Recent Posts

Archives

Topics

Meta

இளையராஜா & சத்யன் அந்திக்காடு - இன்னொரு வெற்றிக கூட்டணி

By admin | April 27, 2010

ஒரு இயக்குனருக்குள் இசையையோ குறித்த இசையமைப்பாளரையோ நேசிக்கும் ஆத்மார்த்தமான ரசிகர் இருப்பாரேயானால் எந்தக் காலத்திலும் அவர் யாசிக்கும் மெட்டுக்களை குறித்த இசையமைப்பாளரிடம் பெற்றுக் காலத்தால் அழியாத இசைக்காவியம் படைக்கலாம் என்பதற்கு எத்தனையோ இயக்குனர்களை முன்னுதாரணங்களாகக் காட்டலாம். இங்கே நான் கொண்டுவருபவர் மலையாளப் படவுலகின் ஜனரஞ்சக இயக்குனர் சத்யன் அந்திக்காட்.

சத்யன் அந்திக்காட் பற்றி தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சாயம் இருக்காது ஆனால் அவரின் காந்தி நகர் 2nd Street, அண்ணா நகர் முதல் தெருவாகவும், நாடோடிக்காற்று கதாநாயகனாவும் தமிழில் மீள எடுக்கப்பட்ட படங்கள். இவையெல்லாம் தாண்டி சத்யன் அந்திக்காட் வெறுமனே மசாலா இயக்குனராக மட்டுமன்றி குடும்ப உறவுகளைப் பலவிதமான கோணங்களில் அவர் உருவாக்கித்தந்த வரவேற்பு, வீண்டும் சில வீட்டுக்கார்யங்கள், மனசினக்கரே, அச்சுவிண்டே அம்மா, ரசதந்திரம், பாக்யதேவதா என்று பட்டியல் நீளும் படங்களை எடுத்து வெறுமனே விருதுகளை மட்டும் குவிக்காமல் ரசிகர்கள் நெஞ்சிலும் இடம்பிடித்துக் கொண்டவர்.

சத்யன் அந்திக்காட் இன் ஆரம்பகாலப் படங்களை எடுத்துக் கொண்டால் அவற்றில் இளையராஜாவின் பங்களிப்பு இல்லை. கொச்சு கொச்சு சந்தோஷங்கள் படத்தை தொடர்ந்து ஒரு சிறு இடைவெளி விட்டு மீண்டும் சத்யன் அந்திக்காட் - இளையராஜா கூட்டணி சேர்ந்த போது வந்த படங்கள் அனைத்துமே இசைச்சாகரம் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக அவை வெறுமனே நல்ல பாடல்களைக் கொண்ட படங்கள் என்பதை விட , சத்யன் சொல்ல வந்த படைப்பை நுணுக்கமான இசையால் நெய்தளித்த அருமையான பின்னணி இசை குறித்த படங்களை ஒரு படி உயர்த்தியும் விட்டன.

இன்றைக்கு இளையராஜாவின் இசைக்கு வர்த்தக உலகில் சற்றே இறக்கம் இருந்தாலும் தொடர்ந்து ஏழாவது படமாக தொடர்ச்சியாக இளையராஜாவைப் பயன்படுத்திவரும் சத்யன் சந்தேகமே இல்லாமல் அவரின் தீவிர ரசிகராக இருக்கிறார் என்பதில் ஐயமே இல்லை. அதை நிரூபிக்குமாற் போல, இளையராஜா சத்யனோடு சேரும் ஓவ்வொரு படங்களிலும் தனித்துவமான இசையை விட்டுச் செல்வார்.
இந்த ஆண்டு சத்யன் அந்திக்காட் இற்கு மிகவும் விசேஷமான ஆண்டு. காரணம் அவர் இயக்கி வெளிவரும் 50 வது படமான “கதா தொடருன்னு” வரவிருக்கின்றது. சத்யனும் ராஜாவும் கூட்டணி வைத்த ஓவ்வொரு படத்தையும் ஆழ அகலமாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதை ஆறப்போட்டு விட்டு திடீர் விருந்தாக, இவர்கள் கூட்டணியில் வந்த சில முத்துக்களை இங்கே தருகின்றேன்.

கொச்சு கொச்சு சந்தோஷங்கள்

ஜெயராம் காவ்யா மாதவன் நடித்து வெளிவந்த இப்படம் 2001 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிராந்திர மொழிப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுத் தேசியவிருதைப் பெற்றுக் கொண்டது.

இந்தப் படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் ஒரு இனிய பாடல் “கோட மஞ்ஞில்”

மனசினக்கரே

முதுமை வரமா, சாபமா? விடைதேடும் கேள்வியோடு மனதில் பாரத்தை விதைத்த படம். அதைப்பற்றி அனுபவித்து எழுதிய பதிவு மனசினக்கரே - முதுமையின் பயணம்

மனசினக்கரே தரும் “தங்கத்திங்கள்”

அச்சுவிண்டே அம்மா

இந்தப் படத்தைப் பார்த்து மூன்று வருஷங்கள் கழிந்தும், பதிவாகப் பகிர்ந்து கொள்ள முடியா அளவுக்கு வார்த்தைகளில் அடக்கமுடியாத உணர்ச்சிச் சித்திரம் இது. ஊர்வசிக்கு காலாகாலத்துக்கும் உயிலில் எழுதி வைக்க வேண்டிய நடிப்பை அளித்தது. இசைஞானியும் சத்தியன் அந்திக்காடுவும் இணைந்து சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே மெட்டுப் போட்டு ரசித்த சீடிக்களும் வந்து பரபரப்பைக் கிளப்பியது. இசைஞானி மத்திய கிழக்கு நாட்டுக்குக் கடத்திப் போகும் பாட்டு ஒன்று இதில் இருந்து “எந்து பறஞ்சாலும்”

ரசதந்திரம்

இந்தப் படத்தை கேரளாவின் ஆலப்புழாவில் ஒரு தியேட்டரில் பார்த்து இன்புற்ற அந்த நாள் இன்னும் பசுமரத்தாணி போல. அதைப் பற்றி தமிழ்மண நட்சத்திர வாரத்தில் நான் எழுதிய பதிவு.

ரச தந்திரம் - திரைப்பார்வை

ரசதந்திரம் தரும் “பொன்னாவணிப் பாதம் தேடி” மதுபாலகிருஷ்ணன், மஞ்சரி குரல்களில்


வினோதயாத்ரா

கதையே இல்லாத படத்தையும் உட்காரவைத்து விசிறி விட்டுப் பார்க்க வைக்கும் தந்திரம் சத்தியன் அந்திக்காடுவுக்கு உண்டு என்று நிரூபித்த இந்தப் படம் திலீப் இன் நகைச்சுவை நடிப்புக்குத் தீனி கொடுத்தது. அதில் வரும் மதுபாலகிருஷ்ணன் பாடும் “மந்தாரப்பூ” என் சர்வகாலத்து இசைப்பட்டியலில் ஒன்று

இன்னதே சிந்த விஷ்யம்

மூன்று ஆர்ப்பாட்டமான பெண்மணிகளுக்குப் பாடம் படிப்புக்கும் வேலை மோகன் லாலுக்கு, கூடவே குறும்புக்காரி மீரா ஜாஸ்மினும். சொல்லவா வேண்டும் இவர்கள் கொட்டத்துக்கு. ராஜாவை மனதில் இருத்தி வைத்து நேசிக்கும் பாடகன் சிறீகுமாருக்குக் கிடைத்த இன்னொரு பொக்கிஷ வாய்ப்பு “கண்டோ கண்டோ காக்கைக் குயிலே”

பாக்யதேவதா

சத்யன் அந்திக்காடு இயக்கி இறுதியாக வெளி வந்த படமிது. இதைப் பற்றியும் ஒரு பதிவு போட்டு நிறைவடைந்தேன்.

“பாக்ய தேவதா” என்னும் இளையராஜா

கனிகா மீது மையல் கொண்டு ஜெயராம் பாடும் “ஸ்வப்னங்கள் கண்ணெழுதிய” (பாடியவர்கள் சித்ரா, ராகுல் நம்பியார்) பாடலைக் வெறும் கேட்கும் போது இருந்த சுகம் பார்க்கும் போது இரட்டிப்பாகின்றது காட்சியோடு அளவாகப் பொருந்தி.

கத தொடருன்னு

சத்யன் அந்திக்காடுவின் கலையுலக வாழ்வில் ஐம்பதாவது படமாக வரவிருக்கும் கத தொடருன்னு ராஜாவோடு அமர்க்களமான கூட்டணியாகத் தொடர்கின்றது. சத்யனும் ராஜாவும் இன்னும் தமது வெற்றிக்கூட்டணியில் இன்னும் பல நிறைவான படைப்புக்களைத் தர வாழ்த்தி இந்தப் படத்தில் இருந்து ஹரிகரன், சித்ரா குரல்களில் “ஆரோ” பாடல் நிறைக்கின்றது.

Topics: Uncategorized | 28 Comments »

றேடியோஸ்புதிர் 54 - ஆண்கள் மட்டுமே பாட்டிசைத்த படம்

By admin | April 26, 2010

கற்பகம் என்று பழைய படம், அதில் பெண் குரல் மட்டுமே பின்னணி பாடல்கள் எல்லாவற்றிலும் இருக்கும். பின்னர் ஒருதலை ராகம் படத்தில் டி.ராஜேந்தர் ஆண் குரலை மட்டுமே பின்னணிப் பாடல்களில் பயன்படுத்தி இருப்பார். அப்படி வந்த இன்னொரு படம் தான் இது. இந்தப் படத்தின் இயக்குனர் அடிப்படையில் ஓவியர் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் ஸ்கெட்ச் ஆக வரைந்து விட்டுத் தான் எடுப்பாராம் என்று படம் வெளிவருவதற்கு முன்னான காலத்தில் ஜெமினி சினிமா, பொம்மை போன்ற ஊடகங்கள் அப்போது பரபரப்பு பப்ளிசிட்டியை கிளப்பியிருந்தன.

இதயத்தை திருடாதே படத்துக்குப் பிறகு இசைஞானி இளையராஜாவுக்குக் கிடைத்த இன்னொரு இளமையான அழகான கரு என்பதால் மனுஷர் பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து விட்டார். கூடவே கவிஞர் மு.மேத்தாவின் காதல் ரசம் கொட்டும் புதுக்கவிதையையும் அழகாகச் சேர்த்து நெய்த அற்புதக் களஞ்சியம் இப்படம்.

இளையராஜாவும் இந்த இயக்குனரும் இணைந்த முதல் படமே பெரு வெற்றி. ஆனால் இயக்குனர் தொடர்ந்து ராஜாவுக்கு கா விட்டு விட்டு ரஹ்மானுடன் ராசியாகி விட்டார்.

சரி ஏகப்பட்ட க்ளூ கொடுத்திருக்கிறேன், மனசை நோகடிக்காமல் கண்டுபிடிங்க தம்பி தங்கைங்களா ;)
சரியான படம் : இதயம்

இயக்குனர்: கதிர்

போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

Topics: Uncategorized | 28 Comments »

சுந்தரக் குரல் சொந்தக்காரி சுனந்தா

By admin | April 18, 2010

திரையுலகை எடுத்துக் கொண்டா ல் திறமை இருந்தால் மட்டுமல்ல அதிஷ்டமும் கூடி வந்தால் தான் வாய்ப்புக்கள் கிட்டும் என்பதற்கு திரையிசைப்பாடகர்கள் கூட விதிவிலக்கல்ல. அப்படி ஒரு எடுத்துக்காட்டுத் தான் பாடகி சுனந்தா.

புதுமைப்பெண் திரைப்படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவால் காதல் மயக்கம் பாடவைத்து தன் குரலால் மயக்கியவர். தொடர்ந்து அத்தி பூத்தாற்போலத்தான் சுனந்தாவுக்கு வாய்ப்புக்கள் கிட்டியிருக்கின்றது. திரையிசையை எடுத்துக் கொண்டால் என்னதான் சிறப்பான குரல்வளம் இருந்தாலும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தன் குரலை மாற்றிப்பாடும் பாங்கும் கைவரப்பெற்றிருக்க வேண்டும். இது காதல் ரசம் கொட்டும் பாடலில் இருந்து, வீரஞ்செறிந்த மிடுக்கான பெண் குரலாக வளைந்தும் கொடுக்க வேண்டும். அந்த வகையில் எஸ்.ஜானகியின் விதவிதமான பரிமாணங்களுக்கு (சித்ரா கூட இந்த வகையில் முயற்சித்திருக்கிறார்)ஈடு கொடுக்கும் வகையில் எண்பதுகளில் பாடகிகள் இல்லையென்றே கூறிவிடலாம். சுனந்தா கூட இந்தப் பட்டியலில் சேர்த்தி. காதலின் ஆத்மார்த்த ராகமாக ஒலிக்கும் அவர் குரலை வேறு எந்த எல்லைக்கும் பயன்படுத்த முடிவதில்லை.
கேரளத்தில் இருந்து வந்த குயில்களில் சுனந்தாவும் சேர்த்தி. இவருக்கு ஈடுகொடுக்கும் அலைவரிசையில் அமைந்த பாடகர் ஜெயச்சந்திரன் அழகாகப் பொருந்தி சிறப்புச் சேர்த்த பாடல்கள் இன்றும் கேட்க இனிமையானவை.

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் “செண்பகமே செண்பகமே” என்ற இனிய பாடலை என்னதான் பெரிய பாடகியாக இருந்தாலும் ஆஷா போன்ஸ்லே பாடும் போது தமிழை விட்டு விலகிய ஒரு அன்னியத்தன்மை தெரியும். அதே பாடலை சந்தோஷ மெட்டில் சுனந்தா பாடிய போது ஆஷாவையே ஓரம் கட்டிவிட்டது போன்ற பரிமாணத்தைக் காணலாம். இன்னொரு சிறப்பான உதாரணம், சொல்லத் துடிக்குது மனசு படத்தில் வரும் “பூவே செம்பூவெ” இந்தப் பாடலை ஆண்குரலில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் போது அதே அலைவரிசையில் பெண்குரலாக சுனந்தா பாடியதும் கேட்கத் திகட்டாத தேன்மழை. உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் “என்ன சமையலோ” என்ன கலகலப்பான பாடலில் சுனந்தாவின் குரல் வித்தியாசமாக வெளிப்பட் டிருக்கிறது.

தொண்ணூறுகளில் செவ்வந்தி படத்தில் வரும் “செம்மீனே செம்மீனே”, உழைப்பாளி படத்தில் வரும் “அம்மா அம்மா எந்தன் ஆருயிரே”, வால்டர் வெற்றிவேல் படத்தில் வரும் “மன்னவா மன்னவா” பாடல்கள் சுனந்தாவுக்குக் கிடைத்த சொற்ப வாய்ப்புக்களிலும் சிக்சர் அடித்த பாட்டுக்கள். சுனந்தாவின் குரலை பலசமயம் நினைவு படுத்தும் குரலாக பின்னாளில் அறிமுகமாகி புயல்போல் புரட்டிப் போட்ட சொர்ணலதாவின் குரல் சுனந்தாவிற்கு கிடைத்த மிச்ச சொச்ச பாடும் வாய்ப்புக்களைக் கூடப் பங்கு போட்டு விட்டது போல.

இன்றைய யுகத்து நாயகிகளுக்கும் பொருந்திப் போகக் கூடிய சுந்தரக் குரல் கொண்ட சுனந்தாவின் பாடல்பெட்டகத்தில் இருந்து ஒரு சிலபாடல்களை உங்கள் ரசனைக்கு விருந்தாகப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

முதலில் வருவது சுனந்தாவை தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய “காதல் மயக்கம்” ஜோடி கட்டி இணைந்து பாடுவது ஜெயச்சந்திரன்

சொல்லத் துடிக்குது மனசு திரைப்படத்தில் இருந்து சுனந்தா பாடும் “பூவே செம்பூவே” என்ற இதமான ராகம் இதயத்தில் ஊடுருவ

காதல் பாடல்களில் என் விலக்க முடியாத விருப்பத் தேர்வாக இருக்கும் “பூ முடிச்சு பொட்டு வச்ச வட்ட நிலா” ஜெயச்சந்திரன், சுனந்தா குரல்களில் “எம் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்” படத்தில் இருந்து

இசைஞானி இளையராஜா ஹீரோவாக இருந்த படங்களில் ஒன்றான “எங்க ஊரு பாட்டுக்காரன்” படத்தில் இருந்து மனோவுடன் சுந்தரக் குரல் சுனந்தா பாடும் “செண்பகமே செண்பகமே”

எஸ்.பி.பி, சித்ராவோடு சுனந்தா பாடும் வித்தியாசமான பாடல் ரகமான “என்ன சமையலோ”, உன்னால் முடியும் தம்பி திரைக்கா க

செவ்வந்தி திரையில் இருந்து கலக்கல் ஜோடி ஜெயச்சந்திரன், சுனந்தா மீண்டும் இணையும் “செம்மீனே செம்மீனே”

குழந்தையை மட்டுமா தாலாட்டியது, இல்லை இல்லை நம் எல்லோரையும் தாலாட்டும் சுனந்தாவின் “மன்னவா மன்னவா” , வால்டர் வெற்றிவேல் தருகிறது.

நிறைவாகவும் “நிறைவாகவும்” ஜெயச்சந்தி ரன், சுனந்தா ஜோடி கட்டும் “ஒரு கோலக்கிளி” பொன் விலங்கு திரைப்படத்துக்காக

Topics: Uncategorized | 22 Comments »

என்றோ கேட்ட இதமான ராகங்கள்

By admin | April 11, 2010

என்றோ ஒரு நாள் கேட்டு ரசித்த பாடலை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இன்னொரு தடவை எதிர்பாராதவிதமாகக் கேட்கும் போது அதில் பெறும் சுகமே தனி தான். அந்த வகையில் இன்று நான் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல்கள் மூன்றைத் தருகின்றேன்.

“திருத்தேரில் வரும் சிலையோ சிலைபூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ கலைமலரோ மணியோ நிலவோ நிலவொளியோ எனும் சுகம் தரும் திருத்தேரில் வரும் சிலையோ” இந்த இனிமையான பாடல் கே.ஆர்.விஜயா தயாரித்த “நான் வாழ வைப்பேன்” திரையில் மலர்ந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியமும், பி.சுசீலாவும் பாடும் இந்தப் பாடலின் தனித்துவம் என்னவென்றால் பாடலின் முதல் அடிகள் ஓ என்ற சொற்கட்டோடு போகும். பாடல் முழுவதும் ஐம்பதுகளில் கேட்ட பாடல்களின் வரியமைப்பை ஒத்தது போல அமைக்கப்பட்டிருக்கும். பாடலை எழுதியவர் கூட திரையிசைக் கவிதைகளில் பழுத்த பழம் கவிஞர் கண்ணதாசனாச்சே. இளையராஜாவின் ஆரம்ப காலப்பாடல்கள் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் பாணியின் சாயலில் இருப்பது போல ஒரு பிரமை இருக்கும். இந்தப் பாடலில் தபேலாவின் ரிதம் அட்சரசுத்தமாக எம்.எஸ்.வி இன் பல பாடல்களில் இருக்கு. பாடலில் ராஜாவின் தனித்துவமுத்திரையாக கிட்டார் இசை அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

“அடுத்தாத்து ஆல்பட்” பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது. ஆனால் “இதயமே…. நாளும் நாளும் காதல் பேச வா….” இந்தப் பாடலை மறக்க மாட்டார்கள். எண்பதுகளில் மலேசியா வாசுதேவனின் தனித்துவமான குரல் மிளிர்ந்த காலகட்டத்தில் அவரோடு இணைந்து எஸ்.ஜானகி பாடிய பாடல். இப்பாடலின் ஆரம்ப சங்கதியே மலை மேட்டொன்றின் மீது மெல்ல உச்சி நோக்கி ஓடுவது போல இருக்கும். அந்த ஆரம்ப வரிகளும் அப்படியே மூச்சுவிடாமல் பதியப்பட்டிருக்கும்.

வானம்பாடி போல நாங்கள் கானம் பாடி ஓடினோம்
வாசம் வீசும் பூவைப்போல வாசம் வீசி பாடினோம்

இப்படி காதலன் பாட பின்னணியில் கொங்கோ வாத்தியம் இதமாகத் தாளம் தட்டும் அதற்கு

ஜாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்
சாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்

இப்படி காதலி பாடுவாள் அந்த சரணம் முடியும் போது இன்னொரு புது மெட்டில்

அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேசவா

எனப் பயணிக்கும் வகையில் புதுமையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் முழுவதும் மெட்டுக்கள் மாயாஜாலம் காட்டும். பின்னணி இசை கூட காதலின் இலக்குத் தேடி ஓடும் பயணமாக வெகு வேகமாக வாத்திய ஆலாபனை இசைஞானி இளையராஜாவின் முத்திரை பதிவு செய்யப்பட்டிருக்கும்.

“ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்” இலங்கை வானொலியில் கலக்கிய பாடல், உறவாடும் நெஞ்சம் படத்திற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடியது. இளையராஜா தன் ஆரம்பகாலத்தில் அவசரமாக படங்களை ஒப்புக்கொண்டு சூடு போட்டுக் கொண்ட அனுபவம் இந்தப் படத்தையும் சேர்த்து ஒரு பட்டியல் இருக்கு. ராஜாவின் அழகான மெட்டும், இசையும் இப்பாடலை இன்னொரு தனித்துவமான கீதமாகக் காட்டினாலும் படம் பிரபலமில்லாத வகையில் பாடலின் உழைப்பும் வீணாகி விட்டது. ஆனால் வருஷங்கள் பல கடந்தும் இன்றும் கேட்க இதமான ராகம் இது.

Topics: Uncategorized | 31 Comments »

றேடியோஸ்புதிர் 53 - நாயகி பேரெடுத்து அதை மெட்டாக்கி வந்ததொரு பாட்டு

By admin | March 31, 2010

ஒரு படத்தின் கதைக்கருவை உள்வாங்கி பின்னர் இசையமைக்கும் போது உயிர்கொடுக்கும் மந்திரவித்தைக்காரன் எங்கள் இசைஞானி என்று சொல்லவா வேண்டும்.
அவரோ இயக்குனர்களில் எவரெஸ்ட், நாயகனோ புதுமையைத் தேடித் தீர்ப்போம் வா என்னும் ஜாதி. இந்தக் கூட்டணியில் வந்ததொரு படம். தெலுங்கில் அதே இயக்குனர் எடுத்துப் புகழ் மட்டும் கொடுத்தது கல்லாவை நிரப்பவில்லை. ஆனாலும் வீம்பாக தமிழில் இந்த நாயகனை வைத்து தன்னம்பிக்கையோடு எடுத்தார்.

படத்தின் நாயகியோ லலிதா ராகத்தில் அமைந்த பெயர். ஆனால் நாயகனைச் சீண்ட எ.கே.மலம் என்று தன்னை அடையாளப்படுத்துவாள். பொய் அவிழ்ந்து உண்மை தெரியும் அந்த நேரம் நாயகி லலிதாவுக்கும் நாயகன் சத்தியமூர்த்திக்கும் காதல் வரும் காட்சி. காதல் உணர்வுகளுக்கு மெட்டமைக்க யாருமே சீண்டாத லலிதா ராகத்தை எடுத்தார் இசைஞானி போட்டார் ஒரு மெட்டு. எல்லோர் இதழும் உச்சரித்தது அந்த லலிதா ராக மெட்டை. இதோ அந்த இசைக்கலவையை வித்துவான் கணேஷ் இசைக்கும் வீடியோ துண்டத்தை ஒலிப்பதிவாக்கித் தந்திருக்கின்றேன். கண்டுபிடியுங்களேன் அந்த லலிதா ராகத்தில் வந்த பாட்டை.

சரியான பதில்:

இதழில் கதை எழுதும் நேரமிது
படம் : உன்னால் முடியும் தம்பி
இயக்கம்: கே.பாலசந்தர்
நடிப்பு: கமல்ஹாசன், சீதா, ஜெமினி கணேசன்

Topics: Uncategorized | 32 Comments »

றேடியோஸ்புதிர் 52 - அறுபது நாளின் பின் ஒட்டி ஓடிய பாட்டு?

By admin | March 26, 2010

“ஊமை விழிகள்”, திரைப்படக் கல்லூரி மாணவர்கள் புது சகாப்தம் படைத்த படமிது, இந்தப் படத்துக்கு முன்னும் பின்னும் இவ்வளவு பிரமாண்டமான வெற்றியை அந்தக் கல்லூரி சந்தித்திருக்காது. ஆபாவாணனின் தயாரிப்பில் சக திரைப்படக்கல்லூரி மாணவர் அரவிந்தராஜ் இயக்கிய படமது.

விஜய்காந்த், கார்த்திக், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று பெரும் நட்சத்திரப்பட்டாளம் நடித்து பெருவெற்றி கண்ட அந்தப்படத்தின் இசை மனோஜ் கியான் இரட்டையர்கள். முன்னணிப்பாடகர்களை ஒதுக்கி விட்டு சுரேந்தர், கிருஷ்ணசந்தர், ஆபாவாணன், சசிரேகா இவர்களோடு நீண்ட இடைவெளிக்குப் பின் பி.பி.சிறீனிவாசையும் பாட வைத்தார்கள்.

இந்தப் படத்தில் மூன்று பாடல்களை சுரேந்தர் பாடியிருக்கிறார், ஆனால் அந்த மூன்று பாடல்களில் ஒன்றை படத்தை திரையிடும் போது இணைக்காமல், அறுபது நாள் கழித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தோடு இணைத்து திரையிட்டார்களாம். கூடவே “அறுபது நாள் கழித்து உங்கள் மனம் கவர்ந்த பாடல் இணைக்கப்பட்டிருக்கிறது” என்ற விளம்பரத்தையும் செய்தார்களாம். ஊமை விழிகள் பட வீடியோ காசெட்டுகளில் இந்தப் பாட்டு இல்லாத படப்பிரதி கூட இப்போதும் உண்டு.

கேள்வி இது தான், அந்த அறுபது நாள் கழித்து ஒட்டி ஓடிய பாட்டு எது? அந்தப் படத்தில் சுரேந்தர் பாடிய மூன்று பாடல்களையும் தருகின்றேன். எதுவென்று கண்டுபிடியுங்களேன்.
போட்டி விதிமுறை ஒருவர் ஒரு பாடலை மட்டுமே தெரிவு செய்யலாம்.

1. குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப் பேச்சு

2. மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா

3. கண்மணி நில்லு காரணம் சொல்லு

சரியான பதில்:

கண்மணி நில்லு காரணம் சொல்லு, போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

Topics: Uncategorized | 27 Comments »

எம்.கே.தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு நினைவில் - ஒலிச்சித்திரம்

By admin | March 21, 2010

தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த, ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் நூற்றாண்டு இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் நாளில் இருந்து தொடங்குகின்றது.

மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என்று அழைக்கப்பட்ட இவர் மார்ச் 1, 1910 ஆம் ஆண்டில் பிறந்து நம்பர் 1, 1959 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர்.
சரஸ்வதியின் அருட்கடாட்சத்தினால் தான் கொண்ட பாடற் திறனால் நாடக நடிகனாக உருவாகி, திரையுலகில் பிரவேசித்த இவர் தமிழ் சினிமாவின் வரலாற்றில் தனி அத்தியாயத்தை ஏற்படுத்திச் சென்றவர்.

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் தன் பாடற் திறனாலும், தேர்ந்தெடுத்து நடித்த கதாபாத்திரங்களினாலும் அக்கால ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டவர். அந்தப் புகழை அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கும் எடுத்துச் சென்று கொண்டு வந்திருக்கின்றது அவரின் இறவா வரம் கொண்ட பாடல்கள்.

அந்த வகையில் தினமணி இதழில் இரா.செழியன் எழுதிய “ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதர்! ” என்ற கட்டுரையை ஒலிச்சித்திரமாக்கி அவுஸ்திரேலியாவின் பண்பலை வானொலியான “தமிழ் முழக்கம்” வானொலியில் வழங்கியிருந்தேன். அந்த ஒலிப்பகிர்வை இங்கே தருகின்றேன்.

அடுத்து எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய முத்தான சில பாடல்கள் செவிக்கினிமை தர

ஹரிதாஸ் திரைப்படத்தில் இருந்து “மன்மத லீலையை வென்றார் உண்டோ”

சிவகவி திரைப்படத்தில் இருந்து “கவலையைத் தீர்ப்பது நாட்டியக்கலையே”

ஹரிதாஸ் திரைப்படத்தில் இருந்து “கிருஷ்ணா முகுந்தா முராரே’

சிவகவி திரைப்படத்தில் இருந்து “சொப்பன வாழ்வில்”

திருநீலகண்டர் திரைப்படத்தில் இருந்து “தீன கருணாகரனே”

சிவகவி திரைப்படத்தில் இருந்து “வதனமே சந்த்ரவிம்பமோ”

Topics: Uncategorized | 8 Comments »

இளையராஜாவும் பாக்யராஜும்

By admin | March 12, 2010

எண்பதுகளில் கலக்குக் கலக்கிய நட்சத்திர இயக்குனர்களில் பாக்யராஜின் பாணி தனித்துவமானது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அழகான திரைக்கதை அமைப்பும் அந்தத் திரைக்கதைக்கேற்ற பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துத் திறமையாகப் பயன்படுத்துவதிலும் துறை போனவர் இவர். பாக்யராஜின் குருநாதர் பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள் போன்ற திரைப்படங்களுக்குக் கதாசிரியராக இருந்து பாரதிராஜாவின் ஆரம்ப வெற்றிகளில் பங்கு போட்டவர். அதை அன்றைய பத்திரிகைகள் தம் சீண்டல்களுக்கும் உபயோகப்படுத்தி இருவருக்கும் இடைவெளியை ஏற்படுத்தப் பார்த்தன.

பாரதிராஜாவுடன் ஒப்பிடும் பாக்யராஜின் தனித்துவம் என்னவென்றால் என்னதான் திறமையான இயக்குனர் என்றாலும் அன்றைய காலகட்டத்தில் இளையராஜாவின் இசை என்ற பெரும் பலத்தை உபயோகித்துத் தான் ஒரு படி மேலான வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்ற காலகட்டத்தில் இவர் எதிர்பாராதவிதமாகக் கதாநாயகனாக அறிமுகமான “புதிய வார்ப்புக்கள்” தவிர்ந்து, பாக்யராஜ் இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்திய சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் இருந்து பெரும்பாலான படங்களை இளையராஜாவின் உதவியின்றி மற்றைய இசையமைப்பாளர்களோடு கைகோர்த்தே இயக்கியிருக்கின்றார். அந்த வகையில் கங்கை அமரன், சங்கர் கணேஷ், எம் எஸ் விஸ்வநாதன், தீபக், தரண் இவர்களுடன் தானே இசையமைத்தும் படங்களை இயக்கியிருக்கின்றார்.

இன்னொரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால் இளையராஜாவோடு இணைந்து பணியாற்றிய படங்களில் “முந்தானை முடிச்சு” போன்ற பெருவெற்றி பெற்ற ஒரு சில படங்களோடு ஒப்பிடும் போது இவர் மற்றைய இசையமைப்பாளர்களோடு பணியாற்றிய போது கிடைத்த வெற்றிப்படங்களின் பட்டியல் சற்றே நீளம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பாக்யராஜின் படங்களில் பாடல்கள் அவை யார் இசையமைத்தாலும் சோடை போனதேயில்லை. திருஷ்டிக்கழிப்பாக “வேட்டியை மடிச்சுக்கட்டு” வந்து பாக்யராஜின் முத்திரை இயக்கத்துக்கு ஒரு இடைவெளியைப் போட்டது.

இந்தத் தொகுப்பிலே பாக்யராஜ் என்ற இயக்குனரோடு இளையாராஜா இணைந்த போது உருவான படங்களின் பாடல் தொகுப்பைப் பார்ப்போம்.


இன்று போய் நாளை வா

மூன்று பையன்களும், காதலிக்க ஒரு பெண்ணும் என்று அமைந்த சுவாரஸ்யமான நகைச்சுவைச் சித்திரம். பாக்யராஜோடு , பாரதிராஜாவின் இன்னொரு அறிமுகம் ராதிகா இணைந்த இந்தப் படத்தில் ராஜாவின் கைவண்ணம் சற்றே கம்மி தான் என்றாலும் மலேசியா வாசுதேவன், பி.சுசீலா பாடும் “பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மண நாள் காண்போம் வா வா” ஒரு காலகட்டத்து இளசுகளின் சுப்ரபாதமாக இருந்ததாம்.

விடியும் வரை காத்திரு

இந்த அப்பாவியும் கொலைகாரன் பாத்திரமாக தேறுவானா என்று நினைத்த ரசிகர்களின் நினைப்பை மாற்றி ஒரு த்ரில்லர் கதையை தன் பாணியில் சுவாரஸ்யமாகக் கொடுத்த பாக்யராஜுக்கு ராஜா போட்ட அன்பு மெட்டு “நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு”, மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரல்களில்.

முந்தானை முடிச்சு

அடிக்கடி ஏவிஎம் உடன் முண்டு பிடிக்கும் ராஜாவைச் சமாளித்து பாக்யாஜ் முடிச்சுப் போட்ட இந்தப் படம் ஏவிஎம் சரித்திரத்தில் மட்டுமல்ல பாக்யராஜின் வாழ்நாளில் மறக்க முடியாத வெற்றிக்கனியைக் கொடுத்து ஓயாமல் ஓடிக்கொண்டே இருந்தது. படம் பார்க்க வருபவர்களுக்கு முருங்கைக்காய் கட்டு கொடுக்கும் அளவுக்கு விளம்பர உத்தியும் தனித்துவமாக இருந்தது. பாக்யராஜின் இந்த சுவாரஸ்யமான படத்தின் தானும் தனித்து நிற்கவேண்டும் என்று இளையராஜா போட்ட மெட்டுக்கள் எல்லாமே ரோஜா மொட்டுக்கள்.
குறிப்பாக அந்திவரும் நேரம் பாடல் எடுத்த விதத்திலும் மனதை அள்ளியது. மலேசியா வாசுதேவன் குரலை விலக்கி எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாக்யராஜுக்குக் குரல் கொடுக்க, புதுமுகமாக அறிமுகமான ஊர்வசிக்கு எஸ்.ஜானகி


தாவணிக்கனவுகள்

எதிர்பாராத வெற்றி அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றத்தைக் கொண்டு வந்து சிலசமயம் படுகுழியில் தள்ளி விடும். நடிப்புச் சிங்கம் சிவாஜி கணேசன் தலையில் ஒரு தாவணிக்கடையே சுமத்திவிட்டு கதையில் கோட்டை விட்ட திரைக்கதைச் சிங்கத்துக்கு ஒருவகையில் சுருக்குக் கயிறு ஆகிருக்கும், கடவுள் புண்ணியத்தால் சுமாராக ஓடி ஒளிந்த இந்தப் படத்திலும் இளையராஜாவின் மெட்டுக்கள் 80களில் அவர் கொடுத்த பெரும்பாலான படங்களின் பாணியில். அந்த வகையில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், எஸ்.ஜானகியும் பாடும் “செங்கமலம் சிரிக்குது”


தூறல் நின்னு போச்சு

வில்லனாகப் பழகிப் போன நம்பியாரை நல்லதொரு குணச்சித்திரப்பாத்திரத்தில் நடிக்க வைத்ததோடு சுலக்க்ஷணாவையும் அறிமுகப்படுத்திய இந்தப் படத்தின் தலைப்பு கூட பாக்யராஜ் தன் படங்களுக்குத் தனித்துவமாக சிரத்தையோடு அமைக்கும் தலைப்புக்களின் வரிசையில் அமைந்தது. இந்த இசைத்தொகுப்புக்கு இந்தப் படத்தில் இருந்து எந்தப் பாடலை எடுப்பது எதை விடுவது என்று திணறவைக்கும் அளவுக்கு எல்லாப் பாடல்களுமே வெகு சிறப்பாக அமைந்தது. இளையராஜா - பாக்யராஜ் இணைந்த சிறந்த வெற்றிக் கூட்டணியில் பாடல்களுக்கும் பங்குண்டு என்று காட்டியது. “தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி” மலேசியா வாசுதேவன், ஜானகி குரல்களில் கேட்கக் கேட்க இனிமை

சின்னவீடு

“முந்தானை முடிச்சு திரைப்படத்தில் தங்கை ஊர்வசியை காதலியாக அறிமுகப்படுத்திய பாக்ய ராஜ் சில ஆண்டுகளின் பின் அவர் சகோதரி கல்பனாவை மனைவியாக அறிமுகப்படுத்திய “சின்ன வீடு” சில்மிஷங்கள் நிறைந்த பாக்யராஜ் தனமான வீடு இது.
ஒரு ரேஞ்சியில் அமையும் கிளுகிளுப்பாடல்கள் பாக்யராஜ் படங்களில் தானாக அமைவதுண்டு. அது சின்ன வீட்டில் கூட இல்லையென்றால் எப்படி? ஆனால் இங்கே நான் தருவது இதே படத்தில் அமைந்த வெள்ள மனம் உள்ள மச்சான்” மலேசியா வாசுதேவன்,சுனந்தா குரல்களில்


ராசுக்குட்டி

பாக்யராஜ் வேண்டாமென்று வைத்துக் கொண்டாலும் பஞ்சு அருணாசலம் தயாரித்தால் இளையராஜா தானே இசை. அப்படி அமைந்தது தான் இந்தக் கூட்டணி. பாக்யராஜின் கலகலப்பான நகைச்சுவையும், திரைக்கதை அமைப்பும் சாதாக் கதையைக் கூட மசாலா தோசை அளவுக்கு ஆக்கிவிடும். ராசுக்குட்டி படம் மறந்து போயிருக்கலாம், ஆனால் இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் “ஹோலி ஹோலி ஹோலி” மறக்க முடியாத பாடல்

ஓரு ஊர்ல ஒரு ராஜ குமாரி

சில சமயங்களில் என்னதான் இளையராஜா மாங்கு மாங்கென்று உழைத்தாலும், பொருத்தமான படம் அமையாவிட்டால் விழலுக்கு இறைத்த நீர் தான். அது என்னதான் மீனாவை ராஜகுமாரியாக்கினாலும் பொய்க்காது என்று நிரூபித்த படம். எல்லாப் பாடல்களுமே வித்தியாசமான இனிமையான மெட்டுக்கள். குறிப்பாக மனோ பாடும் “வந்தாள் வந்தாள் ராஜகுமாரி” க்கு இழைத்து இழைத்துப் பண்ணிய மெட்டும், இசையும் முத்துச்சரமாக ஒரு சிம்பொனிப் பரவசம் தான்.

வீட்ல விசேஷங்க

மலையாள பாக்யராஜ் பாலசந்திரமேனன் இயக்கி பாக்யராஜ் நடிக்க இருந்த படம், இரண்டு இயக்குனர்களுக்கும் ஈகோவால் தமிழ் பாக்யராஜே இயக்கி நடித்த படம். முதற்கோணல் முற்றும் கோணலாய் விசேஷமாக எதுவுமில்லை என்று சொல்லிவைத்தது. படத்தின் ஒளிப்பதிவை ஏற்றது யாரோ கத்துக்குட்டி போல, படம் தொடங்கி முடியும் வரை நடுவில் ஒரு ஒளிக்கோடு இருக்கும் வரை பார்த்துக் கொண்டார். திரையிசைப்பாடல்களைப் பொறுத்த வரை ஈழத்து ரசிகர்களுக்குப் பிடிக்கும் சில பாடல்கள் இந்திய ரசிகர்ளுக்குப் பிடிக்காது என்பதற்கு உதாரணமாக இந்தப் படத்தின் பாடல்கள் இலங்கையில் வெகுபிரபலமாக இருந்தன. குறிப்பாக அருண்மொழி, ஜானகி பாடும் “மலரே தென்றல் பாடும் கானம் இது” பதினாறு வருஷங்களுக்கு முந்திய காதல் கதைகளை நினைவு படுத்தும்

Topics: Uncategorized | 22 Comments »

றேடியோஸ்புதிர் 51 : பதிவிரதன் படி தாண்டினால்

By admin | March 3, 2010


வணக்கம் மக்கள்ஸ், மீண்டும் ஒரு றேடியோஸ்புதிரை ஒரு பாடலின் இடையிசையோடு கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் படம் என்னவென்று கண்டு பிடியுங்களேன்.

இந்தப் படத்தை இயக்கியவர் ஏற்கனவே தங்கையை வச்சு முடிச்சுப் போட்டவர், பின்னர் அக்காவையும் தமிழுக்கு நல்லதொரு அறிமுகமாக “கட்டிய” படம் இது. தங்கையை இரண்டாம் தாரமாக முந்திய படத்தில் இயக்கியிருந்தார். ஆனால் அக்காவை தாரமாக்கி அலைய விட்டார் இரண்டாவது படத்தில். ராஜாவோடு சேர்ந்த ராசி இந்தப்படமும் வெற்றி. கூடவே இந்தப் படம் வந்த பின்னர் குறித்த சொல்லுக்கே தனி மவுசு தான் ;)
சரி,இவ்வளவு க்ளூவும் போதும், நீங்கள் கூகூளாண்டவரை கும்புடுறீங்களோ, யாகூ அம்மனை வேண்டுறீங்களோ தெரியாது பதிலோடு வந்து வூடு கட்டி அடியுங்கள் ;).

சரியான பதில்:
படம்: சின்ன வீடு
நடிகர்கள்: பாக்யராஜ், கல்பனா (ஊர்வசியின் சகோதரி)

போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி ;)

Topics: Uncategorized | 24 Comments »

விண்ணைத் தாண்டி வருவாயா….ஜெஸ்ஸி

By admin | February 27, 2010


நன்றி: என் பழைய டயறியின் முதல் காதல் பக்கங்களைப் பிரித்துப் படிக்க உதவிய கெளதம் வாசுதேவ் மேனனுக்கு

Topics: Uncategorized | 22 Comments »


« Previous Entries Next Entries »
cibersexo