக் கண்டேன். ஒன்று மனிதர்களை நேசியுங்கள் என்று மனித நேயக்கருத்தை அழகாக வெளிப்படுத்திவிட்டே தன் கச்சேரியை ஆரம்பித்தது, இன்னொன்று இப்படியானதொரு இசை நிகழ்ச்சி தன் நீண்ட நெடிய இசைவாழ்வில் பத்தோடு பதினொன்று என்று ஒப்புக்குப் பாட்டு நிகழ்ச்சி வைக்காமல், ஒரு அர்ப்பணிப்போடு பள்ளியில் கற்றதை வீடு வந்து ஆசையாகத் தன் பெற்றோரிடம் அழகாகப் ஒப்புவித்து முறுவலிக்குமே சின்னக்குழந்தை? அந்தப் பெரிய மனசு வாணி ஜெயராமிடம் இருந்ததை நிகழ்ச்சி முடியும் வரைக் காணமுடிந்தது. “இன்னும் வருவேன்” என்று சொல்லிக்கொண்டே ஐந்து மணி நேர இசை நிகழ்வில் இதைத் தொடர்ந்தார்.

“ஒரு காலத்தில் இலங்கை வானொலியைக் கேட்டுச் சங்கீதம் கற்றுக்கொண்டவள், Binaca Geet Maala என்ற ஹிந்தித் திரைப்பாடல் வரிசை நிகழ்ச்சியைப் பாடகியாக வருவதற்கு முன்னர் நேசித்துக் கேட்டவள், 1971 ஆம் ஆண்டு வஸந்த் தேசாயின் இசையில் Guddi என்ற ஹிந்தித் திரைப்படத்துக்காக முதலில் பாடி அந்தப் படத்தின் “Bole Re Papihara” என்ற பாடலை இதே Binaca Geet Maala திரைப்பாடல் நிகழ்ச்சியில் கேட்ட போது வாய்விட்டு அழுதேன்” என்று வாணி ஜெயராம் சொன்னபோது நெகிழ்வோடு உணர முடிந்தது. இந்தப் படத்தில் குல்ஸார் எழுதிய மொத்தம் மூன்று பாடல்கள் ஆனால் “Bole Re Papihara”மற்றும் Hum Ko Manki Shakti Dena ஆகிய பாடல்கள் தான் படத்தில் வந்தது என்று சொன்னதோடு நிகழ்ச்சியில் “Bole Re Papihara”பாடலையும் சேர்த்துக் கொண்டார். தென்னிந்தியாவில் இருந்து ஹிந்தித் திரையுலகம் போய்ப் பாடிய முதற்பாடகி வாணி ஜெயராம் என்று சின்மயி சொன்ன புகழாரத்தை ஏற்கிறோம், ஆனால் எனக்கென்னமோ முன்னரேயே தென்னகக் குயில்கள் சென்ற ஞாபகம்.

வாலி எழுதிய “மல்லிகை என் மன்னன் மயங்கும்” பாடலோடு ஆரம்பித்தவர், “மேகமே மேகமே”, “யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது” “நானே நானா” (வாலி எழுதியது) என்று அவரின் தனித்துவமான தனிப்பாடல்களை எல்லாம் அள்ளிச் சேர்த்த மகிழ்ச்சியை விட எதிர்பாராத பரிசு தானே எப்போதும் உச்சபச்ச சந்தோஷத்தைக் கொடுக்கும்? அப்படி அமைந்தது தான் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் அவர் பாடி “என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது” பாடலைப் பாடிய போது கிட்டியது. இப்படியான மேடைக்கு அந்நியமான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடிய வகையில் கேளடி கண்மணி படத்தில் வந்த “தென்றல் தான் திங்கள் தான்” பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள் முன்னர் ஒபரா ஹவுஸ் நிகழ்ச்சியில் பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

ஒவ்வொரு பாடல்களையும் எழுதியவர், இசையமைப்பாளர் என்று சொல்லி வாணி ஜெயராம் பாடியது இதுவரை நான் மேடை எதிலும் காணாதது. வாணி ஜெயராமே ஒரு நல்ல கவிஞர், அப்படி இருக்கையில் எப்படிப் பாடலாசிரியரைத் தவிர்ப்பார்? வாணி ஜெயராம் தான் கவிதை எழுதுவேன் என்றதோடு பகிர்ந்த கவிதைகளில் “கவிதை” இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் இப்படிக் கவிஞர் பெயர் சொல்லிப்பாடியவர் “என்னுள்ளில் எங்கோ” என்ற பாடலைக் கங்கை அமரன் எழுதினார் என்ற போது எனக்குப் பின் வரிசையில் இருந்தவர் உணர்ச்சிவசப்பட்டுப் பக்கத்தில் இருந்தவரிடம் “கங்கை அமரன் இளையராஜாவின்ர son” என்றபோது கங்கையைத் தேடினேன் குதிக்க.ஒரு பாடகிக்கு ஏராளம் நல்ல நல்ல பாடல்கள் வாய்க்கலாம் ஆனால் பாடகி என்ற கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுக்கும் நல்வாய்ப்பு எத்தனை பாடகிகளுக்கு வரும்? அப்படி அமைந்த வாணி ஜெயராமின் முத்திரை “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்” என்ற பாடலைப் பாடும் போது

“காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் – வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்”

என்ற வரிகளை அவர் அழுத்திப் பாடியபோது இத்தனை நாளும் இவ்வளவு தூரம் அனுபவிக்காமல் கற்பனை சந்தோஷத்தில் இருந்த உணர்வில் கண்ணதாசனை நினைக்க, வாணியோ கண்ணதாசனைப் பற்றிப் பேசினார்.

“நாளைக்கு உங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன் நாளை பத்திரிகையில் வரும் “என்று குழந்தை உள்ளத்தோடு என்னிடம் சொன்ன கண்ணதாசன் பாடகிகள் என்றளவில் என்னைப் பற்றி மட்டுமே தனது “சந்தித்தேன் சிந்தித்தேன்” தொடர் கட்டுரையில் எழுதியிருக்கின்றார். “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்” இதை எங்கே கேட்டாலும் அங்கே நின்று முழுப்பாடலையும் கேட்டுத்தான் அங்கிருந்து விலகுவாராம் கண்ணதாசன். எனக்கு வாசிக்கப் பிடிக்கும் என்பதால் தான் எழுதிய 43 நூல்களைக் கொடுத்திருக்கின்றார் என்று கண்ணதாசனைப் புகழந்தார்.

“அபூர்வ ராகங்கள்” படத்தின் பாடல் ஒலிப்பதிவு நடக்கும் நாட்களில் காலையில் சீக்கிரமாகவே பாடற்பதிவு ஸ்டூடியோவுக்குப் போய் விட்டோம் என்று நினைத்தால் எங்களுக்கு முன்னார் வெகு சீக்கிரமாவே எம்.எஸ்.விஸ்வநாதன் வந்திருப்பார். அவ்வளவுக்கு பங்சுவாலிட்டி நிறைந்தவர்களோடு பணியாற்றியதெல்லாம் மறக்கமுடியாத காலங்கள், என்னோட முதல் இசையமைப்பாளர் வஸந்த் தேசாய் முதற்கொண்டு பணியாற்றிய இசையமைப்பாளர்கள் வெறும் இசையை மட்டுமே எனக்குப் போதிக்கல” என்று அந்தப் பொற்காலத்தை நினைவுபடுத்தினார் வாணி ஜெயராம்.

“அந்தமானைப் பாருங்கள் அழகு” என்று விஜய் ஜேசுதாஸோடு வாணி ஜெயராம், கொடுத்த ஜேசுதாஸ் – வாணி ஜெயராம் பாடல்கள் எல்லாமே முத்துக்கள். குறிப்பாக “சிவாஜி கணேசன் நினைவு நிகழ்வுக்காக வை.ஜி.மகேந்திரன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதன்முதலில் பாடிவிட்டு இப்போது படிக்கிறேன்” என்றவாறே விஜய் ஜேசுதாஸ் வாணியோடு பாடிய “கங்கை யமுனை இங்குதான் சங்கமம்” என்ற இமயம் படப்பாடல் சொர்க்கம். ஒருப்பக்கம் ஜேசுதாஸ் பாடல்களை தனயன் பாட, இன்னொரு பக்கம் “மழைக்கால மேகம் ஒன்று” (வாழ்வே மாயம்),” ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்” (நீயா) போன்ற பாடல்களை ஹரிச்சரணோடு பாடியதும் இணையாக ரசிக்க வைத்தது.

“உனக்கு கல்யாணம் ஆச்சா”என்று வாணி கேட்க

“இன்னும் இல்லை” என்று ஹரிச்சரண் சொல்ல

“இளமை ஊஞ்சலாடுகிறது” என்று சொல்லி நிறுத்தி விட்டு “அடுத்துப் பாடப்போற படம் பேர் சொன்னேன்” என்று குறும்பாகச் சொல்லி

“ஒரே நாள் உனை நான்” என்ற பாடலை வாணி ஜெயராம், ஹரிச்சரணோடு பாடியபோது அந்தச்

“சங்கமங்களில் இதம் இதம்” ஆக மனது இருந்தது.

“கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்” என்ற பாடலுக்கு ஹரிச்சரண் ஜதி சேர்க்க, வாணியின் வயதை மறைத்தது குரல்.

“மேகமே மேகமே பாடல் சிவாஜி கணேசன் சாருக்குப் பிடிச்ச பாட்டு, அந்தப் பாட்டு வந்த நாட்களில் இரவில் இந்தப் பாட்டைக் கண்டிப்பாகக் கேட்டுவிட்டுத் தான் தூங்குவார்” என்றார் வாணி.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, சங்கர்-கணேஷ், கங்கை அமரன் என்று தேடித் தேடி ஏறக்குறையத் தன்னுடைய எல்லாப்பாடல்களையும் பாடி அழகு சேர்த்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்காகப் பாடிய “சுகம் சுகம்” (வண்டிச்சோலை சின்ராசு) பாடலையும் இணைத்திருக்கலாமோ?

விஜய் ஜேசுதாஸ், சின்மயி, ஹரிச்சரண் கூட்டணி சேர்ந்தால் அடிப்பொளி தான், கலகலப்பாகப் பேசும் கலையும் சபையோரோடு அந்நியப்படாத நிகழ்ச்சி வர்ணனையும் சின்மயி இன் சொத்து. ஹரிச்சரணுக்கு வரமாக அமைந்த யுவனின் பாடல்கள் சமீபத்திய “ராசாத்தி போல” பாடல்களில் இளசுகளோடு பழசுகளும் இணைந்து தாளம் தட்டி ரசித்தது.

“ஏ ஹே ஓ ஹோ லாலலா” என்று விஜய் ஜேசுதாஸ் பாட திடீரென்று சைக்கிளில் மேடையில் ஓடி வந்து “ஏ அது நான் பாடப்போகும் பாட்டு என்னோட பேஃவரிட்” என்று ஹரிச்சரண் விடாப்பிடியாக நிற்க விஜய் ஒதுங்க “பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்” பாடல் ஹரிச்சரணின் புது ப்ளேவரில். ஆனால் இந்தப் பாட்டை மட்டும் விஜய் ஜேசுதாசுக்கு இட ஒதுக்கீடு செய்திருந்தால் “பழமுதிர்ச்சோலை எங்களுக்கும் சேர்த்துத் தான்” என்று நானும் பாடியிருப்பேன் மனசுக்குள்.“லேசாப்பறக்குது” என்ற வெண்ணிலா கபடிக்குழு பாடலின் ஹிட் ஐத் தொடர்ந்து கார்த்திக், சின்மயி காம்பினேஷன் இருக்கணும் என்று குள்ளநரிக்கூட்டம் படத்திலும்”விழிகளிலே விழிகளிலே” பாடலை கடம் புகழ்விக்கு விநாயக்ராம் மகன் செல்வகணேஷ் “விழிகளிலே விழிகளிலே” பாட்டுக்கொடுத்ததாகச் சொல்லி ஹரிச்சரணோடு பாடினார். “லேசாப்பறக்குது” பாடல் மேடையில் லேசாகப் பாடமுடியாத சங்கதி, சின்மயி அதை மூலப்பாடலில் மிகவும் சன்னமாகப் பாடிச் சிறப்பித்திருப்பார். அதை ஈராயிரம் பேர் கொண்ட சபையில் பாடுவது சவால், அதைச் சமாளித்துப் பாடினார்.

“சத்யம் தியேட்டரில் வைத்து எனக்கு ஒரு பாட்டு சான்ஸ் கொடுங்களேன்” என்று ஹாரிஸ் ஜெயராஜிடம் கேட்க அவர் கொடுத்த “வாராயோ வாராயோ காதல் கொள்ள” ஆதவன் படப்பாடல் எனக்கு முதற்பாடல் கொடுத்த புகழுக்கு மேலாக விருதுகளைக் கொடுத்துப் புகழ் கொடுத்தது என்றவாறே ஹரிச்சரணோடு பாடினார், மேடையில் வைத்து இன்னொரு விருது கொடுத்திருக்க வேண்டும். அவ்வளவு அழகு, பாட்டைச் சொன்னேன் சார்.

விஜய் ஜேசுதாஸ் உடன் “சஹானா சாரல் தூவுதோ” பாடலைப் பாடுமுன் “நீங்க தலைவா என்று போடும் சத்தம் சென்னை வரை கேட்கணும்” என்று சின்மயி தன் தலைவர் பற்றை வெளிப்படுத்தினார். தொடர்ந்து கிளிமாஞ்சாரோ பாடலும் இதே கூட்டணியில். பெரியம்மா பையன் உதித் நாராயணணை விட விஜய் ஜேசுதாஸை வைத்தே அந்த சஹானா சாரல் தூவுதோ டூயட் பாடலையும் ரஹ்மான் கொடுத்திருக்கலாம் என்ற அளவுக்கு இருந்தது விஜய் ஜேசுதாஸின் குரலினிமை.

ஹரிச்சரண்-விஜய் ஜேசுதாஸ்- சின்மயி மூன்றுபேரும் சேர்ந்து அன்றிருந்து இன்றுவரை பாடல்களைக் கோர்த்துக் கொடுத்த unplugged என்ற தொகுப்பில் ஏதாவது ஒரு தீம் ஐ முன்னிலைப்படுத்தியிருக்கலாம். ” தாய்க்கு நீ மகனில்லை”(உள்ளத்தில் நல்ல உள்ளம்) என்ற தியாகம் ததும்பும் பாடலோடு திடீரென முளைத்த “கனவில் வடித்து வைத்த சிலைகள்” (விழியே

கதையெழுது) பாடலும் “வாய்மொழிந்த வார்த்தை யாவும்” (சுந்தரி கண்ணால் ஒரு சேதி” என்ற கோர்வையும் பொருந்தாமல் தனித்துத் தெரிந்தன. அதிலும் “போறாளே பொன்னுத்தாயி” பாடல் ஸ்வர்ணலதாவுக்கு மட்டுமே எழுதி வைத்த ஆஸ்தி, சின்மயி இந்த unplugged தொகுப்பை அடுத்த மேடைக்குக் கொண்டு செல்லும் போது பாடல்களில் பரிசீலனை ப்ளீஸ்.

வழக்கமாக இந்தியாவில் இருந்து வரும் இசைக்குழு கையோடு நாலைந்து சீடிக்களையும் கொண்டு வரும். கீ போர்ட் வாசிப்பவரின் கையசைப்பு மட்டும் இருக்கும் ஆனால் என்ன அதிசயம் பின்னணியில் இசை இருக்கும். இப்படியான அற்புதங்கள் எதுவுமில்லாமல் தேர்ந்ததொரு இசைக்குழு கூடவே பயணித்தது சிறப்பு. குறிப்பாகப் புல்லாங்குழலையும் சாக்ஸபோனையும், இன்ன பிற குழல் வாத்தியங்களையும் நொடிக்கொரு தடவை மாற்றி மாற்றி வாசித்த அந்த சகலகலா இளைஞனுக்குப் பாராட்டுக்கள். இவ்வளவு இருக்கும் போது நாமும் நல்லா இயங்கணும் என்ற எண்ணத்தில் அரங்கத்தின் ஒலியமைப்பும் பங்கு போட்டுக்கொண்டது.

நிகழ்ச்சி இப்படிக் கலகலப்பாகப் போய்க்கொண்டிருக்கும் போது மேடையில் ஒரு சிறுமி மைக்குடன் தோன்றினாள். சின்மயி பாடும் போது பக்கத்தில் நின்று அவரைப் போலப் பாடுவது போலப் பாவனை, சின்மயி தன் குரலை மேலே உயர்த்தித் தலையை மேலே வானத்தை நோக்குமாற்போலப் பாட அதே மாதிரிப் பாவனையில் அவளும். குரு படத்தில் வந்த “மையா மையா”பாட்டை நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே சின்மயியிடம் கேட்டு வைத்து விட்டாள் அவள். சின்மயி “மையா மையா” பாடலைப் பாட,

மைக்கை ஒருகையில் வைத்துக் கொண்டு மற்றக்கை அசைத்து தன் தந்தையை அழைக்கிறாள். அவரும் வருகிறார். தந்தை விஜய் ஜேசுதாஸ், அந்தக் குட்டி அவரின் மூன்று வயது மகள் அமயா. அந்தச் சுட்டிக் குழந்தைதான் இடைவேளைக்குப் பின்னான நிகழ்ச்சியின் ஹீரோயின். தன் தந்தையோடு “அன்னாரக்கண்ணா வா” பாடலைப்பாடுவதும் அவர் நிறுத்த தானும் நிறுத்துவதும், தந்தை பாட மகள் ஆடுவதுமாக ஒரே கொட்டம் தான். சும்மாவா புலிக்குப் பிறந்த பேத்தி ஆயிற்றே.

சிட்னியில் நடந்த இந்த நிகழ்ச்சி ஐந்து மணி நேரங்களைக் கடந்தது, வாணி ஜெயராம், விஜய் ஜேசுதாஸ், சின்மயி, ஹரிச்சரண் என்று வந்த பாடகர்கள் தம் முழுமைக்குமான வெளிப்பாட்டைக் காட்டிச் சிறப்பித்தது. அந்த வகையில் இது மறக்கவொண்ணா இசை விருந்து அவர்களுக்கும் எங்களுக்கும்.