றேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் “என்ன தமிழ்ப்பாட்டு”


வணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று வித்தியாசமாக, தெலுங்கில் இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களைக் கொடுக்கிறேன். இந்தப்பாடல்களின் மெட்டுக்களில் இளையராஜா இசைமைத்த தமிழ் வடிவப்பாடல்களை நீங்கள் குறிப்பிடவேண்டும், இந்தத் தமிழ்ப்பாடல்கள் எல்லாமே தெலுங்கிலிருந்து நேரடியாக வெளிவந்த படங்களின் டப்பிங் படங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்தப் பாடல்கள், கேட்டு, பார்த்து, யோசித்துப் பதிலோடு வாருங்கள்.

போட்டி இத்தோடு முடிந்தது இதோ அந்தத் தமிழ்ப்பாடல்கல

1. Vennello Godaari Andam – Sitara

இந்தப் பாடலின் தமிழ் வடிவம், நிழல்கள் படத்திற்காக எஸ்.ஜானகி பாடிய “தூரத்தில் நான் கண்ட உன் முகம்” படத்தில் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

2. Ilalo Kalise – Anveshana

இந்தப் பாடல் அன்பின் முகவரி படத்திற்காக “உயிரே உறவே” எனத் தமிழில் வந்திருக்கிறது, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடியிருக்கிறார்கள்.

தெலுங்கிலிருந்து மொழிமாற்றப்பட்ட காதல் கீதம் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட “வாழ்வா சாவா” எனவும் வந்திருக்கிறது

3. Ee Chaitra Veena -Preminchu Pelladu

இந்தப்பாடல் “ஆனந்தக் கும்மி” படத்திற்காக “ஓ வெண்ணிலா” எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குரல்களில்

4. Maata Raani – Maharshi

செண்பகமே செண்பகமே படத்தில் வரும் “மஞ்சப்பொடி தேய்க்கையிலே” எஸ்.பி.பாலசுப்ரமணியம்

5. Chukkalu Themanna – Vidudala

காற்றினிலே வரும் கீதம் படத்திற்காக ஜெயச்சந்திரன் குரலில் “சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்”

றேடியோஸ்புதிர் 66 – லால லாலா லா லா

தமிழ்த் திரையிசைப்பாடல்களில் வாத்திய இசையோடு கூட்டுக் குரல்களும் வரிகளை உச்சரிக்காது ஆலாபனை செய்யும் வண்ணம் பல பாடல்கள் தொன்று தொட்டு வந்திருக்கின்றன. இன்னும் விசேஷமாக பிரபல பாடகர்களை இந்த இடைக் குரலுக்குப் பயன்படுத்தியது எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்துப் பாணி. எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோரின் பாடல்கள் சில உதாரணமாக விளங்கி நிற்கின்றன.
இங்கே நான் தந்திருக்கும் றேடியோஸ்புதிர் பாடல் துளிகளும் அவ்வமயமே, எழுபதுக்குப் பின் வெளிவந்த பிரபல பாடகர்களை இடைக்குரல் ஆலாபனைக்குப் பயன்படுத்திய பாடல்கள். உங்கள் வேலை, இங்கே தரப்பட்ட பாடல்கள் என்ன என்ன, அவற்றில் வந்து கலக்கும் இடைக்குரல் பாடகர்கள் யார் என்பது. எங்கே ஆரம்பிக்கட்டும் போட்டி 😉

பாடல் ஒன்று பாடல் இரண்டு பாடல் மூன்று பாடல் நான்கு பாடல் ஐந்து

ஓகே மக்கள்ஸ் போட்டி முடிந்தது இதோ பதில்கள்

பாடல் ஒன்று : மெளனமேன் மெளனமே – இடைக்குரல் சித்ரா

பாடல் இரண்டு : நாரினில் பூத்தொடுத்து மாலை ஆக்கினேன்
இடைக்குரல் சித்ரா

பாடல் மூன்று: அதோ மேக ஊர்வலம்
இடைக்குரல் சுனந்தா

பாடல் நான்கு : தீர்த்தக்கரை தனிலே
இடைக்குரல் ஜென்சி

பாடல் ஐந்து : மழை தருமோ என் மேகம்
இடைக்குரல் சைலஜா

றேடியோஸ்புதிர் 65 : சாக்ஸ் கலந்து நான் தருவேன்

வணக்கம் மக்கள்ஸ், மீண்டும் ஒரு றேடியோஸ்புதிரோடு வந்திருக்கின்றேன். இந்தத் தடவையும் கடந்த இரு போட்டிகள் போன்று பாடல்களின் இடை இசை கொடுக்கப்பட்டு அந்தப் பாடல்கள் எவை என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். இதோ
தொடர்ந்து வரும் இடையிசை எந்தெந்தப் பாடல்களில் அமைந்தவை என்று கண்டுபிடித்துப் பதிலோடு வாருங்கள்.

புதிர் 1

பதில்
காதல் பரிசு படத்தில் வரும் “ஏ உன்னைத்தானே”

புதிர் 2

பதில்
தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் வரும் “வருது வருது”

புதிர் 3

பதில்
ரெட்டைவால் குருவி படத்தில் வரும் “கண்ணன் வந்து பாடுகின்றான்”

புதிர் 4

பதில்
நினைக்கத் தெரிந்த மனமே படத்தில் இருந்து “கண்ணுக்கும் கண்ணுக்கும் மோதல்”

புதிர் 5

பதில்
வெற்றிவிழா படத்தில் இருந்து “சீவி சிணுக்கெடுத்து”

றேடியோஸ்புதிர் 64: குழலூதும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ


வணக்கம் மக்கள்ஸ்,

கடந்த இசைத்துணுக்குப் புதிருக்கு நீங்கள் கொடுத்த பெருவாரியான ஆதரவில் (?) மீண்டும் இன்னொரு இசைத்துணுக்குப் புதிரில் உங்களைச் சந்திக்கிறேன். இம்முறையும் வழக்கம் போல இசைஞானி இளையராஜாவின் முத்தான ஐந்து படங்களின் பாடல்களில் இருந்து இந்தப் புதிர்கள் வருகின்றன. இவற்றின் பொது அம்சம், எல்லாப் பாடல்களிலும் புல்லாங்குழல் வாத்தியத்தின் பயன்பாடு காணப்படுகின்றது. இதோ தொடர்ந்து இசையைக் கேட்டுப் பதிலோடு வாருங்கள் 😉

ஒகே மக்கள்ஸ், போட்டி நிறைந்தது, பங்குபற்றிய அனைவருக்கும் மிக்க நன்றியும் போட்டியில் வெற்றி கண்டோருக்கு வாழ்த்துக்களும்

பாட்டு 1

சரியான பதில்: பாண்டிநாட்டுத் தங்கம் படத்தில் இருந்து “உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது” பாடியவர்கள் மனோ, சித்ரா. இதோ முழுமையான பாடல்

பாட்டு 2

சரியான பதில்: “முத்தமிழ் கவியே வருக” தர்மத்தின் தலைவன் படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா

பாட்டு 3

சரியான பதில்: நினைவுச்சின்னம் படத்துக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் “வைகாசி மாதத்துல பந்தல் ஒண்ணு போட்டு”

பாட்டு 4

சரியான பதில்: “நினைத்தது யாரோ நீ தானே” பாடல் பாட்டுக்கொரு தலைவன் படத்தில் இருந்து ஜிக்கி, மனோ பாடுகிறார்கள்

பாட்டு 5

சரியான பதில்: பாசப்பறவைகள் படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடுகின்றார்கள் “தென்பாட்டித் தமிழே”

றேடியோஸ்புதிர் 63 “கிட்டார் இசைப்பதைப் பாராய்” பதிலோடு வாராய்


வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் மக்கள்ஸ்,
ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டுமொரு றேடியோஸ்புதிரில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த றேடியோஸ்புதிர் சற்று வித்தியாசமாக ஐந்து பாடல்களின் இடையிசை தரப்பட்டு அந்தப் பாடல்கள் எதுவென்று கண்டுபிடிக்கும் போட்டியாக அமையவிருக்கின்றது. இந்தப் போட்டியில் இடம்பெறும் ஐந்து பாடல்களிலும் பொதுவாக அமையும் அம்சங்கள், இவை அனைத்தும் இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்ந்த பாடல்கள் என்பதோடு இந்த இடையிசையில் கிட்டார் வாத்தியத்தின் பயன்பாட்டைக் காணலாம்.

புதிரில் இடம்பெறும் பாடல்கள் எவை என்பதே போட்டி, எங்கே ஆரம்பிக்கட்டும் உங்கள் பொது அறிவு 🙂
ஒகே மக்கள்ஸ், கடந்த இரண்டு நாள் அவகாசத்தில் வந்த பதில்களில் ஒரேயொருவர் மட்டுமே அனைத்துப் புதிர்களுக்குமான பதிலை அளித்திருக்கின்றார். அவர் பெயர் மணி, காண்க பின்னூட்டத்தில்.
போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙂

இதோ விடைகள்.

பாட்டுப்புதிர் 1

அந்தப் பாட்டு கண்ணுக்கொரு வண்ணக்கிளி படத்தில் வந்த, இசைஞானி இளையராஜா இசையமைத்துப் பாடும்
“கானம் தென்காற்றோடு போய்ச் சொல்லும் தூது”

பாட்டுப்புதிர் 2

இந்தப் பாட்டு காக்கிச் சட்டை படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,பி.சுசீலா பாடும் “பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்”

பாட்டுப்புதிர் 3

அந்தப் பாடல் ஜெயச்சந்திரன், முடிவல்ல ஆரம்பம் படத்துக்காகப் பாடும் “பாடி வா தென்றலே”

பாட்டுப்புதிர் 4

இந்தப் புதிருக்கான பதில், இசைஞானி இளையராஜா இசையமைத்துப் பாடும் “நிலவே நீ வரவேண்டும்” பாடல் என்னருகே நீ இருந்தால்” படத்தில் இருந்து

பாட்டுப்புதிர் 5

இறுதிப் புதிருக்கான பதில் “பூந்தளிர் ஆட பொன் மலர் சூட” என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் பாடல் பன்னீர்ப்புஷ்பங்கள் திரைப்படத்திற்காக.

றேடியோஸ்புதிர் 62: மினி ஜோசப் என்னவானர்?


வணக்கம் வணக்கம் வணக்கம்,

நீஈஈஈஈண்ட நாட்களுக்குப் பின்னர் றேடியோஸ்புதிர் பகுதியில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தப் புதிரும் ஒரு அட்டகாசமான ராஜாவின் அறிமுகம் சார்ந்த கேள்வியாக அமைந்திருக்கின்றது.
இசைஞானி இளையராஜாவுக்கு கேரளத்துக் குயில்களின் குரல்களில் ஏனோ மோகம், அந்தவகையில் அவர் தமிழுக்கு அறிமுகப்படுத்திய மலையாளப்பாடகர்கள் பட்டியல் நீண்டது. அப்படி வந்தவர் தான் இந்தப் பாடகி. இந்தப் பாடகி ஏற்கனவே மலையாளத்தில் ஒரு பாட்டுப் பாடியிருந்தாலும், தமிழில் இசைஞானி இளையராஜாவின் முத்திரைப் பாடலைப் பாடக் கிடைத்தது அவருக்கு ஒரு கெளரவம்.

ஆனால் நாகூர் பாபு, பாடகர் மனோ ஆனது போல, மினி ஜோசப் என்று வந்த இந்தப் பாடகியின் பேரை மாற்றினார் இசைஞானி. அப்போது பெரும் எதிர்பார்ப்பில் வந்த படத்திற்காக நல்லதொரு பாடலொன்றை இந்தப் பாடகிக்காக வழங்கினார் ராஜா. தொடர்ந்து இளையராஜாவின் பல படங்களில் பாடகியாகச் சிறப்பிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு ஒரு திருப்புமுனை கிடைத்தது இன்னொரு இசையமைப்பாளரால். ஆனால் என்ன பயன். இவருக்குக் கிடைத்த அந்தப் பெரும் புகழ் இருக்கும் போதே தன்னால் பாட முடியவில்லை என்று ஒதுங்கிக் கொண்டார். மீண்டும் பாட வந்தபோது ஏற்கனவே புதுக்குயில்கள் பல கூடாரமிட்டிருந்ததால் முற்றாகவே மறக்கடிப்பட்ட பாடகியாகிப் போனார். யார் இந்த மினி ஜோசப் இவர் பாடிய அந்த முதற்பாட்டு என்ன, இவரின் பெயரை இசைஞானி எப்படி மாற்றி அமைத்தார் என்பது தான் இந்தப் புதிரின் கேள்வி

மண்ணெண்ணை தீப்பிடிப்பது போலச் சட்டென்று வரவேண்டும் பதில்கள் 😉

போட்டி இனிதே ஓய்ந்தது

பதில் இதுதான்
அந்தப் பாடகி மினி ஜோசப் என்ற மின்மினி
ராஜா அறிமுகப்படுத்திய படம்: மீரா
பாடல்: லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணை ஸ்டவ்வு
பிரபலமாக்கிய இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: சின்னச் சின்ன ஆசை (ரோஜா)

றேடியோஸ்புதிர் 61: ஒரே படம் மூன்று தேசிய விருதுகள்


என்னதான் சிறப்பானதொரு படைப்பாக இருந்தாலும்,இந்தப் படம் இவ்வளவு தேசிய விருதுகளைக் கொடுக்கும் என்று இயக்குனரே எதிர்பார்த்திருக்கமாட்டார். படிப்பைத் தொடர வேண்டிய பாடகியை நிறுத்தி இந்தப் படம் உன்னை உயர்த்தும் என்ற இசைஞானியின் சொல்லை மெய்ப்பிக்க சிறந்த பாடகி என்ற தேசிய விருது அவருக்குக் கிட்டியது. பாடல்கள் ஒவ்வொன்றுமே முத்துக்கள் ஆனால் இந்தப் படத்துக்கு முன்னமே கவிஞர் இன்னொரு படத்துக்குத் தேசிய விருதை வாங்கி விருதுக்கு கெளரவம் தேடிக்கொடுத்து விட்டார். ஆனால் இத்தனை ஆண்டுகள் உழைப்பில் ஒவ்வொரு படத்துக்குமே விருதுகள் வாங்கக்கூடிய தரத்தில் இருந்தாலும் இந்தத் தேசிய விருது இசையமைப்பாளருக்கு இரண்டாவது தடவையாகக் கிடைக்கின்றது. ஒளிப்பதிவாளராகவேண்டும் என்று ஆசைப்பட்டுத் திரையுலகம் வந்த அம்மணிக்கு அரிதாரம் போட்டு, கூடவே இந்தப் படத்தின் மூலம் தேசிய விருதையும் கொடுத்துக் கெளரவித்துக் கொண்டது.

என்ன இருந்தாலும் வாழ்க்கையில் இப்படி ஒரு இயல்பானதொரு கலைஞன் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்தும் நாயகனுக்குத் தேசிய விருது கிட்டவும் வரவில்லை இனியும் கிட்டாது ஏனென்றால் அவர் இனி நடிக்க மாட்டாராமே.

ஒகே மக்கள் புதிருக்கு ஏகப்பட்ட க்ளூ விரவியிருக்கு, பதிலோடு வருக
என்ன படம் கூடவே ஒரே படத்தில் தேசிய விருது கிடைத்த அந்த மூன்று பிரபலங்கள் யார்?

சரியான பதில்

சிறந்த நடிகை: சுஹாசினி
சிறந்த பாடகி: சித்ரா
சிறந்த இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சிந்து பைரவி

போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

றேடியோஸ்புதிர் 60 – “பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு”


வணக்கம் வணக்கம் வணக்கம், ஒரு சின்ன இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிரோடு வந்திருக்கிறேன். இந்தப் புதிரில் நான் கேட்கப்போவது ஒரு பாடல் குறித்தது. கவிஞர் முத்துலிங்கம் அவர்களும் இசைஞானி இளையராஜாவும் இணைந்து ஏராளமான முத்துக்களைக் கொடுத்திருக்கின்றார்கள். அதில் ஒன்றுதான் இந்த முத்து.

பாரதிராஜாவின் ஒரு படம், இந்தப் படத்தின் அறிமுக நாயகிக்கான பாடலை எழுதவேண்டும் என்று ஒரு நாள் இரவு பாரதிராஜாவின் மேலாளர் வடுகநாதன் கவிஞர் முத்துலிங்கத்தைச் சந்தித்து கூடவே அந்தப் பாடலுக்கான மெட்டமைக்கப்பட்ட இசை தாங்கிய ஒலி நாடாவையும் கொடுத்து விட்டுக் கிளம்பினார். துரதிஷ்டவசமான வீட்டில் மின்சாரம் இல்லை அன்று. அடுத்த நாள் பாடல் ஒலிப்பதிவு. இந்த நிலையில் மறுநாள் ராஜாவைச் சந்திக்கிறார் முத்துலிங்கம். பாடல் ரெடியா என்று கேட்டபோது நிலமையைச் சொல்லி விளக்கிவிட்டுடு இப்பொழுதே எழுதிவிடுகிறெஎன் என்று சொல்லியவாறே அவர் முன்னால் எழுத ஆரம்பிக்கிறார். முதல் அடியை எழுதி விட்டு பொருத்தமான அடுத்த அடியை எழுதும் போது கவனித்த ராஜா இரண்டாவது அடியை மாற்றிவிட்டு “பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்” என்று எழுதுமாறு சொன்னாராம். அதையே இணைத்துவிட்டு முழுப்பாடலையும் எழுதிமுடித்தார் முத்துலிங்கம். அந்தப் படத்திலேயே வெற்றிபெற்ற பாடலாக இந்தப் பாடலும் அமைந்து விட்டது. அது எந்தப் பாடல் என்பது தான் கேள்வி. பதிலோடு ஓடி வாருங்கள் 😉

இதோ போட்டி முடிவடைந்து விட்டது, சரியான பதில் இதுதான்

பாடல் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
படம்: புது நெல்லு புது நாத்து
அறிமுக நாயகி: சுகன்யா

றேடியோஸ்புதிர் 59 – மூத்த பாகம் உதவிக்கு இளைய பாகம் மூத்ததுக்கு

றேடியோஸ்பதியின் ஆங்கிலப்புத்தாண்டு ஆரம்ப இடுகையாக ஒரு புதிரோடு தொடங்குகிறேன். நீண்ட நாட்களாகப் போட்டி இன்றித் தவிக்கும் அன்பு உள்ளங்களுக்கும் ஒரு தீனி போட்டது மாதிரியும் ஆச்சு.
இங்கே ஒரு படத்தின் பின்னணி இசையைக் கொடுக்கிறேன். இந்தப் பின்னணி இசை வரும் படத்தை இயக்கியவர் எண்பதுகளின் முக்கியமான நட்சத்திர இயக்குனர். இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால் இதே படத்தின் பாகம் 1 ஐ இந்த நட்சத்திர இயக்குனரின் உதவி இயக்குனராக இருந்தவர் பாகம் 2 ஐத் தன் குருநாதர் இயக்குவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இயக்கிப் பெருவெற்றி பெற்ற படம். சிஷ்யனுக்குக் கிடைத்ததோ பெருவெற்றி, ஆனால் பாகம் இரண்டை இயக்கிய அவரின் குருநாதருக்குக் கிடைத்ததோ தோல்விப் படம். சீமைக்குப் போனாலும் சரக்கிருந்தாத் தானே எடுபடும்.

இரண்டு படங்களின் நாயகனும் ஒருவரே, இசையும் ஒரேயொரு ராஜா அந்த இளையராஜாவே. பின்னணி இசையைக் கேட்டுக்கொண்டே ஓடி வருக பதிலோடு

போட்டி இனிதே முடிந்தது, பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 😉

சரியான பதில்
கல்யாணராமன் – இயக்கம் ஜி.என்.ரங்கராஜன்
ஜப்பானில் கல்யாணராமன் – இயக்கம் எஸ்.பி.முத்துராமன்

றேடியோஸ்புதிர் 58 : தேசிய விருது பெற்ற அந்தக் கலைஞருக்கு வயசு 80

ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டு(ம்) ஒரு றேடியோஸ்புதிரில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்தமுறை வரும் புதிர் சற்று வித்தியாசமாக திரைப்படத்திற்கு அத்திபூத்தாற்போல நுழைந்த ஒரு கலைஞர் எடுத்த எடுப்பிலேயே அவரின் இசையமைப்பில் வெளிவந்த படத்துக்குத் தேசியவிருதைப் பெற்றுக் கொடுத்த சங்கதியை வைத்துப் புதிர் போடுகின்றேன்.

குறித்த அந்த இசைக் கலைஞர் இந்த ஆண்டோடு 80 வயதை எட்டியிருக்கின்றார், நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் இவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் இசையமைத்த அந்தப் படம் குறித்த ஆண்டில் வெளியான படங்களில் சிறந்த இசைக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொண்ட தமிழ்ப்படம் அது. கூடவே இதே படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடன இயக்குனர் ஆகிய பிரிவுகளிலும் தேசிய விருதைத் தட்டிக்கொண்டது மேலதிக தகவல்.

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் அடலெயில்ட் நகரில் இடம்பெற்ற படவிழாவிலும் கலந்து கொண்டதோடு சிட்னியிலும் இரண்டு காட்சிகள் காண்பிக்கப்பட இருந்தது. இந்தப் படத்துக்கெல்லாம் கூட்டம் வருமா என்று நினைத்தேன். ஆனால் அரங்கம் நிறைந்த காட்சிகளாக அவை அமைந்திருந்தன. கூடவே படத்தின் கதையம்சமும் எடுத்த விதமும் கூட இயல்பானதொரு வரலாற்றுச் சித்திரமாக அமைந்தது.

சரி, கேள்வி இதுதான். எடுத்த எடுப்பிலேயே தான் முதலில் இசையமைத்த படத்தில் தேசிய விருதைப் பெற்றுக் கொண்ட அந்த இசைக்கலைஞர் யார்? குறித்த அந்தத் தமிழ்ப்படத்தின் பெயர் சொன்னால் போனஸ் புள்ளிகள் 😉