இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசுகிறார்

நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சமீபத்தில் வானலையில் சந்தித்த மனிதர்களில் இயக்குனர் செல்வமணி மறக்கமுடியாதவர். பேட்டிக்கு அழைத்த கணமே எப்பவும் தயாரா இருக்கேன் என்று பண்பாகச் சொல்லிச் சொன்னது போல் பேட்டி நேரத்துக்குக் காத்திருந்தவர் அது நாள் வரை தன் மனதில் தேக்கியிருந்த நினைவுகளை வடிகாலாக்க இந்தப் பேட்டியைப் பயன்படுத்திக் கொண்டார். அந்த வகையில் என் ஊடக வாழ்வில் இன்னொரு மறக்கமுடியாத மனிதராகப் பதிந்து விட்டார் செல்வமணி. இது நாள் வரை நான் கேட்கவேண்டும் என்று நினைத்த எல்லாக் கேள்விகளையும் அவரிடம் முன்வைக்கக் கூடியதாக இருந்தது.

இந்தப் பேட்டிக்கான தொடர்பினை ஏற்படுத்தித் தந்த நண்பர் ரேகா ராகவனுக்கும் எனது இனிய நன்றியறிதல்கள்.

நேரடியாகக் கேட்க

Download பண்ணிக் கேட்க

கேள்வி- வணக்கம் செல்வமணி அவர்களே! ஆஸ்திரேலிய தமிழ் நேயர்கள் சார்பிலே உங்களை சந்திப்பதிலே மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.

பதில்- ரொம்ப நன்றி பிரபாகர். எனக்கும் வந்து உங்கள் மூலமாக ஆஸ்திரேலிய தமிழர்களோட பேசுறதுக்கு வாய்ப்புகள் கிடைச்சதுக்கு முதல்ல என்னோட நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருக்கும் என்னுடைய வணக்கங்கள்.

கேள்வி- எண்பதுகளிலே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தமிழ் சினிமாவிலே நுழைந்து சாதனைகள் படைத்த ஒரு காலகட்டத்திலே இயக்குநர் ஆபாவாணனைத் தொடர்ந்து உங்களுடைய வரவு பெருமளவிலே கவனிக்கப்பட்டது. ஆனால் அந்த வரவு என்பது இலகுவானதாக உங்களுக்கு அமையவில்லை. பெரும் போராட்டங்கள் சோதனைக்கு பிறகு தான் நீங்கள் ஒரு இயக்குநராக உங்களை நிலைநிறுத்த முடிந்தது என்பதைப் பற்றி அறிந்து கொண்டேன். அந்த ஆரம்பத்தைப் பற்றி சொல்லுங்களேன்?

பதில்- எல்லா ஆரம்பமுமே வந்து கஷ்டமானதாகவே இருக்கும். போராட்டத்திற்கப்புறம் தான் வந்து எந்த வெற்றியையும் அடைய முடியும். சினிமாத் துறையும் வந்து அதே மாதிரித் தான். ஏறக்குறைய வந்து சினிமாவில நமக்கு வந்து அளவற்ற புகழும் பெரும்பாலான பணமும் ஒரு நல்ல தொடர்பும் ஏற்பட்டால் இதில வந்து மற்ற துறையை விட இதில அதிகமான போராட்டம் இருக்கத் தான் செய்யும். ஏன்னா இதனோட வெற்றி வந்து நிறையப் பேரால விரும்பப்படுறதால போராட்டங்கள் எனக்கும் அதிகமாகத் தான் இருந்தது. ஆனால் அப்ப இயக்குநர் ஆபாவாணன் வந்து முதல்ல வந்து ஊமைவிழிகள் என்று ஒரு படத்தை எடுத்து அது வந்து இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக பேசப்பட்டதுக்கு பிறகு தமிழ் சினிமாவில திரைப்படக் கல்லூரி மாணவர்களோட வரவும் அதனோட இருப்பும் வந்து கவனிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில தான் 1988இல் தான் நான் வந்து உதவி இயக்குநராக வெளிவந்தேன். அப்பத் தான் வந்து திரைப்படக் கல்லூரியில என்னோட பட்டப்படிப்பை முடிச்சிட்டு அப்போ இயக்குநர் மணிவண்ணனின் உதவி இயக்குநராக இணைந்து கொண்டேன்.

கேள்வி- எந்த திரைப்டத்தில அவரோட வந்து இணைந்தீர்கள்?

பதில்- பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம் ரெண்டு படம் அப்ப வந்து அவரு இயக்கிட்டு இருந்தாரு. அப்ப அதில வந்து அவரோட உதவி இயக்குநராக சேர்ந்து பணிபுரியத் தொடங்கினேன். அப்ப வந்து உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற படத்தில கூட அவரு இயக்குநராக இருந்தாரு. அந்தப் படத்தில வந்து திரு விஜயகாந்த் வந்து ஹீரோவாக நடிச்சாரு. அப்பத் தான் எனக்கும் விஜயகாந்த் சாருக்கும் ஒரு நல்ல நட்பு ஏற்பட்டிச்சு. அவர் என்னோட நட்புக்காக ஒரு வாய்ப்பளித்தாரு. ஒரு கதையை சொல்லச் சொன்னாரு. அவரே வந்து அப்ப ராவுத்தரும் அவரும் ரெண்டு பேரும் நண்பர்கள். அவங்களால தான் எனக்கு வந்து முதன்முதலில் வாய்ப்பு வந்திச்சு. அந்த வாய்ப்பு பற்றி
இப்ப நான் சொன்னால் ஒரு நாள் போயிடும். அந்த வாய்ப்பை எப்பிடி நான் பெற்றேன் என்டு சொன்னால் ஒரு நாள் போயிடும். அவ்வளவு கடினமான போராட்டத்தில தான் அந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சது.

கேள்வி- அதாவது அந்த புலன் விசாரணை திரைப்படத்தினுடைய கதையை நீங்கள் இப்ராகிம் ராவுத்தர் அவர்களிடம் கொடுக்கும் பொழுது அவருக்கும் அந்த நேரத்திலே விஜயகாந்த்அவர்களுக்கு மிகுந்த வேலைப்பளு இருந்த காரணத்தினால் நீங்கள் அதை ஒரு சித்திரக்கதை மாதிரியாக எழுதிக் கொடுத்ததாகக் கூட அறிந்தேன். அப்படியா?

பதில்- வேலைப்பளு அதிகமாக இருந்தது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் வந்து என் மேல இருந்த நம்பிக்கை வந்து குறைவாக இருந்தது என்பது தான் அதனோட முக்கியமான காரணம். ஏன்னா அப்ப வந்து விஜயகாந்த் சாருட்ட கதை சொல்ல வாறது வந்து ஆயிரக்கணக்கான பேரு. அந்த ஆயிரக்கணக்கான பேர்ல வந்து ஒருத்தரை தேர்ந்தெடுக்கிறது வந்து ரொம்ப கஷ்டமான காரியம். அப்ப எனக்கு வந்து எந்தவிதமான பின்புலமோ இல்லை. என்னைப் பார்க்கும் போது கூட என் மேல ஒரு நம்பிக்கை ஏற்படுற மாதிரி எந்த அமைப்பும் இல்லை. அப்ப வந்து என் மேல ஒரு பெரிய நம்பிக்கை இல்லை.
அப்ப நான் கதை சொல்லி அவங்களை ஒத்துக்க வைக்க முடியும் என்டுற நம்பிக்கை கூட எனக்கு போய்டுச்சு. அதுக்கப்புறம் ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு எல்லாரும் கதை சொல்றாங்கன்னு நாமளும் சொன்னா நல்லாயிருக்காது என்டு அடுத்த கட்டத்தில என்ன சொல்லலாம்னு யோசித்திட்டு தான் வந்து நான் வந்து அந்த சொல்லப்போற கதையை அப்படியே வந்து ஒரு காட்சிகளாக மாற்றி அந்த காட்சியை வந்து படங்களாக மாற்றி அந்தப் படத்தைவந்து வர்ணப்படமாக மாற்றி அதை போட்டோகிராப் பண்ணி ஒரு மாடல் தயார் பண்ணி அவங்களிட்ட கொடுத்தப்புறம் தான் அவங்களுக்கு என் மேல ஒரு நம்பிக்கை வந்தது. ஏன்னா முதலில நம்பிக்கை ஏற்படுறது தான் சினிமாவில வந்து ஒரு கஷ்டமான காரியம். அதைப் பண்ணிட்டமா அடுத்து வந்து நம்மட வேலை சீக்கிரமாக வந்து முடியும்.

கேள்வி- உண்மையை சொல்லப் போனால் இன்றைக்கு வந்து உங்களுக்கு பின்னால் வந்தவர்கள் பலர் வித்தியாசமான சினிமா என்று சொல்லும் பொழுது அதாவது செல்வமணி என்கிற இயக்குநருடைய பாணி என்பது அதாவது நடைமுறை வாழ்க்கையிலே அல்லது பரபரப்பான ஒரு செய்தியினை அப்படியே எடுத்து அதற்குப் பின்னால் ஒரு பெரும் திரைக்கதையை உருவாக்கி அவற்றை சினிமாவாக்குவது என்பது செல்வமணி அவர்கள் தமிழ் சினிமாவுக்கு அமைத்துக் கொடுத்த புதிய பாணி என்று நான் சொல்வேன் ஏனென்றால் புலன்விசாரணை என்ற திரைப்படம் வந்த பொழுது அப்படியே அந்த ஆட்டோ சங்கருடைய கதையை நீங்கள் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டு அதற்கொரு நல்ல திரைக்கதையை அமைத்து அந்தப் படத்தை உருவாக்கியிருந்தீர்கள்.
அதற்குப் பின்னால் எத்தனையோ இளம் இயக்குநர்கள் அல்லது இப்பொழுது இருக்கின்ற
சங்கர் போன்ற இயக்குநர்கள் சமுதாயப் பிரச்சினைகளை வைத்து எடுக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக நீங்கள் எண்பதுகளின் இறுதியிலே வந்திருந்தீர்கள். இப்படியான ஒரு பாணியினை அன்றைய காலகட்டத்திலே குறிப்பாக தமிழ் சினிமா என்பது கிராமியம் சார்ந்த அல்லது நகரத்திலும் ஒரு பழகிப் போன கதையம்சம் என்ற ஓட்டத்தோடு இருந்த ரசிகனுக்கு இப்படியான ஒரு வித்தியாசமான ஒரு பாணியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது?

பதில்- நான் முதன்முதலாக இயக்குநராக வரணும் என்று முடிவெடுத்தப் பிறகு எனக்கு கூட வந்து வெற்றின்னா எல்லாருக்கும் வந்து நிரந்தரமான ஒன்றில்லை. என்னை விட சாதனை படைச்சவங்க ஶ்ரீதர் பாலசந்தர் பாரதிராஜா பாக்கியராஜ் இது மாதிரி ஒவ்வொரு காலகட்டத்திலையும் ஒவ்வொரு இயக்குநர்கள் சாதனை பண்ணிட்டே தான் இருக்காங்க. இதை மாதிரி ஆயிரக்கணக்கான ஏறக்குறைய ஐயாயிரம் இயக்குநர்கள்தமிழ் சினிமாவில இருக்காங்க. ஆனால் வந்து ஒரு ஐம்பது இயக்குநர்கள் தான் தமிழ் சினிமாவில வந்து இன்னைக்கும் வந்து நினைவில நிறுத்தப்படுறாங்க. அப்ப நான் முதல்ல படம் பண்ணனும் என்று நினைச்சவுடனேயே என்னோட முத்திரை வந்து இருக்கணும். படம் பண்றதே வெற்றி பெறுவதில இருக்கிறதை விட என்னோட முத்திரை வந்து இருக்கணும் என்டு நான் முடிவு பண்ணினேன்.
அப்ப எது மாதிரியான படங்களை வந்து நாம இயக்கலாம் என்டு இருக்கிறப்போ தான் பொதுவாக நிறைய விசயங்களை நாம தேர்ந்தெடுத்தோம். அப்ப வந்து நகர்ப்புறம் அது சம்பந்தமான திரைப்படங்களை வந்து அதாவது மத்திய தர வர்க்கத்திற்கான குடும்பத்திற்குன்டான கஷ்டங்கள் அதனுடைய கலாசார பிண்ணனி உறவுமுறை இதெல்லாம் வந்து திரு பாலசந்தர் அவரால சொல்லப்பட்டது. அதற்கப்புறம் யார் படம் பண்ணினாலும் இது பாலசந்தர் படம் மாதிரி இருக்குன்னு சொல்வாங்க. பாலசந்தர் படம் பண்ணினால் அது வேற யாரோ படம்ன்னு சொல்வாங்க. அப்புறம் காதல். காதல் படங்களை ஶ்ரீதர் படம் என்பாங்க. அதைப் போல வந்து பாரதிராஜா வந்து தமிழ் கிராமப்புற இல்லை தமிழ் நாட்டோட மண் வாசனையான படங்களை வந்து தேர்ந்தெடுத்து இல்ல அதற்கான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதை மாதிரியான படங்களை டைரக்ட் பண்ணுவாரு. அப்ப யார் படம் பண்ணினாலும் வந்து அது பாரதிராஜா படம் மாதிரியிருக்கு அப்பிடின்னு சொல்றது மாதிரியான ஒரு நிலையை உருவாக்கினாரு.
அப்ப நான் வந்து என்ன மாதிரியான படங்களை பண்ணலாம் அப்பிடின்னு நான் முடிவு பண்ணினாப்புறம் இல்ல நானே எனக்குள்ளே கேள்விகளை கேட்ட பொழுது அப்ப எது இதுவரைக்கும் தமிழ் சினிமாவில இல்ல இந்திய சினிமாவில இல்லாத ஒரு பாணியைக் கையாளணும். அதை வந்து தெரிவு செய்யணும்னா நிறைய ஏறக்குறைய ஒரு வருடமாக இருந்து யோசித்து வாழ்வியலில சமூகத்தில வந்து நாம கதைகளை உருவாக்கிறதை விட
சுற்றி நடக்கிற விசயங்களை நாம கதைகளாக மாற்றலாம். அது வந்து மக்களால பெரிதாக விரும்பப்படும். அப்பிடின்னு நான் முடிவு பண்ணினாப்புறம் தான் கதைகளை தேர்ந்தெடுத்தேன். நம்மளை சுற்றி நடக்கிற சிக்கல்கள் இல்லா நல்ல விஷயங்கள். கெட்ட விஷயங்கள். நல்ல விஷயங்களில இருந்து நல்லதை சொல்றது. கெட்ட விஷயங்களில இருந்து என்ன மாதிரி கெட்டது நடக்குது அதை எப்பிடி வந்து அதை எதிர்கொள்ளனும் என்ற விஷயத்தை வந்து சொல்றது. இது
மாதிரி தேர்ந்தெடுத்து நான் வந்து current affairs என்று சொல்றது ஒன்னு. அதை நான் வந்து தேர்ந்தெடுத்தேன்.

கேள்வி- உண்மையிலேயே அந்த புலன்விசாரணை என்பதின் அந்த திரைப்படத்தினுடைய வெற்றி வந்து ஒரு பரபரப்பான வெற்றி என்பது உங்களுக்கும் அல்லது எங்கள் மீதான நீங்கள் எடுத்துக் கொண்ட பாதையின் மீதான ஒரு நம்பிக்கையை ஒரு வலுவாக ஏற்படுத்தியிருக்கும் இல்லையா?
ஆமாம்

கேள்வி – அந்தப் படத்திற்கு பின்னர் உங்களுக்கு கிடைத்த ஒரு பெரும் பொறுப்பு அன்றைய காலகட்டத்திலே முன்னணி நட்சத்திரமாக இருக்க கூடிய விஜயகாந்த் அவர்களுடைய நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். அந்தத் திரைப்படத்தை இயக்கக் கூடிய பெரும் வாய்ப்பு. அந்த வாய்ப்பு கிடைத்த அனுபவம். அதைப் பற்றி சொல்லுங்களேன்?

பதில்- தமிழ் சினிமாவில மட்டுமல்ல வாழ்க்கையில வந்தும் முதல் வெற்றி தான் ரொம்ப கஷ்டம். முதல்ல பண்ணனும்கிறது தான் ரொம்ப கஷ்டம். அதுக்குப் பிறகு அந்த வெற்றி நிறைய வாய்ப்புகளை உருவாக்கும். நிறைய பணத்தையும் உருவாக்கும். அதைப் போலவே வந்து அந்த புலன்விசாரணையின் வெற்றி தான் எனக்கு வந்து ரொம்ப கஷ்டமான ஒரு வேலையாக இருந்திச்சு. அதுக்கப்புறம் அந்த ஒரு வெற்றி வந்து உடனே மிகப் பெரிய ரசிகர்களைத் தந்தது. எந்த உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் வந்து அன்னைக்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில இருக்கிற எல்லா நட்சத்திரமும் வந்து என்னோட படம் பண்ணனும் என்று விருப்பப்பட்டாங்க. அதைப் போல வந்து மாபெரும் வெற்றிப் படமாக மட்டும் அல்லாமல் ஒரு புதுசான ஒரு பாதையை அந்த படம் உருவாக்கிச்சு. அப்ப நிறையப் பேர் வந்து நிறைய இயக்குநர்கள் நிறைய நட்சத்திரங்கள் வந்து என்னோட படம் பண்ணணும்னு விருப்பப்பட்டாங்க. ஆனால் நான் வந்து விஜயகாந்த் சாருக்கு தான் முதல் உரிமை கொடுத்தேன். ஏன்னா அவர் தான் வந்து ஒருத்தருக்குமே தெரியாத செல்வமணியை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில இருக்கிற அனைத்து தமிழர்களுக்கும் வந்து கொண்டு போய் சேர்க்கிறதுக்கு ஒரு காரணியாக இருந்தாரு.

அதனால அவர் படத்தை டைரக்ட் பண்றதுன்னு நான் முடிவெடுத்தப் பிறகு அப்ப வந்து என்னோட ரெண்டாவது படமும் பேமஸ்ஸா இருந்தது. அதுக்குப் பிறகு வந்து நூறாவது படமாக பண்ணலாம் அப்பிடின்னு முடிவு அவர் வந்து பண்ணினதுக்கப்புறம் தான் நான் அந்தப் படத்தை செலக்ட் பண்ணி கேப்டன் பிரபாகரனை இயக்குவதற்கு வந்து அந்த நன்றியுணர்ச்சி தான் காரணமாக இருந்திச்சு. அன்றைக்கு வந்து பெரிய படம் பண்ணணும்னா அதுக்கு வந்து கூட்டாக இருந்தால் தான் பண்ணமுடியும் என்ற நிலை .இருந்தது தான் நான் கேப்டன் பிரபாகரனை உருவாவதற்கு டைரக்ட் பண்ணுறதுக்கு ஒரு காரணமாக இருந்திச்சு.

கேள்வி- பொதுவாக இந்த நூறாவது படம் என்பது பல நடிகர்களுக்கு பெரும் வெற்றியை கொடுக்கவில்லை. ஒரு சில நடிகர்களுக்குத் தான் ஒரு தனித்துவமான பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. அந்த வகையிலே விஜயகாந்த்திற்கு கிடைத்த அந்த படம் என்பது ஒரு பெரும் வெற்றிப் படமாகவும் அமைந்தது இல்லையா?

பதில்- ஆமாமாம். யாருக்குமே வந்து நூறாவது படம் வந்து வெற்றிப் படமாக அமைந்ததில்லை. தமிழ் நட்சத்திரத்திற்கு மட்டுமல்ல இந்தியாவில இருக்கிற எந்த ஆர்ட்டிஸ்க்குமே நூறாவது படம் வெற்றியை தந்ததில்லை. ஏன்னா நூறாவது படம் வந்து பெருசா எதிர்பார்க்கப்படறதால பெருசா வந்து அந்த எதிர்பார்ப்பிற்கு யாருமே ஈடுசெய்றேல்ல. குறிப்பாக சொல்லனும்னா எனக்கு தெரிஞ்சு எல்லா படங்களையும்; அப்பிடி சொல்லுற மாதிரி தான் இருந்திச்சு. எனக்கு தெரிஞ்சு எல்லா நட்சத்திரத்தோட யாரோட நூறாவது படமும் வெற்றிப் படமாக அமைஞ்சதில்லை. ஆனால் முதல் நூறாவது வெற்றிப் படமாக அமைந்ததன்னா எங்களோட காம்பினேசன்ல அமைந்த கேப்டன் பிரபாகரனை முழு உறுதியாக என்னால சொல்ல முடியும். அதுக்கு வந்து தமிழ் ரசிகர்களுக்கும் விஜயகாந்த் சாருக்கும் இப்ராகிம் ராவுத்தருக்கும் நன்றியை இந்த நேரத்தில சொல்றதுக்கு கடமைப்பட்டிருக்கேன்.

கேள்வி- உண்மையிலேயே எண்பதுகளிலே ஒரு தங்கப் புதையலாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. அதாவது அவரிடம் இருந்து ஒரு ஐந்து பாடல்களை எடுத்துக் கொண்டாலே அந்தப் பாடல்களைச் சுற்றி ஒரு திரைக்கதை அமைத்து பெரும் வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ் சினிமா உலகிலே அவரோடு இணைந்து நீங்கள் முதல் ரெண்டு படங்களிலே பணியாற்றிய போதும் கூட பாடல்கள் சிறப்பாக வந்தாலும் கூட அந்த முதல் படத்திலே மூன்று பாடல்கள் என்று நினைக்கிறேன். இரண்டாவது படத்திலே மூன்று பாடல்கள் என்று (இரண்டு படத்திலுமே இரண்டு பாடல்கள் தான் என்கிறார்) அதாவது காட்சியாக படமாக்கப்பட்டது இல்லையா?

பதில்- ஆமாம். அவரு கூட படம் பார்க்கிறதுக்கு முன்னாடி வந்து சொன்னாரு. செல்வமணி பாட்டே இல்லாமல் மியூசிக் பண்றதால என்ன லாபம் என்டாரு. வேற ஏதாச்சும் வைச்சு பண்ணலாமே என்று கேட்டார் நான் சொன்னேன், இந்தப் படத்திற்கு வந்து பாட்டு அவசியமில்லை சார், இந்தப் படத்திற்கு பின்னணி இசை தான் அற்புதமாக தேவைப்படுற விஷயம். அந்த இசையை வந்து சார் நீங்க சரியாக கொடுக்க முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதனால வந்து நீங்க இந்த படத்திற்கு இசையமையுங்க என்று ஏறக்குறைய நான் வற்புறுத்தி தான் சம்மதிக்க வைச்சேன்.

கேள்வி- உண்மையை சொல்லப் போனால் இசைஞானி இளையராஜாவினுடைய இன்னுமொரு பரிமாணம் தமிழ் சினிமா மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே பின்ணணி இசை என்பதற்கு தனி இலக்கணம் வகித்தவர் இசைஞானி இளையராஜா. அந்த பின்ணணி இசைக்கான ஒரு களத்தை இந்த இரண்டு படங்களையும் நீங்கள் கொடுத்து அதாவது அந்த படங்கள் வந்த பொழுது அதனுடைய பிரதிபலிப்பு எப்படி இருந்தது?
அதாவது அந்தப் படங்களை முழுமையாக நீங்கள் இயக்கிய பின்னர் அந்த பின்னணி இசையை கோர்த்த பொழுது அவர் தன்னுடைய கருத்தை வெளியிட்டு இருந்தாரா?

பதில்- ஆமாம். படம் பார்த்திட்டு வந்து அவர் சொன்னாரு. பாட்டில்லாம எடுக்கிறீயே ஏன்னா இளையராஜா பாட்டு இருந்திச்சுன்னா அதாவது இளையராஜா பாட்டு ஐந்திருந்திச்சுன்னா படம் ஓடிடும் நிலையில தான் தமிழ் சினிமா இருந்தது. அவர் கூட என்ன இது புதுசா ஒரு பையன் வந்திருக்கான் அவருக்கு கூட நம்பிக்கை இல்லாமல் தான் இருந்திருக்கும். படம் பார்த்திட்டு சொன்னாரு. செல்வமணி வந்து மிகப் பெரிய இயக்குநராக வர்றதுக்கான சாத்தியம் உன்னோட முதல் படத்திலேயே தெரியுது. வாழ்த்துக்கள். பாட்டில்லாட்டி இந்தப் படம் எப்பிடி இருக்கும்னு நினைச்சேன். இந்த ரெண்டு பாட்டில்லாட்டிக் கூட இந்தப் படம் ஓடக் கூடிய சாத்தியத்தை நீங்க ஏற்படுத்தியிருக்கீங்க என்று மனம் திறந்து அவர் பாராட்டினாரு.

கேள்வி- மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. அதன் பின்னர் அதிரடியாக இந்த இரண்டு படங்களிலையும் இருந்து விலகி முழுமையான புதுமுகம் என்று சொல்வதை விட பிரசாந்த் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் கூட ஒரு இளம் நாயகன். ரோஜா மற்றும் நாயகர்கள் அந்தப் படத்திலே ஒரு அறிமுகமாக வந்தவர்கள். இவர்களை வைத்து ஒரு இளமை ததும்புகின்ற ஒரு திரைப்படம் முழுமையான காதல் கதை. அந்தக் காதல் கதையோடு அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள். இவற்றை வைத்து செம்பருத்தி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தீர்கள். இப்படி ஒரு அதாவது பெரும் நட்சத்திரத்தை வைத்து படம் பண்ணக் கூடிய அளவிற்கு உங்களுக்கு ஒரு வலிமையும் மற்றவர்களுக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கையும் வந்த காலகட்டத்திலே இப்படி இளம் நடிகர்களை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற அந்த நோக்கம் எப்படி வந்தது?

பதில்- நான் டைரக்டராக வர்றதுக்கு முன்னாடி வந்து அரவிந்தராஜ்ன்னு என்னோட சீனியர் அவர் வந்து பெரிய ஆர்ட்டிட்ஸை வைச்சு படம் பண்ணி அவர மாதிரி பல இயக்குநர்கள் சீனியர் ஆர்ட்டிட்ஸை வைச்சு படம் பண்ணி அப்புறமாக வந்து ஒரு காலகட்டத்திற்கு பிறகு மறைந்து போயிடுறாங்க அல்லது காணாமல் போயிடுறாங்க. இத நான் ஏன் சொல்றேன்னா
அவங்க வந்து பெரிய நட்சத்திரத்தை வைச்சுத் தான் பண்றாங்க. அப்ப அந்த வெற்றி வந்து ஏன் ஒரு நட்சத்திரத்தை மட்டும் போய் சேர்ந்திடுது ஏன் ஒரு இயக்குநரை போய் சேருவதில்லை. அப்ப வந்து ஒரு தோல்விப் படமோ இல்ல படங்கள் இல்லாத காலகட்டத்திலே அவங்க மறந்திடுறாங்க இல்லை மறக்கடிக்கப்படுறாங்க. அப்பிடிங்கிறது எனக்கு தெரிஞ்ச பிறகு தான் வந்து நான் ரெண்டாவது படம் கேப்டன் பிரபாகரன் பண்ண பிறகு அந்த படமும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைஞ்ச பிறகு ஏறக்குறைய எல்லாருமே என்னோட படம் பண்ணனும் என்றுஆசைப்பட்ட காலகட்டத்திலே
நான் வந்து எந்தப் படமும் இப்ப பண்ணக் கூடாது. அடுத்து நான் வந்து எந்த பிரபல நடிகர்களும் இல்லாம புதுமுகங்களோட படம் பண்ணனும். அப்பிடின்னு வந்து முடிவு பண்ணி நாம ஒரு வெற்றிப் படம் பண்ணும் போது ஐம்பது பர்சண்ட் நமக்கு வந்து சேரும். அதனால வந்து அப்பிடி பண்ண முடிவு பண்ணினேன்.
ஆனால் அதில கூட வந்து ஆபத்து கூட இருக்கு. ஒருவேளை வந்து அந்தப் படம் வெற்றிப் படமாக அமையலைன்னா அன்றைய காலகட்டத்திலே மறக்கடிக்கப்பட்டுக் கூட இருக்கு. இருந்தாலும் பரவாயில்லை. நம்மளால வெற்றி பெற முடியும்னு என்று சொல்லி அன்னைக்கு வந்து பிரசாந்த் புதிய நட்சத்திரமாக இருந்தாலும் கூட நான் அவரை வைச்சு படம் பண்ணும் போது அவர் படம் ஆரம்பிக்கக் கூட இல்லை. வைகாசி பொறந்தாச்சு படத்தில நடிச்சிட்டு இருக்காரு அது ரிலீஸாகக் கூட இல்ல. அவர் வந்து எனக்கொரு greeting அனுப்பி வைச்சாரு. அதில வந்து அழகான ஒரு குழந்தைத்தனமான முகம்
அவரிட்ட இருந்தது. அதனால வந்து அவரை choose பண்ணினன். அப்புறம் வந்து ரோஜாக்கு முதல்ல ஏறக்குறைய ஒரு இருபது இருபத்தைந்து ஹீரோயின்ஸை வைத்து shoot பண்ணினேன். ஷீட் பண்ணி அவங்க யாருமே சரியில்லாத போது தான் ஒரு பத்துப் பதினைஞ்சு நாள் ஷீட் பண்ணினாப்புறம் தான் ரோஜாவ வந்து செலக்ட் பண்ணினேன். அப்போ தேடி தான் அந்த படத்தை வந்து எல்லாருமே புதுசா வரணும்னு ஆரம்பிச்சு அந்தப் படம் வந்து ஒரு வெற்றிப் படமாக அமைஞ்சதால தான் இன்னைக்கு வந்து ஏறக்குறைய பதினைஞ்சு வருசமானாக் கூட தமிழ் சினிமாவில வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாக் கூட இன்னைக்கும் தமிழ் சினிமாவில் எனக்கு பேர் இருக்கிறதுக்கு காரணம் வந்து அன்னைக்கு எடுத்த முடிவு தான் ஒரு மிகப் பெரிய காரணம்.

கேள்வி- அந்தப் படத்திலே இசைஞானி இளையராஜா அவர்களுடைய பாடல்கள் தனித்துவமாக கவனிக்கப்பட்டதற்கு ஏதாவது ஒரு பின்னணி இருந்ததா?

பதில்- நிச்சயமாக. நிச்சயமாக இருந்தது. அவர் ஏற்கனவே வந்து செல்வமணி உனக்கு வந்து என்னோட வால்யூ தெரியலை. நீ வந்து பாட்டே இல்லாம படம் எடுத்தாய். இப்ப பாரு இந்தப் படத்திலே ஒன்பது பாடல் வைச்சிருக்கேன். இப்ப பாரு இளையராஜா இளையராஜா என்டு சொல்ல வைக்கிறேன்னு சொல்ல வைக்கிறேன்னு சொல்லி அவர் சொல்லிலே அதை ஒரு பாட்டாக வைச்சு சொன்னாரு. ஆனால் இளையராஜா வந்து உலகத்திலேயே மிகப் பெரிய இசையமைப்பாளர்னு ஏற்றுக்கிட்டேன்னா இந்த ஒன்பது பாடல்களையும் காலை 6.45க்கு போட்டு start பண்ணினோம்;. எட்டு மணிக்கு வேற படத்தோட டியூன்ஸ்ல அவரு இருந்தாரு. அங்க அவங்களுக்கு ஒன்பது மணிக்கு பணி ஆரம்பிக்கும். அதுக்கு முன்னாடி எனக்கு டியூன்ஸ் கரெக்ட் பண்ணிட்டு போகணும். இந்த ஒன்பது பாட்டும் குறைஞ்சபட்சம் ஒரு முக்கால் மணி நேரம் ஒரு மணிக்குள்ள கொடுத்திட்டு அவரு டிபன் சாப்பிட்டு வேலைக்கு போனாரு. இந்த உலகத்தை கலக்கிய இந்த ஒன்பது பாட்டுமே ஒரு முக்கால் மணி நேரத்தில தான் டியூன் செய்யப்பட்டதுன்னா மிகப் பெரிய என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு உலக சாதனை தான்.

கேள்வி- கண்டிப்பாக. இப்போதெல்லாம் நாட்கணக்கில் எல்லாம் எடுக்கக் கூடிய பாடல் பதிவுகளென்பது…
இடையிலே குறுக்கிட்டு சொல்கிறார்…(நாட்கணக்கில் இல்ல வாரக்கணக்கில மாதக்கணக்கில இந்த கம்போஸ் வந்து அங்க போறாங்க இங்க போறாங்க வெளிநாடு போறாங்க ஊட்டி போறாங்க காஷ்மீர்
போறாங்க இல்ல தாய்லாந்து போறாங்க அமெரிக்கா போறாங்க எங்கேயும் போகாமல் பிரசாத் ரெக்காடிங் தியேட்டர்ல ஒரு சின்ன ரூம்ல எனக்கு வந்து ரெக்கார்ட் பண்ணிக் கொடுத்தாங்க.)

கேள்வி – நிச்சயமாக உண்மையிலே ஒரு சாதனை. அந்தப் படத்திற்கு பிறகு ஒரு சின்ன தேக்கம்.
பின்னர் மக்களாட்சி என்றொரு திரைப்படம். அந்த திரைப்படத்திலே வந்திருந்த கதாபாத்திரங்கள் எல்லாம் சமகாலத்திலே இருக்கக் கூடிய அரசியல்வாதிகள் அவர்களுடைய அந்த பரிமாணங்களாக இருந்தன. அந்தப் படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது உங்களுக்கு. ஆனால் அந்தப் படத்தை எடுத்ததன் மூலம் நீங்கள் பல சவால்களையும் சோதனைகளையும் சந்திருத்திருப்பீர்கள் என நினைக்கிறேன் அப்படியா?

பதில்- நிச்சயமாக. நிச்சயமாக வந்து ஒரு தமிழ்நாட்டிலே இல்ல இந்தியாவிலே வந்து ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கு. பொய்யை சொல்லி வாழலாம். உண்மையை சொல்லி வாழ முடியாது. இது தான் தமிழ்நாட்டினுடைய உலகத்திலையும் இருக்கலாம். ஆனால் இந்தியாவிலே கொஞ்சம் அதிகமாக இருக்கு. உண்மையைச் சொன்னால் யாருக்கும் பிடிக்காது. அப்ப நான் வந்து குற்றப்பிரிவு என்று எடுத்த பிறகு அது வந்து ஈழத் தமிழரை அவர்களோட மரணத்தை அந்த பின்ணணியை வைச்சு எடுத்தது தான் வந்து நான் பண்ணின தவறுன்னு நினைக்கிறேன். அது தவறு இல்ல. அது வந்து உண்மையை சொன்னதற்காக ஏற்பட்ட தவறு. பொய்யாக சொல்லி வாழ்ந்திட்டுப் போகலாம். உண்மையை சொல்ல முடியாது.
அப்புறமாக வந்து மக்களாட்சி வந்து ஏறக்குறைய தமிழ்நாட்டிலே நிலவின எல்லா உண்மைகளுக்கும் அது வந்து மிகப் பெரிய ஒரு வெளிச்சம் போட்டுக் காட்டிச்சு. அதனால என் சொந்த வாழ்க்கையில திரைப்படத்துறையிலே நிறைய சவால்களை நிறைய போராட்டங்களை எதிர்கொண்டேன். இருந்தாலும் நான் ஒரு படைப்பாளியாக வந்து அந்த
போராட்டங்களை எடுத்துக் கொண்டேன்.

கேள்வி- இந்த குற்றப்பத்திரிகை திரைப்படம் அந்த திரைப்படத்தை எடுத்து அதன் மூலம்
கிடைத்த சோதனைகளை அந்த திரைப்படத்தை எடுத்து அந்த திரைப்படத்தினுடைய வெளியீடு தாமதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக. அப்படியான ஒரு சோதனைக்கு பின்னர் நீங்கள் உங்களுடைய பாணியினை மாற்றிக் கொண்டீர்களா? ஏனென்றால் இடையிலே சில படங்கள் வந்தன. ராஜஸ்தான் திரைப்படம் அது கூட நடைமுறைப் பிரச்சினை என்றாலும் கூட சில திரைப்படங்கள் வந்த பொழுது அந்த பாணி
என்பது செல்வமணி என்ற அந்த இயக்குநருடைய தனி முத்திரையாக இல்லாமல் போனதற்கு இப்படியான ஒரு படத்தினுடைய சோதனை கூட காரணமாக இருந்திருக்குமா?

பதில்- நிச்சயமாக இருந்திருக்கும். ஒரு குற்றப்பத்திரிகைக்கும் மக்களாட்சிக்கும் பின்னால் ஒரு உண்மை தெரிஞ்சுது. தமிழ்நாட்டிலே உண்மை சொல்லி வாழ முடியாது என்று தெரிஞ்சுது. அப்ப உண்மை சொல்றது வந்து கொஞ்சம் குறைச்சிட்டேன். ராஜஸ்தானில கூட ஒரு உண்மை இருக்கு. ஆனால் உண்மையை விட பொய்யும் கற்பனையுமாக கலந்து அந்த படம் பண்ணினதால வந்து என்னோட நான் தேர்ந்தெடுத்த பாதையில இருந்து நானே விலகிட்டேன். எது மேல வந்து உங்களுக்கு நம்பிக்கையும் வந்து ஆதிக்கமும் இருக்குமோ அதில படம் பண்ணினால் தான் வந்து உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கே நம்பிக்கையில்லாத ஒரு விசயத்தில வந்து படம் பண்ணும் போது வெற்றி வர்றதுக்கு கொஞ்சம் கஷ்டம். அதனால வந்து என்னோட வெற்றிக்கும் தோல்விக்கும் வந்து இது தான் முழுமையான காரணம் என்டு நான் நினைக்கிறேன்.

கேள்வி- இன்றைக்கு வந்து உங்களுடைய பாணியை அடியொற்றி பல இயக்குநர்கள் வெற்றியை கண்டிருக்கிறார்கள். கண்டுவருகிறார்கள். மீண்டும் அந்த செல்வமணியை நாம் எப்பொழுது பார்க்கப் போகின்றோம்?

பதில்- அதற்கான முயற்சியைத் தான் இப்ப வந்து எடுத்திட்டு இருக்கேன். புதிய படம் புதிய பாணியிலான இந்தப் படமும் வந்து புதிய பாணியான ஆறு மாசம் யோசிச்சு இப்ப
தொடங்க இருக்கிறேன். அது வந்து பெப்ரவரி மாத என்ட்டில வந்து மார்ச்சில சூட்டிங் போறதா பிளான் பண்ணியிருக்கோம். இந்தப் படம் வந்து தமிழ் சினிமாவில இன்னொரு வாசலைத் திறந்து விடும். நான் தான் வந்து தமிழ் சினிமாவில பிரமாண்டத்தோட வாசலை திறந்து வைச்ச ஒரு இயக்குநர். அதைப் போல இப்ப ஒரு வாசலைத் திறக்க இருக்கிறேன். இந்த வாசல் வந்து தமிழ் சினிமாவில வந்து இன்னொரு புதிய பரிமாணத்தை தமிழ் சினிமாவிற்கு திறந்து விடப் போகும் என்டு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. அந்த் படம் வந்து மிக விரைவிலே தொடங்க இருக்கிறேன். அது வந்து ஒரு short time பிலிமாகக் கூட இருக்கும் அந்த பிலிம்.

கேள்வி- அந்த வாய்ப்புக்காக அந்த படத்தை பார்க்கக் கூடிய ஓர் ஆவலோடு நானும் ஓர் ரசிகனாக இங்கே காத்திருக்கிகேன். நிறைவாக எமது ஈழத் தமிழர்களுடைய போராட்டங்கள் அவர்களுக்காக குரல் கொடுத்தவர் என்ற வகையிலே இன்னுமொரு பரிமாணம். செல்வமணி என்கின்ற ஒரு மனிதநேயமிக்க மனிதரை நாம் பார்க்கக் கூடியதாக இருந்தது. பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இன்றைய நிலையிலே அரசியல் அனாதைகளாக இருக்கக் கூடிய இந்த ஈழத் தமிழினம் பற்றி உங்களுடைய பார்வை என்ன?

பதில்- இது வந்து ஒரு கடினமான கேள்வி. இன்றைய காலகட்டத்தில வந்து ஒரு கடினமான கேள்வி. இருந்தாலும் இப்ப வந்து ஒரு தமிழீழத்திலே பிறந்த ஒரு சக்தியாக இல்ல ஒரு மனிதனாக ஒரு தமிழனாக பதில் சொல்ல வேண்டிய ஒரு காலகட்டம் இருக்கு.
எந்த சுதந்திரமும் பிறரால் வாங்கிக் கொடுக்கபடுறது இல்ல. அதாவது இன்னைக்கு இருக்கிற தமிழ் ஈழத் தமிழருக்கு ஈழச் சகோதரர்களுக்கு நான் ஒரேயொரு உண்மையைத் தான் சொல்ல விரும்புறேன். அதாவது எந்த சுதந்திரமும் பிறரால் பெற்றுத் தரப்படுறது
இல்ல. அந்த பிறரை நம்பினதால தான் வந்த இழப்பு தான் சோதனை தான் சுதந்திரத்திற்கும் ஈழப் போராட்டத்திற்கும் வந்த பின்னடைவு. இன்னொருத்தரை நம்பும் போது அவங்களோட ஆளுமை கூட வந்து அவங்க உதவும் போது வந்து அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதே மாதிரிப் பண்ண வேண்டிய சூழ்நிலை. உலகத்தில பார்தீங்கன்னா எல்லாப் போராட்டமும் சிறிலங்காவில இருந்து இல்ல இந்தியாவில இருந்து
சுதந்திரத்தை அடைஞ்ச எல்லா நாடுகளுமே அந்த நாட்டு மக்களால அந்த நாட்டு சக்திகளால வந்து அந்த சுதந்திரம் அடையப்பட்டிருக்கு. இன்னைக்கு ஈழச் சுதந்திரம் வந்து பெரும்பாலும் வந்து அது இந்தியாவினை சார்ந்திருக்கிறதால அதனோட இந்தியாவினை சார்ந்திருக்கு. தோல்வியும் இந்தியாவினை சார்ந்ததாக அமைஞ்சிட்டுது. வெற்றியும் இந்தியாவை சார்ந்து அமையுறதால தோல்வியும் குரோதமும் இந்தியாவினை சார்ந்ததாக அமைஞ்சிட்டுது. அது தான் வந்து இன்னைக்கு இந்த ஈழச் சுதந்திரம் வந்து பின்னடைவை எதிர்நோக்கியதற்கு மிகப் பெரிய காரணம். இந்தியாவை நம்பியதால தான். இந்திய அரசாங்கத்திடம் இருந்து மாறுதலான சாத்வீகமானதை மட்டும் எடுத்துகிட்டு சுதந்திரத்தை இவங்களே வந்து எடுத்திருந்தால் இன்னைக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காதுங்கிறது என்னுடைய கருத்து.
இன்னைக்கு அதை விட மிகப் பெரிய சோதனை, இப்ப வந்து அமெரிக்காவுக்கு போயிருந்து மற்ற நண்பர்களுடன் பேசும் பொழுது அன்னைக்கு வந்து ஏறக்குறைய நிறைய வெளிநாடுகளுக்கு போகும் போது எல்லா ஈழத் தமிழர்களுக்காக
பகுதி நேர வேலையாகவே வைச்சிட்டு இருப்பேன். அப்ப போகும் போது எனக்கு தெரிஞ்சது வந்து ஒரே தலைமை. ஒரே உணர்வு. ஒரே இலக்கு. ஈழத் தமிழர்களோட ஒரு பிரிவில தான் நான் அன்னைக்கு வந்து உட்கார்ந்தேன். ஆனால் இன்னைக்குப் போகும் போது ஒரு வெட்ககரமான ஒரு அவமானகரமான ஒரு உண்மையை நான் சந்திக்க வேண்டியிருந்தது. இப்ப போகும் போது நான் வந்து யாழ்ப்பாணத்தை தமிழனை நான் வந்து கிளிநொச்சி. நான் வந்து வவுனியா. நான் வந்து கொழும்பில இருக்கேன். இல்ல நான் இந்த ஜாதியில இருக்கேன். இப்ப இது தான் பின்னாடி இருக்கேயொழிய இந்த ஈழம் என்றதே பெரிய பகுதியா அதில வந்து பகுதி பகுதியாக வந்து என்னோட ஈழத் தமிழர்கள் பிரிஞ்சு நிற்கிறதைப் பார்க்கும் போது முள்ளிவாய்க்காலிலே ஏற்பட்ட வலியை விட மிகப் பெரிய வலியை வந்து நான் இப்ப அமெரிக்கா போய்ட்டு வந்த போது உண்மையாகவே அந்த வலியை உணர்ந்தேன். முள்ளிவாய்க்காலில தான் அன்னைக்கு மே 15, 17ல நடந்தது தான் என்னுடைய வாழ்க்கையில வந்து மிகப் பெரிய சோதனை அன்றைய நிகழ்வு தான்.
ஆனால் அந்த சோகத்தையும் மிஞ்சுகிற சோகமாக இன்னைக்கு வந்து உலக நாடுகளில இருக்கிற ஈழத்தமிழரை பார்க்கும் போது பல பகுதிகளாக பிரிந்து நிற்கிறார்கள். இப்பிடி இருந்தால் எப்ப ஒன்னு சேர்வார்கள். இவங்களை யார் சேர்ப்பாங்க? என்னைக்கு ஈழம் வந்து சுதந்திரமடையிறது? எப்பிடி ஈழத்தின் சுதந்திரத்தினை அடைவாங்க என்ட மிகப் பெரிய கேள்வி வந்து பயத்தை ஏற்படுத்துது. தயவுசெய்து உங்களுக்காக குரல் கொடுத்த
அதை விரும்பின உங்களுடைய உரிமையை நிலைநாட்ட போராடிய ஒரு சிறிய அணிலாக
ஒரு சிறிய சக்தியாக உங்கள் எல்லார்கிட்டேயும் கேட்கிற ஒரேயொரு விண்ணப்பம். ஒரு வேண்டுகோள். எதுவேணாலும் நீங்க வைச்சுக்கோங்க. தயவுசெய்து யாரும் ஜாதியால இனத்தால பகுதியால கூட பிரிஞ்சு போகாதீங்க, ஒரு இனமாக ஒன்று சேருங்க. அன்னைக்கு
தான் உங்களுக்கு சுதந்திரம்வந்து கதவைத் தட்டும் என்டு எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. தயவுசெய்து ஒன்று சேருங்கள். எங்கள் சுதந்திரத்தை நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் போராடுங்கள். நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள்.

கேள்வி- செல்வமணி அவர்களே! அவை ஜீரணிக்க கஷ்டமானவை என்றாலும் கூட அவை தான் இப்பொழுது நாம் காணுகின்ற நிதர்சனங்களாக இருக்கின்றன. உண்மையிலே எமது காலத்தில் அவை நல்ல அறுவடைகளை சந்திக்காவிட்டாலும் கூட எமது மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த உணர்வாளர்களிலே நீங்கள் மறக்க முடியாதவர். அந்தவகைளிலே நாம் என்றும் உங்களை எம் நெஞ்சிலே வைத்திருப்போம். உங்களுடைய திரையுலகம் என்ற அனுபவத்தில் இருந்து இன்னொரு பரிமாணமாக இந்த பேட்டி நிறைவு பெறுகின்றது. அந்தவகையிலே நேயர்கள் சார்பிலே நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பதில்- நன்றி. நான் கூட வந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கும் என்னுடைய வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் ஆஸ்திரேலியா வரும் சந்தர்ப்பம் அமையுமானால் எனக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய பரிசு ஒரே தமிழன். ஒரே பிரிவு. ஒரே ஈழம் என்டுற ஒரே சிந்தனையோட நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்பது தான். அந்தப் பரிசினை நீங்கள் கொடுக்கும் பொழுது நான் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.

“எழுத்தில் இருந்து சினிமாவிற்கு” இயக்குனர் பாலுமகேந்திரா வழங்கும் ஒலிப்பகிர்வு


கிழக்குப் பதிப்பகம் வழங்கி வரும் மொட்டை மாடிக் கூட்டத்தில் நேற்று இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார் என்ற செய்தி வந்தபோது அந்த நிகழ்வு சென்று கொண்டிருக்கும் நேரம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரக்குக் கூட்டுத்தாபனத்தில் எனது வானொலி நிகழ்ச்சியும் சமகாலத்தில் இடம்பெறுவதால் ஒரு புதுமுயற்சியாக நேரஞ்சல் செய்வோமே என்று நினைத்தபோது கிழக்குப் பதிப்பகமும், நண்பர் ஹரன் பிரசன்னாவும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். எனது நேயர்களோடு நேரடி உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே மறுமுனையில் ஒலித்தரம் குறித்த பரிசோதனையை ஹரன்பிரசன்னா முழு அர்ப்பணிப்போடு செய்து உதவினார் 😉

50 நிமிடங்கள் வரை சென்ற இந்த நேரடி இந்த நிகழ்வை வெற்றிபெறச் செய்ய மறுமுனையில் இருந்து உதவிய நண்பர் ஹரன்பிரசன்னாவுக்கு இந்த வேளையில் எனது நன்றிகள். இந்த முயற்சியை சென்னையில் இருந்து சிட்னி, ஐரோப்பா வரை நேரடியாகக் கேட்டு மகிழ்ந்த நேயர்கள் பலர்.

“எழுத்தில் இருந்து சினிமாவிற்கு” (from writing to cinema) இதுதான் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் எடுத்துக் கொண்ட கருப்பொருள். இதனை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் மூன்று மாதங்களுக்குப் போதுமான சினிமாப் பாடத்தையே எடுத்து முடித்து விட்டார் இந்தக் கருத்தரங்கில். எழுத்து வடிவம் கொண்ட ஒரு படைப்பு எப்படி சினிமாவாக் மாற்றம் காண்கின்றது என்பதை பல்வேறு நடைமுறை உதாரணங்களையும் வாழ்வியல் அனுபவங்களையும் இணைத்து அவர் பேசுகின்றார். உண்மையில் சினிமாவை நேசிப்போருக்கும், முனைப்பில் இருப்போருக்கும் இந்தப் பேச்சு கண்டிப்பாகப் பயனளிக்கும். எனவே இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன்.

Download பண்ணிக் கேட்க

அங்கம் 1

அங்கம் 2

நேரடியாகக் கேட்க

அங்கம் 1

அங்கம் 2

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷுடன் என் வானொலிப் பேட்டி
நான் வானொலி நிகழ்ச்சி படைக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் “முத்துமணி மாலை” என்னும் நிகழ்ச்சியை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்தேன். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகிர்வாக பல்வேறு ஆளுமைகளை வானொலி நேர்காணல் மூலம் அவர்களின் ஆரம்ப கால அனுபவங்களின் தொகுப்பாகக் கொடுக்க எண்ணியிருந்தேன். அந்த வகையில் வந்த வாய்ப்புத் தான் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுடனான பேட்டி. இந்தப் பேட்டியைச் சாத்தியப்படுத்த உதவியிருந்தவர் எனக்கும் டெல்லி கணேஷுக்கும் பொதுவான நண்பராக ரேகா ராகவன் அவர்கள். எனவே இந்த வேளை அவருக்கும் என் நன்றியைப் பகிர்கின்றேன். நண்பர் ரேகா ராகவன் சொன்னது போல எந்தவிதமான சிரமமும் இல்லாமல் பேட்டி செய்ய மகிழ்வோடு ஒப்புக்கொண்டார் டெல்லி கணேஷ்.

ஒரு நாள் காலை ஏழு மணி வாக்கில் வாக்கிங் போய் விட்டுத் திரும்பிய சூட்டோடு டெல்லி கணேஷின் பேட்டியும் ஆரம்பிக்கின்றது. எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் உடனேயே எதிர்ப்படும் கேள்விகளுக்குத் தன் ஞாபக இடுக்குகளில் இருந்து மழையாய்ப் பொழிந்தார் டெல்லி கணேஷ்.

கே.பாலசந்தரின் “பட்டினப் பிரவேசம்” திரைப்படத்தில் ஆரம்பித்து இந்த ஆண்டோடு 34 ஆண்டுகளைத் தொடும் டெல்லி கணேஷின் திரையுலக வாழ்வைக் குறிக்கும் இந்தப் பேட்டியும் 34 நிமிடங்களை நிறைக்கின்றது. நிறைவாக ரேகா ராகவன் அவர்கள் முன்னர் டெல்லி கணேஷ் ஹியூமர் கிளப்பில் பகிர்ந்த நகைச்சுவையோடு நிறைவு பெறுகின்றது.

பேட்டியைக் கேட்க

Download பண்ணிக் கேட்க

பேட்டியில் அவர் சொன்ன சுவாரஸ்யங்களில் சில

டெல்லியில் இந்திய விமானப்படையில் வேலை பார்த்தபோது தமிழ் நாடகங்களில் நடிக்க வாய்ப்புக் கிட்டியதாகவும் அதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து தமிழகம் வந்து முழு நேர நாடக நடிகன் ஆனதும், பாலசந்தர் பட்டினப் பிரவேசம் திரைப்படத்தில் அறிமுகமானது.

பசி திரைப்படத்தில் சிறந்த நடிகராக 1980 ஆம் ஆண்டு கிட்டிய போது பரிசு நிகழ்வில் எம்.ஜி.ஆருடன் நிகழ்ந்த சந்திப்பு

சிந்துபைரவி படத்தில் குருமூர்த்தி என்ற மிருதங்க வித்துவான், அபூர்வ சகோதர்கள் படத்தில் வில்லன், அவ்வை சண்முகியில் நகைச்சுவை கலந்த வில்லத்தனப் பார்த்திரங்கள் கிட்டிய அனுபவங்கள்

டெல்லி கணேஷ் பார்வையில் பாலச்சந்தரின் ஆளுமை, தற்காலச் சினிமாவின் போக்கு என்று தொடர்கின்றது டெல்லி கணேஷின் பேட்டி. பேட்டி முடிவில் தன் 34 வருஷ அனுபவங்களைக் கொட்டித் தீர்த்த திருப்தியை அவரின் குரலில் தொனிக்கக் கண்டேன்.

“பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்” – பாடல் பிறந்த கதை

கவிஞர் முத்துலிங்கத்துடனான என் வானொலிப் பேட்டியின் ஒரு பகுதியை முன்னர் தந்திருந்தேன். தொடரின் அடுத்த பகுதியில் “பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்” பாடல் பிறந்த கதையைச் சொல்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களது வழிகாட்டலிலே நல்லதொரு அங்கீகாரம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. அவருடைய ஆட்சிக்காலத்தில் அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்திருந்தீர்கள், எம்.ஜி.ஆர் அவர்களுடனான அறிமுகம் உங்களுக்கு எப்படி அமைந்திருந்தது?

நான் அப்போது அலையோசை பத்திரிகையில் இருந்தேன். நான் அடிப்படையிலேயே எம்.ஜி.ஆர் ரசிகன். அப்போது அவர் கட்சி ஆரம்பித்திருந்த நேரம் , பேச்சாளனாகவும் இருந்தேன். பத்திரிகைப் பேட்டிக்காக நான் அப்போது அவரைச் சந்திப்பேன். அதற்கு முன்னரேயே நான் சினிமாவில் பாட்டு எழுதிட்டேன். பின்னர் அலையோசை பத்திரிகை எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதால் அந்தப் பத்திரிகையில் இருந்து விலகினேன். அந்த நேரம் அவரின் அலுவலத்துக்குச் சென்றபோது,
“நீங்க பத்திரிகையை விட்டு விலகிட்டிங்களாமே, கொஞ்சம் பணம் கொடுக்கிறேன் வாங்கிக்குங்க” என்று சொன்னார்.
“இல்லை பணம் வேண்டாம் தலைவரே அதுக்குப் பதிலா வேலை கொடுங்க” என்றேன்.
“வேலை கொடுக்கும் போது கொடுக்கிறேன், இப்போ வாங்கிக்க” என்றார்.
“இல்லை வேண்டாம்” என்று மறுத்திட்டேன். அதுக்கப்புறம் தான் அவர் தன்னோட படங்களுக்குத் தொடர்ந்து பாட்டு எழுத வாய்ப்புக் கொடுத்தார். அப்படி அவருக்காக எழுதிய முதற்படம் உழைக்கும் கரங்கள்.

உழைக்கும் கரங்கள் திரையில் எம்.ஜி.ஆருக்காக முத்துலிங்க எழுதிய முதற்பாட்டு
“கந்தனுக்கு மாலையிட்டாள்” – பாடியவர் வாணி ஜெயராம்

உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் என்று எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு எழுதியிருக்கீங்க, ஊருக்கு உழைப்பவன் படத்தில் வரும் “பிள்ளைத் தமிழ் பாடுகின்றேன்” அந்த அருமையான பாடல் பிறந்ததற்குப் பின்னால் சுவாரஸ்யமான தகவல் உண்டா?

அப்போல்லாம் எனக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுத வராது, மியூசிக் டைரக்டர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து தான் பாட்டு எழுதுவோம். இப்பல்லாம் கேசட் கொடுத்து எழுதச் சொல்லிடுவாங்க.

முதலில் அந்தப் பாட்டின் சிச்சுவேஷனைச் சொல்லிடுறேன். எம்.ஜி.ஆர் பெண்களுக்குக் கணவராக நடிப்பார். அதாவது ஒரு பெண்ணின் உண்மையான கணவன், இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிக்க வேண்டிய சூழ்நிலை. அப்படிப்பட்ட நேரத்தில் சொந்த மனைவிக்குப் பிறந்த குழந்தை இறந்து போகும். அந்தப் பிள்ளையை அடக்கம் பன்ணி விட்டு இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிப்பாரே அந்த வீட்டுக்கு வருவார். அப்போது அந்தப் பெண்ணின் குழந்தைக்குப் பிறந்த நாள். அந்தக் குழந்தையை வாழ்த்திப் பாடச் சொல்லிக் கேட்பாங்க. தன்னுடைய சொந்தக் குழந்தை இறந்து போனதை நினைத்துப் பாடுவாரா, இல்லை இந்தக் குழந்தைக்குப் பிறந்த நாள் என்று சொல்லி வாழ்த்திப் பாடுவாரா அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலை, அதை மனதில் வைத்துக் கொண்டு இரண்டும் கலந்து வருவது போல் பாடல் வரவேண்டும்.
அதனால நான் முதலில் எழுதினேன்,

“நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடல் இருக்குது
நினைக்கும் போது பாசம் என்னும் அலையடிக்குது
என் கண்ணுக்குள்ளே குழந்தை என்னும் மலர் சிரிக்குது
என் கவிதைக்குள்ளே மழலை ஒன்று குரல் கொடுக்குது
எது நடக்கும் எது நடக்காது இது எவருக்கும் தெரியாது
எது கிடைக்கும் எது கிடைக்காது இது இறைவனுக்கும் புரியாது”

அப்படி ஒரு பல்லவி எழுதினேன், மியூசிக் டைரக்டர் உட்பட எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு. ஆனால் எம்.ஜி.ஆரிடம் கொண்டு போகும் போது மூணு நாலு பல்லவி எழுதி அதுக்குத் தொடர்பா வர்ர மாதிரி சரணம் எழுதியும் காட்டணும். அதனால இரண்டு மூன்று பல்லவி எழுதிட்டேன்.
“ஆட்டி வைத்த ஊஞ்சல் அது முன்னும் பின்னும் ஆடும்” அப்படின்னு இன்னொரு பல்லவி.
இன்னும் மூணு பல்லவி வேணும் என்று எழுதச் சொன்னாங்க. நான் அதே இடத்தில் இருந்தா கற்பனை வராது வெளியே கொஞ்சம் நடந்து போட்டு வரேன் என்று மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணரிடம் சொல்லிவிட்டு சிவாஜி கணேசன் வீடு இருக்கும் தெற்கு போக்கு ரோடு இருக்கும் பக்கமா நடந்து போயிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்பவும் எனக்குச் சரியா ஒண்ணும் வரல. அந்த நேரம் எனக்குப் பக்கத்தில் கார் ஒன்று வந்து நின்றது சடன் பிரேக் போட்டு. காரின் உள்ளே மறைந்த கவர்ச்சி வில்லன் கண்ணன், நடிகர் ஐசரி வேலன் உள்ளே இருந்தாங்க.

“உங்க பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்தது என்று தலைவர் கிட்ட (எம்.ஜி.ஆர்) பாவலர் முத்துசாமி சொல்லிக்கிட்டிருந்தாரு. முத்துசாமி தி.மு.க காலத்தில் அமைச்சரா இருந்தவரு பின்னர் அண்ணா தி.மு.க வைச் சேர்ந்திருந்தார். அவர் இப்படி உங்கள் பிள்ளைத் தமிழ் நன்றாக இருந்ததாக தலைவரிடம் சொன்னதாக அவர் சொல்லவும் எனக்கு உடனே பொறி தட்டியது. நான் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாக வைத்துத் தான் எம்.ஜி.ஆர் பிள்ளைத் தமிழ்ன்னு ஒரு குறுங்காப்பியம் எழுதியிருந்தேன். இங்கேயும் எம்.ஜி.ஆர் ஒரு பிள்ளைக்காகத் தான் பாடுவார். அப்படிப் பிள்ளைக்காகப் பாடுவதாக
“பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் – ஒரு
பிள்ளைக்காகப் பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்

என்று பல்லவியை எழுதி விட்டு விஸ்வநாதன் அண்ணனுக்கு பாடிக்காண்பிக்க அதுக்கு ட்யூன் போட்டார்.அதுக்கு லிங்கா வரக்கூடியமாதிரி சரணமும் அமைத்துப் பாடலாக்கி அதை எம்.ஜி.ஆரிடம் காண்பித்தோம். அப்போ சத்யா ஸ்டூடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங் நடந்துக்கிருந்துச்சு. அப்போது டைரக்டர் ஏ.பி.நாகராஜன், டைரக்டர் நீலகண்டன், டைரக்டர் கே.சங்கர் எல்லாரும் இருந்தாங்க. அப்போது போட்டுக் காமிச்சோம். அப்போது ஏ.பி. நாகராஜன் இந்த சிச்சுவேஷனுக்கு இந்தப் பாட்டு நல்லாயிருக்கேன்னு “நெஞ்சுக்குள்ளே அன்பு” என்று தொடங்குற பாட்டைச் சொன்னார். இன்னொருத்தர் “ஆட்டி வைத்த ஊஞ்சல்” அப்படித் தொடங்குற பாட்டு நல்லா இருக்குன்னு சொன்னார். எல்லாத்தையும் கேட்ட எம்.ஜி.ஆர் “நீங்க சொல்றதெல்லாம் நல்லாயிருக்கு ஆனா பிள்ளைத் தமிழ் என்று தொடங்கும் பாட்டுத் தான் பாப்புலராகும் ரொம்ப கேட்சிங்கா இருக்கு” என்று சொன்னார். அதாவது சினிமாத் துறையில் எல்லா நுணுக்கங்களையும் எம்ஜிஆர் புரிந்தவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

“பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்” – ஊருக்கு உழைப்பவன் திரைக்காக கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல்

கவிஞர் முத்துலிங்கத்தின் “பாடல் பிறந்த கதை” – தஞ்சாவூரு சீமையிலே

ஒரு காலத்தில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வருவதற்கு முன்னர் வானொலி உரையாடல் நிகழ்ச்சிகளில் நேயராக நான் பங்கு பெறும் போதெல்லாம் ஏதோ ஒரு பாட்டு எப்படி உருவானது என்று குறித்த பாட்டின் பின்புலம் குறித்து எனக்குத் தெரிந்த செய்திகளைப் பகிர்வேன். பின்னர் என் வானொலி நிகழ்ச்சியாக அமைந்ததும் “பாடல் பிறந்த கதை” தான்.

கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் பாடல் பிறந்த கதை என்ற நூலை அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்த போது வாங்கி ஒரே மூச்சில் வாசித்திருந்தேன். அந்த நூலில் வெறுமனே அவரின் திரையுலக அனுபவங்கள் மாத்திரமன்றி அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரையான திரையிசைக் கவிஞர்களின் வாழ்வில் நடந்த சில சுவையான அனுபவங்களையும் அதில் சொல்லியிருந்தார். அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இந்த ஆண்டு “முத்து மணி மாலை” என்னும் புதிய நிகழ்ச்சியைப் படைக்கவெண்ணி அதில் ஒரு பகுதியாக பல வருஷங்களுக்குப் பின் “பாடல் பிறந்த கதை” என்ற அம்சத்தையும் சேர்த்தேன். அப்போது முதலில் நினைவுக்கு வந்தவர் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள். அவரை அழைத்தபோது மறுப்பேதும் இன்றி ஒரு சில நாட்களில் வானொலி நேர்காணலைச் செய்வதற்கு இணங்கினார். கவிஞர் முத்துலிங்கத்தில் தமிழ் மீதான காதல், திரையுலகிற்கு அவர் வந்த சூழ்நிலையில் ஆரம்பித்து 50 நிமிடங்களுக்கு மேல் ஒரு அழகிய தமிழ் விருந்தைத் தந்தார். அவற்றைத் தொடர் பகுதியாக வானொலியில் ஒலிபரப்பும் அதே வேளை றேடியோஸ்பதி வாயிலாகவும் தருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். தொடர்ந்து பாடலாசிரியர் முத்துலிங்கம் பேசுவதைக் கேட்போம்.

வணக்கம் கவிஞர் முத்துலிங்கம் அவர்களே

வணக்கம் ஐயா

ஒரு பாடலாசிரியராக அன்றும் இன்றும் பிரபல்யத்தோடு விளங்கும் நீங்கள் சென்னையில் வந்து இந்த இடத்தைப் பிடிப்பதற்கு முன் உங்கள் இளமைப்பிராயம், குறிப்பாக தமிழ் மீதான காதல் உங்களுக்கு எப்படி வந்ததென்று சொல்லுங்களேன்.

தமிழ் நாட்டில் என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கடம்பன்குடி என்கின்ற கிராமம். சொந்தத் தொழில் விவசாயம் தான். சிவகங்கை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தேன். படிக்கும் போதே தமிழ் மீதான ஆர்வத்தினால் இலக்கண இலக்கியங்களை எல்லாம் கற்றுக்கொண்டேன். எனக்கு இலக்கிய உணர்வை ஏற்படுத்தியது பள்ளியிலே ஒன்பதாம் வகுப்பில் மனப்பாடச் செய்யுளாக இருந்த கம்பராமாயணமும் சிலப்பதிகாரமும் தான். இந்த அளவுக்குப் படித்ததே சிறப்பாக இருக்கிறதே என்றெண்ணி நூலகங்களுக்குச் சென்று கம்பராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும் முழுமையாகப் படித்தேன். அர்த்தம் தெரியாமல் ஓசை இன்பத்தால் ஈர்க்கப்பட்டு நான் படித்தேன். அதன் பிறகு தான் அவற்றின் பொருளுணர்ந்து படித்தேன். அதன் வழியாக எனக்குத் தமிழார்வம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் பத்திரிகைகளுக்குக் கதை கட்டுரை எல்லாம் அனுப்புவேன். கவிஞர் சுரதா அவர்கள் “இலக்கியம்” என்ற கவிதைப் பத்திரிகை நடத்தினார். அந்தப் பத்திரிகையில் தான் என் முதற் கவிதை வெளிவந்தது. அப்போது நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அப்படித்தான் என் கவிதை ஆர்வம் வளர்ந்தது. அதுபோக என் தாயார் தாலாட்டுப் பாடல்களை என் தம்பி தங்கைகளுக்குப் பாடும் போது இளவயதில் கேட்டவகையில் அதன் மூலமும் என்னுடைய கவிதை உணர்வு உள்ளத்திலே எழுந்தது.

அப்போது கண்ணதாசன் தென்றல் என்றொரு பத்திரிகை நடாத்தினார். அதில் வெண்பாப் போட்டி ஒன்று வைத்தார். அதே சமயம் கவிஞர் சுரதா இலக்கியம் என்ற பத்திரிகையில் குறள் வெண்பாப் போட்டி வைத்தார். அதில் கேள்வி ஒன்று கேட்டார்
“பறக்கும் நாவற்பழம் எது கூறுக?” என்ற அந்தக் கேள்விக்கு நாம் குறள் வெண்பாவில் எழுதணும்.
“பறக்கும் நாவற்பழம் எது கூறுக? இது அகவல், ஆசிரியப்பா வகையைச் சேர்ந்தது
நான் எழுதினேன்,
“திறக்கின்ற தேன்மலரைத் தேடிவரும் வண்டே
பறக்கின்ற நாவற்பழம்”
அப்படின்னு எழுதினேன்.
இதற்கு எனக்கு முதற்பரிசு கிடைத்தது.

அதன் பிறகு சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்த பிற்பாடு நான் பத்திரிகைத் துறையில் தான் முதலில் பணியாற்றினேன் முரசொலி, அலையோசை ஆகியவற்றில் எல்லாம். அப்போது ஊரில் இருக்கும் காலத்திலே எல்லாம் திரைப்பாடப் பாடல்களை நாமும் எழுத வேண்டும், அவை திரையில் வரவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் சென்னைக்கு வந்தபிறகு அதற்கான முயற்சி செய்தேன். கதாசிரியர் பாலமுருகன் என்பவரால் தான் திரைப்படத்தில் எனக்குப் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இயக்குனர் மாதவனிடம் எனக்கு அந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். “பொண்ணுக்குத் தங்கமனசு என்ற திரைப்படத்தில் தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா என்ற பாடல்.

அந்தப்பாடலைப் பற்றிச் சொல்லும் போது இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக அங்கீகரிக்கப்பட முன்னர் அவர் இசையமைக்க நீங்கள் எழுதிய பாடல் என்ற பெருமையும் இருக்கின்றது என்று அறிந்துகொண்டேன் அப்படித்தானே?

ஆமாமா, அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அப்போது அவரிடம் உதவியாளரா இருந்தவர் ராஜா. முதலில் என்ன சொன்னாங்கன்னா கங்கை, காவிரி, வைகை இந்த நதிகள் எல்லாம் பாடுறது மாதிரி அவங்களுக்குள்ள போட்டி வந்து சண்டையிடுவதாகவும் உழவன் வந்து சமாதானம் செய்வதாகவும் ஒரு காட்சி இதை முதலில் எழுதிட்டு வாங்க அப்புறமா ட்யூன் போட்டுடுவோம் என்று கதாசிரியர் பாலமுருகன் சொன்னார். நான் எழுதிட்டுப் போனேன். பாட்டைப் பார்த்தார் ஜி.கே.வெங்கடேஷ் எல்லாம் ஒரே மாதிரி இருக்கே நான்கு ஐந்து பேர் பாடுறதனால ராகமாலிகை மாதிரி அதாவது மாண்டேஜ் சாங் ஆ இருக்கணும். அப்படி இருந்தாத் தான் நல்லா இருக்கும் நாம ட்யூன் போடுறோம் அதுக்கேத்த மாதிரி எழுதுங்கன்னார். ட்யூன் போட்டார் அந்த ட்யூன் டைரக்டர் மாதவனுக்குப் பிடிக்கல. அந்தப் படத்தில் அவர் இயக்குனர் இல்லை என்றாலும் அவரின் தயாரிப்பில் அவரின் உதவியாளர்கள் தேவராஜ் மோகன் டைரக்ட் பண்ற படம். இரண்டு நாள் இருந்து டியூன் போட்டார் வெங்கடேஷ் சரியா வரல. அப்புறமா ஜி.கே.வெங்கடேஷ் சொன்னார் “என்னுடைய அசிஸ்டெண்ட் பாடிக்காண்பிப்பாருய்யா அதை வச்சு எழுதுங்க”ன்னார். அப்போது இளையராஜா தத்தகாரத்தில் பாடிக் காண்பிக்க அந்த ட்யூன் நல்லா இருக்கே அதையே வச்சுக்கலாம் என்று அமைந்தது தான் அந்தப் பாட்டு. அதனால இளையராஜா இசையில் முதலில் பாட்டு எழுதியவன் என்ற பெருமை என்னைச் சாரும், அல்லது என்னுடைய பாட்டுக்குத் தான் இளையராஜா முதலில் இசையமைச்சார் என்று சொல்லலாம்.

இதோ அந்த “தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா” என்ற அந்தப் பாடலை எஸ்.ஜானகி.பி.எஸ்.சசிரேகா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடுகின்றார்கள். இந்தப் பாடல் எண்பதுகளின் பிரபலக் குயில்களில் ஒன்றாக விளங்கிய பி.எஸ்.சசிரேகாவின் முதற்பாட்டு என்பதும் கொசுறுத் தகவல்

முத்துலிங்கம் இன்னும் பல பாடல் பிறந்த கதைகளைச் சொல்லுவார்…..

பாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி

இரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணியை வைத்துப் படம் பண்ணியிருந்த அனுபவங்களை வானொலிப்பேட்டிக்காகப் பகிர்ந்திருந்தார். ஒரு சில நாட்களின் பின்னர் ஜான் மகேந்திரன் தன்னுடைய சரவெடி படத்துக்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் சரவெடி என்ற படத்துக்காக மீண்டும் ஜென்சியைப் பாடவைத்திருப்பதாக மின்மடல் வந்திருந்தது. அவரிடம் ஜென்சியை ஒரு வானொலிப்பேட்டி எடுக்க வேண்டும் தொடர்பிலக்கம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ஜென்சியின் இலக்கத்தைக் கொடுத்து விட்டு, கொஞ்சம் சென்னைப்பாஷையில் பேசுங்க அப்பத்தான் புரியும் என்று சொல்லி வைத்திருந்தார். ஜென்சியின் இலக்கம் கிடைத்தாலும் ஒரு காலத்தில் தன் குயிலோசையால் உச்சத்தில் இருந்த பாடகிக்கு அழைப்பது கொஞ்சம் தயக்கத்தை உண்டு பண்ணவே இரண்டு வருஷமாக அந்த இலக்கத்தைத் தொடாமல் இருந்தேன். இரண்டு வருஷங்கள் கழிந்த நிலையில் ஒரு உத்வேகத்தோடு ஜென்சியை ஒரு வானொலிப் பேட்டி எடுத்து விடவேண்டும் என்று மீண்டும் அதே இலக்கத்துக்கு அழைத்தேன் அதே இலக்கம் இயங்குமா என்ற இலேசான சந்தேகத்தோடு.

“என் வானிலே ஒரே வெண்ணிலா” செல்போனின் உள் இணைக்கும் இசை பரவ

“ஆராணு” பாட்டுக்குயில் ஜென்சியின் பேச்சுக்குரல் மறுமுனையில்

கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் சென்னைச் செந்தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் கலந்து கட்டி என்னை அறிமுகப்படுத்தினேன்.

“இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியில் கிளம்புறேன்,உடனேயே செய்யலாமா” என்று கேட்கிறார். ஆகா கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று “சரி ஒரு பத்து நிமிஷத்தில் அழைக்கிறேன் மேடம்” என்று விட்டு பக்கத்தில் இருந்த வானொலிக்கலையகம் செல்கிறேன். எந்தவிதமான முற் தயாரிப்பும் எனக்கும் ,பாடகி ஜென்சிக்கும் இல்லாமல் அந்தக் கண நேரத்தில் என் உள்ளே தேங்கிக்கிடந்த கேள்விகளும் அருவியாய் அவரின் பதில்களும் கூடவே நதியில் மிதந்து செல்லும் தாமரைக் கண்டு போல திடீர் திடீரென மிதந்து கலந்த பாட்டுக்கச்சேரியுமாக ஜென்சியின் வானொலிப்பேட்டி.

இயக்குனர் ஆர்.பாண்டியராஜனுடன் என் வானொலிப்பேட்டி

சினிமா ரசிகனாகப் பலமுறை பார்த்துச் சலிக்காத விருந்து ஆண்பாவம் திரைப்படம் அத்தோடு அந்தப் படத்தின் பின்னணி இசைப்பிரிப்பைச் செய்த போது இசைஞானி இளையராஜாவின் சாகித்யத்தை வியந்து ரசித்த வாய்ப்பையும் என் றேடியோஸ்பதி வலைப்பதிவு மூலம் கிட்டியது. அந்த வகையில் ஆண்பாவம் திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் நிறைவாகும் இந்த ஆண்டு அது குறித்த ஒரு விழா ஏற்பாடுகள் நடைபெறுவதாகச் செய்தி அறிந்த போது ஆண்பாவம் திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பை மீண்டும் சில மெருகேற்றல்களோடு கடந்த ஒக்டோபரில் கொடுத்திருந்தேன். “ஆண்பாவம்” – 25 ஆவது ஆண்டு சிறப்புப் பதிவு

பின்னர் ஆண்பாவம் திரைப்படத்தின் திரைக்கதை நூல் வெளியீட்டு விழாவும் 25 ஆண்டு விழாவும் சிறப்பாக நடந்ததை அறிந்து நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காச் சிறப்பானதொரு வானொலிப்பேட்டியை ஆண்பாவம் இயக்குனர் திரு.ஆர்.பாண்டியராஜன் அவர்களை வைத்துச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்ட போது அவரின் தொலைபேசி இலக்கத்தை ட்விட்டர் வாயிலாக வழங்கியிருந்தார் நண்பர் கே.ராகவன் அவருக்கும் இந்தவேளை என் நன்றிகள்.

ஒரு இலேசான தயக்கத்தோடு இயக்குனர் பாண்டியராஜனுக்கு அழைத்தேன் என் பேட்டி பற்றி அவரிடம் சொன்னேன். “அரை மணி நேரத்தில் செய்வோமா” என்றார், “இல்ல சார் சாவகாசமா நாளைக்கே பண்ணுவோம்” என்று நான் கேட்டபோது சம்மதித்து அடுத்த நாள் குறித்த நேரத்தில் காத்திருந்து ஒரு அழகான பேட்டியைத் தந்தார் அவர். ஆண்பாவம் 25 ஆண்டு நிகழ்வுப்படங்களையும் அனுப்பி வைத்தார். தமிழ்த்திரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படத்தின் 25 ஆண்டு விழாவைக் கொண்டாடி அதன் திரைக்கதையை வெளியிடுவது இதுவே முதன்முறை.

பேட்டி முடிவில் என்னுடைய 12 வருட வானொலி வாழ்வில், ஈகோ இல்லாது வெளிப்படையாகப் பேசக்கூடிய இன்னொரு நபராக பாண்டியராஜன் தன் பேட்டியில் பேசிய பாங்கைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தேன்.அதற்கு அவர் நாகரீகமான பண்பான பேட்டியை அமைத்தமைக்கும் நன்றி சொல்லி நன்றி என்ற வார்த்தைக்கு மேல் இன்னொரு வார்த்தை தமிழில் கண்டுபிடித்தால் அதை நான் மீண்டும் சொல்வேன் என்று சொல்லி நிறைவாக்கினார் இந்தப் பேட்டியை.

வானொலியில் இரண்டு முறை ஒலிபரப்பானபோது பல நேயர்கள் சிலாகித்துப் பேசினார்கள் அது தான் இந்தப் பேட்டியின் வெற்றி. இதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவமும் எழுத்து வடிவம் சில சுருக்கங்களோடும்

பேட்டியைக் கேட்க

To Download

வணக்கம் திரு பாண்டியராஜன் அவர்களே!

அவுஸ்திரேலியாவில் இருந்து அழைக்கும் பெரிய உள்ளங்களுக்கு இந்த சின்னவனின் வணக்கங்கள்

முதலில் 25 ஆண்டுகளுக்கு மேலாகக் கலைத்துறையில் இருக்கும் உங்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ரொம்ப நன்றி, 25 வருஷங்கிறது எண்ணிக்கையே தவிர நான் எப்பவுமே பின்னோக்கிப் பார்ப்பதில்லை, போகும் வழி தூரம், இன்னும் நிறைய இருக்கு. ஆனால் அப்பப்போ ஒரு பிறந்த நாள் விழா மாதிரி இந்த “ஆண்பாவம்” படத்துக்கு ஒரு பிறந்த நாள் விழாக் கொண்டாடிய உணர்வு தான்.

பாண்டியராஜன் என்றதொரு கலைஞன் திரைப்பட இயக்குனராக, நடிகராக எப்படி வந்தார், அவருடைய அறிமுகம் எப்படி இருந்தது?

பள்ளிப்படிப்புக் காலத்திலேயே இசை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. குலதெய்வம் ராஜகோபால் அவர்களுடைய மகன்கள் சம்பத், செல்வம். குலதெய்வம் ராஜகோபால் வில்லுப்பாட்டு பண்ணுவாரு அந்த நிகழ்ச்சி இடைவேளையின் போது மகன்கள் இருவரும் ஒருவர் கிட்டாரிலும் இன்னொருவர் ஆர்மோனியத்திலும் என்னடி ராக்கம்மா பாட்டை வாசிப்பாங்க. அதுக்கு பிரமாதமான கைதட்டல் இருந்தது. அதைப்பார்க்கும் போது ஏன் நாமளும் கைதட்டல் வாங்கக் கூடாது என்று ஒரு உத்வேகம். அதுக்கப்பறம் அப்பாவிடம் சென்று “அப்பா! நான் ஆர்மோனியம் கத்துக்கணும்”னு சொன்னேன். பல்லவன் போக்குவரத்துக்கழக ஓட்டுனரா இருந்த என்னோட அப்பா, நமக்கெதுக்குடா இதெல்லாம் என்று கேட்காம என்னை மியூசிக் ஸ்கூ ல்லல்ல சேர்த்து விட்டார். அங்கே ஆர்மோனியம் கத்துக்கிற வாய்ப்பு இல்லை. வயலின் தான் கத்துக்க முடிஞ்சது. தமிழிசைக் கல்லூரியில் வயலின் கத்துக்கிட்டேன். வயலின் கற்றுக்கொள்ளும் போது நிறைய நாடக நண்பர்கள் நட்புக் கிடைத்தது. குறிப்பா சைதாப்பேட்டை ஶ்ரீராம் அவர்களின் நட்புக் கிடைத்தபோது கொஞ்சம் கொஞ்சமா நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைச்சது. என்.சி.சியில் நான் இருந்த போது காம்ப்ல ஒரு நாடகம் போட்டேன். அந்த காம்ப்ல இருந்த 64 பள்ளிக்கூடங்களிலேயே இது தான் சிறந்த நாடகமா தேர்ந்தெடுக்கப்பட்டு என்னோட உயர் நிலைப்பள்ளிக்கு ரோலிங் கப் கிடைச்சது. அதுதான் முதன் முறை நான் ஜனங்களால் கைதட்டப்படுவேன் என்ற நம்பிக்கையை ஊட்டியது.

அதற்குப் பின்

அதுக்கப்புறம் சினிமா வாய்ப்புக் கேட்டு போட்டோஸ் எல்லாம் எடுத்திட்டுப் போவேன். எங்கூட இன்னும் பல நடிகர்கள் வாய்ப்புக் கேட்டு வந்திருப்பாங்க. அவங்க உருவத்தை எல்லாம் பார்ப்பேன். அவங்க உயரம், கலரு அவங்களோட ஆஜானுபாகுவான தோற்றத்தை எல்லாம் பார்த்து இவங்களும் வாய்ப்புக் கேட்டு நாமளும் வாய்ப்புக் கேட்ட மரியாதை இருக்காதுன்னுட்டு அதுக்கப்புறம் உதவி இயக்குனரா போயிடலாம் என்று அதுக்கான முயற்சியில் இறங்கினேன். அப்போது வசனகர்த்தா தூயவனிடம் ஆபீஸ் பாய் ஆக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே வந்து திரு.பாக்யராஜ் அவர்கள் வந்தாங்க. விடியும் வரை காத்திரு படத்தின் கதை விவாதம் அப்போது அங்கே நடக்கும். அப்போ டிபன், பஜ்ஜி, போண்டா இதெல்லாம் வாங்கி வச்சுட்டு நாம வெளியே போயிடணும். அதுக்கப்புறமாத் தான் அவங்க கதை பேசுவாங்க. கதை விவாதம் எப்படி நடக்கிறது என்பதை அறிய அந்த அறைக்கதவிடுக்கில் ஒரு சின்னக் கல்லை வச்சிடுவேன். அந்தக் கதவிடுக்கு வழியா கேட்டா கதை விவாதங்களை கத்துக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புற்அம் என் குருநாதர் பாக்யராஜிடம் மூன்று நான்கு படங்களுக்கு வாய்ப்புக் கேட்டு கடைசியில் மெளன கீதங்கள் ஷீட்டிங் நடக்கும் போது அவரின் உதவி இயக்குனர்கள் என் நண்பர்களாயிட்ட காரணத்தால் கூடப்போனேன்.
“உன்னை யாருய்யா கிளாப் அடிக்கச் சொன்னது” என்று அவர் கேட்க
நான் அழுது “சார் எனக்கு அப்பா இல்லை சார், எனக்கு சம்பளம் கூடத் தராட்டா பரவாயில்லை வேலை கத்துக்கொடுங்கன்னு கேட்டேன். அவர் உதவி இயக்குனரா ஏற்றுக் கொண்ட பின் டார்லிங் டார்லிங் டார்லிங், தூறல் நின்னு போச்சு இப்படிப் பல படங்களில் அவரோடு பணியாற்றினேன்.

ஒரு உதவி இயக்குனராக, நீங்கள் உங்கள் குருநாதர் பாக்யராஜிடம் கற்றுக் கொண்டது என்ன?

எல்லாமே, இன்னிக்கு நான் உங்ககிட்ட பேட்டி கொடுக்கிறதா இருந்தாக் கூட அதுகூட அவர் மூலம் தான் கற்றேன்.அதுக்கு முன்னாடி நான் சினிமாவின் ரசிகன் அவ்வளவு தான். சினிமாவை எப்படி எடுப்பது, சினிமா உலகில் எப்படி நடப்பது எல்லாமே அவர்கிட்ட கற்றுக்கிட்டேன். அதுக்கப்புறமா கொஞ்சம் கொஞ்சமா நான் அதை மெருகேற்றிக்கிட்டேன். நான் கற்றுக் கொண்டதைத் தவிர நான் பார்த்த படங்கள், பார்த்த மனிதர்கள், பார்த்த சம்பவங்கள் இதையெல்லாம் என் மனசில் கோர்த்துக் கோர்த்து என்னை நான் வளர்த்துக் கொண்டேன்.

உங்களது இயக்கத்தில் முதலில் வெளியான திரைப்படம் “கன்னிராசி” அந்தப் படம் முழுவதுமே கலகலப்பாக இருக்கும் ஆனால் அந்தப் படத்தின் இறுதி முடிவு சோகமாக அமைந்தது படத்தின் வெற்றியைப் பாதித்ததா?

அந்தப் படம் வெற்றிப்படம் தான், ஆனால் நீங்க கேட்டது அருமையான கேள்வி. அந்த க்ளைமாக்ஸ் அதுவல்ல. செவ்வாய் தோஷமே இல்லை என்று பிரபும் ரேவதியும் கல்யாணம் பண்ணிப்பாங்க. கல்யாணம் பண்ண பிறகு அவங்களுடய வயோதிப தோற்றம் காண்பித்து அவங்களுடைய பிள்ளைகள் சின்ன வயசு பிரபு, சின்ன வயசு ரேவதி ஸ்கூலுக்குப் போவங்க இப்படித் தான் முடிக்க இருந்தேன். ஆனால் முதன்முதலில் ப்ரொடியூசரிடம் சொல்லும் போது அந்த சோக க்ளைமாக்ஸையே சொல்லிட்டேன். ரேவதி செத்துப்போன மாதிரித் தான் இந்தக் கதையை விநியோகஸ்தர்களிடம் சொல்லிட்டேன் நீ போய் திடீர்னு மாத்துறியே அப்படின்னார். வியாபாரத்தில் பிரச்சனை வரக்கூடாதுங்கிறதுக்காகத் தான் இந்த க்ளைமாக்ஸை எடுத்து ஆனால் கடைசி ஷாட்டில் போட்டிருப்பேன் “இந்த முடிவு நிழலுக்கான முடிவே தவிர நிஜத்தில் இதைப் பின்பற்றாதீர்கள்” என்று முடிச்சிருப்பேன்.

கன்னிராசி படத்தைத் தொடர்ந்து உங்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்த படம் ஆண்பாவம். அந்தத் திரைப்படம் 25 வருஷங்கள் கழித்தும் இன்றும் பலராலும் ரசிக்கப்படுகின்ற ஒரு கலைப்படைப்பு. அந்த வகையில் இந்தத் திரைப்படத்தின் 25 ஆண்டு சிறப்பு விழாவையும் அண்மையில் நடத்தியிருக்கின்றீர்கள். இந்த விழாவைப் பற்றிச் சொல்லுங்களேன்?

இந்தப் படத்துக்கு 25 ஆண்டு விழா எடுக்கலாம்னு திடீர்னு தோணிச்சு, அப்புறமா இது தேவையான்னு எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அதுக்கப்புறம் இந்தப் பட விழா முயற்சிகள் எடுக்கும் போது சிலர் முகம் சுருங்கிச்சு, சிலர் முக ஆச்சரியத்தில் விரிஞ்சுச்சு. எப்பவுமே முன் வச்ச காலைப் பின் வைக்கக்கூடாதுன்னு ஆரம்பிச்சேன். அந்த விழாவில் “ஆண்பாவம்” படத்தின் திரைக்கதை நூலை வெளியிட்டேன். அதில் என்னுரையில் “ஆண்பாவம் 25 – இது கொஞ்சம் ஓவரா இல்லை?” இப்படி நானே என்னைக் கேள்விகேட்கிற மாதிரிப் போட்டு, எப்படி நாம வாக்கிங் போறது, ஹெல்த் செக்கப், யோகான்னு உடல் மேல் உள்ள அக்கறையோ அப்படித்தான் கலைமேல் உள்ள அக்கறையாக இந்த ஆண்பாவம் 25.

இந்த விழாவுக்காக இசைஞானி இளையராஜாவைச் சந்தித்த அந்த நெகிழ்வான தருணங்களைப் பற்றியும் செய்திகளூடாக அறிந்தோம்?

அவருக்கு கண்டிப்பா அழைப்புக் கொடுக்கணுங்கிறது என்னுடைய தீர்மானமான எண்ணம். அவர் வீட்டுக்குப் போனேன், அவரில்லை. பத்திரிகையைக் கொடுத்தேன். அது அவருக்குப் போய்ச் சேரும் என்றாலும் நேரடியா அவரைப் பார்த்துக் கொடுக்கணும்னு நினைச்சேன். பிரசாத் ஸ்டூடியோவில் இருக்கிறதா சொன்னாங்க. நேரா அங்கே போனேன், ராஜா அங்கே தனியா தன் அறையில் இருந்தார். அங்கே போனதுமே
“சார்! ஆண்பாவம் 25 ஆண்டு விழா எடுக்கிறேன், அந்தப் படத்தை மக்களிடம் பெரிய அளவில கொண்டு போனதுல உங்க பங்கு பெருசு, எப்படி சார் நன்றி சொல்றது என்று சொல்லி சாஷ்டாங்கமா விழுந்து அவர் பாதத்தைத் தொட்டு வணங்கி எழுந்தேன். என்னையறியாமல் மடமடன்னு என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.அந்தக் கண்ணீருக்குக் காரணமே இல்லாம அது பாட்டுக்கு கொட்டிடுச்சு. நான் அப்படி அழுததே இல்லை.
அப்போ ராஜா “யோவ் உன்னை எப்பவோ நான் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்” அப்படின்னார்.
எனக்கு அதன் அர்த்தம் புரியல. என்ன சார்னு கேட்டேன்
“இல்லைய்யா, நான் ஊர்ல இருந்து அண்ணன் தம்பி கூட வரும் போது “டேய் உன்னை நான் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்”னாங்க அந்த வகையில உன்னை நான் தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்னார். அப்ப தான் எனக்கு நிம்மதி வந்தது. உனக்காச்சும் உதவி இயக்குனரா வச்சு சொல்லிக் கொடுத்தாங்க, எனக்கு யாருய்யா சொல்லிக் கொடுத்தாங்க என்று சொல்லி அவருடைய தாயார் ஒரு ரேடியோவை நானூறு ரூபாய்க்கு விற்று அந்த நானூறு ரூபாயை கொடுத்து எங்களைச் சென்னை அனுப்பி வச்சாங்க. அந்த நானூறு ரூபாயில் ஒரு ஐம்பது ரூபாயாவது கொடுன்னு எங்க அம்மா எங்கிட்டக் கேட்கல அப்படிப்பட்ட தாய்னு அவருடைய நிகழ்வை என்கிட்ட பகிர்ந்துகிட்டார். அந்த நிகழ்வை அவர் என்னிடம் பகிர்ந்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை, அதைச் சொல்லும் போது நெகிழ்ந்திட்டேன். அவரோட மனமார்ந்த ஆசிர்வாதம் எனக்கு உண்டு என்று சொன்னார். அது போதும் எனக்கு.

ஆண்பாவம் படத்துக்குப் பெரும் பலமாக இருந்தவை அப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் இல்லையா?

நிச்சயமாக, பின்னணி இசை இணையத்தளத்தில் எல்லாம் போட்டிருப்பாங்க (ஆகா 😉 )
இளையராஜாவின் படங்களில் ஆண்பாவம் குறிப்பிடத்தக்க முக்கியமானதொன்று. அந்தப் படத்தின் பூஜைக்கு ஒரு சாங் ரெக்கார்ட் பண்ணணும்னு சொல்லிட்டு அவரிடம் போய்க் கதை சொன்னேன். அப்போது அவருடைய தேதி இல்லாத காரணத்தால், “ஷீட்டிங் ஆரம்பிச்சுடேன்யா முதல்ல”ன்னாரு.
ஷூட்டின் மட்டுமல்ல டப்பிங்கும் முடிச்சுட்டு அவரைப் போய்ப் பார்க்கிறேன். தியேட்டர் சாங் ஒன்று இருக்கும் “இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும்” அப்படி, இதை நானாக ஊகித்த்து அப்படி வரவேணும்னு நினைச்சு ஷூட் பண்ணிட்டேன்.
மீண்டும் அவரைப் போய்ப் பார்க்கும் போது
“என்னய்யா இங்கேயே நிக்கிறாய் ஷுட்டிங் போகலையான்னு”
“ஷீட்டிங் மட்டுமில்ல சார் டப்பிங்கும் முடிச்சிட்டேன்”னு சொன்னேன்
அப்படியான்னு ஆச்சரியப்பட்டு சரி இன்னிக்கே படத்தைப் போடுன்னாரு. சரின்னு அந்த நாள் ஈவினிங்கே படத்தைப் போட்டுக் காமிச்சேன். மறுநாள் காலை ஏழு மணியில இருந்து ஒன்பது மணிக்குள்ள அந்தப் படத்தில் வரும் அத்தனை ட்யூனையும் போட்டுட்டாரு.
ஒன்பது மணிக்கு ரீரிக்கார்டிங் அதுக்கப்புறமா பாடல் பதிவும் பாடல் ஷூட்டிங்கும் இருந்துச்சு.
அந்தப் படத்தின் மீது அவருக்குள்ள ஈடுபாட்டால் உடனேயே ரீரிக்கார்டிங்கை ஆரம்பிச்சிட்டார். அந்தப் படத்தின் ரீரிக்கார்டிங்கைப் பத்தி சொல்லணும்னா எல்லாமே பிரமாதம். நடிகை சீதா அதில் புதுமுகம். அவங்க அறிமுக ஷாட்டில் சாமி கும்பிட்டுட்டு வீடு திரும்பி வர்ரது மாதிரி சீன். நான் ஒரு பத்து ஷாட் எடுத்து வச்சிருந்தேன். ஆனாலும் புதுமுகமாச்சே ரொம்ப நேரம் காமிச்சா நல்லாயிருக்காதுன்னுட்டு ஒரு மூணு ஷாட்டைத் தான் எடுத்தேன்.அதுக்கு அவர் வாசிச்ச பின்னணி இசையைப் பார்த்துட்டு, “சார் சார் நான் இன்னும் சில ஷாட்ஸ் எடுத்திருக்கேன்” என்று சொல்லி மேலும் சில ஷாட்டை இணைத்தேன். அற்புதமான பின்னணி இசை அதுக்கு. ஒரு வசனகர்த்தாவோட வேலையை பின்னணி இசையில் அவர் பண்ணியிருப்பார்.

குறிப்பாக இந்த ஆண்பாவம் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கு உயிரோட்டமாக ராஜாவின் பின்னணி இசை இருந்தது இல்லையா?

ஆமா, ஆண்பாவம் 25 விழாவில் அந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருத்தரைக் கூப்பிடும் போதும் அந்தப் பின்னணி இசையைப் போட்டுத் தான் கூப்பிட்டேன். எங்களை 25 வருஷம் பின்னோக்கிக் கூட்டிப் போனதுன்னு எல்லோரும் நெகிழ்ந்தாங்க. ஆண்பாவம் திரைக்கதை புத்தக வெளியீடே
திடீர்னு “பெட்டி வந்தாச்சு பெட்டி வந்தாச்சு” அப்படின்னு சொல்லி ஒரு படப்பெட்டிக்குள்ளே அந்தத் திரைக்கதை நூலை வச்சு வெளியிடப்பட்டது.

எண்பதுகளின் ஆரம்பத்திலே இந்தப் பின்னணி இசை குறித்த கவனம் அதிகம் இல்லாத வேளையில் ராஜா ஒரு ராஜாங்கமே படைத்திருப்பார், இந்த விஷயத்தில் ஒரு இயக்குனராக உங்களின் பங்களிப்பும் இந்தப் பின்னணி இசை எப்படி வரவேண்டும் என்ற ரீதியில் இருந்ததா?

முழுக்க முழுக்க ராஜா அவர்களுடைய சிந்தனை, செயல், அவருடைய உழைப்புத் தான். ஏன்னா ராஜா அவர்களிடம் அபிப்பிராயம் சொல்லுமளவுக்கு பாண்டியராஜன் இல்லை. காட்சிகளை நான் சில நேரங்களில் அவரிடம் “இப்படி ஒரு காட்சி இருக்கு” என்று சொல்வேனே தவிர இதற்கு இப்படி இசை வேண்டும் என்று நான் கேட்டதேயில்லை. நான் எடுத்த காட்சியை “ஆகா இது இவ்வளவு நல்லாயிருக்கே”ன்னு பிரமித்தது அவருடைய பின்னணி இசைக் கோர்ப்புக்கு அப்புறம் தான். நாம அவரிடம் 60 சதவிகத்தைக் கொடுத்தா அதை 100 சதவிகிதம் ஆக்கிக்கொடுத்திடுவார்.

ஆண்பாவம் படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி, தமிழ் சினிமாவுக்கு அந்நியமான ஒரு நபர், அதில் நடித்ததோடு நாட்டுப்புறப்பாடல்களையும் பாடியிருப்பார்

ஆமாமா, அற்புதமான இதயம் அது. அன்பு, வெகுளித்தனம், அப்புறம் என்ன சொல்வது உலகம் அறியாத ஆனா உலகப்புகழ் பெற்றவங்க. என்னைப் பேரன்னு தான் கூப்பிடுவாங்க. நான் ஒரு நிகழ்ச்சியைச் சொல்லணும் ஒருமுறை ஒரு கார் விபத்தில் சிக்கிட்டேன். நான் மருத்துவமனையில் இருந்தப்போ நான் யார் வருவார்கள் என்று எதிர்பார்த்தேனோ அவர்கள் எல்லாம் வரவில்லை. ஆனா கொல்லங்குடி கருப்பாயி நான் இருந்த மருத்துவமனைக்கு வந்து என் ரூம் வாசல் வரைக்கும் வந்தாங்களே தவிர என்னை வந்து பார்க்கல. என் பேரனை பெட்டில் படுத்திருக்கிறமாதிரிப் பார்க்க மாட்டேன் அப்படின்னு நான் டிஸ்சார்ச் ஆகுற வரைக்கும் அந்த வாசலில் இருந்து அழுது என்னைப் பார்த்துக் கட்டியணைச்சு “அப்பா உனக்கு ஒண்ணும் இல்லையே”ன்னு சொல்லிட்டுப் போன அற்புதமான ஜீவன் அது.

என்னுடைய கோபாலா கோபாலா படத்தில் குஷ்புவுக்கு பாட்டியா போட்டிருப்பேன், கபடி கபடி படத்தில் எனக்கு அம்மாவா நடிச்சிருப்பாங்க. எல்லாப்படத்திலும் அவங்களைக் கூப்பிட்டு வந்து நடிக்க வச்சு கெளரவிக்கணும்ங்கிற எண்ணம் எனக்கிருந்தது.

அப்படியான ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்கும் போது ஏதாவது சுவாரஸ்யமான அனுபவம் ஆண்பாவம் படப்பிடிப்பில் இடம்பெற்றிருக்குமே?

ஆமாம், வி.கே.ராமசாமி அவர்கள் பல தலைமுறை நடிகர்களைக் கண்ட சீனியர். அவரும் கொல்லங்குடி கருப்பாயியும் நடிக்கும் ஒரு காட்சியில் அந்தம்மா ஒரு டயலாக்கை மாத்திச் சொன்னாங்க. நான் சொல்லிக்குடுத்திட்டிருக்கேன்.திடீர்னு வி.கே.ராமசாமி அவர்கள் வந்து “இந்த இடத்துல நீங்க இந்த வசனத்தை விட்டுட்டீங்கம்மா இதை இப்படிப் பேசுங்க” அப்படிச் சொல்லிக் கொடுத்தார். உடனே அந்தம்மா “நீ ஒண்ணும் எங்கிட்ட சொல்லாதே, நீ தான் தப்பு தப்பா பேசுறே” அப்படின்னாங்க. என்னடா இது வி.கே.ஆரை இப்படி சொல்லிட்டாங்களேன்னு நான் அதிர்ச்சியாயிட்டேன். அதுக்கு வி.கே.ஆர் ஐயா ஒரு சிரிப்பு சிரிச்சங்க பாருங்க, அதாவது சந்தோஷத்தின் உச்சத்தில் சிரிச்சாரு. என்னை வந்து இப்படிச் சொன்னாங்களேனு கோபம் வராம அந்த எதார்த்தத்தை ரசிச்சாங்க. இப்படிப் பல சம்பவங்கள்.

இந்தப் படத்தில் கொல்லங்குடி கருப்பாயி அவர்களின் பாடற்திறனைக் கண்டறிந்து அவரைப் பாடவைத்தவர் யார்?

அவங்க பாடகியா இருந்த பிற்பாடு தான் நான் கூப்பிட்டேன். அவங்க அப்போது தொலைக்காட்சியில் எல்லாம் பாடுவாங்க. ஒரு பெரிய ரகசியம் சொல்றேன். ஒருமுறை அவங்க பாடல் நிகழ்ச்சியில் ஒரு புதுமை பண்ணலாம்னுட்டு அவங்க நாட்டுப்புறப் பாடல் பாடுவாங்க அதை இன்றைய நவீன இசையோடு இன்னொருத்தர் பாடுவார் அப்படின்னு ஒரு நிகழ்ச்சி பண்ணினாங்க. அதை அன்றைய முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் பார்த்து உடனே தொலைக்காட்சி நிலையத்துக்குத் தொலைபேசியில் அழைத்து “அவங்க இயல்பு அந்த ஒரிஜினாலிட்டி அதை மாத்துறதுக்கு இதையெல்லாம் பண்ணாதீங்க அவங்களைத் தனியாப் பாட விடுங்க” என்று சொல்லி வைத்தார்.

“ஆண்பாவம்” என்ற முழு நீள பொழுதுபோக்குச் சித்திரம் உருவாவதற்கு உங்களுக்கு ஏதாவது இன்ஸ்பிரேஷன் இருந்ததா?

இன்ஸ்பிரேஷன் எதுவும் கிடையாது. சிந்தனை தான். ஒருத்தர் பொண்ணு பார்க்கப்போற இடத்துல அதே ஊரில இன்னொரு பொண்ணைப் பார்த்துட்டான். அதை யோசிச்சவுடனேயே இவன் பார்க்க வேண்டிய பெண் இன்னொன்று இருக்கு. இவன் போய்ப் பார்த்த பொண்ணைப் பார்க்க வேண்டிய மாப்பிளை இன்னொருத்தன் இருக்கான். ஆக இதுல கதை கிடைக்குது. அப்படித் தான் இந்தக் கதையில் பயணப்பட்டேன். வழக்கமா இப்படியான கதையில் மாற்றிப் பார்த்த பொண்ணு கூட கல்யாணம் நடப்பதா இருக்கும். ஆனா அந்தப் படத்துல பாண்டியனின் தம்பியா நான் நடிச்சதால பார்க்கவேண்டிய அந்தப் பொண்ணை தம்பி கல்யாணம் பண்ணிப்பதாக கதை உருவாக்கியிருப்பேன்.

அந்தப் படத்தில் “காதல் கசக்குதைய்யா” என்ற புதுமையான பாடல் அந்தப் பாடல் பிறந்ததன் பின்னணி ஏதாவது உண்டா?

அந்த ரகசியத்தையும் இவ்வளவு நாட்களுக்கப்புறம் உடைக்கிறேன். அந்தப் பாடலை எனக்கு வைக்கும் போது புதுமுகமான என்னை வச்சு மக்கள் அந்தப் பாடலை ரசிப்பாங்களாங்கிற அச்சம் எனக்கிருந்தது.
ராஜா சாரிடம் கதை சொல்லும் போது குறித்த சிச்சுவேனுக்கு பாடலை வைக்குமாறு சொல்லிருந்தேன். அதை ஞாபகம் வச்சு ராஜா கேட்க , அந்தப் பாடலை “மனைவி ரெடி”ங்கிற அடுத்த படத்துக்கு வச்சுக்குவோம்னு சொன்னேன். அந்தப் பாடலில் கூட சில வரிகள் இருக்கும்.
“பொண்டாட்டியை லவ் பண்ணுங்க, நம்ம தகப்பன் பேச்ச தாய் பேச்சக் கேட்கணும்”னுட்டு மனைவி ரெடி படத்தின் சாரத்தை அந்தப் பாடலில் வச்சிருப்பேன். ஆனா அந்தப் பாட்டு நல்லா வந்ததும் ஆண்பாவம் தயாரிப்பாளர் சுப்ரமணியத்திடம் “சார் இந்தப் பாடலை அடுத்த படத்துக்கு வச்சுக்கப் போறேன்” என்றதும் “ஒ பாட்டு நல்லா இருக்குன்னதும் உங்க சொந்தப்படத்துக்கு வச்சுப்பீங்களோ”ன்னு கேட்டதும் “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க இந்தப் படத்துக்கே வச்சுக்கலாம்”னு சொல்லிப் பாடலைப் படம் பிடித்தேன். அப்ப்போ நடனப்பெண்கள் வெளியூர் போயிட்டாங்க யாருமே இல்லை. உடனே அவ்வளவு நடனப்பெண்களை எடுக்க முடியாதுன்னதும் பெண்கள் இல்லைன்னா என்ன ஆண்களை வச்சுப்போம் என்றேன். புதுசா செட்டுப் போடணும் ஆனா நேரம், பணம் அதிகம் ஆகும்னதும் சரி ப்ளெயின் செட்டு தான் என்றேன். இப்படி ஒரே நாளில் டக்கு டக்குன்னு முடிவெடுத்து அந்தப் பாடலை எடுத்தேன். அதுக்குக் காரணம் அப்போதிருந்த துணிச்சல், இளங்கன்று பயமறியாதுங்கிறது மாதிரி.

இந்தப் படத்தின் வசூல் ரீதியான வெற்றியைத் தவிர விருதுகள் ஏதாவது கிட்டியதா?

சினிமா எக்ஸ்பிரஸ் எனக்கு சிறந்த புதுமுக நடிகர்ங்கிற விருதைக் கொடுத்திருந்தாங்க. தின இதழ் பத்திரிகை கூட சிறந்த புதுமுகமாக கொடுத்தார்கள். அதைத் தவிர எந்தவொரு அரசு விருதுகளையும் நான் இதுவரை பெறவில்லை.

நெத்தியடி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் உருவெடுத்தீர்கள், இந்த முயற்சிக்குப் பின்னால் இருந்தது உங்கள் ஆரம்பகால இசையறிவு அப்படியா?

ஆமாம் ஆனால் வேற தயாரிப்பாளர் என்றால் இது தேவையான்னு கேட்பார். ஆனா நெத்தியடி தயாரிப்பாளர் அவிநாசிமணி அவர்கள் என் மாமனார். நான் மியூசிக் பண்றேன்னதும் அவரால மறுக்க முடியல ஏன்னா மாப்பிளையா போயிட்டேன். அந்தத் துணிச்சலின் நெத்தியடி படத்துக்கு இசையமைச்சேன். அதுக்கப்புறம் யாருமே என்கிட்ட வந்து நீங்க ஏங்க படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று கேட்கவேயில்லை.

ஆனால் அந்தப் படத்தில் கேட்கும் வகையில் பாடல்களும் இருந்தன இல்லையா?

இருந்தது ஆனா எனக்குக் கேட்கல, அதாவது ஏதோ பண்ணோம்கிறது ஓகே, அடடா ஆஹா பிரமாதம் அதுதான் வேணும் சினிமாவுக்கு. ஏதோ பண்ணோங்கிறமாதிரித் தான் இருந்துச்சுன்னு நான் நினைச்சு அன்னிக்கு ஆர்மோனியப்பெட்டியைத் தூக்கி வச்சுட்டேன்.

ஆனால் என்னால் ஒரு இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தக் கூடிய துணிச்சல் இருந்தது. டபுள்ஸ் படத்துக்காக தேவாவின் புதல்வர் ஶ்ரீகாந்த் தேவாவை அறிமுகப்படுத்தினேன்.

உங்கள் கலைப்பயணத்தில் இன்னொரு முக்கியமானதொரு அம்சம், இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களது இயக்கத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா ஆகியோர் இணைந்து இசையமைக்க “என் இனிய பொன் நிலாவே” படம். ஆனால் அது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அங்கீகாரத்தைப் பெறமுடியாமல் போய்விட்டது?

நீண்ட இடைவெளி இல்லைங்க ஒரு நூற்றாண்டு தொடங்கி அடுத்த நூற்றாண்டுல வெளியானது. சினிமா ஒரு ஐஸ்கிரீம், ஐஸ்கிரீமை ஐஸ்கிரீமா இருக்கும் போது கொடுத்தா சாப்பிட்டுடுவாங்க. அது கரைஞ்சு போச்சுன்னா ப்ரீயா கொடுத்தாக் கூடச் சாப்பிடமாட்டாங்க. அதுதான்.
அந்தப் படத்தின் முதல் டைட்டில் அப்பா அம்மா விளையாட்டு அப்புறம் நிறைய இடைவெளிகள் அதுக்கு வந்தது.

நாம எப்பவுமே நடந்த சோக சம்பவங்களை, விபத்துக்களைப் பதிவு பண்ணக்கூடாது. பாலுமகேந்திரா அவர்களின் இயக்கத்திலும் பாண்டியராஜன் நடித்திருக்கிறான் என்ற பெருமையே போதும்.

எண்பதுகளிலே எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் நாயகனாக வலம்வந்தீர்கள், இடையில் ஒரு சிறு இடைவெளி மீண்டும் கோபாலா கோபாலா படத்தின் மூலம் மீள் வெற்றி கிட்டினாலும் அதைத் தக்க வைக்கமுடியாமல் இருந்ததற்கு ஏதாவது காரணங்கள் இருக்குமா?

நிறைய இருக்கலாம்.

ஒரே மாதிரி வெற்றிகள் அமைந்தால் அது வாழ்க்கையும் அல்ல சுவாரஸ்யமும் அல்ல அது வந்து உப்புச் சப்பில்லாதது. ஒரு நாளிலேயே ராகுகாலம் எமகண்டம் அப்படின்னு ஏகப்பட்ட கால நேரம் வரும் போது ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வருவது என்ன வியப்பு.
25 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் இருந்து ஒரு அருமையான மனிதர் என்னைப் பேட்டி காண்கிறார் என்ற தருணத்தை ரசிக்கணும் ருசிக்கணும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு தாய்க்கு ஒரு தாலாட்டு மற்றும் முத்துக்கள் மூன்று ஆகிய திரைப்படங்களிலும் நடித்த பெருமை உங்களுக்கு உண்டு இல்லையா?

நடிகர் திலகத்தோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால் போதும் என்பது தான் என் அதிகபட்ச ஆசை. ஆனால் தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் அவர் எனக்குத் தந்தையாகவும் தாயாக நாட்டிப்ப்பேரொளி பத்மினி அம்மா இந்த வாய்ப்பு கிடைக்குமா என்று என்னை நானே கிள்ளிப்பார்க்கும் அளவுக்கு அதிர்ச்சியா இருக்கு. அற்புதமான உலகம் போற்றும் நடிகர், அவரின் மகனாக நடித்தது பெரும் பாக்கியம். ஊட்டியில் ஷீட்டிங் நடக்கும் போது ஒதுக்குப் புறமா சிறுநீர் கழிக்கப் போகும் போது துணைக்கு வாடா பாண்டியா என்று என்னை அழைத்துப் போகும் அளவுக்கு உரிமை எடுத்திருந்தார்.

உங்கள் ஆரம்பகால வெற்றிப்படங்களிலே கதாநாயகன் படத்தின் மூலக்கதை மலையாளத்தில் நாடோடிக் காற்று திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பின்னர் உங்களின் கோபாலா கோபாலா படத்தை மலையாளத்தில் ரீமேக் ஆக்கியிருந்தார்கள்.அது பெருமை அல்லவா?

வழக்கமா பெரும்பாலும் மலையாளத்தில் இருந்து தான் தமிழுக்குக் கொடுப்பார்கள். என்னுடைய கோபாலா கோபாலா கதையை மலையாளத்தில் எடுத்த போது மிஸ்டர் பட்லர் என்ற அந்தப் படத்தின் டைட்டில் கார்டுக்குப் பின் கதை ஆர்.பாண்டியராஜன் அப்படின்னு வரும். கதாநாயகன் பெயருக்கு முன்னாலேயே என் பெயரைப் போட்டார்கள். எனக்குக் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. அதுதான் கதாசிரியர்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம். அந்தப் படம் ஒரு வெற்றிப்படமும் கூட.
அந்தப் படத்தின் நாயகன் திலீப் அந்த வெற்றிக்காக எனக்கு ஒரு பரிசு கொடுத்தார். அவர் தயாரித்த கதாவிஷேசன் படத்தில் எனக்கு ஒரு பாத்திரம் கொடுத்தார்.

நீங்கள் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் நடந்த நிகழ்வு, “தூறல் நின்னு போச்சு” படத்தின் பாடல் கம்போசிங்கின் போது இளையராஜா இசைமைத்த குறித்த ஒரு ட்யூனை நீங்கள் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று உரிமை எடுத்துக் கொண்டு கேட்டுக் கொண்டதாகவும் ஆனல் உங்கள் குருநாதர் தயக்கம் காட்டியதாகவும் ஒரு செய்தி அதைப்பற்றிச் சொல்லுங்களேன்?

எனக்கு மறந்து போன ஜாதகங்களை எல்லாம் சொல்றீங்க (சிரிக்கிறார்) ராஜா சார் அற்புதமான ஒரு ட்யூன் போட்டார். ஆனால் என்னுடைய குருநாதர் “ரொம்ப உச்சஸ்தாயில் பாடவேண்டியிருக்கு” என்று சொல்லி வேணாம் என்றார். அந்த ட்யூனைப் பயன்படுத்தல. பின்னர் அதையே ஓளங்கள் மலையாளப்படத்தில் ஜானகி அம்மா பாடிய “தும்பி வா தும்பக்குளத்தே” என்று அமைந்து பெரும் புகழைப் பெற்றுக்கொடுத்தது. அதைக் கேட்டதும் குருநாதர் பாக்யராஜ் ஆகா ரொம்ப அற்புதமான பாட்டா இருக்கே என்றதும் , “சார் இதைத் தான் ராஜா சார் நமக்கு முன்னாடி போட்டுக் காமிச்சார்”னு அப்போது சொன்னேன்.

“தூக்கம் வராத போது சிந்தித்தவை” என்ற தனது நூல் குறித்து பாண்டியராஜன் சொல்லும் கருத்துக்கள், ஆண்பாவம் படத்தை ஏன் ரீமேக்கக் கூடாது என்ற போது அவரின் சிந்தனை மற்றும் பணவசதி இல்லாத காரணத்தால் இளமையில் படிக்காத இவர் பின்னர் எம்.ஏ பட்டதாரியாகி பின்னர் தமிழ் சினிமா குறித்து எம்.பில் ஆய்வு மற்றும் தற்போது “தமிழ்த் திரைப்படக்கலைஞர்களின் சமுதாயப் பங்களிப்பு” என்ற பெயரில் பி.எச்.டி படிப்பும் படித்து வருவதாகவும் தன் பேட்டியில் தொடர்ந்தார்.


பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரனுடன் ஒரு கல(கல)க்கல் மாலைப்பொழுதில்


“”சுராங்கனி” என்ற பைலாப்பாடலுக்கு நாற்பது வயசுக்கு மேலிருக்கும் ஆனால் அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் நான்கு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை கூடத் தொட்டிலில் இருந்து பைலா ஆட்டம் ஆடும். அந்த அளவுக்குப் பெரும் புகழ்பெற்ற இந்தப் பாட்டுக்குச் சொந்தக்காரர் பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் அவர்கள்.

பாடகராக, நடிகராக இன்றும் இளமைத் துடிப்போடு உலகெங்கும் ஓடியோடி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்கவைக்கும் தன் இசைப்பயணத்தைத் தொடர்ந்து வரும் மனோகரன் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் பல தடவைகள் வந்திருந்தாலும் எட்ட இருந்து அவரை ரசித்துப் பார்க்கும் கடைக்கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். இம்முறை அவுஸ்திரேலியாவின் பேர்த், மெல்பன் நகரங்களோடு சிட்னிக்கும் வந்து தன் பைலாப்பாடல்களால் கலக்க வந்திருக்கும் இவரை நேற்று வானொலிக் கலையகத்தில் நேரே சந்தித்துப் பேசி மகிழ ஒரு வாய்ப்புக் கிட்டியது.
ஆண்டாண்டுகாலமாகப் பழகியவர் போன்று இயல்பாகப் பேசி , நகைச்சுவைத்துக் கலகலப்பான ஒரு மாலை நேரத்தை வானொலி ரசிகர்களுக்கும் எங்களுக்கும் அவர் ஏற்படுத்தி விட்டார். நெடு நாள் ஆசையாக அவரை வானொலிப் பேட்டி காணும் ஆசையில் ஒரு பாதியாக இந்தப் பேட்டி அமைந்து விட்டது. இன்னொரு பேட்டியில் இவரது வாழ்க்கைப் பயணத்தைப் பெட்டக நிகழ்ச்சியாக உருவாக்க ஆவல் கொண்டிருக்கின்றேன்.

நேற்று அவர் தந்த இந்த கலகல பேட்டியைக் கேட்டுப்பாருங்கள், பேச்சோடு பாடியும் ஆடியும், தன் ரசிகர்களோடு பழைய நினைவுகளை இரைமீட்டும் ஒரு பைலாப் பேட்டியாக அமைந்து விட்டது இது 😉

நாளை மறுதினம் செப்டெம்பர் 4 ஆம் திகதி A.E.மனோகரன் அவர்களுடன் தென்னிந்தியத் திரைப்படப்பாடகி T.K.கலா, மலேசியப் பாடகர் ராஜராஜசோழன் ஆகியோரின் கலக்கல் இசை நிகழ்ச்சியை சிட்னி ரசிகர்கள் தவற விடாதீர்கள்.

பேட்டியின் நடுவே பாடிக் குஷிப்படுத்தும் A.E.மனோகரன் அவர் அருகே தீவிர ரசிகர் கலைச்செல்வன்

A.E.மனோகரன் அவர்களது பிரபலமான பாடல்களில் சில

சுராங்கனி சுராங்கனி

அன்பு மச்சாளே எந்தன் ஆசை மச்சாளே

சில சில பாவையர்

மால்மருகா எழில் வேல்முருகா நீயே

பிரண்டி, பியர், விஸ்கி போடாதே

பறந்து வந்து பாடுகின்றேன்

சிறு சின்னஞ்சிறிய என் வயதினிலே

“ஏவிஎம் தந்த எஸ்பிஎம்” நூலாசிரியர் ராணிமைந்தன் பேட்டி

கண்ணதாசனின் “தென்றல்” பத்திரிகையில் ஆரம்பித்து பின்னர் ஏவிஎம் ஸ்ரூடியோவில் சேர்ந்து எடிட்டிங் பயிற்சி பெற்று , உதவி இயக்குனராக மாறி பின்னர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனராக இருந்தவர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள். ரஜினி, கமல் போன்ற பெரும் நடிகர்களை வைத்து இயக்கியிருந்தாலும் மிகவும் அடக்கமான எளிய மனிதர் இவர். சில வருஷங்களுக்கு முன்னர் ஏவிஎம் ஸ்ரூடியோவைப் பார்க்கச் சென்ற நான் இவரை சந்தித்துப் பேசியபோது இருகரங்களையும் பற்றியவாறே நேசத்துடன் பேசியது இன்னும் பசுமரத்தாணி போல இருக்கின்றது.

நான் பணிபுரியும் இன்னொரு எப்.எம் வானொலியான “தமிழ் முழக்கம்” வானொலிக்கு இந்திய செய்திகளைப் பகிர்ந்து வரும் திரு ராணி மைந்தன் அவர்கள் பல சுயமுன்னேற்ற, தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கின்றார். அவர் படைப்பில் அண்மையில் வெளி வந்ததே விகடன் பிரசுரமான “ஏவிஎம் தந்த எஸ்பிஎம்”. இந்த நூல் ஆக்கப்பட்ட பின்னணி குறித்த ஒலிப்பேட்டி ஒன்றை கடந்த வாரம் தமிழ் முழக்கம் வானொலிக்காக திரு.ராணி மைந்தன் அவர்களைத் தொடர்பு கொண்டு எடுத்திருந்தேன்.
அந்தப் பகிர்வை இங்கே கேட்கலாம்.

ஒலிப்பேட்டியில் இடம்பெற்ற சில சுவையான தகவல்கள்.

ராணி மைந்தனின் ஒருவருஷ கால உழைப்பாக இந்த நூல் வந்திருக்கின்றது.

எஸ்.பி.முத்துராமன் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அப்போது ராணி மைந்தனை அழைத்து வைத்து கண்களை மூடிக்கொண்டு ஒவ்வொரு படமாக தன் அனுபவங்களை சொல்லச் சொல்ல பதினாறு மணி நேரங்களுக்கு மேலாக ஒலிப்பதிவு செய்து நூலை ஆக்கியிருக்கின்றார்.

முத்துராமன், ஜெய்சங்கர் போன்றோரின் டயரியை எடுத்து ஒவ்வொரு மாதமும் தனக்குத் தேவையான நாட்களின் கால்ஷீட்டை இவரே எழுதி வைத்துவிடும் அளவிற்கு உரிமை எடுத்துக் கொள்வாராம்.

ரஜினியை வைத்து 25 படங்களை எடுத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் என்ற பெருமை எஸ்.பி.முத்துராமனுக்கே சாரும்.

ரஜினிகாந்த் தொடர்பு கொண்டு எஸ்.பி.முத்துராமன் வாழ்க்கை வரலாற்று நூலை விழாவாக எடுத்துச் செய்ய வேண்டும் என்றாராம். ஆனால் எந்திரன் படப்படிப்பு இருந்த காரணத்தால் எளிமையாக ரஜினி வீட்டில் வைத்து வெளியிடப்பட்டது.

சுரேஷ் சக்ரவர்த்தி ஒலிப்பேட்டி

“எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது” நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின் அனுபவங்களில் சொன்னது போலத் தான் அந்தப் பேட்டி எடுத்த நிகழ்வும் அமைந்திருந்தது.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னர் இணையம் என்ற ஒரு ஊடகம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பேசும் நல்லுலகை ஆக்கிரமிக்க ஆரம்பித்த வேளை இணையமூலமான தமிழ் ஒலிப்பகிர்வை வழங்கிய முன்னோடிகளில் India Direct இன் கலாபுகழ் தமிழோசை என்பது தவிர்க்க முடியாத அங்கமாக இருந்தது. அதில் பாடல் தொகுப்புக்கள், பேட்டிகள் என்று சுரேஷ் சக்ரவர்த்தியும் பின்னாளில் சுபஸ்ரீ தணிகாசலமும் வழங்கிய ஒலிப்பகிர்வுகள் தனித்துவமானவை. அப்போது நான் பல்கலைக்கழகப் படிப்புக்காக புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா வந்திருந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த தனிமை வாழ்வின் குறையை கொஞ்சமாவது நிவர்த்தி செய்தது இந்த ஒலித் தொகுப்புக்கள். இவற்றை மீண்டும் மீண்டும் கேட்டு ஆனந்தமடைவேன்.


காலம் பல வருஷங்களைச் சுழற்றிய நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி அவுஸ்திரேலியாவில் இருக்கின்றார் என்பது மட்டும் தெரிந்த நிலையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இவரை வானொலிப் பேட்டிக்கு அழைத்து வருவோம் என்று எப்போதோ நினைத்திருந்தேன். வானொலி நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு ஒரு இருபது நிமிடம் வரை இவரை நேற்றுப் பேட்டி எடுக்கப் போகின்றோம் என்று நினைத்திருக்கவில்லை. அவரின் மெல்பனில் உள்ள உணவகத்துக்கு அழைத்து என் தகவலைச் சொல்லி வைத்தேன். சில நிமிடங்களில் என் போனுக்கு அழைத்தார். இன்னும் பத்து நிமிஷங்களில் உங்கள் அனுபவங்களை எமது வானொலி நேயர்களுக்குப் பகிரமுடியுமா என்றேன். திடீரென்று கேட்டதால் என்ன சொல்வாரோ என்று நினைத்த எனக்கு தாராளமாக பண்ணலாம் பிரபா என்று சொல்லி வைத்தார். பேட்டி ஆரம்பமானது, 57 நிமிடத்துளிகளில் மனுஷர் தன் கலகலப்பான பேச்சில் தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து நிறைவானதொரு பேட்டியைத் தந்து விட்டார். இந்தப் பேட்டியை வானொலியைக் கேட்டவர்கள் மட்டுமன்றி இணைய ஒலிபரப்பின் மூலமும் நண்பர்கள் இணைந்து கேட்டு ரசித்தார்கள்.

தொடர்ந்து சுரேஷ் சக்ரவர்த்தி பேசுவதைக் கேட்போம்

பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான சில பகிர்வுகள்.

நடிகை ஸ்ரீபிரியாவை ஆலு அக்கான்னு அழைப்பேன், எவ்வளவோ பேர் வந்து இதுக்கு வரணும்(கலைத்துறை) சாதிக்கணும், பேரோடு சேர்ந்து புகழும் புகழோடு சேர்ந்து பணமும் கிடைக்கணும்னு வருவாங்க. ஆனா உனக்கு எல்லாமே ஈசியா, சுலபமா வந்ததால உனக்கு இதனோட அருமை தெரியல. நீ விட்டுட்டுப் போறாய் அப்படின்னாங்க. நான் எதுவுமே பிளான் பண்ணி இப்படி வரணும் அப்படி வரணும்னு வரலே.

00000000000000000000000000000000000000000000000000000

அப்போது சினி இண்டஸ்ரியில் 15 ஆர்டிஸ்ட் தேதி பார்த்துக்கிட்டிருந்தேன். ராமா நாயுடுவின் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புது நகைச்சுவை நடிகரா என்னை அழைச்சுப் போனாங்க. அப்போது எனக்கு 18, 19 வயசு, விளையாட்டுப் பையனா இருந்த என்னை கூட நடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஊக்கப்படுத்தி நடிக்க வச்சார். எனக்கு தெலுங்கு தெரியாத நிலையில் ஆங்கிலத்தில் எழுதி வச்சு படிச்சா தமிழில் கெட்ட வார்த்தை பேசுவது போல இருந்தது. “நாய் வேஷம் போட்ட குலைச்சாகணும், மொழியை கத்துக்கோ” அப்படின்னு எஸ்.பி.பி சொல்லி நிறைய தெலுங்குப் படம் பார்க்க வச்சு ஒரு மாசம் அந்த மொழியை கற்றேன்.தெலுங்கில் தொடர்ந்து 3 படம் பண்ணினேன்.


பிரேமா படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை நான் வழங்கிய முந்திய பதிவைக் காண

000000000000000000000000000000000000000000000000000000000000

தமிழில் ஜி.வியின் தயாரிப்பில், கே.சுபாஷ் இயக்கத்தில் “வாக்குமூலம்” என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தேன். அந்தப் படத்தில் கூட நடித்தவர் கவிதாலயா கிருஷ்ணன் அவர் நான் சூட்டிங்கில் பண்ணிய சேஷ்டைகளைப் பார்த்து, அப்போது அழகன் படத்தில் வரும் அதிராம்பட்டி சொக்கு பாத்திரத்துக்காக சிபார்சு செஞ்சார்.
பாலசந்தர் ஆபீஸ் போனேன்.
தொடர்ந்து பாலசந்தர் மாதிரி பேசிக்காட்டி அந்த நாள் சம்பாஷணையை நினைவு படுத்துகிறார்.

000000000000000000000000000000000000000000000000000000000000000

நான் டிவியில் ரொம்ப பிரபலமா இருந்த நேரம் பாலசந்தர் என்னை வச்சு “சொர்ணரேகை”ன்னு ஒரு சீரியல் எடுத்தார். சித்தி சீரியல் புகழ் பாஸ்கரின் முதல் இயக்கம் அது. காமடிக்கு அப்போது நான் பிரபலமா இருந்த நேரம் என்னை ஒரு ஜோசியராக வரும் கொலைகாரன் பாத்திரத்தில் நடிக்க வச்சார். எனக்கு சுட்டுப் போட்டாலும் செந்தமிழ் வராது. ஆனால் அதில் செந்தமிழ் பேசி , கர்னாட்டிக் பாட்டு பாடி எடுக்கணும். குறிப்பாக அந்தக் காட்சியில் வசனம் பேசுவதெல்லாம் டப்பிங் இல்லாம லைவா பண்ணியிருந்தோம்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000

சன் டிவியில் இணைந்த அனுபவங்களைப் பகிர்கின்றார்,

சிறுவயசு முதலே கலாநிதி மாறன், நான், சக்சேனா, கண்ணன், ஷம்மின்னு நாம எல்லாம் நண்பர்கள். முரசொலியின் வண்ணத்திரை, குங்குமம் ஆகிய பத்திரிகைகளுக்கு அபோது எழுதினேன். கலாநிதி மாறனை புகழ், தயாநிதி மாறனை அன்பு அப்படின்னு அழைப்போம். அதன் பாதிப்பில் வந்தது தான் பின்னாளில் இணைய ஒலிபரப்பாக நான் தயாரித்த கலாபுகழ் தமிழோசை நிகழ்ச்சி.

துபாய்ல இருந்து அப்போது வந்திருந்தேன். சன் டிவிக்கு ஸ்டூடியோ கிடையாத நிலையில் சத்யா ஸ்டூடியோவில் கண்ணன் என்பவர் இயக்கிய டிக் டிக் டிக் நிகழ்ச்சி. செட் எல்லாம் போட்டு ஆடியன்ஸும் வந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த முக்கியமான காமடியன் வராத நிலையில் கலாநிதி மாறன் “நீயே பண்ணுப்பா”ன்னு மேடையில் ஏத்தி விட்டார். ஓவர் நைட்டில் என்னை ஸ்டாராக்கி விட்டார். தொடந்து துபாய்க்கு நான் போக முடியாம ஏழரை வருஷங்கள் ஆயிரக்கணக்கான சீரியல்கள், நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன்.
முதன் முதலாக சன் டிவியின் Senior manager of Programming ஆக இருந்திருக்கேன்.

அமிதாப் பச்சனின் எபிசி கார்ப்பரேஷனுக்காகப் பண்ணிய “பதி சபாபதி” நாடகம் பிறந்த கதை. அதனைத் தொடர்ந்து அவ்வை ஷண்முகி படத் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டில் தொடந்த வழக்கு பற்றியும் பேசுகிறார்.

நான்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மாறி கடைசியில் தேர்வான உமாவுடன் பெப்சி உங்கள் சாய்ஸ், மீண்டும் மீண்டும் சிரிப்பு போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கிய நினைவுகளைப் பகிர்கின்றார்.

00000000000000000000000000000000000000000000000000000


பிரபு தேவா தயாரித்த சீரியல் கொடுத்த சிக்கலும் அதனைத் தொடர்ந்து சன் டிவியில் இருந்து ஜெயா டிவிக்கு கதையை பேசுகின்றார். ஜெயா டிவியின் முதல் நாள் லைவ் நிகழ்ச்சியில் சன் டிவி என்று வாய் தடுமாறிப் பேசி வாங்கிக் கட்டியதும் , விளம்பர இடைவேளையில் ஜெயலலிதா தொலைபேசியில் அழைத்துப் பேசியதையும் நினைவுபடுத்துகின்றார்.

0000000000000000000000000000000000000000000000000000000

உத்தம்குமாரின் India Direct மூலம் கலாபுகழ் தமிழோசை என்ற இணைய ஒலிபரப்பை நடத்திய அந்த நான்கு வருச நினைவுகளும் அது கொடுத்த திருப்தியையும் சொல்லி மகிழ்கின்றார்.

00000000000000000000000000000000000000000000000000000000

தனது கலை வாழ்வுக்கு சிறு ஓய்வு கொடுத்து விட்டு அவுஸ்திரேலியாவின் மெல்பனில் வாழ்ந்து வரும் சுரேஷ் சக்ரவர்த்தி தற்போது நடத்தும் Madras Banyan Tree என்ற உணவகம் ஆரம்பித்த கதையோடு பேட்டி நிறைவை நாடுகின்றது.

00000000000000000000000000000000000000000000000000000000

பி.குறிப்பு: சுரேஷ் சக்ரவர்த்தியின் காட்சி வடிவத்தை இந்தப் பதிவுக்குப் போடவேண்டும் என்று எண்ணி இன்று பகல் பூராவும் தேடி ஒருவாறு அழகன் பட டிவிடி வாங்கி அதில் இருந்து அவர் stills தயாரித்து இங்கே அவற்றையும் பகிர்ந்திருக்கின்றேன். இவரைப் போல இன்னொரு சுவாரஸ்யமான கலைஞரைச் சந்திக்கும் நாள் கிட்டும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகின்றேன்.