பாகுபலி எப்பிடி எப்பிடி

சிட்னியில் பாகுபலி படம்
காண்பிக்கப்படுகின்றது என்பதே இந்தப் படத்தின் பிரமாண்டத்தை மிஞ்சிய
செய்தியாக எனக்குப் பட்டது. அதை விட ஆச்சரியம் படம் காண்பிக்கப்பட்ட
ஒவ்வொரு திரையரங்கிலும் தலா இரண்டு அரங்கங்கள் ஒதுக்கியிருந்தார்கள்.
கடைசியா இன்னொரு ஆஆஹாஆஆச்சரியம் (உங்களுக்குப் பதிலா நானே கொட்டாவி
விட்டேன்) இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு சிட்னியில் போடுவதற்கான எந்த
ஆரவாரமும் தென்படவில்லை.

படத்தின் ஆரம்பக்
காட்சியில் ராணி சிவகாமி தேவி (ரம்யா கிருஷ்ணன்) ஓஓஓஓடும் காட்சியிலேயே
படத்தின் முழு ஓட்டமும் எப்படியிருக்கும் என்று அனுமானிக்க முடியும்
என்றாலும் படத்தின் முடிவு வரை பார்வையாளனைக் கட்டிப் போடுவது இந்தப் படம்
தன்னை விளம்பரப்படுத்திய பிரம்மாண்டம் தான்.
தெலுங்கில் இருந்து தமிழில் மொழி மாற்றும் படங்களின் பொதுவான குறை “தானாடா விட்டாலும் தன் தசை ஆடும்” 

மீன் பேசுபவரின் வாய் ஒருபக்கம் உச்சரிக்க வசனம் வேறொரு பக்கம்
“இழி”படும். ஆனால் இந்தப் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அந்தக் குறையே
இல்லாத பக்கா தமிழ்ப்படம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. 
ஆரம்பத்தில்
இருந்து உன்னிப்பாக அவதானித்த விடயம் வசனப் பங்களிப்பு. மிக எளிமையாக,
நிதானமாக, அழகு தமிழில் எல்லாத்தரப்பு ரசிகனையும் காப்பாற்றிய விதத்தில்
வசனகர்த்தா மதன் கார்க்கிக்கு ஒரு சபாஷ். படம் முழுக்கத் தன் பணியைச்
செவ்வனே செய்த திருப்தி அவருக்கும் கிட்டியிருக்கும்.
அந்த மகிழ்மதி தேசம் ஆகா என்னவொரு அழகான பெயர்.
இந்தப்
படத்தின் நடிகர் தேர்வில் முந்திரிக் கொட்டையாய் நான் முன் மொழிவது ரம்யா
கிருஷ்ணனைத் தான். ப்பாஆ என்னவொரு மிடுக்கு, தன்னுடைய பாத்திரமாகவே ஒன்றிப்
போய் நடித்த வகையில் படையப்பா நீலாம்பரிக்கு அடுத்து பாகுபலி சிவகாமி தேவி
இவரின் திரையுலக வாழ்வின் ஏட்டுச்சுவடியில் பொறிக்க வேண்டியது.
நாசரின்
பாத்திரம் இன்னொரு இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியில் வந்த வில்லத்தனம்.
அவருக்கே அலுப்புத் தட்டியிருக்கும். சத்யராஜிற்கு கெளரவமான, பெருமைக்குரிய
பாத்திரம். இவர்களை விட்டா ஆள் இல்லையா என்று கேட்ட மைசூர் சுரேஷ் ஐ
கனவிலும் பொருத்திப் பார்க்க முடியாது.
பிரபாஸ்
நடித்து நான் பார்க்கும் முதல் படம் இது. ட்விட்டர் வாழ் பிரபாஸ் ரசிகைகள்
தயவு செய்து இந்த வரியோடு என்னை block செய்ய வேண்டாம். மேற்கொண்டு
படிக்கவும். 
பிரபாஸ் இற்குக் கிடைத்த வேடங்களை வெகு சிறப்பாகவே
செய்திருக்கிறார். அந்த உடன் பிறவாச் சகோதரன் ராணா டகுபதி என்று படம்
முடியும் போது போட்ட எழுத்தோட்டத்திலேயே அறிந்தேன். ஆனாலும் பாதகமில்லை.
அனுஷ்கா
தலைவிரி முதுமைத் தோற்றத்தில் தோன்றும் காட்சியில் இருந்து கடைசி நிமிட்
வரை தோ வருது இந்தா வந்து “குழலில்லை குழலில்லை தாஜ்ஜுமஹால் நிழலு” என்றொரு
அழகுப் பதுமைக் குத்துப்பாட்டுக்குக் காத்திருந்து காத்திருந்து அவ்வ்வ்
(மண்வாசனை காந்திமதி கணக்கா மண்ணை வாரி வீசிங்)
தமன்னா
அழகு சாதனப் பொருள் என்பது உலகறிந்த விடயம் ஃபேர் அண்ட் லவ்லியை
யாராச்சும் ஜண்டு பாம் ஆக நெத்தியில் பூசுவாங்களா இல்லை பூசுவாங்களா?
தமன்னா கையை நீட்டி வீர வசனம் பேசும் போது ஐயோ இதென்ன தொங்கும் பூந்தோட்டம்
என்று துடிக்கிறதே தெம்மாங்கு பாடி.
பாகுபலி
முதற்பாதியில் கற்பனைக்கும் எட்டாத ஒரு சில காட்சிகளை வைத்து விட்டு
இடைவேளைக்குப் பின்னர் வெகு சிரத்தையாகப் படமாக்கிய போது முன்னதிலும் கவனம்
செலுத்தியிருக்கலாமே என்று தோன்றியது. பக்கத்தில் இருந்த என் இனிய தமிழ்
மகன் யாரோ ஒருவர் தன் நண்பருக்கு “தோ பார்ரா குருவி விஜய் ரயில் பாய்ஞ்ச
மாதிரி மலையைக் கடக்குறான்” போன்ற எள்ளலைத் தடுத்திருக்கலாம்.
முதல்
பாடலைத் தவிர மற்ற இரண்டும் வேகத் தடை. காதல் பாடலையும் மன்னித்து
விடலாம். ஆனால் அந்தக் குத்துப் பாட்டுத் தேவை இல்லை. படத்தின் ஆரம்பக்
காட்சிகளில் பரந்து விரிந்து சுழன்று எழும்பும் காமெராவோடு ஈடு கொடுக்க
வேண்டும் என்று கொஞ்சம் வேகமாக முன்னால் ஓடி விட்டார் மரகதமணி. பின்னர்
தான் திரும்பிப் பார்த்து ஒன்றாகப் பயணித்தது போல உணர்வு.
படத்தின்
இடைவேளைக்குப் பின்னர் தான் உண்மையான பிரம்ம்ம்ம்மாண்டம். அடேங்கப்பா
அந்தப் போர்க்களக் காட்சிகளிலெல்லாம் இருக்கையின் கால் பகுதிக்கு வந்து
விட்டேன் என்றால் பார்த்துக்குங்க.
பிரம்மாண்ட்டம்யா
என்னும் போதே கர்ணன் படம் எல்லாம் பார்த்த பரம்பரைடா என்று என் மனசாட்சி
என்னைத் திட்டுகிறது. (காதல் கோட்டை மணிவண்ணன் குரலில்) வயசாகிப் போச்சேடா
கலிய பெருமாள்.
இருந்தாலும் கடைசியில் போட்ட ஒரு முடிச்சால் 2016 இல் அடுத்த பாகுபலி வரும் வரை நம்பிக்கையை ஏற்படுத்திய விதத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி வெற்றி கண்டிருக்கிறார்.
மொத்தத்தில் “பாகுபலி” பலி எடுக்காத (தேன்) பாகு (சன் டிவி டாப் டென் மாதிரி நானும் சொல்லிட்டேனே யெப்பூடி)

SHamitabh – ஷமிதாப் – shAMITABH

சினிமாவை ஆத்மார்த்தமாக
நேசிப்பவனின் இலட்சிய இருப்பு,  தன் 
அடையாளத்தைத் தொலைத்தவரின் ஆதங்கம்
இதை அடித்தளமாக வைத்து Shamitabh படத்தின் மூலக்கரு அமைந்திருக்கின்றது. 

இந்தப் பதிவில் தலைப்பில் இருக்கும் SHamitabh VS shAMITABH தான் காட்சிகளை நகர்த்தும் பகடைக் காய்களாய். ஆனால் வழக்கம் போல கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஈகோ யுத்தம், நாலு சண்டை என்ற ரீதியில் அமைந்த மாமூல் மசாலாவும் அல்ல.  இயன்றவரை இயல்பாகவே திரைக்கதையோட்டத்தை அமைத்திருப்பதால் முழுமையான வணிக சினிமாவாக இந்தப் படத்தைச் சொல்ல முடியாது.

அமிதாப் பச்சான் என்ற மிகப் பெரும் நடிகருக்கெல்லாம் இந்த மாதிரிக் கதாபாத்திரம் ஊதித்தள்ளக்கூடியது. ஆனால் இந்தப் படமும் இவர் ஏற்று நடித்த பாத்திரமும் அமிதாப் இன் திரையுலக வாழ்வில் தவிர்க்க முடியாத அளவுக்கு படம் முழுக்க நிரம்பியிருக்கிறார். அமிதாப் ஐ விட்டு எந்த நடிகரையும் பொருத்திப் பார்க்க முடியாத அளவுக்குச் சிறப்புச் சேர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட அவரின் நிஜ வாழ்க்கையின் ஒரு பகுதிதான் படமாகியிருக்கிறது.

 தனுஷ் இற்கு ஷமிதாப் இன்னொரு மிகச்சிறந்த வாய்ப்பு, சிறுவயதில் இருந்தே சினிமா சினிமா என்று அலைந்து, ஏங்கி அந்த வாய்ப்பைப் பற்றிப் பிடிக்க எத்தனிப்பதிலும், புகழின் உச்சியில் இருக்கும் போது தன் சினிமா வாழ்க்கை தொலையப் போகின்றதே என்று துடிக்கும் போதும் சரி, மிகை நடிப்பில்லாது வாழ்ந்து காட்டியிருக்கிறார். படம் முழுக்க இவரின் அங்க அசைவுகள் தான் பிரதானம். 

தமிழ் சினிமா நாயகர்களில் கமல்ஹாசன் உயர்ந்தவர்கள் படத்தில் வாய் பேச முடியாத பாத்திரத்தில் முழுமையாக நடித்திருந்தார். கே.பாக்யராஜ் கூட ஒரு கை ஓசை படத்தின் இறுதிக்காட்சி வரை வாய் பேச முடியாதவராக நடித்திருப்பார்.  தனுஷிற்கு இந்தப் படம் வாயிலாக இப்படியானதொரு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. இந்த ஆண்டின் சிறந்த நடிகர் போட்டியில் அமிதாப் அல்லது தனுஷ் இந்தப் படத்தில் வந்தது போலவே போட்டி போடப் போகும் கூத்தும் நடக்கப் போகுதோ என்னமோ என்று சொல்லுமளவுக்கு அமைந்திருக்கிறது.

தனுஷ் இன் உடல் மொழிக்கு அமிதாப் இன் குரலைப் பொருத்தும் முதல் காட்சியில் அமையும் நடிப்புப் பயிற்சி கல கல கலக்கல்.
ஆரம்பத்தில் தனுஷ் இன் உருவத்தோடு அமிதாப் குரலைப் பொருத்திக் கேட்கும் போது ஏற்படும் நெருடலை அமிதாப் வழியாகவே கிண்டலாக “உன்னுடைய உடம்பின் எடையை விட என் குரலின் எடை அதிகம்” என்று பகிர்ந்து சமரசம் கொள்ள வைக்கிறார் இயக்குநர்.

களத்தூர் கண்ணம்மா கமலின் அக்கா மாதிரியே அக்க்ஷரா, உதவி இயக்குநராக  இது நாள் வரை இருந்தவர் இப்போது நாயகி ஆன முதல் வாய்ப்பிலேயே உதவி இயக்குநர் பாத்திரத்தில் நடித்திருப்பதும் புதுமை. 

 பொம்மலாட்டம் புகழ் ருக்மணி ஒரு சில காட்சிகளில் வரும் போது இழுத்து வாருங்கள் தமிழ் சினிமாவுக்கு என்று சொல்லுமளவுக்கு அழகுப் பதுமையாக இருக்கிறார்.
நாடோடிகள் அபிநயா ஒரு காட்சியில் எட்டிப் பார்க்கிறார்.

ஆரம்பத்தில் படத்தின் எழுத்தோட்டத்தோடு தாவும் மேற்கத்தேய இசை ஒரு பெரும் இசைக்கச்சேரியைக் கேட்கும் ஆவலோடு எம்மைத் தயார்படுத்துகின்றது.
தனுஷ் இன் சிறுவயதுக் காட்சியில் கிராமத்தில் நடித்துக் காட்டும் போது இயங்கும் ஒற்றை வயலின் அப்படியே ஒரு கூட்டம் வயலின் ஆவர்த்தனத்தைத் துணைக்கழைத்துப் பெருக்கெடுக்கும் போது மீண்டும் இளையராஜாவே வந்து இந்திய சினிமாவுக்குப் பின்னணி இசையின் தாற்பர்யத்தைப் பாடமெடுக்கும் காட்சியாகவே அமைந்து சிறப்பு சேர்க்கிறது.
அது போல் தனுஷ் வாய்ப்புத் தேடும் போதும் அமையும் பின்னணி இசையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.

படத்தின் மிகப் பெரிய ஏமாற்றம் வழக்கம் போல இசைஞானி இளையராஜாவின் இசையில் கிடைத்த ஆறு முத்தான பாடல்களில் இரண்டை மட்டுமே பயன்படுத்திவிட்டு மீதியைக் கடாசிய போது வந்த எரிச்சல் இன்னமும் அடங்கவில்லை. 

Ishq E Fillum நம்மூர் “ஜாதி மத பேதமின்றி (சினிமா சினிமா) மாதிரியான பாடல் முழுமையாக இருக்கிறது. பிட்லி பாடலும் இடையில் சிறு பொத்தல் போட்டுத் தொடர்கிறது. ஸ்டீரியோஃபோனிக் பாடல் அரை நிமிடமே படமாக்கப்பட்டு மண்ணை வாரி வீச வைக்கிறது. “தப்பட்” பாடல் ஒரு நிமிடம் ஒலித்து போங்காட்டம் ஆடுகிறது.
தெரியாமல் தான் கேட்கிறேன். சினிமாவை முழுமையாகக் களமாக அமைத்த படத்தில் இந்த மாதிரி லட்டு மாதிரி ஆறு பாடல்கள் கிட்டியிருக்கிறதே அவற்றை மோசம் செய்யாமல் பயன்படுத்த வேண்டும் என்ற மானசீக எண்ணம் கூட இல்லாமல் என்னத்தைப் படம் எடுக்கிறது? 
இனி டிவிடிக்காகக் காத்திருந்து அதிலாவது வெட்டுப்படாத முழுப்படமும் கொடுக்கிறார்களா என்று தேடவேண்டும். அதுவே இடைவேளைக்குப் பின் படத்தை ஒன்றிப் பார்க்க முடியாமல் செய்துவிடுகின்றது.

ராஜாவின் பாடல்களை மோசம் செய்த பெரும் குறையோடு அமிதாப், தனுஷ் ஆகியோரின் உழைப்புக்காக ஷமிதாப் படத்தைப் பாத்து விடுங்கள்.

Ordinary (Malayalam) சுகமான பயணம்

பிரயாணத்தில் சந்திக்கும் மாந்தர்களின் குணாதிசயங்களையும், வழி நெடுகக் கிட்டும் சுவாரஸ்த்தையும், சேர்த்தாலே நம்மூரில் ஏகப்பட்ட கதைகளை அள்ளலாம். ஆனால் இப்படியான படைப்புக்களை அதிகம் கொடுக்காத குறையோடே பயணிக்கிறது சினிமாவுலகம். கடைசியாக தமிழில் மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி திரைப்படம் முற்றிலும் புதுமுகங்களை முக்கிய பாத்திரங்களை வைத்துக் கொடுத்திருந்தது. பரவலாக இந்தப்படம் பலரை ஈர்க்காவிட்டாலும் எனக்கு என்னவோ மிகவும் பிடித்திருந்தது. பயணம் மீதான அதீத காதலாலோ என்னவோ தெரியவில்லை. அந்தவகையில் இன்று பார்த்த Ordinary என்ற மலையாளப்படத்தைப் பார்த்ததும் முதல் வரியில் சொன்ன அந்த திருப்தி கிட்டியது.

பத்தனம்திட்டாவில் இருந்து கவி என்ற எழில் கொஞ்சும் மலைக்கிராமத்துக்குச் செல்லும் ஒரேயொரு அரச பஸ் சேவை, பஸ் ஓட்டுனர் பிஜூ மேனன், வழி நடத்துனர் குஞ்சக்கோ போபன் இவர்களோடு கவி கிராமத்து மக்கள் என்று இடைவேளை வரை நல்லதொரு கலகலப்பான பயணமாகப் பதிவு செய்கிறது, அதன் பின் தொடரும் மர்ம முடிச்சும் முடிவில் கிட்டும் விடையுமாக அமைகிறது Ordinary படம்.
தொண்ணூறுகளின் நாயகன் பின் குணச்சித்திரம் என்று இயங்கும் பிஜூ மேனனுக்கு மிக முக்கியமான படங்களில் ஒன்றாக இதைச் சொல்லலாம். கொஞ்சம் முரட்டுத்தனம் கலந்த குணாம்சத்தைத் தன் குரலில் வெளிப்படுத்தும் பாங்கிலேயே வித்தியாசத்தைக் காட்டுகிறார். நாயகன் குஞ்சக்கோ போபனுக்கு இன்னொரு படம் என்ற அளவில் மட்டுமே.வழக்கமாக கதாநாயகரிடம் அடிபட்டுக் கதறும் மாமூல் வில்லன் பாத்திரங்களில் வந்த பாபுராஜ் இந்தப் படத்தில் குடிகாரப்பயணியாக வந்து கலகலப்பூட்டி ஆச்சரியப்படுத்துகிறார் தன் கலக்கல் நடிப்பால்.

கேரள மலைக்கிராமம் Gavi இன் அழகை அள்ளிச்சுமந்திருக்கிறது இந்தப் படம். மசாலாப்படத்திலும் கூட இயற்கை கொஞ்சும் எழிற் கிராமங்களைச் சுற்றிக் காட்சியமைத்துக் கவர்வதில் மலையாளிகள் தனித்துவமானவர்கள் என்பதைப் பல படங்கள் உதாரணம் சொல்லும். இதுவும் அப்படியே.

இந்தப்படத்தின் இன்னொரு பலம் பாத்திரமறிந்து கொடுத்த இசை வள்ளல் வித்யாசாகருடையது. உறுத்தாது பயணிக்கும் பின்னணி இசை மட்டுமன்றி, முத்தான பாடல்களும் முதல்தடவை கேட்டபோதே ஒட்டிக்கொண்டுவிட்டன. இடையில் எத்தனையோ புது இசையமைப்பாளர்கள் வந்துவிட்டாலும், வித்யாசாகருக்கான இடத்தைக் கேரளர்கள் கெளரவமாக வைத்திருப்பதற்கான காரண காரியம் தேடவேண்டியதில்லை

Ordinary சாதாரண கதை ஆனால் அசாதாரணமாக மனசில் ஒட்டிக்கொள்கிறது.


மனசை நிறைய வைத்த “உஸ்தாத் ஓட்டல்”

“வயிறு நிறையிறதுக்கு சமையல் பண்ண யாராலும் முடியும், ஆனா மனசும் நிறையணும் அதான் முக்கியம்” திலகன் (உஸ்தாத் ஓட்டல்)
மலையாள சினிமா கொஞ்ச வருஷமாகத் தன் சுயத்தை இழந்து கோலிவூட், டோலிவூட்  வைரஸ் பரவிக்கொண்டிருக்கும் சூழலில் அடுத்த தலைமுறைக் கலைஞர்கள் எங்கே போகப்போகின்றார்கள் என்றதொரு கவலை கேரளத்தின் நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகர்களின் நிஜமான கவலையாக இருக்கும். இப்படியானதொரு சூழலில் சில நம்பிக்கைகளை ஏற்படுத்தும் படைப்புக்கள் ஆங்காங்கே பூக்கும் போது இனம் கொள்ளாத சந்தோஷம் தோன்றும். அப்படியானதொரு நிறைவை ஏற்படுத்தியிருந்தது உஸ்தாத் ஓட்டல் திரைப்படத்தைப் பார்த்து முடித்த பின்னர்.
கேரளத்தின் பெரும் நடிகர் மம்முட்டியின் மகன் தல்குவார் சல்மான் நடித்த இரண்டாவது படம் இது. வாரிசு நடிகரைக் களமிறக்கும் போது ஏகப்பட்ட மசாலாவை அள்ளித் தூவி பில்ட் அப் கொடுப்பது தானே இன்றைய நடைமுறையாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் தல்குவார் சல்மானின் பாத்திரம் ஆரம்பம் முதல் இறுதி வரை அந்தப் பங்கத்தைச் செய்யாது கதையின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றாக மட்டுமே தன் பங்களிப்பைச் செய்கின்றது. இன்னும் சொல்லப்போனால் உஸ்தாத் ஓட்டல் சொந்தக்காரராக வரும் கரீம் என்ற திலகனுக்கான இறுதி யாத்திரையின் மகத்தான அஞ்சலிகளில் ஒன்று இந்தப் படம் எனலாம்.
லண்டனில் ஒரு பெரும் நட்சத்திர ஓட்டலில் பிரதம சமையற்காரராக வேலை செய்யவேண்டும் என்ற கனவோடு  ஃபைஸி (தல்குவார் சல்மான்), அவனின் தந்தைக்கோ தம் சொந்த ஊரான கோழிக்கோடுவில் ஒரு நட்சத்திர ஓட்டலின் உரிமையாளராக ஃபைஸியை வைக்கவேண்டும் என்ற இலட்சியம்.  தந்தை, மகனுக்குள்ளிருக்கும் இந்த இலட்சிய முரண்பாடுகளால், கோழிக்கோடுவில் உஸ்தாஸ் ஓட்டல் என்றதொரு பிரியாணிக்கடை நடத்திவரும் ஃபைஸியின் தாத்தா கரீமின் கவனிப்புக்குள்ளாகும் ஃபைஸியின் வாழ்க்கை எப்படி மாறுகின்றது என்பதே இந்தப் படத்தின் அடி நாதம். சொல்லப்போனால் இந்தக் கதையை ஏகப்பட்ட துண்டுகளாக வெவ்வேறு வடிவங்களிலேயே தமிழிலேயே ஏராளம் படங்கள் வந்து குவிந்து விட்டன. ஆனால் உஸ்தாத் ஓட்டல் பார்க்கும் போது அந்தக் கழிந்த கதைகளையெல்லாம் கடந்து ஒரு சேதி வெகு இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கும். அது தான் இந்தப் படத்தின் வெற்றி. 
கரீம் என்ற முஸ்லீம் கிழவராக வாழ்ந்திருக்கும் திலகனைப் பற்றி என்ன சொல்ல? வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பான முதலாளியாகவும், கனிவான தாத்தாவாகவும் தன் பேரனோடு கொள்ளும் அந்தப் பந்தம், இவருக்குள் இருக்கும் இருவேறு குணாம்சங்களை இந்த ஒரே படத்தில் காட்டியிருக்கிறது.  மம்மூட்டி மகன் தல்குவார் சல்மான் இதுபோன்ற கதை நாயகனாக இன்னும் தேடித் தேடி நடித்தால், இது போன்ற  அடக்கமான நடிப்பில் மகன் தந்தைக்காற்றும் உதவியாக இருக்கும். 
படத்தின் கதையை எழுதியிருக்கும் அஞ்சலி மேனன், படத்தின் முடிவில் கொடுக்கும் அந்த முடிச்சு ஒன்றே அவரின் சிந்தனையில் இருந்து புதிதாய்ப் புறப்பட்டதாக இருக்கும், அதுவே போதும் அவரின் பணியை மெச்ச. அதோ போன்று ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு என்று ஒவ்வொன்றிலும் தெரியும் நேர்த்தியோடு இசையமைப்பாளர் கோபி சந்தர் கொடுக்கும் அந்த இஸ்லாமியப் பின்னணியோடு மணக்கும் இசை இன்னொரு கச்சிதம். இயக்குனர் அன்வர் ரஷித் முன்னர் எடுத்த ராஜமாணிக்கம் உள்ளிட்ட மோசமான கார மசாலாச் சமையலை மன்னிக்க வைத்து விடுகிறது இந்த சுலைமானி.
 “இவனுக்கு சமையலைக் கற்றுக் கொடுத்துவிட்டேன், எதுக்காக சமைக்கிறோம்னு கற்றுக் கொடு” மதுரையில் இருக்கும் தன் நண்பர் நாராயணன் கிருஷ்ணனுக்கு கரீம் எழுதிய அந்தக் கடிதம்தான் வாழ்க்கையின் இன்னொரு அர்த்தம் புரிய வைக்கிறது, அதற்காக உஸ்தாத் ஓட்டலைத் தலைமேல் ஏற்றிக் கொண்டாடலாம்.

“தட்டத்தின் மரயத்து” ஒரு சுகானுபவம்

அனுபவப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளையும், கவிதைகளையும் படித்துப் பழகியவனுக்கு அறிமுகப் படைப்பாளியின் படைப்பைப் பார்த்தபின் எழும் திருப்தியான சுகானுபவம் கிட்டியிருக்ககிறது இன்று பார்த்த மலையாள சினிமா “தட்டத்தின் மரயத்து” மூலம். இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பை எற்கனவே இணையத்தளங்கள், சஞ்சிகைகள் மற்றும் படத்தின் இயக்குனர் வினித் ஶ்ரீனிவாசனின் விகடன் பேட்டி ஆகியவை கிளப்பியிருந்தாலும், தியேட்டருக்குப் போய்ப் படம் பார்க்கும் வரை ஒருவித சந்தேக உணர்வே தொடர்ந்தது. காரணம் இப்போதெல்லாம் ஆகா ஓகோவென்று விமர்சனத்தில் கிளப்பப்படும் படங்களைப் பார்த்தபின் “கல்”அடிபடுவதுதான்.

வினோத் என்ற இந்துமத நாயர் பையனுக்கும் ஆயிஷா என்ற முஸ்லீம் பெண்ணுக்கும் வரும் காதல், தடைகளை மீறி அவர்கள் ஜெயித்தார்களா? என்ற சாதாரண ஒற்றைவரிக் கதைதான். ஆனால் படம் ஆரம்பித்த நிமிடம் முதல் இறுதிக் காட்சி வரை கட்டிப்போட வைக்கும் சுவாரஸ்யமிக்க காட்சியமைப்புக்கள், வசனம், ஒளிப்பதிவு, இசை என்று எல்லாமே கூட்டணி அமைத்து அதகளம் பண்ணியிருக்கின்றன.

மலையாள சினிமாக்களில் நடிகர் தேர்வு என்று வரும்போது அதிகம் அவர்கள் மெனக்கெடுவதில்லை. K.P.A.C லலிதா, இன்னசெண்ட், சலீம்குமார் உள்ளிட்ட ஒரு தொகை நடிகர்களே பெரும்பாலான படங்களின் குணச்சித்திரங்களாக ஆக்கிரமிப்பர். ஆனால் இந்தப் படத்தில் நாயகன் நிவின் பெளலி (இரண்டாவது படம்), மனோஜ்.கே.ஜெயன், மற்றும் ஶ்ரீனிவாசன் தவிர்ந்த மற்ற எல்லோருமே மலையாள சினிமாக்களில் அதிகம் அறியப்படாதவர்கள். அதிலும் குறிப்பாக நாயகியாக வரும் அறிமுகம் இஷா தால்வார் என்னவொரு கச்சிதமான தேர்வு, முஸ்லீம் பெண் பாத்திரத்துக்கு இவரை விட்டால் வேறு பிரபலங்களையே நினைத்துப்பார்க்க முடியாத அடக்கமான நடிப்பு. இப்படியான படங்களுக்குக் கூடவே ஒட்டும் நண்பன் என்ற சமாச்சாரத்துக்கு விதிவிலக்கில்லாமல் வரும் நடிகர் அஜூ வர்கீஸ் இன் நகைச்சுவையும் அளவான அழகு. மனோஜ் கே.ஜெயனுக்கு குரலை வித்தியாசப்படுத்திப் பேசுவதில் இருந்து படத்தின் ஓட்டத்துக்குக் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

நாம் நேசிக்கும் படைப்பாளிகளின் வாரிசுகள் நல்லதொரு நிலைக்கு வரும் போது நம் வீட்டுப் பிள்ளையை ஆராதிப்பது போல ஒரு மானசீகமான கொண்டாட்டம் இருக்கும். நடிகர் ஶ்ரீனிவாசன் மலையாளத் திரையுலகின் எண்பதுகளில் இருந்து இன்று வரை தன்னளவிலான கெளரவமான பங்களிப்பைக் கதாசிரியராகவும், நடிகராகவும் வழங்கியிருக்கிறார். அவரின் மகன் வினீத் ஶ்ரீனிவாசன் பாடகராகவும், ஒரு சில படங்களில் நடிகராகவும் அறியப்பட்டிருந்தாலும் இந்தப் படம் அவரைப் பொறுத்தவரை இவருக்கான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துக் கைகாட்டி விட்டிருக்கிறது.

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களே துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்ற நிலையில் இருக்கும் சூழல், மாபெரும் கதா நடிகன் மம்முட்டி “ஒய் திஸ் கொலவெறி” என்றெல்லாம் பஞ்ச் அடித்து ஓவர் ஹீரோயிசம் காட்டி எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற காலமிது. ஆனால் ரசிகர்களுக்கு, அது பழகிப்போன கதையாகக் கூட இருக்கட்டும் ஆனால் நேர்மையான விதத்தில் கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு இந்தப் படம் இன்னொரு சாட்சி. சக நடிகர் முகேஷ் உடன் நடிகர் ஶ்ரீனிவாசனும் இணைந்து 14 லட்சத்தில் எடுத்த படம் இன்று பத்துக் கோடியைத் தாண்டியிருக்கிறது இலாபம். (ஆதாரம் விக்கிப்பீடியா)

கதையோடு ஒட்டாது விலகி நிற்கும் நகைச்சுவை, வேண்டாத காட்சியமைப்பு எல்லாம் களைந்து கதையோட்டத்தோடு வரும் நகைச்சுவையிலும் நடைமுறை வாழ்வில் காணும் சினிமா, கிரிக்கெட் உதாரணங்களையெல்லாம் கலந்து கட்டி அடித்திருக்கிறார். நாயகனுக்கும் ஓவர் ஹீரோயிசம் கொடுக்காமல் நம்மில் ஒருவராகப் பள்ளி நாட்களை அசைபோட வைக்கும் அளவுக்குக் குணாதிசியங்களைக் கொண்டு உருவாக்கிய பாத்திரம்.

இந்தப் படத்தின் பாடல்களை முன்னரேயே கேட்ட அனுபவம் இல்லாத நிலையில் ஒவ்வொரு பாடல்களும் கதையோடு பயணிக்கையில் இதில் எது நல்லது என்று மனக்கணக்கில் போடுமளவுக்கு முத்து முத்தான பாடல்கள். பாடல் இசை, பின்னணி இசை இரண்டிலும் ஷான் ரஹ்மான் நம்மை ஈர்க்கிறார். அவரைப்போலவே ஒளிப்பதிவாளர் ஜோமோன் T.ஜான்
வினீத் ஶ்ரீனிவாசனுக்கு இசை, ஒளிப்பதிவு ஆகிய இரண்டும் பெரிய பலமாக அமைந்திருக்கின்றன. இதுவே பாதி வெற்றி அவருக்கு.

“நாம ஆசைப்பட்ட விஷயங்களைப் பின்னாளில் நாமளே மறந்தாலும் ஆண்டவன் மறக்கமாட்டான்” படத்தை முடித்து வைக்க இயக்குனர் வினீத் ஶ்ரீனிவாசன் கொடுத்த வாசகம் அது, அவரிடம் இன்னும் நல்ல படைப்புக்களை எதிர்பார்க்க வைக்கின்ற ஆரம்பமாக.

The Dirty Picture ஒரு நடிகையின் ப(பா)டம்

எப்பவுமே சினிமாக்காரனைக் கூத்தாடி என்றெல்லாம் சொல்லும் அதே ஜனங்கள் தான் அவனைப் போற்றித் துதிக்கவும் தயங்குவதில்லை, இது ஒருவகை ஈகோயிசம் என்ற சாராம்சத்தில் பிரேமி என்ற தன் சின்னத்திரை நாடகத்தில் கே.பாலசந்தர் ஒரு பாத்திரத்தின் மூலமாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது.

சினிமாவுக்குத் தேவையானது மூன்றே மூன்று சரக்கு entertainment, entertainment, entertainment என்னால் கொடுக்கமுடிந்தது ஒன்றே ஒன்று அது entertainment, இப்படியாக The Dirty Picture என்ற ஹிந்திப்படத்தில் சில்க் என்ற நாயகி பாத்திரம் பேசுகிறது. எண்பதுகளில் உச்சாணிக்கொம்பில் இருந்த ஒரு ஒரு கவர்ச்சி நடிகை சில்க். சில்க் என்ற நடிகைக்கு முன்னரும் பின்னரும் எத்தனையோ இருந்திருக்கின்றார்கள் ஆனால் ஒரேயொரு சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் அவரின் தற்கொலையோடு முடிவுக்கு வருகின்றது அந்த நடிகையின் பயணம். சினிமா ஆசை என்ற பெருங்கனவில் வீட்டை விட்டு ஓடி சென்னைக்கு வரும் ரேஷ்மா ஒரு வறிய குடும்பத்துப் பெண் தன் முன் இருந்த சவால்களை எதிர்கொண்டு ஜெயித்துக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் எல்லாம் தொலைத்துத் தன்னையும் தொலைத்த கதைதான் இந்தப் படத்தின் கரு.

“அவளோட புகழ் சோளப்பொரி போல, மேலே போனது கீழே வரத்தான் செய்யும்” சூர்ய காந்த் என்ற உச்ச நடிகர் ஒரு இடத்தில் பேசுவார், சினிமாவில் மட்டுமல்ல நம் வாழ்க்கையின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவர் எப்போது கீழே விழவேண்டும் என்று காத்திருக்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது. வித்யாபாலன் என்ற நடிகைக்கு ரேஷ்மா என்ற அபலைப்பெண்ணில் இருந்து சில்க் என்ற உச்ச நடிகையாக மாறி அந்தப் பாத்திரமாகவே வாழவைத்திருக்கின்றது இந்தப் படம். வித்யாபாலனுக்கும் சில்க் இற்குமான தோற்ற நிலையில் ஏற்கமுடியாது ஆரம்பிக்கும் படம் முடியும் போது வித்யாபாலனின் உழைப்புக்கு சபாஷ் போட வைக்கின்றது.

சினிமா என்ற கனவுலகத்தைத் தேடிப் போய் அவமானங்கள் பட்டு ஜெயிக்கும் ரேஷ்மா என்ற சில்க், ரசனை மாறும் போது தனக்குப் போட்டியாக வரும் நாயகியை ஏற்றுக் கொள்ளா முடியாத ஒரு சராசரி மனித மனம் என்ற அளவுக்கு இந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

சினிமா என்ற கனவுத்தொழிற்சாலையைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா கனவுத்தொழிற்சாலை ஆக்கியபோது விகடனில் நடிகை லட்சுமியின் கண்டனத்தோடு கூடிய சந்திப்பை ஏற்படுத்த வேண்டியிருந்தது. ஒரு நடிகையின் கதை என்ற தோரணையில் கவிஞர் வைரமுத்து கவிதை பாடி நடிகை சுஹாசினி தலைமையில் அவருக்கு எதிராகப் போராட்டம் எல்லாம் நடந்தது வரலாறு. ஆனால் உண்மையில் ஒரு நடிகையாக வாழ்க்கைப்பட்டவளைச் சுற்றி சூழலில் எந்தப் பெண்ணுமே உடல் அல்லது உணர்வு ரீதியான காயத்துக்கு ஆளாகாமல் தப்பமுடியுமா என்பது கேள்விக்குறி. அதைப் பட்டவர்த்தனமாகக் காட்டி நிற்கின்றது இந்தப் படம்.

ஏப்ரஹாம் என்ற தலைசிறந்த இயக்குனர்(இம்ரான் ஹசானி) சினிமாவில் கவர்ச்சி மாயை வெறுத்து நல்ல கதை தான் ஜெயிக்கும் என்ற உணர்வோடு இருப்பவர். அவரின் அசரீரிக் குரலாகத் தான் சில்க் என்ற நடிகையின் வாழ்க்கை இந்தப் படத்தோடு பயணிக்கின்றது. ஏப்ரஹாம் வெறுத்து ஒதுக்கும் சில்க், தயாரிப்பாளர் செல்வ கணேஷ் இன் பார்வை பட்டு சினிமாவில் நுழையவும், கூடவே சூர்யகாந்த் என்ற முது வயது சூப்பர் ஹீரோவின் அரவணைப்புக் கிட்டி மெல்ல மெல்ல அவள் பெரும் புகழ் என்ற உச்சாணிக்கொம்பை அடைவதும், கூடவே அவளின் தோல்விக்காகவும் தன் வெற்றிக்காகக் காத்திருக்கும் ஏப்ரஹாம் என்ற இயக்குனரும் என்று இந்த முக்கிய புள்ளிகளே கதையை நகர்த்திச் செல்கின்றனர்.

ஒரு நடிகையை ஒரு எல்லைக்கோட்டுக்கு மேல் ஏற்காத வெளிச்சமூகம் மட்டுமல்ல திரையுலகத்துக்குள்ளும் அதே நிலை என்பதையும் வெறும் பாலியல் ரீதியான பந்தத்தை மட்டுமே எதிர்பார்க்கும் ஆண்களிடமிருந்து உண்மையான அன்பைத் தேடும் சில்க் ஆகவும் இந்த நடிகையின் பரிமாணம் வெளிப்பட்டிருக்கிறது.

பரபரப்புப் பத்திரிகையாளர் பாத்திரத்தை நாம் வழக்கமான வாராந்த சஞ்சிகையின் எழுத்தில் தரிசிக்க முடிந்ததைத் திரையில் காணமுடிகின்றது.

வேலையிடத்தில் சந்திக்கும் சவால்கள் என்பது பொதுவான ஒரு விடயம். ஆனால் கலை என்று வரும் போது அங்கே உணர்வு ரீதியான பல சவால்களைச் சந்திக்க வேண்டும். ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு குதிரை சட்டென்று தாமதித்தால் கூடவரும் குதிரைகள் முன்னே ஓடிவிடும் அல்லது இடறித்தள்ளிவிடும். என் ஊடகத்துறையில் கடந்த பதினோரு ஆண்டுகளில் தனிப்பட்ட ரீதியில் சந்தித்த காழ்ப்புணர்வுகளைத் திரையில் ரேஷ்மா என்ற சில்க் பாத்திரத்தோடு பொருத்திப் பார்க்க முடிகின்றது. உன்னால் ஏராளமான வெற்றிகளைக் கொடுத்து ரசிகர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிகின்றதே அதே வெற்றி உன் ஒரு படத்தின் தோல்வியால் அழிக்கப்பட்டு விடும் என்று ஏப்ரகாம் சொல்லும் உண்மை எல்லோருக்கும் பொருந்தும்.

சில்க் என்ற நடிகையின் கதை என்ற மையத்தை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமான காட்சிக் கோர்வை, புத்திசாலித்தனமான வசனங்கள் என்று போவதால் படத்தை ரசிக்க முடிகின்ற அதே சமயம் இயக்குனர் எப்ரகாம் , சில்க் காதலும் கூடவே வரும் பாடலும் ஸ்பீட் ப்ரேக்கர்.

இளமையாகக் காட்டிக் கொண்டு தொப்பை மறைத்து ஹீரோயிசம் காட்டும் நஸ்ருதின் ஷா கலக்கியிருக்கிறார். ஆனால் படத்தின் ஆரம்பத்தில் “சத்யா மூவீஸ்” தங்க மகன் போஸ்டரில் இருந்து ப்ளஸ் டூ பாஸ் ஆகித் தன் தாய் மடியில் செல்லம் கொட்டும் காட்சியிலும், தொய்ந்து விழும் திறந்த உடம்போடு அவர் போடும் ஆட்டமும் ரஜினியில் இருந்து தென்னக மூத்த நடிகர்கள் எல்லோரையும் பதம் பார்க்கின்றது. முழுமையாகக் கோடம்பாக்கத்தின் சூழலும் வருவதால் படத்தின் முகப்பில் இருந்து ஒரு சில காட்சிகள் வரை “அட்ரார்ரா நாக்க முக்க நாக்க முக்க” பாடலும் தமிழ்ப் பேசுவதோடு பாத்திரங்கள் எல்லாமே தென்னிந்திய வாடையோடு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள்.

என்னடா இது, பகையாளி கூட என்னை எதிர்க்கமுடியாத நிலை என் நிலை என்று மருகுவதாகட்டும், அப்பாவிப்பெண்ணில் இருந்து படிப்படியாகச் செல்வாக்கு மிக்க நடிகையாக மாறுவதும் தேய்வதும் அவரது நடிப்பின் வாயிலாகவே காட்டிச் சிறப்பிக்கின்றார். தன் கனவைத் தொட்டுவிடத் துடிக்கும் ஏழைப்பெண், சாதித்துக்காட்ட முனையும் வெறி, சவால்களை எதிர்கொள்ளும் விதம், எல்லாம் தொலைந்து நிர்க்கதியான நிலை எல்லாவற்றையும் தாங்கி வெளிப்படுத்துகின்றார் வித்யா பாலன். கவர்ச்சி நடிகையின் படம் என்பதால் இந்திய சினிமா தொடமுடியாத உச்சங்களையும் தொடுகின்றார்.

இப்படியான உணர்வுபூர்வமான கதையை வைத்து கோடம்பாக்கத்து பாபுகணேஷ் போன்ற மொக்கைகள் கைமா பண்ணிக் காசு பார்த்திருப்பார்கள். ஆனால் நேர்த்தியான திரைக்கதை, வசனம், தேர்ந்த நடிகர்கள், புத்திசாலித்தனமான இயக்கம் (Milan Luthria) என்று இந்தப் படம் சிறப்பானதொரு படைப்பாக வந்திருக்கின்றது.
எண்பதுக்கே உரிய மண்ணிறச் சாயம் கொண்ட ஒளிப்பதிவின் சொந்தக்காரர் Bobby Singh.

புகழ் என்ற நட்சத்திரத்தை அடைய நினைப்பவர்கள் அந்த எல்லையைத் தொட்டதும் தடுமாறாமல் பயணிக்க வேண்டிய சதுரங்க ஆட்டத்தில் நின்று நிலைப்பதென்பது எவ்வளவு சவாலானதொரு நிலை என்பதோடு, காலவோட்டத்துக்கேற்பத் தன்னைப் புதுப்பிக்காதவன் ஓரம் கட்டப்பட்டு விடுவான் என்பதை மறைமுகமாகச் சொல்லிவைப்பதில்
The Dirty Picture, a neat film

பிற்குறிப்பு: இப்படம் வயது வந்தோருக்கு மட்டுமே உகந்தது

ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்

மனதுக்கு நிறைவானதொரு படைப்பைப் பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி யாரிடமாவது சொல்லிச் சொல்லிச் சிலாகிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வருமே அதே நிலையில் தான் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஶ்ரீ ராம ராஜ்யம், தெலுங்கில் வரப்போகும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளிவந்த நாளே கேட்டுக் களித்துக் கொண்டிருக்க வைத்து விட்டது. அதை ஆந்திராவின் இசையுலகமும் நிரூபிப்பது போல இப்படத்தின் பாடல் இசைத்தட்டுக்கள் விற்பனையில் சாதனையைப் படைத்து விட்டது.
சில மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் இப்படம் வெளியாகியிருக்கின்றது. ஏற்கனவே இந்தப் படம் வந்தால் தியேட்டர் சென்று பார்க்கவேண்டும் என்ற முனைப்பில் இருந்த எனக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் அமைந்து விட்டது. ஶ்ரீ ராம ராஜ்யம் படம் பார்க்கவேண்டும் என்பதற்கு முழுமுதற்காரணியாக அமைந்தது இசைஞானி இளையராஜா ஏற்கனவே தந்து விட்ட பாடல்களும், படத்தில் தரப்போகும் பின்னணி இசை தான். ஏற்கனவே “சீனி கம்” (ஹிந்தி), “ரசதந்திரம்”, “பாக்யதேவதா” (மலையாளம்) வந்தபோதும் இன்னொரு மொழிப்படத்துக்காகத் தியேட்டரை எட்டிப்பார்க்க வைத்தார் ராஜா. இப்போது முதன்முறையாக ஒரு தெலுங்குப் படத்துக்குப் போகும் பெருமையை இந்தப் படம் பெற்றுக்கொண்டது.

இராமாயணத்தின் முக்கியமான பகுதியாக இராவணன் சங்காரம், சீதை சிறைமீட்பு என்பதோடு படங்கள் வந்துவிட்டன. அதன் நீட்சியாக சம்பூர்ண ராமாயணம், லவ குச போன்ற படங்கள் இராமர் சீதை, இலக்குமணர் சகிதம் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் பூண்டு ஆட்சி செய்யும் போது சீதை மீதான அவதூறால் சீதையைக் காட்டில் விட, காட்டிலே வால்மீகி முனிவரின் பராமரிப்பில் சீதை லவ குச என்ற பிள்ளைகளை ஈன்றெடுத்து வளர்த்து வரும்போது மீண்டும் தந்தை இராமனை லவ குச சந்திப்பதும், சீதை எடுக்கும் முடிவும் என்று செல்லும். இந்த ஶ்ரீராம ராஜ்யம் படம் இராவண சங்காரத்துக்குப் பின்னான கதையை மட்டுமே எடுத்தாண்டிருக்கின்றது.

இசைஞானி இளையராஜாவை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்யும் போதே, இது உங்கள் படம் என்று அதீத உரிமை கொடுத்திருப்பார்கள் போல. படத்தில் மொத்தம் 16 பாடல்களை ஏற்கனவே கொடுத்து முன்னோட்டம் காட்டியவர், இரண்டரை மணி நேரப்படத்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் தன்னைக் காட்டி நிற்கின்றார். படத்தின் எழுத்தோட்டத்தில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜ்ஜியம், ஆரம்பக் காட்சியில் இராமர், சீதா, லக்குவணன் சமேதம் அயோத்யா வரும் காட்சி “ஜெகதானந்த” என்ற பாடலோடு இனிமையான பாரம்பரிய நடன அமைப்போடு நெஞ்சை நிறைக்கின்றது. படத்தின் முதல் 20 நிமிடங்களுக்குப் பாடல்கள் தான் அணி சேர்க்கின்றன. என் நினைவுக்கு எட்டியவரை இப்படித் தொடர்ந்து காட்சிகளுக்கு நெருக்கமாகப் பாடல்களைக் கொடுத்த சினிமா எழுபதுக்குப் பிந்திய காலத்தில் இருந்ததாக நினைவில் இல்லை.

அதுவரை பாரம்பரிய இசையோடு அமைக்கப்பட்ட காட்சிகளில் இருந்து விலகி, இராமர் பட்டாபிஷேகம் செய்யும் போது ஒரு சிம்பொனியை எடுத்து விடுகிறார் ராஜா. மேற்கத்தேய இசை நயம் உறுத்தவில்லை தொடர்ந்து தையோடு இராமர் காதல் கொள்ளும் போது ஒரு மெல்லிசை, சீதை மேல் ஐயம் கொண்டு இராமர் குழம்பித் தவிக்கும் போது கலவையாகக் கொட்டித் தீர்க்கும் வாத்திய முழக்கங்கள், சீதையின் தனிமை என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொன்றுக்குமே தனித்தனி ஆலாபனைகள். இப்படியொரு பிரமாண்டமான வரலாற்றுக்கதைக்களனுக்கு இசைஞானியின் தேவை இன்றி மற்றெல்லாம் வெறும் ஒலிச்சத்தங்களாகவே இருக்கும்.

படத்தில் திடீர் திடீரென்று முளைக்கும் பாடல்கள் கதையோட்டத்தோடு பயணிப்பதால் உண்மையில் ஒரு சுகானுபவம் கிடைக்கின்றது. எத்தனை நாளாகிற்று கம்பியூட்டரை நோண்டிப் போட்ட இ(ம்)சைகளை விடுத்து இப்படியான வாத்தியங்களின் உணர்வுபூர்வமான உழைப்பைக் கேட்டு. தியேட்டர் சென்று பார்ப்பவர்களுக்கு வாத்தியங்களின் சல்லாபத்தை இன்னும் நெருக்கமாக அனுபவிக்கக்கிட்டும்.

இசைஞானி இளையராஜா எங்கும் போகவில்லை, இப்படியான நல்ல படைப்புக்கள் வரும்போது தன்னை அவர் வெளிப்படுத்துவார் என்பது போன்று அமைந்திருக்கின்றது ராஜாவின் அதீத உழைப்பு.

இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு இன்னொருவகையில் பெரிதும் கை கொடுத்திருப்பது திறமையான கிராபிக்ஸ் காட்சிகள். வனவாசத்தில் மான்கள் கூட மாந்தரோடு நடைபயில்வதும், அடவியில் சலசக்கும் பறவைகளும், பூஞ்சோலைகளும் என்று எல்லாமே உயிரோட்டமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பூமாதேவி சீதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி உச்சம்.
இந்தமாதிரியான படத்துக்குத் தேவை தானே என்று எண்ண வைக்கும் பிரமாண்டமான செட், ஆனால் எதிர்பார்ப்பை மீறி ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கலைரசனை கொண்டு அமைக்கப்பட்டிருப்பது வெகு சிறப்பு. குறிப்பாக அந்த அரண்மனையின் பிரமாண்டம், சின்னச் சின்னக் கற்களில் கூட ஏதோ ஒன்றைப் பொறித்து அழகு நயம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதிகாச காலத்துக்குக் கொண்டு செல்லும் வண்ணமயமான ஒளிப்பதிவாளர் P.R.K.ராஜீவின் பங்கும் நிறைவாக இருக்கின்றது.

ஶ்ரீ ராம ராஜ்யம் படம் ஆரம்பிக்கின்றது. படத்தின் எழுத்தோட்டத்தின் பின்னணியில் தபேலாவும், வீணையும் சேர்ந்து முழங்க, இராமாயணத்தின் ஆரம்பக் காட்சிகள சித்திரமாகப் போட்டுக் கொண்டே பயணிப்பது புதுமை. ஆரம்பமே இசைஞானி இளையராஜாவின் முழு ஈடுபாட்டைக் காட்டி நிற்க, எந்தவிதமான கதாநாயகத்தனமும் இல்லாத அறிமுகமாக புஷ்பக விமானத்தில் அயோத்தி நோக்கிப் பயணிக்கும் இராமர் (பாலகிருஷ்ணா), சீதை (நயன்தாரா), இலக்குவணன் (ஶ்ரீகாந்த்).

பாலகிருஷ்ணா இராமர் வேஷம் கட்டுகிறார் என்ற போது கொஞ்சம் யோசனையாகத் தான் இருந்தது. அவரின் தந்தை என்.டி.ராமராவ் கிருஷ்ணராகவே வாழ்ந்தவர், தனையனோ ஒற்றை விரலால் ரயிலை நிறுத்தி மசாலாச் சகாசங்கள் நிகழ்த்திய வகையில் தான் அதிகம் அறியப்பட்டவர். ஆனால் சொன்னால் நம்பமாட்டீர்கள். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பாலகிருஷ்ணாவை விட இன்னொரு நடிகர் இவ்வளவு பாந்தமாக நடித்திருக்க முடியுமா என்று எண்ண வைத்துவிட்டார். சீதையோடு காதல் காட்சிகளிலும், தனிமையில் உருகும் காட்சிகளிலும் எல்லாம் மிகைப்படுத்திவிட்டார் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பை மனுஷர் தந்துவிட்டார்.


சீதையாக வந்த நயன்தாராவுக்கு ஒரு சில காட்சிகள் தவிர மற்றைய எல்லாக் காட்சிகளுமே இராமனை நினைத்து உருகி அழும் தோரணையில் இருப்பவை. நயன்தாராவை விட்டால் இந்தப் பாத்திரத்துக்கு யார் பொருத்தம் என்பதை விட இப்போது வேறு யார் இருக்கிறார்கள்? என்ற கேள்விக்குறியோடு முடித்துக் கொள்ளலாம். இனிமேல் வால்மீகியை நினைக்கும் போதெல்லாம் நினைவுக்கு வருமாற்போல வால்மீகியாக வரும் அக்கினேனி நாகேஸ்வரராவ் இன் நடிப்பு. சிறுபையனாக உருமாறி வால்மீகி வனத்தில் உலாவரும் கலகலப்பான அந்தச் சுட்டிப்பையனும் கவர்கின்றான்.


என்னதான் தெரிந்ததொரு இதிகாசக்கதை என்றாலும், இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது இயக்குனர் எவ்வளவு தூரம் தெரிந்த கதைக்கு வித்தியாசமான திரைக்கதையைக் கொடுத்து இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருக்கின்றார் என்பது இந்தப் படத்தைப் பார்த்து அனுபவித்தவர்களுக்குப் புரியும். இராமருக்கு சீதை மேல் ஏற்பட்ட மனக்குழப்பம், அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகள் எல்லாமே உணர்வு ரீதியான கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, இராமன் இன்னொரு பெண்ணைக் கரம்பிடிப்பானோ என்று மனம் சஞ்சலமடைந்து உணர்விழந்து சீதை நிற்கும் சமயம், வான்மீகி முனிவர் சீதையின் ஆவியை மட்டும் அயோத்திக்கு அனுப்பி அங்கே இராமன் தன் மஞ்சத்தில் சீதையைச் சிலைவடிவாக்கி நிதமும் உருகிநிற்பதுவும், சீதை அதைக் கண்டு மருகுவதுமான அந்தக் காட்சி ஒரு காவியம். இப்படி ஏகப்பட்ட காட்சி அமைப்புக்களில் தெரிவது இயக்குனர் மற்றும் திரைக்கதாசிரியர் பாபு. இந்தப் படத்தைத் தமிழிலும் மொழியாக்கிக் கொடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் இப்போது மேலிடுகின்றது.

ஶ்ரீ ராம ராஜ்யம், சினிமாவுக்கு நீண்டகாலத்துக்குப் பிறகு ஒரு புதுவெள்ளம் பாய்ச்சுகின்றது இசைஞானி இளையராஜாவின் துணையோடு.

தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்…

வழக்கம் போல வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக ரயில் பிடிக்கப் பாய்கின்றேன். இடைப்பட்ட நேரத்தில் மினி சூறாவளி சிட்னியைத் தாக்கியதன் விளைவு ரயில்கள் தாமதித்துத் தம் ஓட்டத்தைக் கவனிக்க, எனக்கோ இருக்கவே இருக்கிறது என்று ஐபாட் இற்குள் ஐக்கியமாகின்றேன். வழக்கமான இந்த நேரம் ஹலோ எஃப் எம் இன் RJ கே.கே தன் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்பி அத்துணை நேரம் கனத்திருந்த வேலைக்களைப்பை மறக்கடிக்க வைப்பார். இன்று எடுத்த எடுப்பில் “தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்” பாடல் காதுக்குள் விழுந்த முதல் தேனாறாகப் பாய, இந்தப் பாடலை ரசித்தவாறே பயணிக்கிறேன்.

வழக்கமாக ஒரு படத்தின் ஒன்றிரண்டு பாடல்கள் கேட்ட மாத்திரத்திலேயே மனதில் ஒட்டிக்கொள்ளும் பின்னர் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். ஒருகட்டத்தில் அந்தப் பாடல்கள் கேட்டுத் தித்தித்த கணத்தில் அதே படத்தில் அதுவரை கவனிக்கப்படாத இன்னொரு பாடலைக் கேட்டுப் பார்க்கலாமே என்று தோன்றும். அதுவரை சீண்டாதிருந்த பாடலின் வசீகரம் அடடா இதுநாள் வரை இதை விட்டுவைத்து விட்டேனே என்று எண்ணத் தோன்றும் அப்படி ஒரு வகையறா தான் இந்த “தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்”.

அப்போது “கேளடி கண்மணி” படம் வரப்போகின்றது என்பதைக் கட்டியம் கூறும் விவித்பாரதி விளம்பரங்களில் மூச்சுவிடாமல் பாடிய எஸ்பிபியின் “மண்ணில் இந்தக் காதல் இன்றி”யும் அவ்வப்போது “நீ பாதி நான் பாதி” “கற்பூர பொம்மை ஒன்று” பாடல்களின் ஒரு சில வரிகளும் இடம்பெறும் ஆனால் “தென்றல் தான் திங்கள் தான்” பாட்டுக்கு எடுத்த மாத்திரத்தில் அறிவிப்பாளரும் அங்கீகாரம் கொடுக்கவில்லைப் போலும். நாளாக நாளாக “கேளடி கண்மணி” படத்தில் அதுவரை முன்னிலையில் இருந்த பாடல்களுக்கு நிகராக “தென்றல் தான் திங்கள் தான்” பாடலை உயர்த்திய பெருமை ஞாயிற்றுக்கிழமை நாலுமணி நேயர் விருப்பம் கேட்கும் சென்னைவானொலி நேயர்களைத் தான் சென்று சேரும். அப்படி உயர்ந்தது தான் இந்தப் பாடல், ரசிகமனங்களில்.

2006 ஆம் ஆண்டு, உலகின் கலையழகும் மிக்க கட்டிடங்களில் ஒன்றாகவும் அவுஸ்திரேலியாவின் அடையாளமாகவும் திகழும் ஒபரா ஹவுசில் முதன் முதலில் ஒரு தமிழ் இசை நிகழ்ச்சி. அதுவும் தமிழ்திரை இசை மட்டுமன்றி மலையாள தேசத்தின் நவீன இசைக்கடவுளாக ரசிகர்களால் உயர்த்தி நோக்கும் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் இசை நிகழ்வு. அரங்கம் கொள்ளாத கூட்டம். அங்கே எல்லோருக்கும் பரவலாகப் பிடித்த புகழ்பெற்ற பாடல்களைப் பாடிக் கைதட்டல் வாங்கிவிடலாம் என்ற சபலம் எந்தவொரு இசைக்கலைஞனுக்கும் வந்தால் வியப்பில்லை. ஆனால் அங்கே கே.ஜே.ஜேசுதாஸ் அனுபவித்துப் பாடியது “தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்”


“தென்றல் தான் திங்கள் தான்” பாடலை ஓடவிடும் போதெல்லாம் பாடலோடு இழைத்திருக்கும் இசையும் வயலினும், புல்லாங்குழலும் கதை பேசிக்கொள்ளும் சங்கதிகளையும் கடந்து இன்னொரு திசைக்கு மெட்டு மாறும் கட்டம்
“காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்” என்று நாயகன் பாட
“தீராத காதல் தேனிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம்” என்று அவள் ஒத்திசைக்க
இன்னொரு திசைக்குப் பயணிக்கும். எந்தவித உபத்திரமும் கொடுக்காமல் பாட்டு வளைந்து நெளிந்து ஓடக் கேட்கின்ற மனசும் அதற்கேற்பத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும். பாட்டுக்குப் பின்னணியில் ஒரே தாள லயத்தோடு ட்ரம்ஸ் இசை.
இதுவே இன்னொரு இசையமைப்பாளர் கையில் வாய்த்தால் அடுக்களையில் பாத்திரங்களை உருட்டிப் போடும் எலியின் செய்கை ஆகிவிடும்.
கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா குரல்கள் எவ்வளவு கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன இந்தப் பாட்டுக்கு. அதுமட்டுமா, ராஜா கொடுத்த மெட்டுக்கு இட்டுக் கட்டிய பிறைசூடனும் காதல் சந்தம் பண்ணியிருக்கிறார்.
நான் இன்று இந்தப் பாடலைக் கேட்டு அனுபவித்த அளவுக்கு நீங்களும் கேட்கவேண்டும் என்ற ஆசையில் இதோ, எத்தனை முறை இன்று இந்தப் பாடலை நான் கேட்கப்போகின்றேன் என்று கணக்கில் வைக்கின்றேன் நீங்களும் உங்கள் பங்கிற்கு =>

இசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு”


நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதாவது மாயக்கண்ணாடி பாடல் தொகுப்புக்குப் பிறகு சுடச்சுட வெளியாகியிருக்கும் ஒரு படத்தின் பாடல்கள் குறித்த என் பார்வையைப் பதிவாக்க ஆவல் கொண்டிருக்கிறேன். சொல்லப்போனால் இன்றைக்கு திரை இசை உலகம் இருக்கும் நிலையில் அதீத எதிர்பார்ப்பை வைத்து, ஒரு படத்தின் பாடல்கள் எப்போது வரும் என்று தேடவைத்த படங்களில் இதுதான் இப்போதைக்குத் தேறியிருக்கின்றது என்ற நிலை. அதற்குப் பல காரணங்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கிறேன்.

சத்யன் அந்திக்காடு, மலையாள சினிமா உலகில் 31 ஆண்டுகளைக் கடந்து இன்னும் வெற்றிகரமான இயக்குனர். ஜனரஞ்சகம் மிகுந்த சினிமா என்றால் என்ன என்பதை இன்றளவும் மிகச்சரியாகப் புரிந்து கொண்டு இன்றுவரை அதை வெற்றிகரமாகப் பதிவாக்கி வருபவர். சத்யன் அந்திக்காடு இன் காலத்தில் வந்தவர்களும் சரி, அவருக்குப் பின்னால் வந்தவர்களும் சரி, ஆரம்பத்தில் நல்ல பல படைப்புக்களைத் தந்து ஒரு எல்லையில் தாமும் தடுமாறி மக்களையும் குழப்பி ஜனரஞ்சகக் கிரீடத்தைத் தொலைத்த இயக்குனர்கள் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் காணலாம். ஜி.வி.பிரகாஷ்குமார் வரை வித்தை பண்ணி வெற்றி தேடிப்பார்க்கும் இயக்குனர் இமயம் வரை இது தொடர்கிறது.
சாதாரண மனிதர்களின் உணர்வுகளின் பகிர்வாக, எளிமையான எல்லோருக்கும் புரியத்தக்க படைப்பாகக் கொடுத்து அழுத்தமான தீர்வையும் முன்வைக்கும் பாணி தான் சத்யன் அந்திகாடு அன்றிலிருந்து இன்றுவரை பிடிவாதமாகக் கைக்கொள்வது. அந்தப் பிடிவாதம் தான் அவருக்கான அங்கீகாரத்தை எப்போதும் கொடுத்து வருகின்றது.

அந்த வகையில் “ஸ்நேக வீடு” என்றதொரு மலையாளச் சித்திரம் திரைக்கு வரவிருக்கின்றது. இது சத்யன் அந்திக்காடு இன் 51 ஆவது படம்
“அம்முக்குட்டி அம்மாயுடே அஜயன்” என்ற பெயர் சூட்டப்பட்டுப் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் தான் “ஸ்நேக வீடு” ஆக மாறியிருக்கின்றது. மோகன்லால், ஷீலா, பத்மப்பிரியா உள்ளிட்ட கலைஞர்களோடு சத்யனின் படங்களில் பெரும்பாலும் விடாமல் வந்து போகும் இன்னசெண்ட், கே.பி.ஏ.சி.லலிதா, மம்முக்கோயாவும் இருக்கின்றார்கள்.

சத்யன் அந்திக்காட் உடன் இசைஞானி இளையராஜா இணைந்து இதுவரை கொடுத்த எட்டுப்படங்களையும் பார்த்திருக்கின்றேன். அதைப் பதிவாகவும் கொடுத்திருக்கின்றேன் இங்கே. மலையாள சினிமாவில் பாடல்கள் என்பது தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்லது அதற்கும் கீழே தான். இசையைச் சார்ந்து வெளிவரும் படங்கள் தவிர மற்றெல்லாப் படங்களில் ஒன்றோ இரண்டோ அதிக பட்சம் மூன்றோ தான் இருக்கும். படத்தின் முக்கிய திருப்பத்தில் ஒரு சோகச் சம்பவத்துக்கான குரலாக ஜேசுதாஸ் வந்து போவார். பாடல்களுக்கு ஒரு இசையமைப்பாளரும், பின்னணி இசைக்கு ராஜாமணி போன்ற மாமூல்களையும் வைத்து ஒப்பேற்றிவிடுவார்கள். இப்போது தமிழ் சினிமாவைக் காப்பியடித்துக் குட்டிச் சுவராகிக்கொண்டிருக்கும் மலையாள மசாலாக்கள் இங்கே விதிவிலக்கு.

ஆனால் சத்யன் அந்திக்காடு இதுவரை இசைஞானி இளையராஜாவோடு பணியாற்றிய அனைத்துப் படங்களிலும் பாடல்களுக்குக் கொடுத்திருக்கும் கெளரவம் என்பது இசைஞானி இளையராஜா மீதான காதலின் வெளிப்பாடாகவே பார்க்கமுடியும். இளையராஜா கொடுத்த மூன்று பாடல்களை வைத்துக்கொண்டாவது சத்யன் அவற்றைப் பொருத்தமான தருணங்களில் நுழைத்துக் காட்சியின் மீதான கெளரவத்தை அதிகப்படுத்திக் கொள்ளவைப்பார். எண்பதுகளில் பாரதிராஜா, மணிரத்னம் போன்றோர் செய்து காட்டிய வித்தை தான் இது. “ஸ்நேக வீடு” பாடல்கள் ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான் வந்திருக்கின்றது, படம் இன்னும் வரவில்லை என்ற நிலையில் அந்தப் பாடல்கள் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைச் சொல்கிறேன்.


எடுத்த எடுப்பிலேயே நான் கேட்ட முதற்பாட்டு கிட்டார் இசையை மீட்டிக் கொண்டே ஆரம்பிக்கும் “அம்ருதமாய் அபயமாய்” ஹரிஹரன் குரலில் வரும் இந்தப் பாட்டுத் தான் படத்திற்காகப் போட்டிருக்கும் மற்ற நான்கு மெட்டுக்களில் இருந்து முதல் இடத்தை மனசுக்குள் பிடிக்கின்றது. அருமையான மெலடி, கண்டிப்பாக சத்யன் இந்தப் பாடலைத் தன் வழக்கமான ஸ்நேகபூர்வமான காட்சி ஒன்றுக்குப் பயன்படுத்தவெண்ணி ராஜாவிடம் கேட்டு வாங்கியிருக்கவேண்டும். ஹரிஹரன் குரலைப் பழுது சொல்லும் யோக்கியதை எனக்கில்லை. ஆனால் சிலசமயம் தேர்ந்த ஆட்டக்காரர் கொடுக்கும் வழக்கமான சிக்ஸர்களை விட அதே ஆட்டத்தில் ஆடும் இன்னொரு இளம் வீரர் அடித்து ஆடும் ஆட்டம் வெகுவாகக் கவர்ந்து விடும். அப்படித்தான் இதே பாடலைப் பாடும் ராகுல் நம்பியாரின் குரலின் மீதான நேசம். இந்தப் பாடலை ஹரிஹரன் பாடும் போது ஊதித் தள்ளிவிடும் அனுபவம், ராகுல் நம்பியார் பாடும் போது இசைஞானி என்ற ஜாம்பவானிடம் பெற்ற மெட்டைத் தன்னளவில் உயர்த்திக்காட்ட வேண்டும் என்ற துடிப்பே அவரின் பாடலை மனதுக்கு நெருக்கமாக வைக்கின்றது. ராகுல் நம்பியார் ஏற்கனவே “ஸ்வப்னங்கள் கண்ணெழுதிய மல்ச கன்னிகே” என்ற பாக்ய தேவதா பாடலில் ராஜாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய பாடகர். அந்த நம்பிக்கையை நன்னம்பிக்கை ஆக்கிக் காட்டியிருக்கின்றார். இந்தப் பாடலில்.

அடுத்ததாக ஸ்நேக வீட்டில் என்னைக் கவர்வது வட இந்தியா மட்டுமல்ல தென்னிந்தியாவையும் கட்டிப்போட்டு வைத்திருக்கும் ஸ்ரேயா கொசல் பாடும் “ஆவணித்தும்பி” என்ற பாடல். கதாநாயகிக்காக ஒதுக்கி வைத்திருக்கும் பாடல் என்று எண்ணத் தோன்றும் இந்தப் பாடல் எடுப்பான, எளிமையான இசையோடு ஸ்ரேயா கொசலுக்காகவும் கேட்கக் கேட்கத் தோன்றும் மீண்டும் மீண்டும்.

“செங்கதிர்க்கையும் வீசிப் பொன்புலர்ப்பூங்காற்றே” என்ற பாடலையும் இரண்டாவதாகப் பிடித்துப் போன “ஆவணித் தும்பி” பாட்டுக்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் சித்ராவின் குரலைக் கேட்கும் போது இருக்கும் நேசமும் சேர்ந்துகொள்ளப் பாடல் மீதான காதலைப் பின்னாளில் இன்னும் அதிகப்படுத்தலாம்.

மீண்டும் ராகுல் நம்பியார் இம்முறை ஸ்வேதாவோடு கூட்டணி கட்டிப் பாடும் “சந்த்ர விம்பத்தின்” பாடல் மலையாளத்துக்கே உரித்தான எளிமையும் தமிழ்த் திரையிசைக்கு அந்நியமான மெட்டாகவும் பதிகின்றது. காட்சியோடு பார்க்கும் போது பிடிக்கலாம் போலப்படுகின்றது. ஏனென்றால் இதே மாதிரி பாக்ய தேவதா படத்தில் வந்த, கார்த்திக் பாடும் பாடலான “ஆழித் திரதன்னில் வீழ்ன்னாலும் ” என்ற பாடலும் எனக்குக் கேட்டமாத்திரத்தில் அதிகம் ஒட்டிக்கொள்ளவில்லை. படத்தின் காட்சியோடு சேர்த்துப் பார்த்தபின் தவிர்க்க முடியாத பாட்டாகி விட்டது. பாடகி மஞ்சரிக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு வழங்கப்படாதது பெரிய ஆறுதல்.

மலையாளம் புரியாத மொழி என்பதை விடத் தேடிப்புரிந்து போற்றும் மொழியாக அமைய சத்யனின் படங்களும் ஒரு காரணம் என்னளவில். சத்யன் – இளையராஜா படங்களில் அமைந்த பாடலாசிரியர்களில் ஆரம்பத்தில் கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரியை வைத்தும் பின்னிரண்டு படங்களில் வயலார் சரத் சந்திர வர்மாவையும் பாடலாசிரியர்களாக வரித்துக் கொண்டலும், எனக்கென்னமோ, வைரமுத்து – ராஜா கூட்டணி போல எண்ணிப்பார்க்க வைக்கும் கிரிஷ் புத்தன்சேரி – ராஜா என்ற கெமிஸ்ட்ரி இன்னும் வெகுவாகப் பிடிக்கும். அச்சுவிண்டே அம்மா படத்தில் வரும் ஒரு முக்கிய திருப்புமுனையில் ஒரு பாடல் அதில் எந்த வித வார்த்தை ஜாலங்களும் இன்றி “எந்து பறஞ்சாலும் நீ எந்தேதல்லே வாவே” என்ற சாதாரண வரிகளுக்குக் கிடைக்கும் அழுத்தம் போல இன்னும் பல உதாரணங்கள் கிரிஷ் புத்தன்சேரியும் ராஜாவும் கூட்டணி கட்டி மெட்டுக்கட்டிப் போட்ட பாட்டுக்களில் கிட்டும்.இன்னொன்று, மனசினக்கரே படத்தில் வரும்”மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா”. ஆனால் கிரிஷ் புத்தன்சேரி இரண்டு வருஷங்களுக்கு முன்னால் காலமாகிவிட்டார் என்ற துயரமும் இங்கே பதிவாக்க வேண்டும். பின்னொரு நாளில் இவ்விருவர் கூட்டணி குறித்து விலாவாரியாக அலசலாம்.

சத்யன் அந்திக்காடு – இசைஞானி இளையராஜாவின் கத தொடருன்னு , ஸ்நேக வீட்டிலும் கூட.

“அச்சுவிண்டே அம்மா” படத்துக்காக “எந்து பறஞ்சாலும்” பாட்டைப் பெற்ற அனுபவத்தைச் சொல்கிறார் சத்யன் அந்திக்காடு, கூடவே ராஜா மெட்டுப் போட, சித்ரா பாடுகிறார்.

இசைஞானி குறித்து சத்யன் அந்திக்காடு சொல்கிறார் இப்படி

ஷிக்கார் (The Hunt) – வேட்டையாடத் துரத்தும் பாவக்கணக்கு


“அன்று ருக்மணியின் கண்களில் தெரிஞ்ச நெருப்பு மறுநாள் தெலுங்கானாவில் தெரிந்தது”
பலராமன் (மோகன்லால்) 15 வருஷங்களுக்கு முந்திய அந்தக் கோரநினைவுகளை நினைத்துப் பார்க்கும் போது சொல்லிக் கொண்டது தான் ஷிக்கார் படத்தின் அடிநாதமும் கூட.

“ஷிக்கார்” மலையாளப்படம் குறித்த செய்திகள் வந்தபோது சிட்னியில் அது தியேட்டரில் முத்தமிட்டால் கண்டு ரசிக்க வேண்டும் என்று காத்திருந்தேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் சமுத்திரக்கனி. நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் ஒரே நாளில் தமிழகம் முழுதும் புகழப்பட்ட இயக்குனர், கூடவே சுப்ரமணியபுரம் படத்தில் வில்லன் அண்ணனாக வந்து வித்தியாசமான நடிப்பைக் கொடுத்தவர் இவரை மலையாளப்படவுலகம் வேண்டி அழைத்து நடிக்க வைக்கின்றதென்றால் அப்படி என்னதான் இந்தப் படத்தில் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடு தான் இந்தப் படம் பார்க்கும் ஆசையும். அந்த ஆசை இன்று சிட்னி தியேட்டரில் நிறைவேறிய சுகத்தோடு ஷிக்கார் பற்றி இனி.

இந்தப் படம் ஆரம்பிக்கும் போது சராசரியான நாட்டு ராஜாவு வகையறா மலையாளப் படங்களில் ஒன்றாகவே தென்பட்டது அது இடைவேளை வரை பாட்டும் கூத்துமாகத் தொடர்ந்தது. ஆனால் இடைவேளைக்குப் பின் தான் படம் சூடுபிடிக்க ஆரம்பித்து இறுதி முற்றுப்புள்ளி வரை அந்தச் சூட்டைக் காட்டி வேட்டையாடியது.

பலராமன் (மோகன்லால்) என்னும் லாரி ஓட்டுனர் நகரவாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் காடும் மலையும் தழுவிய பிரதேசத்தில் அவ்வூர் மக்களோடு வாழும் சராசரி மனிதன். அவனுக்குத் துணையாக மணியப்பன் (கலாபவன் மணி) என்னும் உதவியாளனும் சத்தியன் (லாலு அலெக்ஸ்) குடும்பமும் மட்டுமே. பலராமனின் கனவெல்லாம் காலமான தன் மனைவி காவேரி (சினேகா)யின் ஆசையாகத் தன் ஒரே மகள் கங்கா (அனன்யா)வை டாக்டர் பட்டத்துக்குப் படிக்க வைக்க வேண்டும் என்ற இலட்சியம் மட்டுமே. மாணவர் விடுதியில் தங்கிப்படித்த கங்கா தன் தந்தை பலராமனைத் தேடிக் காட்டுக்கு வந்த போது, பலராமனைச் சுற்றி அது நாள் வரை கண்ணுக்குத் தெரியாமல் துரத்திய அவனைக் குறித்த வேட்டை ஆரம்பமாகின்றது. அப்போது தான் 15 வருஷங்களுக்கு முன்னால் அவன் செய்த பாவக்கணக்குத் தீர்க்கும் காலம் வந்ததை உணர்கின்றான் அவன்.

இன்று இந்தியாவில் சூடுபிடிக்கும் விவகாரமாக ஆகிப்போயிருக்கும் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்துத் தெலுங்கானாவைத் தனி மாநிலம் ஆக்கவேண்டும் என்ற போராட்டத்தின் ஒரு பார்வையை ஷிக்கார் தொட்டுச் செல்கின்றது. நக்சலைட் தீவிரவாதி காம்ரேட் அப்துல்லா என்ற பாத்திரமாக வாழ்ந்திருக்கின்றார் நம் சமுத்திரக்கனி. உண்மையில் ஒரு போராட்டக்காரனின் எழுச்சி முகத்தை மிகவும் அன்னியப்படாத உடல்மொழி பாவங்களோடு அமைதியாக நடித்து நம் மனதில் ஆக்கிரமிக்கின்றார் சமுத்திரக்கனி. ஒரு எழுச்சியாளனாக, கவிஞனாகத் தன் சிந்தனைகளைப் பாடியும் பேசியும் பரப்பும் காம்ரேட் அப்துல்லா என்னும் சமுத்திரக்கனி, தன்னைப் பொறிவைத்துப் பிடித்து அழைத்துப் போகும் கான்ஸ்டபிள் பலராமனிடம் அவரின் பிள்ளையின் பெயர் கேட்டு அவள் பெயர் கங்கா என்று அறிந்துகொண்டு அவளுக்கும் ஒரு கவிதை எழுதித் தருகின்றேன் என்னும் போது அந்தப் புரட்சியாளனின் உள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் நேசத்தை நச்சென்று காட்டி வைக்கின்றது.
இப்போதுதான் தெரிகிறது சமுத்திரக்கனியைத் தேடி ஏன் மாநிலம் விட்டு மாநிலம் வந்தார்கள் என்று, அந்தளவுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றார் இவர்.

முதற்பாதியில் ஒரு சராசரி லாரி ஓட்டுனர், அடுத்த பாதியில் தன் கடந்தகால நினைவுகளில் பயணிக்கும் போது ஒரு கான்ஸ்டபிள் இதுதான் பலராமன் என்னும் மோகன்லாலின் பாத்திரம். தன்னைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத அபாயம் தன் மகளின் காதலன் ரூபத்தில் கூட வந்திருக்குமோ என்று பரிதவித்து அங்குமிங்குமாகப் பரிதவித்து அலைபாயும் மன உளைச்சலை வெகு இயல்பாகக் காட்டியிருக்கின்றார் மோகன்லால், இதெல்லாம் அவருக்குப் புதுசா என்ன?
காம்ரெட் அப்துல்லாவைக் கைது செய்ய நடத்தும் நாடகத்தில் தன் இயலாமையைக் காட்டும் போதும், கண்ணுக்கு முன்னால் அப்துல்லாவுக்கு நேரப்போகும் நிலையைக் கண்டு கையறு நிலையில் இருக்கும் போதும், மகளையும் தன்னை யும் துரத்தும் மரணதூதர்களைத் தேடும் போதும் மோகன்லால்
பலராமன் பாத்திரத்துக்குப் பெரும் பலம். மலையாளத்தின் ஒரு சூப்பர் ஹீரோ இப்படி ஒரு சாதாரண கதாபாத்திரமாக மாறும் வல்லமை அங்கு மட்டுமே எதிர்பார்க்கக் கூடியதொன்று.

இந்தப் படத்தின் பலவீனம் என்றால் ஒரு பெரும் செய்தியைத் தொக்கவைத்துக் கொண்டு இடைவேளை வரை ஏனோதானோவென்று சராசரிக்காட்சிகளோடு இழுத்துக் கொண்டு போயிருப்பது, பலம் என்னவென்றால் இடைவேளைக்குப் பின்னான அழுத்தமான கதைக்கருவை கச்சிதமாகக் காட்சிவடிவம் கொடுத்திருப்பது. காடுகளுக்குள் காமரா ஓடும்போது பரபரப்புத் தொற்றிக் கொள்கின்றது. இறுதியில் ஒரு சவாலான பிரச்சனையை எப்படி முடிக்கப் போகின்றார்கள் என்றால் அதையும் நாடகத்தனமில்லாமல் நம்பத்தக்கவகையில் முடித்திருப்பதும் நேர்த்தியாக இருக்கின்றது. மோகன்லாலுக்குத் தெரியாத அந்த நக்சலைட் தீவிரவாதி குறித்த தன்னைச் சுற்றிய சந்தேகத்தோற்றத்தை நமக்கும் ஏற்றிவிடுகின்றது படத்தின் திரைகதை அமைப்பு. தெலுங்கானா சூழலின் அந்தக் காட்சிப்பரப்பை வெகுசிறப்பாகக் காட்டி வைக்கின்றார் இயக்குனர் பத்மகுமார். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருப்பவர் சுரேஷ்குமார், கத்தி மேல் நடப்பது மாதிரியான மூலக்கதையம்சத்தை கவனமாகக் கையாண்டிருக்கின்றார்.


தலைவாசல் விஜய் (சக கான்ஸ்டபிள்), சினேகா (மோகன்லால் மனைவி காவேரி) , நடன இயக்குனர் கல்யாண் (போலீஸ் தலைமை அதிகாரி), சமுத்திரக்கனி ( காம்ரேட் அப்துல்லா)என்று தமிழ் முகங்கள் முக்கிய பாத்திரங்களில் என்றால் கூடவே இயக்குனர் லால் கெளரவ வேஷத்தில் வந்து “குதிரவாலு குலுங்குதடி குமரி நீயும் நடக்கையிலே” என்று முழு நீளத் தமிழ்ப்பாட்டையும் பாடுகின்றார். ஒரு மலையாளப்படத்தில் மலையாளப்பாட்டுக்களோடு இந்த குதிர வாலு என்ற தமிழ்ப்பாட்டும், காம்ரேட் அப்துல்லா பாடும் “பிரதிகாடின்சு” என்ற தெலுங்குப் பாடலும் என்று மூன்று மொழிப்பாடல்கள் ஒரே படத்தில் இருப்பது புதுமை. பாடல்களுக்கான இசை சமீபகாலமாக மலையாள உலகின் “இளைய”ராஜாவாக இருக்கும் எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை கடந்த வருஷம் தேசிய விருதை வாங்கிக் கொண்ட அவுசப்பச்சன்.

ஷிக்கார் – மனதை வேட்டையாடி அப்துல்லா என்ற காம்ரேட்டை முத்திரையாகப் பதிக்கின்றது.

மலையாளப்பாடல் “எந்தடி எந்தடி பனங்கிளியே”

தெலுங்குப்பாடல் “பிரதிகாடின்சு”